"நான் என்ன ராஜாவா, நீ நல்ல செய்தி சொன்னா, உனக்குப் பரிசு கொடுக்க? அதோட, இப்ப எனக்கு எந்தச் செய்தியும் நல்ல செய்தியா இருக்காதுடி!" என்றாள் கமலி.
"உன் காதலர் திரும்பி வந்துட்டார்னு சொன்னா, அது கூட நல்ல செய்தி இல்லையா?"
"என்னடி சொல்ற?" என்றாள் கமலி, வியப்புடனும், மகிழ்ச்சியுடனும்.
"ஆமாண்டி. பிரகாஷ் வந்துட்டாரு. இன்னிக்குக் காலையிலதான் வந்தாராம். நான் தற்செயலா அவர் வீட்டுப் பக்கமாப் போய்க்கிட்டிருந்தப்ப, என்னைப் பார்த்துட்டு, உங்கிட்ட இதைச் சொல்லச் சொன்னாரு. இன்னிக்கு சாயந்திரம் ஆறு மணிக்கு, நீங்க வழக்கமா சந்திக்கிற இடத்துக்கு உன்னை வரச் சொன்னாரு. அது என்னடி வழக்கமாச் சந்திக்கிற இடம்?" என்றாள் ராதிகா, கேலியுடன்.
கமலி அவளுக்கு பதில் சொல்லாமல், மனதுக்குள் கொதித்துக் கொண்டிருந்தாள்.
"என்னடி, பதில் சொல்ல மாட்டேங்கற?"
"ஆஃபீஸ் வேலையா கல்கத்தாவுக்குப் போறேன்னு சொல்லிட்டுப் போய் ரெண்டு மாசம் ஆச்சு. அதுக்கப்புறம், எனக்கு ஒரு தகவலும் இல்லை. இப்ப அவரைச் சந்திக்கச் சொல்லி, உங்கிட்ட தகவல் சொல்லி அனுப்பறாரு. என்னை என்ன கிள்ளுக் கீரைன்னு நினைச்சுக்கிட்டிருக்காரா?"
"ஏண்டி, உன் வீட்டில என்ன ஃபோனா இருக்கு, தினம் உங்கிட்ட ஃபோன் பண்ணிப் பேசறதுக்கு? இன்னிக்குக் காலையிலதான் ஊர்லேந்து வந்திருக்காரு. என்னைப் பார்த்ததால, எங்கிட்ட தவல் சொல்லி அனுப்பினாரு. இதில என்ன தப்பு?"
"ஃபோன் இல்லாட்டா என்ன? கல்கத்தாவில போஸ்ட் ஆஃபீஸ் இல்லையா என்ன? எனக்கு ஒரு கார்டு கூட எழுதலையே அவரு! சரி, ஊருக்கு வந்தவர் நேரா என்னைப் பாக்க வந்திருக்க வேண்டாம்? அது என்ன, உங்கிட்ட தகவல் சொல்லி அனுப்பறது?" என்று குமுறினாள் கமலி.
"அப்ப, சாயந்திரம் அவரைப் பாக்கப் போகப் போறதில்லையா நீ?"
"போவேன். கண்டிப்பாப் போவேன். போய், நல்லா சண்டை போட்டுட்டு வரப் போறேன்!"
வழக்கமாக பிரகாஷைச் சந்தித்துப் பேசும் பூங்காவுக்குச் சென்றாள் கமலி. அவர்கள் எப்போதும் அமரும் பெஞ்ச்சில் பிரகாஷ் அமர்ந்திருந்தான். அவன் அருகில் சென்று அமர்ந்தாள் கமலி.
பிரகாஷ் அவள் தோள்களை அணைத்துக் கொள்ள, கமலி அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
"இது மாதிரி உங்க தோள்ள சாஞ்சு எவ்வளவு நாளாச்சு!"
இது போல் அவன் தோளில் சாய்ந்து கொண்டே விடிய விடிய அங்கேயே அமர்ந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியபோது, 'சண்டை போட்டாயா?' என்று நாளை தோழி கேட்டால், அவளிடம் என்ன சொல்வது என்று சங்கடத்துடன் நினைத்துப் பார்த்தாள் கமலி.
கற்பியல்