Friday, May 29, 2020

1106. மூலப்பொருள்!

"எனக்கு என்னவோ கடவுள் உன்னோட உடம்பில ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வோரு பொருள்ளேந்து செஞ்சிருப்பார்னு தோணுது.''

''ஆரம்பிச்சுட்டியா? சரி, சொல்லு!''

''உன் கால்களை வாழைத் தண்டுலேந்து செஞ்சிருக்காரு.''

'''வாழைத் தோட்டம் போட்டது போல் கால்களிரண்டு அதில்
வட்டம் போட்டுத் திரிவதென்ன கண்களிரண்டு' ன்னு அலையற உன் கண்ணையும் சேத்து அன்னிக்கே பாடிட்டார் கண்ணதாசன்.''

'அப்புறம், உன் இடுப்பு இருக்கே அதை உடுக்கையிலேந்து செஞ்சிருப்பாரு.''

''ஐயே! இது நல்லாவா இருக்கு''

''உடுக்கை பாத்திருக்கியா? மேலேயும் கீழேயும் பருமனா, நடுவில மட்டும் குறுகலா. அது மாதிரி உன் குறுகிய இடை, அதுக்கு மேலே...''

''சரி, போதும்.'' 

''அப்புறம் உன் முகம் நிலாவேதான். அதில சின்னதா ரெண்டு குளம் வெட்டி ஒவ்வொண்ணிலேயும் ஒரு மீனை நீஞ்ச விட்ட மாதிரி கண்கள்.''

''அடக் கடவுளே!''

''கடவுள் உன்னை எப்படியெல்லாம் செஞ்சிருக்கார்னு நினைச்சு நீயே ஆச்சரியப் படறே பாரு.''

''போதும்டா சாமி!'' 

''முக்கியமானதை மட்டும் சொல்லி முடிச்சுடறேன்''

''வேண்டாம். எனக்கு பயமா இருக்கு!''

''நீ நினைக்கிற மாதிரி இல்ல. உன் தோளை எதிலேந்து செஞ்சிருக்கார்னு தெரியுமா?''

''நீ மணிக்கணக்கா என் தோள்ளேயே சாஞ்சுக்கிட்டிருக்கறதைப் பாத்தா, அதை ஏதாவது மரத்திலதான் செஞ்சிருப்பார்னு நீ நினைக்கற போலிருக்கு!''

''நீ பாயின்ட்டுக்கு வந்துட்ட. ஆனா உன் முடிவு தப்பு. நான் ஒரு சேல்ஸ்மேன். தினமும் நுறு பேரைப் பாத்து எங்க கம்பெனியோட தயாரிப்பை வாங்கிக்கங்கன்னு கெஞ்சிக் கூத்தாடி பல பேர் கிட்ட விக்க முடியாம தோத்துப் போய் மேலதிகாரி கிட்ட திட்டு வாங்கி நொந்து போய் உயிரே போன மாதிரி உடம்பும் மனசும் சோர்ந்து போய் வந்து உன் தோளை அணச்சுக்கிட்டா, போன உயிர் வந்த மாதிரி அப்படி ஒரு தென்பும், புத்துணர்வும் வருது. அமிர்தத்துக்குத்தான் இப்படிப்பட்ட சக்தி இருக்குன்னு சொல்லுவாங்க. அதனால உன் தோளைக் கடவுள் அமிர்தத்திலேந்துதான் செஞ்சிருக்கணும்.''

அவள் தோளில் தன் தலையை அழுத்தமாக வைத்துச் சாய்ந்து கொண்டான் அவன்.

அவளுக்கு வலிக்கவில்லை!

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 111
புணர்ச்சி மகிழ்தல்  
குறள் 1106
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.

பொருள்
தழுவிக் கொள்ளும்போதெல்லாம் புத்துயிர் அளிப்பது போன்ற உணர்வைத் தருவதால் இவளுடைய தோள்கள் அமிர்த்ததினால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

Tuesday, May 26, 2020

1105. கேட்டதும் கொடுப்பவை!

''இன்னிக்கு என்ன கதை சொல்லப் போற?' என்றாள் விமலா..

''அதான் நீ கதை சொல்லி முடிச்சுட்டியே!'' என்றான் கணேஷ்.

''அது நாம ரெண்டு பேரும் சேர்ந்து படிச்ச கதை. எப்பவும் அந்தக் கதை முடிஞ்சதும் நீ ஒரு கதை சொல்லுவியே, அதைக் கேட்டேன்''

''ஓ, ரொம்ப நேரம் உன் தோள்ள சாஞ்சுக்கிட்டு புலம்பிட்டு அப்புறம்தானே எழுந்திருப்பேன், அதைச் சொல்றயா?''

''அதேதான்!'' என்றாள் விமலா.

''என்ன செய்யறது? உன்னை விட்டுப் பிரிய மனசில்லாம உன் தோள்ள சாஞ்சுக்கிட்டிருக்கேன். உன் தோள் வலிக்கக் கூடாதேங்கறதுக்காக உங்கிட்ட ஏதாவது பேசிக்கிட்டிருப்பேன். அதைக் கதைன்னு சொல்லிட்டியே!''

''நீ சொல்றதெல்லாம் கேக்க சுவாரசியமா இருக்கும். நீ என் தோள்ள சாஞ்சுக்கிட்டிருக்கற வலியே எனக்குத் தெரியாது. சுவாரசியமா இருக்கறதால கதைன்னு சொன்னேன். அது தப்பா?'' என்றாள் விமலா.

''தப்பு இல்ல. ஆனா, இன்னிக்கு நான் சொல்லப் போறது ஒரு உண்மை'' என்றான் கணேஷ்.

''சொல்லு. ஒரு நாளைக்காவது உண்மையைச் சொல்லு!''

''சின்ன வயசில எல்லாம் அடிக்கடி என் அம்மா மடியில போய்ப் படுத்துப்பேன். கொஞ்சம் பெரியவனானப்பறம் என் அம்மா அதை நிறுத்தச் சொன்னாங்க. 'உன் மடியில படுத்துக்கிட்டா எனக்கு சந்தோஷமா இருக்கும்மா'ன்னு சொன்னேன்.  'நீ பெரியவனாயிட்ட. இனிமே என் மடியில படுத்துக்க முடியாது. உனக்கு சந்தோஷமா இருக்கற வேற விஷயத்தைக் கண்டு பிடின்னு சொன்னாங்க. அப்புறம் என் தாத்தாவையோ பாட்டியையோ கதை சொல்லச் சொல்லிக் கேப்பேன். அது சந்தோஷமா இருந்தது. அப்புறம் நான் வளர வளர, நண்பர்கள் கிட்ட பேசறது, விளையாடறது, புத்தகம் படிக்கிறதுன்னு எனக்கு சந்தோஷம் கொடுக்கற பல விஷயங்களைக் கண்டு பிடிச்சேன். இப்ப...''

''இப்ப...'

'இப்பல்லாம் எனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கறது உன்னோட தோள்கள்தான்!' என்ற கணேஷ் அவள் தோள்களிலிருந்து தலையை எடுத்து , திரும்பி அவள் முகத்தைப் பார்த்தான். அவள் நீண்ட கூந்தலில் சூடியிருந்த மல்லிகையின் வாசத்தை மூச்சை இழுத்து அனுபவித்தபடியே, ''ஆஹா! என்ன ஒரு மணம்!'' என்றபடியே அவள் தோள்களை இரு கைகளாலும் அழுத்தினான்.

''அழுத்தாதையா! வலிக்குது. நீ தோள்ள ரொம்ப நேரம் சாஞ்சுக்கிட்டிருந்தப்ப கூட வலிக்கல!'' என்றாள் விமலா.

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 111
புணர்ச்சி மகிழ்தல்  
குறள் 1105
வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்.

பொருள்
நமக்கு விருப்பமான பொருள் ஒன்று நாம் விரும்பும்போதெல்லாம் நமக்கு இன்பமளிப்பது போல், மலரணிந்த கூந்தலைக் கொண்ட இவளுடைய தோள்கள் எனக்கு இன்பமளிக்கின்றன.

Thursday, May 21, 2020

1104. வெப்பநிலை மாறுதல்!


"ஏண்டா இப்படிப் படுத்தற? இது டிசம்பர் மாசம். அதுவும் இந்த வருஷம் குளிர் அதிகமா இருக்கு. நான் ஃபேனே வேண்டாம்னுட்டு போத்திக்கிட்டுப் படுத்திருக்கேன். நீ என்னடான்னா ஏசி போடணும்னு பிடிவாதம் பிடிக்கற? ஏசி போட்டா நான் வெளியில போய்தான் படுத்துக்கணும்" என்றான் நிகில்.

"போய்ப் படுத்துக்க!" என்றான் கார்த்திக்.

"டேய்! இது என் வீடுடா!"

"இருந்தா என்ன? நான் உன்னோட கெஸ்ட். கெஸ்ட்டோட வசதிக்கு முன்னுரிமை கொடுக்கறதுதானே பண்பாடு?"

"வசதிக்கு முன்னுரிமை கொடுக்கலாம்டா. பைத்தியக்காரத்தனத்துக்கு முன்னுரிமை கொடுக்க முடியாது.  நீ வேணும்னா கொஞ்சம் வெளியில போய்த் தெருவில  நடந்து பாத்துட்டு வா. யார் வீட்டிலேயாவது ஏசி ஓடுதான்னு பாரு!" என்றான் நிகில்.

"டேய்! எனக்கு உடம்பு வேகுது, ஏ சி போடுன்னு கேட்டா மத்தவங்க வீட்டில எல்லாம் ஏசி ஓடுதான்னு பாக்கச் சொல்ற?" என்றான் கார்த்திக்.

"நேத்து ராத்திரி ஃபேன் கூட வேண்டாம், குளிருதுன்னு சொன்னே! இன்னிக்கு என்ன ஆச்சு உனக்கு? உடம்பு சரியில்லையா? மத்தியானம் எங்கேயோ போயிட்டு வந்ததில உனக்கு ஏதோ ஆயிடுச்சுன்னு நினைக்கிறேன். எங்கே போயிட்டு வந்தே?" 

"அதெல்லாம் சொல்ல முடியாது!" என்றான் கார்த்திக்.

ன்று பிற்பகல் நடந்த விஷயம் அவன் நினைவுக்கு வந்தது. 

கல்லூரி விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த அவன் மாமா பெண் கமலி விடுமுறையில் அவள் வீட்டுக்கு வந்திருக்கிறாள் என்று தெரிந்து அவளைப் பார்க்க அவள் வீட்டுக்குச் சென்றான் கார்த்திக். 

மாமா வீட்டில் கமலின் அறையில் அவளிடம் ஒரு மணி நேரம் தனியே பேசச் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்வது என்று இருவரின் பெற்றோர்களும் முன்பே நிச்சயித்து விட்டதால் அவன் கமலியுடன் தனியே பேசுவதை அவள்  பெற்றோர் அனுமதித்தார்கள். 

கமலின் அறை மாடியில் இருந்தது. அதற்கு மேல் மொட்டை மாடி என்பதால் மாடியறையில் வெப்பம் அதிகமாக இருந்தது. டிசம்பர் மாதம் என்றால் கூட, சென்னையைப் பொருத்த வரை பகல் வேளைகள் எப்போதுமே கோடைதானே! கமலின் அறையில் ஏ சி இருந்தது. ஆனால் அது வேலை செய்யவில்லை. எனவே ஃபேன் மட்டும் போட்டுக் கொண்டார்கள்.

கமலியிடம் பேசிக்கொண்டிருந்த கார்த்திக் சற்று நேரத்துக்குப் பின் அவளிடம், "கமலி! குளிருதே! ஃபேனை அணைச்சுடறியா?" என்றான். 

"குளிருதா? ஃபேன் ஓடறப்பயே எனக்கு ஒரே சூடா இருக்கு. உனக்கென்ன ஜுரமா என்ன?" என்றாள் கமலி.

"இல்ல, முதல்ல எனக்கும் சூடாத்தான் இருந்தது. ஆனா உன் பக்கத்தில உக்காந்து பேசிக்கிட்டிருக்கச்சே சூடெல்லாம் போய் குளிர ஆரம்பிச்சுடுச்சு!" என்றான் கார்த்திக்.

கமலி அவனை முறைத்தாள், ஆனால் ஃபேனை அணைக்கவில்லை. அவளுடன் பேசிக் கொண்டிருந்த மீதி நேரமும் கார்த்திக்கிற்கு உடல் குளிருவதாகத்தான் தோன்றியது.

'குளிருகிறது, ஃபேனை அணை என்றால் கமலி கேட்கவில்லை. இப்போது என்னவென்றால், சூடாக இருக்கிறது ஏசி போடு என்றால் நண்பன் முடியாது என்கிறான்! என்ன ஆயிற்று இவர்களுக்கு?' என்று நினைத்துக் கொண்டான் கார்த்திக்.

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 111
புணர்ச்சி மகிழ்தல்  
குறள் 1104
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்.

பொருள்:
நீங்கினால் சுடுகிறது, நெருங்கினால் குளிர்ச்சியாக இருக்கிறது. இத்தகைய புதுவிதமான தீயை இவள் எங்கிருந்து பெற்றாள்?

Thursday, May 7, 2020

1103. தோள் கண்டேன் தோளே கண்டேன்!

அங்கே போவது விப்ரநாராயணர்தானே?" 

"ஆமாம். அவர்தான்." 

"ஆஹா! என்ன ஒரு இறை பக்தி! ஒரு குடலை நிறையப் பூக்களுடன் கிளம்பி விட்டாரே அரங்கன் ஆலயத்துக்கு!"

"அவர் செல்வது அரங்கன் ஆலயத்துக்கல்ல. அரங்கன் ஆலயத்துக்குச் செல்வதென்றால் காலைப்பொழுதில்தானே பூக்களைப் பறித்து மாலையாகக் கட்டி எடுத்துச் செல்வார்? இது போல் இருட்டும் நேரத்திலா செல்வார்?"

"ஆமாம். உண்மைதான். பின்னே வேறு எங்கு போகிறார்?"

"அவர் அரங்கனை மறந்துப் பல மாதங்கள் ஆகி விட்டன. இப்போது தன்  குடிலையே தேவதேவியின் ஆலயமாக அல்லவா மாற்றி விட்டார் விப்ரநாராயணர்! இப்போது அவர் பூக்களை எடுத்துச் செல்வது அவருடைய அன்புக்குரிய தேவிக்குத்தான்!"

"அடப்பாவமே! அரங்கனின் அடியே கதி என்றிருந்தவர் இருந்தவர் இன்று ஒரு அணங்கின்  மடியே கதியென்று கிடக்கிறார் என்று சொல்லுங்கள்!"

"பொழுது விடிந்து விட்டது அன்பரே, எழுங்கள்!" என்றாள் தேவதேவி.

"என்னால் முடியாது. நீ வேண்டுமானால் எழுந்து செல்!" என்றார் விப்ரநாராயணர்.

"ம்? நான் எப்படி எழுந்திருப்பது? என் தோளில் அல்லவா தாங்கள் தலை வைத்துப் படுத்திருக்கிறீர்கள், ஆதிசேஷன் மீது படுத்திருக்கும் அரங்கன் போல்!" 

விப்ரநாராயணர் சட்டென்று எழுந்து கொண்டார்.

"என்ன பிரபு, ஏன் எழுந்து விட்டீர்கள்?"

"நீ அரங்கன் பெயரைச் சொன்னதும் கொஞ்சம் அதிர்ந்து விட்டேன். அரங்கனை தரிசித்துப் பல வாரங்கள் ஆகி விட்டனவே!" என்றார் விப்ரநாராயணர்.

"அரங்கனை தரிசிக்க இப்போது கிளம்பிச் செல்லப் போகிறீர்களா?" என்றாள் தேவதேவி எழுந்து அமர்ந்தபடி.

"இல்லை" என்ற விப்ரநாராயணர் தேவதேவியின் தோள்களைப் பிடித்து அழுத்தி அவளை மஞ்சத்தில் தள்ளி அவள் தோள்களில் மீண்டும் தலை வைத்துப் படுத்துக் கொண்டார். "உன் தோள்களில் சாய்ந்து உறங்குவதை விட ஆதிசேஷனின் மீது பள்ளி கொண்டிருக்கும் தாமரைக்கண்  கொண்ட அந்த அரங்கனின் உலகம் இனிமையானதா என்ன?" என்று சொல்லி வீட்டுக் கண்களை மூடி மீண்டும் உறங்கத் தலைப்பட்டார்.

"அடப்பாவி மனிதரே!" என்று நினைத்த தேவதேவி, "அரங்கநாதா! என்னிடம் பித்துக்கொண்டு உன்னையே மறந்து விட்ட உன் பக்தருக்கு நீதான் அருள் புரிய வேண்டும்!" என்று வேண்டிக் கொண்டாள்.

அவள் வேண்டுதலுக்குச் செவி  சாய்த்தது போல் அரங்கனின் ஆலய மணி ஒலித்தது. விப்ரநாராயணரின் மீது திருட்டுப் பட்டம் விழ வைத்து அவரை ஆட்கொண்டு மீண்டும் தன் பக்தராக்கித் தனக்குத் திருமாலை என்ற பாமாலையும், திருப்பள்ளி எழுச்சி என்ற சுப்ரபாதமும் பாடி தொண்டரடிப் பொடி ஆழ்வார் என்ற பெயர் பெற்று வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும் புகழ் பெற்றவராக ஆக்க அரங்கன் போட்டிருக்கும் திட்டம்  துவங்கப்போவதன் அறிவிப்புதான் அந்த மணி என்பதை தேவதேவி அப்போது அறிந்திருக்கவில்லை!   

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 111
புணர்ச்சி மகிழ்தல்  
குறள் 1103
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.

பொருள்:
தான் விரும்பும் காதலியின் மெல்லிய தோளில் சாய்ந்து துயில்வதை விட தாமரைக் கண்ணனின் உலகம் இனிமையானதா என்ன?

Monday, May 4, 2020

1102. உடம்புக்கு என்ன?

"என்னடா ஒரு மாதிரி இருக்கே? உடம்பு சரியில்லையா என்ன?"

 கடந்த சில நாட்களாக குருராஜனைப் பார்த்துப் பலரும் கேட்கும் கேள்வி இது.

"இல்லையே! நல்லாத்தானே இருக்கேன்!" என்று குருராஜன் பதில் சொன்னாலும் தன்னிடம் ஒருசோர்வு இருப்பதை அவன் உணர்ந்துதான் இருந்தான். 

மருத்துவரிடம் சென்றான். அவர் அவனைப் பரிசோதித்து விட்டு, "உடம்பில ஒண்ணும் பிரச்னை இல்ல. நல்லாத்தான் இருக்கீங்க. ரெண்டு நாள்  எங்கேயாவது வெளியூர் போயிட்டு வாங்க. சில சமயம் சின்ன இட  மாறுதல், சூழ்நிலை மாறுதல் உடம்புக்கும் மனசுக்கும் ஒரு சக்தியைக் கொடுக்கும்" என்றார் மருத்துவர்.  

ஒரு கிராமத்திலிருந்த அவன் நண்பன் ஒருவன் நீண்ட நாட்களாக குருராஜனைத் தன் ஊருக்கு வரும்படி அழைத்துக் கொண்டிருந்தான். மருத்துவரின் யோசனையைச் செயல்படுத்தும் விதமாக நண்பனின் கிராமத்துக்குச் சென்றான் குருராஜன்.

கிராம சூழ்நிலை ரம்மியமாகத்தான் இருந்தது. நண்பனோடு இருந்ததும் மனதுக்கு உற்சாகமாகத்தான் இருந்தது. ஆயினும் அப்போதும் குருராஜன் சோர்வை உணர்ந்து கொண்டிருந்தான்.

நண்பன் கூட, "ஏண்டா ஒரு மாதிரி இருக்க? உடம்பு சரியில்லையா? எங்க ஊர்ல ஒரு நாட்டு வைத்தியர் இருக்காரு. அவரு நாடியைப் பாத்தே என்ன பிரச்னைன்னு சொல்லிடுவாரு" என்றான்.

நாட்டு வைத்தியரிடம் சென்றார்கள். அவர் நாடியைப் பார்த்து விட்டு,  "நாடி எல்லாம் நல்லாத்தான் இருக்கு. பட்டணத்துத் தம்பிக்கு கிராம வாழ்க்கை சலிப்பா இருக்கலாம். ஊருக்குப் போனவுடனே சரியாயிடும்!" என்றார் அவர்.

குருராஜனுக்கு சிரிப்புத்தான் வந்தது.

கிராமத்திலிருந்து ஊருக்குத் திரும்பிய பிறகும் குருராஜனின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. மருத்துவர்களால் கூடக் கண்டு பிடிக்க முடியாத பெரிய நோய் தனக்கு வந்திருக்குமோ என்ற அச்சம் குருராஜனுக்கு ஏற்பட்டது. 

ஒரு நாள் இரவு தூக்கம் பிடிக்காமல் யோசித்துக் கொண்டிருந்தான். திடீரென்று அவனுக்கு ஒன்று தோன்றியது. இத்தனை நாட்களாகத் தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோமோ என்று நினைத்தான்.

அடுத்த நாள் காலை பஸ் பிடித்துப் பக்கத்து ஊரிலிருந்த அத்தை வீட்டுக்குப் போனான்.

"என்னடா? இத்தனை நாளா இந்த அத்தை இருக்கறதையே மறந்துட்டேன்னு  நெனச்சேன். திடீர்னு ஒரு நாள் வந்து நின்ன. ஒரு மாசம் கழிச்சு இப்ப மறுபடி வந்திருக்க. அத்தை மேல இப்பதான் பாசம் வர ஆரம்பிச்சிருக்கா உனக்கு?" என்றாள் அத்தை.

"என்ன அத்தை இது? சின்ன வயசிலேயே என் அம்மா போயிட்டாங்க. இப்ப அப்பாவும் போயிட்டாரு. எனக்கு இருக்கற உறவு நீ மட்டும்தானே!" என்றான் குருராஜன்.

"உன் அப்பா போய் அஞ்சு வருஷம் ஆச்சு. இப்பதான் உனக்கு இது தோணிச்சாக்கும்!" என்றாள் அத்தை. 

சாப்பாட்டுக்குப் பிறகு ஒரு குட்டித் தூக்கம் போடுவதற்காக அத்தை உள்ளறைக்குப் போய் விட்டாள்.

தாழ்வாரத்தில் அவன் தனியே அமர்ந்திருந்தபோது அத்தை பெண் வனஜா அங்கே வந்தாள். அவனுக்குப் பின்னே வந்து நின்று அவன் தோளைத் தொட்டாள்.

வனஜாவின் ஸ்பரிசம் குருராஜின் உடலில் சிலீரென்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியது. திரும்பி அவளைப் பார்த்தான். 

"என்ன வனஜா! உன்னைப் பாக்கத்தான் இவ்வளவு தூரம் வந்திருக்கேன். இத்தனை நேரம் உன்னைக் கண்ணிலேயே காணோம்?" என்றான் குருராஜன்.

"ம்? நீ என்னைப் பாக்கவா வந்தே? உன் அத்தையைப் பாக்கத்தானே வந்தே?" என்றாள் வனஜா குறும்பாகச் சிரித்தபடி.

"சொல்ல மாட்ட? உன்னைச் சின்னப் பொண்ணாதான் பாத்திருக்கேன். ரொம்ப நாள் கழிச்சு அத்தையைப் பாக்க போன மாசம் வந்தப்பத்தான் முதல் தடவையா உன்னைப் பெரிய பொண்ணாப் பாத்தேன். அப்ப உன்னைப் பாத்துப் பேசிட்டுப் போனப்பறம் இந்த ஒரு மாசமா என் உடம்பும் மனசும் ஒரு மாதிரி ஆயிடுச்சு. பாக்கறவங்கள்ளாம் உனக்கு என்னடா ஆச்சுங்கறாங்க. சரி மறுபடி உன்னைப் பாத்துப் பேசினாத்தான் சரியாப் போகும்னு நெனச்சு ஆசையா ஓடி வந்திருக்கேன். அத்தையைப் பாக்கத்தானே வந்தேன்னு சொல்லிக் காட்டற?" என்றான் குருராஜன் போய்க் கோபத்துடன். 

அதற்குப் பிறகு இருவரும் ஒருவர் கையை மற்றவர் பற்றியபடி நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். 

காமத்துப்பால்  
களவியல் 
அதிகாரம் 111
புணர்ச்சி மகிழ்தல்  
குறள் 1102
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.

பொருள்:
நோய்களுக்கு மருந்து வேறு பொருட்களாக இருக்கின்றன. ஆனால் அணிகலன் அணிந்த இவளால் விளைந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கிறாள்.

1128. ஆறிய காப்பி!

"என்ன நம்ம பொண்ணு ஆம்பளைங்க மாதிரி அடிக்கடி காப்பி குடிக்கறா?" என்றார் சபாபதி. "ஏன், பொம்பளைங்க அடிக்கடி காப்பி குடிக்கக் கூட...