"என்ன பயம்?"
"கல்ணத்துக்கு முன்னால, நாம இவ்வளவு நெருக்கமா இருக்கறது சரிதானான்னு."
"நல்ல வேளை! நான் வேற பயமா இருக்குமோன்னு நினைச்சேன்."
"வேற என்ன பயமா இருக்கும்னு நினைச்சே?"
"வேண்டாம். நான் சொன்னா நீ கோப்பப்படுவ!"
"நீ சொல்லாமலேயே எனக்குப் புரிஞ்சுடுச்சு. நான் கோபமாத்தான் இருக்கேன்."
சற்று நேரம் மௌனம் நிலவியது.
"என் பயத்தை நீ புரிஞ்சுக்கல. நாம இவ்வளவு தூரம் பழகினப்பறம், நம்ப வீட்டில கல்யாணத்துக்கு சம்மதிக்கலேன்னா?"
"சம்மதிச்சா நல்லது. உன் வீட்டிலேயோ, என் வீட்டிலேயோ சம்மதிக்காட்டாலும், நீயும் நானும் கணவன் மனைவியாத்தான் ஆகப் போறோம். அதாவது நீ மனைவி, நான் கணவன்!"
"ரொம்பத்தான் குறும்பு உனக்கு!"
"இல்ல. நீயும் நானும் கணவனும் மனைவியும்னு சொன்னா, வரிசைப்படி நீ முதல்ல வரதால, இலக்கணப்படி நீதான் கணவன்னு ஆயிடும். அதுக்குத்தான் இந்த விளக்கம்!"
"இலக்கண வகுப்பு நடத்தினது போதும்! நம்ம ரெண்டு பேர் வீட்டிலேயும் ஒத்துக்காட்டாலும், நாம கணவன் மனைவின்னு ஆயிடுவோம்னு எப்படி இவ்வளவு உறுதியாச் சொல்ற?"
அவன் ஒரு நிமிடம் கண்களை மூடிக் கொண்டான். பிறகு சொன்னான்.
"நான் வீட்டுக்குத் தெரியாம, சிகரெட் பிடிக்கறேன். நான் சிகரெட் பிடிக்கறப்ப, என் அப்பாவோ அம்மாவோ வந்துட்டா, சிகரெட்டைக் கீழ போட்டுடுவேன். உன்னைக் காதலிக்கறதும், உன்னோட பழகறதும் திருட்டுத்தனமாத்தான். சிகரெட் பிடிக்கும்போது, யாராவது பாத்துடுவாங்களோன்னு ஒரு பயம் இருக்கும். ஆனா உன்னோட பழகறப்ப, யாராவது பாத்துடுவாங்களோங்கற பயம் எனக்கு இல்லை."
"ஏன் அப்படி?"
"ஏன்னா, உன்னைத் தொட்டுப் பேசறப்பல்லாம், எனக்கு என் வீட்டு சாப்பாட்டை சாப்படற மாதிரி இருக்கு. அதுவும், மத்தவங்களோட சேந்து. அப்ப எப்படி பயம் வரும்?"
"நீ சொல்றது எனக்கு சரியாப் புரியல. ஆனா, ஒண்ணு மட்டும் புரியுது."
"என்ன?"
"எங்க வீட்டில எனக்கு வேற யாரோடயாவது கல்யாணம் நிச்சயம் பண்ணினா, நீ என்னைத் தூக்கிக்கிட்டுப் போய்த் தாலி கட்டிடுவ. அப்படித்தானே?"
"அது மட்டும் என்னால முடியாது!"
"ஏன் முடியாது? இவ்வளவு வீறாப்பாப் பேசின?"
"இவ்வளவு பெரிய உடம்பை என்னால எப்படித் தூக்க முடியும்?"
அவள் கையை ஓங்க, "வேண்டாண்டி! அணைக்க வேண்டிய கையால என்னை அடிக்காதே! உன் கை வேகமா என் முதுகில வந்து விழுந்தா, அந்தக் கையோட எடையை என் முதுகு தாங்காது!" என்று சொல்லி, அவள் கையைப் பிடித்துக் கொண்டான் அவன்.
காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 111
புணர்ச்சி மகிழ்தல்
.
குறள் 1107
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்அம்மா அரிவை முயக்கு.
பொருள்
மாநிறம் கொண்ட இந்தப் பெண்ணைத் தழுவிக் கொள்வது, நம் வீட்டில் இருந்து கொண்டு, நாம் ஈட்டிய பொருளை, நமக்கு நெருக்கமானவர்களுடன் பகிர்ந்து உண்பதைப் போன்றது.
No comments:
Post a Comment