Sunday, April 10, 2022

1142. பவளக்கொடி!

அந்த நவரத்தினக் கடையில்தான் அஜன் அவளை முதலில் சந்தித்தான்.

அஜன் ஒரு நவரத்தினக் கடையில் சில காலம் வேலை செய்ததால் நவரத்தினங்களை நன்றாக இனம் கண்டு அவற்றின் தரத்தை அறியும் திறமையை வளர்த்துக் கொண்டிருந்தான்..

நவரத்தினக் கடையில் சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, சொந்தத் தொழில் செய்ய விருப்பம் கொண்டதால் அஜன் தன் வேலையை விட்டு விட்டு சிறிதளவு முதல் போட்டு தானிய வியாபாரம் செய்ய ஆரம்பித்தான். 

தானிய வியாபாரத்தில் வருமானம் குறைவாகத்தான் வந்தது என்றாலும் அவன் எளிய வாழ்க்கைக்கு அது போதுமானதாக இருந்தது. திருமணம் செய்து கொண்டால் கூட, தான், தன் தாய், தன் மனைவி, தனக்குப் பிறக்கக் கூடிய குழந்தைகள் ஆகியோரைக் காப்பாற்றும் அளவுக்குத் தன் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்ததால் தாயின் விருப்பப்படி அவன் திருமணம் செய்து கொள்ளச் சம்மதம் தெரிவித்து விட்டான்.

அவன் தாய் தன் மகனுக்கு ஏற்ற சிறந்த மனைவியைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாள்.

மறுநாள் தன் கடைக்கு ஒரு முக்கிய வாடிக்கையாளர் வர இருப்பதாகவும் அப்போது அஜன் கடைக்கு வந்தால் தனக்கு உதவியாக இருக்கும் என்று அவன் பழைய முதலாளி தன் ஊழியர் ஒருவன் மூலம் அவனுக்குச் செய்தி அனுப்பி இருந்தார்.  இது போன்ற உதவிகளுக்காக அவ்வப்போது அவர் ஒரு சிறிய தொகையை அவனுக்கு அளிப்பார்.

கடைக்காரர் கேட்டுக் கொண்டபடி மறுநாள் அஜன் அந்தக் கடைக்குச் சென்றிருந்தான்.

அங்குதான் அவன் அவளைப் பார்த்தான்.

நவரத்தினங்கள் வாங்குவதற்காக வந்திருந்த அந்தப் பெண் பெரும் செல்வக் குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பது அவள் நடை, உடை, பேச்சு, தோரணை அனைத்திலும் வெளிப்பட்டது. கடை முதலாளி உட்பட யாரிடம் அவள் பேசினாலும் அதில் ஒரு அதிகார தொனி இருந்தது.

"அம்மணி! இவன் நவரத்தினங்களைப் பற்றி நன்கு அறிந்தவன். உங்களுக்கு வேண்டிய பவளங்களைத் தேர்ந்தெடுக்க இவன் உதவுவான்" என்று கடை முதலாளி அஜனை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தபோது, முதலில் அவனை அலட்சியமாகப் பார்த்த அந்தப் பெண் சற்று நேரத்திலேயே பவளங்களின் வகை, தன்மை, மதிப்பு ஆகியவை பற்றி அவன் கூறிய பல விஷயங்களைக் கேட்டு பிரமிப்படைந்து அவனைச் சற்று மதிப்புடனேயே பார்த்தாள்.

இறுதியில் சில பவளங்களை வாங்கிக் கொண்டு அவள் சென்றபோது கடை முதலாளி மகிழ்ச்சியுடன் அஜனுக்கு நன்றி தெரிவித்தார். 

"யார் இந்தப் பெண்மணி? இவ்வளவு அதிகாத தோரணையுடன் இருக்கிறார்களே!" என்றான் அஜன்.

"இருக்க மாட்டார்களா? அவர் தந்தை அரண்மனையில் ஒரு பெரிய அதிகாரியாயிற்றே!" என்றார் கடை முதலாளி.

"அவர்கள் பெயர் என்ன?"

"அது எனக்குத் தெரியாது. பவளம் வாங்கியதால் பவளக்கொடி என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளேன்!" என்றார் அவன் பழைய முதலாளி சிரிப்புடன்.

சில நாட்களுக்குப்பிறகு 'பவளக்கொடி' அஜனைத் தன் விட்டுக்கு வரச் சொல்லி இருப்பதாக கடை முதலாளியிடமிருந்து தகவல் வந்தது.

ஒருவேளை தன் யோசனைப்படி அவள் வாங்கிய பவளங்கள் அவளுக்குப் பிடிக்காமல் போய், தவறான ஆலோசனை கூறியதற்காகத் தன்னைக் கடிந்து கொள்வதற்காக அழைத்திருப்பாளோ என்ற அச்சத்துடனேயே அஜன் அவள் வீட்டுக்குப் போனான்.

ஆனால் அஜன் அவள் வீட்டுக்குச் சென்றதும் அவனுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. அவன் மறுத்தும் கேட்காமல் அவனுக்கு உணவளித்தார்கள். 

"உங்களுக்கு உணவளித்த பிறகுதான் தன்னிடம் அழைத்து வர வேண்டும் என்பது சின்னம்மாவின் உத்தரவு!" என்றாள் அவனுக்கு உணவளித்த அந்தப் பணிப்பெண்.

உணவருந்தியபின் 'சின்னம்மா'வின் அறைக்கு அஜன் அழைத்துச் செல்லப்பட்டான்.

"வாருங்கள்! வாருங்கள்!" என்று அவனை உற்சாகமாக வரவேற்ற 'பவளக்கொடி,' "நவரத்தினங்களைப் பற்றி நன்கறிந்த எத்தனையோ விற்பன்னர்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் உங்களைப் போன்ற துல்லியமான அறிவுள்ளவரை நான் பார்த்ததில்லை. என்னிடம் வேறு சில நவரத்தினங்கள் இருக்கின்றன. அவற்றை நீங்கள் பார்த்து அவற்றின் தரம், மதிப்பு பற்றி எனக்கு ஆலோசனை கூற வேண்டும். நான் அவ்வபோது நவரத்தினங்களை வாங்கிக் கொண்டும் விற்றுக் கொண்டும் இருப்பேன். அதிக மதிப்புள்ள கற்களை விற்காமல் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம். அதற்கு உங்கள் உதவி வேண்டும்!" என்றாள்.

அவள் எடுத்துப் போட்ட நவரத்தினங்களை ஒவ்வொன்றாகப் பார்த்து ஆராய்ந்து அவை பற்றி அவளிடம் விளக்கினான் அஜன்.

அஜன் கிளம்பியபோது அவள் அளித்த தங்க நாணயங்களை வாங்க மறுத்த அவன், "உங்களைப் போன்ற ஒரு உயர்ந்த நபரின் தொடர்பு கிடைத்ததே எனக்குப் பெரும் பேறு!" என்று சொல்லி விட்டுக் கிளம்பினான்.

வளக்கொடி பற்றிய நினைவு அஜன் மனதை எப்போதும் முழுமையாக ஆக்கிரமித்திருந்தது. 

'எப்படிப்பட்ட பெண்! என்ன ஒரு கம்பீரம், மலர்ச்சி, சிரிப்பு. அவள் என்னை நேரே பார்த்தபோதெல்லாம் என் உடலில் புளகாங்கிதம் ஏற்பட்டதே! அது ஏன்? பொதுவாகப் பெண்களின் கண்கள் குவளை மலர் போல் என்றெல்லாம் கவிஞர்கள் வர்ணிப்பார்கள். அவற்றையெல்லாம் படித்தால் எனக்கு வேடிக்கையாகத் தோன்றும். ஆனால் அவளுடைய கண் மலர் போல்தானே இருக்கிறது! 

'அவளை இன்னொரு முறை பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமா? சே! என்ன ஒரு முட்டாள்தனம்! அவள் எங்கே, நான் எங்கே! அவள் வீட்டில் ஒரு வேலைக்காரனாக இருக்கத்தான் நான் தகுதி பெற்றவன். அப்படி ஒரு வேலைக்காரனாக இருந்து அவளால் அதிகாரம் செய்யப்பட்டு அவளுடைய மலர்க் கண்களைப் பார்த்துக் கொண்டு அவள் கம்பீரத்தைப் பக்கத்திலிருந்து ரசித்துக் கொண்டிருந்தாலே போதுமே! சே! என்ன ஒரு சிந்தனை இது!'

ஆனால் இது போன்ற எண்ண ஓட்டங்கள் தன் மனிதில் அடிக்கடி ஏற்படுவதை அஜனால் தவிர்க்க முடியவில்லை.

சில வாரங்களுக்குப் பிறகு பவளக்கொடி மீண்டும் அவனைத் தன் வீட்டுக்கு அழைத்தாள்.

இந்த முறை அவள் சற்றுக் கோபமாக இருந்தாள்.

"என்ன ஐயா இது! என் ரத்தினங்களைப் பார்த்து மதிப்பிடத்தானே உங்களை அழைத்தேன்? ஆனால் ஊரில் உங்களையும் என்னையும் இணைத்துப் பேசுகிறார்களே, தெரியுமா?" என்றாள் அவள் கோபத்துடன்.

அஜனுக்கும் இது போன்ற பேச்சுக்கள் காதில் விழுந்தாலும், அவன் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. இப்போது அவளே தன்னைக் கூப்பிட்டுப் பேசியதும், விஷயம் விபரீதமாகப் போய்விட்டதோ என்ற பயம் ஏற்பட்டது.

"இல்லை, அம்மணி! இதில் என் தவறு எதுவும் இல்லை."

"என்ன, அம்மணியா? திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணை அம்மணி என்றா கூப்பிடுவார்கள்? என் பெயர் பரிவாதினி!" என்றாள் பவளக்கொடி- இல்லை பரிவாதினி - சிரித்துக் கொண்டே!

"என்ன சொல்கிறீர்கள்?"

"ஆமாம்! ஊரார் பேச்சு என் காதில் விழுந்ததும் முதலில் எனக்குக் கோபம் வந்தது. அப்புறம் யோசித்துப் பார்த்தபோதுதான் ஊரார் பேச்சு என் உள்மனதில் இருந்த எண்ணத்தைத்தான் பிரதிபலிக்கிறது என்று தோன்றியது. உங்களுக்கு இந்தப் பரிவாதினியைப் பிடித்திருந்தால் சொல்லுங்கள். என் தந்தையிடம் பேசி நம் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யச் சொல்கிறேன்."

சொல்லி முடித்ததும் தன்னை அறியாமலே தலையைக் குனிந்து கொண்டாள் பரிவாதினி.

அதிகார தோரணை கொண்ட கம்பீரமான பவளக்கொடி பரிவாதினியாக நாணத்துடன் தலை குனிந்து நிற்பதை நம்ப முடியாமல் பார்த்தான் அஜன்.

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 115
அலரறிவுறுத்தல்  (காதலைப் பற்றி ஊரார் பேசுதல்)

குறள் 1142
மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.

பொருள்:
மலர் போன்ற கண்ணை உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் அவளை எளியவளாகக் கருதி அலர் கூறி (வம்பு பேசி) எமக்கு உதவி செய்தனர்..

அறத்துப்பால்                                                               பொருட்பால்

1307. முதலில் தேவை முகவரி!

விளையாட்டாக ஆரம்பித்த பேச்சு விபரீதத்தில் முடியும் என்று அஜய் எதிர்பார்க்கவில்லை. அஜய் வழக்கம்போல் வீணாவுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருக்கும்போ...