Sunday, April 14, 2024

1307. முதலில் தேவை முகவரி!

விளையாட்டாக ஆரம்பித்த பேச்சு விபரீதத்தில் முடியும் என்று அஜய் எதிர்பார்க்கவில்லை.

அஜய் வழக்கம்போல் வீணாவுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருக்கும்போது "ஆமாம், என்னை ரொம்ப அழகுன்னு சொல்லிக்கிட்டிருக்கியே, அது உண்மைதானா?" என்றாள் வீணா.

"ஆமாம். அதில என்ன சந்தேகம்?" என்றான் அஜய்.

"அப்படின்னா என் அழகுக்காகத்தான் என்னைக் காதலிக்கறியா? என் குணத்துக்காக இல்லையா?"

சற்று யோசித்த அஜய், "இங்கே பாரு வீணா. முதல்ல ஒத்தரைப் பாக்கறப்ப நமக்குத் தெரியறது அவரோட தோற்றம்தான். அதை வச்சுத்தான் ஒத்தரைப் பிடிக்கிறதும் பிடிக்காததும். குணம் எல்லாம் பழகின அப்புறம்தானே தெரிய வரும்!" என்றான்.

"அப்படியா? அப்படின்னா, என்னை விட அழகான ஒரு பெண்ணேப் பார்த்தா என்னை விட்டுட்டு அவகிட்ட போயிடுவ இல்ல?" என்று சீண்டினாள் வீணா.

"அப்படிச் சொல்ல முடியாது. ஆனா ஐஸ்வர்யா ராய் மாதிரி அழகியா இருந்தா கொஞ்சம் யோசிக்க வேண்டியதுதான்!" என்றான் அஜய் விளையாட்டாக.

"அப்படின்னா அப்படி ஒரு பெண்ணைத் தேடிக்க!" என்று கோபமாகச சொல்லி விட்டு உரையாடலைத் துண்டித்து விட்டாள் வீணா.

அதற்குப் பிறகு, அஜய் வீணாவை ஃபோனில் அழைக்கப் பலமுறை  முயன்றான்.  அவள் ஃபோனை எடுக்கவில்லை.

"சாரி. விளையாட்டுக்குத்தான் அப்படிச் சொன்னேன். மன்னிச்சுடு!" என்றெல்லாம் ஐந்தாறு செய்திகள் அனுப்பினான். அவற்றுக்கும் பதில் இல்லை.

ன்றோடு ஐந்து நாட்கள் ஆகி விட்டன. வீணாவுடன் தனக்கு நிரந்தரப் பிரிவு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் அஜய்யின் மனதில் ஏற்படத் தொடங்கியது. அவளுடன் பழகிய இனிமையான தருணங்கள் நினைவுக்கு வந்தன. 

'எவ்வளவு அற்புதமான தருணங்கள் அவை! என்னுடைய விளையாட்டான, முட்டாள்தனாமான ஒரு பேச்சால் எல்லாவற்றையும் இழக்கப் போகிறேனா?

'இத்தனை நாள் பழகியும் வீணாவின் வீட்டு முகவரியை வாங்கி வைத்துக் கொள்ளவில்லை. அசோக் நகரில் இருக்கிறாள் என்பதுதான் தெரியும். அவளுடைய அபார்ட்மென்ட் பெயர் கூட மறந்து விட்டது. அவள் வீட்டை எப்படிக் கண்டுபிடிப்பது?'

அஜய்யின் தொலைபேசி அடித்தது. யாராக இருக்கும் என்று ஆர்வமில்லாமல் பார்த்தவனுக்கு இன்ப அதிர்ச்சி. வீணா!

"ஹலோ" என்றான் அஜய் அவசரமாக. 

"சாரி" என்றாள் வீணா.

"இல்லை. என் மேலதான் தப்பு!"

"தப்பு யார் பேரிலேயோ! ஆனா நாலஞ்சு நாள் உங்கிட்ட கோவிச்சுக்கிட்டுப் பேசாம இருந்தப்புறம் எனக்கு ஒரு பயம் வந்துடுச்சு!"

"என்ன பயம்?"

"நான் பேசாம இருந்ததால நீ என் மேல கோவிச்சுக்கிட்டு எங்கிட்டேந்து நிரந்தரமாப் பிரிஞ்சுடுவியோங்கற பயம். உன்னோட சந்தோஷமா இருந்த நாட்கள் மறுபடி வராதோன்னு பயம். அதனாலதான் நான் கால் பண்ணினேன். எங்கே சந்திக்கலாம், சொல்லு" என்றாள் வீணா.

கூடி இருந்த இன்பத்தை ஊடல் அழித்து விடுமோ என்று தனக்கு ஏற்பட்ட அச்சம் தன் காதலிக்கும் ஏற்பட்டிருப்பதை நினைத்து வியந்த அஜய், "உன் வீட்டு அட்ரஸை அனுப்பு. நான் அங்கே வந்து உன்னைக் கூட்டிக்கிட்டுப் போறேன். எங்கே போறதுன்னு அப்புறம் தீர்மானிக்கலாம். நீ ஃபோனை எடுக்கல. உன் அட்ரஸ் இல்லாததால உன்னை நேரிலேயும் தொடர்பு கொள்ள முடியல. இந்த ஒரு நிலைமை இனிமேயும் வரக் கூடாது. அதனால அட்ரஸ் ஃபர்ஸ்ட், மீட்டிங் நெக்ஸ்ட்!" என்றான் அஜய், பறிபோயிருந்த உற்சாகம் திரும்பக் கிடைத்தவனாக. 

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 131
புலவி (பொய்க் கோபம்)
குறள் 1307
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று.

பொருள்:
கூடியிருக்கும் இன்பம் இனிமேல் நீட்டிக்காதோ என்று ஏங்கி எண்ணுவதால் ஊடியிருத்தலிலும் காதலர்க்கு ஒருவகைத் துன்பம் இருக்கிறது.

No comments:

Post a Comment

1309. நிழலின் அருமை!

"உங்களுக்கு சமைக்கத் தெரியுங்கறதுக்காக என் சமையல்ல குத்தம் கண்டுபிடிச்சுக்கிட்டு இருக்காதீங்க. வேணும்னா நீங்க சமையுங்க. நான் உக்காந்து ...