அதிகாரம் 127 - அவர்வயின் விதும்பல் (அவரை விரைவில் காணத் துடித்தல்)

திருக்குறள்
காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 127
அவர்வயின் விதும்பல் (அவரை விரைவில் காணத் துடித்தல்)

1261. விரல் நுனி தேய்ந்தது!

"அவரு ஊருக்குப் போய் 98 நாள் ஆயிடுச்சுடி!" என்றாள் காஞ்சனை.

"அதுக்கென்ன? நூறாவது நாள் கொண்டாடப் போறியா?" என்றாள் மாலினி.

"கொண்டாடற விஷயமா இது? அவரைப் பிரிஞ்சு நான் எவ்வளவு துடிச்சுக்கிட்டிருக்கேன்னு உனக்குத் தெரியாதா?" என்றாள் காஞ்சனை, சற்றே கோபத்துடன்.

"மன்னிச்சுக்கடி, விளையாட்டுக்குச் சொன்னேன். மூணு மாசத்தில வந்துடறேன்னு சொல்லிட்டுப் போனாரு. மூணு மாசம் முடிஞ்சுடுச்சு. அதனால, அவர் திரும்பி வர நேரம் வந்துடுச்சுன்னுதானே சொல்ல வரே?"

"ஆமாம்."

"அது சரி. எப்படி 98 நாள்னு சரியாச் சொல்ற?"

"இங்கே வா?" என்று தோழியை உள்ளே அழைத்துச் சென்ற காஞ்சனை, அங்கிருந்த சுவற்றைக் காட்டி, "பார்!" என்றாள்.

சுவற்றில் கரிக்கட்டியால் வரிசையாகச் சிறிய கோடுகள் வரையப்பட்டிருந்தன.

"அவர் போன நாளிலேந்து தினம் ஒரு கோடு கிழிச்சுக்கிட்டு வரேன்!"

"நாளை எண்ணிக்கிட்டிருக்கறதுன்னு ஒரு பேச்சுக்கு சொல்லுவாங்க. நீ நிசமாவே நாளை எண்ணிக்கிட்டிருக்கியே!" என்ற மாலினி, கோடுகளை உற்றுப் பார்த்து விட்டு, "ஆமாம். இது என்ன? ஒவ்வொரு கோட்டு மேலயும் பொட்டு வச்ச மாதிரி ஏதோ வட்டக் குறி தெரியுதே, அது என்ன?"

"எனக்குத்தான் கணக்கு சரியா வராதே! அதனால அடிக்கொரு தடவை ஒவ்வொரு கோட்டையும் என் விரல் நுனியால தொட்டு எண்ணிப் பாப்பேன். என் விரல் நுனி படிஞ்ச இடம்தான் அது!" என்றாள் காஞ்சனை.

"உன் கையைக் காட்டு!" என்றபடியே காஞ்சனையின் ஆள்காட்டி விரலை நிமிர்த்திப் பார்த்த மாலினி, "இப்படி இந்தக் கோட்டையெல்லாம் அடிக்கடி தொட்டுத் தொட்டு எண்ணிக்கிட்டிருக்கறதாலதான் உன் விரல் நுனியே தேஞ்சு போன மாதிரி இருக்கு. கவனமா இருடி! தேஞ்சு தேஞ்சு, உன் விரலே சின்னதா ஆயிடப் போகுது!" என்றாள் விளையாட்டாக.

அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டே சமையற்கட்டிலிருந்து வெளியே வந்த காஞ்சனையின் தாய், "அதோடயா! பத்து நாளா தினம் நூறு தடவை வாசலுக்குப் போய், அவ புருஷன் வராரான்னு தெருமுனையைப் பார்த்துட்டு வரா! புருஷன் வந்தா, வீட்டுக்கு வராம தெருவோடயே நடந்து போயிடுவாரா என்ன?" என்றாள்.

காஞ்சனையின் கண்களைத் தன் கையினால் விரித்துப் பார்த்த மாலினி, "அதான் கண்ணு ரெண்டும் வெளிறிப் போயிருக்கு!" என்றாள்.

குறள் 1261
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.

பொருள்:
வருவார் வருவார் என வழி பார்த்துப் பார்த்து விழிகளும் ஒளியிழந்தன; பிரிந்து சென்றுள்ள நாட்களைச் சுவரில் குறியிட்டு அவற்றைத் தொட்டுத் தொட்டு எண்ணிப் பார்த்து விரல்களும் தேய்ந்தன.

1262. தோழியின் யோசனை!

"நான் ஒண்ணு சொல்றேன். கோவிச்சுக்க மாட்டியே?" என்றாள் தமயந்தி.

"உங்கிட்ட நான் என்னிக்குக் கோவிச்சுக்கிட்டிருக்கேன்? அதுவும், என் காதலரைப் பிரிஞ்சு இருக்கற இந்தக் காலத்தில, எனக்கு ஆறுதலா இருக்கறது நீ ஒருத்திதான். உங்கிட்ட நான் எப்படிக் கோவிச்சுக்க முடியும்?" என்றாள் யாமினி.

"ஏன்னா, நான் சொல்லப் போறது உன் காதலரைப் பத்தித்தான். அது உனக்குப் பிடிக்காம இருக்கலாம்!"

"என்ன சொல்லப் போற அவரைப் பத்தி? அவர் எப்ப திரும்பி வரப் போறார்ங்கறதைப் பத்தி உனக்கு ஏதாவது தகவல் கிடைச்சிருக்கா என்ன?" என்றாள் யாமினி, ஆர்வத்துடன்.

"இல்லை, இல்லை. உனக்குக் கிடைக்காத தகவல் எனக்கு எப்படிக் கிடைக்கும்? அவர்கிட்டேந்து தகவலே வரலைங்கறதுதானே பிரச்னை!" என்ற தமயந்தி, யாமினியின் கையைப் பரிவுடன் பற்றி, "எப்படி இருந்த நீ எப்படி ஆயிட்ட! குத்து விளக்கு மாதிரி பளிச்னு இருப்பே. இப்ப இரும்புக் கம்பி மாதிரி இருக்க - அவ்வளவு இளைச்சு, கருத்துப் போயிட்ட!  கைவளை எல்லாம் மணிக்கட்டுக்குக் கீழே வந்துடுச்சு, எப்ப வேணும்னாலும் நழுவிக் கீழே விழப் போற மாதிரி!" என்றாள்.

"அதையெல்லாம் விடு. ஏதோ சொல்லப் போறேன்னியே, அதைச் சொல்லு!" என்றாள் யாமினி, தோழியின் பிடியிலிருந்து தன் கையை விடுவித்துக் கொண்டு.

தமயந்தி ஒரு கணம் தயங்கி விட்டு, "உன் காதலர் ரெண்டு மூணு மாசத்தில திரும்பி வந்துடறேன்னு சொல்லிட்டுப் போனாரு. ஆனா ஆறு மாசம் ஆகியும் அவர்கிட்டேந்து எந்தத் தகவலும் இல்லை. நீயானா எப்பவுமே அவரையே நினைச்சு ஏங்கி இளைச்சுக்கிட்டிருக்க. அவரை மறக்க முயற்சி செய்யேன். கஷ்டமாத்தான் இருக்கும். ஆனா அவரோட நினைவை விட்டுட்டா, உன் உடம்பு கொஞ்சம் நல்லா இருக்கும், இல்ல?" என்று கூறி விட்டுத் தோழி என்ன சொல்லப் போகிறாளோ என்று பயந்து கொண்டே யாமினியின் முகத்தைப் பார்த்தாள்.

யாமினி பெரிதாகச் சிரித்து விட்டு, "அடி பைத்தியக்காரி! இப்படி ஒரு யோசனையைச் சொல்லத்தான் பயந்தியா? இப்படி ஒரு யோசனையை நான் பெரிசா எடுத்துக்கிட்டாத்தானே உங்கிட்ட கோவிச்சுக்கறதுக்கு? நீ இதை உண்மையாவே சொன்னாலும் நீ அதை விளையாட்டுக்குச் சொன்னதாத்தான் நான் எடுத்துப்பேன்" என்றாள்.

"இல்லை, யாமினி! நான் சொல்றதை நீ யோசிச்சுப் பார்க்கணும்."

"யோசிச்சுப் பார்க்க வேண்டியது நீதான்! ஒருவேளை நீ சொல்றபடி என் காதலரை நான் மறக்க முயற்சி செஞ்சா, என் உடல் இளைச்சு, எங்கிட்ட மீதம் இருக்கிற அழகும் போயிடும்.. என் கையில இருக்கிற வளையல்கள் கீழே விழுந்து உடைஞ்சுடும். நீ என்ன நோக்கத்துக்காக இதைச் சொன்னியோ, அதற்கு எதிரான விளைவுகள்தான் ஏற்படும்!" என்றாள் யாமினி."

குறள் 1262
இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து.

பொருள்:
ஒளிரும் நகை அணிந்தவளே! பிரிவுத் துயரிலிருந்து விடுபட, என் காதலரை நான் இன்று மறந்தால், என்னிடம் மீதமுள்ள அழகும் என்னை விட்டு நீங்கி, என் தோளும் (கையும்) வளையல்களை இழக்கும்.

1263. நான் ஏன் இப்படி இருக்கிறேன்?

"ஏண்டி, ராத்திரி பூரா முழிச்சுக்கிட்டிருக்க. பகல்ல தூங்கற. வேளைக்கு சாப்பிடறதில்லை. திடீர்னு வந்து, 'பசிக்குது. சாப்பிட ஏதாவது கொடு' ன்னு கேக்கற. இப்படி எல்லாம் இருந்தா, உடம்பு என்னத்துக்கு ஆகும்?" என்றாள் மாதவி.

"உடம்பு நல்லா இருக்கறதாலதானே அம்மா தினமும் கோவிலுக்குப் போறேன்!" என்றாள் மணிமேகலை.

"ஆமாம், தினம் கோவிலுக்குப் போய் என்ன வேண்டிக்கற? உன் புருஷன் சீக்கிரம் திரும்பி வரணும்னா? அவருதான் திரும்பி வர அஞ்சாறு மாசம் ஆகும்னாரே! நீ வேண்டிக்கிட்டதுக்காக ஒரு மாசத்தில திரும்பி வந்துடுவாரா என்ன?"

"அம்மா! அவரு ஒரு லட்சியத்தோடதான் ஊருக்குப் போயிருக்காரு. அவருக்குத் தொழில் செய்யணும்னு ஆசை. ஆனா தொழில்ல முதலீடு செய்ய அவர்கிட்ட பணம் இல்லை. அதனாலதான், ஒரு வியாபாரியோட வெளிநாட்டுக்குப் போயிருக்காரு. அவருக்கு வியாபாரத்தில உதவினா, லாபத்தில பங்கு கொடுக்கறதா அந்த வியாபாரி சொல்லி இருக்காரு. அவருக்கு அதிகமா லாபம் சம்பாதிச்சுக் கொடுத்து, அதன் மூலமா தனக்கும் ஒரு நல்ல பங்கு கிடைக்க வழி செய்யணுங்கற லட்சியத்தோடதான் போயிருக்காரு. அவர் லட்சியம் நிறைவேறணும்னுதன் கடவுள்கிட்ட வேண்டிக்கறேன்!"

"நல்ல விஷயம்தான். இவ்வளவு தெளிவு இருக்கறவ உன்னோட உடம்பைப் பாத்துக்கணும் இல்ல? ஒழுங்கா சாப்பிட்டுத் தூங்கி ஆரோக்கியமா இருக்க வேண்டாமா?"

"என்னம்மா செய்யறது. அவரைப் பிரிஞ்சு இருக்கறதால, எனக்குப் பசி எடுக்கறதில்ல, தூக்கம் வரதில்ல."

"நான் கடுமையா சொல்றேன்னு நினைக்காதே. இப்படி எல்லாம் இருந்தா உன் உயிருக்கே ஆபத்தா முடியும்!" என்றாள் மாதவி சலிப்புடன்.

"அம்மா! அவரு லட்சியம் நிறைவேறணும்னு வேண்டிக்கத்தான் கோவிலுக்குப் போறேன். அவரைப் பிரிஞ்சு இருக்கறப்ப, எனக்கு எதிலியுமே ஆர்வம் இல்ல. நான் உயிரோட இருக்கறதே அவர் தன் லட்சியத்தை நிறைவேற்றிட்டுத் திரும்பி வரதைப் பாக்கணுங்கறதுக்காகத்தான். அதனால, உயிரோட இருக்கறதுக்குத் தேவையானப்ப அப்பப்ப கொஞ்சம் சாப்பிடறேன். கவலைப்படாதே! அவர் திரும்பி வந்ததும், என் உடம்பு கொஞ்ச நாள்ள தேறிடும்!" என்றாள் மணிமேகலை.

"இப்படிப் பைத்தியக்காரத்தனமாப் பேசறவகிட்ட என்ன சொல்ல முடியும்?" என்று மகளின் காதில் கேட்கும்படி முணுமுணுத்தாள் மாதவி.

குறள் 1263
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்.

பொருள்:
வெற்றியை விரும்பி, ஊக்கமே துணையாகக் கொண்டு, வெளிநாட்டுக்குச் சென்ற காதலர், திரும்பி வருதலைக் காண விரும்பியே இன்னும் யான் உயிரோடு இருக்கின்றேன்.

1264. மரத்தின் மீது ஏறியவள்!

தன்னை விட்டுப் பிரிந்த காதலன் திரும்ப வரும் காலம் வந்து விட்டதாக அஞ்சனையின் உள்ளுணர்வு கூறியது.

திரும்ப வருவதானால் கப்பலில் வந்து துறைமுகத்தில் இறங்குவார். அவர்கள் ஊரிலிருந்து துறைமுகம் இரண்டு காதத் தொலைவில் இருக்கிறது.

அந்த இரண்டு காதத் தொலைவையும் நடந்தே வருவாரோ, அல்லது மாட்டு வண்டி பிடித்து வருவாரோ தெரியாது.

மாட்டு வண்டி பிடித்து வந்தாலும், சாலையில் இறங்கிச் சற்றுத் தொலைவு நடந்துதான் அவர்கள் வீட்டுக்கு வர வேண்டும்.

அவர் தொலைதூரத்தில் வருவதைப் பார்க்க முடிந்தால். தனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்று நினைத்துப் பார்த்தாள் அஞ்சனை.

வாசலில் நின்று பார்த்தாள் அஞ்சனை. அந்த வளைந்த தெருவின் கோடி கூட அவள் வீட்டு வாசலிலிருந்து தெரியவில்லை.

சற்றுத் தொலைவில் ஒரு மரம் இருந்தது. அதன் மேல் ஏறி, அதன் கிளை ஒன்றில் அமர்ந்து பார்த்தால், அவர் தொலைவில் உள்ள சாலையில் நடந்து வருவதைக் கூடப் பார்க்க முடியும்.

'என்னால் அந்த மரத்தில் ஏற முடியுமா? ஏறித்தான் பார்ப்போமே!'

விறுவிறுவென்று நடந்து மரத்தின் அருகில் வந்தாள் அஞ்சனை. சேலையை இறுக்கமாகக் கட்டிக் கொண்டு, மரத்தில் காலை வைத்து ஏறினாள்.

'என்ன வியப்பு! மிக விரைவிலேயே மரத்தில் ஏறி ஒரு உயர்ந்த கிளைக்குப் போய் விட்டோமே!'

கிளையில் உட்கார்ந்தபோது, சாலை தெரிந்தது. சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தவர்களிடையே, தன் காதலனின் முகம் தெரிகிறதா என்று பார்த்தாள் அஞ்சனை.

'ஐயோ, இது என்ன? கிளையில் வைத்திருந்த கால் நழுவுவது போல் தோன்றுகிறதே!'

மரக்கிளையிலிருந்து கீழே விழுந்தாள் அஞ்சனை. 

நினைவு இருந்தது. எனவே தான் இன்னும் இறந்து விடவில்லை என்று நினைத்துக் கண்களைத் திறந்து பார்த்தாள் அஞ்சனை.

"ஏண்டி, ராத்திரி முழுக்க தூங்காம, பகலிலேயே விசுப்பலகை* மீது உக்காந்துக்கிட்டே தூங்கிட்டுக் கீழே விழுந்திருக்க. எங்கேயாவது சிராய்ப்பு இருக்கான்னு பாரு!" என்றாள் அஞ்சனையின் தாய்.

* கால்கள் பதிக்கப்பட்ட மரப்பலகை (பெஞ்ச்)

குறள் 1264
கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு.

பொருள்:
காதல் வயப்பட்டுக் கூடியிருந்து பிரிந்து சென்றவர் எப்போது வருவார் என்று என் நெஞ்சம், மரத்தின் உச்சிக் கொம்பில் ஏறிப் பார்க்கின்றது.

1265. காண வேண்டும் கண்களால்!

"இவ்வளவு நாள் நீ காத்திருந்தது வீண் போகலை. உன் காதலர் ரெண்டு நாளில திரும்பி வரப் போறாராமே!" என்றாள் தாரிணி..

"ஆமாம்" என்றாள் பூரணி, மகிழ்ச்சியுடன்.

"உனக்கு யாரு இந்தத் தகவலைச் சொன்னாங்க?"

"அவரோட பயணம் போயிருந்த அவர் நண்பர் திரும்பி வந்துட்டாரு. அவர் நேத்திக்கு எங்க வீட்டுக்கு வந்திருந்தாரு. அவர்தான் இந்தத் தகவலைச் சொன்னாரு."

"ஏன் அவரோடயே உன் காதலரும் வரலை?"

"அவருக்கு இன்னும் கொஞ்சம் வேலை இருக்காம். அதை முடிச்சுட்டு அடுத்த கப்பல்ல வரேன்னு சொல்லி அனுப்பி இருக்காரு. அந்தக் கப்பல் இன்னும் ரெண்டு நாள்ள வந்துடும்."

"ஆனா, உன் காதலர் வரப் போறார்ங்கற மகிழ்ச்சி உங்கிட்ட முழுமையா இல்லையே!" என்றாள் தாரிணி.

"எதை வச்சு அப்படிச் சொல்ற?" என்றாள் பூரணி.

"ஏற்கெனவே, நீ ரொம்ப இளைச்சு, உன் தோள்கள் மெலிஞ்சிருக்கு. அதோட, உன் தோள்ள பசலை படர்ந்து, உன் தோள் நிறம் மாறி இருக்கே! அவர் பிரிவால வந்த இந்தப் பசலை, அவர் வரப் போறார்னு தெரிஞ்சதும் மறைஞ்சிருக்க வேண்டாமா?"

"நீ வேணும்னா பாரு. அவர் திரும்பி வந்து, அவரை நான் கண்ணால பார்த்த உடனேயே இந்தப் பசலை மறைஞ்சுடும்!" என்றாள் பூரணி, உற்சாகத்துடன்.

குறள் 1265
காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு.

பொருள்:
என் காதலரைக் கண்ணாரக் காண்பேனாக; கண்ட பிறகு, என்னுடைய மெல்லிய தோளில் உண்டாகிய பசலை நிறம் தானே நீங்கி விடும்.

1266. தேவியின் ஓலைக் குறிப்பு


"ஏண்டி, உனக்குப் பிடிக்குமேன்னு வள்ளிக் கிழங்கு சமைச்சு வச்சிருக்கேன். சாப்பிடவே இல்லையே" என்றாள் தேவியின் தாய் ருக்மிணி.

"எனக்கு சாப்பாடே பிடிக்கலேம்மா. எனக்காகன்னு எதுவும் சமைக்காதே!" என்றாள் தேவி.

"இப்படி எத்தனை நாள் நடந்திருக்கு, உனக்குப் பிடிச்சதுன்னு நான் ஒண்ணை சமைக்கறதும், நீ அதை சாப்பிடாம அப்படியே வச்சுட்டுப் போறதும்!" என்றாள் ருக்மிணி, சலிப்புடன்.

"நான் கணக்கு வச்சிருக்கேம்மா!"

"கணக்கு வச்சிருக்கியா? என்ன கணக்கு?"

தேவி உள்ளிருந்து ஒரு ஓலையை எடுத்து வந்தாள்.

"என்னடி ஓலை இது?"

"நீ எனக்குப் பிடிச்ச உணவுப் பொருட்கள்னு சமைச்சதை எல்லாம் இதில குறிச்சு வச்சிருக்கேன். இதோ, நீ இன்னிக்கு சமைச்ச வள்ளிக் கிழங்கைக் கூட எழுதி இருக்கேன் பாரு!"

"நல்லா இருக்கு! எதுக்குடி இதெல்லாம்? நான் சமைச்சதைச் சாப்பிட மாட்டாளாம், ஆனா, ஓலையில எழுதி வைப்பாளாம்!"

"அம்மா! என்னைப் பிரிஞ்ச போனவர் திரும்பி வந்ததும், இந்த ஓலையை உங்கிட்ட கொடுக்கிறேன். இதில இருக்கறதை எல்லாம் நீ சமைச்சுப் போடு. நான் சந்தோஷமா சாப்பிடறேன்!" என்றாள் தேவி.

'இவளுக்குக் கிறுக்குத்தான் பிடிச்சிருக்கு!' என்று நினைத்துக் கொண்டாள் ருக்மிணி.

குறள் 1266
வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.

பொருள்:
என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்பநோய் எல்லாம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன்.

1267. அங்கயற்கண்ணியின் ஒத்திகை

தமயந்தி தன் தோழி அங்கயற்கண்ணியைப் பார்க்க வந்தபோது, அங்கயற்கண்ணி கைகளை ஆட்டித் தனக்குள் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள்.

"என்னடி உனக்குள்ளேயே பேசிக்கிட்டிருக்க?" என்றாள் தமயந்தி.

"ஒண்ணுமில்லையே!" என்றாள் அங்கயற்கண்ணி, தான் தனக்குள் பேசிக் கொண்டதைத் தோழி பார்த்து விட்டாளே என்ற சங்கட உணர்வுடன்.

"என்ன ஒண்ணுமில்ல? இவ்வளவு நேரம் கையை ஆட்டி, ஏதோ மேடைப் பிரசங்கம் பண்றவர் மாதிரி பேசிக்கிட்டிருந்தே? எங்கிட்ட சொல்லக் கூடாதா?"

அங்கயற்கண்ணி சற்றுத் தயங்கி விட்டு, "ஒண்ணுமில்லை. என்னை விட்டுப் பிரிஞ்சு போன காதலர் திரும்பி வரப்ப, அவர்கிட்ட என்ன சொல்றதுன்னு நினைச்சுப் பார்த்துக்கிட்டிருந்தேன்!" என்றாள்.

"நினைச்சுப் பார்த்தியா? ஒத்திகை இல்ல பார்த்துக்கிட்டிருந்த? சரி. என்ன சொல்லப் போற?"

"இவ்வளவு நாள் என்னைப் பிரிஞ்சிருந்ததுக்காக, அவர்கிட்ட கோவிச்சுக்கிட்டு சண்டை போடலாமான்னு நினைச்சேன்."

ஓ! அதுதான் கையை ஆட்டிப் பேசிக்கிட்டிருந்தியா? நல்லது. அப்படியே செய். அப்பதான், உன்னோட பிரிவுத் துயர் அவருக்குப் புரியும்!"

"ஆனா, அப்படிச் செய்ய முடியுமான்னு தெரியல!"

"ஏன்?"

"பல மாசப் பிரிவுக்கப்புறம் அவரைப் பாக்கறப்ப, அவரைக் கட்டித் தழுவிக்கணும்னுதானே தோணும்?"

"அப்ப, அவரைக் கட்டித் தழுவிக்கப் போறியா? அவரோட சண்டை போடப் போறதில்லையா?"

"ரெண்டையுமே செய்யலாமான்னு கூடத் தோணுது!"

"எப்படி? முதல்ல கட்டித் தழுவிக்கிட்டு, அப்புறம் சண்டை போடப் போறியா, இல்லை முதல்ல சண்டை போட்டுட்டு, அப்புறம் கட்டித் தழுவிக்கப் போறியா?" என்றாள் தமயந்தி, கேலியாக.

"போடி!" என்றாள் அங்கயற்கண்ணி, வெட்கத்துடன்.

குறள் 1267
புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் விரன்.

பொருள்:
கண்போல் சிறந்த என் துணைவர் வந்தால், அவர் நெடுநாள் பிரிந்திருந்ததற்காக ஊடுவேனா? அவர் பிரிவைத் தாங்க முடியாமல், அவரைத் தழுவுவேனா? அல்லது, இரண்டு செயல்களையும் கலந்து செய்வேனா?

1268. மொழிபெயர்ப்பாளன்

என் தாய்மொழி தமிழ்தான். ஆனால், நான் பிறந்தது இலங்கையில். 

எனக்குப் பத்து வயதாகும்போது, என் பெற்றோர்கள் இலங்கையிலிருந்து சோழ நாட்டுக்குக் குடி பெயர்ந்து விட்டனர்.

அதனால், எனக்குத் தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளும் தெரியும்.

பொதுவாகப் பல மொழிகள் தெரிந்து வைத்திருப்பது நன்மை பயக்கும் என்று சொல்வார்கள். ஆனால், எனக்கு இரண்டு மொழிகள் தெரிந்திருந்தது என்னை என் காதலியிடமிருந்து பிரித்து விட்டது!

பிங்களையை நான் சந்தித்ததுமே, அவளிடம் காதல் கொண்டு விட்டேன். அதில் ஒன்றும் வியப்பில்லை. ஆனால் அவள் என் காதலை ஏற்றுக் கொண்டது என் முற்பிறவியில் நான் செய்த புண்ணியத்தின் விளைவுதான் என்று கூற வேண்டும்.

எங்கள் காதலை எங்கள் இரு குடும்பத்தினரும் ஏற்றுக் கொண்டு, எங்களுக்குத் திருமணம் செய்து வைத்து விட்டனர்.

'வெண்ணெய் திரளும் நேரத்தில் தாழி உடைந்தது போல்' என்று சோழ நாட்டில் ஒரு பழமொழி சொல்வார்கள். 

அது போன்ற ஒரு நிகழ்வு அப்போது ஏற்பட்டது.

எங்கள் ஊரைச் சேர்ந்த ஒருவர் அரண்மனையில் வேலை செய்கிறார். எங்களுக்குத் திருமணம் நடந்த அன்று அவர் எங்கள் ஊருக்கு வந்து, நேரே என் வீட்டுக்கு வந்தார். "உன்னை மன்னர் உடனே அழைத்து வரச் சொன்னார்" என்றார்.

'நான் தவறு எதுவும் செய்யவில்லையே!' என்ற எண்ணம்தான் என் மனதில் முதலில் தோன்றியது.

என் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டவர் போல், அவர் உடனே "பயப்படாதே! மன்னர் ஒரு முக்கியமான பணியில் ஈடுபடுத்தத்தான் உன்னை அழைக்கிறார்" என்றார்.

"இன்றுதான் எனக்குத் திருமணம் ஆகி இருக்கிறது. இரவு  என் மனைவி வீட்டில் திருமண விருந்து. அதற்குப் பிறகு..."

"எனக்குத் தெரியும்" என்று என்னை இடைமறித்தார் அவர். "திருமண விருந்து, முதல் இரவு எல்லாம் அப்புறம்தான். மன்னர் பணியை முடித்துக் கொடுத்து விட்டு, அப்புறம் எல்லாவற்றையும் வைத்துக் கொள்."

பிறகு என் காதில், "இந்தப் பணிக்காக உனக்கு எவ்வளவு பொற்காசுகள் கிடைக்கும் என்று உன்னால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது. மன்னர் அவ்வளவு தாராள மனம் படைத்தவர். அந்தப் பணத்தை வைத்து, நீ ஒரு வியாபாரத்தைத் துவக்கி, உன் வாழ்க்கைக்கு வழி தேடிக் கொள்ளலாம்" என்றார்.

மனைவியிடமும், அவள் பெற்றோர், என் பெற்றோர் ஆகியோரிடம் விடைபெற்று, அவருடன் கிளம்பினேன்.

விடைபெறும்போது, என் மனைவியின் கண்களைப் பார்க்கும் துணிவு எனக்கு இல்லை. திருமணம் முடித்த கையோடு தன்னைப் பிரிந்து செல்லும் கணவன் குறித்து ஒரு மனைவியின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கவே எனக்கு அச்சமாக இருந்தது.

அரண்மனைக்குப் போன பிறகுதான், என் வேலை பற்றிய விவரங்கள் எனக்குத் தெரிந்தன.

இலங்கை நாட்டுடன் வணிகத் தொடர்புகளை அதிகரிக்க, இளவரசர் தலைமையில் ஒரு குழுவை இலங்கைக்கு அனுப்புகிறாராம் அரசர். இலங்கை மன்னருடனும், மற்றவர்களுடன் அவர்கள் உரையாடலுக்கு உதவ, அவர்களுக்கு சிங்கள மொழி அறிந்த ஒரு நபர் தேவைப்பட்டிருக்கிறார்.

எங்கள் ஊர்க்காரர் என்னைப் பரிந்துரைக்க, அரசர் என்னை உடனே அழைத்து வரும்படி கட்டளை இட்டிருக்கிறார்.

அந்தக் குழுவுடன் நான் இலங்கைக்குச் சென்று, பேச்சுவார்த்தைகளின் அவர்களுக்கு உதவி, பிறகு அவர்களுடன் நாடு திரும்ப வேண்டும். ஆரம்பகட்ட வேலைகள் துவங்கி, இந்தச் செயல்பாடு நிறைவு பெற ஓரிரு மாதங்கள் ஆகலாம்.

அதுவரை, புதிதாக மணந்து கொண்ட என் மனைவியை நான் பிரிந்துதான் இருக்க வேண்டும்.

ஞ்சைக்குப் புதிதாக வந்திருப்பவன் என்பதால், என்னை அன்று மாலை பெரிய கோவிலுக்கு அழைத்துச் சென்றனர்.

கோவிலில் வழிபாடு செய்து விட்டுத் திரும்பியபோது,"கடவுளிடம் என்ன வேண்டிக் கொண்டாய்?" என்றான் என்னைக் கோவிலுக்கு அழைத்துச் சென்ற காவல் வீரன்.

"மன்னரின் பணி சிறப்பாக முடிய வேண்டும் என்றுதான்!" என்றேன்.

'அதன் பிறகு, நான் என் ஊருக்குத் திரும்பி, என் மனைவியுடன் ஒன்று சேர்ந்து அவளுடன் மாலை விருந்தில் கலந்து கொள்ள வேண்டும்' என்றும் வேண்டிக் கொண்டதை அவனிடம் சொல்லவில்லை! 

குறள் 1268
வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.

பொருள்:
அரசன் இச்செயலில் முனைந்து நின்று வெற்றி பெறுவானாக; அதன்பின், யாம் மனைவியோடு கூடியிருந்து, அன்று வரும் மாலைப் பொழுதில் விருந்து உண்போம்.

1269. வெள்ளிக்கிழமை விரதம்!

"ஏம்மா, இன்னிக்கு நீ விரதம் இருக்கணும், இல்ல?" என்றாள் குயிலி.

"ஏண்டி, நீதான் ஒழுங்கா சாப்பிடாம, பல நாள் பட்டினி கிடக்கற. நானும் உன்னை மாதிரி இருக்கணுமா?" என்றாள் குயிலியின் தாய் அரசி.

"என்னம்மா இது? நீதானே ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விரதம் இருப்ப?"

"நேத்திக்குத்தானேடி விரதம் இருந்தேன்? அந்தக் களைப்பிலேயே, இன்னிக்கு எப்ப சாப்பிடப் போறோம்னு இருக்கு. இதில இன்னிக்கு வேற விரதம் இருக்கணுமா?" என்றாள் அரசி, எரிச்சலுடன்.

"நேத்திக்கு விரதம் இருந்தியா? வெள்ளிக்கிழமைதானே விரதம் இருப்ப? இப்ப வியாழக்கிழமை விரதம்னு மாத்திட்டியா?" என்றாள் குயிலி, வியப்புடன்.

"உனக்கு மூளை கலங்கிப் போயிடுச்சா என்ன? நேத்திக்குத்தானே வெள்ளிக்கிழமை? இன்னிக்கு சனிக்கிழமையாச்சே! நேத்து என்னைக் கேட்டியே, விரதம் இருக்கறது கஷ்டமா இருக்கான்னு, மறந்துடுச்சா?"

"மறக்கலம்மா. ஆனா, நான் அப்படிக் கேட்டது ஒரு வாரம் முன்னேதானே? நேத்திக்குக் கேட்டேன்னு சொல்ற!"

"வெளியூருக்குப் போனஉன் புருஷன் எப்ப வரப் போறான்னு பார்த்துக்கிட்டிருக்கறதால, உனக்கு நாளே நகர மாட்டேங்குது. ஒரு நாள் கழியறது ஏழு நாள் கழியற மாதிரி இருக்கு போலருக்கு. அதனாலதான், நேத்து நடந்ததை ஒரு வாரம் முன்னால நடந்ததா சொல்ற. என்ன பெண்ணோ!" என்று அலுத்துக் கொண்டாள் அரசி.

குறள் 1269
ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.

பொருள்:
தொலைவில் உள்ள வெளிநாட்டிற்குச் சென்ற காதலர் திரும்பி வரும் நாளை நினைத்து ஏங்கும் மகளிர்க்கு ஒருநாள் ஏழுநாள் போல் கழியும்.

1270. அப்படி எதுவும் நடந்து விடக் கூடாது!

நான் இங்கே வேலைக்கு வந்து ஐந்து மாதங்கள் ஆகி விட்டன. திருமணமாகி ஒரு மாதமே ஆன நிலையில், என் மனைவியை விட்டுப் பிரிந்தும் ஐந்து மாதங்கள் ஆகி விட்டன.

என்னை வேலைக்கு அழைத்து வந்த வணிகர், நாங்கள் கிளம்புவதற்கு முன் சொன்னது மூன்று மாதங்களில் வேலை முடிந்து விடும் என்றுதான்.

நாங்கள் விற்பனைக்காக எடுத்து வந்த சரக்கு இரண்டு மாதங்களிலேயே விற்றுத் தீர்ந்து விட்டது. சரக்கு மிக வேகமாக விற்பனையாவதைக் கண்ட வணிகர், நாங்கள் இங்கே வந்த சில நாட்களிலேயே, இன்னொரு கப்பல் மூலம் கூடுதல் சரக்கைக் கொண்டு வர ஏற்பாடு செய்து விட்டார்.

அதனால், மொத்த சரக்கையும் விற்று விட்டுத்தான் நாங்கள் கிளம்ப முடியும் என்ற நிலை.

"என்ன ஐயா இது? மூணு மாசம்னு சொன்னீங்க. அஞ்சு மாசம் ஆயிடுச்சே!" என்று நான் வணிகரிடம் கேட்டதற்கு, "என்ன செய்யறது தம்பி? காத்துள்ளபோதே தூத்திக்கணும் இல்ல? நான் உனக்கு லாபத்தில பங்கு கொடுக்கறதால, உனக்கும் அதிகப் பணம் கிடைக்குமே! கைநிறையப் பணத்தோட உன் திருமண வாழ்க்கையை ஆரம்பிக்கறது உனக்கு ஒரு நல்ல வாய்ப்புத்தானே?" என்றார் அவர். 

கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது!

ஆனால் என் மனைவி பற்றி அவருக்குத் தெரியாது. திருமணம் முடிந்து ஒரு மாதம் அவளுடன் வாழ்ந்தபோதே, அவள் இயல்பு எனக்குப் புரிந்து விட்டது. என்னை விட்டுச் சில மணி நேரம் பிரிந்திருப்பது கூட அவளுக்குக் கடினமாக இருந்தது. 

நான் எங்காவது வெளியே போய் விட்டு வந்தால், நான் திரும்பி வரும் வரை சாப்பிடாமல் எனக்காகக் காத்திருப்பாள். 

"உங்களை விட்டு என்னால கொஞ்ச நேரம் கூடப் பிரிஞ்சிருக்க முடியலை. நீங்க வரதுக்குள்ள என் மனசு படற பாடு இருக்கே, அப்பப்பா!" என்பாள்.

அப்படிப்பட்டவள், இந்த ஐந்து மாதங்களாக என்னைப் பிரிந்திருக்கும்போது, சரியாக உணவு அருந்துவாளா என்ன?

ஒருவேளை சரியாக உண்ணாமல், உறங்காமல் அவள் உடல்நிலை பாதிக்கப்பட்டால்?

உடல்நிலை பாதிக்கப்பட்டால் கூடப் பரவாயில்லை, மனநிலை பாதிக்கப்பட்டால்?

அப்போது, நான் கைநிறையப் பொருளுடன் அவளைச் சென்று அடைந்து என்ன பயன்?

இறைவா அப்படி எதுவும் நடந்து விடக் கூடாது!

குறள் 1270
பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்.

பொருள்:
என் பிரிவைத் தாங்காமல், உள்ளம் உடைய, அவளுக்கு ஏதாவது ஆகிவிட்டால், அதன் பிறகு அவள் என்னைப் பெறுவதால் ஆவது என்ன? பெற்றால்தான் என்ன? உடம்போடு கலந்தால்தான் என்ன? ஒரு பயனும் இல்லை.

No comments:

Post a Comment

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...