Thursday, November 30, 2023

1284. கமலியின் கோபம்!

"உனக்கு ஒரு நல்ல செய்தி சொல்லப் போறேன். எனக்கு என்ன தருவ?" என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தாள் ராதிகா.

"நான் என்ன ராஜாவா என்ன, நீ நல்ல செய்தி சொன்னா உனக்குப் பரிசு கொடுக்க? அதோட இப்ப எனக்கு எந்த செய்தியும் நல்ல செய்தியா இருக்காதுடி!" என்றாள் கமலி.

"உன் காதலர் திரும்பி வந்துடார்னு சொன்னா, அது கூட நல்ல செய்தி இல்லையா?"

"என்னடி சொல்ற?" என்றாள் கமலி வியப்புடனும், மகிழ்ச்சியுடனும்.

"ஆமாண்டி. பிரகாஷ் வந்துட்டாரு. இன்னிக்குக் காலையிலதான் வந்தாராம். தற்செயலா அவர் வீட்டுப் பக்கமா நான் போய்க்கிட்டிருந்தப்ப என்னைப் பார்த்துட்டு உங்கிட்ட இதைச் சொல்லச் சொன்னாரு. இன்னிக்கு சாயந்திரம் ஆறு மணிக்கு நீங்க வழக்கமா சந்திக்கிற இடத்துக்கு உன்னை வரச் சொன்னாரு. அது என்னடி வழக்கமாச் சந்திக்கிற இடம்?" என்றாள் ராதிகா கேலியுடன்.

கமலி அவளுக்கு பதில் சொல்லாமல் மனதுக்குள் கொதித்துக் கொண்டிருந்தாள்.

"என்னடி பதில் சொல்ல மாட்டேங்கற?"

"ஆஃபீஸ் வேலையா கல்கத்தாவுக்குப் போறேன்னு சொல்லிட்டுப் போய் ரெண்டு மாசம் ஆச்சு. அதுக்கப்புறம் எனக்கு ஒரு தகவலும் இல்லை. இப்ப அவரைச் சந்திக்கச் சொல்லி உங்கிட்ட தகவல் சொல்லி அனுப்பறாரு. என்னை என்ன கிள்ளுக் கீரைன்னு நினைச்சுக்கிட்டிருக்காரா?"

"ஏண்டி, உன் வீட்டில என்ன ஃபோனா இருக்கு, தினம் உங்கிட்ட ஃபோன் பண்ணிப் பேசறதுக்கு? இன்னிக்குக் காலையிலதான் ஊர்லேந்து வந்திருக்காரு. என்னைப் பார்த்ததால எங்கிட்ட தவல் சொல்லி அனுப்பினாரு. இதில என்ன தப்பு?"

"ஃபோன் இல்லாட்டா என்ன? கல்கத்தாவில போஸ்ட் ஆஃபீஸ் இல்லையா என்ன? எனக்கு ஒரு கார்டு கூட எழுதலையே அவரு! சரி, ஊருக்கு வந்தவர் நேரா என்னைப் பாக்க வந்திருக்க வேண்டாம்? அது என்ன உங்கிட்ட தகவல் சொல்லி அனுப்பறது?" என்று குமுறினாள் கமலி.

"அப்ப சாயந்திரம் அவரைப் பாக்கப் போகப் போறதில்லையா நீ?"

"போவேன். கண்டிப்பா போவேன். போய் நல்லா சண்டை போட்டுட்டு வரப் போறேன்!"

ழக்கமாக பிரகாஷைச் சந்தித்துப் பேசும் பூங்காவுக்குச் சென்றாள் கமலி. அவர்கள் எப்போதும் அமரும் பெஞ்ச்சில் பிரகாஷ் அமர்ந்திருந்தான். அவன் அருகில் சென்று அமர்ந்தாள் கமலி. 

பிரகாஷ் அவள் தோள்களை அணைத்துக் கொள்ள, கமலி அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். 

"இது மாதிரி உங்க தோள்ள சாஞ்சு எவ்வளவு நாளாச்சு!" 

இது போல் அவன் தோளில் சாய்ந்து கொண்டே விடிய விடிய அங்கேயே அமர்ந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியபோது, 'சண்டை போட்டாயா?' என்று நாளை தோழி கேட்டால் அவளிடம் என்ன சொல்வது என்று சங்கடத்துடன் நினைத்துப் பார்த்தாள் கமலி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 129
புணர்ச்சி விதும்பல் (ஒன்று சேர விரும்பதல்)
குறள் 1284
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு.

பொருள்:
தோழி! யான் அவரோடு ஊடுவதற்காகச் சென்றேன்; ஆனால், என்னுடைய நெஞ்சம் அந்த நோக்கத்தை மறந்து அவரோடு கூடுவதற்காகச் சென்றது.

Tuesday, November 28, 2023

1283. எப்போ வருவாரோ!

என்ன காரணமென்று தெரியவில்லை, சில நாட்களாக அரவிந்தனின் போக்கில் ஒரு மாறுதல் ஏற்பட்டிருந்தது.

முன்பெல்லாம் அலுவலகத்திலிருந்து வந்தவுடனேயே ஓடி வந்து சுகுணாவை அணைத்துக் கொள்வான். அதன் பிறகு தூங்கப் போகும் வரை அவளுடன் பேசிக்  கொண்டிருப்பான். அவள் சமையல் செய்து கொண்டிருக்கும்போது கூட அங்கே போய் அவளுடன் பேசிக் கொண்டிருப்பான்.

ஒருமுறை அவர்கள் வீட்டுக்கு வந்திருந்த சுகுணாவின் தாய் பார்வதி, "என்னடி பூனைக்குட்டி காலைச் சுத்திச் சுத்தி வர மாதிரி உன் புருஷன் உன்னையே சுத்திக்கிட்டிருக்காரு!" என்று கேலி செய்தாள், தன் மகளிடம் அவள் கணவன் இவ்வளவு அன்பாக இருக்கிறானே என்று மனதுக்குள் பெருமிதம் அடைந்தபடி.

ஆனால் அவையெல்லாம் இப்போது மாறி விட்டன.

இப்போதெல்லாம் அரவிந்தன் அலுவலகத்திலிருந்து வந்ததும் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொள்கிறான். சுகுணா காப்பி எடுத்துக் கொண்டு வந்தால் "வச்சுட்டுப் போ!" என்கிறான். சில சமயம், "வேண்டாம். நான் வரும்போதே ஹோட்டல்ல குடிச்சுட்டேன்" என்கிறான்.

"முன்னாடியே சொல்லி இருந்தா நான் காப்பி கலந்திருக்க மாட்டேன் இல்ல?" என்று அவள் ஒருமுறை கேட்டபோது, "அப்படியெல்லாம் செய்ய முடியாது" என்று எரிந்து விழுந்தான், ஏதோ இயலாத ஒன்றைச் செய்யும்படி அவள் சொல்லி விட்டது போல்.

முன்பெல்லாம் விடுமுறை நாட்களில் சுகுணாவை வெளியே எங்காவது அழைத்துச் சென்றது போல் இப்போது அழைத்துச் செல்வதில்லை. அவளே, "வெளியில எங்கேயாவது போகலாமா?" என்று கேட்டால் கூட, "எனக்கு வேற வேலை இருக்கு" என்று தட்டிக் கழித்து விடுகிறான். 

அவன் மட்டும் தனியே எங்காவது போய்விட்டு வருகிறான். எங்கே போகிறான், எப்போது வருவான் என்றெல்லாம் சொல்வதில்லை.

"எங்கே போறீங்கன்னு எங்கிட்ட சொல்லிட்டுப் போகஅ் கூடாதா?" என்று சுகுணா ஒருமுறை கேட்டபோது, "எல்லாத்தையும் உங்கிட்ட சொல்லிக்கிட்டிருக்க முடியாது" என்றான்.

"ஆ்பீஸ் வேலையா வெளியூர் போறேன். வரதுக்கு ரெண்டு நாள் ஆகும்" என்றான் அரவிந்தன்.

அரவிந்தன் இல்லாத இரண்டு நாட்களில் சுகுணாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. எதையோ இழந்து விட்டது போல் உணர்ந்தாள். கணவன் எப்போது திரும்பி வருவான், எப்போது அவன் முகத்தை மீண்டும் பார்ப்போம் என்ற ஏக்கம் மனதில் இருந்து கொண்டே இருந்தது.

மூன்றாம் நாள் காலையிலிருந்தே வாசற்படியில் அமர்ந்து கொண்டு அரவிந்தன் வருகிறானா என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

'எனக்கு என்ன ஆச்சு? ரெண்டு நாள் கூட என்னால அவரைப் பிரிஞ்சு இருக்க முடியலியே! அவர் என்னைக் கண்டுக்கறதில்ல. எங்கிட்ட பேசறது கூட இல்ல. அவர் இஷ்டத்துக்கு எங்கேயாவது போறாரு, வராரு. வீட்டில இருக்கறப்பவும் என்னை ஒரு பொருட்டா மதிக்கறதில்ல. அவருக்கு வேற ஒரு பொண்ணோட தொடர்பு ஏற்பட்டிருக்குமோ, அதனாலதான் இப்படி நடந்துக்கறாரோங்கற சந்தேகம் கூட எனக்கு வருது. ஆனா அவரைப் பாக்காம இருக்கறது எனக்கு ஏன் இவ்வளவு கஷ்டமா இருக்கு?'

சுகுணாவுக்குப் புரியவில்லை. 

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 129
புணர்ச்சி விதும்பல் (ஒன்று சேர விரும்பதல்)
குறள் 1283
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.

பொருள்:
என் கணவன் என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை.

Monday, November 27, 2023

1282. தீர ஒரு சொல் இன்று கேட்டு வந்திட்டால்...

"என்னை ஒரு இடத்துக்கு வரச் சொல்றது. நான் அங்கே போய் அவருக்காகக் காத்துக்கிட்டிருந்தா, ஃபோன் பண்ணி, 'சாரி டியர், ஆஃபீஸ்ல ஒரு முக்கியமான மீட்டிங், சொந்தக்காரர் ஒத்தரைப் பார்க்க ஆஸ்பத்திரிக்குப் போகணும், அம்மா என்னை இன்னிக்குக் கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு வரச் சொன்னாங்க' மாதிரி ஒரு காரணத்தைச் சொல்லி வராம என்னை ஏமாத்தறது! இது மாதிரி நாலைஞ்சு தடவை ஆயிடுச்சு. இதைப் பத்தி இன்னிக்கு அவர்கிட்ட ரெண்டுல ஒண்ணு கேட்டுடப் போறேன்!" என்றாள் ஸ்வப்னா, தன் தோழி கல்பனாவிடம்.

"நல்லாக் கேட்டுடுடி. தட்டிக் கேக்கலைன்னா ஆம்பளைங்க இப்படித்தான் நம்மை அலைக்கழிப்பாங்க!" என்றாள் கல்பனா.

"நீ சொல்றதைப் பார்த்தா, உனக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும் போலருக்கே!"

"சேச்சே! உன்னை மாதிரி தோழிகள் சொல்றதை வச்சு சொல்றேன். எனக்குத்தான்  காதலனே கிடையாதே! நான் இந்தக் காதல்ல எல்லாம் மாட்டிக்க மாட்டேன்."

"என்னடி, உன் காதலர்கிட்ட கேக்கப் போறேன்னியே, கேட்டியா?" என்றாள் கல்பனா.

"இல்லைடி. கேக்கணும்னு நினைச்சுத்தான் போனேன். ஆனா முடியல" என்றாள் ஸ்வப்னா.

"ஏன்?"

"ஏன்னா, எனக்கு அவர் மேல அவ்வளவு காதல் இருக்கு!"

"அதுக்காக? தட்டிக் கேக்கக் கூடாதா என்ன?"

"கேக்கலாம். ஆனா. இதனால எங்களுக்குள்ள சண்டை வந்துட்டா?"

"என்ன சண்டை வரப் போகுது? வந்தாலும் சின்னச் சண்டையாதானே இருக்கும்!"

"அதேதான்! எனக்கு அவர் மேல இவ்வளவு காதல் இருக்கறப்ப, அது ஒரு சின்னச் சண்டையால பாதிக்கப்படக் கூடாது இல்ல, நிறைய காத்து உள்ள பலூன் ஒரு சின்னக் குண்டூசி முனை பட்டு வெடிச்சுப் போற மாதிரி? அதனாலதான் கேக்க வேண்டாம்னு விட்டுட்டேன்."

கல்பனா தோழியை வியப்புடன் பார்க்க, "இதெல்லாம் உனக்குப் புரியாது. உனக்குத்தான் காதலன் இல்லையே!" என்றாள் ஸ்வப்னா சிரித்தபடி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 129
புணர்ச்சி விதும்பல் (ஒன்று சேர விரும்பதல்)
குறள் 1282
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.

பொருள்:
பனையளவாகக் காதல் பெருகிடும்போது தினையளவு ஊடலும் கொள்ளாமல் இருக்க வேண்டும்..

Friday, November 24, 2023

1281. மது உண்டால் போதையைக் கொடுக்கும்.

மரகதம் எத்தனையோ முறை சொல்லிப் பார்த்து விட்டாள். கோபமாகப் பேசுவது முதல் காலில் விழாத குறையாகக் கெஞ்சுவது வரை எல்லா விதங்களிலும் முயற்சி செய்து பார்த்து விட்டாள்.

ஆனால் அவள் மகன் மனோகரனால் குடிப் பழக்கத்தை விட முடியவில்லை.

ஒரு கட்டத்தில் தன் மகன் இனித் திருந்த மாட்டான் என்ற முடிவுக்கு வந்து தன் முயற்சிகளைக் கைவிட்டு விட்டாள் மரகதம்.

சில நாட்ளாக மனோகரனிடம் ஒரு மாற்றம் தெரிந்தது. அது என்ன மாற்றம் என்று புரியவே மகதத்துக்கு இரண்டு நாட்கள் ஆயின.

"என்னடா, இப்பல்லாம் நீ குடிக்கறது இல்ல போலருக்கே!" என்றாள் மரகதம் வியப்புடன்.

"ஆமாம்மா. குடியை விட்டுட்டேன்."

"எப்படிடா?" என்றாள் மரகதம் நம்ப முடியாமல்.

"நீ ரொம்ப நாளா சொல்லிக்கிட்டிருக்க இல்ல? அதனாலதான்!"

"அப்படியெல்லாம் குடியை சட்டுனு விட முடியாதே!"

"இல்லம்மா. குடியைப் பத்திப் புரிஞ்சுக்கிட்டா விட்டுட லாம்."

"என்ன புரிஞ்சுக்கிட்ட? எப்படி விட்ட? என்னவோ எனக்குப் புரியல. நீ நிரந்தரமாக் குடியை விட்டுட்டா எனக்கு சந்தோஷம்தான்!"

"நிரந்தமரமாத்தான் அம்மா" என்றான் மனோகரன்.

"ஏண்டா உங்கம்மா எவ்வளவோ சொல்லியும் குடியை விடாதவன் காதலிக்க ஆரம்பிச்சவுடனே விட்டுட்டியா? அம்மா சொன்னா கேக்காதவன் காதலி சொன்னதும் உடனே விட்டுட்டியே!" என்றான் மனோகரனின் நண்பன் பிரகாஷ்.

"என் காதலி எதுவும் சொல்லல. நானாத்தான் விட்டேன்!" என்றான் மனோகரன்.

"அது எப்படி நீயா விடுவ?"

"டேய்! என் காதலியைப் பாத்தாலே எனக்கு சந்தோஷம் கிடைக்குது. ஏன், அவளை நினைச்சாலே சந்தோஷம் கிடைக்குது. ஆனா மதுவுக்கு இந்த குணம் இல்லையே! மதுவைக் குடிச்சாத்தானே போதை கிடைக்குது. அப்ப எதுக்கு மது குடிக்கணும்னு நினைச்சேன், விட்டுட்டேன்!" என்றான் மனோகரன்.

"உங்கம்மா பாவம், இது தெரியாம தன்னோட பேச்சைக் கேட்டுத்தான் நீ குடிக்கறதை விட்டுட்டதா நினைச்சு அதை எல்லார்கிட்டேயும் சொல்லி சந்தோஷப்பட்டுக்கறாங்க!" என்றான் பிரகாஷ்."

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 129
புணர்ச்சி விதும்பல் (ஒன்று சேர விரும்பதல்)
குறள் 1281
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

பொருள்:
நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகைத் தன்மையும் கள்ளுக்கு இல்‌லை; காமத்திற்கு உண்டு.

Wednesday, November 22, 2023

1280. கண்ணால் ஒரு சேதி!

தன்னுடன் நடந்து வந்து கொண்டிருந்த மனைவியைப் பெருமையுடன் பார்த்தான் சீவகன்.

வேலைக்காக வெளியூருக்குப் போவதென்று அவன் முடிவு செய்தபோது மனைவியையும் தன்னுடன் அழைத்துச் செல்வோம் என்று அவன் நினைத்துப் பார்க்கவில்லை.

அன்றைய தினத்தை அவன் நினைத்துப் பார்த்தான்.

"குமுதா! என் நண்பன் அமுதன் வேலை தேடி வெளியூர் போனான் இல்ல? அவன்கிட்டேந்து எனக்கு ஒரு மடல் வந்திருக்கு" என்றான் சீவகன்.

என்ன என்பது போல் அவனைப் பார்த்தாள் குமுதா.

"அவனுக்கு அங்கே ஒரு செல்வந்தர்கிட்ட வேலை கிடைச்சிருக்காம். 'நல்ல வேலை, நிறையப் பொருள் கொடுக்கறாரு, உன்னைப் பத்திச் சொன்னேன், உன் நண்பனை இங்கே வரச் சொல்லு, அவனுக்கும் வேலை கொடுக்கறேன்' னு சொன்னாராம். ஒரு ஆண்டு வேலை செஞ்சா போதும், அதுக்குள்ள நிறையப் பணம் சம்பாதிச்சுக்கிட்டு ஊருக்குத் திரும்பி வந்துடலாம்னு எழுதி இருக்கான். அதனால நான் கிளம்பிப் போகலாம்னு இருக்கேன்."

குமுதா பதில் சொல்லவில்லை. அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

அடுத்த நாள் சீவகன் ஊருக்குக் கிளம்புவதற்காகத் தன் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தபோது அங்கே வந்த குமுதா அவன் முகத்தைப் பார்த்தாள்.

முதல்நாள் பார்த்த அதே பார்வை!

சீவகனுக்கு சுருக்கென்று ஏதோ உறுத்தியது.

"சரி. நீயும் என்னோட வா!" என்றான்.

அப்போது அவள் முகத்தில் தெரிந்த மலர்ச்சி!

'உங்களைப் பிரிந்து என்னால் இருக்க முடியாது. என்னையும் உடன் அழைத்துச் செல்லுங்கள்' என்று அவள் வாய் திறந்து சொல்லவில்லை. 

அவள் பார்வையே அதை அவனுக்கு உணர்த்தி விட்டது. 

திருமணம் ஆனதிலிருந்து பெண்மையின் மென்மையையும், நளினத்தையும் குமுதாவிடம் அவன் உணர்ந்திருக்கிறான்.

ஆனால் அன்று அவள் தன் கண்களாலேயே தன்னிடம் பேசித் தன் மனதிலிருந்த ஏக்கத்தையும் விருப்பத்தையும் குறிப்பால் உணர்த்தியதைக் கண்டபோது அவள் பெண்மைக்கு இன்னும் சற்றுப் பெண்மை சேர்ந்திருப்பதாக அவன் உணர்ந்தான்.

ந்த உணர்வுடன் தன்னுடன் நடந்து வந்து கொண்டிருந்த குமுதாவைப் பெருமையுடன் மீண்டும் பார்த்தான் சீவகன்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 128
குறிப்பறிவுறுத்தல்
குறள் 1280
பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு.

பொருள்:
காதல் வேட்கையைக் கண்களால் உணர்த்திக் காதலனுடன் போவதற்கு இரந்து நிற்கும்போது பெண்மைக்குப் பெண்மை சேர்த்தாற் போன்று இருக்கின்றது.

1279. வனவாசம் போனாலும் பிரியாத சீதை!

"உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்" என்றான் சோமன்.

"இந்த நேரத்தில சொல்ல வேண்டிய முக்கியமான விஷயமா என்ன?" என்றாள் அவன் அணைப்பிலிருந்த வைசாலி.

"வியாபார விஷயமா நான் வெளியூர் போகணும்."

அவன் அணைப்பிலிருந்து சட்டென்று தன்னை விலக்கிக் கொண்ட வைசாலி "ரெண்டு மூணு நாள்ள வந்துடுவீங்க இல்ல?" என்றாள்.

"இல்லை வைசாலி. ரொம்ப தூரம் போறேன். திரும்பி வர அஞ்சாறு மாசம் ஆகும்."

வைசாலி தன் முகத்தைத் திருப்பித் தன் இரு தோள்களையும் பார்த்தாள். பிறகு தன் இரு கைகளையும் உயர்த்தித் தன் இரண்டு மணிக்கட்டுகளையும் பார்த்தாள்.

"என்ன செய்யற?" என்றான் சோமன் குழப்பத்துடன். 

"புரியலையா? உங்களை விட்டுப் பிரிஞ்சப்பறம் இந்தத் தோள்கள் எந்த அளவுக்கு இளைச்சு எலும்பு தெரியற மாதிரி ஆயிடும், கைகள் மெலிஞ்சப்புறம் கைவளைகள் எப்படி நழுவிக் கீழே விழும்னு நினைச்சுப் பார்த்தேன்."

"நம்ம எதிர்காலத்துக்குப் பணம் சம்பாதிக்கணும் இல்ல? போய்த்தான் ஆகணும். வேற வழி இல்லையே!" என்றான் சோமன்.

"ராமாயணம் படிச்சிருக்கீங்களா?" என்றாள் வைசாலி.

"படிச்சிருக்கேன். ஏன் கேக்கற?"

"வனவாசம் போனாலும் பிரியாத சீதை!" என்ற வைசாலி, குனிந்து தன் பாதங்களைப் பார்த்தாள்.

தான் போகுமிடம் எதுவாக இருந்தாலும் அங்கே தன்னுடன் வரத் தயாராக இருப்பதை அவள் உணர்த்தியதை சோமன் புரிந்து கொண்டான்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 128
குறிப்பறிவுறுத்தல்
குறள் 1279
தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது.

பொருள்:
பிரிவு காரணமாகக் கழலக் கூடிய வளையலையும், மெலிந்து போகக் கூடிய மென்மையான தோளையும் நோக்கியவள் காதலனைத் தொடர்ந்து செல்வதென்ற முடிவைத் தன் அடிகளை நோக்கும் குறிப்பால் உணர்த்தினாள்.

1278. சொன்னால் நம்பவா போகிறீர்கள்?

பரிவாதினி தெருவில் நடந்து சென்றபோது அவளுக்குத் தெரிந்தவர்கள் அவளை உற்றுப் பார்த்தனர்.

"ஏன் பரிவாதினியோட உடம்பு வெளிறிப் போன மாதிரி இருக்கு?"

"மாதிரி என்ன? வெளிறித்தான் போயிருக்கு. அவளோட கணவர் நேத்திக்கு ஊருக்குப் போயிட்டார் இல்ல. அதான் பசலை வந்து தோல் வெளிறிப் போயிருக்கு."

"நேத்திக்குத்தான் ஊருக்குப் போனாரா? ஆனா நான் நாலைஞ்சு நாளைக்கு முன்னால அவளைப் பார்த்தபோது கூட அவ இப்படித்தானே இருந்தா?"

"நீ சரியா கவனிச்சிருக்க மாட்டே!"

தனக்குக் காதில் விழாது என்று நினைத்து ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்தபடி இரண்டு பெண்கள் பேசிக் கொண்டது பரிவாதினியின் காதில் விழுந்தது.

அந்தப் பெண்களைக் கடைக்கண்ணால் பார்த்த பரிவாதினி, கடைசியாகப் பேசிய பெண்ணிடம் பேசுவது போல் மனதுக்குள் பேசினாள்:

'உன் தோழி சொல்றது சரிதான். அவ சரியாதான் கவனிச்சிருக்கா. அஞ்சு நாள் இல்ல, ஏழுநாளைக்கு முன்னாலேயே என் மேனியில பசலை படர ஆரம்பிச்சுடுச்சு. தான் ஊருக்குப் போகப் போறதை ரகசியமா வச்சிருந்து அவர் முதல்நாள்தான் எங்கிட்ட சொன்னார். ஆனா அவர் என்னை விட்டுப் பிரிஞ்சு போகப் போறார்ங்கறது என் மனசுக்கு ஒரு வாரம் முன்னாலேயே தெரிஞ்சு, அது என்உடம்பில பசலை படர வச்சுடுச்சு. இதை நான் சொன்னா நீங்க ரெண்டு பேரும் நம்பவா போறீங்க?'"

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 128
குறிப்பறிவுறுத்தல்
குறள் 1278
நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து.

பொருள்:
என் காதலர் நேற்றுத்தான் என்னைப் பிரிந்து போனார்; அப்பிரிவிற்கு வாடி என் மேனியின் நிறம் வேறுபட்டு ஏழு நாட்களாகி விட்டன.

Monday, November 20, 2023

1277. நேற்றே தெரியும்!

"வைகை! உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்" என்றான் வளவன்.

"சொல்லுங்க" என்றபோதே வைகையின் உடலில் ஒரு பதட்டம் தெரிந்தது.

"ஏன் பதட்டப்படற?"

"நீங்க சொல்லப் போற விஷயம் எப்படி இருக்குமோங்கற பதட்டம்தான். சொல்லுங்க." 

"நல்ல விஷயம்தான். ஆமாம். உங்கிட்ட ஏதோ ஒரு மாறுதல் தெரியுதே!"

"நல்ல விஷயம்னா ஏன் இப்படிச் சுத்தி வளைக்கிறீங்க? சீக்கிரம் சொல்லுங்க."

"நம்ம எதிர்காலத்துக்கு நன்மை பயக்கற விஷயம்தான். நிறையப் பணம் சம்பாதிக்க எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைச்சிருக்கு."

வைகை மௌனமாக இருந்தாள்.

"நாளைக்குக் கிளம்பற ஒரு சரக்குக் கப்பல்ல எனக்கு வேலை கிடைச்சிருக்கு. கப்பலோடபோயிட்டுத் திரும்பி வர வேண்டியதுதான். ஊதியமா நிறையப் பணம் கிடைக்கும்."

"கப்பல்ல போயிட்டுத் திரும்ப ரெண்டு மூணு மாசம் ஆகும் இல்ல?"

"ஆமாம். "

"அப்புறம் இது எப்படி நல்ல விஷயமா இருக்க முடியும்? என்னைப் பிரிஞ்சு இருக்கறது உங்களுக்கு நல்ல விஷயமா?" என்று கோபத்துடன் வெடித்தாள் வைகை.

"அப்படி இல்ல, வைகை..." என்று ஆரம்பித்தான் வளவன்.

"நீங்க இப்படி ஏதாவது செய்வீங்கன்னு எனக்கு நேத்திக்கே தெரியும்!"

"நேத்திக்கே தெரியுமா? எப்படி?"

"எனக்குன்னா எனக்கு இல்லை. என் கைவளையல்களுக்குத் தெரிஞ்சுடுச்சு. நேத்து ராத்திரி நீங்க என்னைக் கட்டி அணைச்சுக்கிட்டப்பவே நீங்க என்னைப் பிரியப் போறீங்கங்கறதை என் கைவளையல்கள் புரிஞ்சுக்கிட்டு என் கையிலேந்து நழுவி விழுந்துடுச்சு. எங்கிட்ட ஏதோ மாறுதல் தெரியுதுன்னீங்களே, என் கைவளையல்கள் நழுவி விழுந்ததால என் கைகள் வெறுமையா இருக்கே, அந்த மாறுதல்தான் அது!" என்றாள் வைகை, தன் கண்களில் பெருகிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டே.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 128
குறிப்பறிவுறுத்தல்
குறள் 1277
தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை.

பொருள்:
குளிர்ந்த துறையை உடைய அவர் என்னை உடலால் கூடி உள்ளத்தால் பிரிந்திருப்பதை என்னைக் காட்டிலும் என் கை வளையல்கள் முன்னமே அறிந்து விட்டன.

Sunday, November 19, 2023

1276. பிரிந்தவர் கூடினர்!

எத்தனை நாட்கள் ஆகி விட்டன குலசேகரன் அவளைப் பிரிந்து! நாட்கள் இல்லை, மாதங்கள்!

சொந்த ஊருக்குப் போய்ப் பெற்றோரைப் பர்த்து விட்டுப் பத்து நாட்களில் வந்து விடுகிறேன் என்று சொல்லி விட்டுப் போனவன்தான்! இப்போது பத்து மாதங்கள் கழித்து வந்திருக்கிறான்.

திடீரென்று ஒருநாள் தன் வீட்டு வாசலில் குலசேகரன் வந்து நின்றதைக் கண்ட கோதைக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. இரவில் தூக்கம் பிடிக்காததால் பகலிலேயே தூங்குகிறோமோன்று நினைத்துப் பார்த்தாள்.

இல்லை. இது கனவு இல்லை, நிஜம்தான்.

"பத்து நாள் ஆகும்னு சொன்னீங்க. அதுக்கள்ள வந்துட்டீங்களே! ஏதாவது பறவை முதுகில உக்காந்து வந்தீங்களா?" என்றாள் கோதை.

கோதை கோபமாகப் பேசாமல் கேலியாகப் பேசியது குலசேகரனுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.

கோதையின் கைகளைப் பற்றிக் கொண்டு சொந்த ஊரில் தனக்கு இருந்த பணிகளையும், அதனால் அங்கே பல நாட்கள் தங்க வேண்டி இருந்ததைப் பற்றியும் கூறினான் குலசேகரன்.

"கடல் கடந்தா போனீங்க? இங்கேந்து பத்து காத தூரம்தானே உங்க ஊர்? ஒரு தடவை வந்துட்டுப் போயிருக்கலாம். இல்லேன்னா யார் மூலமாவது செய்தி சொல்லியாவது அனுப்பி இருக்கலாம்."

"பல மாதங்கள் பிரிவுக்கப்புறம் உன்னோட சேரறது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியா இருக்கு! உனக்கு அப்படி இல்லையா?" என்றான் குலசேகரன், அவளை அணைத்தபடியே.

"ஏன் இல்லாம? என் முகத்தைப் பார்த்தா தெரியலியா?" என்ற கோதை, 'அதோட இத்தனை நாள் என்னைப் பிரிஞ்சிருந்ததை நினைக்கறப்ப என் மேல அன்பு இருந்தா அப்படி இருந்திருப்பீங்களாங்கற எண்ணமும்தானே வருது?' என்று நினைத்துக் கொண்டாள்.

கற்பியல்
அதிகாரம் 128
குறிப்பறிவுறுத்தல்

குறள் 1276
பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து.

பொருள்:
அவரைப் பிரிந்து இருந்ததால் ஏற்பட்ட துன்பத்தினைப் பெரிதும் பொறுத்துக் கொண்டு இப்போது நான் மகிழும் வண்ணம் அவர் என்னைக் கூடுவது அவரது அன்பின்மையை எண்ணிப் பார்க்கச் செய்கிறது.

Friday, November 17, 2023

1275. பார்வையில் கிடைக்குமா பதில்?

"நீயும் அவளை ஒரு மாசமாக் காதலிக்கற. ஆனா அவ இன்னும் உன் காதலை ஏத்துக்கிட்ட மாதிரி தெரியலியே!"

"என்ன செய்யறது? அவகிட்ட என் காதலைச் சொன்னேன். பதிலே சொல்லாம போயிட்டா. மறுபடி போய்ப் பேசறதுக்கு எனக்குத் தயக்கமா இருக்கு."

"அதுக்கப்புறம் அவளை நீ சந்திக்கவே இல்லையா?"

"தினமும் சந்திச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். என் வீடு இருக்கிற அதே தெருவிலதானே அவ வீடும் இருக்கு!"

"அப்ப தினமும் அவ வீட்டு வாசல்ல போய் நின்னுடுவேன்னு சொல்லு!"

"அப்படியெல்லாம் செய்ய முடியுமா? அவ எப்ப வீட்டை விட்டுக் கிளம்பறான்னு தெரியும். அந்தச் சமயத்தில அவ கண்ணில படற மாதிரி ஒரு இடத்தில நிப்பேன்."

"அவ உன்னைப் பாப்பாளா, பாக்காமலே போயிடுவாளா?"

"நிச்சயமாப் பாப்பா. ஒரு தடவை கூட திரும்பி என்னைப் பாக்காம இருந்ததில்ல."

"அப்புறம் என்ன? அவளுக்கும் உன் மேல ஒரு இது இருக்குன்னுதான் அர்த்தம்!"

"அப்படி இருந்தா வாயைத் தொறந்து சொல்லலாமே? எதுவுமே சொல்லாம என்னை ரொம்ப கஷ்டப்படுத்தறா!"

"அப்ப எதுக்கு அவளைப் பாக்கற? அவளா வந்து 'எனக்கும் உன்னைப் புடிச்சிருக்கு' ன்னு உங்கிட்ட சொல்லட்டும்!"

"போடா! அவ பார்வையில ஒரு குறும்பு இருக்கு. அந்தக் குறும்பத்தனம்தான் எனக்கு நம்பிக்கையைக் கொடுக்குது. அவ பதில் சொல்ல மாட்டேங்கறாளேங்கற ஏக்கத்தைப் போக்கற மாதிரியும் இருக்கு!"

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 128
குறிப்பறிவுறுத்தல்
குறள் 1275
செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.

பொருள்:
வண்ணமிகு வளையல்கள் அணிந்த என் காதலியின் குறும்புத்தனமான பார்வையில், என்னை வருத்தும் துன்பத்தைத் தீர்க்கும் மருந்தும் இருக்கிறது.

Wednesday, November 15, 2023

1274. புன்னகையில் ஒரு பொருள் வந்தது!

"நாம எல்லாரும் நம்ம காதலர்களைப் பத்தி வெளிப்படையாப் பேசறோம். ஆனா இந்த வேணி மட்டும் பேசவே மாட்டேங்கறாளே" என்றாள் உமா.

"ஒருவேளை அவ யாரையும் காதலிக்காம இருக்கலாம்!" என்றாள் சாந்தி.

"இல்லையே! நீ யாரையாவது காதலிக்கறயான்னு கேட்டா பதில் சொல்லாம சிரிக்கறாளே! காதலன் இல்லைன்னா இல்லைன்னு சொல்ல வேண்டியதுதானே?"

"நான் ஒரு யோசனை சொல்றேன். நாம எல்லாரும் சேர்ந்து லஞ்ச் சாப்பிடறப்ப ஒவ்வொத்தரும் நம்மோட காதலரோட நெருக்கமாப் பழகறதைப் பத்தி ஜாலியாப் பேசுவோம். வேணியும் நம்மோட சேர்ந்துதானே சாப்பிடுவா? அவளோட ரியாக்‌ஷன் என்னன்னு பாக்கலாம்."

"சரி."

"நீ சொன்ன மாதிரி லஞ்ச் சாப்பிடறப்ப நாம நம்ம காதலர்களைப் பத்தி ஜாலியாப் பேசினோம். வேணி பேசாம கேட்டுக்கிட்டிருந்தாளே ஒழிய, அவகிட்டேந்து எந்த ரியாக்‌ஷனும் இல்லையே!" என்றாள் உமா.

"நீ கவனிச்ச லட்சணம் அவ்வளவுதான்!" என்றாள் சாந்தி.

"நீ என்னத்தை கவனிச்சியாம்?"

"நான் உங்களோட பேசிக்கிடிருந்தப்பவே வேணியை உன்னிப்பா கவனிச்சுக்கிட்டிருந்தேன். யாராவது ஒத்தர் தன்னோட காதலரைப் பத்தி நெருக்கமான விஷயம் ஏதாவது சொன்னப்பல்லாம் வேணி யாரும் கவனிக்காத அளவுக்கு அமுக்கமா சிரிச்சுக்கிட்டிருந்தா. நான் உன்னிப்பா கவனிச்சதாலதான் எனக்கு அது தெரிஞ்சது."

"அதனால?"

"அதனால அவளுக்குக் காதலன் இருக்கான்னு அர்த்தம். அவ சிரிக்கறப்பல்லாம் தன்னோட மனசுக்குள்ள தன் காதலனை நினைச்சு சிரிக்கறான்னு அர்த்தம். அவ தன்னோட காதலை சிரிப்பில ஒளிச்சு வச்சுப் பாக்கறா. எவ்வளவு நாளைக்கு?"

"எவ்வளவு நாளைக்குன்னா? வெளியில சொல்லிடுவான்னு சொல்ல வரியா?"

"பூ அரும்பா இருக்கும்பது வாசனை வெளியில தெரியாது. அது மலரும்போது வாசனை வெளியில வருதில்ல? அது மாதிரிதான், வேணியோட புன்னகையில மறைஞ்சிருக்கற காதலும் ஒருநாள் வெளியில வரும். நான் இப்ப சொல்றது உண்மைன்னு உனக்கு அப்ப தெரியும்!" என்றாள் சாந்தி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 128
குறிப்பறிவுறுத்தல்
குறள் 1274
முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.

பொருள்:
மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான் ஒரு பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்பற்றிய நினைவும் நிரம்பியிருக்கிறது.

1273. சிரித்தாள் தங்கப் பதுமை!

மணிவண்ணன் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது, அந்தப் பெண் தன்னைப் பார்த்து இலேசாகச் சிரித்தது போல் அவனுக்குத் தோன்றியது. ஆனால் அது தன் கற்பனையாக இருக்குமோ என்று நினைத்தான்.

அதன் பிறகு மணிவண்ணன் தினமும் அவளை அந்த பஸ் நிறுத்தத்தில் பார்த்தான். ஆனால் அவள் அவனை கவனித்ததாகத் தெரியவில்லை.

மணிவண்ணன் அவளை தினமும் கவனித்து வந்தான். 

அவ்வாறு கவனித்ததில் அவனுக்குப் புலப்பட்ட விஷயங்கள் இரண்டு. ஒன்று அவள் இயற்கையாகவே அழகானவள் என்பது. இரண்டு அவள் தினமும் தன்னை வெவ்வேறு விதங்களில் அலங்கரித்துக் கொண்டிருந்தாள் என்பதை.

மணிவண்ணன் பல மாதங்களாக அந்த பஸ் நிறுத்தத்தில்தான் வந்து பஸ் ஏறுகிறான். ஆனால் அன்று அவள் அவனைப் பார்த்துச் சிரித்த அல்லது அவன் அவ்வாறு நினைத்துக் கொண்ட அந்த நாளுக்கு முன் அவன் அவளை அங்கே பார்த்ததில்லை. பார்த்ததில்லையா அல்லது கவனித்ததில்லையா என்பது அவனுக்குத் தெரியவில்லை.

ஆனால் இப்போது அவளை தினமும் பார்க்கிறான் - கூர்ந்து பார்க்கிறான். ஏன் இந்த மாற்றம்?

முதலில் அவன் கண்ணுக்குத் தெரியாத அவள் அழகு இப்போது தெரிவது ஏன் என்று யோசித்தான். அவள் தன்னை அலங்காரம் செய்து கொள்வதுதான் அதற்குக் காரணம் என்று தோன்றியது.

முதல்முறை அவன் அவளைப் பார்த்தபோது அவள் இதுபோல் அலங்காரம் செய்து கொள்ளவில்லை. எளிமையாகத்தான் தெரிந்தாள்.

அன்று அவனைப் பார்த்துச் சிரித்த அல்லது அவன் அவ்வாறு நினைத்த அந்த நாளுக்குப் பிறகுதான் அவள் தன்னை அலங்காரம் செய்து கொள்ளத் தொடங்கி இருக்கிறாள். 

அப்படியானால் தன்னை விதவிதமாக அலங்காரம் செய்து கொள்வதன் மூலம் அவன் தன்னை கவனிக்க வேண்டும், தன் அழகை ரசிக்க வேண்டும் என்பதுதான் அவள் நோக்கமா?

அப்படியானால் தன்னை விதவிதமாக அலங்கரித்துக் கொள்வதன் மூலம் அவள் அவனக்கு ஒரு செய்தியைத் தெரிவிக்கிறாளா?

அடுத்த நாள் பஸ் நிறுத்தத்தில் அவளைப் பார்த்தபோது மணிவண்ணன் அவளைப் பார்த்துச் சிரித்தான்.

பதிலுக்கு அவளும் சிரித்தாள்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 128
குறிப்பறிவுறுத்தல்
குறள் 1273
மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு.

பொருள்:
கோக்கப்பட்ட பளிங்கிற்குள் கிடந்து வெளியே தெரியும் நூலைப் போல் இவளின் அழகிற்குள் கிடந்து வெளியே தெரியும் குறிப்பு ஒன்று உண்டு.

Tuesday, November 14, 2023

1272. யார் யார் யார் அவள் யாரோ?!

"நம்ம கம்பெனியில நூறு பெண்கள் வேலை செய்யறாங்க. நம்ம ஒவ்வொத்தருக்கும் ஒரு காதலி இருக்கா, சுமந்த்தைத் தவிர!" என்றான் கிஷோர்.

"அவன் பாவம், தான் உண்டு, தன் வேலை உண்டுன்னு இருக்கறவன். அவனை ஏண்டா இழுக்கற?" என்றான் நடராஜ்

"அவன் மட்டும்தான் வேலை செய்யறானா? நாமளும்தான் கஷ்டப்பட்டு வேலை செய்யறோம். அதுக்கும், காதலி இருக்கறதுக்கும் என்ன சம்பந்தம்?" என்றான் கிஷோர்.

"நாம எல்லாரும் அவனைக் கிண்டல் பண்றோம். அவன் ஏதாவது பதில் சொல்றான பாரு!" என்றான் வினோத்

நண்பர்களின் கேலிப் பேச்சை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த சுமந்த், "உங்களுக்கெல்லாம் ஒரு விஷயம் சொல்றேன். எனக்குக் காதலி இருக்கா!" என்றான்.

"என்னோட வேலைதான் என் காதலின்னு பழைய ஜோக் எல்லாம் அடிக்காதே!" என்றான் நடராஜ்.

"இல்லைடா. எனக்கு ஒரு காதலி இருக்கா. அவ நம்ம ஆஃபீசிலேயே வேலை செய்யறா. அது மட்டும் இல்ல, நம்ம ஆஃபீஸ்ல உள்ள பெண்களிலேயே அவதான் ரொம்ப அழகு!" என்றான் சுமந்த்.

"அது எப்படிடா, நம்ம ஆஃபீஸ்லேயே அழகான பொண்ணுதான் என்னைக் காதலிக்கறாளே!" என்றான் வினோத்.

"டேய்! சந்தடி சாக்கில சைக்கிள் ஓட்டாதே! எந்த அழகான பொண்ணாவது உன்னைக் காதலிப்பாளா? ஏதோ ஒரு பொண்ணு உன்னைக் காதலிக்கிறா. அதோட நிறுத்திக்க" என்ற நடராஜ், "டேய் சுமந்த்! உன் காதலியைப் பத்திச் சொல்லுடா!" என்றான் சுமந்த்தைப் பார்த்து.

"அதான் சொல்லிட்டேனே, நம்ம ஆஃபீஸ்லேயே அழகான பொண்ணுன்னு."

"அதை நாங்க தீர்மானிக்கறோம். பொண்ணு யாருன்னு மட்டும் சொல்லு" என்றான் கிஷோர்.

"அதை நான் சொல்ல முடியாதுடா!"

"ஏன்? அப்ப, சும்மா கதை விடறேன்னுதானே அர்த்தம்? காதலி இருந்தா அவ யாருன்னு சொல்றதில என்ன கஷ்டம்?"

"எங்களுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகிற வரையில எங்க காதலைப் பத்தி யார்கிட்டேயும் சொல்லக் கூடாதுன்னு அவ சொல்லி இருக்கா."

"ஏன் அப்படி?"

"ஏன்னா, அவ மத்த பொண்ணுங்க மாதிரி இல்ல. பெண்மைக்கு உண்டான நாணம்கற குணம் அவகிட்ட இருக்கு! அதனால தன்னோட காதல் மற்றவங்களுக்குத் தெரிய வேண்டாம்னு நினைக்கறா. இன்னும் ரெண்டு மூணு மாசத்தில எங்க கல்யாணம் நிச்சயம் ஆயிடும். அவ யாருன்னு அப்ப நீங்களே தெரிஞ்சுப்பீங்க!" என்றான் சுமந்த்.

    காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 128
குறிப்பறிவுறுத்தல்
குறள் 1272
கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது.

பொருள்:
கண் நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் உடைய என் காதலிக்குப் பெண்மைத் தன்மை நிறைந்து விளங்கும் இயல்பு மிகுதியாக உள்ளது.

Monday, November 13, 2023

1271. மௌனமே பார்வையால்...

ராகவன் பணியாற்றி வந்த அந்தப் பெரிய நிறுவனத்தின் ஊழியர்களில் பெரும்பாலானோர் ஆண்கள் என்றாலும், பெண் ஊழியர்களும் கணிசமான எண்ணிக்கையில் இருந்தனர்.

ராகவன் பெண்களிடம் அதிகம் பேசும் இயல்பு கொண்டவன் அல்ல. சில பெண்கள் அவனிடம் கேலியாகப் பேசி அவனைச் சீண்டிப் பார்ப்பாரகள். ஆனால் அவன் ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்லிப் பேச்சை முடித்து விடுவான்.

ராதிகா அங்கே சமீபத்தில்தான் வந்து சேர்ந்தாள். ராதிகாவை ராகவனின் பெண் வடிவம் என்றே கூறலாம். அவள் ஆண்களிடம் அதிகம் பேச மாட்டாள்.

பல இளைஞர்களுக்கு ராதிகாவின் மீது ஒரு கண் இருந்தது. அவளிடம் பேச்சுக் கொடுத்தும், வேலையில் அவளுக்கு உதவி செய்தும், அவர்கள் ராதிகாவின் கவனத்தைக் கவர முயன்று கொண்டிருந்தனர்.

ராகவன் ராதிகாவை அலுவல் விஷயமாகச் சந்திக்க வாய்ப்புகள் ஏற்படவில்லை. ஆனால் இருவரும் ஒரே தளத்தில் பணி புரிந்ததால் அவ்வப்போது பார்த்துக் கொள்ள வேண்டி வரும்.

ராகவன் மற்ற பெண்களிடம் நடந்து கொள்வது போல்தான் ராதிகாவிடமும் நடந்து கொண்டான் - அதாவது அவளைப் பொருட்படுத்தாமல் இருந்து வந்தான்.

ன்று ராதிகா அலுவலகத்துக்கு வரவில்லை. அலுவலகத்துக்கு வந்த சிறிது நேரத்திலேயே  ராகவன் இதை உணர்ந்தான். 

மற்ற ஊழியர்கள் - ஆண்களோ, பெண்களோ- அலுவலகத்துக்கு வராதபோது அதை கவனிக்காத தான், ராதிகா வராததை மற்றும் ஏன் கவனித்து உணர வேண்டும் என்ற கேள்வி அவன் மனதில் எழுந்தது. அதை அலட்சியம் செய்து தன் வேலையில் ஈடுபட்டான் ராகவன்.

ஆயினும் அன்று முழுதும் ராதிகா அலுவலத்துக்கு வரவில்லை என்ற நினைவு அவன் மனதுக்குள் நிறைந்திருந்தது. சில சமயம் அவளை அன்று பார்க்க முடியாதது மனதுக்குள் ஒருவித ஏக்கத்தையும், வருத்தத்தையும் கூட அளித்தது.

ன்று இரவு நீண்ட நேரம் உறக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான் ராகவன். ராதிகாவை அவன் நேருக்கு நேர் பார்த்த சம்பவங்கள் நினைவுக்கு வந்தன.

திடீரென்று எதையோ உணர்ந்தவனாக எழுந்து உட்கார்ந்து கொண்டான் ராகவன்.

'ராதிகாவும் என்னைப் போல் அதிகம் பேசாதவள்தான். ஆனால் என்னைப் பார்த்த பார்வையிலும், மெலிதான புன்னகையிலும் ஏதோ ஒரு செய்தியை எனக்கு உணர்த்தி வந்திருக்கிறாள். அதை என் உள்ளுணர்வு ரீதியாக நான் புரிந்து கொண்டிருக்கிறேன். அதனால்தான் இன்று அவள் அலுவலகத்துக்கு வராதது என்னை இந்த அளவுக்கு பாதித்திருக்கிறது!'

மறுநாள் ராதிகாவைப் பார்க்கும்போது ஒரு புன்னகையாவது செய்து அவள் தனக்கு உணர்த்தி வந்த செய்தியைத் தான் புரிந்து கொண்டேன் என்பதை அவளுக்கு உணர்த்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் ராகவன்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 128
குறிப்பறிவுறுத்தல்
குறள் 1271
கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு.

பொருள்:
நீ சொல்லாது மறைத்தாலும், மறைக்க உடன்படாமல், உன் மை தீட்டப் பெற்ற கண்கள் எனக்குச் சொல்ல விரும்பும் செய்தி ஒன்று உண்டு.

Sunday, November 12, 2023

1270. அப்படி எதுவும் நடந்து விடக் கூடாது!

நான் இங்கே வேலைக்கு வந்து ஐந்து மாதங்கள் ஆகி விட்டன. பயணம் கிளம்புவதற்கு ஒரு மாதம் முன்புதான் திருமணம் செய்து கொண்ட என் மனைவியை விட்டுப் பிரிந்தும் ஐந்து மாதங்கள் ஆகி விட்டன.

என்னை வேலைக்கு அழைத்து வந்த வணிகர், கிளம்புவதற்கு முன் சொன்னது மூன்று மாதங்களில் வேலை முடிந்து விடும் என்றுதான்.

ஆனால் நாங்கள் விற்பனைக்காக எடுத்து வந்த சரக்கு இரண்டு மாதங்களிலேயே விற்றுத் தீர்ந்து விட்டது. சரக்கு மிக வேகமாக விற்பனையாவதைக் கண்ட வணிகர் நாங்கள் இங்கே வந்த சில நாட்களிலேயே இன்னொரு கப்பல் மூலம் கூடுதல் சரக்கைக் கொண்டு வர ஏற்பாடு செய்து விட்டார்.

அதனால் மொத்த சரக்கையும் விற்று விட்டுத்தான் நாங்கள் கிளம்ப முடியும் என்ற நிலை.

"என்ன ஐயா இது? மூணு மாசம்னு சொன்னீங்க. அஞ்சு மாசம் ஆயிடுச்சே!" என்று நான் வணிகரிடம் கேட்டதற்கு, "என்ன செய்யறது தம்பி? காத்துள்ளபோதே தூத்திக்கணும் இல்ல? நான் உனக்கு லாபத்தில பங்கு கொடுக்கறதால, உனக்கும் அதிகப் பணம் கிடைக்குமே! கைநிறையப் பணத்தோட உன் திருமண வாழ்க்கையை ஆரம்பிக்கறது உனக்கு ஒரு நல்ல வாய்ப்புத்தானே?" என்றார் அவர். 

கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது!

ஆனால் என் மனைவி பற்றி அவருக்குத் தெரியாது. திருமணம் முடிந்து ஒரு மாதம் அவளுடன் வாழ்ந்தபோதே அவள் இயல்பு எனக்குப் புரிந்து விட்டது. என்னை விட்டுச் சில மணி நேரம் பிரிந்திருப்பது கூட அவளுக்குக் கடினமாக இருந்தது. 

நான் எங்காவது வெளியே போய் விட்டு வந்தால் நான் திரும்பி வரும் வரை சாப்பிடாமல் எனக்காகக் காத்திருப்பாள். 

"உங்களை விட்டு என்னால கொஞ்ச நேரம் கூடப் பிரிஞ்சிருக்க முடியலை. நீங்க வரதுக்குள்ள என் மனசு படற பாடு இருக்கே, அப்பப்பா!" என்பாள்.

அப்படிப்பட்டவள் இந்த ஐந்து மாதங்களாக என்னைப் பிரிந்திருக்கும்போது சரியாக உணவு அருந்துவாளா என்ன?

ஒருவேளை சரியாக உண்ணாமல், உறங்காமல் அவள் உடல்நிலை பாதிக்கப்பட்டால்?

உடல்நிலை பாதிக்கப்பட்டால் கூடப் பரவாயில்லை, மனநிலை பாதிக்கப்பட்டால்?

அப்போது நான் கைநிறையப் பொருளுடன் அவளைச் சென்று அடைந்து என்ன பயன்?

இறைவா அப்படி எதுவும் நடந்து விடக் கூடாது!

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 127
அவர்வயின் விதும்பல் (அவரிடம் விரைதல்)
குறள் 1270
பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்.

பொருள்:
என் பிரிவைத் தாங்காமல் உள்ளம் உடைய, அவளுக்கு ஏதாவது ஆகிவிட்டால் அதன் பிறகு அவள் என்னைப் பெறுவதால் ஆவது என்ன? பெற்றால்தான் என்ன? உடம்போடு கலந்தால்தான் என்ன? ஒரு பயனும் இல்லை.

Saturday, November 11, 2023

1269. வெள்ளிக்கிழமை விரதம்!

"ஏம்மா, இன்னிக்கு நீ விரதம் இருக்கணும், இல்ல?" என்றாள் குயிலி.

"ஏண்டி, நீதான் ஒழுங்கா சாப்பிடாம பல நாள் பட்டினி கிடக்கற. நானும் உன்னை மாதிரி இருக்கணுமா?" என்றாள் குயிலியின் தாய் அரசி.

"என்னம்மா இது? நீதானே ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விரதம் இருப்ப?"

"நேத்திக்குத்தானேடி விரதம் இருந்தேன்? அந்தக் களைப்பிலேயே இன்னிக்கு எப்ப சாப்பிடப் போறோம்னு இருக்கு. இதில இன்னிக்கு வேற விரதம் இருக்கணுமா?" என்றாள் அரசி எரிச்சலுடன்.

"நேத்திக்கு விரதம் இருந்தியா? வெள்ளிக்கிழமைதானே விரதம் இருப்ப? இப்ப வியாழக்கிழமை விரதம்னு மாத்திட்டியா?" என்றாள் குயிலி வியப்புடன்.

"உனக்கு மூளை கலங்கிப் போயிடுச்சா என்ன?" நேத்திக்குத்தானே வெள்ளிக்கிழமை? இன்னிக்கு சனிக்கிழமையாச்சே! நேத்து என்னைக் கேட்டியே, விரதம் இருக்கறது கஷ்டமா இருக்கான்னு, மறந்துடுச்சா?"

"மறக்கலம்மா. ஆனா நான் அப்படிக் கேட்டது ஒரு வாரம் முன்னேதானே? நேத்திக்குக் கேட்டேன்னு சொல்ற!"

" வெளியூருக்குப் போனஉன் புருஷன் எப்ப வரப் போறான்னு பார்த்துக்கிட்டிருக்கறதால உனக்கு நாளே நகர மாட்டேங்குது. ஒரு நாள் கழியறது ஏழு நாள் கழியற மாதிரி இருக்கு போலருக்கு. அதனாலதான் நேத்து நடந்ததை ஒரு வாரம் முன்னால நடந்ததா சொல்ற. என்ன பெண்ணோ!" என்று அலுத்துக் கொண்டாள் அரசி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 127
அவர்வயின் விதும்பல் (அவரிடம் விரைதல்)
குறள் 1269
ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.

பொருள்:
தொலைவில் உள்ள வெளிநாட்டிற்குச் சென்ற காதலர் திரும்பி வரும் நாளை நினைத்து ஏங்கும் மகளிர்க்கு ஒருநாள் ஏழுநாள் போல் கழியும்.

Friday, November 10, 2023

1268. மொழிபெயர்ப்பாளன்

என் தாய்மொழி தமிழ்தான். ஆனால் நான் பிறந்தது இலங்கையில். 

எனக்குப் பத்து வயதாகும்போது என் பெற்றோர்கள் இலங்கையிலிருந்து சோழ நாட்டுக்குக் குடி பெயர்ந்து விட்டனர்.

அதனால் எனக்குத் தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளும் தெரியும்.

பொதுவாகப் பல மொழிகள் தெரிந்து வைத்திருப்பது நன்மை பயக்கும் என்று சொல்வார்கள். ஆனால் எனக்கு இரண்டு மொழிகள் தெரிந்திருந்தது என்னை என் காதலியிடமிருந்து பிரித்து விட்டது!

பிங்களையை நான் சந்தித்ததுமே அவளிடம் காதல் கொண்டு விட்டேன். அதில் ஒன்றும் வியப்பில்லை. ஆனால் அவள் என் காதலை ஏற்றுக் கொண்டது என் முற்பிறவியில் நான் செய்த புண்ணியத்தின் விளைவுதான் என்று கூற வேண்டும்.

எங்கள் காதலை எங்கள் இரு குடும்பத்தினரும் ஏற்றுக் கொண்டு எங்களுக்குத் திருமணம் செய்து வைத்து விட்டனர்.

'வெண்ணெய் திரளும் நேரத்தில் தாழி உடைந்தது போல்' என்று சோழ நாட்டில் ஒரு பழமொழி சொல்வார்கள். 

அது போன்ற ஒரு நிகழ்வு அப்போது ஏற்பட்டது.

எங்கள் ஊரைச் சேர்ந்த ஒருவர் அரண்மனையில் வேலை செய்கிறார். எங்களுக்குத் திருமணம் நடந்த அன்று அவர் எங்கள் ஊருக்கு வந்து, நேரே என் வீட்டுக்கு வந்தார். "உன்னை மன்னர் உடனே அழைத்து வரச் சொன்னார்" என்றார்.

'நான் தவறு எதுவும் செய்யவில்லையே!' என்ற எண்ணம்தான் என் மனதில் முதலில் தோன்றியது.

என் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டவர் போல், அவர் உடனே "பயப்படாதே! மன்னர் ஒரு முக்கியமான பணியில் ஈடுபடுத்தத்தான் உன்னை அழைக்கிறார்" என்றார்.

"இன்றுதான் எனக்குத் திருமணம் ஆகி இருக்கிறது. இரவு  என் மனைவி வீட்டில் திருமண விருந்து. அதற்குப் பிறகு..."

"எனக்குத் தெரியும்" என்று என்னை இடைமறித்தார் அவர். "திருமண விருந்து, முதல் இரவு எல்லாம் அப்புறம்தான். மன்னர் பணியை முடித்துக் கொடுத்து விட்டு, அப்புறம் எல்லாவற்றையும் வைத்துக் கொள்."

பிறகு என் காதில், "இந்தப் பணிக்காக உனக்கு எவ்வளவு பொற்காசுகள் கிடைக்கும் என்று உன்னால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது. மன்னர் அவ்வளவு தாராள மனம் படைத்தவர். அந்தப் பணத்தை வைத்து நீ ஒரு வியாபாரத்தைத் துவக்கி உன் வாழ்க்கைக்கு வழி தேடிக் கொள்ளலாம்" என்றார்.

மனைவியிடமும், அவள் பெற்றோர், என் பெற்றோர் ஆகியோரிடம் விடைபெற்று அவருடன் கிளம்பினேன்.

விடைபெறும்போது என் மனைவியின் கண்களைப் பார்க்கும் துணிவு எனக்கு இல்லை. திருமணம் முடித்த கையோடு தன்னைப் பிரிந்து செல்லும் கணவன் குறித்து ஒரு மனைவியின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கவே எனக்கு அச்சமாக இருந்தது.

அரண்மனைக்குப் போன பிறகுதான் என் வேலை பற்றிய விவரங்கள் எனக்குத் தெரிந்தன.

இலங்கை நாட்டுடன் வணிகத் தொடர்புகளை அதிகரிக்க இளவரசர் தலைமையில் ஒரு குழுவை இலங்கைக்கு அனுப்புகிறாராம் அரசர். இலங்கை மன்னருடனும், மற்றவர்களுடன் அவர்கள் உரையாடலுக்கு உதவ அவர்களுக்கு சிங்கள மொழி அறிந்த ஒரு நபர் தேவைப்பட்டிருக்கிறார்.

எங்கள் ஊர்க்காரர் என்னைப் பரிந்துரைக்க, அரசர் என்னை உடனே அழைத்து வரும்படி கட்டளை இட்டிருக்கிறார்.

அந்தக் குழுவுடன் நான் இலங்கைக்குச் சென்று, பேச்சுவார்த்தைகளின் அவர்களுக்கு உதவி, பிறகு அவர்களுடன் நாடு திரும்ப வேண்டும். ஆரம்பகட்ட வேலைகள் துவங்கி இந்தச் செயல்பாடு நிறைவு பெற ஓரிரு மாதங்கள் ஆகலாம்.

அதுவரை புதிதாக மணந்து கொண்ட என் மனைவியை நான் பிரிந்துதான் இருக்க வேண்டும்.

ஞ்சைக்குப் புதிதாக வந்திருப்பவன் என்பதால் என்னை அன்று மாலை பெரிய கோவிலுக்கு அழைத்துச் சென்றனர்.

கோவிலில் வழிபாடு செய்து விட்டுத் திரும்பியபோது,"கடவுளிடம் என்ன வேண்டிக் கொண்டாய்?" என்றான் என்னைக் கோவிலுக்கு அழைத்துச் சென்ற காவல் வீரன்.

"மன்னரின் பணி சிறப்பாக முடிய வேண்டும் என்றுதான்" என்றேன்.

'அதன் பிறகு நான் என் ஊருக்குத் திரும்பி என் மனைவியுடன் ஒன்று சேர்ந்து அவளுடன் மாலை விருந்தில் கலந்து கொள்ள வேண்டும்' என்றும் வேண்டிக் கொண்டதை அவனிடம் சொல்லவில்லை! 

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 127
அவர்வயின் விதும்பல் (அவரிடம் விரைதல்)
குறள் 1268
வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.

பொருள்:
அரசன் இச்செயலில் முனைந்து நின்று வெற்றி பெறுவானாக; அதன்பின் யாம் மனைவியோடு கூடியிருந்து அன்று வரும் மாலைப் பொழுதில் விருந்து உண்போம்.

Thursday, November 9, 2023

1267. அங்கயற்கண்ணியின் ஒத்திகை

தமயந்தி தன் தோழி அங்கயற்கண்ணியைப் பார்க்க வந்தபோது, அங்கயற்கண்ணி கைகளை ஆட்டித் தனக்குள் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள்.

"என்னடி உனக்குள்ளேயே பேசிக்கிட்டிருக்க?" என்றாள் தமயந்தி.

"ஒண்ணுமில்லையே!" என்றாள் அங்கயற்கண்ணி, தான் தனக்குள் பேசிக் கொண்டதைத் தோழி பார்த்து விட்டாளே என்ற சங்கட உணர்வுடன்.

"என்ன ஒண்ணுமில்ல? இவ்வளவு நேரம் கையை ஆட்டி ஏதோ மேடைப் பிரசங்கம் பண்றவர் மாதிரி பேசிக்கிட்டிருந்தே? எங்கிட்ட சொல்லக் கூடாதா?"

அங்கயற்கண்ணி சற்றுத் தயங்கி விட்டு, "ஒண்ணுமில்லை. என்னை விட்டுப் பிரிஞ்சு போன காதலர் திரும்பி வரப்ப அவர்கிட்ட என்ன சொல்றதுன்னு நினைச்சுப் பார்த்துக்கிட்டிருந்தேன்!" என்றாள்.

"நினைச்சுப் பார்த்தியா? ஒத்திகை இல்ல பார்த்துக்கிட்டிருந்த? சரி. என்ன சொல்லப் போற?"

"இவ்வளவு நாள் என்னைப் பிரிஞ்சிருந்ததுக்காக அவர்கிட்ட கோவிச்சுக்கிட்டு சண்டை போடலாமான்னு நினைச்சேன்."

ஓ! அதுதான் கையை ஆட்டிப் பேசிக்கிட்டிருந்தியா? நல்லது. அப்படியே செய். அப்பதான் உன்னோட பிரிவுத் துயர் அவருக்குப் புரியும்!"

"ஆனா அப்படிச் செய்ய முடியுமான்னு தெரியல!"

"ஏன்?"

"பல மாசப் பிரிவுக்கப்புறம் அவரைப் பாக்கறப்ப அவரைக் கட்டித் தழுவிக்கணும்னுதானே தோணும்?"

"அப்ப, அவரைக் கட்டித் தழுவிக்கப் போறியா? அவரோட சண்டை போடப் போறதில்லையா?"

"ரெண்டையுமே செய்யலாமான்னு கூடத் தோணுது!"

"எப்படி? முதல்ல கட்டித் தழுவிக்கிட்டு அப்புறம் சண்டை போடப் போறியா, இல்லை முதல்ல சண்டை போட்டுட்டு அப்புறம் கட்டித் தழுவிக்கப் போறியா?" என்றாள் தமயந்தி கேலியாக.

"போடி!" என்றாள் அங்கயற்கண்ணி, வெட்கத்துடன்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 127
அவர்வயின் விதும்பல் (அவரிடம் விரைதல்)
குறள் 1267
புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் விரன்.

பொருள்:
கண்போல் சிறந்த என் துணைவர் வந்தால் அவர் நெடுநாள் பிரிந்திருந்ததற்காக ஊடுவேனா? அவர் பிரிவைத் தாங்க முடியாமல் அவரைத் தழுவுவேனா? அல்லது இரண்டு செயல்களையும் கலந்து செய்வேனா?

1266. தேவியின் ஓலைக் குறிப்பு

"ஏண்டி உனக்குப் பிடிக்குமேன்னு வள்ளிக் கிழங்கு சமைச்சு வச்சிருக்கேன். சாப்பிடவே இல்லையே" என்றாள் தேவியின் தாய் ருக்மிணி.

"எனக்கு சாப்பாடே பிடிக்கலேம்மா. எனக்காகன்னு எதுவும் சமைக்காதே!" என்றாள் தேவி.

"இப்படி எத்தனை நாள் நடந்திருக்கு, உனக்குப் பிடிச்சதுன்னு நான் ஒண்ணை சமைக்கறதும், நீ அதை சாப்பிடாம அப்படியே வச்சுட்டுப் போறதும்!" என்றாள் ருக்மிணி சலிப்புடன்.

"நான் கணக்கு வச்சிருக்கேம்மா!"

"கணக்கு வச்சிருக்கியா? என்ன கணக்கு?"

தேவி உள்ளிருந்து ஒரு ஓலையை எடுத்து வந்தாள்.

"என்னடி ஓலை இது?"

"நீ எனக்குப் பிடிச்ச உணவுப் பொருட்கள்னு சமைச்சதை எல்லாம் இதில குறிச்சு வச்சிருக்கேன். இதோ நீ இன்னிக்கு சமைச்ச வள்ளிக் கிழங்கைக் கூட எழுதி இருக்கேன் பாரு!"

"நல்லா இருக்கு! எதுக்குடி இதெல்லாம்? நான் சமைச்சதைச் சாப்பிட மாட்டாளாம், ஆனா ஓலையில எழுதி வைப்பாளாம்!"

"அம்மா! என்னைப் பிரிஞ்ச போனவர் திரும்பி வந்ததும் இந்த ஓலையை உங்கிட்ட கொடுக்கிறேன். இதில இருக்கறதை எல்லாம் நீ சமைச்சுப் போடு. நான் சந்தோஷமா சாப்பிடறேன்!" என்றாள் தேவி.

'இவளுக்குக் கிறுக்குத்தான் பிடிச்சிருக்கு!' என்று நினைத்துக் கொண்டாள் ருக்மிணி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 127
அவர்வயின் விதும்பல் (அவரிடம் விரைதல்)
குறள் 1266
வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.

பொருள்:
என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்பநோய் எல்லாம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன்.

Wednesday, November 8, 2023

1265. காண வேண்டும் கண்களால்!

"இவ்வளவு நாள் நீ காத்திருந்தது வீண் போகலை. உன் காதலர் ரெண்டு நாளில திரும்பி வரப் போறாராமே!" என்றாள் தாரிணி..

"ஆமாம்" என்றாள் பூரணி மகிழ்ச்சியுடன்.

"உனக்கு யாரு இந்தத் தகவலைச் சொன்னாங்க?"

"அவரோட பயணம் போயிருந்த  அவர் நண்பர் திரும்பி வந்துட்டாரு. அவரு நேத்திக்கு எங்க வீட்டுக்கு வந்திருந்தாரு. அவர்தான் இந்தத் தகவலைச் சொன்னாரு."

"ஏன் அவரோடயே உன் காதலரும் வரலை.?"

"அவருக்கு இன்னும் கொஞ்சம் வேலை இருக்காம். அதை முடிச்சுட்டு அடுத்த கப்பல்ல வரேன்னு சொல்லி அனுப்பி இருக்காரு. அந்தக் கப்பல் இன்னும் ரெண்டு நாள்ள வந்துடும்."

"ஆனா உன் காதலர் வரப் போறார்ங்கற மகிழ்ச்சி உங்கிட்ட முழுமையா இல்லையே!" என்றாள் தாரிணி.

"எதை வச்சு அப்படிச் சொல்ற?" என்றாள் பூரணி.

"ஏற்கெனவே நீ ரொம்ப இளைச்சு உன் தோள்கள் மெலிஞ்சிருக்கு. அதோட உன் தோள்ள பசலை படர்ந்து உன் தோள் நிறம் மாறி இருக்கே! அவர் பிரிவால வந்த இந்தப் பசலை அவர் வரப் போறார்னு தெரிஞ்சதும் மறைஞ்சிருக்க வேண்டாமா?"

"நீ வேணும்னா பாரு. அவர் திரும்பி வந்து அவரை நான் கண்ணால பார்த்த உடனேயே இந்தப் பசலை மறைஞ்சுடும்!" என்றாள் பூரணி உற்சாகத்துடன்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 127
அவர்வயின் விதும்பல் (அவரிடம் விரைதல்)
குறள் 1265
காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு.

பொருள்:
என் காதலரைக் கண்ணாரக் காண்பேனாக; கண்ட பிறகு என்னுடைய மெல்லிய தோளில் உண்டாகிய பசலை நிறம் தானே நீங்கி விடும்.

Monday, November 6, 2023

1264. மரத்தின் மீது ஏறியவள்!

தன்னை விட்டுப் பிரிந்த காதலன் திரும்ப வரும் காலம் வந்து விட்டதாக அஞ்சனையின் உள்ளுணர்வு கூறியது.

திரும்ப வருவதானால் கப்பலில் வந்து துறைமுகத்தில் இறங்குவார். அவர்கள் ஊரிலிருந்து துறைமுகம் இரண்டு காதத் தொலைவில் இருக்கிறது.

அந்த இரண்டு காதத் தொலைவையும் நடந்தே வருவாரோ அல்லது மாட்டு வண்டி பிடித்து வருவாரோ தெரியாது.

மாட்டு வண்டி பிடித்து வந்தாலும் சாலையில் இறங்கிச் சற்றுத் தொலைவு நடந்துதான் அவர்கள் வீட்டுக்கு வர வேண்டும்.

அவர் தொலைதூரத்தில் வருவதைப் பார்க்க முடிந்தால் தனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்று நினைத்துப் பார்த்தாள் அஞ்சனை.

வாசலில் நின்று பார்த்தாள் அஞ்சனை. அந்த வளைந்த தெருவின் கோடி கூட அவள் வீட்டு வாசலிலிருந்து தெரியவில்லை.

சற்றுத் தொலைவில் ஒரு மரம் இருந்தது. அதன் மேல் ஏறி அதன் கிளை ஒன்றில் அமர்ந்து பார்த்தால் அவர் தொலைவில் உள்ள சாலையில் நடந்து வருவதைக் கூடப் பார்க்க முடியும்.

தன்னால் அந்த மரத்தில் ஏற முடியுமா? ஏறித்தான் பார்ப்போமே!

விறுவிறுவென்று நடந்து மரத்தின் அருகில் வந்தாள் அஞ்சனை. சேலையை இறுக்கமாகக் கட்டிக் கொண்டு மரத்தில் காலை வைத்து ஏறினாள்.

என்ன வியப்பு! மிக விரைவிலேயே மரத்தில் ஏறி ஒரு உயர்ந்த கிளைக்குப் போய் விட்டோமே!.

கிளையில் உட்கார்ந்தபோது சாலை தெரிந்தது. சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தவர்களிடையே தன் காதலனின் முகம் தெரிகிறதா என்று பார்த்தாள் அஞ்சனை.

ஐயோ, இது என்ன? கிளையில் வைத்திருந்த கால் நழுவுவது போல் தோன்றுகிறதே!

மரக்கிளையிலிருந்து கீழே விழுந்தாள் அஞ்சனை. 

நினைவு இருந்தது. எனவே தான் இன்னும் இறந்து விடவில்லை என்று நினைத்துக் கண்களைத் திறந்து பார்த்தாள் அஞ்சனை.

"ஏண்டி, ராத்திரி முழுக்க தூங்காம, பகலிலேயே விசுப்பலகை* மீது உக்காந்துக்கிட்டே தூங்கிட்டுக் கீழே விழுந்திருக்க. எங்கேயாவது சிராய்ப்பு இருக்கான்னு பாரு!" என்றாள் அஞ்சனையின் தாய்.

* கால்கள் பதிக்கப்பட்ட மரப்பலகை (பெஞ்ச்)

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 127
அவர்வயின் விதும்பல் (அவரிடம் விரைதல்)
குறள் 1264
கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு.

பொருள்:
காதல் வயப்பட்டுக் கூடியிருந்து பிரிந்து சென்றவர் எப்போது வருவார் என்று என் நெஞ்சம், மரத்தின் உச்சிக் கொம்பில் ஏறிப் பார்க்கின்றது.

Sunday, November 5, 2023

1263. நான் ஏன் இப்படி இருக்கிறேன்?

"ஏண்டி, ராத்திரி பூரா முழிச்சுக்கிட்டிருக்க. பகல்ல தூங்கற. வேளைக்கு சாப்பிடறதில்லை. திடீர்னு வந்து 'பசிக்குது. சாப்பிட ஏதாவது கொடு' ன்னு கேக்கற. இப்படி எல்லாம் இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும்?" என்றாள் மாதவி.

"உடம்பு நல்லா இருக்கறதாலதானே அம்மா தினமும் கோவிலுக்குப் போறேன்!" என்றாள் மணிமேகலை.

"ஆமாம், தினம் கோவிலுக்குப் போய் என்ன வேண்டிக்கற? உன் புருஷன் சீக்கிரம் திரும்பி வரணும்னா? அவருதான் திரும்பி வர அஞ்சாறு மாசம் ஆகும்னாரே! நீ வேண்டிக்கிட்டதுக்காக ஒரு மாசத்தில திரும்பி வந்துடுவாரா என்ன?"

"அம்மா! அவரு ஒரு லட்சியத்தோடதான் ஊருக்குப் போயிருக்காரு. அவருக்குத் தொழில் செய்யணும்னு ஆசை. ஆனா தொழில்ல முதலீடு செய்ய அவர்கிட்டப் பணம் இல்லை. அதனாலதான் ஒரு வியபாரியோட வெளிநாட்டுக்குப் போயிருக்காரு. அவருக்கு வியாபாரத்தில உதவினா லாபத்தில பங்கு கொடுக்கறதா அந்த வியாபாரி சொல்லி இருக்காரு. அவருக்கு அதிகமா லாபம் சம்பாதிச்சுக் கொடுத்து அன் மூலமா தனக்கும் ஒரு நல்ல பங்கு கிடைக்க வழி செய்யணுங்கற லட்சியத்தோடதான் போயிருக்காரு. அவர் லட்சியம் நிறைவேறணும்னுதன் கடவுள்கிட்ட வேண்டிக்கறேன்!"

"நல்ல விஷயம்தான். இவ்வளவு தெளிவு இருக்கறவ உன்னோட உடம்பைப் பாத்துக்கணும் இல்ல? ஒழுங்கா சாப்பிட்டுத் தூங்கி ஆரோக்கியமா இருக்க வேண்டாமா?"

"என்னம்மா செய்யறது. அவரைப் பிரிஞ்சு இருக்கறதால எனக்குப் பசி எடுக்கறதில்ல, தூக்கம் வரதில்ல."

"நான் கடுமையா சொல்றேன்னு நினைக்காதே. இப்படி எல்லாம் இருந்தா உன் உயிருக்கே ஆபத்தா முடியும்!" என்றாள் மாதவி சலிப்புடன்.

"அம்மா! அவரு லட்சியம் நிறைவேறணும்னு வேண்டிக்கத்தான் கோவிலுக்குப் போறேன். அவரைப் பிரிஞ்சு இருக்கறப்ப எனக்கு எதிலியுமே ஆர்வம் இல்ல. நான் உயிரோட இருக்கறதே அவர் தன் லட்சியத்தை நிறைவேற்றிட்டுத் திரும்பி வரதைப் பாக்கணுங்கறதுக்காகத்தான். அதனால உயிரோட இருக்கறதுக்குத் தேவையானப்ப அப்பப கொஞ்சம் சாப்பிடறேன். கவலைப்படாதே! அவர் திரும்பி வந்ததும் என் உடம்பு கொஞ்ச நாள்ள தேறிடும்!" என்றாள் மணிமேகலை.

"இப்படிப் பைத்தியக்காத்தனமாப் பேசறவகிட்ட என்ன சொல்ல முடியும்?" என்று மகளின் காதில் கேட்கும்படி முணுமுணுத்தாள் மாதவி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 127
அவர்வயின் விதும்பல் (அவரிடம் விரைதல்)
குறள் 1263
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்.

பொருள்:
வெற்றியை விரும்பி ஊக்கமே துணையாகக் கொண்டு வெளிநாட்டுக்குச் சென்ற காதலர், திரும்பி வருதலைக் காண விரும்பியே இன்னும் யான் உயிரோடு இருக்கின்றேன்.

1308. பிரிவுத் துயர்?

"ஏண்டி, நீ என்ன சின்னக் குழந்தையா, புருஷன் ஊருக்குப் போனதை நினைச்சு இவ்வளவு வருத்தப்படற? ஒரு பதினைஞ்சு நாள் புருஷனை விட்டுட்டு இருக்க ம...