"ஒருவேளை, அவ யாரையும் காதலிக்காம இருக்கலாம்!" என்றாள் சாந்தி.
"இல்லையே! நீ யாரையாவது காதலிக்கிறயான்னு கேட்டா, பதில் சொல்லாம சிரிக்கறாளே! காதலன் இல்லைன்னா, இல்லைன்னு சொல்ல வேண்டியதுதானே?"
"நான் ஒரு யோசனை சொல்றேன். நாம எல்லாரும் சேர்ந்து லஞ்ச் சாப்பிடறப்ப, ஒவ்வொத்தரும் நம்மோட காதலரோட நெருக்கமாப் பழகறதைப் பத்தி ஜாலியாப் பேசுவோம். வேணியும் நம்மோட சேர்ந்துதானே சாப்பிடுவா? அவளோட ரியாக்ஷன் என்னன்னு பாக்கலாம்."
"சரி."
"நீ சொன்ன மாதிரி, லஞ்ச் சாப்பிடறப்ப நாம நம்ம காதலர்களைப் பத்தி ஜாலியாப் பேசினோம். வேணி பேசாம கேட்டுக்கிட்டிருந்தாளே ஒழிய, அவகிட்டேந்து எந்த ரியாக்ஷனும் இல்லையே!" என்றாள் உமா.
"நீ கவனிச்ச லட்சணம் அவ்வளவுதான்!" என்றாள் சாந்தி.
"நீ என்னத்தை கவனிச்சியாம்?"
"நான் உங்களோட பேசிக்கிட்டிருந்தப்பவே, வேணியை உன்னிப்பா கவனிச்சுக்கிட்டிருந்தேன். யாராவது ஒத்தர் தன்னோட காதலரைப் பத்தி நெருக்கமான விஷயம் ஏதாவது சொன்னப்பல்லாம், வேணி யாரும் கவனிக்காத அளவுக்கு, அமுக்கமா சிரிச்சுக்கிட்டிருந்தா. நான் உன்னிப்பா கவனிச்சதாலதான் எனக்கு அது தெரிஞ்சது."
"அதனால?"
"அதனால, அவளுக்குக் காதலன் இருக்கான்னு அர்த்தம். அவ சிரிக்கறப்பல்லாம் தன்னோட மனசுக்குள்ள தன் காதலனை நினைச்சு சிரிக்கறான்னு அர்த்தம். அவ தன்னோட காதலை சிரிப்பில ஒளிச்சு வச்சுப் பாக்கறா. எவ்வளவு நாளைக்கு?"
"எவ்வளவு நாளைக்குன்னா? சீக்கிரமே அவ தன்னோட காதலை வெளியில சொல்லிடுவான்னு சொல்ல வரியா?"
"பூ அரும்பா இருக்கும்போது வாசனை வெளியில தெரியாது. அது மலரும்போது வாசனை வெளியில வருதில்ல? அது மாதிரிதான், வேணியோட புன்னகையில மறைஞ்சிருக்கற காதலும் ஒருநாள் வெளியில வரும். நான் இப்ப சொல்றது உண்மைன்னு உனக்கு அப்ப தெரியும்!" என்றாள் சாந்தி.
கற்பியல்
குறிப்பறிவுறுத்தல்
No comments:
Post a Comment