Tuesday, October 31, 2023

1262. தோழியின் யோசனை!

"நான் ஒண்ணு சொல்றேன். கோவிச்சுக்க மாட்டியே?" என்றாள் தமயந்தி.

"உங்கிட்ட நான் என்னிக்குக் கோவிச்சுக்கிட்டிருக்கேன்? அதுவும் என் காதலரைப் பிரிஞ்சு இருக்கற இந்தக் காலத்தில எனக்கு ஆறுதலா இருக்கறது நீ ஒருத்திதான். உங்கிட்ட நான் எப்படிக் கோவிச்சுக்க முடியும்?" என்றாள் யாமினி.

"ஏன்னா, நான் சொல்லப் போறது உன் காதலரைப் பத்தித்தான். அது உனக்குப் பிடிக்காம இருக்கலாம்!"

"என்ன சொல்லப் போற அவரைப் பத்தி? அவர் எப்ப திரும்பி வரப் போறார்ங்கறதைப் பத்தி உனக்கு ஏதாவது தகவல் கிடைச்சிருக்கா என்ன?" என்றாள் யாமினி ஆர்வத்துடன்.

"இல்லை, இல்லை. உனக்குக் கிடைக்காத தகவல் எனக்கு எப்படிக் கிடைக்கும்? அவர்கிட்டேந்து தகவலே வரலைங்கறதுதானே பிரச்னை!" என்ற தமயந்தி, யாமினியின் கையைப் பரிவுடன் பற்றி, "எப்படி இருந்த நீ எப்படி ஆயிட்ட.! குத்து விளக்கு மாதிரி பளிச்னு இருப்பே. இப்ப இரும்புக் கம்பி மாதிரி இருக்க - அவ்வளவு இளைச்சு, கருத்துப் போயிட்ட!  கைவளை எல்லாம் மணிக்கட்டுக்குக் கீழே வந்துடுச்சு, எப்ப வேணும்னாலும் நழுவிக் கீழே விழப் போற மாதிரி!" என்றாள்.

"அதையெல்லாம் விடு. ஏதோ சொல்லப் போறேன்னியே, அதைச் சொல்லு!" என்றாள் யாமினி, தோழியின் பிடியிலிருந்து தன் கையை விடுவித்துக் கொண்டு.

தமயந்தி ஒரு கணம் தயங்கி விட்டு, "உன் காதலர் ரெண்டு மூணு மாசத்தில திரும்பி வந்துடறேன்னு சொல்லிட்டுப் போனாரு. ஆனா ஆறு மாசம் ஆகியும் அவர்கிட்டேந்து எந்தத் தகவலும் இல்லை. நீயானா எப்பவுமே அவரையே நினைச்சு ஏங்கி இளைச்சுக்கிட்டிருக்க. அவரை மறக்க முயற்சி செய்யேன். கஷ்டமாத்தான் இருக்கும். ஆனா அவரோட நினைவை விட்டுட்டா உன் உடம்பு கொஞ்சம் நல்லா இருக்கும், இல்ல?" என்று கூறி விட்டுத் தோழி என்ன சொல்லப் போகிறாளோ என்று பயந்து கொண்டே யாமினியின் முகத்தைப் பார்த்தாள்.

யாமினி பெரிதாகச் சிரித்து விட்டு, "அடி பைத்தியக்காரி! இப்படி ஒரு யோசனையைச் சொல்லத்தான் பயந்தியா? இப்படி ஒரு யோசனையை நான் பெரிசா எடுத்துக்கிட்டாத்தானே உங்கிட்ட கோவிச்சுக்கறதுக்கு? நீ இதை உண்மையாவே சொன்னாலும் நீ அதை விளையாட்டுக்குச் சொன்னதாத்தான் நான் எடுத்துப்பேன்" என்றாள்.

"இல்லை, யாமினி! நான் சொல்றதை நீ யோசிச்சுப் பார்க்கணும்."

"யோசிச்சுப் பார்க்க வேண்டியது நீதான்! ஒருவேளை நீ சொல்றபடி என் காதலரை நான் மறக்க முயற்சி செஞ்சா, என் உடல் இளைச்சு, எங்கிட்ட மீதம் இருக்கிற அழகும் போயிடும்.. என் கையில இருக்கிற வளையல்கள் கீழே விழுந்து உடைஞ்சுடும். நீ என்ன நோக்கத்துக்காக இதைச் சொன்னியோ, அதற்கு எதிரான விளைவுகள்தான் ஏற்படும்!" என்றாள் யாமினி."

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 127
அவர்வயின் விதும்பல் (அவரிடம் விரைதல்)
குறள் 1262
இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து.

பொருள்:
ஒளிரும் நகை அணிந்தவளே! பிரிவுத் துயரிலிருந்து விடுபட, என் காதலரை நான் இன்று மறந்தால் என்னிடம் மீதமுள்ள அழகும் என்னை விட்டு நீங்கி, என் தோளும் (கையும்) வளையல்களை இழக்கும்.
அறத்துப்பால்                                                               பொருட்பால்

Sunday, October 29, 2023

1261. விரல் நுனி தேய்ந்தது!

"அவரு ஊருக்குப் போய் 98 நாள் ஆயிடுச்சுடி!" என்றாள் காஞ்சனை.

"அதுக்கென்ன? நூறாவது நாள் கொண்டாடப் போறியா?" என்றாள் மாலினி.

"கொண்டாடற விஷயமா இது? அவரைப் பிரிஞ்சு நான் எவ்வளவு துடிச்சுக்கிட்டிருக்கேன்னு உனக்குத் தெரியாதா?" என்றாள் காஞ்சனை சற்றே கோபத்துடன்.

"மன்னிச்சுக்கடி, விளையாட்டுக்குச் சொன்னேன். மூணு மாசத்தில வந்துடறேன்னு சொல்லிட்டுப் போனாரு. மூணு மாசம் முடிஞ்சுடுச்சு. அதனால அவர் திரும்பி வர நேரம் வந்துடுச்சுன்னுதானே சொல்ல வரே?"

"ஆமாம்."

"அது சரி. எப்படி 98 நாள்னு சரியாச் சொல்ற?"

"இங்கே வா?" என்று தோழியை உள்ளே அழைத்துச் சென்ற காஞ்சனை அங்கிருந்த சுவற்றைக் காட்டி, "பார்!" என்றாள்.

சுவற்றில் கரிக்கட்டியால் வரிசையாகச் சிறிய கோடுகள் வரையப்பட்டிருந்தன.

"அவர் போன நாளிலேந்து தினம் ஒரு கோடு கிழிச்சுக்கிட்டு வரேன்!"

"நாளை எண்ணிக்கிட்டிருக்கறதுன்னு ஒரு பேச்சுக்கு சொல்லுவாங்க. நீ நிசமாவே நாளை எண்ணிக்கிட்டிருக்கியே!" என்ற மாலினி, கோடுகளை உற்றுப் பார்த்து விட்டு, "ஆமாம். இது என்ன? ஒவ்வொரு கோட்டு மேலயும் பொட்டு வச்ச மாதிரி ஏதோ வட்டக் குறி தெரியுதே, அது என்ன?"

"எனக்குத்தான் கணக்கு சரியா வராதே! அதனால அடிக்கொரு தடவை ஒவ்வொரு கோட்டையும் என் விரல் நுனியால தொட்டு எண்ணிப் பாப்பேன். என் விரல் நுனி படிஞ்ச இடம்தான் அது!" என்றாள் காஞ்சனை.

"உன் கையைக் காட்டு!" என்றபடியே காஞ்சனையின் ஆள்காட்டி விரலை நிமிர்த்திப் பார்த்த மாலினி, "இப்படி இந்தக் கோட்டையெல்லாம் அடிக்கடி தொட்டுத் தொட்டு எண்ணிக்கிட்டிருக்கறதாலதான் உன் விரல் நுனியே தேஞ்சு போன மாதிரி இருக்கு. கவனமா இருடி! தேஞ்சு தேஞ்சு உன் விரலே சின்னதா ஆயிடப் போகுது!" என்றாள் விளையாட்டாக.

அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டே சமையற்கட்டிலிருந்து வெளியே வந்த காஞ்சனையின் தாய், "அதோடயா! பத்து நாளா தினம் நூறு தடவை வாசலுக்குப் போய் அவ புருஷன் வராரான்னு தெருமுனையைப் பார்த்துட்டு வரா! புருஷன் வந்தா வீட்டுக்கு வராம தெருவோடயே நடந்து போயிடுவாரா என்ன?" என்றாள்.

காஞ்சனையின் கண்களைத் தன் கையினால் விரித்துப் பார்த்த மாலினி, "அதான் கண்ணு ரெண்டும் வெளிறிப் போயிருக்கு!" என்றாள்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 127
அவர்வயின் விதும்பல் (அவரிடம் விரைதல்)
குறள் 1261
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.

பொருள்:
வருவார் வருவார் என வழி பார்த்துப் பார்த்து விழிகளும் ஒளியிழந்தன; பிரிந்து சென்றுள்ள நாட்களைச் சுவரில் குறியிட்டு அவற்றைத் தொட்டுத் தொட்டு எண்ணிப் பார்த்து விரல்களும் தேய்ந்தன.
அறத்துப்பால்                                                               பொருட்பால்

1260. ஒரு நாள் கூத்து!

"என்னடி, மறுபடியும் உன் காதலனோட சண்டையா?" என்றாள் அம்பிகா.

"ஆமாம். அவரு வேலைதான் முக்கியம்னு நினைக்கிறாரு. எனக்குக் கொஞ்சம் கூட முக்கியத்துவம் கொடுக்கறதில்லை. அதானால வேலை முக்கியமா, நான் முக்கியமான்னு தீர்மானிச்சுக்கங்கன்னு சொல்லிட்டு வந்துட்டேன்!" என்றாள் சாந்தா.

"வேலை வேண்டாம் நீதான் முக்கியம்னு அவரு வந்துட்டா, கல்யாணத்துக்குப்புறம் சாப்பாட்டுக்கு என்ன செய்வீங்க?"

"வேலை வேண்டாம்னு நான் சொல்லியே! எனக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கன்னுதானே சொல்றேன்?"

"இந்த ஊடல் எத்தனை நாளைக்கோ, பார்க்கலாம்!?"

"அவரு என் வழிக்கு வர வரையில நான் அவர்கிட்ட பேசப் போறதில்லை!" என்றாள் சாந்தா.

"வீட்டுக்குள்ளே வரும்போதே வெண்ணெய் காய்ச்சற மணம் மூக்கைத் துளைக்குதே!" என்று சொல்லிக் கொண்டே வந்தாள் அம்பிகா.

"உள்ளே அம்மா வெண்ணெய் காய்ச்சிக்கிட்டிருக்காங்க" என்ற சாந்தா சற்றுத் தயங்கி விட்டு, "அவரு வராரு இல்ல, அதான்!" என்றாள்.

"அவரு வராரா? நேத்திக்குத்தான் சண்டை போட்டுக்கிட்டீங்க. அதுக்குள்ள சரியாயிடுச்சா? 'ஒருநாள் கூத்துக்கு மீசையை வச்சான்' ங்கற மாதிரி இருக்கு. அப்ப, அவரு உன் வழிக்கு வந்துட்டார்னு சொல்லு!" என்றாள் அம்பிகா சிரித்துக் கொண்டே.

"அப்படிச் சொல்ல முடியாது. ஆனா எங்களுக்குள்ள இப்ப எந்தச் சண்டையும் இல்லை."

"அது எப்படி? நீ சொன்னதை அவரு ஏத்துக்காதபோதே எப்படி நீ சமாதானம் ஆனே, அதுவும் ஒரே நாளில?"

"போடி. ஒத்தரோட நெருங்கிப் பழகினப்புறம் சண்டை போட்டுக்கிட்டுப் பிடிவாதமா இருக்கறதுக்கு என் மனசு என்ன கல்லா?" என்றாள் சாந்தா.

"கல்லு இல்ல. உள்ளே உன் அம்மா நெருப்பில காய்ச்சறாங்களே அந்த வெண்ணெய் மாதிரிதான் உன் மனசு. அதனாலதான் ஊடல்ல உன்னால ஒரு நாள் கூடத் தாக்குப் பிடிக்க முடியல!" என்றபடியே தோழியின் கைகளை ஆதரவுடன் பற்றினாள் அம்பிகா.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 126
நிறையழிதல்
குறள் 1261
நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்.

பொருள்:
நெருப்பிலிட்ட கொழுப்பைப் போல் உருகிடும் நெஞ்சம் உடையவர்கள், கூடிக் களித்த பின் ஊடல் கொண்டு அதில் உறுதியாக இருக்க முடியுமா?

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Saturday, October 28, 2023

1259. வரட்டும், அவர் வரட்டும்!

இன்று அவர் ஊரிலிருந்து வந்து விட்டாராம்! இன்னும் சற்று நேரத்தில் என்னைப் பார்க்க இங்கே வருவதாகச் செய்தி சொல்லி அனுப்பி இருக்கிறார்.

எத்தனை நாட்கள் கழித்து, இல்லை எத்தனை மாதங்கள் கழித்து?

போகும்போது சொல்லி விட்டுப் போனது என்ன? 

'நீ கண்ணிமைக்கும் நேரத்துக்குள் வந்து விடுவேன்!'

இந்த ஆறேழு மாதங்களில் எத்தனை லட்சம் முறை கண் இமைத்திருப்பேன், எத்தனையோ கோடி முறை கூட இருக்கக் கூடும்! 

இதுதான் கண் இமைக்கும் நேரத்துக்குள் வருவதா?

சரி. ஆண்கள் பொருள் ஈட்டக் கடல் கடந்து போவார்கள்தான். திரும்ப வர அதிக நாட்கள் பிடிக்கும் என்ற நிலை ஏற்பட்டிருந்தால் யாரிடமாவது சொல்லி அனுப்பி இருக்கலாமே! 

இந்த ஆறேழு மாதங்களில் அவர் இருந்த இடத்திலிருந்து இந்த ஊருக்கு நான்கைந்து கப்பல்களாவது வந்து போயிருக்குமே! கப்பலில் வந்த மாலுமி, பயணி யாரிடமாவது எனக்கு ஒரு மடல் கொடுத்து அனுப்பி இருக்கலாமே! ஒரு சில பொற்காசுகள் கொடுத்தால் அதை என்னிடம் கொண்டு வந்து தரக் கூடியவர்கள் இருந்திருப்பார்களே!

எல்லாம் ஒரு அலட்சியம். இவள் எங்கே போய் விடப்  போகிறாள் என்ற மதர்ப்பு! எப்போது திரும்பி வந்தாலும் நான் ஓடிப் போய் அவரை அணைத்துக்க் கொள்வேன் என்ற நம்பிக்கை!

அதுதான் நடக்கப் போவதில்லை!

அவர் இங்கு வந்ததும் நான் உள்ளே போய்க் கதவைத் தாள் போட்டுக் கொள்ளப் போகிறேன் - கலிங்கத்துப் போரிலிருந்து சோழ மன்னர் திரும்பி வந்தபோது, மகாராணி அந்தப்புரத்தின் கதவைத் தாளிட்டுக் கொண்டு மன்னரை உள்ளே வர விடாமல் வெளியிலேயே நிறுத்தி வைத்தாராமே, அது போல்! 

கதவைத் திறந்து வெளியே வரும்படி அவர் என்னைக் கெஞ்ச வேண்டும். இத்தனை நாட்கள் என்னைப் பிரிந்து இருந்ததற்காக என்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். நீண்ட நேரம் ஊடலாடி விட்டுத்தான் சமாதானம் அடைந்து அவர் என்னை நெருங்க அனுமதிக்கப் போகிறேன்.

வாயிலில் அரவம் கேட்கிறது. அவர் வந்து விட்டார் போலிருக்கிறது. 

இப்போதே அறைக்குள் போய் விடலமா?

வேண்டாம். அவர் உள்ளே வரட்டும். அவர் என்னைப் பார்த்த பிறகு அறைக்குள் போய்க் கதவைத் தாளிட்டுக் கொள்கிறேன். அப்போதுதான் அவருக்கு என் கோபம் புரியும்.

...................

என்னவோ தெரியவில்லை. அவர் உள்ளே நுழைந்ததுமே ஓடிப் போய் அவரைத் தழுவிக் கொண்டு விட்டேன்,

இவ்வளவு நேரம் சிந்தித்து நான் போட்டிருந்த திட்டத்தை என் நெஞ்சம் முறியடித்து விட்டது!

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 126
நிறையழிதல்
குறள் 1259
புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.

பொருள்:
ஊடல் கொண்டு பிணங்குவோம் என நினைத்துத்தான் சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விடுத்து அவருடன் கூடுவதைக் கண்டு என் பிடிவாதத்தை மறந்து தழுவிக் கொண்டேன்.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Monday, October 23, 2023

1258. கண்ணே, கனியே!

"இங்கே பாருங்க. தொட்டுப் பேசறதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான். அதுவரையிலும் வெறும் வாய்ப் பேச்சு மட்டும்தான்!" என்றாள் சரண்யா. 

"கண்ணே, கனியே, முத்தே அருகே வா!" என்றான் ராஜசேகர்.

"அருகே வரதெல்லாம் கிடையாது. இப்பதானே சொன்னேன்!"

"நான் சும்மா பாட்டுதானே பாடினேன்!"

"அப்புறம்?"

"அப்புறம்னா? தொடர்ந்து பாடணுமா? 
ஒருநாள் இரவு நிலவை எடுத்து உன் உடல் அமைத்தானோ
பலநாள் முயன்று வானவில் கொண்டு நல்வண்ணம் தந்தானோ?"

"போதும், போதும். வர்ணனை ரொம்ப ஓவரா இருக்கு."

"நான் இன்னும் வர்ணிக்கவே ஆரம்பிக்கலியே! பாட்டு மட்டும்தானே பாடினேன்!"

"சரி. வர்ணிங்க பார்க்கலாம்!"

"உன் அழகை வர்ணிக்கறதை விட உன் பண்பையும் அடக்கத்தையும் வர்ணிக்கறதுதான் எனக்குப் பிடிக்கும். இந்தக் காலத்தில இப்படி ஒரு பொண்ணா?..."

ராஜசேகர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.

சில நிமிடங்கள் கழித்து, "விடுங்க. என்ன இது? நான் தொடவே கூடாதுன்னு சொல்லிக்கிட்டிருக்கேன். ஆனா நீங்க என்னன்னா என்னை அணைச்சுக்கிட்டிருக்கீங்க!" என்று ராஜசேகரின் அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயன்றாள் சரண்யா.

"அஞ்ச நிமிஷமா என் அணைப்பில இருக்கே! தெரியுமா உனக்கு?" என்றான் ராஜசேகர் சிரித்தபடி.

"சரியான திருடர் நீங்க. என்னென்னவோ பேசி என்னோட நாணத்தையே விட வச்சுட்டீங்களே!" என்று பொய்க் கோபத்துடன்அவன் மார்பில் தன் கைகளால் மென்மையாகக் குத்தினாள் சரண்யா.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 126
நிறையழிதல்
குறள் 1258
பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை.

பொருள்:
நம்முடைய பெண்மையாகிய அரணை அழிக்கும் படையாக இருப்பது, பல மாயங்களில் வல்ல, கள்வனான காதலருடைய பணிவுடைய மொழி அன்றோ?

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Sunday, October 22, 2023

1257. கனவல்ல நிஜம்!

அமரா கட்டிலில் அமர்ந்திருந்தாள். அருகில் வந்த சந்திரன் தன் கையால் அவள் முகத்தை நிமிர்த்தினான்.

"என்ன வெக்கமா?" என்றான்.

"பொண்ணுன்னா வெக்கம் இருக்காதா பின்னே?" என்றாள் அமரா.

அமராவைத் தன் இரு கைகளாலும் அணைத்துக் கொண்டான் சந்திரன் அதற்குப் பிறகு...

சட்டென்று கண் விழித்தாள் அமரா.

'நல்லவேளை கனவுதான்' என்ற ஆறுதலான எண்ணம் முதலில் தோன்றினாலும், 'கனவுதான் என்றாலும் இப்படியா?' என்ற கண்டனக் குரல் மனதில் எழுந்தது.

'ஒருவேளை இதையெல்லாம் நான் விரும்புகிறேனோ? அதனால்தான் கனவில் இப்படி வந்ததோ?

மரா கட்டிலில் அமர்ந்திருந்தாள். அருகில் வந்த சந்திரன் தன் கையால் அவள் முகத்தை நிமிர்த்தினான்.

"என்ன வெக்கமா?" என்றான்.

"பொண்ணுன்னா வெக்கம் இருக்காதா பின்னே?" என்றாள் அமரா.

அமராவைத் தன் இரு கைகளாலும் அணைத்துக் கொண்டான் சந்திரன் அதற்குப் பிறகு...

"என்ன சந்திரன் இது? இப்படியெல்லாம்..." என்றாள் அமரா.

"ஏன்? இத்தனை நேரம் பேசாமதானே இருந்தே! உனக்குப் பிடிச்ச மாதிரிதானே நடந்துக்கிட்டேன்?" என்றான் சந்திரன்.

ஒரு கணம் கண்களை மூடிக் கொண்டாள் அமரா.

'அன்று கனவில் நடந்த நிகழ்வுகளைக் கனவுதானே என்று நினைத்து என்னைச் சமாதானப்படுத்திக் கொண்டேன். இன்று அதே நிகழ்வுகள் நிஜமாக நிகழ நான் எப்படி அனுமதித்தேன்? எனக்கு விருப்பமானபடி சந்திரன் நடந்து கொண்டான் என்பதால் நாணம் என்ற குணம் எனக்கு இயல்பாக இருப்பதையே நான் அறியாமல் இருந்து விட்டேனோ?' என்ற சிந்தனை அவள் மனதில் ஓடியது. 

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 126
நிறையழிதல்
குறள் 1257
நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்.

பொருள்:
நமது அன்புக்குரியவர் நம்மீது கொண்ட காதலால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்யும்போது, நாணம் எனும் ஒரு பண்பு இருப்பதையே நாம் அறிவதில்லை.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

1256. பம்பாய்க்கு ஒரு பயணம்

பவானியின் காதலன் ராகேஷ் தனக்கு பம்பாயில் ஒரு நல்ல வேலை கிடைத்திருப்பதாகவும், அங்கே போன பிறகு தன் விலாசத்தைத் தெரிவித்து அவளுக்குக் கடிதம் எழுதுவதாகவும் சொல்லி விட்டு அவளிடமிருந்து விடைபெற்றுப் போனான்.

ஆனால் மூன்று மாதங்களாகியும் அவனிடமிருந்து எந்தக் கடிதமும் வராததால் பம்பாய்க்குச் சென்று அவனைப் பார்ப்பது என்று முடிவு செய்தாள் பவானி.

 தன் முடிவைத் தன் தோழி வசந்தாவிடம் கூறினாள் பவானி.

 "என்னது பம்பாய்க்குப் போகப் போறியா?" என்றாள் வசந்தா.

"ஆமாம். அவர் அங்கேதானே இருக்காரு?" 

"இங்கே பாரு, பவானி. நீங்க ரெண்டு பேரும் காதலிச்சீங்க. அவர் திடீர்னு பம்பாயில தனக்கு ஒரு வேலை கிடைச்சதா உங்கிட்ட சொல்லிட்டுப் போனாரு. போய் மூணு மாசம் ஆச்சு. உனக்கு ஒரு போஸ்ட் கார்டு கூடப் போடலை. அவர் பம்பாயில வேலை கிடைச்சதா அவர் சொன்னதே பொய்யா இருக்கலாம். உங்கிட்டேந்து விலகிப் போறதுக்காக அப்படி ஒரு பொய்யை அவர் சொல்லி இருக்கலாம். அவர் இந்த ஊர்லேயே கூட இருக்கலாம். சாரி. என் மனசில பட்டதை வெளிப்படையா சொல்லிட்டேன்" என்றாள் வசந்தா.

"இல்லை வசந்தா. அவரு அப்பாயின்ட்மென்ட் லெட்டரை எங்கிட்ட காட்டினாரு. கம்பெனி பேரு எனக்குத் தெரியும். டைரக்டரி என்கொயரிக்கு ஃபோன் பண்ணி பம்பாயில அந்த கம்பெனியோட அட்ரஸை வாங்கிட்டேன். அந்த அட்ரசுக்குப் போய்ப் பார்க்கப் போறேன். அவரு அங்கே இருந்தா, அவர்கிட்ட ரெண்டுல ஒண்ணு கேட்டுட்டு வரப் போறேன். அப்படி அவர் அங்கே இல்லேன்னா எல்லாம் முடிஞ்சுடுச்சுன்னு புரிஞ்சுப்பேன்" என்றாள் பவானி.

"உன் அம்மாகிட்ட என்ன சொல்லப் போற?"

"ஒரு தோழியோட கல்யாணத்துக்கு, உன்னோட பம்பாய்க்குப் போகப் போறதா சொல்லப் போறேன்!"

"அடிப்பாவி! என்னையும் இதில இழுத்து விடப் போறியா?"

"ஆமாம். நான் போயிட்டுத் திரும்பி வர வரைக்கும் என் அம்மா கண்ணில பட்டுடாதே!"

"உன்னை மாதிரி ஒரு சாதுவான பொண்ணை இந்த அளவுக்குச் செயல்பட வைக்குதுன்னா உன் காதல் ரொம்ப சக்தி வய்ந்ததுன்னுதான் தோணுது!" என்றாள் வசந்தா.

"சக்தி வாய்ந்த்தோ என்னவோ, ரொம்பக் கொடியது. இல்லேன்னா என்னை விட்டுட்டுப் போனவரைத் தேடி ஓடச் சொல்லி என்னை விரட்டுமா?" என்றாள் பவானி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 126
நிறையழிதல்
குறள் 1256
செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்.

பொருள்:
என்னைப் பிரிந்து சென்றவர் பின்னே நான் போய்ச் சேர வேண்டும் என்று என்னைப் பிடித்த இந்தக் காதல் நோய் தூண்டுவதால் இது மிக மிகக் கொடியது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Saturday, October 21, 2023

1255. காதலன் வருவான்?

"ஊருக்குப் போயிட்டு வரேன்னு சொல்லி ஆறு மாசமாச்சு. இன்னுமா திரும்பி வராம இருப்பான்? அவன் கம்பெனியில போயி விசாரிச்சுப் பார்த்தியா?" என்றாள் மரகதம்.

"ஒரு கம்பெனியில சேல்ஸ் எக்சிக்யூடிவா இருக்கேன்னு சொன்னாரு. கம்பெனி பேரு சொல்லலியே!" என்றாள் மஞ்சுளா.

"ஏண்டி, எந்த கம்பெனியில வேலை செய்யறான்னு கூடத் தெரிஞ்சுக்காமயா ஒத்தனைக் காதலிப்பே?"

"இல்லைம்மா. இப்ப இருக்கறது ஒரு சின்ன கம்பெனி. சீக்கிரமே ஒரு பெரிய கம்பெனியில வேலைக்குச் சேரப் போறேன். அங்கே சேர்ந்தப்புறம் அந்த கம்பெனி பேரைச் சொல்றேன்னு சொன்னார் அம்மா!"

"அம்மா! இன்னிக்கு அவரை பஸ் ஸ்டாப்ல பார்த்தேன்!" என்றாள் மஞ்சுளா.

"பார்த்தியா? நல்ல வேளை. நான் கும்பிடற கடவுள் என்னைக் கை விடல" என்றாள் மரகதம் கைகளைக் கூப்பியபடி.

"இல்லைம்மா. அவர் என்னைப் பார்த்ததும் அவசரமா ஏதோ ஒரு பஸ்ஸில ஏறிப் போயிட்டாரு."

"அடப்பாவி! அப்ப இத்தனை நாளா வேணும்னுதான் உன்னோட தொடர்பு கொள்ளாம இருந்திருக்கான். உன்னை நல்லா ஏமாத்திட்டானே! இனிமேயாவது அவனை மறந்துட்டு  உன் வாழ்க்கையைச் சரி பண்ணிக்க."

"ஏண்டி மஞ்சுளா, அவன் உன்னை ஏமாத்திட்டான்னு தெரிஞ்சு ஒரு வருஷம் ஆகப் போகுது. ஆனா நீ அவன் மறுபடி உன் கண்ல பட மாட்டானான்னு தேடி அலைஞ்சுக்கிட்டிருக்க. எப்பவும் அவன் நினைவாகவே இருக்க. வேற யரையாவது கல்யாணம் செஞ்சுக்கன்னாலும் கேக்க மாட்டேங்கற. சரியா சாப்பிடறதில்ல, தூங்கறதில்ல. உடம்பு வீணாப் போச்சு. உன்னை ஒத்தன் ஏமாத்திட்டான்னா, அவனை மறந்துட்டு இன்னொருத்தரைக் கல்யாணம் செஞ்சுக்கறதுதானே ஒரு தன்மானம் உள்ள பொண்ணு செய்ய வேண்டியது? இன்னும் எத்தனை நாளைக்கு அவன் மறுபடி உங்கிட்ட திரும்பி வர மாட்டானான்னு ஏங்கிக்கிட்டு இருக்கப் போற?" என்றாள் மரகதம்.

"என்னால அப்படி இருக்க முடியலையே அம்மா!" என்ற மஞ்சுளா, 'என்னைப் பீடித்திருக்கும் காதல் நோய் என்னைத் தன்மானத்தோட நடந்துக்க விடலையோ என்னவோ!' என்று நினைத்துக் கொண்டாள்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 126
நிறையழிதல்
குறள் 1255
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று.

பொருள்:
தம்மை வெறுத்து நீங்கியவரின் பின் செல்லாமல் மானத்தோடு நிற்கும் பெருந்தகைமை, காமநோய் உற்றவர் அறியும் தன்மையது அன்று.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Friday, October 20, 2023

1254. யாரிடமும் சொல்லாதே!

"இங்கே பார், நந்தினி! நீ என் உயிர்த்தோழிங்கறதாலதான் உங்கிட்ட என் காதலைப் பத்திச் சொன்னேன். நீ இதை யார்கிட்டேயும் சொல்லக் கூடாது" என்றாள் வேகவதி.

"நான் சொல்ல மாட்டேன்!" என்று சொல்லி நந்தினி சிரித்தபோது, 'நான்' என்ற வார்த்தைக்கு அவள் அதிகம் அழுத்தம் கொடுத்தது போல் வேகவதிக்குத் தோன்றியது.

னகவல்லி என்ற தோழியின் திருமணத்துக்கு வேகவதி சென்றிருந்தாள். அவளுடைய தோழிகள் சிலரும் வந்திருந்தனர்.

மணப்பெண்ணின் தோழிகள் என்ற உரிமையிலும், பொறுப்பிலும் வேகவதியும், அவள் தோழிகள் சிலரும் கல்யாண வேலைகளில் உதவினர்.

வேகவதி உணவு பரிமாறுவதில் உதவினாள்.

திருமணம் முடிந்ததும் மாலையில் வேகவதி தன் தோழிகளுடன் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தாள்.

"என்ன வேகவதி, நீ உணவு பரிமாறினதில எல்லாருக்கும் ரொம்ப திருப்தியாம். 'அந்தப் பொண்ணு எப்படி ஓடியாடி வெவ்வேறு உணவுவகைகளை எடுத்துக்கிட்டு வந்து எல்லாருக்கும் பரிமாறினா!' ன்னு கல்யாணத்துக்கு வந்திருந்த பல பேரும் பாராட்டினதை நான் கேட்டேன்!" என்றாள் ஒரு தோழி.

"ஏதோ என்னால முடிஞ்சதைச் செஞ்சேன்!" என்றாள் வேகவதி சங்கடத்துடன்.

"ஆமாம், கல்யாணத்துக்கு உன்னோட ஆள் வந்திருந்தாரு போல இருக்கே!" என்றாள் வாருணி என்ற தோழி குறும்பாகச் சிரித்தபடி.

"யாரு? அப்படி யாரும் இல்லையே!" என்றாள் வேகவதி திடுக்கிட்டு. உடனே கடைக்கண்ணால் நந்தினியைப் பார்த்தாள். நந்தினி தான் சொல்லவில்லை என்பது போல் தலையை மெல்ல ஆட்டினாள்.

"வீரகுமாரன்தான்! அவர்தானே உன்னோட ஆளு?" என்றாள் வாருணி.

"சேச்சே! அப்படியெல்லாம் எதுவும் இல்லை" என்றாள் வேகவதி.

"எங்ககிட்ட வேணும்னா நீ இல்லைன்னு சொல்லலாம். ஆனா நீ அவருக்கு விழுந்து விழுந்து பரிமாறினதைப் பார்த்துக்கிட்டிருந்த எல்லாருக்கும் இது தெரிஞ்சுடுச்சே! அதுவும் நீ அவருக்கு மூணாவது தடவையா பாயசம் போடப் போனப்ப, 'எங்களுக்கெல்லாம் கொஞ்சம் மிச்சம் வைம்மா! இன்னும் சில பேரு வேற சாப்பிட வேண்டி இருக்கு!' ன்னு ஒத்தர் சொல்ல அதைக் கேட்டு எல்லாரும் பெரிசாச் சிரிச்சாங்களே! நீ பெரிய அழுத்தக்காரிதான். ஆனா உன்னோட காதல் உன்னை அறியாமலேயே எல்லார் முன்னாலேயும் வெளிப்பட்டுடுச்சே!" என்று வாருணி சொல்லிச் சிரிக்க, மற்ற தோழிகளும் அவள் சிரிப்பில் சேர்ந்து கொண்டனர்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 126
நிறையழிதல்
குறள் 1254
நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும்.

பொருள்:
மன உறுதி கொண்டவள் நான் என்பதே என் நம்பிக்கை; ஆனால் என் காதல், நான் மறைப்பதையும் மீறிக் கொண்டு மன்றத்திலேயே வெளிப்பட்டு விடுகிறதே.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Thursday, October 19, 2023

1253. படித்துறைப் பேச்சு

தண்ணீர் எடுத்து வர ஆற்றுக்குச் சென்ற பொன்னியும் அவள் தோழிகளும் ஆற்றின் படித்துறையில்  குடங்களை வைத்து விட்டுச் சற்று நேரம்  அங்கே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

பேச்சு அந்த ஊர் இளைஞர்களைப் பற்றித் திரும்பியது.

"இந்த இளமாறன் இருக்கானே, அவன் பெண்களைப் பார்த்தா உடனே உதவி செய்ய ஓடி வருவான். ஏன் தெரியுமா?"

"ஏன்?"

"அப்படியாவது எந்தப் பெண்ணாவது தன்னைக் காதலிக்க மாட்டாளாங்கற நைப்பாசைதான்!"

அனைவரும் கொல்லென்று சிரித்தனர்.

இது போல் வேறு சில இளைஞர்களைப் பற்றியும் அவர்கள் கேலியாகப் பேசிச் சிரித்தனர்.

"இந்த முத்து இருக்கான் இல்ல? அவனைப் பார்த்தா ரொம்பப் பரிதாபமா இருக்கு!" என்றாள் சாரதா.

"ஏன்?"

"பாவம் அவனை எந்தப் பெண்ணும் ஏறெடுத்துப் பாக்கல போலருக்கு. அன்னிக்குப் பாக்கறேன். ஒரு கொடிக்குப் பக்கத்தில நின்னு அதோட பேசிக்கிட்டிருக்கான்!"

"அடப்பாவமே! அவ்வளவு மோசமாப் போச்சா அவன் நிலைமை? பொதுவாப் பெண்களைக் கொடி மாதிரின்னு சொல்லுவாங்க. அவன் கொடியையே பெண்ணா நினைச்சு அதுகிட்ட காதல் மொழி பேசிக்கிட்டிருக்கான் போல இருக்கு!"

"தெரியாம பேசாதீங்கடி. அவர் ஒண்ணும் கொடியோட பேசல. அந்தக் கொடிக்குப் பின்னால நின்னுக்கிட்டிருந்த என்னோடதான் பேசிக்கிட்டிருந்தாரு!" என்று வெடித்தாள் பொன்னி.

"அடி கள்ளி, அதானா? நான் கூடக் கொடிக்குப் பின்னால ஏதோ அசையற மாதிரி இருக்கேன்னு நினைச்சேன்!" என்று சாரதா சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஒரு தோழி ஒரு பெரிய தும்மல் போட்டாள்.

"ஏண்டி தும்மற?"

"தும்மலை அடக்க முடியுமா?" என்றாள் தும்மல் போட்டவள்.

'அவளால் தும்மலை அடக்க முடியாமல் அது அவளிடமிருந்து வெளிப்பட்டது போல்தான் நான் கூட இத்தனை நாட்களாக மறைத்து வைத்திருந்த காதலை என்னை அறியாமலே வெளிப்படுத்தி விட்டேனோ!' என்று நினைத்துத் தன்னை நொந்து கொண்டாள் பொன்னி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 126
நிறையழிதல்
குறள் 1253
மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்.

பொருள்:
என் காதல் ஆசையை நான் மறைக்கவே எண்ணுவேன்; ஆனால், அது எனக்கும் தெரியாமல் தும்மலைப் போல் வெளிப்பட்டு விடுகிறது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Wednesday, October 18, 2023

1252. இரக்கம் இல்லாதவர்கள்!

"ஏண்டி, இன்னிக்கு வயல் வேலை முடிஞ்சு வர இவ்வளவு நேரமாயிடுச்சு?" என்றாள் சிவகாமி.

"என்ன செய்யறது? முழுசாக் களை எடுத்துட்டுத்தான் போகணும்னுட்டாரு பண்ணை மேலாளர். களை எடுக்கற வேலைதானே, மீதியை நாளைக்குச் செய்யறோம்னா கேக்க மாட்டேன்னுட்டாரு. நாங்க அஞ்சாறு பொம்பளைங்க பசியோட இருட்டுற வரை வயல்ல வேலை செஞ்சுட்டு வரோம். பொம்பளைங்களாச்சே, அவங்களை இவ்வளவு வேலை வாங்கறோமேங்கற எண்ணமோ, அவங்க வீட்டுக்குப் போயி எல்லாருக்கும் சோறாக்கணுமே, குழந்தைங்க பசியோட  இருப்பாங்களேங்கற கரிசனமோ கிடையாது. கொஞ்சம் கூட இரக்கம் இல்லாத மனுஷன்" என்று பொரிந்து தள்ளினாள் அவள் தோழி வள்ளி.

"சில பேரு அப்படித்தான் இரக்கம் இல்லாம இருப்பாங்க!"

"நீ வசதியான வீட்டுப் பொண்ணு. நீ என்னிக்கு வயல் வேலைக்குப் போயிருக்க? ரொம்ப அனுபவப்பட்டவ மாதிரி பேசற!"

"வயல் வேலைக்குப் போனாதான் இதெல்லாம் தெரியணுமா என்ன? உன்னை இருட்டினப்பறம் கூட வேலை வாங்கின மனுஷரை இரக்கம் இல்லாதவர்னு சொல்ற. நடுராத்திரின்னு கூடப் பார்க்காம நம்மைக் கஷ்டப்படுத்தறவங்க இருக்காங்க!"

"அது யாருடி நடுராத்திரியில வந்து கஷ்டப்படுத்தறது? கனவில வந்து கஷ்டப்படுத்தறவங்களைச் சொல்றியா?" என்றாள் வள்ளி சிரித்தபடி.

'தூங்கினால்தானே கனவு வரும்? தூக்கமே வர விடாமல் நள்ளிரவில் கூட என் மனதில் புகுந்து கொண்டு கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் என்னை வாட்டி எடுக்கும் காம வேட்கையைப் பற்றி என்னால் உன்னிடம் எப்படிச் சொல்ல முடியும்?' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட சிவகாமி, "ஆமாம்" என்று சொல்லிச் சமாளித்தாள்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 126
நிறையழிதல்
குறள் 1252
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்.

பொருள்:
காதல் வேட்கை எனப்படும் ஒன்று இரக்கமே இல்லாதது; ஏனெனில் அது என் நெஞ்சில் நள்ளிரவிலும் ஆதிக்கம் செலுத்தி அலைக்கழிக்கிறது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Tuesday, October 17, 2023

1251.கதவைப் பிளந்த கோடரி!

நடந்ததை நினைத்து காதம்பரிக்கு இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை.

குருநாதன் மீது அவளுக்குச் சிறிது காலமாகவே காதல் இருந்தது உண்மைதான். 

குருநாதனைப் பார்த்தபோதெல்லாம் அவள் மனதுக்குள் ஏற்பட்ட புளகாங்கிதமும், உடலில் ஏற்பட்ட சிலிர்ப்பும் அந்தக் காதலை உறுதி செய்வதாகவே இருந்தன,

காதம்பரியைப் பார்த்தபோதெல்லாம் குருநாதனின் முகத்தில் ஏற்பட்ட மலர்ச்சியும், அவன் உடலில் தெரிந்த பரபரப்பும் குருநாதனுமத்ததன் மீது காதல் கொண்டிருப்பது காதம்பரிக்குப் புரிந்தது.

ஆயினும் காதம்பரி குருநாதனை நேரில் சந்திப்பதைத் தவிர்த்தே வந்தாள். அப்படியே சந்திக்க நேர்ந்தாலும் சட்டென்று விலகிப் போய் விடுவாள்.

தன் காதலைக் கட்டுப்படுத்திக் கொண்டு பெண்மைக்கு உரிய நாணத்தைப் பாதுகாக்கும் விதத்தில் தான் நடந்து கொண்டது காதம்பரிக்குச் சற்றுப் பெருமையாகக் கூட இருந்தது.

அப்படி இருக்கையில்தான், நேற்று அந்தச் சம்பவம் நிகழ்ந்து விட்டது.

ஒரு தனிமையான இடத்தில் இருவரும் தற்செயலாகச் சந்தித்தபோது, காதம்பரியின் கரத்தைப் பற்றிய குருநாதன், "என்ன காதம்பரி, எப்போது என்னைப் பார்த்தாலும் ஏன் ஓட்டமெடுக்கிறாய்? உனக்கு என் மீது விருப்பம் இல்லையா?" என்று கேட்டான்.

அப்போதே தன் கையை விடுவித்துக் கொண்டு அவள் விலகி இருக்க வேண்டும். ஆனால் அவள் அப்படிச் செய்யாமல் தலைகுனிந்தபடி அமைதியாக நின்றது குருநாதனுக்கு இன்னும் சற்றுத் துணிவைக் கொடுதிருக்க வேண்டும்!

சட்டென்று காதம்பரியை இறுகத் தழுவிக் கொண்டு விட்டான்.

ஆனால் அப்போதும் காதம்பரி தன்னை விடுவித்துக் கொள்ளவில்லை. சில விநாடிகளுக்குப் பிறகு அவனேதான் அவளைத் தன் அணைப்பிலிருந்து விடுவித்தான். அதற்குப் பிறகுதான் காதம்பரி சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி வந்தாள்.

'இப்படி ஒரு சம்பவம் நிகழ எப்படி அனுமதித்தேன்? எனக்குத் துணையாக நின்று என்னைப் பாதுகாக்க வேண்டிய நாணம் எங்கே போயிற்று?'

இந்தக் கேள்வி திரும்பத் திரும்ப காதம்பரியின் மனதில் எழுந்து அவளைக் குற்ற உணர்வுக்கு ஆளாக்கியது.

"ஒரே அடிதான். கதவு உடைஞ்சு விழுந்திடுச்சு!" என்று சொல்லிக் கொண்டே வந்தாள் காரம்பரியின் தாய்.

"என்ன ஆச்சு? எந்தக் கதவு உடைஞ்சது?" என்றாள் காதம்பரி ஏதும் புரியாமல்.

"எதிர்த்த வீட்டுக் கனகவல்லி  வீட்டிலேந்து வாசலுக்கு வந்தப்ப, அவளோட ரெண்டு வயசுக் குழந்தை உள்ளே இருந்துக்கிட்டுக் கதவைத் தாழ்ப்பாள் போட்டுடுச்சு. குழந்தையால தாழ்ப்பாளைத் திறக்க முடியல. உள்ளே இருந்துக்கிட்டு பயந்து அழ ஆரம்பிச்சுடுச்சு. கனகவல்லிக்கு என்ன செய்யறதுன்னு தெரியல. அவ புருஷன் வேற ஊர்ல இல்ல."

"அப்புறம்?"

"யாரோ போய் விறகுக்கடையிலேந்து கோடாலியை எடுத்துக்கிட்டு வந்து கதவு மேல ஒரு போடு போட்டாங்க. அவ்வளவுதான் கதவு உடைஞ்சு விழுந்துடுச்சு. பாவம், அவங்க புதுசாக் கதவு போடணும்!"

'ஓ, என் நாணத்தையும் மீறிக் காதலன் அணைப்புக்குள் நான் போனதும் இப்படித்தானோ? நாணம் என்ற தாழ்ப்பாள் பொருத்தப்பட்ட என் மன உறுதி என்ற கதவு, காமம் என்ற கோடரியில்தான் பிளக்கப்பட்டதோ!' என்று நினைத்துக் கொண்டாள் காதம்பரி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 126
நிறையழிதல்
குறள் 1251
காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.

பொருள்:
நாணம் என்னும் தாழ்ப்பாள் பொருந்திய நிறை என்ற கதவை காமம் என்ற கோடாலி உடைத்து விடுகிறதே.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

1250. உடல் இளைக்கக் காரணம்

காந்திமதியை மருத்துவிடம் அழைத்துச் சென்றாள் அவள் தாய் உலகநாயகி.

"கொஞ்சநாளா மெலிஞ்சுக்கிட்டே வரா ஐயா! நானும் சத்துள்ள உணவெல்லாம் கொடுத்துப் பாக்கறேன். ஆனா ஒரு முன்னேற்றமும் இல்லை!" என்றாள் உலகநாயகி  மருத்துவரிடம்.

காந்திமதியைப் பரிசீலித்துப் பார்த்த மருத்துவர், "வயித்தில கட்டி இருக்கும்னு நினைக்கறேன். அதனாலதான் சாப்பிடற உணவு எதுவும் உடம்பில ஒட்ட மாட்டேங்குது. சாப்பிடற சாப்பாட்டை எல்லாம் கட்டி உறிஞ்சிக்குது. கட்டியைக் கரைக்க சூரணம் தரேன். ரெண்டு மூணு மாசத்தில கட்டி கரைஞ்சுடும்" என்றார் மருத்துவர்.

ரவில் காந்திமதி தனிமையில் இருந்தபோது தன் நெஞ்சுடன் உரையாடினாள்:

'வயிற்றில் இருக்கும் கட்டியினால்தான் நான் மெலிந்து வருவாக மருத்துவர் சொல்கிறார். அவருக்குத் தெரிந்தது அவ்வளவுதான். உனக்கும் எனக்கும்தானே உண்மை தெரியும்!

'காதலர் நம்மைப் பிரிந்து வெளியூர் சென்றதிலிருந்து அவரை நெஞ்சிலேயே நிறுத்தி அவர் பிரிவை நினைத்து வருந்துவதால்தான் என் உடல் இளைத்துக் கொண்டே வருகிறது. அம்மா எனக்குக் கொடுக்கும் சத்துள்ள உணவுகளை உறிஞ்சுவது என் வயிற்றில் உள்ள கட்டி அல்ல, நெஞ்சில் உள்ள அந்தக் கல்மனம் கொண்டவர்தான்.

'நம் மீது இரக்கம் இல்லாமல், நம்மைப் பற்றிய நினைவில்லாமல் நம்மைக் கைவிட்டு விட்ட அவரைக் கைவிடாமல் அவரை நாம் இன்னும் நெஞ்சில் வைத்துப் போற்றி வருகிறோம். அவர் நினைவை நெஞ்சை விட்டு நாம் அகற்றாதவரை என் உடல் இளைப்பது நிற்கப் போவதில்லை.

'ஒருவேளை சில மாதங்களுக்குப் பிறகு அவர் திரும்பி வந்து விட்டால் ஒரு வேடிக்கை நிகழும். அப்போது என் உடல் மெலிவது நின்று விடும். தான் கொடுத்த சூரணத்தால் வயிற்றில் உள்ள கட்டி கரைந்ததால்தான் என் உடல் மெலிந்து வருவது நின்றது என்று மருத்துவர் நினைத்துப் பெருமைப்பட்டுக் கொள்வார்.'

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 125
நெஞ்சொடு கிளத்தல்
குறள் 1250
துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின்.

பொருள்:
நம்மோடு பொருந்தி இருக்காமல் கைவிட்டுச சென்ற காதலரை நெஞ்சில் வைத்திருப்பதால் இன்னும் மெலிந்து அழகை இழந்து வருகின்றோம்.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Monday, October 16, 2023

1249. இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி...

சுரபி கோவிலுக்குச் சென்றிருந்தாள். கடவுளை தரிசித்து விட்டு வெளியே வந்து கொண்டிருந்தபோது, கோவில் மண்டபத்தில் ஒருவர் ஆன்மீகச் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார்.

"இங்கே பாருங்கள், எத்தனை பேர் சந்நிதிக்குள் போய் விட்டு வருகிறார்கள்? அவர்கள் கடவுளை தரிசித்து விட்டா வருகிறார்கள்? இல்லை. அங்கே கடவுள் இருக்கிறாரா என்று பார்த்து விட்டு வருகிறார்கள்! அவர்கள் கடவுளை தரிசித்திருந்தால், அங்கிருந்து வெளியே வருவார்களா என்ன?

"நாளை இன்னொரு கோவிலுக்குப் போய் அங்கே தேடுவார்கள். அல்லது இந்தக் கோவிலுக்கே திரும்பவும் வந்து தேடுவார்கள். தங்கள் வீட்டு பூஜை அறையில் தேடுவார்கள். வீட்டில் கண்ணாடிச் சட்டம் போட்டு மாட்டி வைத்திருக்கும் கடவுளின் படத்தில் தேடுவார்கள்..."

'என்ன இது, கோவிலில் வந்து நாத்திகரைப் போல் பேசுகிறாரே!' என்று நினைத்த சுரபி அவர் அடுத்து என்ன சொல்லப் போகிறார் என்று ஆவலுடன் கவனித்தாள்.

"கடவுள் எங்கே இருக்கிறாரோ, அங்கே தேட வேண்டும். அதை விட்டு மற்ற இடங்களில் தேடினால் அவர் எப்படி உங்களுக்குக் காட்சி அளிப்பார்? கடவுள் எங்கே இருக்கிறார் தெரியுமா? எல்லோரும் உங்கள் நெஞ்சைத் தொட்டுப் பாருங்கள். டிக் டிக்கென்று துடிக்கிறது அல்லவா? அது உங்கள் நெஞ்சத்தில் கடவுள் எப்போதுமே குடிஇருக்கிறார் என்பதைக் காட்டும் துடிப்புதான்! ஆமாம் கடவுள் இருப்பது உங்கள் நெஞ்சத்தில்தான்."

இதைக் கேட்டதும் ஏதோ பொறி தட்டியது போல் அங்கிருந்து கிளம்பினாள் சுரபி.

வீட்டுக்குச் செல்லும் வழியில் அவள் சிந்தனை இவ்வாறு ஓடியது.

'சில வாரங்களுக்கு முன் இதே கோவில் வாசலில் அந்த இளைஞரைப் பார்த்தேன். அவரைக் கண்ட மாத்திரத்திலேயே அவர் என் கண்கள் வழியே என் இதயத்துக்குள் புகுந்து அங்கேயே நிரந்தரமாகக் குடியேறி விட்டார்!

'இதை உணராமல் அவரை மீண்டும் சந்திக்க முடியுமா என்று ஊரில் இருக்கும் பல இடங்களுக்கும் சென்று பார்த்து வருகிறேன். இன்று இந்தக் கோவிலுக்கு வந்தது கூட அந்த நோக்கத்தில்தான்! கடவுளை வணங்குவது என்பது நானே கற்பித்துக் கொண்ட ஒரு காரணம்தானே!

'அந்த ஆன்மீகச் சொற்பொழிவாளர் பேச்சைக் கேட்டதும்தான் எனக்கு உண்மை விளங்குகிறது. உள்ளத்தில் குடி இருப்பவரை ஊரெல்லாம் தேடுவது என்ன அறியாமை! என் உள்ளத்தில் அவர் குடி இருப்பதை உணர்ந்து எப்போதும் அவரை நினைத்துக் கொண்டிருந்தால் அவர் என் கண் முன்னால் வந்து நிற்க மாட்டாரா என்ன?

"ஏ, நெஞ்சமே! அவர் உனக்குள்தானே இருக்கிறார்? அதை உணராமல், வெளியே பல இடங்களிலும் அவரைத் தேடி அலையும்படி என்னைப் பணித்துக் கொண்டிருக்கிறாயா!'

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 125
நெஞ்சொடு கிளத்தல்
குறள் 1249
உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு.

பொருள்:
உள்ளத்திலேயே காதலர் குடிகொண்டிருக்கும்போது, நெஞ்சமே! நீ அவரை நினைத்து வெளியே எவரிடம் தேடி அலைகிறாய்?.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Sunday, October 15, 2023

1248. போய் வா நெஞ்சே, போய்வா!

நான் எவ்வளவோ தடுத்தும் நீ ஒரு நீண்ட தூரப் பயணத்தை மேற்கொள்ளத் தீர்மானித்து விட்டாய்.

உனக்கு அவர் இருக்கும் இடமே தெரியாது, கடல்தாண்டிச் செல்தாகச் சொன்னாரே தவிர, குறிப்பாக எந்த ஊருக்குப் போகப் போகிறார் என்று சொல்லவில்லை. 

அவர் இங்கிருந்து கிளம்பியபோது அது அவருக்கே தெரியாது. நீ எப்படி அவரைத் தேடிக் கண்டுபிடிக்கப் போகிறாய் என்றே தெரியவில்லை.

அப்படியே அவர் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்தாலும் என்ன பயன்?

பிரிவு என்னும் பெரும் துயரத்தை அளித்து விட்டுப் போனவர், அந்தத் துயரைப் போக்கும் வகையில் திரும்பி வந்து அன்பு செலுத்தவில்லையே என்ற உன் ஏக்கம் நியாயமானதுதான்.

அதற்காக அவரைப் பின் தொடர்ந்து போவதால் என்ன பயன்? உன் துன்பத்தை உணர்ந்து உன் மீது அன்பு செலுத்தாதவர் தொலைவில் இருந்தால் என்ன, அருகில் இருந்தால் என்ன?

அதனால் அவர் இருக்கும் இடத்துக்குச் செல்வதால் எந்தப் பயனும் இல்லை. இதை உனக்கு நான் எத்தனையோ முறை எடுத்துச் சொல்லி விட்டேன். ஆயினும் பிடிவாதமாகக் கிளம்பி விட்டாய்.

சென்று வா, என் அருமை நெஞ்சே! உன்னைப் போன்ற பேதையிடம் நான் வேறு என்ன சொல்ல முடியும்!

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 125
நெஞ்சொடு கிளத்தல்
குறள் 1248
பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.

பொருள்:
என் நெஞ்சே! பிரிவுத் துன்பத்தால் வருந்தி அவர் வந்து அன்பு செய்ய வில்லையே என்று ஏங்கி, பிரிந்தவரின் பின் செல்கின்றாய், பேதை.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Saturday, October 14, 2023

1247. இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு!

"அதோ அவர் இந்தப் பக்கமாக வந்து கொண்டிருக்கிறார். அவர் அருகில் வந்ததும் அவரிடம் போய் என் காதலைச் சொல்லி விடப் போகிறேன்!"

"முட்டாள் பெண்ணே! அப்படி எல்லாம் செய்து விடாதே! அப்படிச் செய்தால் நாணம் என்ற உன் இயல்பான பண்பை நீ விட்டு விட்டதாக ஆகும்!"

"பிறகு எப்படி என் காதலை அவரிடம் சொல்வது?"

"காத்திரு. அவரே வந்து உன்னிடம் தன் காதலைச் சொல்கிறாரா என்று பார்க்கலாம்!"

"காத்திருந்து பார்த்து விட்டேன். அவராக என்னிடம் வந்து காதலைச் சொல்வதாக இல்லை. ஒருவேளை அவருக்கு என் மீது அத்தகைய எண்ணம் இல்லையோ என்னவோ! ஆனால் நான் போய் என் காதலைச் சொன்னால் அவர் அதை ஏற்றுக் கொள்ளலாம் அல்லவா?"

"ஏற்றுக் கொள்ளலாம்தான்! ஆனால் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு நாணத்தை விட்டு விட்டு அவரிடம் போய் உன் காதலை எப்படிச் சொல்ல முடியும்?"

"பிறகு வேறு என்ன செய்வது? அவரும் என்னிடம் காதலைச் சொல்ல மாட்டார். நானும் சொல்லக் கூடாது என்றால் இதற்கு ஒரு வழிதான் இருகிறது!"

"அது என்ன வழி?"

"அவர் மீது நான் கொண்டிருக்கும் காதலை விட்டு விட வேண்டியதுதான்!"

"அது இயலாத செயல். உனக்கு அவர் மீது இருக்கும் காதல் எவ்வளவு ஆழமானது என்று எனக்குத்தானே தெரியும்?"

"இங்கே பார்! உன் வழிகாட்டலின்படிதான் நான் நடக்க வேண்டி இருக்கிறது. என் காதலை அவரிடம் சொல்ல விடாமல் நாணம் என்ற தடையை உருவாக்கி இருக்கிறாய். சரி, காதலை விட்டு விடலாம் என்றால் அதை உனக்குள் ஒரு ஆழமான இடத்தில் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு அதை விட முடியாது என்கிறாய். நல்ல நெஞ்சாக வந்து வாய்த்திருக்கிறாய் எனக்கு! ஒன்று காதலை விட்டு விட்டதாகச் சொல். அல்லது நாணத்தை விட்டு விட்டதாகச் சொல். இந்த இரண்டையும் ஒருசேர வைத்துக் கொண்டு இருக்க என்னால் முடியவில்லை!"


காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 125
நெஞ்சொடு கிளத்தல்
குறள் 1247
காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு.

பொருள்:
நல்ல நெஞ்சே! ஒன்று காமத்தை விட்டு விடு; அல்லது நாணத்தை விட்டு விடு; இந்த இரண்டையும் பொறுத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

1246. பொய்க் கோபம்!

"அவர் கிளம்பிச் சென்று ஆறு மாதங்கள் ஆகி விட்டன அல்லவா? அதனால் அவர் திரும்பி வரும் நேரம் நெருங்கி விட்டது என்று நினைக்கிறேன்."

"நீ நீனைத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்! அவர் வர மாட்டார்,"

"ஏன் இப்படி எதிர்மறையாகவே சிந்திக்கிறாய்? ஊருக்குச் சென்றவர் திரும்பி வந்துதானே ஆக வேண்டும்?"

"உன் மீது சிறிதேனும் அன்பு இருந்திருந்தால் அவர் முன்பே வந்திருக்க வேண்டும்."

"சென்ற வேலையை முடிக்காமல் எப்படித் திரும்பி வர முடியும்? அவர் என்ன பக்கத்து ஊருக்கா போயிருக்கிறார், இன்னொரு முறை போய் வேலையை முடித்து விட்டு வரலாம் என்பதற்கு? கடல் கடந்தல்லவா போயிருக்கிறார்!"

"எங்கே போயிருந்தால் என்ன? நம் மீது உயிரையே வைத்திருக்கும் ஒருத்தி நமக்காகக் காத்திருக்கிறாள் என்ற உணர்வு இருந்தால் வேலையை விரைவாக முடித்து விட்டுப் பறந்து வந்திருக்க வேண்டாமா?"

"பறந்து வருவதற்கு அவர் அனுமனா, இல்லை, அவரிடம் புஷ்பக விமானம் இருக்கிறதா?"

"பறப்பதற்குச் சிறகுகளோ, விமானமோ இல்லாத ராமர் கடல் கடந்து சென்று சீதையை மீட்டு வரவில்லையா? மனம் இருந்தால் வழி உண்டு!"

"நீ அவர் மீது மிகவும் கோபமாய் இருக்கிறாய் போலிருக்கிறதே!"

"பின்னே? மனைவி என்று ஒருத்தி இருக்கிறாள் என்ற நினைவே இல்லாத மனிதர் மீது கோபப்படாமல் பரிதாபமா பட முடியும்? ஒருவேளை சகுந்தலையை துஷ்யந்தன் மறந்தது போல் அவர் உன்னை மறந்து விட்டாரோ என்னவோ!"

"நீ அவர் மீது கோபமாய் இருப்பதை என்னால் நம்ப முடியவில்லை!"

"ஏன் நம்ப முடியவில்லை?"

"எத்தனையோ முறை  எங்கள் இருவருக்கிடையே ஊடல் ஏற்பட்டிருக்கிறது. அப்போதெல்லாம் அவர் என்னிடம் நெருங்கி வந்து ஊடலைப் போக்கி இருக்கிறார். அவர் என் மீது ஊடல் கொண்டிருந்தபோதெல்லாம் ஒருமுறை கூட நீ அவர் மீது கோபம் கொண்டதில்லையே! அதனால்..."

"அதனால்?"

"அதனால், உனக்கு அவர் மீது இருக்கும் கோபம் பொய்யானது என்று நினைக்கிறேன்! என் அருமை நெஞ்சே! என்னையே ஏமாற்றப் பார்க்காதே!"

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 125
நெஞ்சொடு கிளத்தல்
குறள் 1246
கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.

பொருள்:
நெஞ்சே! கூடிக் கலந்து ஊடலை நீக்கும் காதலரைக் கண்டால் ஒரு தடவை கூடப் பிணங்கியறியாத நீ இப்போது அவர் மீது கொள்கிற கோபம் பொய்யானது தானே?.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Friday, October 13, 2023

1245. அது எப்படி இயலும்?

"உன் கணவர் உன்னை விட்டுப் பிரிந்து சென்று எத்தனை நாட்கள் ஆகி விட்டன?"

"ஆறு மாதங்கள்!"

"இந்த ஆறு மாதங்களில் அவர் உனக்கு ஏதாவது மடல் அனுப்பி இருக்கிறாரா?"

"இல்லை."

"நீ அவருக்கு மடல் அனுப்பினாய் அல்லவா?"

"ஆமாம். இங்கிருந்து அவர் இருக்கும் இடத்துக்குச் சென்றவர்கள் மூலம் இரண்டு மடல்கள் அனுப்பினேன்."

"உன்னிடம் மடல் பெற்றுச் சென்றவர்கள் திரும்பி வந்தபோது அவர்கள் உன்னிடம் சொன்ன செய்தி என்ன?"

"என் மடலை அவர் படித்துப் பார்த்தாராம். ஆனால் எதுவும் சொல்லவில்லையாம். அவர்கள் ஊருக்குக் கிளம்பும்போது உன் மனைவிக்கு ஏதேனும் மடல் உண்டா என்று அவரிடம் கேட்டதற்கு அவர் எதுவும் இல்லை என்று சொல்லி விட்டாராம். சரி, ஏதாவது செய்தி சொல்ல வேண்டுமா என்று கேட்டதற்கும், அவர் வேண்டாம் என்பது போல் தலையாட்டினாராம்."

"இதிலிருந்து என்ன தெரிகிறது?"

"என்ன தெரிகிறது?"

"நீதான் அவர் மீது அளவு கடந்த விருப்பம் வைத்துப் பைத்தியம் போல் இருக்கிறாயே தவிர, அவருக்கு உன் மீது சிறிது கூட விருப்பம் இல்லை. அதனால்..."

"அதனால்...?"

"நீயும் உனக்கு அவர் மீது இருக்கும் விருப்பத்தைக் கைவிட்டு விடு!"

""என் கணவர் என் மீது விருப்பம் இல்லாமல் நடந்து கொள்கிறார் என்பதற்காக, நான் அவர் மீது கொண்டுள்ள காதலை விட்டு விட முடியுமா என்ன? நெஞ்சே! நீ  எனக்கு நன்மையை மட்டுமே நினைப்பாய் என்று நான் நம்பிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நீ சொல்லும் யோசனை எனக்கு நஞ்சாக அல்லவா இருக்கிறது! உன்னுடன் அளவளாவுவதே தவறு போலிருக்கிறது!"

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 125
நெஞ்சொடு கிளத்தல்
குறள் 1245
செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்.

பொருள்:
நெஞ்சே! நாம் விரும்பினாலும் நம்மை விரும்பி வராத அவர், நம்மை வெறுத்து விட்டார் என நினைத்து அவர் மீது கொண்ட காதலைக் கைவிட்டு விட முடியுமா?

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Thursday, October 12, 2023

1244. நெஞ்சம் எங்கே, கண்களும் அங்கே!

நான் எவ்வளவோ சொல்லியும் கேளாமல் அவரைத் தேடி அவர் இருக்கும் இடத்துக்குக் கிளம்பி விட்டாய்.

அவருக்கும் ஒரு நெஞ்சு இருக்கிறது. அந்த நெஞ்சில் என் நினைவு இருப்பதாகத் தெரியவில்லை. 

அப்படி இருந்திருந்தால், பல மாதங்களுக்குமுன் என்னைப் பிரிந்து எங்கோ தொலை தூரம் சென்றவர் என்னைக் காண வேண்டும் என்ற ஆவலில் இத்தனை நேரம் திரும்பி இருக்க மாட்டாரா? 

ஆனால் என் நெஞ்சான நீ அவர் நினைவை எப்போதும் சுமந்து கொண்டு என்னை வருத்தத்தில் ஆழ்த்தி வருவதுடன், அவரைக் காண அவர் இருக்கும் இடத்துக்கே செல்வதென்று தீர்மானித்து விட்டாய்! 

உன்னை என்னால் தடுக்க முடியாது. நீ நினைத்த மாத்திரத்தில் எந்த இடத்துக்கும் செல்லும் வலிமை படைத்தவள். பயணம் செய்ய உனக்குக் கட்டை வண்டியோ, கப்பலோ தேவையில்லை. காற்றை விட வேகமாக நீ விரும்பும் இடதுக்குச் சென்று விடுவாய்!

என்னால் உன்னுடன் வர முடியாது. நீ சென்றதும் அவரைப் பிரிந்த துயரத்துடன் உன்னைப் பிரிந்த துயரத்தையும் சேர்த்து நான் அனுபவிக்க வேண்டும்.

சென்று வா! ஆனால் விரைவில் திரும்பி விடு.

இரு, இரு. கிளம்பி விடாதே! இந்தக் கண்களுக்கும் அவரைக் காண வேண்டுமாம்! தங்களை அவரிடம் அழைத்துச் செல்லும்படி என்னைத் தொந்தரவு செய்து கொண்டே இருக்கின்றன. ஆனால் என்னால்தான் அவர் இருக்கும் இடத்துக்குச் செல்ல முடியாதே!

எனவே நீ செல்லும்போது இந்தக் கண்களையும் அழைத்துச் செல். உனக்கு அவை வழித்துணையாகவும் இருக்கும்!

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 125
நெஞ்சொடு கிளத்தல்
குறள் 1244
கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று.

பொருள்:
நெஞ்சே! நீ அவரிடம் செல்லும்போது என் கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக; அவரைக் காணவேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

1243. நெஞ்சமே, நினைப்பதைக் கொஞ்சம் நிறுத்தி விடு!

வைரவனுடன் வியாபாரத்துக்காகக் கடல் கடந்து சென்ற செந்திலேவேலர் வந்து விட்டாராம். அவரிடம் தன் கணவன் வைரவன் ஏதாவது செய்தி சொல்லி இருப்பான் என்ற நம்பிக்கையில் ஆவலுடன் அவரைப் பார்க்க விரைந்தாள் வானதி. அவள் தாயும் உடன் வந்தாள்.

ஆனால் செந்தில்வேலரிடம் வைரவன் எந்தச் சேதியும் சொல்லி அனுப்பவில்லை.

'நான் ஊருக்குப் போறேன்? நீ எப்ப வருவேன்னு உன் வீட்டில சொல்லட்டும்?' என்று செந்தில்வேலர் கேட்டதற்கு, 'அதை இப்ப எப்படி சொல்ல முடியும்? நான் வியாபார விஷயமா இங்கே இன்னும் நிறையப் பேரைப் பார்க்க வேண்டி இருக்கே!' என்று வைரவன் பதில் சொல்லி விட்டானாம்.

"கவலைப்படாதேம்மா! சீக்கிரம் வந்துடுவான்" என்று அவளுக்கு ஆறுதல் மொழி கூறினார் செந்தில்வேலர். 

'நான் சீக்கிரம் வந்துடுவேன். கவலைப்பட வேண்டாம்னு என் மனைவிகிட்ட சொல்லுங்க!' என்று வைரவன் அவரிடம் செய்தி சொல்லி அனுப்பி இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!

'ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை! என்னிடம் அன்பு இருந்தால் செய்திருப்பார். அவரிடம்தான் அது இல்லையே!' என்று நொந்து கொண்டே வீட்டுக்குத் திரும்பினாள் வானதி.

வீட்டுக்குச் சென்றதும் வெகுநேரம் இந்தச் சிந்தனையாகவே இருந்தது. வேறு சிந்தனையிலேயே மனம் செல்லவில்லை.

வானதிக்கு திடீரென்று ஒரு எண்ணம் தோன்றியது.

'பிரிவுத் துயரை எனக்குக் கொடுத்து விட்டு அவர் போய் விட்டார். அவருக்கு என் நினைவு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் நான் ஏன் இப்படி அவரை நினைத்து வருந்துகிறேன்? இதற்குக் காரணம் என் செஞ்சம்தானே?'

வானதி குனிந்து தன் நெஞ்சைப் பார்த்துப் பேசினாள்.

"ஏ நெஞ்சே! என்னை நினைக்காதவரை நீ ஏன் நினைத்து வருந்துகிறாய்? ஒன்று அவரை நினைத்து வருந்துவதை நிறுத்து. அல்லது அவர் இருக்கும் இடத்துக்கு நீயும் சென்று விடு. என்னுடன் இருந்து கொண்டு என்னை வருத்தாதே!"

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 125
நெஞ்சொடு கிளத்தல்
குறள் 1243
இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்.

பொருள்:
நெஞ்சே (என்னுடன்) இருந்து அவரை நினைந்து வருந்துவது ஏன்? இந்தத் துன்பநோயை உண்டாக்கியவரிடம் இவ்வாறு அன்பு கொண்டு நினைக்கும் தன்மை இல்லையே!

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Wednesday, October 11, 2023

1242. அடி ஏண்டி அசட்டுப் பெண்ணே!

"ஏண்டி, அசட்டுப் பெண்ணே! பரிதியிடம் நீ ஆழமான காதல் கொண்டிருப்பது அவருக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அவர் உன்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

"நினைத்துப்பார்! எத்தனை சம்பவங்கள்!

"அன்று நீயும் உன் மூன்று தோழிகளும் ஆற்றிலிருந்து நீர் எடுத்துக் கொண்டு வந்தபோது பரிதி எதிரில் வந்தார். உன் தோழிகள் உன்னையும் அவரையும் இணைத்துப் பேசி அவரைக் கேலி செய்தனர். ஆனல் அவர் அப்படி எதுவும் இல்லை என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். உன் முகத்தைப் பார்த்துப் பேசக் கூட இல்லை.

"இன்னொரு முறை நீ அவரைத் தனியே சந்தித்தபோது வெட்கத்தை விட்டு உன் காதலைத் தெரிவித்தாய். அவர் பதில் சொல்லாமல் சிரித்து விட்டுப் போய் விட்டார்.

"இவ்வளவு ஏன்? பரிதியின் மீது உனக்கிருக்கும் ஆழ்ந்த காதலைச் சொற்களில் வடித்து உன் உணர்ச்சிகளைக் கொட்டி ஒரு மடல் எழுதி அவருக்கு அனுப்பி வைத்தாய். அதற்கும் அவரிடமிருந்து பதில் இல்லை.

"அவருக்கு உன் மேல் அன்பு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

"ஆனால் நீஎன்ன செய்கிறாய்? காலை முதல் இரவு வரை அவரையே நினைத்து வருந்திக் கொண்டிருக்கிறாய். இரவிலும் அவரையே நினைத்தபடி தூங்காமல் விழித்திருந்து உன் உடலை வருத்திக் கொள்கிறாய்.

"ஏ, நெஞ்சே! உன்னிடம்தான் பேசிக் கொண்டிருக்கிறேன். நீ முட்டாளா? எதையுமே அறியாமல் செய்வதையே செய்து கொண்டிருக்கிறாயே! உன்னை என்னால் திட்டக் கூட முடியவில்லை. அதனால் நீ வாழ்க என்று வாழ்த்துகிறேன்!"

"என்னடி, கண்ணாடி முன்னால நின்னு பேசிக்கிட்டிருக்கே?" என்றாபடியே உள்ளிருந்து வெளியே வந்தாள் மாலினியின் தாய்.

"ஒண்ணுமில்லையே!" என்று மாலினி அங்கிருந்து அகன்று சென்றாள்,

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 125
நெஞ்சொடு கிளத்தல்
குறள் 1242
காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு.

பொருள்:
என் நெஞ்சே! வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவது உன் அறியாமையே!

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Tuesday, October 10, 2023

1241. நோய்க்கு மருந்து!

அம்மாவைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. கடந்த சில மாதங்களாக என்னை மூன்று மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று விட்டார்.

"சரியா சாப்பிட மாட்டேங்கறா ஐயா. சரியா தூங்கறதும் இல்லை. உடம்பு இளைச்சுக்கிட்டே வருது. எலும்பெல்லாம் தெரியுது. உடம்பெல்லாம் வெளிறிப் போய் சோகை புடிச்சவ மாதிரி இருக்கா!" என்பார் அம்மா.

மருத்துவர் என் நாடியைப் பிடித்துப் பார்ப்பார்.  பிறகு ஏதோ ஒரு சூரணத்தைக் கொடுத்து அதைத் தேனில் குழைத்து தினமும் மூன்று வேளை அருந்தச் சொல்வார்.

அம்மா மூன்று வேளையும் தவறாமல் ஒரு சிட்டிகை சூரணத்தை எடுத்து ஒரு வெற்றிலையில் வைத்து அதில் தேனை விட்டுக் குழைத்து என்னிடம் கொடுப்பார். "அப்படியே வெற்றிலையோடு மென்று விழுங்கு!" என்பார்.

ஒரு மாதம் பார்த்து விட்டு முன்னேற்றம் ஏதும் இல்லாததால் இன்னொரு மருத்துவரிடம் அழைத்துச் செல்வார். அவரும் ஒரு சூரணம் கொடுப்பார்.

இது போல் மூன்று மருத்துவர்களிடம் போய் வந்தாகி விட்டது.

அம்மாவை நான்காவதாக இன்னொரு மருத்துவரிடம் செல்ல வைத்து அலைக்கழிக்க நான் விரும்பவில்லை.

எனக்கு வந்திருப்பது என்ன நோய் என்பதை மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கலாம்.

ஆனால் அதை அறிந்த ஒரு நபர் இருக்கிறார். அதுவும் என்னுள்ளேயே இருக்கிறார்!

அது யார் தெரிகிறதா?

ஏ நெஞ்சே! உன்னிடம்தானே பேசிக் கொண்டிருக்கிறேன்? அது நீயேதான்!

எனக்கு வந்திருப்பது காதல் நோய் என்பதை நீ அறிவாய். நோய் என்னவென்று தெரிந்த உனக்கு நோய்க்கான மருந்து என்ன என்பதும் தெரிந்திருக்க வேண்டுமே! அது என்னவென்று என்னிடம் சொல்.

மருந்து என்ன என்பதை நீ சொன்னால் அதை உட்கொண்டு என்னை வாட்டும் இந்தக் காதல் நோயிலிருந்து குணமடைவேன். அம்மாவின் கவலை தீர்ந்து அவரும் மகிழ்ச்சியாக இருப்பார். 

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 125
நெஞ்சொடு கிளத்தல்
குறள் 1241
நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து.

பொருள்:
நெஞ்சே! எந்த மருந்தினாலும் தீராத என் காதல் நோய் தீர்ந்திட ஏதாவது ஒரு மருந்தை நினைத்துப் பார்த்து, உன்னால் சொல்ல முடியுமா?

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Sunday, October 8, 2023

1240. நேற்று நெற்றி, இன்று கண்கள்!

"என்னடி உன் நெற்றி வெளிரிப் போயிருக்கு? உடம்பு சரியில்லையா என்ன?" 

கோதையைப் பார்த்துப் பலரும் இவ்வாறு கேட்டது நேற்று.

நெற்றி பசலை நிறம் அடைந்ததற்கு ஒரு காரணம் இருந்தது. 

நேற்று கோதை தன் காதலன் ரகுவர்மன் அணைப்பில் இருந்தபோது, வாயிற்கதவு படபடவென்று தட்டப்பட்டது.

ரகுவர்மன் கதவைத் திறந்து பார்த்தான். அங்கே நின்ற அரண்மனைச் சேவகன் அரண்மனையின் பாதுகாப்புத் தலைவர் ரகுவர்மனை உடனே அழைத்து வரும்படி பணித்தாகக் கூறினான். உடனே ரகுவர்மன் கிளம்பி விட்டான். 

இனி ரகுவர்மன் எப்போது வீட்டுக்குத் திரும்புவானோ தெரியாது. அன்றே திரும்பலாம், சில நாட்கள் கழித்தும் திரும்பலாம். அரண்மனைக் காவல் பணி அத்தகையது.

கூடியிருந்த காதலன் விட்டு விட்டுச் சென்று விட்டான், எப்போது திரும்புவானோ தெரியாது என்பதால் தன் நெற்றியில் பசலை படர்ந்திருக்கிறது என்பதை வெளியில் சொல்ல முடியாமல், கோதை, தான் பூசிக் குளித்த மஞ்சளின் தன்மை மாறுபட்டிருந்ததால் அந்த மாற்றம் ஏற்பட்டதாகச் சொல்லிச் சமாளித்தாள்.

னால் இன்று காலை கோதை கண்ணாடியைப் பார்த்தபோது தன் கண்களிலும் வெளிர் நிறம் படர்ந்திருப்பதைக் கண்டாள்.

நெற்றியின் பசலையைக் கண்டதும் அருகிலிருந்த கண்களுக்கும் பசலை வரத் தொடங்கி விட்டது போலும்!

'நேற்று நெற்றியில் படர்ந்த பசலைக்கு மஞ்சளைக் காரணம் காட்டிச் சமாளித்து விட்டேன். இன்று கண்களின் பசலைக்கு என்ன காரணம் கூறப் போகிறேன்?' என்று எண்ணிக் கவலை அடைந்தாள் கோதை.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 124
உறுப்பு நலனழிதல்
குறள் 1240
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு.

பொருள்:
காதலியின் ஒளி பொருந்திய நெற்றி, பசலை நிறம் உற்றதைக் கண்டு, அவளுடைய கண்களின் பசலையும் துன்பம் அடைந்து விட்டது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Friday, October 6, 2023

1239. குறுக்கே வந்த குளிர் காற்று

சாளரத்தை மூடப் போன செம்பியனைப் பார்த்து, "அதுதான் திரைச்சீலை போட்டிருக்கே! அப்புறம் ஏன் சாளரத்தை மூடறீங்க?" என்றாள் கமலி.

"திரைச்சீலையால காற்றைத் தடுக்க முடியாதே!" என்றான் செம்பியன்.

"காற்று அடிச்சா என்ன? இப்ப குளிர்காலம் இல்லையே!"

"நேத்திக்கு நான் உன்னை அணைச்சுக்கிட்டப்ப காற்று அடிச்சது. அப்புறம் பார்த்தா உன் கண்கள் வெளிறிப் போயிருந்தது. ஒருவேளை இந்தக் குளிர் காற்று உன் உடம்புக்கு ஒத்துக்கலையோன்னு நினைச்சேன்."

"என் கண்கள் வெளிறி நிறம் மாறினதுக்குக் காரணம் காற்று இல்லை, எனக்கு ஏற்பட்ட பசலை."

"அப்படின்னா?"

"இது தெரியாதா? கதலனைப் பிரியறப்ப ஒரு பெண்ணுக்குப் பசலை நோய் வரும். உடம்பெல்லாம் நிறம் மாறும்."

"நான் எங்கே உன்னைப் பிரிஞ்சேன்? உன்னைத் தழுவிக்கிட்டுத்தானே இருந்தேன்?"

"நீங்க என்னைத் தழுவிக்கிட்டிருக்கறப்பவே குறுக்கே வந்த குளிர் காற்று நம்மைப் பிரிச்சது இல்ல, அதனால ஏற்பட்டதுதான் அந்தப் பசலை!"

"அப்படியா? அப்ப நான் சாளரத்தை அடைக்கிறது சரிதானே?"

"அதுக்கு ஏன் சாளரத்தை அடைக்கணும்? காற்றைத் தடுக்க வேற ஒரு எளிய வழி இருக்கே!"

"என்ன வழி?"

"நம்ம ரெண்டு பேருக்கும் நடுவில காற்று நுழைய வழியே இல்லாம செய்யறது!" என்று கூறி நாணத்துடன் கைகளால் முகத்தைப் பொத்திக் கொண்டாள் கயல்விழி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 124
உறுப்பு நலனழிதல்
குறள் 1239
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.

பொருள்:
இறுகத் தழுவியிருந்தபோது, இடையே குளிர்ந்த காற்று நுழைந்ததால் அதையே ஒரு பிரிவு எனக் கருதிக் காதலியின் அகன்று நீண்ட கண்கள் பசலை நிறம் கொண்டன.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Thursday, October 5, 2023

1238. தழுவிய கைகள்!

"ஆதிரை!"

"ம்..."

"ஏன் பேச மாட்டேன் என்கிறாய்?"

"உங்கள் அணைப்பில் இருக்கும்போது எனக்கு எப்படிப் பேச்சு வரும்?"

"இப்போது பேசி விட்டாயே!"

ஆதிரையைக் கேலி செய்வது போல் கைதட்டினான் இளவழகன்.

ஆதிரை சோர்வுடன் கட்டிலில் அமர்ந்தாள்.

"என்ன ஆயிற்று ஆதிரை!" என்றான் இளவழகன் பதற்றத்துடன்.

"ஒன்றுமில்லை" என்று ஆதிரை கூறினாலும் அவள் உடலில் ஒரு சோர்வு தெரிந்ததை இளமாறன் கவனித்தான்.

ஆதிரையின் முகத்தை நிமிர்த்திப் பார்த்த இளவழகன், "என்ன இது? உன் நெற்றி வெளிரிப் போயிருக்கிறது!" என்றான் கவலையுடன்.

"அதைப் பசலை என்று சொல்வார்கள்!"

"அப்படியென்றால்?"

"காதலன் பிரிவால் காதலிக்கு ஏற்படும் உடற்சோர்வு, அதனால் சருமம் வெளிரிப் போவது."

"நான் உன்னைப் பிரியவில்லையே! உன்னுடன்தானே இருக்கிறேன்!"

"இப்போது கைதட்டினீர்களே?"

"ஆமாம். அது எப்படிப் பிரிவாகும்?"

"என்னை அணைத்துக் கொண்டிருந்த கைகளை விடுவித்துக் கொண்டுதானே கைதட்டினீர்கள்! அது  ஒரு பிரிவுதானே"

"இது ஒரு பிரிவா? உன்னை அணைத்திருந்த கையை நான் விலக்கிக் கொண்ட கணநேரப் பிரிவையே உன்னால் தாங்க முடியாதென்றால், நான் உன்னை விட்டுப் பிரிந்து வெளியூர் சென்றால் அந்தப் பிரிவை எப்படித் தாங்குவாய்?"

"அப்படி வாயால் கூடச் சொல்லாதீர்கள். நீங்கள் சொல்வதைக் கேட்கும்போதே எனக்குப் பசலை படிந்த உணர்வு ஏற்படுகிறது!" என்றாள் ஆதிரை காதுகளைக் கைகளால் பொத்தியபடி. 

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 124
உறுப்பு நலனழிதல்
குறள் 1238
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.

பொருள்:
தழுவிய கை‌களைத் தளர்த்தியவுடனே, பைந்தொடி அணிந்த காதலியின் நெற்றி, (அவ்வளவு சிறிய பிரிவைக் கூடப் பொறுக்காமல்) பசலை நிறம் அடைந்தது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

1237. நெஞ்சே நீ போய்ச் சேதியைச் சொல்லு!

பொருள் ஈட்டுவதற்காகத் தன்னைத் தனியாக விட்டு விட்டு வெளியூர் சென்றிருக்கும் காதலனுக்கு யார் மூலம் செய்தி சொல்லி அனுப்புவது என்று நீண்ட நேரம் யோசித்த மதி, இறுதியில் தன் நெஞ்சத்தையே தூதாக அனுப்புவது என்று முடிவு செய்தாள்.

அன்பால் இணைந்த இரு நெஞ்சங்களால் ஒன்றை ஒன்று தொடர்பு கொள்ள முடியாதா என்ன? இங்கிருக்கும் என் நெஞ்சம் எங்கோ தொலை தூரத்தில் இருக்கும் அவர் நெஞ்சத்தைச் சென்றடைவதற்கு தூரம் ஒரு தடையாக இருக்க முடியாதே!

"நெஞ்சே! என் காதலரிடம் என்ன சொல்ல வேண்டும் தெரியுமா?:

உங்கள் பிரிவால் மதி மிகவும் இளைத்து விட்டாள். எந்த அளவுக்கு இளைத்து விட்டாள் என்றால் அவள் தோள் எலும்புகள் தோலைத் துருத்திக் கொண்டு வெளியே வரப் போவது போல் இளைத்து விட்டன!

அவளைப் பார்ப்பவர் ஒவ்வொருவரையும் அவை தங்களைப் பற்றியே பேச வைக்கின்றன. நேற்று கூட ஒரு பெண்மணி, 'என்னடி மதி, உன் தோள் எலும்புக்கு மேல இருந்த சதையைக் காணோம்? காக்கா கொத்திக்கிட்டுப் போயிடுச்சா என்ன?' என்று மதியைக் கேலி செய்தாள்.

அது மட்டுமல்ல. மதி இவ்வளவு இளைத்ததைப் பார்த்துப் பலரும் அவளை இந்த நிலைக்கு ஆளாக்கிய அவள் காதலன் கொடியவனாகத்தான் இருக்க வேண்டும் என்று உங்களை இகழ்ந்து பேசுகிறார்கள்.

உங்கள் மீது உயிர்க் காதல் கொண்டுள்ள மதிக்கு இத்தகைய பேச்சுக்கள் எவ்வளவு மன வருத்தத்தைக் கொடுக்கும் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும் அல்லவா?

எனவே உடனே கிளம்பி வந்து மதியைச் சேர்ந்து அவள் மன வருத்தத்தையும், அதனால் அவள் உடலுக்கு ஏற்பட்டுள்ள வருத்தத்தையும் போக்கி, உங்கள் மீது ஊர் சுமத்தும் அவப்பெயரையும் போக்கிக் கொள்ளுங்கள்.

என் அருமை நெஞ்சே! நீ மட்டும் இந்தச் செய்தியை அவரிடம் சேர்த்து அவர் விரைவிலேயே திரும்ப வகை செய்து விட்டால், நீ பெருமை பெற்று விளங்குவாய்!"

சொல்ல வேண்டிய செய்தியைத் தன் நெஞ்சுக்குச் சொன்னதும் சில விநாடிகள் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டாள் மதி.

'மனோவேகம் என்கிறார்களே! அப்படியானால் என் நெஞ்சம் இதற்குள் இந்தச் செய்தியை என் காதலரின் நெஞ்சத்துக்குக் கொண்டு சேர்த்திருக்க வேண்டும். இந்தச் செய்தியைக் கேட்ட பிறகாவது அவர் உடனே கிளம்பி வருகிறாரா என்று பார்க்கலாம்!' என்று நினைத்துக் கொண்டாள் மதி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 124
உறுப்பு நலனழிதல்
குறள் 1237
பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூசல் உரைத்து.

பொருள்:
நெஞ்சே! கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ?.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

1307. முதலில் தேவை முகவரி!

விளையாட்டாக ஆரம்பித்த பேச்சு விபரீதத்தில் முடியும் என்று அஜய் எதிர்பார்க்கவில்லை. அஜய் வழக்கம்போல் வீணாவுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருக்கும்போ...