நேற்று கோதையைப் பார்த்துப் பலரும் கேட்ட கேள்வி இது.
"இன்னிக்கு நான் மஞ்சள் பூசிக் குளிச்சேன். அந்த மஞ்சளோட தன்மை கொஞ்சம் மாறி இருந்ததால, நெற்றியில வெண்மை படர்ந்திருக்கு போல இருக்கு!" என்றாள் கோதை.
உண்மையில், கோதையின் நெற்றி பசலை நிறம் அடைந்ததற்கு வேறு ஒரு காரணம் இருந்தது.
நேற்று கோதை தன் காதலன் ரகுவர்மன் அணைப்பில் இருந்தபோது, வாயிற்கதவு படபடவென்று தட்டப்பட்டது.
ரகுவர்மன் கதவைத் திறந்து பார்த்தான். அங்கே நின்ற அரண்மனைச் சேவகன், ரகுவர்மனை உடனே அழைத்து வரும்படி அரண்மனையின் பாதுகாப்புத் தலைவர் பணித்தாகக் கூறினான். உடனே ரகுவர்மன் கிளம்பி விட்டான்.
இனி ரகுவர்மன் எப்போது வீட்டுக்குத் திரும்புவானோ தெரியாது. அன்றே திரும்பலாம், சில நாட்கள் கழித்தும் திரும்பலாம். அரண்மனைக் காவல் பணி அத்தகையது.
கூடியிருந்த காதலன் தன்னைத் தனியே விட்டு விட்டுப் பணி நிமித்தமாகச் சென்று விட்டான், எப்போது திரும்புவானோ தெரியாது என்பதால்தான், கோதை தன் நெற்றியில் பசலை படர்ந்திருக்கிறது என்பதை வெளியில் சொல்ல முடியாமல், தான் பூசிக் குளித்த மஞ்சளின் தன்மை மாறுபட்டிருந்ததால், அந்த மாற்றம் ஏற்பட்டதாகச் சொல்லிச் சமாளித்தாள்.
இன்று காலை, கோதை கண்ணாடியைப் பார்த்தபோது, தன் கண்களிலும் வெளிர் நிறம் படர்ந்திருப்பதைக் கண்டாள்.
நெற்றியின் பசலையைக் கண்டதும், அருகிலிருந்த கண்களுக்கும் பசலை வரத் தொடங்கி விட்டது போலும்!
'நேற்று நெற்றியில் படர்ந்த பசலைக்கு மஞ்சளைக் காரணம் காட்டிச் சமாளித்து விட்டேன். இன்று கண்களின் பசலைக்கு என்ன காரணம் கூறப் போகிறேன்?' என்று எண்ணிக் கவலை அடைந்தாள் கோதை.
கற்பியல்
உறுப்பு நலனழிதல்
பொருள்:
காதலியின் ஒளி பொருந்திய நெற்றி, பசலை நிறம் உற்றதைக் கண்டு, அவளுடைய கண்களின் பசலையும் துன்பம் அடைந்து விட்டது.
No comments:
Post a Comment