Monday, March 29, 2021

1132. காத்திருந்த கண்களே!

நர்மதா!

ஒரு சினிமா தியேட்டரில்தான் பழனி அவளைப் பார்த்தான். 

தியேட்டரில் அவன் உட்கார்ந்திருந்தபோது ஒரு இருக்கை தள்ளி அவள் அமர்ந்திருந்தாள். கடைசி வரை அந்த இருக்கை காலியாகத்தான் இருந்தது.

 படம் ஆரம்பித்துச் சிறிது நேரம் வரை கூட அந்தப் பெண் உள்ளே வருபவர்களைப் பார்த்துக் கொண்டிருந்ததால் அவளுடன் வர வேண்டிய யாரோ வரவில்லை என்று அவன் புரிந்து கொண்டான். 

படத்தின் சில காட்சிகளை ரசித்தபோது அவள் தற்செயலாகத் திரும்பி அவனைப் பார்த்தது போல் தோன்றியது.

இடைவேளையின்போது அவள் அவன் பக்கம் திரும்பி, "எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?" என்றாள்.

"என்ன? காப்பி, டீ ஏதாவது வாங்கிக்கிட்டு வரணுமா?" என்றான் பழனி.

அவள் பெரிதாகச் சிரித்து விட்டு, "அதில்லை! என் தோழி வரதாச் சொன்னா. ஆனா வரலை. படம் முடிஞ்சதும் பஸ் ஸ்டாப் வரை துணைக்கு வர முடியுமா?" என்றாள்.

'சாயந்திர வேளையில் எதற்குத் துணை' என்று மனதில் தோன்றிய கேள்வியைப் புறம் தள்ளி விட்டு, "ஓ, நிச்சயமா!" என்றான் பழனி.

தியேட்டரிலிருந்து பஸ் நிறுத்தம் அதிக தூரம் இல்லை.

"ஒரு பொண்ணு தனியா நடந்து போனா, யாராவது வந்து வம்பு பண்ணுவாங்க. அதுக்குத்தான் உங்களைத் துணைக்கு வரச் சொன்னேன்" என்றாள் அவள் நடந்து செல்லும்போது. 

தொடர்ந்து, "உங்களைப் பாத்தா நல்லவராத் தோணுது. உங்களை மாதிரி வாலிபர்கள் நண்பர்கள் இல்லாம தனியா சினிமாவுக்கு வரதே அதிசயம்தான்!" என்றாள் அவள். 

"கூப்பிட்டேன். யாரும் வரமாட்டேன்னுட்டாங்க. ஜெமினி படம் பாக்கறதில அவங்களுக்கு அதிக ஆர்வம் இல்ல. சிவாஜி எம் ஜிஆர் படம்னாதான் அடிச்சு புடிச்சுக்கிட்டு ஓடுவாங்க."

"நீங்க மட்டும்தான் காதல் மன்னன் ரசிகராக்கும்?" என்றாள் அவள் குறும்பாகச் சிரித்தபடி.

"ஆமாம்... நீங்க என்ன சாவித்திரிக்காக வந்தீங்களா?" என்றான் பழனி.

"இல்லை. நானும் காதல் மன்னன் ரசிகைதான்!" என்றாள் அவள் அவனைப் பார்த்துச் சிரித்தபடி.

அவள் கூறியதற்கு வேறு ஏதேனும் பொருள் இருக்குமா என்று அவன் யோசித்தான்.

பஸ் நிறுத்தம் வந்து விட்டது.

பஸ் வந்து விடப் போகிறதே என்ற அவசரத்தில், "உங்க பேரு? நீங்க காலேஜ் ஸ்டூடன்ட்தானே?" என்றான் பழனி பரபரப்புடன்.

"பேரு நர்மதா. காமாட்சி காலேஜ் பி எஸ் சி பாட்டனி" என்று அவள் கூறிக் கொண்டிருந்தபோதே பஸ் வந்து விட்டது.

"தாங்க்ஸ்.அப்புறம் பாக்கலாம்" என்ற பவித்ரா அவன் எதிர்பாராமல் அவன் கையைப் பற்றிக் குலுக்கி விட்டு பஸ்ஸில் ஏறி விட்டாள்.

'எங்கே, எப்படிச் சந்திப்பது? என் பெயரைக் கூட அவள் கேட்டுக் கொள்ளவில்லையே!' என்று குழம்பியபடி நின்றான் பழனி.

"உன்னை மாதிரி மடையன் இருக்க முடியாதுடா! முதலிலேயே அவளைப் பத்தின விவரங்களைக் கேட்டுக்கிட்டு உன்னைப் பத்தின விவரங்களைச் சொல்லி இருக்கணும். அதை விட்டுட்டு காதல் மன்னனைப் பத்திப் பேசிட்டுக் காதலைக் கோட்டை விட்டுட்ட!" என்றான் பழனியின் நண்பன்  கோவிந்த்.

"அப்பதான் அவளை முதல்ல பாக்கறேன். அவளை பஸ் ஸ்டாண்டில விட்டப்பறம் நான் யாரோ அவ யாரோன்னு போயிடுவேன்னுதான் நினைச்சேன். அவ எங்கிட்ட பேசினதை வச்சுத்தான் அவளுக்கு என் மேல ஒரு ஈடுபாடு ஏற்பட்டிருக்கும்னு தோணிச்சு. அதுக்கப்பறம்தான் அவ மேல எனக்கு ஈடுபாடு வந்தது. அவகிட்ட மேல பேசறதுக்குள்ள பஸ் வந்து, எல்லாம் ரொம்ப வேகமா நடந்து முடிஞ்சு போச்சு."

"அவளுக்கு உன்கிட்ட ஈடுபாடு இருந்தா அவ அந்த பஸ்ஸை விட்டுட்டு உங்கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு அடுத்த பஸ்ல போயிருக்கலாமே!"

"டேய்! தியேட்டர்லேந்து பஸ் ஸ்டாண்டுக்கு நடக்க அஞ்சு நிமிஷம் கூட ஆயிருக்காது. அதுக்குள்ள எல்லாத்தையும் யோசிச்சு செயல்படமுடியுமா?" என்றான் பழனி எரிச்சலுடன்.

"ஆனா ஆதுக்குள்ள காதல் மட்டும் வந்துடுச்சாக்கும்!"

"ஆமாண்டா. இந்த ஒரு மாசமா அவளை மறுபடி பாக்க முடியலியேன்னு நான் தவிக்கிற தவிப்பு எனக்கு மட்டும்தான் தெரியும்!"

"சரி. அவ காலேஜுக்குப் போய்ப் பாத்தியா?"

"பாத்தேன். ஒரு வாரம் காலேஜ் விடற நேரத்தில காலேஜ் கேட் கிட்ட நின்னேன். அவ வரலை. யார்கிட்டயாவது விசாரிக்கலாம்னா, அவளைப் பத்தித் தப்பா நினைச்சுடுவாங்களோன்னு பயமா இருக்கு. அவளுக்கே அது பிடிக்காம போகலாம். இது என்ன சங்க காலமா, காதலை தைரியமா சொல்ல? 1962ஆம் வருஷம்!"

"எந்த காலேஜ்ல படிக்கிறா அவ?"

"காமாட்சி காலேஜ்."

"டேய்! உனக்குக் கொஞ்சம் அதிர்ஷ்டம் இருக்குன்னு நினைக்கிறேன். நான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு அந்த காலேஜ்லதான் படிக்கிறா. ஆனா அவ பி எஸ் சி கெமிஸ்ட்ரி முடிக்கப் போறா. அவகிட்ட நான் ஒரு தடவை தனியா பேசணும்னு சொன்னதால. நாளைக்கு என்னை அவ வீட்டுக்கு வரச் சொல்லி இருக்காங்க. நர்மதாங்கற பி.எஸ்.சி. பாட்டனி படிக்கிற பொண்ணைப் பத்தி விசாரிச்சு சொல்லுன்னு அவகிட்ட கேக்கறேன்!"

"நான் நர்மதாவுக்கு ஒரு கடிதம் தரேன். அதை அவகிட்ட கொடுத்துடச் சொல்றியா?" என்றான் பழனி.

"அவளுக்கு உன் ஆளைத் தெரியுமோ என்னவோ? அதோட கடிதம்லாம் கொடுத்தா ஏதாவது தப்பா ஆயிடப் போகுது" என்றான் கோவிந்த்.

"ஒரே காலேஜ்தானே? பி எஸ் சி பாட்டனி. எந்த வருஷம்னு தெரியல. ஆனா சுலபமா கண்டு பிடிச்சுடலாம்னு நினைக்கிறேன். கடிதம் ரொம்ப சுருக்கமாத்தான் இருக்கும். நீயே பாரேன்" என்ற பழனி ஒரு தாளை எடுத்து இரண்டு வரிகள் எழுதி அவனிடம் கொடுத்தான்.

"நர்மதா! அன்று உன்னே பஸ் ஏற்றி அனுப்பிய பின் உன்னை மீண்டும் சந்திக்க முடியவில்லை. வரும் ஞாயிறு மாலை 4 மணிக்கு அதே பஸ் நிறுத்தத்தில் காத்திருக்கிறேன் - காத்திருந்த கண்கள்."

"என்னடா உன் பெயரைப் போடாம காத்திருந்த கண்கள்னு போட்டிருக்க?"

"அதுதான் நாங்க பாத்த படம். அவ புரிஞ்சுப்பா!" என்றான் பழனி.

ஞாயிற்றுக்கிழமை மாலை அதே பஸ் நிறுத்தத்தில் அவர்கள் மீண்டும் சந்தித்துக் கொண்டனர்.  

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 114
நாணத்துறவுரைத்தல்

குறள் 1132
நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.

பொருள்:
எனது உயிரும், உடலும் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிப்பதால், நாணத்தைப் புறந் தள்ளிவிட்டு மடலூர்வதற்குத் துணிந்து விட்டேன்.

Thursday, March 25, 2021

1131. காலங்கள் மாறினாலும்...

 

ஆண்டு: 1721

அன்பரே!

உங்கள் ஆருயிர்க் காதலியின் வணக்கங்கள்.

என் நாணத்தைச் சற்று ஒதுக்கி விட்டு இந்த ஓலையைத் தங்களுக்கு எழுதுகிறேன். 

அதுவும் என் உயிர்த் தோழி மேகலை தஞ்சை நகருக்குச் செல்வதால் அவள் மூலம் இந்த ஓலையை அனுப்பக் கிடைத்த ஒரு அரிய வாய்ப்பாககக் கருதி இந்த மடலை வரைந்து அனுப்புகிறேன். 

அவள் உறவினர் தஞ்சையில் ஒரு வியாபாரி என்பதால், வியாபார வேலையாக அங்கே சென்றிருக்கும் உங்கள் இருப்பிடத்தை அவர் மூலம் கண்டறிந்து இந்த  ஓலையைத் தங்களிடம் சேர்த்து விடுவதாக அவள் எனக்கு உறுதி அளித்திருக்கிறாள். 

என் காதலுக்கு உதவுவதில் அவளுக்கு எவ்வளவு ஆர்வம் பாருங்கள்!

அழகும் அறிவும் நிரம்பப் பெற்ற ஆண்தகையே! இந்த ஏழையின் மீது நீங்கள் ஏன் அன்பு காட்டினீர்கள்? 

அன்பு காட்டியதோடு நில்லாமல் பலமுறை என்னைத் தனிமையில் சந்தித்துக் காதல் மொழிகள் பேசி என்னைக் கட்டியணைத்து... (இதற்கு மேல் சொல்ல எனக்குக் கூச்சமாக இருக்கிறது!)

இதை எழுதும்போது கூட நீங்கள் என்னைத் தழுவிய இன்பத்தை எண்ணி என் மனம் களிப்பையும், வேதனையையும் ஒருங்கே அனுபவிக்கிறது.

காதல் இன்பத்தில் என்னைத் துய்க்க வைத்த பின் திடீரென்று ஒருநாள் வியாபார வேலையாகத் தஞ்சைப் பட்டணத்துக்குச் செல்வதாகச் சொல்லி என்னைத் துன்பக் கடலில் தூக்கிப் போட்டு விட்டுச் சென்று விட்டீர்கள். 

நீந்தவும் முடியாமல், மூழ்கவும் மனம் வராமல் இந்தத் துன்பக் கடலில் அல்லாடியபடி நான் படும் தவிப்பை உங்ளுக்கு உணர்த்தவே இந்த மடல்.

இந்த மடல் கண்டதும் விரைந்து வந்து இந்த மங்கையைக் கைதூக்கிக் கரைக்கு அழைத்துச் செல்லுங்கள்.

உங்கள் அன்பு என்னும் மழைநீருக்காக நான் சாதகப் பறவை போல் தாகத்துடனும், தவிப்புடனும் காத்திருக்கிறேன்.

                                                                                        உங்கள் ஆருயிர்க் காதலி

                                                                                            அபலை மதிவதனி.

ஆண்டு: 1921

அன்புள்ளவரே!

உங்கள் திருவடியில் ஆயிரம் முறை விழுந்து வணங்கி உங்கள் அன்புக் காதலி பார்வதி எழுதிக் கொள்வது.

நான் உங்களுக்குக் கடிதம் எழுதுவது தவறு என்று நினைத்தால் என்னை மன்னித்து விடுங்கள். 

இது உங்கள் கைகளுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்பதற்காக இதை ரிஜஸ்டர்ட் தபாலில் அனுப்புகிறேன். ரிஜஸ்டர்ட் போஸ்ட் கட்டணத்துக்காக முகப்பவுடர் வாங்க வேண்டும் என்று அம்மாவிடம் பொய் சொல்லிக் காசு வாங்கி இருக்கிறேன். அம்மா கேட்டால், பழைய பவுடர் டப்பாவைக் காட்டிப் புதுசு என்று சொல்லிச் சமாளிக்க வேண்டியதுதான்!

தறசெயலாகக் கோவிலில் சந்தித்த என்னைப் பின் தொடர்ந்து வந்து  உங்கள் காதலைச் சொல்லி என் மனதை மயக்கினீர்கள்.  

அதன் பிறகு நாம் சில தனிமையான இடங்களில் சந்தித்துப்பேசி நெருக்கமானோம். 

உங்கள் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று திடீரென்று ஊருக்குப் போனீர்கள். ஒரு மாதமாகி விட்டது. உங்களிடமிருந்து ஒரு தகவலும் இல்லை. உங்கள் தந்தை நலமாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்.

எனக்கு நீங்கள் கடிதம் எழுதினால் என பெற்றோர் பார்த்து விடுவார்கள் என்பதால்தான் நீங்கள் எழுதவில்லை என்று எனக்குப் புரிகிறது.

ஆனால் உங்கள் பிரிவைத் தாங்க முடியாமல்தான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நீங்கள் விரைவிலேயே இங்கே திரும்பி வருவீர்கள் என்று நம்புகிறேன். 

நீங்கள் என் முகத்தை அன்புடன் பார்த்து என் கையை ஆதுரத்துடன் பற்றினால்தான் என் ஏக்கம் தீரும்.

கீழே உள்ள என் தோழியின் விலாசத்துக்கு எனக்கு எழுதவும். அவள் பெற்றோருக்குப் படிக்கத் தெரியாது. அவள் ஏதாவது சொல்லிச் சமாளித்துக் கொள்வாள். 

உடன் பதில்.

                                                                                                        உங்கள் அன்பள்ள

                                                                                                            பார்வதி.

ஆண்டு: 2021

 ஷைலு தன் அலைபேசியிலிருந்து விஸ்வாஸின் அலைபேசிக்கு அனுப்பிய குறுஞ்செய்தி.

டேய்! 

நீ பாட்டுக்கு வருவே, என்னைக் காதலிக்கறேம்பே, சினிமா, மால்னு ரெண்டு மாசம் சுத்திட்டு ஆஃபீஸ் வேலையா மும்பைக்குப் போறேன், நாலு நாள்ள வந்துடுவேன்னு சொல்லிட்டு  திடீர்னு காணாமப் போவ. 

ஆஃபீஸ் வேலையா ரொம்ப பிஸியா இருப்பேன்னுட்டு நான் உனக்கு ஃபோன் கூடப் பண்ணாம இருந்தா நீ பாட்டுக்கு கமுக்கமா இருக்க!

உனக்கு ஃபீலிங்ஸ் இல்லாம இருக்கலாம். ஆனா எனக்கு இருக்கு. அதனாலதான் பிரஸ்டீஜ் பாக்காம உனக்கு மெஸ்ஸேஜ் பண்றேன். 

இன்னிக்கு ஈவினிங் நீ எனக்கு வீடியோ கால் பண்ணலே, அப்புறம் இருக்குடா உனக்கு!  

யுவர் லவ் 

ஷைலு.                                                                                    

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 114
நாணுத்துறவுரைத்தல்   

குறள் 1131
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி.

பொருள்:
காமத்தால் துன்புற்று  வருந்துபவர்க்கு மடலூர்தல் அல்லாமல் வலிமையான துணை வேறொன்றும் இல்லை.

அறத்துப்பால்                                                                                                   பொருட்பால்

Tuesday, March 23, 2021

1130. உருவத்தைக் காட்டிடும் கண்ணாடி!

"ஏண்டி மரகதம்? திருமாறன் ஊருக்குப் போய் நாலு மாசம் இருக்காது?" என்றாள் கோதையம்மாள்.

"புரட்டாசி பிறந்தால் ஆறு மாசம் ஆயிடும்!" என்றாள் மரகதம்.

"ஏண்டி என்னவோ குழந்தைக்கு வயசு சொல்ற மாதிரி ஆறு மாசம் ஆகப் போகுதுன்னு சொல்ற? அப்படி என்ன வேலை அவனுக்கு, ஆறு மாசமா?"

;அத்தை! அவர் ஆன்மீகச் சொற்பொழிவு செய்யறவரு. ஒரு தடவை கிளம்பிப் போனா பல ஊர்களுக்கும் போயிட்டுத்தானே வருவாரு?  போன எடத்திலேந்தெல்லாம் எனக்கு ஓலை அனுப்ப அவர் ராஜகுமாரரா என்ன?  எப்பவும் ரெண்டு மூணு மாசத்தில வந்துடுவாரு. போன வருஷம் போன சில இடங்கள்ள மறுபடியும் வரச்சொல்லி இருக்கறதால திரும்பி வர ஆறு மாசம் ஆகும்னு சொல்லிட்டுத்தான் போயிருக்காரு."

"உனக்கும் அவனுக்கும்தான் கல்யாணம்னு முடிவாயிடுச்சு. உன் கழுத்தில ஒரு தாலியைக் கட்டிட்டுப் போகக் கூடாது?" என்றாள் கோதையம்மாள்.

"அப்ப மட்டும்?"

"தாலியைக் கட்டினா நீ அவனை இழுத்துப் பிடிச்சு வச்சுக்கலாம் இல்ல? என்னவோ போ! கட்டிக்கப் போறவகிட்ட அன்பு இருந்தா இப்படி ஊர் ஊராப் போவானா?" என்று சொல்லியபடியே அங்கிருந்து சென்றாள் மரகதம்.

'போங்க! வேற யார் வீட்டுக்காவது போய் அவங்களுக்கு ஏதாவது பிரச்னை இருக்கான்னு பார்த்து வம்பு பேசுங்க!' என்று மனதுக்குள் கூறிக் கொண்டாள் மரகதம்.

வீட்டுக்கு வந்ததும் மரகதம் பெரிய நிலைக் கண்ணாடிக்கு முன் நின்று தன்னைப் பார்த்தாள். தன் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்ததும் எப்போதும் ஏற்படும் பரவசம் ஏற்பட்டது. திருமாறன் பிரிந்து சென்றதிலிருந்து இப்படித்தான்.

ஊருக்குக் கிளம்புமுன், திருமாறன் அவளிடம் விடை பெற வந்தபோது, "நீங்க பாட்டுக்கு என்னை விட்டுட்டு ஆறு மாசம் எங்கேயோ போகப் போறீங்களே! உங்களைப் பாக்காம நான் எப்படி இருக்கறது?" என்றாள் மரகதம் கம்மிய குரலில். அழுகையைக் கட்டுப்படுத்திக் கொள்ள அவள் மிகவும் சிரமப்பட வேண்டி இருந்தது.

"மரகதம்! ராமானுஜரோட விக்கிரகம் ஒண்ணு ஶ்ரீபெரும்புதூர்ல இருக்கு. தான் ஶ்ரீபெரும்பூதூர்ல இல்லாதப்ப தன் சீடர்கள் தன்னை விட்டுப் பிரிஞ்சிருக்கறதா நினைக்கக் கூடாதுங்கறதுக்காக, அவர் அந்த விக்கிரகத்தைத் தழுவிக்கிட்டுத் தன்னையே அதுக்குள்ள செலுத்தினாராம். அப்புறம் அவர் வேற ஊருக்குப் போனாக் கூட அவரோடசீடர்கள் அந்த விக்கிரகத்தைப் பாத்து ராமானுஜரையே பாக்கற மாதிரி உணருவாங்களாம். அந்த விக்கிரகத்தைத் 'தாம் உகந்த திருமேனி'ன்னு சொல்லுவாங்க  அது மாதிரி நான் ஊருக்குப் போனப்பறமும் என் உருவத்தை நீ எப்பவும் பாக்கற மாதிரி என்னை உன் உள்ளத்துக்குள்ள செலுத்தப் போறேன்!" என்று கூறியபடி அவளை இறுகத் தழுவிக் கொண்டான் திருமாறன். அப்போது அவள் உடலில் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது. அந்தச் சிலிர்ப்பில் அவன் தன் உள்ளத்துக்குள் நிலை பெற்றதை அவள் உணர்ந்தாள்.

அன்றிலிருந்து தினமும் பலமுறை நிலைக் கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்துக் கொண்டு தனக்குள் இருக்கும் தன் காதலனை அவள் பார்த்து மகிழ்வது கோதையம்மாள் போன்றவர்களுக்கு எப்படித் தெரியும் என்று நினைத்துக் கொண்டாள் மரகதம்.

"என்னடி இது? ஒரு நாளைக்குப் பத்து தடவை கண்ணாடி முன்னால நின்னுகிட்டு?  பைத்தியம் பிடிச்சிருக்கா என்ன? திருமாறன் வந்ததுமே முதல்ல உன் கழுத்தில ஒரு தாலியைக் கட்டச் சொல்லணும். இல்லேன்னா பைத்தியம் முத்திடும்!" என்றாள் மரகதத்தின் அம்மா.  

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 113
காதற்சிறப்புரைத்தல்   

குறள் 1130
உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும்இவ் வூர்.

பொருள்:
காதலர் எப்போதும் என் உள்ளத்தில் மகிழ்ந்து வாழ்கின்றார், ஆனால் அதை அறியாமல் அவர் அன்பில்லாதவர் என்று இந்த ஊரார் அவரைப் பழிப்பர்.

குறள் 1131 
குறள் 1129

அறத்துப்பால்                                                                                                   பொருட்பால்

Saturday, March 20, 2021

1129. தூங்காத கண்ணென்று ஒன்று!

"என்ன பிரச்னை?" என்றார் டாக்டர்.

"டாக்டர் கொஞ்ச நாளா இவ சரியாவே தூங்கறதில்ல" என்றாள் சுகந்தியின் தாய் சாரதா.

"ஏம்மா, தூக்கம் வரதில்லையா?" என்றார் டாக்டர்.

"அப்படி ஒண்ணும் இல்ல, டாக்டர்" என்றாள் சுகந்தி.

டாக்டர் சுகந்தியைப் பொதுவாகப் பரிசீலித்து விட்டு, "பிரச்னை எதுவும் இருக்கறாதாத் தெரியல. நீ கல்லூரியில படிக்கிறியா?" என்றார்.

"ஆமாம்."

"அப்படீன்னா, படுக்கையில படுத்துக்கிட்டு ஏதாவது பாடப் புத்தகத்தைப் பிரிச்சுப் படிக்க ஆரம்பிச்சேன்னா உடனே துக்கம் வந்துடுமே!" என்றார் டாக்டர் சிரித்தபடி.

"எங்கே டாக்டர், படுத்துக்கவே மாட்டேங்கறா? முழிச்சுக்கிட்டு கம்ப்யூட்டர் முன்னாலேயே உக்காந்திருக்கா" என்றாள் சாரதா.

"அதான் பிரச்னை. தூக்கம் வராட்டலும் தினமும்  குறிப்பிட்ட நேரத்துக்குப் படுத்துக்கப் போறதுன்னு பழக்கப்படுத்திக்கிட்டா தூக்கம் வர ஆரம்பிச்சு கொஞ்ச நாள்ள இந்தப் பிரச்னை சரியாயிடும்" என்றார் டாக்டர், அதுதான் தன் பிரிஸ்க்ரிப்ஷன் என்பது போல்.

"நேத்திக்கு சாயந்திரம் வீட்டுக்கு வரேன்னு சொன்னியே, ஏன் வரலை?" என்று சுகந்தியிடம் கேட்டாள் அவள் தோழி தேன்மொழி.

"டாக்டர்கிட்ட போயிருந்தேன்!" என்றாள் சுகந்தி.

"என்ன ஆச்சு? யாருக்கு உடம்பு சரியில்ல?"

"எனக்குத்தான்! எனக்குத் தூக்கமே வரலைன்னு சொல்லி எங்கம்மா என்னை டாக்டர்கிட்ட அழைச்சுக்கிட்டுப் போனாங்க."

"அப்படி ஒரு பிரச்னை இருக்கா உனக்கு? எனக்குத் தெரியாதே! டாக்டர் என்ன சொன்னாரு?"

"படுத்துக்கிட்டுக் கண்ணை மூடிக்கிட்டா தூக்கம் வரும்னு சொன்னாரு!"

"அவ்வளவுதானா? நீ அப்படிச் செய்ய வேண்டியதுதானே?"

"முடியாதுடி. ராஜேஷ் என் எதிரில இருந்தாலும்,இல்லாட்டாலும் அவன் உருவம் என் கண்ணிலேயே இருக்கு. கண்ணை மூடினா அவன் உருவம் மறைஞ்சுடுமோங்கற பயத்திலதான் என்னால கண்ணை மூடமுடியலியோ என்னவோ?" என்றாள்.

"உன் மேல தப்பு இல்லடி. உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கியிருக்கானே உன் ஆள் ராஜேஷ் அவனைத்தான் குத்தம் சொல்லணும்" என்றாள் தேன்மொழி.  

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 113
காதற்சிறப்புரைத்தல்   

குறள் 1129
இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும்இவ் வூர்.

பொருள்:
என் கண்கள் இமைத்தால் உள்ளிருக்கும் என்னவர் மறைவதை அறிந்து நான் கண்களை இமைப்பதில்லை. இதை விளங்கிக் கொள்ளாத ஊரார் அவரை அன்பற்றவர் என்கின்றனர்.

அறத்துப்பால்                                                                                                   பொருட்பால்

1308. பிரிவுத் துயர்?

"ஏண்டி, நீ என்ன சின்னக் குழந்தையா, புருஷன் ஊருக்குப் போனதை நினைச்சு இவ்வளவு வருத்தப்படற? ஒரு பதினைஞ்சு நாள் புருஷனை விட்டுட்டு இருக்க ம...