கோதையம்மாள் மரகத்ததுக்கு தூரத்து உறவு. அடுத்த தெருவில் வசிப்பவள். மரகதத்தின் அம்மாவிடம் பேசுவதற்காக, அடிக்கடி அவர்கள் வீட்டுக்கு வருவாள். வரும்போதெல்லாம், அவள் மரகதத்திடம் இந்தக் கேள்வியைக் கேட்காமல் இருப்பதில்லை!
"புரட்டாசி பிறந்தால், ஆறு மாசம் ஆயிடும்!" என்றாள் மரகதம்.
"என்னவோ குழந்தைக்கு வயசு சொல்ற மாதிரி, ஆறு மாசம் ஆகப் போகுதுன்னு சாதாரணமா சொல்ற! அப்படி என்ன வேலை அவனுக்கு, ஆறு மாசமா?"
"அத்தை! அவர் ஆன்மீகச் சொற்பொழிவு செய்யறவரு. ஒரு தடவை கிளம்பிப் போனா, பல ஊர்களுக்கும் போயிட்டுத்தானே வருவாரு? போன இடத்திலேந்தெல்லாம் எனக்கு ஓலை அனுப்ப, அவர் ராஜகுமாரரா என்ன? எப்பவும் ரெண்டு மூணு மாசத்தில வந்துடுவாரு. போன வருஷம் போன சில இடங்கள்ள மறுபடியும் வரச் சொல்லி இருக்கறதால, திரும்பி வர ஆறு மாசம் ஆகும்னு சொல்லிட்டுத்தான் போயிருக்காரு."
"உனக்கும் அவனுக்கும்தான் கல்யாணம்னு முடிவாயிடுச்சு. உன் கழுத்தில ஒரு தாலியைக் கட்டிட்டுப் போகக் கூடாது?" என்றாள் கோதையம்மாள்.
"அப்ப மட்டும்?"
"தாலியைக் கட்டினா, நீ அவனை இழுத்துப் பிடிச்சு வச்சுக்கலாம் இல்ல? என்னவோ போ! கட்டிக்கப் போறவகிட்ட அன்பு இருந்தா, இப்படி ஊர் ஊராப் போவானா?" என்று சொல்லியபடியே அங்கிருந்து சென்றாள் கோதையம்மாள்.
'போங்க! வேற யார் வீட்டுக்காவது போய், அவங்களுக்கு ஏதாவது பிரச்னை இருக்கான்னு பார்த்து வம்பு பேசுங்க!' என்று மனதுக்குள் கூறிக் கொண்டாள் மரகதம்.
மரகதம் பெரிய நிலைக் கண்ணாடிக்கு முன் நின்று தன்னைப் பார்த்தாள். தன் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்ததும், எப்போதும் ஏற்படும் பரவசம் ஏற்பட்டது. திருமாறன் பிரிந்து சென்றதிலிருந்து இப்படித்தான்.
ஊருக்குக் கிளம்புமுன், திருமாறன் அவளிடம் விடை பெற வந்தபோது, "நீங்க பாட்டுக்கு என்னை விட்டுட்டு, ஆறு மாசம் எங்கேயோ போகப் போறீங்களே! உங்களைப் பாக்காம நான் எப்படி இருக்கறது?" என்றாள் மரகதம், கம்மிய குரலில். அழுகையைக் கட்டுப்படுத்திக் கொள்ள அவள் மிகவும் சிரமப்பட வேண்டி இருந்தது.
"மரகதம்! ராமானுஜரோட விக்கிரகம் ஒண்ணு ஶ்ரீபெரும்புதூர்ல இருக்கு. தான் ஶ்ரீபெரும்பூதூர்ல இல்லாதப்ப, தன் சீடர்கள் தன்னை விட்டுப் பிரிஞ்சிருக்கறதா நினைக்கக் கூடாதுங்கறதுக்காக, அவர் அந்த விக்கிரகத்தைத் தழுவிக்கிட்டுத் தன்னையே அதுக்குள்ள செலுத்தினாராம். அதுக்கப்புறம், அவர் வேற ஊருக்குப் போனாக் கூட, அவரோட சீடர்கள் அந்த விக்கிரகத்தைப் பாத்து, ராமானுஜரையே பாக்கற மாதிரி உணருவாங்களாம். அந்த விக்கிரகத்தைத் 'தாம் உகந்த திருமேனி'ன்னு சொல்லுவாங்க. அது மாதிரி, நான் ஊருக்குப் போனப்பறமும் என் உருவத்தை நீ எப்பவும் பாக்கற மாதிரி, என்னை உன் உள்ளத்துக்குள்ள செலுத்தப் போறேன்!" என்று கூறியபடி, அவளை இறுகத் தழுவிக் கொண்டான் திருமாறன். அப்போது அவள் உடலில் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது. அந்தச் சிலிர்ப்பில், அவன் தன் உள்ளத்துக்குள் நிலை பெற்றதை அவள் உணர்ந்தாள்.
அன்றிலிருந்து தினமும் பலமுறை நிலைக் கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்துக் கொண்டு, தனக்குள் இருக்கும் தன் காதலனை அவள் பார்த்து மகிழ்வது கோதையம்மாள் போன்றவர்களுக்கு எப்படித் தெரியும் என்று நினைத்துக் கொண்டாள் மரகதம்.
"என்னடி இது? ஒரு நாளைக்குப் பத்து தடவை கண்ணாடி முன்னால நின்னுகிட்டு? பைத்தியம் பிடிச்சிருக்கா என்ன? திருமாறன் வந்ததுமே, முதல்ல உன் கழுத்தில ஒரு தாலியைக் கட்டச் சொல்லணும். இல்லேன்னா, பைத்தியம் முத்திடும்!" என்றாள் மரகதத்தின் அம்மா.
பொருள்:
காதலர் எப்போதும் என் உள்ளத்தில் மகிழ்ந்து வாழ்கின்றார், ஆனால் அதை அறியாமல், அவர் அன்பில்லாதவர் என்று இந்த ஊரார் அவரைப் பழிப்பர்.

No comments:
Post a Comment