Wednesday, March 6, 2019

1090. விட்டது பழக்கம்!

"இந்தப் பாழாப் போன குடிக்கற பழக்கம் இவன் அப்பன்கிட்டேந்து இவனுக்கும் வந்திருக்கு. விட்டு ஒழின்னா கேக்க மாட்டேங்கறான்" என்று அலுத்துக் கொண்டாள் மீனாட்சி.

"கவலைப்படாதே! கல்யாணம் ஆனவுடனே விட்டுடுவான்" என்றாள் மங்களம்.

"அது எப்படி? என்னைக் கல்யாணம் கட்டிக்கிட்டப்பறம் என் புருஷன் குடிப்பழக்கத்தை விடலியே!"

"அதுக்கு என்ன செய்யறது? சில ஆம்பளைங்களுக்குக் கல்யாணம் ஆனப்பறம்தான் குடிப்பழக்கமே ஆரம்பிக்குது!"

"என்னடி சொல்ற?"

"நான் என் கதையைச் சொல்றேன் அக்கா!" என்றாள் மங்களம்.

"பின்ன, கல்யாணம் ஆனா என் பிள்ளை குடியை விட்டுடுவான்னு எப்படிச் சொல்ற?" என்றாள் மீனாட்சி.

"என் பிள்ளை விட்டுட்டான். அதை வச்சுத்தான் சொல்றேன்" என்றாள் மங்களம்.

மீனாட்சிக்குக் குழப்பமாக இருந்தது.

"கல்யாணம் பண்ணிக்கறதால மட்டும் குடியை விட முடியாது" என்றாள் மங்களம் சிரிப்புடன்.

மீனாட்சிக்குக் குழப்பம் அதிகரித்தது.

"என் அம்மா எவ்வளவோ சொன்னாங்க. என்னால குடியை விட முடியல. ஆனா உன்னைக் காதலிக்க ஆரம்பிச்சு கொஞ்ச நாள்ள விட்டுட்டேன்" என்றான் முருகன்.

"அது எப்படி? நீ குடிக்கக் கூடாதுன்னு நான் சொல்லலியே?" என்று கேட்டாள் நிலா.

"நீ சொல்லியிருந்தா கேட்டிருப்பேனோ என்னவோ! எங்கம்மா சொல்லி நான் கேக்கலியே! கேக்கக்கூடாதுன்னு இல்ல. என்னால விட முடியல. நீ சொல்லி நான் முயற்சி செஞ்சிருந்தாலும் என்னால விட்டிருக்க முடியாது."

"பின்ன எப்படி விட்டே?"

"உன் மொபைல்ல எப்பவும் பாட்டு ஓடிக்கிட்டே இருக்கு. நீ பேசறதே எனக்குக்  கேக்கல. பாட்டை நிறுத்து இல்லே சின்னதாக்கு"

"பாட்டை நிறுத்த மாட்டேன். நான் வேணும்னா இறைஞ்சு பேசறேன். உன் அம்மா சொல்லி குடியை விட முடியல, நான் சொன்னாலும் விட முடிஞ்சிருக்காதுன்னு சொல்ற. அப்புறம் எப்படி விட்டேன்னு கேட்டேன்."

"அப்பா! அதுக்காக இப்படியா கத்துவ? சொல்றேன். ஏன் குடிச்சேன்? குடிச்சா ஒரு குஷி வருது. அதை போதைம்பாங்க, கிக்கும்பாங்க. ஆனா உன்னைக் காதலிக்க ஆரம்பிச்சப்பறம் குடிக்கும்போது வர போதை மாதிரி எப்பவுமே இருந்துக்கிட்டிருக்கு. ஏற்கெனவே போதை இருக்கும்போது எப்படிக் குடிக்கத் தோணும்?" என்றான் முருகன்.

"எனக்குப் புரியலையே!" என்றாள் நிலா.

முருகன் அவளுக்கு எப்படி விளக்குவது என்று யோசித்தபோது மொபைலிலிருந்து பாடல் ஒலித்தது.

மது உண்டால் போதையைக் கொடுக்கும்.
அந்த மயக்கம் காதலில் கிடைக்கும்!

"கவிஞர் அழகா சொல்லியிருக்காரு பாரு. இப்ப புரியுதா?" என்றான் முருகன்.

நிலா புரிந்து கொண்டதாகத் தலையை ஆட்டி விட்டுச் சிரித்தாள்.

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 109
தகையணங்குறுத்தல் (தலைவியின் அழகு தலைவனை வருத்துதல்)

குறள் 1090
உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.

பொருள்:
கள் தன்னை அருந்துபவருக்குத்தான் மகிழ்ச்சியை (மயக்கத்தை/போதையை)க் கொடுக்கும். காதல் தன்னைக் கண்டவர்களுக்கு(உணர்ந்தவர்களுக்கு)க் கூட மகிழ்ச்சியை (மயக்கத்தை/போதையை)க் கொடுக்கும்.

Monday, March 4, 2019

1089. சங்கிலித் திருடன்!

"எப்படி இந்த இடம்?" என்றான் ஜெயராமன்.

"ரொம்ப அற்புதமா இருக்கு. ஆனா மலைப்பாதையில் நடக்கறதுதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு" என்றாள் லதா. 

"அங்கே ஒரு பாறை இருக்கு. அது பக்கத்தில போய் உக்காந்துக்கலாம்."

"அவங்கவங்க காதலியை பார்க், பீச்ன்னு அழைச்சுக்கிட்டுப் போவாங்க. நீ என்னடான்னா காடும், மலையுமா இருக்கற இடத்துக்கு அழைச்சுக்கிட்டு வந்திருக்கே" என்றாள் லதா.

"காதலர்களுக்கு வேண்டியது தனிமை. பீச்லேயும், பார்க்லேயும் அது கிடைக்குமா? இந்த மாதிரி இடத்துக்கு அதிகம் பேரு வர மாட்டாங்க. ஏன் இந்த இடம் உனக்குப் பிடிக்கலையா?" என்றான் ஜெயராமன்.

"அதான் அற்புதமா இருக்குன்னு சொன்னேனே? ஆனா கால் வலிக்குது. பெண்கள் மென்மையானவங்க. அவங்களை அதிகம் கஷ்டப்படுத்தக் கூடாது" என்றாள் லதா சிரித்தபடி.

"மலைப்பாதையில் அரை கிலோமீட்டர் கூட நடந்திருக்க மாட்டோம். அது கூட முடியாத அளவுக்கு மென்மையானவளா நீ? சரி. இனிமே மேலே போக வேண்டாம். இங்கேயே கொஞ்ச நேரம் உக்காந்துட்டுப் போயிடுவோம்."

"சரி" என்ற லதா சட்டென்று திரும்பி, "அங்கே என்ன முயலா ஓடுது?" என்றாள்.

"ஆமாம். இங்கே முயல், மான் மாதிரி மிருகங்கள் ஒண்ணு ரெண்டு இருக்கும்."

"சிங்கம், புலியெல்லாம் கூட இருக்குமா?"

"சே,சே! அப்படி இருந்தா இங்கே யாரையும் வரவே விட மாட்டாங்களே"

"குரங்கு?" என்றாள் லதா.

"நாம வரப்ப ஒரு சின்னப் பையன் குரங்கு, குரங்குன்னு கத்தினானே, கவனிக்கல?"

"ஆமாம், கத்தினான். ஆனா, குரங்கு எதுவும் என் கண்ணில படலியே?" என்றாள் லதா.

"உன் கண்ணில எப்படிப் படும்? அவன் கத்தினது உன்னைப் பாத்துத்தானே?"

"உன்னை..." என்று ஒரு சிறு கல்லை எடுத்து ஜெயராமன் மீது வீசினாள் லதா.

"சரி, சரி. கோவிச்சுக்காதே. அப்படியே உக்காந்திரு. உன்னை ஒரு ஃபோட்டோ எடுத்துடறேன்" என்றான் ஜெயராமன்.

"குரங்கை எதுக்கு ஃபோட்டோ எடுக்கணும்?"

"என் வீட்டில ஆஞ்சநேயர் படம் இல்லையே, அதுக்குத்தான்!"

"அப்ப, உன்னை இல்ல ஃபோட்டோ எடுக்கணும்? நில்லு. நான் எடுக்கறேன்" என்றாள் லதா.

"சரி. டிட் ஃபார் டேட்.  கணக்கு சரியாப்  போச்சு. இப்ப சமத்தா ஃபோட்டோக்கு போஸ் கொடு, பாக்கலாம்."

லதா சரியாக அமர்ந்து கொண்டாள்.

"அப்படியே இரு. அஞ்சாறு போட்டோ எடுத்துக்கறேன். நான் சொல்ற வரையிலும் எழுந்திருக்காதே"

லதா ஏதோ சொல்ல யத்தனித்தபோது, ஜெயராமன் ஆள்காட்டி விரலை வாயில் வைத்து 'பேசாதே' என்று ஜாடை காட்டினான்.

இரண்டு மூன்று நிமிடங்களுக்குப் பிறகு, "இப்ப எழுந்துக்க" என்றான் ஜெயராமன்.

லதா எழுந்து வந்து மொபைல் கேமராவில் எடுக்கப்பட்ட ஃபோட்டோக்களைப் பார்த்தாள்.

"அட! பின்னால ஒரு மான் இருக்கே, எப்படி?" என்றாள் லதா வியப்புடன்.

"தற்செயலா ஒரு மான் உனக்குப் பின்னால கொஞ்சம் தள்ளி வந்து நின்னுது. அது நம்பளைப் பாத்து ஓடறதுக்குள்ள க்ளிக் பண்ணிட்டேன்."

"ரொம்ப அருமையா இருக்கு!" என்றாள் லதா குதூகலத்துடன்.

"இது எவ்வளவு அருமையா இருக்குன்னு உனக்குத் தெரியாது. எனக்குத்தான் தெரியும்"

"என்ன தெரியும், சொல்லு."

"இந்த மானோட பார்வையைப் பாரு. எவ்வளவு அப்பாவித்தனமானமா  இருக்கு?"

"ஆமாம். அதுக்கென்ன?

"இந்த ஃபோட்டோவைப் பாரு. பின்னணியில் இருக்கற மானோட பார்வையில இருக்கற அப்பாவித்தனம் முன்னால உக்காந்திருக்கற  உன் பார்வையிலேயும் இருக்கு பாரு!"

"போடா!"

"அடே! என்ன ஒரு வெக்கம் பாரு. இந்த வெக்கத்தைப் படம் பிடிக்காம விட்டுட்டேனே!"

"போதும், போதும்."

"அடாடா! இப்ப கூட ஃபோட்டோ எடுத்திருக்கலாம் போலருக்கே! ஆனா ஒரு விஷயம்தான் உறுத்தலா இருக்கு."

"என்ன அது?"

"மான் மாதிரி மருட்சியான பார்வை, இயல்பா வர வெட்கம் இதெல்லாம் இருக்கறப்ப, கழுத்தில போட்டிருக்கற சங்கிலி மட்டும் செயற்கையாத் தெரியுது"

"ஓஹோ! என் கழுத்திலேந்து சங்கிலியைக் கழட்டிக்கிட்டுப் போகத்தான் இந்தப்  புகழ்ச்சி எல்லாமா? இரு, இரு. கீழே போனதும், உன்னைச் சங்கிலித் திருடன்னு சொல்லி போலீஸ்ல பிடிச்சுக் கொடுக்கறேன் பாரு!" என்று சொல்லி அவனை விளையாட்டாக அடித்தாள் லதா.

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 109
தகையணங்குறுத்தல் (தலைவியின் அழகு தலைவனை வருத்துதல்)

குறள் 1089
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து..

பொருள்:
பெண்மானைப் போன்ற வெகுளியான பார்வையும், நாணமும் அணிகலன்களாக அமைந்திருக்கும் இவளுக்கு வேறு அணிகலன்கள் எதற்கு?

1128. ஆறிய காப்பி!

"என்ன நம்ம பொண்ணு ஆம்பளைங்க மாதிரி அடிக்கடி காப்பி குடிக்கறா?" என்றார் சபாபதி. "ஏன், பொம்பளைங்க அடிக்கடி காப்பி குடிக்கக் கூட...