அதிகாரம் 126 - நிறையழிதல் (தயக்கம் உடைபடுதல்)

திருக்குறள்
காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 126
நிறையழிதல்

1251. கதவைப் பிளந்த கோடரி!

நடந்ததை நினைத்து, காதம்பரிக்கு இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை.

குருநாதன் மீது அவளுக்குச் சிறிது காலமாகவே காதல் இருந்தது உண்மைதான். 

குருநாதனைப் பார்த்தபோதெல்லாம், அவள் மனதுக்குள் ஏற்பட்ட புளகாங்கிதமும், உடலில் ஏற்பட்ட சிலிர்ப்பும், அந்தக் காதலை உறுதி செய்வதாகவே இருந்தன,

காதம்பரியைப் பார்த்தபோதெல்லாம், குருநாதனின் முகத்தில் ஏற்பட்ட மலர்ச்சியும், அவன் உடலில் தெரிந்த பரபரப்பும், குருநாதன் தன் மீது காதல் கொண்டிருப்பதை காதம்பரிக்கு உணர்த்தின.

ஆயினும், காதம்பரி குருநாதனை நேரில் சந்திப்பதைத் தவிர்த்தே வந்தாள். அப்படியே சந்திக்க நேர்ந்தாலும், சட்டென்று விலகிப் போய் விடுவாள்.

தன் காதலைக் கட்டுப்படுத்திக் கொண்டு, பெண்மைக்கு உரிய நாணத்தைப் பாதுகாக்கும் விதத்தில் தான் நடந்து கொண்டது காதம்பரிக்குச் சற்றுப் பெருமையாகக் கூட இருந்தது.

அப்படி இருக்கையில்தான், நேற்று அந்தச் சம்பவம் நிகழ்ந்து விட்டது.

ஒரு தனிமையான இடத்தில், இருவரும் தற்செயலாகச் சந்தித்தபோது, காதம்பரியின் கரத்தைப் பற்றிய குருநாதன், "என்ன காதம்பரி, எப்போது என்னைப் பார்த்தாலும், ஏன் ஓட்டமெடுக்கிறாய்? உனக்கு என் மீது விருப்பம் இல்லையா?" என்று கேட்டான்.

அப்போதே, தன் கையை விடுவித்துக் கொண்டு, அவள் விலகி இருக்க வேண்டும். ஆனால், அவள் அப்படிச் செய்யாமல், தலைகுனிந்தபடி அமைதியாக நின்றது குருநாதனுக்கு இன்னும் சற்றுத் துணிவைக் கொடுதிருக்க வேண்டும்!

சட்டென்று காதம்பரியை இறுகத் தழுவிக் கொண்டு விட்டான்.

ஆனால், அப்போதும் காதம்பரி தன்னை விடுவித்துக் கொள்ளவில்லை. சில விநாடிகளுக்குப் பிறகு, அவனேதான் அவளைத் தன் அணைப்பிலிருந்து விடுவித்தான். அதற்குப் பிறகுதான், காதம்பரி சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி வந்தாள்.

'இப்படி ஒரு சம்பவம் நிகழ எப்படி அனுமதித்தேன்? எனக்குத் துணையாக நின்று என்னைப் பாதுகாக்க வேண்டிய நாணம் எங்கே போயிற்று?'

இந்தக் கேள்வி திரும்பத் திரும்ப காதம்பரியின் மனதில் எழுந்து, அவளைக் குற்ற உணர்வுக்கு ஆளாக்கியது.

"ஒரே அடிதான். கதவு உடைஞ்சு விழுந்திடுச்சு!" என்று சொல்லிக் கொண்டே வந்தாள் காரம்பரியின் தாய்.

"என்ன ஆச்சு? எந்தக் கதவு உடைஞ்சது?" என்றாள் காதம்பரி, ஏதும் புரியாமல்.

"எதிர்த்த வீட்டுக் கனகவல்லி, வீட்டிலேந்து வாசலுக்கு வந்தப்ப, அவளோட ரெண்டு வயசுக் குழந்தை உள்ளே இருந்துக்கிட்டுக் கதவைத் தாழ்ப்பாள் போட்டுடுச்சு. குழந்தையால தாழ்ப்பாளைத் திறக்க முடியல. உள்ளே இருந்துக்கிட்டு பயந்து அழ ஆரம்பிச்சுடுச்சு. கனகவல்லிக்கு என்ன செய்யறதுன்னு தெரியல. அவ புருஷன் வேற ஊர்ல இல்ல."

"அப்புறம்?"

"யாரோ போய் விறகுக்கடையிலேந்து கோடாலியை எடுத்துக்கிட்டு வந்து, கதவு மேல ஒரு போடு போட்டாங்க. அவ்வளவுதான், கதவு உடைஞ்சு விழுந்துடுச்சு. பாவம், அவங்க புதுசாக் கதவு போடணும்!"

'ஓ, என் நாணத்தையும் மீறிக் காதலன் அணைப்புக்குள் நான் போனதும் இப்படித்தானோ? நாணம் என்ற தாழ்ப்பாள் பொருத்தப்பட்ட என் மன உறுதி என்ற கதவு, காமம் என்ற கோடரியில்தான் பிளக்கப்பட்டதோ!' என்று நினைத்துக் கொண்டாள் காதம்பரி.

குறள் 1251
காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.

பொருள்:
நாணம் என்னும் தாழ்ப்பாள் பொருந்திய நிறை என்ற கதவை, காமம் என்ற கோடாலி உடைத்து விடுகிறதே.

1252. இரக்கம் இல்லாதவர்கள்!

"ஏண்டி இன்னிக்கு வயல் வேலை முடிஞ்சு வர இவ்வளவு நேரமாயிடுச்சு?" என்றாள் சிவகாமி.

"என்ன செய்யறது? முழுசாக் களை எடுத்துட்டுத்தான் போகணும்னுட்டாரு பண்ணை மேலாளர். களை எடுக்கற வேலைதானே, மீதியை நாளைக்குச் செய்யறோம்னா கேக்க மாட்டேன்னுட்டாரு. நாங்க அஞ்சாறு பொம்பளைங்க பசியோட இருட்டுற வரை வயல்ல வேலை செஞ்சுட்டு வரோம். பொம்பளைங்களாச்சே, அவங்களை இவ்வளவு வேலை வாங்கறோமேங்கற எண்ணமோ, அவங்க வீட்டுக்குப் போயி எல்லாருக்கும் சோறாக்கணுமே, குழந்தைங்க பசியோட  இருப்பாங்களேங்கற கரிசனமோ கிடையாது. கொஞ்சம் கூட இரக்கம் இல்லாத மனுஷன்" என்று பொரிந்து தள்ளினாள் அவள் தோழி வள்ளி.

"சில பேரு அப்படித்தான் இரக்கம் இல்லாம இருப்பாங்க!"

"நீ வசதியான வீட்டுப் பொண்ணு. நீ என்னிக்கு வயல் வேலைக்குப் போயிருக்க? ரொம்ப அனுபவப்பட்டவ மாதிரி பேசற!"

"வயல் வேலைக்குப் போனாதான் இதெல்லாம் தெரியணுமா என்ன? உன்னை இருட்டினப்பறம் கூட வேலை வாங்கின மனுஷரை இரக்கம் இல்லாதவர்னு சொல்ற. நடுராத்திரின்னு கூடப் பார்க்காம நம்மைக் கஷ்டப்படுத்தறவங்க இருக்காங்க!"

"அது யாருடி நடுராத்திரியில வந்து கஷ்டப்படுத்தறது? கனவில வந்து கஷ்டப்படுத்தறவங்களைச் சொல்றியா?" என்றாள் வள்ளி சிரித்தபடி.

'தூங்கினால்தானே கனவு வரும்? தூக்கமே வர விடாமல், நள்ளிரவில் கூட என் மனதில் புகுந்து கொண்டு, கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் என்னை வாட்டி எடுக்கும் காம வேட்கையைப் பற்றி என்னால் உன்னிடம் எப்படிச் சொல்ல முடியும்?' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட சிவகாமி, "ஆமாம்" என்று சொல்லிச் சமாளித்தாள்.

குறள் 1252
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்.

பொருள்:
காதல் வேட்கை எனப்படும் ஒன்று இரக்கமே இல்லாதது; ஏனெனில், அது என் நெஞ்சில் நள்ளிரவிலும் ஆதிக்கம் செலுத்தி அலைக்கழிக்கிறது.

1253. படித்துறைப் பேச்சு

தண்ணீர் எடுத்து வர ஆற்றுக்குச் சென்ற பொன்னியும், அவள் தோழிகளும் ஆற்றின் படித்துறையில் குடங்களை வைத்து விட்டுச் சற்று நேரம் அங்கே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

பேச்சு அந்த ஊர் இளைஞர்களைப் பற்றித் திரும்பியது.

"இந்த இளமாறன் இருக்கானே, அவன் பெண்களைப் பார்த்தா, உடனே உதவி செய்ய ஓடி வருவான். ஏன் தெரியுமா?"

"ஏன்?"

"அப்படியாவது எந்தப் பெண்ணாவது தன்னைக் காதலிக்க மாட்டாளாங்கற நைப்பாசைதான்!"

அனைவரும் கொல்லென்று சிரித்தனர்.

இது போல் வேறு சில இளைஞர்களைப் பற்றியும் அவர்கள் கேலியாகப் பேசிச் சிரித்தனர்.

"இந்த முத்து இருக்கான் இல்ல? அவனைப் பார்த்தா ரொம்பப் பரிதாபமா இருக்கு!" என்றாள் சாரதா.

"ஏன்?"

"பாவம், அவனை எந்தப் பெண்ணும் ஏறெடுத்துப் பாக்கல போலருக்கு. அன்னிக்குப் பாக்கறேன். ஒரு கொடிக்குப் பக்கத்தில நின்னுக்கிட்டு, அதோட பேசிக்கிட்டிருக்கான்!"

"அடப்பாவமே! அவ்வளவு மோசமாப் போச்சா அவன் நிலைமை? பொதுவா, பெண்களைக் கொடி மாதிரின்னு சொல்லுவாங்க. அவன் கொடியையே பெண்ணா நினைச்சு, அதுகிட்ட காதல் மொழி பேசிக்கிட்டிருக்கான் போல இருக்கு!"

"தெரியாம பேசாதீங்கடி. அவர் ஒண்ணும் கொடியோட பேசல. அந்தக் கொடிக்குப் பின்னால நின்னுக்கிட்டிருந்த என்னோடதான் பேசிக்கிட்டிருந்தாரு!" என்று வெடித்தாள் பொன்னி.

"அடி கள்ளி, அதானா? நான் கூடக் கொடிக்குப் பின்னால ஏதோ அசையற மாதிரி இருக்கேன்னு நினைச்சேன்!" என்று சாரதா சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ஒரு தோழி ஒரு பெரிய தும்மல் போட்டாள்.

"ஏண்டி தும்மற?"

"தும்மலை அடக்க முடியுமா?" என்றாள் தும்மல் போட்டவள்.

'அவளால் தும்மலை அடக்க முடியாமல், அது அவளிடமிருந்து வெளிப்பட்டது போல்தான் நான் கூட இத்தனை நாட்களாக மறைத்து வைத்திருந்த காதலை என்னை அறியாமலே வெளிப்படுத்தி விட்டேனோ!' என்று நினைத்துத் தன்னை நொந்து கொண்டாள் பொன்னி.

குறள் 1253
மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்.

பொருள்:
என் காதல் ஆசையை நான் மறைக்கவே எண்ணுவேன்; ஆனால், அது எனக்கும் தெரியாமல் தும்மலைப் போல் வெளிப்பட்டு விடுகிறது.

1254. யாரிடமும் சொல்லாதே!

"இங்கே பார், நந்தினி! நீ என் உயிர்த்தோழிங்கறதாலதான் உங்கிட்ட என் காதலைப் பத்திச் சொன்னேன். நீ இதை யார்கிட்டேயும் சொல்லக் கூடாது" என்றாள் வேகவதி.

"நான் சொல்ல மாட்டேன்!" என்று சொல்லி நந்தினி சிரித்தபோது, 'நான்' என்ற வார்த்தைக்கு அவள் அதிகம் அழுத்தம் கொடுத்தது போல் வேகவதிக்குத் தோன்றியது.

னகவல்லி என்ற தோழியின் திருமணத்துக்கு வேகவதி சென்றிருந்தாள். அவளுடைய தோழிகள் சிலரும் வந்திருந்தனர்.

மணப்பெண்ணின் தோழிகள் என்ற உரிமையிலும், பொறுப்பிலும் வேகவதியும், அவள் தோழிகள் சிலரும் கல்யாண வேலைகளில் உதவினர்.

வேகவதி உணவு பரிமாறுவதில் உதவினாள்.

திருமணம் முடிந்ததும், மாலையில், வேகவதி தன் தோழிகளுடன் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தாள்.

"என்ன வேகவதி, நீ உணவு பரிமாறினதில எல்லாருக்கும் ரொம்ப திருப்தியாம். 'அந்தப் பொண்ணு எப்படி ஓடியாடி வெவ்வேறு உணவுவகைகளை எடுத்துக்கிட்டு வந்து எல்லாருக்கும் பரிமாறினா!' ன்னு கல்யாணத்துக்கு வந்திருந்த பல பேரும் பாராட்டினதை நான் கேட்டேன்!" என்றாள் ஒரு தோழி.

"ஏதோ என்னால முடிஞ்சதைச் செஞ்சேன்!" என்றாள் வேகவதி, சங்கடத்துடன்.

"ஆமாம், கல்யாணத்துக்கு உன்னோட ஆள் வந்திருந்தாரு போல இருக்கே!" என்றாள் வாருணி என்ற தோழி, குறும்பாகச் சிரித்தபடி.

"யாரு? அப்படி யாரும் இல்லையே!" என்றாள் வேகவதி திடுக்கிட்டு. உடனே கடைக்கண்ணால் நந்தினியைப் பார்த்தாள். நந்தினி தான் சொல்லவில்லை என்பது போல் தலையை மெல்ல ஆட்டினாள்.

"வீரகுமாரன்தான்! அவர்தானே உன்னோட ஆளு?" என்றாள் வாருணி.

"சேச்சே! அப்படியெல்லாம் எதுவும் இல்லை" என்றாள் வேகவதி.

"எங்ககிட்ட வேணும்னா நீ இல்லைன்னு சொல்லலாம். ஆனா நீ அவருக்கு விழுந்து விழுந்து பரிமாறினதைப் பார்த்துக்கிட்டிருந்த எல்லாருக்கும் இது தெரிஞ்சுடுச்சே! அதுவும், நீ அவருக்கு மூணாவது தடவையா பாயசம் போடப் போனப்ப, 'எங்களுக்கெல்லாம் கொஞ்சம் மிச்சம் வைம்மா! இன்னும் சில பேரு வேற சாப்பிட வேண்டி இருக்கு!' ன்னு ஒத்தர் சொல்ல, அதைக் கேட்டு எல்லாரும் பெரிசாச் சிரிச்சாங்களே! நீ பெரிய அழுத்தக்காரிதான். ஆனா, உன்னோட காதல் உன்னை அறியாமலேயே எல்லார் முன்னாலேயும் வெளிப்பட்டுடுச்சே!" என்று வாருணி சொல்லிச் சிரிக்க, மற்ற தோழிகளும் அவள் சிரிப்பில் சேர்ந்து கொண்டனர்.

குறள் 1254
நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும்.

பொருள்:
மன உறுதி கொண்டவள் நான் என்பதே என் நம்பிக்கை; ஆனால் என் காதல், நான் மறைப்பதையும் மீறிக் கொண்டு, மன்றத்திலேயே வெளிப்பட்டு விடுகிறதே!

1255. காதலன் வருவான்?

"ஊருக்குப் போயிட்டு வரேன்னு சொல்லி ஆறு மாசமாச்சு. இன்னுமா திரும்பி வராம இருப்பான்? அவன் கம்பெனியில போயி விசாரிச்சுப் பார்த்தியா?" என்றாள் மரகதம்.

"ஒரு கம்பெனியில சேல்ஸ் எக்சிக்யூடிவா இருக்கேன்னு சொன்னாரு. கம்பெனி பேரு சொல்லலியே!" என்றாள் மஞ்சுளா.

"ஏண்டி, எந்த கம்பெனியில வேலை செய்யறான்னு கூடத் தெரிஞ்சுக்காமயா ஒத்தனைக் காதலிப்பே?"

"இல்லைம்மா. இப்ப இருக்கறது ஒரு சின்ன கம்பெனி. சீக்கிரமே ஒரு பெரிய கம்பெனியில வேலைக்குச் சேரப் போறேன். அங்கே சேர்ந்தப்புறம் அந்த கம்பெனி பேரைச் சொல்றேன்னு சொன்னார் அம்மா!"

"அம்மா! இன்னிக்கு அவரை பஸ் ஸ்டாப்ல பார்த்தேன்!" என்றாள் மஞ்சுளா.

"பார்த்தியா? நல்ல வேளை. நான் கும்பிடற கடவுள் என்னைக் கை விடல" என்றாள் மரகதம், கைகளைக் கூப்பியபடி.

"இல்லைம்மா. அவர் என்னைப் பார்த்ததும், அவசரமா ஏதோ ஒரு பஸ்ஸில ஏறிப் போயிட்டாரு."

"அடப்பாவி! அப்ப இத்தனை நாளா, வேணும்னுதான் உன்னோட தொடர்பு கொள்ளாம இருந்திருக்கான். உன்னை நல்லா ஏமாத்திட்டானே! இனிமேயாவது, அவனை மறந்துட்டு  உன் வாழ்க்கையைச் சரி பண்ணிக்க."

"ஏண்டி மஞ்சுளா, அவன் உன்னை ஏமாத்திட்டான்னு தெரிஞ்சு ஒரு வருஷம் ஆகப் போகுது. ஆனா, நீ அவன் மறுபடி உன் கண்ல பட மாட்டானான்னு தேடி அலைஞ்சுக்கிட்டிருக்க. எப்பவும் அவன் நினைவாகவே இருக்க. வேற யரையாவது கல்யாணம் செஞ்சுக்கன்னாலும், கேக்க மாட்டேங்கற. சரியா சாப்பிடறதில்ல, தூங்கறதில்ல. உடம்பு வீணாப் போச்சு. உன்னை ஒத்தன் ஏமாத்திட்டான்னா, அவனை மறந்துட்டு இன்னொருத்தரைக் கல்யாணம் செஞ்சுக்கறதுதானே ஒரு தன்மானம் உள்ள பொண்ணு செய்ய வேண்டியது? இன்னும் எத்தனை நாளைக்கு அவன் மறுபடி உங்கிட்ட திரும்பி வர மாட்டானான்னு ஏங்கிக்கிட்டு இருக்கப் போற?" என்றாள் மரகதம்.

"என்னால அப்படி இருக்க முடியலையே அம்மா!" என்ற மஞ்சுளா, 'என்னைப் பீடித்திருக்கும் காதல் நோய் என்னைத் தன்மானத்தோட நடந்துக்க விடலையோ என்னவோ!' என்று நினைத்துக் கொண்டாள்.

குறள் 1255
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று.

பொருள்:
தம்மை வெறுத்து நீங்கியவரின் பின் செல்லாமல் மானத்தோடு நிற்கும் பெருந்தகைமை, காமநோய் உற்றவர் அறியும் தன்மையது அன்று.

1256. பம்பாய்க்கு ஒரு பயணம்

பவானியின் காதலன் ராகேஷ், தனக்கு பம்பாயில் ஒரு நல்ல வேலை கிடைத்திருப்பதாகவும், அங்கே போன பிறகு தன் விலாசத்தைத் தெரிவித்து அவளுக்குக் கடிதம் எழுதுவதாகவும் சொல்லி விட்டு, அவளிடமிருந்து விடைபெற்றுப் போனான்.

ஆனால், மூன்று மாதங்களாகியும், அவனிடமிருந்து எந்தக் கடிதமும் வராததால், பம்பாய்க்குச் சென்று அவனைப் பார்ப்பது என்று முடிவு செய்தாள் பவானி.

 தன் முடிவைத் தன் தோழி வசந்தாவிடம் கூறினாள் பவானி.

 "என்னது, பம்பாய்க்குப் போகப் போறியா?" என்றாள் வசந்தா.

"ஆமாம். அவர் அங்கேதானே இருக்காரு?" 

"இங்கே பாரு, பவானி. நீங்க ரெண்டு பேரும் காதலிச்சீங்க. அவர் திடீர்னு பம்பாயில தனக்கு ஒரு வேலை கிடைச்சதா உங்கிட்ட சொல்லிட்டுப் போனாரு. போய் மூணு மாசம் ஆச்சு. உனக்கு ஒரு போஸ்ட் கார்டு கூடப் போடலை. தனக்கு பம்பாயில வேலை கிடைச்சதா அவர் சொன்னதே பொய்யா இருக்கலாம். உங்கிட்டேந்து விலகிப் போறதுக்காக அப்படி ஒரு பொய்யை அவர் சொல்லி இருக்கலாம். அவர் இந்த ஊர்லேயே கூட இருக்கலாம். சாரி. என் மனசில பட்டதை வெளிப்படையா சொல்லிட்டேன்" என்றாள் வசந்தா.

"இல்லை வசந்தா. அவரு அப்பாயின்ட்மென்ட் லெட்டரை எங்கிட்ட காட்டினாரு. கம்பெனி பேரு எனக்குத் தெரியும். டைரக்டரி என்கொயரிக்கு ஃபோன் பண்ணி, பம்பாயில அந்த கம்பெனியோட அட்ரஸை வாங்கிட்டேன். அந்த அட்ரசுக்குப் போய்ப் பார்க்கப் போறேன். அவர் அங்கே இருந்தா, அவர்கிட்ட ரெண்டுல ஒண்ணு கேட்டுட்டு வரப் போறேன். அப்படி அவர் அங்கே இல்லேன்னா, எல்லாம் முடிஞ்சுடுச்சுன்னு புரிஞ்சுப்பேன்" என்றாள் பவானி.

"உன் அம்மாகிட்ட என்ன சொல்லப் போற?"

"ஒரு தோழியோட கல்யாணத்துக்கு, உன்னோட பம்பாய்க்குப் போகப் போறதா சொல்லப் போறேன்!"

"அடிப்பாவி! என்னையும் இதில இழுத்து விடப் போறியா?"

"ஆமாம். நான் போயிட்டுத் திரும்பி வர வரைக்கும், என் அம்மா கண்ணில பட்டுடாதே!"

"உன்னை மாதிரி ஒரு சாதுவான பொண்ணை இந்த அளவுக்குச் செயல்பட வைக்குதுன்னா, உன் காதல் ரொம்ப சக்தி வய்ந்ததுன்னுதான் தோணுது!" என்றாள் வசந்தா.

"சக்தி வாய்ந்ததோ என்னவோ, ரொம்பக் கொடியது. இல்லேன்னா, என்னை விட்டுட்டுப் போனவரைத் தேடி ஓடச் சொல்லி என்னை விரட்டுமா?" என்றாள் பவானி.

குறள் 1256
செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்.

பொருள்:
என்னைப் பிரிந்து சென்றவர் பின்னே நான் போய்ச் சேர வேண்டும் என்று என்னைப் பிடித்த இந்தக் காதல் நோய் தூண்டுவதால், இது மிக மிகக் கொடியது.

1257. கனவல்ல நிஜம்!

அமரா கட்டிலில் அமர்ந்திருந்தாள். அருகில் வந்த சந்திரன், தன் கையால் அவள் முகத்தை நிமிர்த்தினான்.

"என்ன வெக்கமா?" என்றான்.

"பொண்ணுன்னா வெக்கம் இருக்காதா பின்னே?" என்றாள் அமரா.

அமராவைத் தன் இரு கைகளாலும் அணைத்துக் கொண்டான் சந்திரன் அதற்குப் பிறகு...

சட்டென்று கண் விழித்தாள் அமரா.

'நல்லவேளை, கனவுதான்' என்ற ஆறுதலான எண்ணம் முதலில் தோன்றினாலும், 'கனவுதான் என்றாலும் இப்படியா?' என்ற கண்டனக் குரல் மனதில் எழுந்தது.

'ஒருவேளை, இதையெல்லாம் நான் விரும்புகிறேனோ? அதனால்தான் கனவில் இப்படி வந்ததோ?

மரா கட்டிலில் அமர்ந்திருந்தாள். அருகில் வந்த சந்திரன், தன் கையால் அவள் முகத்தை நிமிர்த்தினான்.

"என்ன வெக்கமா?" என்றான்.

"பொண்ணுன்னா வெக்கம் இருக்காதா பின்னே?" என்றாள் அமரா.

அமராவைத் தன் இரு கைகளாலும் அணைத்துக் கொண்டான் சந்திரன் அதற்குப் பிறகு...

"என்ன சந்திரன் இது? இப்படியெல்லாம்..." என்றாள் அமரா.

"ஏன்? இத்தனை நேரம் பேசாமதானே இருந்தே! உனக்குப் பிடிச்ச மாதிரிதானே நடந்துக்கிட்டேன்?" என்றான் சந்திரன்.

ஒரு கணம் கண்களை மூடிக் கொண்டாள் அமரா.

'அன்று கனவில் நடந்த நிகழ்வுகளைக் கனவுதானே என்று நினைத்து என்னைச் சமாதானப்படுத்திக் கொண்டேன். இன்று அதே நிகழ்வுகள் நிஜமாக நிகழ நான் எப்படி அனுமதித்தேன்? எனக்கு விருப்பமானபடி சந்திரன் நடந்து கொண்டான் என்பதால், நாணம் என்ற குணம் எனக்கு இயல்பாக இருப்பதையே நான் அறியாமல் இருந்து விட்டேனோ?' என்ற சிந்தனை அவள் மனதில் ஓடியது. 

குறள் 1257
நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்.

பொருள்:
நமது அன்புக்குரியவர் நம்மீது கொண்ட காதலால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்யும்போது, நாணம் எனும் ஒரு பண்பு இருப்பதையே நாம் அறிவதில்லை.

1258. கண்ணே, கனியே!

"இங்கே பாருங்க. தொட்டுப் பேசறதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான். அதுவரையிலும் வெறும் வாய்ப் பேச்சு மட்டும்தான்!" என்றாள் சரண்யா. 

"கண்ணே, கனியே, முத்தே அருகே வா!" என்றான் ராஜசேகர்.

"அருகே வரதெல்லாம் கிடையாது. இப்பதானே சொன்னேன்!"

"நான் சும்மா பாட்டுதானே பாடினேன்!"

"அப்புறம்?"

"அப்புறம்னா? தொடர்ந்து பாடணுமா? 
ஒருநாள் இரவு நிலவை எடுத்து உன் உடல் அமைத்தானோ
பலநாள் முயன்று வானவில் கொண்டு நல்வண்ணம் தந்தானோ?"

"போதும், போதும். வர்ணனை ரொம்ப ஓவரா இருக்கு."

"நான் இன்னும் வர்ணிக்கவே ஆரம்பிக்கலியே! பாட்டு மட்டும்தானே பாடினேன்!"

"சரி. வர்ணிங்க பார்க்கலாம்!"

"உன் அழகை வர்ணிக்கறதை விட, உன் பண்பையும் அடக்கத்தையும் வர்ணிக்கறதுதான் எனக்குப் பிடிக்கும். இந்தக் காலத்தில இப்படி ஒரு பொண்ணா?..."

ராஜசேகர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.

சில நிமிடங்கள் கழித்து, "விடுங்க. என்ன இது? நான் தொடவே கூடாதுன்னு சொல்லிக்கிட்டிருக்கேன். ஆனா நீங்க என்னன்னா என்னை அணைச்சுக்கிட்டிருக்கீங்க!" என்று ராஜசேகரின் அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயன்றாள் சரண்யா.

"அஞ்ச நிமிஷமா என் அணைப்பில இருக்கே! தெரியுமா உனக்கு?" என்றான் ராஜசேகர், சிரித்தபடி.

"சரியான திருடர் நீங்க. என்னென்னவோ பேசி என்னோட நாணத்தையே விட வச்சுட்டீங்களே!" என்று பொய்க் கோபத்துடன் அவன் மார்பில் தன் கைகளால் மென்மையாகக் குத்தினாள் சரண்யா.

குறள் 1258
பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை.

பொருள்:
நம்முடைய பெண்மையாகிய அரணை அழிக்கும் படையாக இருப்பது, பல மாயங்களில் வல்ல, கள்வனான காதலருடைய பணிவுடைய மொழி அன்றோ?

1259. வரட்டும், அவர் வரட்டும்!

இன்று அவர் ஊரிலிருந்து வந்து விட்டாராம்! இன்னும் சற்று நேரத்தில் என்னைப் பார்க்க இங்கே வருவதாகச் செய்தி சொல்லி அனுப்பி இருக்கிறார்.

எத்தனை நாட்கள் கழித்து, இல்லை எத்தனை மாதங்கள் கழித்து?

போகும்போது சொல்லி விட்டுப் போனது என்ன? 

'நீ கண்ணிமைக்கும் நேரத்துக்குள் வந்து விடுவேன்!'

இந்த ஆறேழு மாதங்களில் எத்தனை லட்சம் முறை கண் இமைத்திருப்பேன், எத்தனையோ கோடி முறை கூட இருக்கக் கூடும்! 

இதுதான் கண் இமைக்கும் நேரத்துக்குள் வருவதா?

சரி. ஆண்கள் பொருள் ஈட்டக் கடல் கடந்து போவார்கள்தான். திரும்ப வர அதிக நாட்கள் பிடிக்கும் என்ற நிலை ஏற்பட்டிருந்தால், யாரிடமாவது சொல்லி அனுப்பி இருக்கலாமே! 

இந்த ஆறேழு மாதங்களில், அவர் இருந்த இடத்திலிருந்து இந்த ஊருக்கு நான்கைந்து கப்பல்களாவது வந்து போயிருக்குமே! கப்பலில் வந்த மாலுமி, பயணி யாரிடமாவது எனக்கு ஒரு மடல் கொடுத்து அனுப்பி இருக்கலாமே! ஒரு சில பொற்காசுகள் கொடுத்தால், அவருடைய மடலை என்னிடம் கொண்டு வந்து தரக் கூடியவர்கள் இருந்திருப்பார்களே!

எல்லாம் ஒரு அலட்சியம். இவள் எங்கே போய் விடப்  போகிறாள் என்ற மதர்ப்பு! எப்போது திரும்பி வந்தாலும், நான் ஓடிப் போய் அவரை அணைத்துக் கொள்வேன் என்ற நம்பிக்கை!

அதுதான் நடக்கப் போவதில்லை!

அவர் இங்கு வந்ததும், நான் உள்ளே போய்க் கதவைத் தாள் போட்டுக் கொள்ளப் போகிறேன் - கலிங்கத்துப் போரிலிருந்து சோழ மன்னர் திரும்பி வந்தபோது, மகாராணி அந்தப்புரத்தின் கதவைத் தாளிட்டுக் கொண்டு மன்னரை உள்ளே வர விடாமல் வெளியிலேயே நிறுத்தி வைத்தாராமே, அது போல்! 

கதவைத் திறந்து வெளியே வரும்படி அவர் என்னைக் கெஞ்ச வேண்டும். இத்தனை நாட்கள் என்னைப் பிரிந்து இருந்ததற்காக என்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். நீண்ட நேரம் ஊடலாடி விட்டுத்தான், சமாதானம் அடைந்து அவர் என்னை நெருங்க அனுமதிக்கப் போகிறேன்.

வாயிலில் அரவம் கேட்கிறது. அவர் வந்து விட்டார் போலிருக்கிறது. 

இப்போதே அறைக்குள் போய் விடலமா?

வேண்டாம். அவர் உள்ளே வரட்டும். அவர் என்னைப் பார்த்த பிறகு, அறைக்குள் போய்க் கதவைத் தாளிட்டுக் கொள்கிறேன். அப்போதுதான் அவருக்கு என் கோபம் புரியும்.

...................

என்னவோ தெரியவில்லை. அவர் உள்ளே நுழைந்ததுமே. ஓடிப் போய் அவரைத் தழுவிக் கொண்டு விட்டேன்,

இவ்வளவு நேரம் சிந்தித்து, நான் போட்டிருந்த திட்டத்தை என் நெஞ்சம் முறியடித்து விட்டது!

குறள் 1259
புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.

பொருள்:
ஊடல் கொண்டு பிணங்குவோம் என நினைத்துத்தான் சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விடுத்து அவருடன் கூடுவதைக் கண்டு என் பிடிவாதத்தை மறந்து தழுவிக் கொண்டேன்.

1260. ஒரு நாள் கூத்து!

"என்னடி, மறுபடியும் உன் காதலனோட சண்டையா?" என்றாள் அம்பிகா.

"ஆமாம். அவர் வேலைதான் முக்கியம்னு நினைக்கிறாரு. எனக்குக் கொஞ்சம் கூட முக்கியத்துவம் கொடுக்கறதில்லை. அதானால, வேலை முக்கியமா, நான் முக்கியமான்னு தீர்மானிச்சுக்கங்கன்னு சொல்லிட்டு வந்துட்டேன்!" என்றாள் சாந்தா.

"வேலை வேண்டாம், நீதான் முக்கியம்னு அவ வந்துட்டா, கல்யாணத்துக்குப்புறம் சாப்பாட்டுக்கு என்ன செய்வீங்க?"

"வேலை வேண்டாம்னு நான் சொல்லியே! எனக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கன்னுதானே சொல்றேன்?"

"இந்த ஊடல் எத்தனை நாளைக்கோ, பார்க்கலாம்!?"

"அவர் என் வழிக்கு வர வரையில, நான் அவர்கிட்ட பேசப் போறதில்லை!" என்றாள் சாந்தா.

"வீட்டுக்குள்ளே வரும்போதே, வெண்ணெய் காய்ச்சற மணம் மூக்கைத் துளைக்குதே!" என்று சொல்லிக் கொண்டே வந்தாள் அம்பிகா.

"உள்ளே அம்மா வெண்ணெய் காய்ச்சிக்கிட்டிருக்காங்க" என்ற சாந்தா, சற்றுத் தயங்கி விட்டு, "அவர் வராரு இல்ல, அதான்!" என்றாள்.

"அவர் வராரா? நேத்திக்குத்தான் சண்டை போட்டுக்கிட்டீங்க. அதுக்குள்ள சரியாயிடுச்சா? 'ஒருநாள் கூத்துக்கு மீசையை வச்சான்' ங்கற மாதிரி இருக்கு. அப்ப, அவர் உன் வழிக்கு வந்துட்டார்னு சொல்லு!" என்றாள் அம்பிகா, சிரித்துக் கொண்டே.

"அப்படிச் சொல்ல முடியாது. ஆனா, எங்களுக்குள்ள இப்ப எந்தச் சண்டையும் இல்லை."

"அது எப்படி? நீ சொன்னதை அவரு ஏத்துக்காதபோதே, எப்படி நீ சமாதானம் ஆனே, அதுவும் ஒரே நாளில?"

"போடி! ஒத்தரோட நெருங்கிப் பழகினப்புறம், சண்டை போட்டுக்கிட்டுப் பிடிவாதமா இருக்கறதுக்கு என் மனசு என்ன கல்லா?" என்றாள் சாந்தா.

"கல்லு இல்ல. உள்ளே உன் அம்மா நெருப்பில காய்ச்சறாங்களே, அந்த வெண்ணெய் மாதிரிதான் உன் மனசு. அதனாலதான், ஊடல்ல உன்னால ஒரு நாள் கூடத் தாக்குப் பிடிக்க முடியல!" என்றபடியே, தோழியின் கைகளை ஆதரவுடன் பற்றினாள் அம்பிகா.

குறள் 1261
நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்.

பொருள்:
நெருப்பிலிட்ட கொழுப்பைப் போல் உருகிடும் நெஞ்சம் உடையவர்கள், கூடிக் களித்த பின் ஊடல் கொண்டு அதில் உறுதியாக இருக்க முடியுமா?

 அறத்துப்பால்                                          பொருட்பால் 


No comments:

Post a Comment

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...