Wednesday, October 26, 2022

1156. அன்பு எங்கே?

"என்னது? ஊருக்குப் போறீங்களா?" என்றாள் மாலினி அதிர்ச்சியுடன்.

"ஆமாம். அதுக்கு ஏன் இப்படி ஆச்சரியப்படற?" என்றான் மகிழ்நன்.

"ஆச்சரியம் இல்ல. அதிர்ச்சியா இருக்கு. இப்படியா திடீர்னு கிளம்புவீங்க? நாளைக்குப் போறேன்னு இன்னிக்கு வந்து சொல்றீங்க! உங்களை விட்டுப் பிரிஞ்சிருக்கறது எனக்கு எவ்வளவு வருத்தமா இருக்குமேன்னு நினைச்சுப் பாத்தீங்களா?"

"இது சில மாதங்களுக்கான பிரிவுதானே? ஒரு மாசம் முன்னாடியே சொல்லியிருந்தா உனக்கு வருத்தமா இருந்திருக்காதா?"

"அது இல்லீங்க. இப்படி திடீர்னு சொல்லி எனக்கு அதிர்ச்சி கொடுக்காம, கொஞ்சம் முன்னாலேயே சொல்லி என்னைத் தயார்ப்படுத்திக்கக் கொஞ்சம் அவகாசம் கொடுத்திருக்கலாம் இல்ல?"

"நீ சொல்றது எனக்குப் புரியல மாலினி. எப்ப சொன்னா என்ன? சரி, நாளைக்கு விடிஞ்சதும் கிளம்பிடுவேன். வரதுக்கு மூணு மாசம் ஆகும்!" என்றான் மகிழ்நன்.

"என்னடி, உன் கணவர் இன்னும் ஒரு வாரம், பத்து நாள்ள வந்துடறதா யார் மூலமோ செய்தி அனுப்பி இருக்காராமே, அப்படியா?" என்றாள் காமவர்த்தினி.

"வரபோது வரட்டும். அதுக்கென்ன இப்ப?" என்றாள் மாலினி ஆர்வம் இல்லாமல்.

"என்னடி இப்படிக் கொஞ்சம் கூட ஆர்வம் இல்லாம பேசற? ஊருக்குப் போன கணவன் மூணு மாசம் கழிச்சுத் திரும்பி வரார்னு ரொம்ப உற்சாகத்தோட இருப்பேன்னு நினைச்சேன்!"

"ஊருக்குப் போகும்போது என்னைப் பிரிஞ்சு இருக்கப் போற வருத்தம் கொஞ்சம் கூட இல்லாம, ஏதோ காலையில வேலைக்குப் போயிட்டு மாலையில வீட்டுக்கு வரப் போற மாதிரி போயிட்டு வரேன்னு சாதாரணமா சொல்லிட்டுப் போனாரு. என் மேல அவருக்கு இருக்கற அன்பு அவ்வளவுதான். இப்ப திரும்பி வந்து என் மேல அன்பைப் பொழியப் போறாரா என்ன?" என்றாள் மாலினி, உற்சாகம் இல்லாதவளாக."

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 116
பிரிவாற்றாமை

குறள் 1156
பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை.

பொருள்:
போய் வருகிறேன் என்று கூறிப் பிரிகிற அளவுக்குக் கல் மனம் கொண்டவர் திரும்பி வந்து அன்பு காட்டுவார் என ஆவல் கொள்வது வீண்.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Saturday, October 22, 2022

1155. விடை கொடுப்பாளா சுகாசினி?

"எதுக்கு என் அம்மாவை வரச் சொன்னீங்க?" என்றாள் சுகாசினி.

"பின்னே, நீ இப்படிக் காய்ச்சலோட படுத்துக் கிடந்தா உன்னை இப்படியே விட்டுட்டு நான் எப்படி ஊருக்குப் போக முடியும்?" என்றான் வேலன்.

"அப்படின்னா, நீங்க ஊருக்குப் போகிறதுக்காகத்தான் என் அம்மாவை வரச் சொல்லி இருக்கீங்க! என் மேல உள்ள அக்கறையினால இல்ல!" என்று வெடித்தாள் சுகாசினி.

"நான் ஊருக்குப் போறதே நாலு காசு சம்பாதிச்சு உன்னை நல்லா வச்சுக்கணுங்கறதுக்காகத்தான்!"

"நீங்க போங்க மாப்பிள்ளை! நான் பாத்துக்கறேன்!" என்றாள் சுகாசினியின் தாய் நீலா.

"கணவன் பிரிஞ்சு போறேன்னு சொன்னா மனைவிக்குக் கஷ்டமாத்தான் இருக்கும். ஆனா ஆண்கள் நாலு இடத்துக்குப் போனாதான் நாலு காசு சம்பாதிச்சு தன் மனைவியையும், குழந்தைகளையும் நல்லா வச்சுக்க முடியும்!" என்றாள் நீலா, சுகாசினியிடம.

"உனக்கென்ன? நீ சொல்லுவ. உன் புருஷனா உன்னை விட்டுப் பிரிஞ்சு போகப் போறாரு?"

"போயிருக்காருடி! அதுவும் கல்யாணமான ஒரு மாசத்திலேயே பிரிஞ்சு போனாரு. உனக்காவது கல்யாணமாகி ஒரு வருஷம் ஆச்சு!"

"நீ அவரைத் தடுக்கலையா?"

"தடுக்கலையாவது! அழுது புரண்டு ஆர்ப்பாட்டம் செஞ்சதில காய்ச்சல் வந்து படுத்துட்டேன். உனக்கு வந்திருக்கிறதை விட மோசமான காய்ச்சல். அப்ப எங்க ஊர்ல நல்ல வைத்தியரு கூட இல்லை. உன் அப்பா என் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தாரு. ஒரு வழியா, காய்ச்சல்லேந்து மீண்டு எழுந்தேன். அப்பவும் என்ன சொன்னேன் தெரியுமா? இப்ப என்னை நல்லா கவனிச்சு என்னைக் காப்பாத்திட்டீங்க. என்னை விட்டுட்டுப் போனீங்கன்னா நீங்க திரும்பி வரச்சே நான் இருப்பேனான்னு சொல்ல முடியாதுன்னு சொன்னேன். அதனால அவர் தன் பயணத்தைக் கைவிட்டுட்டாரு."

"உன்னைப் பிரிஞ்சு போனார்னு சொன்னியே?"

"அப்புறம் யோசிச்சுப் பாத்ததில, கஷ்டப்பட்டாவது அவரோட பிரிவைக் கொஞ்ச நாளைக்குத் தாங்கிக்கறதுதான் குடும்பத்துக்கு நல்லதுன்னு தோணிச்சு. அப்புறம் நானே அவரைப் போகச் சொல்லி அனுப்பினேன். அவரைப் பிரிஞ்சிருந்தது கஷ்டமாத்தான் இருந்தது. ஆனா தாங்கிக்கிட்டேன்."

"நானும் உன்னை மாதிரி பிரிவுத் துயரைத் தாங்கிக் கிட்டு அவரை அனுப்பி வைக்கணுங்கறியா?"

"அதை நீதான் முடிவு செய்யணும். மாப்பிள்ளை மூட்டை முடிச்சையெல்லாம் கட்டி வச்சுட்டு நீ விடை கொடுக்கணுங்கறதுக்காக்கக் காத்திருக்காரு!" என்றாள் நீலா.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 116
பிரிவாற்றாமை

குறள் 1155
ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு.

பொருள்:
என் உயிரைக் காக்க எண்ணினால் அதைக் காப்பதற்கு உரிய அவர், என்னை விட்டுப் பிரிவதைத் தவிர்க்க வேண்டும். மீறிப் பிரிந்தால் நான் இனி அவரைச் சேர்வது அரிது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Tuesday, October 18, 2022

1154. வார்த்தை தவறி விட்டாய் கண்ணா!

"ஏண்டி, உன் கணவர் உன்னைப் பிரிஞ்சு இன்னொரு பொண்ணுகிட்டேயா போறாரு? வியாபராத்துக்காகக் கடல் கடந்து போறாரு. இதுக்குப் போய் அலுத்துக்கறியே!" என்றாள் மனோரமா.

"அலுத்துக்கறேனா? நிலை குலைஞ்சு போயிருக்கேன்!" என்றாள் விசித்ரா, பொங்கி வந்த கண்ணீரை அடக்கியபடி.

மனோரமா பெரிதாகச் சிரித்தாள்.

"உன் பெயருக்கேற்றபடி நீ விசித்திரமானவளாத்தான் இருக்கே! ஆண்கள் தொழில், வியாபாரம்னு அடிக்கடி வெளியூர் போறது இயல்பா நடக்கற விஷயம்தான். ஆண்கள் வெளியில போய்ப் பொருள் ஈட்டலேன்னா வீட்டில அடுப்பு எப்படி எரியும்? என் வீட்டுக்காரர் அடிக்கடி வெளியூர் போயிட்டுப் பல நாள் கழிச்சுத்தான் வருவாரு. நான் அதுக்காக மனசு உடைஞ்சு போயிட்டேனா என்ன?"

"உன் கணவரைப் பிரிஞ்சு இருக்கறது உனக்கு வருத்தமா இல்லையா" என்றாள் விசித்ரா.

"வருத்தம் இல்லாம எப்படி இருக்கும்? சொன்னா நம்ப மாட்டே. முதல் தடவை அவர் வெளியூர் போகப் போறதா சொன்னப்ப அவர் போகக் கூடாதுன்னு நான் தரையில புரண்டு அழுதேன்!"

மனோரமா தரையில் புரண்டு அழும் காட்சியை மனக்கண்ணால் பார்த்தபோது, வருத்தமான மனநிலையிலும்  விசித்ராவுக்குச் சிரிப்பு வந்தது.

"அப்புறம்?" என்றாள்.

"அப்புறம் என்ன? நான் அழுததுக்காகப் போகாம இருந்திருப்பாரா? என்னை சமாதானப்படுத்திட்டுப் போனாரு. ரெண்டு மூணு தடவைக்கு அப்புறம் பழகிப் போச்சு. ஒரு ரகசியம் சொல்லட்டுமா? என் வீட்டுக்காரர் ஊர்ல இல்லாதப்பதான் நான் உன்னைப் பார்க்க அடிக்கடி வரேன்! உன் மேல இருக்கிற அன்பினால இல்ல!" என்றாள் சிரித்துக் கொண்டே.

தோழியைச் சீண்டி அவள் துயர மனநிலையை மாற்றி அவளைச் சிரிக்க வைக்க மனோரமா செய்த முயற்சி பலன் தரவில்லை.

விசித்ரா சற்று யோசித்து விட்டு, "ஆமாம். கல்யாணத்துக்கு முன்னால உன்னை விட்டுப் பிரிய மாட்டேன்னு உன் கணவர் உனக்கு உறுதிமொழி கொடுத்தாரா?" என்றாள்.

"அதெல்லாம் இல்லை. அப்படியெல்லாம் யாராவது உறுதிமொழி கொடுப்பாங்களா என்ன?" என்றாள் மனோரமா.

"என் கணவர் கொடுத்திருக்காரே! எப்பவும் உன்னை விட்டுட்டு எங்கேயும் போக மாட்டேன், எங்கே போனாலும் உன்னையும் கூட்டிக்கிட்டுத்தான் போவேன்னு திருமணத்துக்கு முன்னால அவர் எனக்கு உறுதி கொடுத்தாரு. நான் அதை நம்பினேன். இப்ப அவர் அதை மீறிட்டாரு. கொடுத்த வாக்கை மீறினதுக்காக அவரைக் குற்றம் சொல்லாம, அவர் பேச்சை நம்பினதுக்காக என்னைக் குற்றம் சொல்றியே! இது என்ன நியாயம்?" என்றாள் விசித்ரா.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 116
பிரிவாற்றாமை

குறள் 1154
அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு.

பொருள்:
பிரிந்திடேன், அஞ்சாதே எனச் சொல்லியவர் எனைப் பிரிந்து செல்வாரானால், அவர் சொன்னதை நான் நம்பியதில் என்ன குற்றமிருக்க முடியும்?.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Saturday, October 15, 2022

1153. அரசரின் ஆலோசகர்

"உன் வீட்டுக்காரர் அரசருக்கே ஆலோசனை சொல்றவராமே!" என்றாள் சாந்தினி.

"ஆமாம். மற்ற நாடுகள் எதிர்காலத்தில என்னென்ன செய்வாங்கங்கறதையெல்லாம் கணிச்சு சொல்லுவாரு. அதனால அரசர் அவரைத் தன் ஆலோசகராக வச்சுக்கிட்டிருக்காரு!" என்றாள் வாதினி பெருமையாக.

"எப்படி அது? அவரு என்ன சோதிடரா, இல்லை முக்காலும் உணர்ந்த முனிவரா?"

"ரெண்டும் இல்லை. எந்த அரசர் எப்படிப்பட்டவர்ங்கறதை முதல்ல கவனிச்சுப் புரிஞ்சுக்கிட்டு, நடக்கற விஷயங்களை உற்று கவனிச்சு, ஒற்றர்கள் கொண்டு வர செய்திகளை எல்லாம் சேர்த்துப் பாத்து எந்த அரசர் எந்த நேரத்தில எப்படி நடந்துப்பாருன்னு யோசிச்சுப் பாத்து சொல்றதுதான் அவரோட திறமை!"

"இப்படிப்பட்டவர் கணவராக் கிடைச்சதுக்கு நீ கொடுத்து வச்சிருக்கணுண்டி!" என்றாள் சாந்தினி.

"ஏண்டி உற்சாகம் இல்லாம இருக்க?" என்றாள் சாந்தினி.

"என் கணவர் திடீர்னு எங்கேயாவது பயணம் போயிடுவாரோ, நான் அவரை விட்டுப் பிரிஞ்சிருக்க வேண்டி இருக்குமோன்னு எனக்குக் கவலையா இருக்கு!" என்றாள் வாதினி.

"அவர் உன்னை விட்டு எப்பவுமே பிரிய மாட்டேன்னு உனக்கு உறுதி அளிச்சிருக்கார்னு சொன்னியே!"

"உறுதி அளிச்சிருக்கார்தான்! ஆனா அரசாங்கத்தில முக்கியமான பொறுப்பில இருக்கறவரு எப்பவாவது பயணம் போகாமயா இருப்பாரு?"

"அப்படின்னா அவர் உனக்குப் பொய் வாக்குறுதி கொடடுத்திருக்கார்னு சொல்றியா?"

"சேச்சே! அப்படிச் சொல்லல. தான் எப்பவும் அரண்மனையிலதான் இருப்போம், வெளியூருக்கு எங்கேயும் போக வேண்டி இருக்காதுன்னு அவர் நினைச்சிருக்கலாம். ஆனா அவரோட வேலை செய்யற பல பேர் வேலை விஷயமா பயணம் போகறதைப் பாக்கறப்ப, இவரும் சில சமயம் என்னை விட்டுட்டுப் பயணம் போக வேண்டி இருக்குமோன்னு எனக்கு பயமா இருக்கு!" என்றாள் வாதினி.

"மற்ற அரசர்கள் நாளைக்கு என்ன செய்யப் போறாங்கன்னு கணிச்சுச் சொல்ற உன் கணவர் உன்னைப் பிரியமாட்டேனு சொன்னா, அந்தக் கணிப்பு மட்டும் சரியா இருக்காதோன்னு நினைக்கறியே!" என்றாள் சாந்தினி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 116
பிரிவாற்றாமை

குறள் 1153
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்.

பொருள்:
எல்லாம் அறியும் ஆற்றல் உ டைய அவரும் ஒருநேரம் பிரிவார் என்றால், பிரியேன் என்று அவர் சொல்லும் உறுதி மொழியை நம்பித் தெளிவது அரிது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Thursday, October 13, 2022

1152. விடிந்தால் பயணம்!

"விடியக் காலையில கிளம்பணும்" என்றான் கந்தன்.

"அதை எத்தனை தடவை சொல்லுவீங்க?" என்றாள் மணிமேகலை.

"நீ மறந்துட்டியோன்னு நினைச்சேன்!"

"ஏன், நீங்க ஊருக்குப் போகறீங்கங்கறதைக் கொஞ்ச நேரம் மறந்து நான் சந்தோஷமா இருக்கக் கூடாதா?"

"உன் பேச்சே எனக்குப் புரியல. நாம காதலிச்சபோதெல்லாம் நீ எங்கிட்ட எவ்வளவு அன்பாப் பேசுவ! இப்ப ஏன் இப்படிக் கடுமையாப் பேசறே?"

"சரி. இனிமையாவே பேசறேன். அன்புள்ள கணவரே! நீங்க ஊருக்குப் போயிட்டு வாங்க. நீங்க திரும்பி வர வரையிலேயும் உங்களைப் பிரிஞ்சு நான் சந்தோஷமா இருக்கேன்! இது போதுமா?" என்றபோதே மணிமேகலை தன்  கண்ணில் பெருகிய நீரை மறைக்கச் சட்டென்று கண்களை மூடிக் கொண்டாள்.

மூடிய கண்ளிலிருந்து சிறிது நீர் அவள் கன்னங்கள் வழியே இறங்கியது.

மணிமேகலையின் அருகில் வந்து அவளை அணைத்துக் கொண்ட கந்தன், "எனக்கு மட்டும் பிரிவுத் துயர் இருக்காதா? நீ இப்படி கண்ணீர் விடறதை நினைச்சா போற இடத்தில என்னால எப்படி நிம்மதியா இருக்க முடியும்?" என்றான்.

கணவனின் அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட மணிமேகலை, "விடுங்க. நீங்க இப்படி அணைச்சுக்கறப்பல்லாம், இன்னும் சில மாதங்களுக்கு இந்த அணைப்பு கிடைக்காதேன்னு நினைச்சு அழுகைதான் வருது. காதலிச்சப்பல்லாம் உங்களைக் கண்ணால பார்த்தே சந்தோஷப்பட்டுக் கிட்டிருந்தேன். இப்ப கல்யாணத்துக்கப்பறம் நாம நெருக்கமானப்பறம் அந்த  நெருக்கம் கொஞ்ச நாளைக்குக் கிடைக்காதுன்னு நினைச்சாலே அழுகை வருது!" என்றாள்.

சட்டென்று அவன் மார்பில் தலையைச் சாய்த்து விம்ம ஆரம்பித்தாள் மணிமேகலை.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 116
பிரிவாற்றாமை

குறள் 1152
இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு.

பொருள்:
முன்பெல்லாம் அவரைக் கண்களால் தழுவிக் கொண்டதே இன்பமாக இருந்தது; ஆனால், இப்போது உடல் தழுவிக் களிக்கும் போது கூடப் பிரிவை எண்ணும் அச்சத்தால் துன்பமல்லவா வருத்துகிறது!.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Saturday, October 8, 2022

1151. அவளிடம் போய்ச் சொல்!

"உன்னைப் பாக்காம ஒரு நாள் கூட என்னால இருக்க முடியாது. ஆனா..." என்று ஆரம்பித்தான் மாறன்.

செல்வி கண்களை மூடிக் கொண்டாள்.

"ஆனா, ஒரு முக்கியமான வியாபார விஷயமா நான் போய்த்தான் ஆகணும். இது ஒரு பெரிய வாய்ப்பு. இந்த வியாபாரத்தை முடிச்சுட்டா, நான் பெரிய செல்வந்தன் ஆயிடுவேன். அப்புறம் வாழ்நாள் முழுக்க நமக்குப் பணக் கஷ்டமே இருக்காது" என்றான் மாறன் தொடர்ந்து.

"ஒரு வருஷம்தான். ஓடறதே தெரியாது. கண்ணை மூடித் திறக்கறதுக்குள்ள காலம் ஓடிடும். உன்னைப் பார்க்க நான் திரும்பி வந்துடுவேன்!"

செல்வி இப்போதும் பதில் சொல்லவில்லை. மூடிய கண்களை இன்னும் திறக்கவும் இல்லை.

"ஏமாந்தியா? நான் பொய் சொன்னேன்!" என்று கைகொட்டிச் சிரித்தான் மாறன்.

செல்வி சட்டென்று கண்ணைத் திறந்தாள். "என்ன சொல்ற?" என்றாள்.

"ஒரு வருஷம்னு சொன்னது பொய். ஆறு மாசத்தில வந்துடுவேன். முதல்ல உன்னை ஏமாத்தறதுக்காக  ஒரு வருஷம்னு சொன்னேன்!" என்றான் மாறன்.

ஒரு வருடம் என்று சோன்னதைக் கேட்டு செல்வி முதலில் மனம் கலங்கினாலும், பிறகு ஆறு மாதம் என்று சொன்னதும், நல்ல வேளை, ஒரு வருடம் இல்லை, ஆறு மாதம்தானே?' என்ற் ஆறுதல் அடைந்து விடுவாள் என்று தான் போட்ட கணக்கு பலிக்கிறதா என்பதை அறியும் ஆவலில் செல்வி என்ன சொல்லப் போகிறாள் என்று எதிர்பார்த்து நின்றான் மாறன்.

"ஒரு வருஷம்னு சொன்னியா?" என்றாள் செல்வி வியப்புடன்.

"என்ன செல்வி, நான்  பேசினதை நீ கேட்கவே இல்லையா?" என்றான் மாறன் ஏமாற்றத்துடன்.

"என்னைப் பாக்காம ஒரு நாள் கூட இருக்க முடியாதுன்னு நீ சொன்னதைக் கேட்டதும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. ஆனா, நீ 'ஆனா...'ன்னு அரம்பிச்சதுமே. என்னைப் பிரியப் போறேன்னு சொல்லப் போறேன்னு நினைச்சு நான் கண்ணை மூடிக்கிட்டேன்!" என்றாள் செல்வி.

"கண்ணை மூடிக்கிட்டா, நான் பேசினது கேட்காம போயிடுமா என்ன?"

"காதில விழுந்திருக்கும். ஆனா மனசில பதியல. ஏன்னா கண்ணை மூடிக்கிட்டு, 'உன்னைப் பாக்காம ஒருநாள் கூட என்னால இருக்க முடியாது' ன்னு நீ சொன்ன வாக்கியத்தையே மனசில திரும்பத் திரும்ப நினைச்சுப் பாத்துக்கிட்டிருந்தேன். நீ பேசின வேற எதுவும் என் மனசில பதியல!"

"சரி இப்ப சொல்றேன். ஆறு மாசத்தில திரும்ப வந்துடுவேன்! இது ரொம்ப குறுகிய காலம்தானே?"

"இதையெல்லாம் நீ ஏன் என்கிட்ட சொல்ற?" என்றாள் செல்வி.

"உங்கிட்ட  சொல்லாம வேற யார்கிட்ட சொல்றது?"

"உனக்கு வேற காதலி யாராவது இருக்காங்களா?"

"என்ன செல்வி இது? ஏன் இப்படிக் கேக்கற?" என்றான் மாறன் கோபத்துடன்.

"உனக்கு வேற காதலி யாராவது இருந்து, உன்னைப் பிரிஞ்சு அவ உயிரோட இருப்பான்னா அவகிட்ட சொல்லு, சீக்கிரம் வந்துடுவேன்னு. எங்கிட்ட சொல்லி என்ன பயன்?"

கண்ணீரை அடக்க முடியாமல் அங்கிருந்து ஓடினாள் செல்வி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 116
பிரிவாற்றாமை

குறள் 1151
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.

பொருள்:
என்னைப் பிரிவதில்லை என்றால் என்னிடம் சொல். சீக்கிரம் வருவேன் என்பதை எல்லாம் நீ வரும்போது உயிரோடு இருப்பார்களே அவர்களிடம் சொல்.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Friday, October 7, 2022

1150. இது நடந்தால் அது நடக்கும்!

"குமரனோட நான் பழக ஆரம்பிச்சு ரெண்டு மாசம் ஆகுது. ஊர்ல இதைப் பத்தி என்ன பேசிக்கறாங்க?" என்றாள் குழலி.

"ஏண்டி நீ என்ன செய்யறேன்னு பார்த்து அதைப் பத்திப் பேசறதுதான் ஊருக்கு வேலையா?" என்றாள் அவள் தோழி சிந்து.

"அப்படின்னா யாரும் எதுவும் பேசிக்கலையா?" என்றாள் குழலி.

"என் காதில எதுவும் விழலை!" என்ற சிந்து, "நீ கேக்கறதைப் பார்த்தா இப்படிப் பேசிக்காதது உனக்கு ஏமாற்றமா இருக்கற மாதிரி இருக்கே!" என்றாள் தொடர்ந்து.

குழலி பதில் சொல்லவில்லை.

சில நாட்களுக்குப் பிறகு சிந்து குழலியிடம், "உன் காதலைப் பத்தி ஊர்ல என்ன பேசிக்கறாங்கன்னு நீ எந்த வேளையில கேட்டியோ தெரியலை, நீ கேட்ட அடுத்த நாளிலேந்தே ஊர்ல நிறைய பேரு உன் காதலைப் பத்திப் பேச ஆரம்பிச்சுட்டாங்க!" என்றாள்.

"அப்படியா?" என்றாள் குழலி ஆர்வத்துடன்.

"ஐயையோன்னு பதட்டப்படுவேன்னு பாத்தா அப்படியான்னு மகிழ்ச்சியோட கேக்கற!" என்றாள் சிந்து வியப்புடன்.

"அப்படி ஒண்ணும் இல்லை" என்றாள் குழலி சங்கடத்துடன்.

தங்கள் காதலைப் பற்றி ஊரார் பேச வேண்டும் என்ற தன் விருப்பம் நிறைவேறினால், தன் காதலர் தன்னைக் கைப்பிடிக்க வேண்டும் என்ற தன் விருப்பமும் நிறைவேறும் என்று தன் மனதில் தான் போட்டு வைத்திருந்த கணக்கைத் தோழியிடம் சொன்னால் , அவள் இதை குருட்டுக் கணக்கு என்று கேலி செய்வாளோ என்ற அச்சத்தில் தன் மனக்கணக்கை சிந்துவிடம் குழலி பகிர்ந்து கொள்ளவில்லை.

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 115
அலரறிவுறுத்தல்  (காதலைப் பற்றி ஊரார் பேசுதல்)

குறள் 1150
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் வூர்.

பொருள்:
நான் விரும்பிய அவரைப் பற்றித்தான் இவ்வூர் பேசுகிறது. இனி என் காதலரும் நான் விரும்பியபோது என்னைத் திருமணம் செய்வார்.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

1149. என்னுயிர்த் தோழி, கேளொரு சேதி!

நீங்களும் நானும் தனியே சந்திப்பது பற்றி இந்த ஊரார் பேசும் பேச்சை என்னால் காது கொடுத்துக் கேட்க முடியவில்லை!" என்றாள் காந்தா.

"அப்படி என்ன பேசுகிறார்கள்?" என்றான் இளமாறன்.

"காதலர்களைப் பற்றி ஊரார் பேசுவது இயல்புதான். ஆனால் நாம் இருவரும் களவு மணம் செய்து கொண்டு விட்டதாகச் சிலர் பேசுவதுதான் எனக்குச் சங்கடத்தை ற்படுத்தகிறது!"

"அவர்கள் பேசுவதை உண்மையாக்கி விடலாமா?" என்றான் இளமாறன் குறும்பாக.

"பேச்சைப் பார்! நம் இருவரின் பெற்றோரின் சம்மதத்துடன் நம் திருமணம் நடக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் உங்களுடன் பழக ஆரம்பித்தேன்?" என்றாள் காந்தா இலேசான கோபத்துடன்.

"கவலைப்படாதே! விரைவிலேயே என் பெற்றோர்களுடன் வந்து உன் பெற்றோரைப் பார்த்துப் பேசி, நம் திருமணத்துக்குச் சம்மதம் வாங்குகிறேன்!" என்றான் இளமாறன்.

"இளமாறனைப் பற்றி ஒரு செய்தி" என்றாள் சுவர்ணமுகி தயக்கத்துடன்.

"சொல்!" என்றாள், சில நாட்களாக இளமாறன் தன்னைச் சந்திக்கவில்லையே என்ற பதடத்துடன் இருந்த காந்தா.

"மனதைத் தேற்றிக் கொள். அவர் இந்த ஊரை விட்டே போய்விட்டாராம்."

"திரும்பி வரலாம் இல்லையா?" என்றாள் காந்தா, நம்பிக்கை இழக்காமல்.

"அவர் ஊரை விட்டுப் போனதே வேறொரு ஊரில் உள்ள ஒரு செல்வந்தரின் மகளைத் திருமணம் செய்து கொண்டு அந்த ஊரிலேயே வாழும் நோக்கத்துடன்தான்!"

காந்தாவுக்கு ஒரு நிமிடம் பேச்சு வரவில்லை. தொண்டையில் ஏதோ அடைப்பது போல் இருந்தது.

"இப்படி ஒருவன் செய்வானா என்று ஊரில் பலரும் அவரை ஏசுகிறார்கள் என்றாள் சுவர்ணமுகி தோழிக்கு ஆறுதலாக இருக்குமே என்ற நோக்கத்தில்.

"இப்படி ஏமாற்றுவார் என்று எதிர்பார்க்கவில்லை!" என்றாள் காந்தா கம்மிய குரலில்.

"நீ சில நாட் களுக்கு வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருப்பது நல்லது" என்றாள் சுவர்ணமுகி தயக்கத்துடன்.

"ஏன்?" என்றாள் காந்தா, கோபமாகக் கேட்பது போல்.. இப்போது அவள் குரலில் ஒரு தெளிவும், உறுதியும் இருந்தன.

"இல்லை, இப்போது ஊராருக்கு உன் மேல் பரிதாபம் இருக்கிறது. ஆனால் சில நாட்களில் அது மறைந்து விடும். அதற்குப் பிறகு நீ இளமாறனுடன் பழகியதைக் குறை கூறிப் பேச ஆரம்பித்து விடுவார்கள். அதையெல்லாம் கேட்க உனக்குச் சங்கடமாக இருக்கும்.

காந்தா பெரிதாகச் சிரித்தாள்.

"என்னடி சிரிக்கிறாய்?" என்றாள் சுவர்ணமுகி கவலையுடன். ஒருவேளை தன் தோழிக்கு அதிர்ச்சியில் சித்தம் கலங்கி இருக்குமோ என்ற ஐயம் அவளுக்கு ஏற்பட்டது.

"முன்பு ஊரார் எங்களைப் பற்றிப் பேசுகிறார்கள் என்று நான் கவலைப்பட்டபோது, எனக்கு உறுதியளித்து ஆறுதல் கூறியவர் இப்போது என்னைக் கைவிட்டு விட்டு இன்னொருத்தியைக் கைப்பிடிக்கப் போய்விட்டார். இப்போது ஊரார் பேசுவது பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்?" என்றாள் காந்தா ஆத்திரம் பொங்கும் குரலில்.

தோழியின் உணர்ச்சிகள் ஒரு நிலைக்கு வரச் சற்று காலம் பிடிக்கும் என்று சுவர்ணமுகிக்குத் தோன்றியது.

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 115
அலரறிவுறுத்தல்  (காதலைப் பற்றி ஊரார் பேசுதல்)

குறள் 1149
அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை.

பொருள்:
அஞ்ச வேண்டா என்று அன்று உறுதி கூறியவர், இன்று பலரும் நாணும்படியாக என்னை விட்டுப் பிரிந்தபின் அதைப் பற்றிய அலருக்கு (பிறர் பேசும் பேச்சுக்களுக்கு) நான் ஏன் நாண வேண்டும்?

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Sunday, October 2, 2022

1148. யமுனாவின் மனமாற்றம்!

"வேணும்னே என் காதுபடப் பேசறாங்கடி!" என்றாள் யமுனா

"என்ன பேசறாங்க? யார் பேசறாங்க?" என்றள் அவள் தோழி நீலா.

"நானும் பாஸ்கரும் ரகசியமா காதலிக்கிறோமாம்!"

"அது உண்மையா, இல்லையா?"

"உண்மையா இல்லையாங்கறது கேள்வி இல்லை, என்னைப் பத்தி மத்தவங்க ஏன் வம்பு பேசணும்?"

"ஒரு ரகசியம் சொல்லட்டுமா? உன் ஆளு பாஸ்கர் மேல நம்ம காலேஜில நிறைய பேருக்கு ஒரு கண்ணு. எனக்குத் தெரிஞ்சே நாலைஞ்சு பேரு அவன் கிட்ட நேரடியாவே தங்களோட விருப்பத்தைச் சொல்லி இருக்கங்க. ஆனா உன் ஆளு அசைஞ்சு கொடுக்கல. ஆனா உங்கிட்ட மட்டும் நல்லா சிரிச்சுப் பேசறான். பாஸ்கரை வளைக்கப் பாத்து தோத்துப் போனவங்கதான் உன் மேல பொறமைப்பட்டு இப்படிப் பேசறாங்க!" என்றாள் நீலா.

"சரி. அப்படியே இருந்தாலும் ஏன் வேணும்னே என் காதுபடப் பேசறங்க? அதோட நான் அவனோட சினிமாவுக்குப் போறேன், பீச்சுக்குப் போறேன்னெல்லாம் பொய்யான விஷயங்களை ஏன் பேசறாங்க?"

"வம்பு பேசறவங்க பொதுவாகவே கொஞ்சம் மிகைப்படுத்தித்தான் பேசுவாங்க. அதைத் தவிர, இப்படியெல்லாம் பேசினா, நீ காயப்பட்டு பாஸ்கரோடபழகறதை விட்டுடுவன்னு எதிர்பாக்கறாங்களோ என்னவோ?" என்றாள் நீலா.

"பாஸ்கர்! நீயும் நானும் கல்லூரிக்குள்ள பொதுவான இடத்தில நின்னு எப்பவாவது ஒண்ணு ரெண்டு நிமிஷம் பேசி இருக்கோமே தவிர, எங்கேயாவது ஊர் சுத்தறமா என்ன?" என்றாள் யமுனா.

"இல்லைதான். இனிமே சுத்தலாங்கறியா? நான்தான் கூப்பிட்டுக்கிட்டே இருக்கேனே, நீதானே வர மாட்டேங்கற?" என்றான் பாஸ்கர் சிரித்தபடியே

"யாராவது பார்த்தா ஏதாவது தப்பாப் பேசுவாங்களேன்னு பயந்துகிட்டே இருந்தேன். ஆனா இப்பவே அப்படித்தானே பேசறாங்க? இனிமே நான் எதுக்கு பயப்படணும்? நம்ம ரெண்டு பேர் வீட்டிலேயுமே நம்ம காதலுக்குத் தடை சொல்லப் போறதில்ல. மத்தவங்க பேசறாங்கன்னு நாம ஏன் பயப்படணும்?"

"ஏன் பயப்படணும்?" என்றபடியே அவள் தோளைத் தொடப் போவது போல் கையை உயர்த்தினான் பாஸ்கர்.

"உஸ்! இதெல்லாம் இங்கே இல்ல. பார்க்லேயோ, பீச்லேயோ வச்சுக்க!" என்றாள் யமுனா சிரித்தபடி. 

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 115
அலரறிவுறுத்தல்  (காதலைப் பற்றி ஊரார் பேசுதல்)

குறள் 1148
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல்.

பொருள்:
இந்த ஊரார் தங்கள் அலரால் எங்கள் காதலை அழித்து விடுவோம் என்று எண்ணுவது, நெய்யை ஊற்றியே நெருப்பை அணைப்போம் என்பது போலாம்.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Saturday, October 1, 2022

1147. அமுதாவின் கண்டிப்பு

"இப்பல்லாம் நம்ம பொண்ணு அதிகமா வெளியில போற மாதிரி இருக்கே!" என்றான் செல்வம்.

"போனா என்ன? வீட்டிலேயே அடைஞ்சு கிடக்கணுமா என்ன?" என்றாள் அவன் மனைவி அமுதா.

"நீதானே வசந்தி வெளியே போய்ட்டு வந்தப்பல்லாம் அவளைக் கண்டிச்சுக்கிட்டு இருந்த? அதனாலதான் கேட்டேன்."

"அவ யாராவது பையனைப் பாக்கப் போகக் கூடாதுன்னுதான் முன்னெச்சரிக்கையா கண்டிச்சு வச்சேன், ஏன்னா இந்த வயசுல பெண்களுக்கு இந்தக் காதல் ஏற்படறது இயற்கைதானே?" என்றாள் அமுதா.

"உன் சொந்த அனுபவத்திலதானே பேசற?" என்றான் செல்வம் கேலியாக.

"ஆமாங்க! சொந்த அனுபவம்தான். அதனாலதானே எனக்கு நீங்க கிடைச்சீங்க! வசந்தி காதல் கீதல்னெல்லாம் அலையக் கூடாதுன்னுதான் அவ வேற எதுக்காவது வெளியில போனா கூட அவ யாரையோ பாக்கப் போறதா சந்தேகப்படற மாதிரி அவகிட்ட கடுமையாப் பேசினேன்."

"அப்ப, இப்ப மட்டும் எப்படி அனுமதிக்கிற?"

"நான் கடுமையாப் பேசி அவகிட்ட ஒரு பயத்தை ஏற்படுத்திட்டேன் இல்ல? அதனால அவ இனிமே ஒழுங்கா இருப்பா. இப்ப அவ போறதெல்லாம் அவ தோழியோடு சேந்து படிக்கத்தான்!" என்றாள் அமுதா.

"எப்படி அவ்வளவு நிச்சயமா சொல்ற?" என்று செல்வம் கூறிக் கொண்டிருந்தபோதே, வாசலில் பக்கத்து வீட்டு அஞ்சுகம் வந்து நின்றாள்.

"அமுதா! உங்கிட்ட கொஞ்சம் தனியாப் பேசணும்" என்றாள் அஞ்சுகம்.

அமுதா அஞ்சுகத்தை அழைத்துக் கொண்டு உள்ளறைக்குச் சென்று சில நிமிடங்கள் பேசி விட்டு வந்தாள்.

அஞ்சுகம் சென்றதும், "என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரியா இருக்க? அஞ்சுகம் என்ன சொன்னாங்க?" என்றான் செல்வம்.

"வசந்தி என்னை நல்லா ஏமாத்தி இருக்கா. அவ தோழியோட சேந்து படிக்கப் போகல. காதலனை சந்திக்கத்தான் போயிக்கிட்டிருக்கா. அவளை ஒரு பையனோட அடிக்கடி பாக்கிறதா ஊர்ல சில பேரு பேசறாங்களாம். அது அஞ்சுகம் காதில விழுந்திருக்கு. அதான் வந்து சொல்லிட்டுப் போறா!" என்றாள் அமுதா பதட்டத்துடன்.

"முதல்ல நீ கண்டிச்ச. இப்ப ஊர்ல வேற பேச ஆரம்பிச்சுட்டாங்க. இனிமே அவங்க காதல் நல்லாவே வளரும்!" என்றான் செல்வம்.

"என்னங்க இது பொறுப்பு இல்லாம பேசறீங்க?" என்றாள் அமுதா கோபத்துடன்.

"இது மாதிரி பெற்றோர் கண்டிக்கிறது, ஊர்க்காரங்க பேசறது இதெல்லாம் காதல் பயிருக்கு  நீர் பாய்ச்சி உரம் போடற மாதிரிதான். நீ சின்ன வயசில உன்னோட வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்த மாதிரி உன் பொண்ணும் செய்யறா. இதில பதட்டப்படறதுக்கு என்ன இருக்கு? யார் என்னன்னு விசாரிச்சு நல்ல பையனா இருந்தா கட்டிக் கொடுத்துட வேண்டியதுதான்!" என்றான் செல்வம் சிரித்தபடி.

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 115
அலரறிவுறுத்தல்  (காதலைப் பற்றி ஊரார் பேசுதல்)

குறள் 1147
ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.

பொருள்:
இந்தக் காம நோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

1307. முதலில் தேவை முகவரி!

விளையாட்டாக ஆரம்பித்த பேச்சு விபரீதத்தில் முடியும் என்று அஜய் எதிர்பார்க்கவில்லை. அஜய் வழக்கம்போல் வீணாவுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருக்கும்போ...