Sunday, October 2, 2022

1148. யமுனாவின் மனமாற்றம்!

"வேணும்னே என் காதுபடப் பேசறாங்கடி!" என்றாள் யமுனா

"என்ன பேசறாங்க? யார் பேசறாங்க?" என்றள் அவள் தோழி நீலா.

"நானும் பாஸ்கரும் ரகசியமா காதலிக்கிறோமாம்!"

"அது உண்மையா, இல்லையா?"

"உண்மையா இல்லையாங்கறது கேள்வி இல்லை, என்னைப் பத்தி மத்தவங்க ஏன் வம்பு பேசணும்?"

"ஒரு ரகசியம் சொல்லட்டுமா? உன் ஆளு பாஸ்கர் மேல நம்ம காலேஜில நிறைய பேருக்கு ஒரு கண்ணு. எனக்குத் தெரிஞ்சே நாலைஞ்சு பேரு அவன் கிட்ட நேரடியாவே தங்களோட விருப்பத்தைச் சொல்லி இருக்கங்க. ஆனா உன் ஆளு அசைஞ்சு கொடுக்கல. ஆனா உங்கிட்ட மட்டும் நல்லா சிரிச்சுப் பேசறான். பாஸ்கரை வளைக்கப் பாத்து தோத்துப் போனவங்கதான் உன் மேல பொறமைப்பட்டு இப்படிப் பேசறாங்க!" என்றாள் நீலா.

"சரி. அப்படியே இருந்தாலும் ஏன் வேணும்னே என் காதுபடப் பேசறங்க? அதோட நான் அவனோட சினிமாவுக்குப் போறேன், பீச்சுக்குப் போறேன்னெல்லாம் பொய்யான விஷயங்களை ஏன் பேசறாங்க?"

"வம்பு பேசறவங்க பொதுவாகவே கொஞ்சம் மிகைப்படுத்தித்தான் பேசுவாங்க. அதைத் தவிர, இப்படியெல்லாம் பேசினா, நீ காயப்பட்டு பாஸ்கரோடபழகறதை விட்டுடுவன்னு எதிர்பாக்கறாங்களோ என்னவோ?" என்றாள் நீலா.

"பாஸ்கர்! நீயும் நானும் கல்லூரிக்குள்ள பொதுவான இடத்தில நின்னு எப்பவாவது ஒண்ணு ரெண்டு நிமிஷம் பேசி இருக்கோமே தவிர, எங்கேயாவது ஊர் சுத்தறமா என்ன?" என்றாள் யமுனா.

"இல்லைதான். இனிமே சுத்தலாங்கறியா? நான்தான் கூப்பிட்டுக்கிட்டே இருக்கேனே, நீதானே வர மாட்டேங்கற?" என்றான் பாஸ்கர் சிரித்தபடியே

"யாராவது பார்த்தா ஏதாவது தப்பாப் பேசுவாங்களேன்னு பயந்துகிட்டே இருந்தேன். ஆனா இப்பவே அப்படித்தானே பேசறாங்க? இனிமே நான் எதுக்கு பயப்படணும்? நம்ம ரெண்டு பேர் வீட்டிலேயுமே நம்ம காதலுக்குத் தடை சொல்லப் போறதில்ல. மத்தவங்க பேசறாங்கன்னு நாம ஏன் பயப்படணும்?"

"ஏன் பயப்படணும்?" என்றபடியே அவள் தோளைத் தொடப் போவது போல் கையை உயர்த்தினான் பாஸ்கர்.

"உஸ்! இதெல்லாம் இங்கே இல்ல. பார்க்லேயோ, பீச்லேயோ வச்சுக்க!" என்றாள் யமுனா சிரித்தபடி. 

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 115
அலரறிவுறுத்தல்  (காதலைப் பற்றி ஊரார் பேசுதல்)

குறள் 1148
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல்.

பொருள்:
இந்த ஊரார் தங்கள் அலரால் எங்கள் காதலை அழித்து விடுவோம் என்று எண்ணுவது, நெய்யை ஊற்றியே நெருப்பை அணைப்போம் என்பது போலாம்.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...