Friday, October 7, 2022

1149. என்னுயிர்த் தோழி, கேளொரு சேதி!

நீங்களும் நானும் தனியே சந்திப்பது பற்றி இந்த ஊரார் பேசும் பேச்சை என்னால் காது கொடுத்துக் கேட்க முடியவில்லை!" என்றாள் காந்தா.

"அப்படி என்ன பேசுகிறார்கள்?" என்றான் இளமாறன்.

"காதலர்களைப் பற்றி ஊரார் பேசுவது இயல்புதான். ஆனால் நாம் இருவரும் களவு மணம் செய்து கொண்டு விட்டதாகச் சிலர் பேசுவதுதான் எனக்குச் சங்கடத்தை ற்படுத்தகிறது!"

"அவர்கள் பேசுவதை உண்மையாக்கி விடலாமா?" என்றான் இளமாறன் குறும்பாக.

"பேச்சைப் பார்! நம் இருவரின் பெற்றோரின் சம்மதத்துடன் நம் திருமணம் நடக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் உங்களுடன் பழக ஆரம்பித்தேன்?" என்றாள் காந்தா இலேசான கோபத்துடன்.

"கவலைப்படாதே! விரைவிலேயே என் பெற்றோர்களுடன் வந்து உன் பெற்றோரைப் பார்த்துப் பேசி, நம் திருமணத்துக்குச் சம்மதம் வாங்குகிறேன்!" என்றான் இளமாறன்.

"இளமாறனைப் பற்றி ஒரு செய்தி" என்றாள் சுவர்ணமுகி தயக்கத்துடன்.

"சொல்!" என்றாள், சில நாட்களாக இளமாறன் தன்னைச் சந்திக்கவில்லையே என்ற பதடத்துடன் இருந்த காந்தா.

"மனதைத் தேற்றிக் கொள். அவர் இந்த ஊரை விட்டே போய்விட்டாராம்."

"திரும்பி வரலாம் இல்லையா?" என்றாள் காந்தா, நம்பிக்கை இழக்காமல்.

"அவர் ஊரை விட்டுப் போனதே வேறொரு ஊரில் உள்ள ஒரு செல்வந்தரின் மகளைத் திருமணம் செய்து கொண்டு அந்த ஊரிலேயே வாழும் நோக்கத்துடன்தான்!"

காந்தாவுக்கு ஒரு நிமிடம் பேச்சு வரவில்லை. தொண்டையில் ஏதோ அடைப்பது போல் இருந்தது.

"இப்படி ஒருவன் செய்வானா என்று ஊரில் பலரும் அவரை ஏசுகிறார்கள் என்றாள் சுவர்ணமுகி தோழிக்கு ஆறுதலாக இருக்குமே என்ற நோக்கத்தில்.

"இப்படி ஏமாற்றுவார் என்று எதிர்பார்க்கவில்லை!" என்றாள் காந்தா கம்மிய குரலில்.

"நீ சில நாட் களுக்கு வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருப்பது நல்லது" என்றாள் சுவர்ணமுகி தயக்கத்துடன்.

"ஏன்?" என்றாள் காந்தா, கோபமாகக் கேட்பது போல்.. இப்போது அவள் குரலில் ஒரு தெளிவும், உறுதியும் இருந்தன.

"இல்லை, இப்போது ஊராருக்கு உன் மேல் பரிதாபம் இருக்கிறது. ஆனால் சில நாட்களில் அது மறைந்து விடும். அதற்குப் பிறகு நீ இளமாறனுடன் பழகியதைக் குறை கூறிப் பேச ஆரம்பித்து விடுவார்கள். அதையெல்லாம் கேட்க உனக்குச் சங்கடமாக இருக்கும்.

காந்தா பெரிதாகச் சிரித்தாள்.

"என்னடி சிரிக்கிறாய்?" என்றாள் சுவர்ணமுகி கவலையுடன். ஒருவேளை தன் தோழிக்கு அதிர்ச்சியில் சித்தம் கலங்கி இருக்குமோ என்ற ஐயம் அவளுக்கு ஏற்பட்டது.

"முன்பு ஊரார் எங்களைப் பற்றிப் பேசுகிறார்கள் என்று நான் கவலைப்பட்டபோது, எனக்கு உறுதியளித்து ஆறுதல் கூறியவர் இப்போது என்னைக் கைவிட்டு விட்டு இன்னொருத்தியைக் கைப்பிடிக்கப் போய்விட்டார். இப்போது ஊரார் பேசுவது பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்?" என்றாள் காந்தா ஆத்திரம் பொங்கும் குரலில்.

தோழியின் உணர்ச்சிகள் ஒரு நிலைக்கு வரச் சற்று காலம் பிடிக்கும் என்று சுவர்ணமுகிக்குத் தோன்றியது.

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 115
அலரறிவுறுத்தல்  (காதலைப் பற்றி ஊரார் பேசுதல்)

குறள் 1149
அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை.

பொருள்:
அஞ்ச வேண்டா என்று அன்று உறுதி கூறியவர், இன்று பலரும் நாணும்படியாக என்னை விட்டுப் பிரிந்தபின் அதைப் பற்றிய அலருக்கு (பிறர் பேசும் பேச்சுக்களுக்கு) நான் ஏன் நாண வேண்டும்?

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...