Thursday, February 20, 2020

1095. கண்ணில் ஒரு சுருக்கம்

"என்னடி ஒரு கண் மட்டும் சுருங்கின மாதிரி இருக்கு?" என்றாள் ராணி, மகளைப் பார்த்து..

"இல்லியே!" என்றாள் மேகலை.

"இல்ல. ரெண்டு நாளாவே உன் கண் அப்படித்தான் இருக்கு. உனக்கு வலியோ, கண் சுருங்கற மாதிரியோ எதுவும் தெரியலையா?" 

"இல்லம்மா! எனக்கு ஒண்ணும் தெரியல. நீயா ஏதாவது நினைச்சுக்காதே!" என்றாள் மேகலை தாயிடம்.

"எதுக்கும் நந்தியாவட்டைப் பூவை கண்ணில புழிஞ்சுக்க. ஏதாவது பிரச்னை இருந்தாலும் உடனே சரியாயிடும்!" என்றாள் ராணி விடாமல்.

"சரிம்மா!" என்று மேகலை சொல்லிக்கொண்டிருந்தபோதே அவள் தோழி துளசி வந்தாள்.

"அம்மா! நான் துளசியோட வெளியில போயிட்டு வரேன்!" என்று கிளம்பினாள்  மேகலை.

"பாத்துடி! வெய்யில் பட்டு கண் இன்னும் மோசமாய் போயிடப் போகுது!" என்று எச்சரித்தாள் ராணி.

"அதான் கண்ணுக்கு எதுவுமே இல்லைன்னு சொல்றேனே!" என்று எரிச்சலுடன் பதிலளித்து விட்டு மேகலை கிளம்பினாள்.

வெளியில் வந்ததும், "கண்ணுக்கு என்னடி?" என்றாள் துளசி.

"ஒண்ணுமில்ல. எங்கம்மா ஏதாவது சொல்லிக்கிட்டிருப்பாங்க!" என்றாள் மேகலை.

மேகலையின் முகத்தைக் கையால் பிடித்துத் திருப்பி அவள் கண்களைப் பார்த்த துளசி, "ஆமாம். இடது கண் கொஞ்சம் சுருங்கின மாதிரிதான் இருக்கு!" என்றாள்.

"ஏண்டி என் கண்ணில ஏதாவது பிரச்னை இருந்தா எனக்குத் தெரியாதா? எங்கம்மா மாதிரி நீயும் ஆரம்பிச்சுடாதே!" என்றாள்  மேகலை. 

தோழிகள் சற்று நேரம் தோப்பு, தோட்டம், ஆற்றங்கரை என்று சுற்றி விட்டு ஒரு மரத்தடியில் அமர்ந்தனர்.

சற்று நேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். திடீரென்று மேகலை "ஒரு நிமிஷம் இரு, வந்துடறேன்" என்று சொல்லி விட்டு எழுந்து நின்றாள். 

ஐந்து நிமிடங்கள் கழித்து தோழி எங்கே போயிருக்கிறாள் என்று பார்க்க எண்ணி துளசியம் எழுந்து சென்றாள்.  

ஆற்றங்கரையை ஒட்டிய சாலையோரம் மேகலை நிற்பது தெரிந்ததும், அவளை நோக்கிச் சென்றாள் துளசி. 

துளசி தன் பின்னால் வந்து நிற்பதை கவனிக்காமல் மேகலை சாலையின் எதிர்ப்புறத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அங்கே ஒரு இளைஞன் சாலையை ஒட்டி இருந்த நிலத்தில் நின்று கொண்டு ஒரு முதியவருடன் பேசிக் கொண்டிருந்தான்.

துளசி மெலிதாகத் தொண்டையைக் கனைத்தாள்.

மேகலை திடுக்கிட்டுத் திரும்பி, "நீதானா?" என்றாள்.

"நான்தான்! நீ உன் ஆளைத் திருட்டுத்தனமாப் பாக்கறதை வேற யாராவது கண்டு பிடிச்சுட்டாங்களோன்னு பயந்துட்டியா?"என்றாள்  துளசி குறும்பாகச் சிரித்தபடி.

"என்னடி உளர்ற?"

"அதோ எதுத்தாப்பில நின்னு அந்தப்பெரியவர் கிட்ட பேசிக்கிட்டிருக்காரே, அவருதானே உன் ஆளு? ஏண்டி, உன்னோட நெருக்கமாப் பழகற எனக்கு இது தெரியாதா? " என்றாள் துளசி தன கையால் எதிர்ப்புறம் இருந்த இளைஞனைச் சுட்டிக் காட்டி.

"கையைக் கீழ போடுடி! யாராவது பாத்தா ஏதாவது நினைச்சுப்பாங்க" என்று அவள் கையைக் கீழே இறக்கினாள் மேகலை. 

"நீ அவரைப் பாக்கறது அவருக்குத் தெரியக் கூடாதுங்கறதுக்காகத்தானே வெய்யிலுக்காகக் கண்ணைச் சுருக்கிக்கிற மாதிரி ஒரு கண்ணை இடுக்கிக்கிட்டு அவரைப் பாக்கற? இப்படிப் பாத்தா கண்ணு சுருங்காம என்ன செய்யும்?" என்றாள் துளசி.

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 110
குறிப்பறிதல் 
குறள் 1095
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்.

பொருள்:
அவள் என்னை நேராகப் பார்க்காவிட்டாலும் ஒரு கண்ணைச் சுருக்கிக் கொண்டு பார்ப்பது போல் என்னைப் பார்த்துத் தனக்குள் மகிழ்வாள்.

Thursday, February 13, 2020

1094. பெண் பார்த்த மாப்பிள்ளை!

பெண் பார்ப்பது என்ற சம்பிரதாயத்தில் ராமுவுக்கு விருப்பமில்லை. ஆயினும் அவன் பெற்றோர்களும், பெண் வீட்டாரும் அந்த முறையைப் பின்பற்ற வேண்டும் என்று வற்புறுத்தியதால் அதற்கு ஒப்புக் கொண்டான்.

பெண் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவள். கிராமங்களில் சில சம்பிரதாயங்கள் இன்னும் பின்பற்றப்பட்டு வருவதை ராமு உணர்ந்திருந்தான். பெண் பார்க்கும் படலம் எப்படி இருக்கும் என்பது அவனுக்குத் தெரியவில்லை.  ஒருவேளை பழைய திரைப்படங்களில் இருப்பது போல் இருக்குமோ?

அவர்கள் பெண் வீட்டை அடைந்தபோது, வீட்டில் ஏராளமானோர் இருந்தனர். பெண்ணின் உறவினர்கள் யார், ஊர்க்காரர்கள் யார் என்று தெரியவில்லை. பெண்ணின் பெற்றோர், பெண்ணின் தம்பி ஆகியோர் மட்டும் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். 

பெண்ணின் பெயர் காமு என்பது மட்டும் அவனுக்குத் தெரியும். ராமு-காமு பெயர்ப் பொருத்தம் இருப்பதாக முதன் முதலில் பெண்ணின் பெயரைக் கேட்டபோது ராமுவுக்குத் தோன்றியது.

இரண்டுமே முழுப் பெயர்கள் இல்லை என்று தெரிந்தாலும்,  இருவருமே முழுப் பெயர் மூலம் குறிப்பிடப்படாமல், சுருக்கப் பெயர் மூலம் குறிப்பிடப்படுவது இன்னொரு ஒற்றுமை என்றும் நினைத்துக் கொண்டான். இதெல்லாம் அசட்டுத்தனம் என்ற எண்ணம் மனதின் இன்னொரு பகுதியில் எழுந்தது. 

சில நிமிடங்கள் ஆரம்ப உரையாடலுக்குப் பிறகு பெண்ணை அழைத்து வந்தனர். கையில் காப்பி டம்ளர்கள் நிறைந்த தட்டுடன் வந்த காமு ராமுவுக்கும், அவன் பெற்றோர்களுக்கும் காப்பி தம்ளர்களைக்கொடுத்து விட்டுத் தன் அம்மா அருகில் போய் நின்று கொண்டாள். ராமுவின் அம்மா 'உக்காரும்மா' என்று சொன்ன பின் கீழே உட்கார்ந்து கொண்டாள். 

அதற்குப் பிறகு ராமுவின் பெற்றோரும், காமுவின் பெற்றோரும் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். இருவரும் தங்கள் குடும்பப் பின்னணி, உறவினர்களின் விவரங்கள் ஆகியவற்றைப் பரிமாறிக் கொண்டனர். 

ராமுவுக்கு சங்கடமாக இருந்தது. அவ்வப்போது காமுவின் முகத்தைப் பார்த்தான். தொடர்ந்து அவள் முகத்தைப் பார்க்க அவனுக்குச் சங்கடமாக இருந்தது. இருவரின் பெற்றோர்களும் தங்கள் பேச்சுக்கிடையே அவ்வப்போது திரும்பி இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் காமு மட்டும் இவனைப் பார்க்காமல் குனிந்து தரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். 

திடீரென்று ராமுவின் அம்மா காமுவைப் பார்த்து, "ஏம்மா, ஒரு பாட்டுப் பாடேன்!" என்றாள்.

தனக்குப் பாடத் தெரியாது என்று சொல்வது போல் பக்கவாட்டில் தலையாட்டினாள் காமு. 

காமுவின் பெற்றோர் சற்றுக் கவலையுடன் ராமுவின் அம்மாவைப்  பார்த்தனர், பாடத் தெரியவில்லை என்பதற்காகப் பெண்ணை நிராகரித்து விடுவார்களோ என்று கவலைப்படுவது போல்!

ராமு தொண்டையைச் செருமிக் கொண்டு, "நான் ஒரு பாட்டுப் பாடட்டுமா?' என்றான் காமுவின் தந்தையைப் பார்த்து. 

அவர் தயக்கத்துடன் ராமுவின் அம்மாவைப் பார்க்க, ராமுவின் அம்மா அவனைப் பார்த்து முறைக்க, காமுவின் தோழிகள் சிலர், "பாடுங்க மாப்பிள்ளை சார்!" என்று சிரித்தபடியே அவனை உற்சாகப்படுத்தினர். 

ராமுவின் அம்மா அரை மனதுடன் தலையாட்ட, ராமு பாட ஆரம்பித்தான்:

"நேற்று வரை நீ யாரோ நான் யாரோ?
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ?"

அவன் பாடி முடிக்கும் வரை  மௌனம் நிலவியது. அவன் பாடி முடித்ததும் பலத்த கரவொலி எழுந்தது.

காமுவின் தோழி ஒருத்தி "மாப்பிள்ளை பாட்டு மூலமா தன் முடிவையும் சொல்லிட்டார்!" என்றாள் உரக்க. 

முதல் இரவின்போது காமுவிடம் ராமு கேட்ட முதல் கேள்வி இதுதான்: "உன்னைப் பெண் பாக்க வந்தப்ப நான் பாடின பாட்டைப் பத்தி என்ன நினைச்சே?" 

"ம்..எனக்குப் பாடத் தெரியாதுன்னு நான் சொன்னப்பறம் எல்லாருக்குமே கொஞ்சம் சங்கடமா இருந்திருக்கும். அந்த மூடைமாத்தறதுக்காகப் பாடினீங்கன்னு மொதல்ல தோணிச்சு..." என்றாள்  காமு.

"அப்புறம் என்ன தோணிச்சு?"

"நீங்க ஜெமினி கணேசன் பாட்டைப் பாடினதும் நீங்க உங்களை ஒரு காதல் மன்னன்னு காட்டிக்க விரும்பறீங்களோன்னு தோணிச்சு..."

"அடிப்பாவி!" என்றான் ராமு.

"ஆனா பாட்டை முழுசாக கேட்டப்பறம், வேற ஒண்ணு தோணிச்சு!"  

"என்ன தோணிச்சு?""

"நீங்க என்னைப்  பாத்தப்ப நான் உங்களைப் பாக்காத மாதிரி தரையைப் பாத்துக்கிட்டிருந்தேன். ஆனா நீங்க என்னைப் பாக்காதப்ப நான் திருட்டுத்தனமா உங்களைப் பாத்துக்கிட்டிருந்தேன். இதைத் தெரிஞ்சுக்கிட்டுத்தான் நீங்க அந்தப் பாட்டைப் பாடினீங்கன்னு நான் புரிஞ்சுக்கிட்டேன்!" என்றாள் காமு. 

"அந்தப் பாட்டில அப்படி இருக்கா என்ன?" என்றான் ராமு.

"வேணும்னே அந்தப் பாட்டைப் பாடிட்டு, இப்ப தெரியாத மாதிரி கேக்கறீங்க! என்னோட திருட்டுத்தனத்தை விடப்  பெரிய திருட்டுத்தனமா இருக்கே உங்களோடது!" என்றாள் காமு.

"பாட்டில இருக்கற அந்த வரிகளை நீ பாடிக் காட்டினாத்தான் நீ சொல்றதை  நான் ஒத்துப்பேன்."

"எனக்குத்தான் பாடத் தெரியாதுன்னு சொன்னேனே!"

"பரவாயில்ல. நீ என்ன பாட்டுப் போட்டியிலயா பாடப் போற? எனக்குத்தான் பாடிக் காட்டப்போற?" என்று ராமு சொல்லி முடிக்கும் முன்பே காமு பாட ஆரம்பித்து விட்டாள்.

"உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே!"

"அட இவ்வளவு அருமையாப் பாடற. ஆனா, அன்னிக்கு பாடத்தெரியாதுன்னுட்ட. இது மாதிரி இன்னும் எவ்வளவு திருட்டுத்தனம் வச்சிருக்க?" என்றான் ராமு.

"ம்? இன்னிக்குத்தானே நம்ப வாழ்க்கை ஆரம்பிச்சிருக்கு. போகப் போகப் புரிஞ்சுப்பீங்க!" என்றாள் காமு சிரித்தபடி. 

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 110
குறிப்பறிதல் 
குறள் 1094
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.

பொருள்:
நான் அவளைப் பார்க்கும்போது அவள் குனிந்து கீழே பார்த்துக் கொண்டிருப்பாள். நான் அவளைப் பார்க்காதபோது அவள் என்னைப் பார்த்துவிட்டுத் தனக்குள் இலேசாகச் சிரித்துக் கொள்வாள்.

Tuesday, February 11, 2020

1093. வேருக்கு நீர்!


ரகு பேருந்துக்காக நின்று கொண்டிருந்தபோது அதை கவனித்தான் - சாலையில் எதிர்ப்புறத்தில் நின்று கொண்டிருந்த மல்லிகா அவனை உற்றுப் பார்ப்பதை!
மல்லிகா அவன் ஊர்ப் பெண்தான். ஆனால் இருவருக்கும் இடையே பரிச்சயம் ஏற்பட்டதில்லை. 

முதலில் ரகுவுக்கு தான் பார்த்தது சரிதானா என்ற சந்தேகம் எழுந்தது. அவள் தன்னைப் பார்த்தத்தைத் தான் கவனித்து விட்டதை வெளிகாட்டிக் கொள்ளாமல் வேறு எங்கோ பார்ப்பது போல் முகத்தைத் திருப்பிக் கொண்டான் ரகு .

அவன் வேறு புறம் பார்த்துக்கொண்டிருந்தபோது அவள் அவனைத்தான் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். வேறு புறம் பார்த்துக் கொண்டிருந்தாலும் இதை உணர்வது ரகுவுக்கு ஒன்றும் சிரமமாக இல்லை.

அவள் தன்னைப் பார்க்க்கிறாள் என்பதை உறுதி செய்து கொண்டபோது, ஓரிரு நிமிடங்கள் கழித்து ரகு சட்டென்று திரும்பி அவளைப் பார்த்தான்.

அவன் பார்வை தன்மீது விழுந்ததும், அவள் சட்டென்று தலையைக் குனிந்து கொண்டாள். அதன் பிறகு அவன் செல்ல வேண்டிய பஸ் வந்து அவன் அதில் ஏறிச் சென்றது வரை அவள் தலை நிமிர்ந்து அவனைப் பார்க்கவில்லை.

டந்ததைத் தன் நண்பன் குணசேகரனிடம் விவரித்த ரகு "நான் அவளைப் பார்த்ததும் அவ தலையைக்குனிஞ்சசுக்கிட்டா. அப்புறம் என்னை நிமிர்ந்து பாக்கவே இல்ல. இதுக்கு என்ன அர்த்தம்? அவளுக்கு என்னைப் பிடிக்கலையா?" என்றான்.

"மழை வரும் போல இருக்கே!" என்றான் குணசேகரன். அவன் இதைச் சொல்லி முடித்ததுமே சடசடவென மழை பெய்ய ஆரம்பித்தது.

"நான் என்ன கேக்கறேன், நீ என்ன சொல்ற?" என்றான் ரகு, தன் குரலில் எரிச்சலை வெளிப்படுத்தியபடி.

"கொஞ்ச நேரம் மழையை வேடிக்கை பாக்கலாமே!"

"டேய், நாம என்ன சின்னக் குழந்தைகளா?"

"வாசல்ல இருக்கற அந்த செடியைப் பாரேன்!" என்றான் குணசேகரன்.

"அதுக்கு என்ன?"

" செடி மேல மழை விழுந்ததும் அதோட மேல் பகுதியில இருக்கற இலைகள் வளையுது பாரு."

"ஆமாம். அதுக்கென்ன?"

"மழை பெய்யும்போது செடி தலை குனியறதால, அதோட தலையில் பட்ட தண்ணி வேர்ப்பகுதியில போய் விழுது. அதனால வேர்ல நீர் பாஞ்சு செடி நல்லா வளரும்!" என்று சொல்லிச் சிரித்தான் குணசேகரன்.

"அப்படின்னா...?" என்றான் ரகு குழப்பத்துடன்.

"அட முட்டாளே! நீ பாக்கறப்ப அவ தலை குனிஞ்சான்னா, உன் பார்வை மூலமா தன் மேல பாயற அன்பை அவ தன் மனசுக்குள்ள வாங்கிக்கிட்டு அவளுக்கு உன் மேல இருக்கற அன்பை அவ இன்னும் வளத்துக்கறான்னு அர்த்தம்!" என்றான் குணசேகரன்.

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 110
குறிப்பறிதல் 
குறள் 1093
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.

பொருள்:
அவள் என்னைப் பார்த்தாள். ஆனால் நான் அவளைப் பார்த்ததும் தலை குனிந்து கொண்டாள். அது அவள் என் மேல் கொண்ட அன்புக்கு அவள் ஊற்றும் நீர்.

1128. ஆறிய காப்பி!

"என்ன நம்ம பொண்ணு ஆம்பளைங்க மாதிரி அடிக்கடி காப்பி குடிக்கறா?" என்றார் சபாபதி. "ஏன், பொம்பளைங்க அடிக்கடி காப்பி குடிக்கக் கூட...