Thursday, April 27, 2023

1180. பறையொலி கேட்டபோது...

"இதுக்குத்தான் நான் அந்தத் திருமண விழாவுக்கு வர மாட்டேன்னு சொன்னேன்!" என்றாள் முத்தழகி.

"அங்கே போய்க் கொஞ்ச நேரம் இருந்தது உனக்கு மாறுதலா இருந்திருக்குமே! உன்னோட துயரம் கொஞ்சம் குறைஞ்சிருக்குமே!" என்றாள் அவள் தாய் மரகதம்.

"நான் ஒரு ஓரமாத் தனியா உக்காந்திருந்தேன். அங்கே இருந்த இளம்பெண்கள் எல்லாம், "நீ ஏன் தனியா உக்காந்திருக்கே?"ன்னு சொல்லி என்னை அவங்களோட அழைச்சுக்கிட்டுப் போயிட்டாங்க. பத்துப் பதினைஞ்சு பேரா சேர்ந்துக்கிட்டு என்ன ஒரு பேச்சு, ஆட்டம், பாட்டம்!"

"உனக்குக் கொஞ்சம் மாறுதலா இருந்திருக்குமே!"

"எப்படிம்மா? அவங்கள்ளாம் அவங்க காதலர்களைப் பத்திப் பேசினாங்க. காதலனை சந்திச்சது எப்படி, காதலன் தன்னை எப்படிக் கொஞ்சுவான், காதலனோட சண்டை போட்டது, அப்புறம் சமாதானமாகி சேந்துக்கிட்டதுன்னு ஒவ்வொருத்தியும் பேசின காதல் கதைகளை வச்சு ஒரு புராணமே எழுதலாம்."

"நீ பேசாம கேட்டுக்கிட்டிருந்தியா?"

"ஆமாம். அவங்க பேசறதையெல்லாம் கேட்டப்ப, 'எனக்கும் இப்படிப்பட்ட அனுபவமெல்லாம் இருந்ததே, ஆனா என் காதலன் என்னை விட்டுட்டுப் போயிட்டானே!' ன்னு நினைச்சு மனசு ரொம்ப சங்கடப்பட்டுச்சு. கஷ்டப்பட்டு அழுகையை அடக்கிக்கிட்டிருந்தேன். ஆனா அவங்க என்னன்னா, 'நீ ஏண்டி சும்மா இருக்கே? உன்னோட அனுபவத்தைச் சொல்லு' ன்னு என்னைத் தூண்டிக்கிட்டே இருந்தாங்க!"

மரகதம் மகளுக்கு ஆதரவாக ஏதோசொல்ல வாயெடுத்தபோது தெருவில் பறையடிக்கும் சத்தம் கேட்டது.

"பறையடிக்கறாங்களே! ஏதாவது முக்கியமான அறிவிப்பா இருக்கப் போகுது. வா, வாசலுக்குப் போய் என்னன்னு கேட்டுட்டு வரலாம்!" என்று மகளின் கையைப் பற்றி வாசலுக்கு அழைத்துச் செல்ல யத்தனித்தாள் மரகதம், மகளின் கவனத்தைத் திருப்பி அவள் துயர நினைவுகளைச் சற்றே பின்தள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்து.

முத்தழகி சட்டென்று தன் தாயின் கைகளைப் பற்றி அவளை அருகில் இழுத்தாள்.

"ஏம்மா, தெருக்கோடியில பறையடிச்சது வீட்டுக்குள்ள இருக்கறப்பவே உனக்குக் கேட்டுதில்ல?" என்றாள் முத்தழகி.

"ஆமாம், கேட்டது. அதனாலதானே உன்னையும் அழைச்சுக்கிட்டு வாசலுக்குப் போறேன்?" என்றாள் மரகதம்.

"என் கண்ணைப் பாரும்மா! எங்கேயோ அடிக்கற பறையோட சத்தம் வீட்டுக்குள்ள இருக்கற நமக்குக் கேக்கற மாதிரி, என் மனசுக்குள இருக்கற துயரம் என் கண்ல தெரியல? ஆனா ஏம்மா சில பேர் இதை கவனிக்காம என் துயரத்தை அதிகமாக்கற மாதிரி நடந்துக்கறாங்க!" என்றாள் முத்தழகி விம்மலுடன்.

மரகதம் தன் மகளை ஆறுதலுடன் இறுக அணைத்துக் கொண்டாள்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 118
கண்விதுப்பழிதல் (கண்கள் துயரில் துடித்தல்)

குறள் 1180
மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து.

பொருள்:
அறையப்படும் பறைபோல் துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய எம்மைப் போன்றவரிடத்தில் மறைபொருளான செய்தியை அறிதல் ஊரார்க்கு அரிது அன்று.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Saturday, April 22, 2023

1179. விழியே, விழியே!

தோழியின் வீட்டுக்கு மூச்சிரைக்க ஓடி வந்த சத்தியவதி படபடவென்று கதவைத் தட்டினாள்.

பரிவாதினி கதவைத் திறந்ததும் அவளை அணைத்துக் கொண்ட சத்தியவதி, "அவரு நாளைக்கு வராருடி!" என்றாள்.

"அதுக்குத்தான் இப்படி மூச்சிரைக்க ஓடி வந்து படபடன்னு கதவைத் தட்டினியா?  நாளைக்கு வரப் போறார்னு எப்படிச் சொல்ற? சோதிடர் யாராவது சொன்னாரா, இல்லே விடியற்காலையில அப்படிக் கனவு கண்டியா? ஆனா நீதான் தூங்கறதே இல்லையே, அப்புறம் எங்கே கனவு காண்றது?" என்றாள் பரிவாதினி.

"ஏண்டி, ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்கிட்ட சொல்லலாம்னு ஓடி வரேன். இப்படிக் கேலி செய்யறியே!" என்றாள் சத்தியவதி சற்றே கோபத்துடன்.

"மன்னிச்சுக்கடி. உன் வீட்டுக்காரர் போனதிலேந்தே உன் முகத்தில மலர்ச்சியைப் பாக்கவே முடியல. பல மாதங்களுக்கப்பறம் இப்பதான் உன் முகத்தில மலர்ச்சி தெரியுது. அந்த உற்சாகத்திலதான் கொஞ்சம் கேலி செஞ்சேன். ஆமாம், எப்படி உனக்கு இந்தச் செய்தி கிடைச்சதுன்னு சொல்லலியே!"

"அவர் வேலை செய்யற கப்பல் துறைமுகத்துக்கு வந்துடுச்சம். அதில அவரோட வந்த ஒத்தர்  தன் வீட்டுக்கு வந்துட்டார். என் வீட்டுக்காரருக்கு கப்பல்ல வந்த சரக்குகளை ஒப்படைக்கிற வேலை இருக்கறதால அதை முடிச்சுட்டு நாளைக்கு வரதா அவர் மூலமா செய்தி சொல்லி அனுப்பி இருக்காரு!" என்றாள் சத்தியவதி மகிழ்ச்சியுடன்.

"அப்பா! எனக்கே எவ்வளவு நிம்மதியா இருக்கு தெரியுமா? உன் வீட்டுக்காரர் ஊருக்குப் போனதிலேந்து அவரு எப்ப திரும்ப வருவாருன்னு பார்த்துக்கிட்டு நீ தூங்காம இருக்கறதையும், அதனால உன் கண்கள் எப்பவுமே சோர்ந்திருக்கறதையும் என்னால பாக்க முடியல! இத்தனை நாளா தூங்காததுக்கும் சேர்த்து வச்சு இனிமேயாவது நல்லாத் தூங்கு!" என்றாள் பரிவாதினி.

"ஏண்டி, உன் வீட்டுக்காரர் வந்து ஒரு மாசமாச்சு. நீ இப்ப சந்தோஷமாத்தானே இருக்கே?" என்றாள் பரிவாதினி.

"ஆமாம். ஏன் கேக்கற?" என்றாள் சத்தியவதி.

"இதுக்கு முன்னால நீ சரியாத் தூங்காததால உன் கண்கள் சோர்வா இருந்துச்சு. இப்பவும் அதே மாதிரி சோர்வாத்தானே இருக்கு அதுதான் கேட்டேன்!"

"என்ன செய்யறது? அவரு மறுபடி எப்ப கிளம்பிப் போயிடுவாரோன்னு நினைச்சு இப்பவும் எனக்குத் தூக்கம் வரதில்ல!" என்றாள் சத்தியவதி."

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 118
கண்விதுப்பழிதல் (கண்கள் துயரில் துடித்தல்)

குறள் 1179
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.

பொருள்:
அவர் வராதபோது வரவை எதிர்பார்த்துத் தூங்குவதில்லை. வந்தபோதோ, எப்போது பிரிவாரோ என்று அஞ்சி்த் தூங்குவதில்லை; இரண்டு வழியிலும் என் கண்களுக்குத் தூங்க முடியாத துன்பந்தான்.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Sunday, April 16, 2023

1178. பேசும் பொம்மை!

பொருட்காட்சிக்கு வந்திருந்த தோழிகள் நால்வரும் "பேசும் பொம்மை" என்ற 'அதிசயத்தைப்' பார்த்து விட்டு வெளியே வந்தனர்.

"அந்த ஆளு கேட்ட கேள்விக்கெல்லாம் அந்த பொம்மை பதில் சொல்லிச்சே! ஆச்சரியமா இல்ல?" என்றாள் வனிதா.

"இதில ஆச்சரியம் என்ன இருக்கு?அஞ்சாறு கேள்விகளுக்கு பதிலை ரிகார்ட் பண்ணி வச்சிருக்காங்க. அந்த ஆளு வரிசையா கேள்விகளைக் கேக்கறாரு. பொம்மைக்குப் பின்னால திரை இருக்கு. அவரு ஒரு கேள்வியைக் கேட்டதும், திரைக்குப் பின்னால ஒத்தர் இருந்துக்கிட்டு மறைவா இருக்கற பிளே பட்டனை அழுத்தறாரு. உடனே ரிகார்ட் பண்ணின பதில் பிளே ஆகுது. கேள்வியை மாத்திக் கேக்கச் சொன்னா அவரு ஒத்துக்கல. ரொம்ப எளிமையான தொழில் நுட்பம்! இப்ப கம்ப்யூட்டர்னு ஒண்ணு வந்திருக்கு. அதை வச்சு என்னென்னவோ அற்புதங்களையெல்லாம் உருவாக்கிக்கிட்டிருக்காங்க. இந்தச் சின்ன விஷயத்துக்குப் போய் இப்படி ஆச்சரியப்படறியே!" என்றாள் அனு.

"சும்மாவா சொல்றோம் உன்னை, விஞ்ஞானி அனுன்னு!" என்றாள் உமா.

"அப்படின்னா அந்த பொம்மை பேசினது அதோட உதட்டிலேந்துதான் வந்திருக்கு, உள்ளத்திலேந்து வரலை, அப்படித்தானே?'" என்றாள். வனிதா.

"இவளைப் பாரு, கண்ணதாசன் பாட்டுக்கு விளக்க உரை கொடுக்கறா?" என்ற உமா, 

"உள்ளத்தில் உள்ளது உதட்டிலே வந்ததா?
உதட்டிலே வந்ததை உள்ளமே நினைத்ததா?"

என்ற வரிகளைப் பாடினாள்.

"ஒரு சின்ன சந்தர்ப்பம் கிடைச்சா போதும், உடனே ஒரு பாட்டை எடுத்து விட்டுடுவா!" என்று அனு உமாவைக் கேலி செய்ததை ராதா கவனிக்கவில்லை. அவள் மனம் அந்தப் பாடல் வரிகளிலேயே நிலைத்திருந்தது..

"என்னை உயிருக்குயிராக் காதலிக்கறதா சொன்னானே, அது வெறும் உதட்டளவில்தானா? உள்ளத்திலேந்து அந்த வார்த்தை வந்திருந்தா ரெண்டு மாசமா என்னைப் பாக்காம என்னைத் தொடர்பு கொள்ளாம இருப்பானா? நானும் அவன் எங்கேயாவது கண்ல பட மாட்டானான்னு எல்லா இடங்களிலேயும் தேடிக்கிட்டிருக்கேன். ஒருவேளை அவனும் இந்தப் பொருட்காட்சிக்கு வந்திருக்கானோ என்னவோ! அப்படி வந்திருந்தா என் கண்ல படலாமே!' என்று நினைத்தபடியே கண்களை அங்கும் இங்கும் சுழல விட்டாள் ராதா.

"ஏண்டி, நீ ரொம்ப டல்லா இருக்க, உனக்கு ஒரு மாறுதலா இருக்கட்டுமேன்னுதானே இங்கே வந்திருக்கோம்? நாங்க பேசறதைக் கேட்காம நீ பாட்டுக்கு எங்கேயோ பாத்துக்கிட்டு வந்தேன்னா என்ன அர்த்தம்?" என்று ராதாவைக் கடிந்து கொண்டாள் உமா.

"தன்னோட ஆள் இங்கே எங்கேயாவது இருக்கானோன்னு பாக்கறாளோ என்னவோ!" என்று வனிதா விளையாட்டாகச் சொல்ல, ராதாவின் மனம் புண்பட்டு விடுமோ என்ற பயத்தில் அனு வனிதாவை முறைத்துப் பார்த்தாள்.

ஆனால் ராதா, 'நீ சொல்றது சரிதாண்டி!" என்றபடியே வனிதாவின் தோளை அன்புடன் பற்றினாள்.

"கள்ளமில்லை தோழி
உள்ளதைத்தான் சொன்னாய்!" 

என்று பாடி நிலைமையின் இறுக்கத்தைக் குறைக்க முயன்றாள் உமா! 

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 118
கண்விதுப்பழிதல் (கண்கள் துயரில் துடித்தல்)

குறள் 1178
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்.

பொருள்:
உள்ளத்தால் விரும்பாமலே சொல்லளவில் விரும்பிப் பழகியவர் ஒருவர் இருக்கிறார்; அவரைக் காணாமல் கண்கள் அமைதியுறவில்லை.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Friday, April 14, 2023

1177. தமயந்தி கொடுத்த சாபம்!

அல்லியின் தந்தை இதிகாசங்கள், புராணங்கள் கற்றுத் தேர்ந்தவர். தினமும் தன் வீட்டுக்கு வரும் சிலரிடம் அவர் சில புராணக் கதைகளை விரிவாகக் கூறுவது வழக்கம்.

"என் அப்பா சொல்ற கதையை ஒருநாள் கேட்டுப் பாரு. உன் மனசுக்கு ஆறுதலா இருக்கும்!" என்று அல்லி தன் தோழி தமயந்தியிடம் கூறியதால், தமயந்தி அல்லியின் வீட்டுக்கு வந்தாள். 

தன் வீட்டின் கூடத்தில் அமர்ந்து கொண்டு தன் கம்பீரமான குரலில் அல்லியின் தந்தை கதை கூற அவரைச் சுற்றிலும் கூடத்திலும், தாழ்வாரத்திலும், முற்றத்திலும் அமர்ந்திருந்த இருபது நபர்கள் ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

அல்லியும் தமயந்தியும் ஒரு ஓரமாக அமர்ந்து கேட்டனர்.

"என்னடி கதை நல்லா இருந்ததா?" என்றாள் அல்லி.

தமயந்தி ஏதோ யோசனையுடன் மௌனமாகத் தலையாட்டினாள்.

"இன்னிக்கு துஷ்யந்தன்-சகுந்தலை கதை சொல்லுவார்னு எனக்குத் தெரியாது. தெரிஞ்சிருந்தா உன்னை இன்னிக்கு வரச் சொல்லாம இன்னொரு நாள் வரச் சொல்லி இருப்பேன்!" என்றாள் தமயந்தி.

'இன்று பார்த்தா சகுந்தலையைக் காதலித்து மணந்த பின் முனிவர் சாபத்தால் அவளை மறந்து விட்ட துஷ்யந்தன் கதையை அப்பா சொல்ல வேண்டும்! காதலன் கைவிட்டு விட்டதால் மனம் நொந்து போயிருக்கும் தோழிக்கு ஆறுதலாக இருக்கும் என்று நினைத்துச் செய்த செயல் அவள் துயரத்தை இன்னும் அதிகமாக்கி இருக்குமோ?' என்று நினைத்தாள் அல்லி. 

"என்னடி பதிலே சொல்லமாட்டேங்கற?" 

"தன் அப்பாவோட ஆசிரமத்துக்கு வந்த துர்வாசருக்கு சகுந்தலை கஷ்டப்பட்டு சேவை செஞ்சா. ஆனா அவ ஏதோ குறை வச்சுட்டாங்கறதுக்காக அவள் கணவன் அவளை மறந்துடுவான்னு முனிவர் சாபம் கொடுத்துட்டாரு. நான் உண்மையா ஒத்தரைக் காதலிச்சேன். அவர் என்னைக் கைவிட்டுட்டுப் போயிட்டாரு. இது யார் கொடுத்த சாபமோ தெரியல!" என்றாள் தமயந்தி.

"சாபமாவது மண்ணாவது! உன்னை மாதிரி ஒரு பெண் மனைவியாகக் கிடைக்க அவனுக்குக் கொடுத்து வைக்கல. விட்டுத் தள்ளு!" என்றாள் அல்லி.

 "துர்வாசர் சகுந்தலைக்கு சாபம் கொடுத்த மாதிரி நானும் ஒரு சாபம் கொடுக்கப் போறேன்!" என்றாள் தமயந்தி திடீரென்று.

"யாருக்கு? உன்னைக் கைவிட்ட காதலனுக்கா?"

"இல்லை. மகிழ்ச்சியா இருந்த என்னைக் காதல் நீரோட்டத்தில தள்ளி, இப்ப அந்த நீரோட்டம் என்னை அடிச்சிக்கிட்டுப் போய்த் துயரக் கடல்ல தள்ளினதுக்குக் காரணமா அமைஞ்ச என் கண்களுக்குத்தான்! ஏற்கெனவே தான் செஞ்ச பாவத்துக்கு தண்டனையா என் கண்கள் அழுதுக்கிட்டும்,  தூக்கமில்லாம தவிச்சுக்கிட்டும் இருக்கு. ஆனா இந்த தண்டனை போதாது. ஏ கண்களே! அழுது அழுது உங்கள் கண்ணீர் வற்றிப் போகட்டும். பிடி சாபம்!" என்றுபடியே கையை வீசிப் பெரிதாகச் சிரித்தாள் தமயந்தி.

அல்லி மௌனமாக தமயந்தியின் தோள்களை ஆதரவுடன் பற்றினாள்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 118
கண்"விதுப்பழிதல் (கண்கள் துயரில் துடித்தல்)

குறள் 1177
உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்.

பொருள்:
அன்று விரும்பி நெகிழ்ந்து காதலரைக் கண்ட கண்கள் இன்று உறக்கமில்லாத துன்பத்தால் வருந்தி வருந்திக் கண்ணீரும் அற்றுப் போகட்டும்.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Thursday, April 13, 2023

1176. தவறும், தண்டனையும்!

"உலகத்தில பல சமயம் தப்பு செய்யறது ஒருத்தனா இருக்கும், தண்டனையை அனுபவிக்கறது இன்னொருத்தனா இருக்கும். உலகத்திலதான்னு இல்லை. நம் உடம்புக்குள்ளேயே இப்படி நடக்கறதுண்டு. நம்ம நாக்கு இருக்கே அது, தான் நல்ல ருசிகளை அனுபவிக்கணுங்கறதுக்காகப் பல உணவுகளைக் கட்டுப்பாடு இல்லாம சாப்பிட்டுடும். ஆனா அதன் விளைவுகளை அனுபவிக்கறது ஜீரண உறுப்புக்களும், உணவில இருக்கற பொருட்களால பாதிக்கப்படற பிற உறுப்புகளும்தான்!"

"நான் கிளம்பறேம்மா!" என்று எழுந்தாள் சுகன்யா.

"ஏண்டி, ஒரு மாறுதலுக்காகத்தானே உபன்யாஸத்துக்குக் கூட்டிக்கிட்டு வந்தேன்? பாதியில எழுந்து போற!" என்ற அவள் அம்மா, மகளின் கண்களைப் பார்த்து விட்டு,"கண்ணெல்லாம் எப்படிச் சிவந்திருக்கு! தூங்கினாத்தானே? சரி. வீட்டில போய்ப் படுத்துத் தூங்கு" என்றாள் பரிவுடன்.

உபன்யாசம் நடக்கும் மண்டபத்திலிருந்து வீட்டுக்கு நடந்தாள் சுகன்யா. சோர்வடைந்த கண்கள் நடக்கும்போதே சொக்கின. ஆனால் வீட்டுக்குப் போய்ப் படுக்கையில் சாய்ந்தால் அவை உறங்கப் போவதில்லை.

அவள் காதலித்து மணந்த கார்மேகன் தன் நண்பனுடன் வணிகம் செய்ய வடக்குப் பகுதிக்குச் சென்று பல மாதங்கள் ஆகி விட்டன.அவன் சென்றதிலிருந்து அவள் உறக்கம் போய்விட்டது.

கணவனைப் பிரிந்ததிலிருந்து அவள் சரியாகச் சாப்பிடாததால் அவள் உடல் பலமிழந்து விட்டதாக அவள் அம்மா பலமுறை கூறி இருக்கிறாள்.

உபன்யாசகர் கூறிய கருத்து நினைவுக்கு வந்தது. 

'தவறு செய்வது ஒருவர், தண்டனையை அனுபவிப்பது மற்றொருவர்!'

'உண்மைதான். கார்மேகனைப் பார்த்து அவன் மேல் காதல் கொண்டவை இந்தக் கண்கள்தான். ஆனால் காமநோயால் வாடுவது இந்த உடல்தானே!'

கண்களில் மீண்டும் சோர்வு ஏற்பட்டது.

'இல்லையே! இந்தக் கண்களும்தானே தூங்க முடியாமல், சோர்வடைந்து அல்லல்படுகின்றன!'

'ஆயினும் இந்தக் கண்கள் வருந்துவது நியாயம்தான்! தவறு செய்தவர்கள் தண்டனையை அனுபவிப்பது நியாயம்தானே!'

வீட்டை அடைந்ததும் படுக்கையில் படுத்துக் கொண்டு இன்னொரு உறக்கமில்லாத இரவைக் கழிக்கத் தயாரானாள் சுகன்யா.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 118
கண்விதுப்பழிதல் (கண்கள் துயரில் துடித்தல்)

குறள் 1176
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.

பொருள்:
எமக்கு இந்தக் காமநோயை உண்டாக்கிய கண்கள், தாமும் இத்தகைய துன்பத்தைப் பட்டு வருந்துவது மிகவும் நல்லதே!.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Wednesday, April 12, 2023

1175. நீயும் உறங்கவில்லை, நானும் உறங்கவில்லை!

"ஏம்மா, நீ ராத்திரி முழுக்கத் தூங்கவே இல்லை போலிருக்கே!" என்றாள் நந்தினி தன் தாயிடம்.

"ஆமாம். முதுகுவலி. மல்லாக்கப் படுத்தா உடம்பு வலிக்குது. ஒருக்களிச்சுப் படுத்தா கொஞ்ச நேரத்தில முழிப்பு வந்துடுது. இன்னொரு பக்கம் திரும்பிப் படுக்க வேண்டி இருக்கு. அதனால அடிக்கடி முழிச்சுக்கிட்டு, மாத்தி மாத்தித் திரும்பிப் படுத்துக்கிட்டிருந்தேன். அது சரி. நான் சரியாத் தூங்காதது உனக்கு எப்படித் தெரியும்? நீயும் சரியாத் தூங்கலியா என்ன?" என்றாள் நந்தினியின் தாய்

'சரியா இல்ல, சுத்தமாவே தூங்கல!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட நந்தினி, "தூங்கினேம்மா! ஒண்ணு ரெண்டு தடவை முழிப்பு வந்தப்ப நீ புரண்டு படுத்துக்கிட்டிருந்ததைப் பார்த்தேன்" என்றாள் தாயிடம்.

தன்னைக் காதலித்த சதீஷ் காதலுக்கு விடைகொடுத்து விட்டு வேறொரு பெண்ணை மணந்து கொண்டதிலிருந்து தனக்கு உறக்கம் போய் விட்ட உண்மையைத் தாயிடம் சொல்ல நந்தினிக்குத் துணிவு வரவில்லை.

"கையளவு உள்ளம் வைத்து
கடல் போல் ஆசை வைத்து
விளையாடச் சொன்னானடி - என்னை 
விளையாடச் சொன்னானடி - அவனே
விளையாடி விட்டானடி!"

கைபேசியில் ஒலித்த பாடல் நந்தினியின் மனதைப் பிழிந்தது. 

'கவிஞர் எழுதியதில் ஒரு பிழை இருக்கிறது. கையளவு உள்ளத்தில் கடலளவு ஆசை ஏற்படக் காரணம் இந்தக் கண்கள்தானே! ஏன் கண்களின் பிழையைக் கவிஞர் சுட்டிக் காட்டவில்லை?' என்று நினைத்துப் பார்த்தாள் நந்தினி.

மனதை அழுத்திக் கொண்டிருக்கும் துயரத்தைத் திசை திருப்ப இது போன்ற சிந்தனைகளை மனதில் வலுவில உருவாக்கிக் கொள்ளும் பழக்கத்தை அவள் ஏற்படுத்திக் கொண்டிருந்தாள்.

தூக்கம் காணாத கண்கள் சோர்வை வெளிப்படுத்த, ஒரு நிமிடம் கண்களை மூடிக் கொண்டிருந்தாள் நந்தினி..

பாடல் முடிந்து அடுத்த பாடல் ஒலித்தது.

"கண்களே! கண்களே!
காதல் செய்வதை விட்டு விடுங்கள்!'

தன் மனதில் எழுந்த கேள்விக்கு விடையளிப்பது போல் அந்தப் பாடல் வந்ததைக் கேட்டு ஒரு நிமிடம் வியந்த நந்தினி காதல் பற்றிய சிந்தனைகளிலிருந்து தன் மனதைத் திருப்ப எண்ணிப் பாட்டை நிறுத்தினாள்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 118
கண்விதுப்பழிதல் (கண்கள் துயரில் துடித்தல்)

குறள் 1175
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண்.

பொருள்:
கடல் கொள்ளாத அளவுக்குக் காதல் நோய் உருவாகக் காரணமாக இருந்த என் கண்கள், இப்போது தூங்க முடியாமல் துன்பத்தால் வாடுகின்றன.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

1174. கயல்விழியின் கண்கள்!

"போன முறை பார்த்ததுக்கு இந்த முறை நல்ல முன்னேற்றம் தெரியுது!" என்றாள் பவளக்கொடி.

"என்ன முன்னேற்றம்? உடல் பருத்திருக்கா?" என்றாள் கயல்விழி.

"உடம்பு பருக்கல. அது எப்பவுமே பருக்காது! ஆனா போன தடவை நான் உன்னைப் பார்த்தப்ப அழுது அழுது உன் கண் எல்லாம் வீங்கி இருந்தது. எத்தனை நாளைக்குடி அழுதுக்கிட்டே இருப்பேன்னு நான் கூடக் கேட்டேன். ஆனா இந்த முறை உன் கண் ஈரமில்லாம கொஞ்சம் தெளிவா இருக்கு. மனசை சமாதானப்படுத்திக்கிட்டு அழறதை நிறுத்திட்டேன்னு நினைக்கிறேன். இது எனக்கு ஆறுதலா இருக்கு!"

கயல்விழி மௌனமாக இருந்தாள். 

"கயல்! உன் நிலைமை எனக்குப் புரியுது. காதலிச்சவன் பிரிஞ்சு போயிட்டான்னா அது பெரிய துயரம்தான். ஆனா அதுக்காக எவ்வளவு நாள் அழுதுக்கிட்டிருந்த நீ! எனக்கு அது பொறுக்கல. அதான் ஒவ்வொரு தடவையும் அழறதை நிறுத்திட்டு அடுத்த வேலையைப் பாருடின்னு உங்கிட்ட சொல்லுவேன். உனக்கு என் மேல கோபம் கூட ஏற்பட்டிருக்கலாம். ரொம்ப நாள் கழிச்சு இப்பதான் கண்ணீர் இல்லாத உன் கண்ணைப் பாக்கறேன். எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு!" என்றுபடியே அன்புடன் தோழியின் கைகளைப் பிடித்துக் கொண்டாள் பவளக்கொடி.

' அடி முட்டாள் பெண்ணே! நான் என் வருத்தத்தைப் போக்கிக்கிட்டு அழறதை நிறுத்திட்டதாவா நினைக்கற? உண்மை அது இல்ல. அழுது அழுது என் கண்ணில இருந்த தண்ணி அத்தனையும் வத்திப் போச்சு! ஆனா என் கண்களுக்கு இந்த தண்டனை வேண்டியதுதான். அவைதானே எனக்குக் காதல் நோயை ற்படுத்தின?' என்று நினைத்துக் கொண்டாள் கயல்விழி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 118
கண்விதுப்பழிதல் (கண்கள் துயரில் துடித்தல்)

குறள் 1174
கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது.

பொருள்:
தப்பிப் பிழைக்க முடியாத, தீராத காதல் நோயை எனக்குத் தருவதற்குக் காரணமான என் கண்கள், தாமும் அழ முடியாமல் வற்றிப் போய்விட்டன.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Tuesday, April 11, 2023

1173. கண்கள் அதே, செயல்கள் வேறு!

"நீயும் நானும் இந்தச் சாலையில நடந்து போய்க்கிட்டிருக்கறப்பத்தான் முதல்ல அவரைப் பார்த்தோம். ஞாபகம் இருக்கா?" என்றாள் காமினி.

"அப்படியா?" என்றாள் சந்திரகலா.

"என்ன அப்படியா' நீ கூட என்னைக் கேலி செய்யல - என்னடி உன் கண்ணு அலைபாய்ஞ்சுக்கிட்டே இருக்குன்னு?"

"இப்ப ஞாபகம் வருது. ஆனா அப்ப நீ மழை வருதான்னு பாக்கறதா இல்ல எங்கிட்ட சொன்னே? நான் கூட 'மழை வருதான்னு பாக்க எல்லாரும் வானத்தையில்ல பாப்பாங்க! ஆனா நீ ஒரு பக்கமாத் திரும்பித் திரும்பிப்  பாத்துக்கிட்டே வரியே?' ன்னு கேட்டேன். ஓ, அவரைத்தான் திரும்பித் திரும்பிப் பாத்துக்கிட்டிருந்தியா?"

காமினி மௌனமாக இருந்தாள்.

"பாத்த, பழகின. காதலிச்ச.ஆனா கல்யாணம் பண்ணிக்கறதுக்குள்ள அவரு எங்கேயோ காணம போயிட்டாரு. அதுதானே கதை?" என்றாள் சந்திரகலா.

"காணாம எல்லாம் போகல. எங்கேயோ தொலைதூரம் போய் வியாபார ம் செஞ்சு பணம் சேத்துக்கிட்டு வந்து அப்புறம் என்னைக் கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லிட்டுத்தான் போனாரு!" என்று காமினி சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவள் கண்களில் நீர் வழிந்தது.

தெருவில் யாரும் பார்த்து விடக் கூடாதே என்று சேலைத் தலைப்பால் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் காமினி.

"அன்று இந்தக் கண்கள்தான் தாங்கள் காதலனைப் பார்ப்பது யாருக்கும் தெரிந்து விடக் கூடாதென்று மறைத்து மறைத்துப் பார்த்தன. இன்று அதே கண்கள் காதலனின் பிரிவை நினைத்து அழுகின்றன. அவை அழுவதை மறைக்க அவற்றிலிருந்து வரும் கண்ணீரைக் கைகள் துடைக்கின்றன. ஒருபுறம் இதை நினைத்தால் எனக்குச் சிரிப்பு வருகிறது. மறுபுறம் பரிதாபமாகவும் இருக்கிறது!' என்று நினைத்துக் கொண்டாள் சந்திரகலா.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 118
கண்விதுப்பழிதல் (கண்கள் துயரில் துடித்தல்)

குறள் 1173
கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.

பொருள்:
அன்று காதலரைத் தாமே விரைந்து நோக்கிய கண்கள் இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத் தக்கது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Tuesday, April 4, 2023

1172. கலங்கிய கண்கள்

"நான் உனக்குப் பொருத்தமானவன் இல்ல!" என்றான் மணிமாறன்.

"ஏன் அப்படிச் சொல்ற?" என்றாள் காந்தவல்லி

"நீ ஒரு வணிகரோட மகள். நான் ஒரு மாலுமி. உனக்கும் எனக்கும் பொருத்தம் இல்லை!"

"என் கண்கள் நீதான் எனக்குப் பொருத்தமானவன் என்று சொல்கின்றன!"

"கண்கள் செல்லுமிடத்துக்கெல்லாம் மனதும் சென்றால்? மனம் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்!"

"இதில் சிந்திப்பதற்கு எதுவுமில்லை!"

இரண்டு ஆண்டுகளுக்கு முன் சந்தையில் மணிமாறனைச் சந்தித்து முதல் பார்வையிலேயே அவன் மீது காதல் கொண்டு அவனிடம் தன் காதலைத் தெரிவித்தபோது நிகழ்ந்த இந்த உரையாடல் காந்தவல்லியின் மனதில் வந்து போனது.

பெற்றோர்கள் தடுத்தும் கேளாமல் மணிமாறனை மணம் புரிந்த இந்த இரண்டு ஆண்டுகளில் மணிமாறன் அவளுடன் இருந்த நாட்களை விடக் கடலில் கழித்த நாட்கள்தான் அதிகம்.

மணிமாறன் கப்பலில் வேலை செய்ய வேண்டியதில்லை, தன் வணிகத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கலாம் என்று காந்தவல்லியின் தந்தை கூறியதை மணிமாறன் ஏற்கவில்லை. தான் வேலை செய்து பொருள் ஈட்டி அதன் பிறகு காந்தவல்லியின் தந்தையின் வணிகத்தில் சிறிதளாவாவது முதலீடு செய்த பிறகுதான் அவர் வணிகத்தில் தானும் சேர்ந்து கொள்ள முடியும் என்று அவன் உறுதியாகக் கூறி விட்டான்.

"ஏன் உன் கண் இவ்வளவு சிவந்திருக்கு. அழுதியா என்ன?" என்றாள் காந்தவல்லியின் தாய்.

"பின்னே, புருஷன் என்னைத் தனியா விட்டுட்டுக் கடலுக்குப் போனா நான் சிரிச்சுக்கிட்டா இருக்க முடியும்?" என்றாள் காந்தவல்லி எரிச்சலுடன்.

"இந்தத் திமிர்ப் பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல! காதலிக்கறது பெரிசு இல்லடி. உன் புருஷன் சம்பாதிச்சுப் பொருள் சேர்க்கணுங்கறதுக்காகக் கப்பல்ல கஷ்டப்பட்டு வேலை செய்யறான். அவனோட அன்பு, அக்கறை, பொறுப்புணர்ச்சி இதையெல்லாம் புரிஞ்சுக்காம அவன் உன்னை விட்டுப் பிரிஞ்சிருக்கறதை நினைச்சு அழறது முட்டாள்தனம்னு உனக்குப் புரியல!"

'ஒருவேளை அவன் கஷ்டத்தைப் புரிந்து கொண்டு அதற்கும் சேர்த்துத்தான் என் கண்கள் கலங்குகின்றனவோ என்னவோ!" என்று நினைத்துக் கொண்டாள் காந்தவல்லி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 118
கண்விதுப்பழிதல் (கண்கள் துயரில் துடித்தல்)

குறள் 1172
தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்.

பொருள்:
ஆராய்ந்து உணராமல் அன்று நோக்கிக் காதல் கொண்ட கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?.

குறள் 1171
அறத்துப்பால்                                                               பொருட்பால்

1307. முதலில் தேவை முகவரி!

விளையாட்டாக ஆரம்பித்த பேச்சு விபரீதத்தில் முடியும் என்று அஜய் எதிர்பார்க்கவில்லை. அஜய் வழக்கம்போல் வீணாவுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருக்கும்போ...