"எப்படி இருக்கேன்?" என்றாள் வாசவி.
"உடம்பெல்லாம் இளைச்சு, சோகை பிடிச்ச மாதிரி இருக்கு. தோல் கூட வெளுத்திருக்கு!"
"பரவாயில்லம்மா. நான் கருப்புதானே? கொஞ்சம் தோல் வெளுத்தால் நல்லதுதானே!"
"கருப்புத்தோல் வெளுத்து, ஒரு மாதிரி பச்சையா இல்ல இருக்கு, பாசி படர்ந்த மாதிரி!"
'நாளானால் பாசி படரத்தானே செய்யும்?' என்று முணுமுணுத்தாள் வாசவி.
'நீண்ட நாள் பராமரிக்கப்படாத தரையில் பாசி படர்வது போல், காதலனைப் பிரிந்து வாடும் உடலில், நாட்பட நாட்படப் பசலை படரத்தானே செய்யும்?' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் வாசவி.
'உன்னைப் பிரிந்து வெளியூர் செல்கிறேன், திரும்பி வரப் பல நாட்கள் ஆகும் என்று காதலன் சொன்னபோது மறுப்புச் சொல்லாமல் தலையாட்டி விட்டு, இன்று உடல் சோர்ந்து தோல் நிறம் மாதிரி, என் மன வருத்தத்தை உடல் பிரதிபலிக்கிறதே என்று வருந்தி என்ன பயன்!'
"என்னடி, பதில் சொல்ல மாட்டேங்கற? மருத்துவர்கிட்ட போகலாமா?" என்றாள் தாய்.
"வேண்டாம்மா! தானே சரியாயிடும்" என்ற வாசவி, 'காதலன் திரும்பியதும் சரியாகி விடும்தான். ஆனால், அதுவரை 'ஏன் உன் உடல் இளைத்து நிறம் மாறி இருக்கிறது?' என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டுமே!' என்று கவலை கொண்டாள்.
கற்பியல்
பொருள்:
என்னைப் பிரிந்து செல்வதற்கு என் காதலர்க்கு ஒப்புதல் அளித்து விட்டேன்; ஆனால், இப்போது பிரிவுத் துன்பத்தால் என் உடலில் பசலை படர்வதை, யாரிடம் போய்ச் சொல்வேன்?
No comments:
Post a Comment