திருக்குறள்
காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 121
நினைந்தவர் புலம்பல்
1201. வேண்டாம் அந்த போதை!
"கள் குடிக்கிறதை விட்டுடு" என்று பொன்னம்மாள் எத்தனையோ முறை தன் மகன் தண்டபாணியிடம் கூறியும், அவன் தன் தாயின் பேச்சைக் கேட்கவில்லை."விட்டுடணும்னுதாம்மா பாக்கறேன். ஆனா என்னால முடியலியே!" என்றான் தண்டபாணி.
"ஏண்டா! கள்ளு குடிச்சா, அந்த போதை கொஞ்ச நேரம் இருக்கப் போகுது. தெளிஞ்சப்புறம் எல்லாம் போயிடும். அந்தக் கொஞ்ச நேர போதைக்காகக் குடிக்கணுமா?"
"அதாம்மா பிரச்னை! ஒரு தடவை குடிச்சா, போதை அப்படியே இருந்தா நல்லா இருக்கும். ஆனா கொஞ்ச நேரத்தில போதை தெளிஞ்சுடறதனால, மறுபடி குடிக்கணும்னு வெறி வருது. அதைக் கட்டுப்படுத்த முடியல. சாப்பிட்ட சில மணி நேரங்கள்ள பசி எடுத்து மறுபடி சாப்பிடற மாதிரி!"
"நல்லா வியாக்கியானம் பண்ணு. நான் சொன்னா கேக்க மாட்டே. கல்யாணத்துக்கப்புறம் உன் பெண்டாட்டி சொன்னாலாவது கேக்கறியான்னு பாக்கலாம்!" என்றாள் பொன்னம்மாள்.
திருமணமாகிச் சில நாட்களில், தண்டபாணி கள் குடிப்பதை நிறுத்தி விட்டான்.
"நான் சொன்னேன் இல்ல? பெத்தவ சொன்னா கேக்க மாட்ட, பொண்டாட்டி சொன்னா கேப்ப! எப்படியோ, நீ குடியை நிறுத்தினது எனக்கு சந்தோஷம்தான்" என்றாள் பொன்னம்மாள்.
"குடியை நிறுத்தச் சொல்லி அவ சொல்லலம்மா. நீ இத்தனை நாளா சொல்லிக்கிட்டு இருக்கறதனாலதான் நிறுத்தினேன்!" என்றான் தண்டபாணி.
"பொய் சொல்லாதடா!" என்றாள் பொன்னம்மாள்.
'பொய்தான். திருமணத்துக்குப் பிறகு மனைவியுடன் ஏற்பட்ட காதல் இன்பம்தான் நான் குடியை விட்டதற்குக் காரணம். ஒருமுறை அனுபவித்த காதல் இன்பம் எப்போதும் மனதில் இனிமையாக நிலைத்து நிற்பதை அனுபவிப்பதால்தான், அருந்தும்போது மட்டுமே இன்பமளிக்கும் கள்ளின் போதை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டேன். இதை எப்படி என்னால் உனக்கு விளக்க முடியும்?' என்று நினைத்துக் கொண்டான் தண்டபாணி.
பொருள்:
உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் கள்ளை விட, நினைத்தாலே நெஞ்சினிக்கச் செய்யும் காதல் இன்பமானதாகும்.
1202. பிரிவு சுடுமோ?
"கேளுடி!"
"காதல் இனிமையானதுன்னு சொல்றாங்களே, உண்மையா?"
"ஏண்டி, ஒத்தரைக் காலிச்சு கல்யாணம் செஞ்சுக்கிட்டு, அவரோட சந்தோஷமா வாழ்ந்துக்கிட்டிருக்கேன். என்னைப் பார்த்து ஏன் இந்தக் கேள்வியைக் கேக்கற?"
"இப்ப நீ சந்தோஷமா இருக்கியா?"
"இப்ப மட்டும் இல்ல, எப்பவுமே சந்தோஷமாத்தான் இருக்கேன். ஏன் உனக்கு இந்த சந்தேகம்?"
"உன் கணவர் வெளியூருக்குப் போயிருக்காரே, அவரைப் பிரிஞ்சு இருக்குறதால, இப்ப நீ வருத்தமாத்தானே இருக்கணும்?"
"காதலரைப் பிரிஞ்சு இருந்தா வருத்தமாத்தான் இருக்கணும்னு அவசியம் இல்லையே!"
"சில பேர் அப்படி இருக்கறதைப் பாத்திருக்கேன்."
"அவங்களுக்குக் கல்யாணம் ஆகி இருக்காது!"
"அப்படின்னா?"
"நான் காதலிச்சவரைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டு, அவரோட இல்லற சுகத்தை அனுபவிச்சப்பறம், அந்த சுகத்தோட இனிமை மனசில எப்பவுமே இருந்துக்கிட்டிருக்கு. என் கணவர் இல்லாதப்ப, அவரை நினைக்கும்போதெல்லாம், அந்த இனிமையான நினைவுதான் மனசில வருது. அதனால, அவரைப் பிரிஞ்சிருக்கறப்பவும், அந்த நினைவிலேயே நான் சந்தோஷமா இருக்கேன். ஆமாம், நீ ஏன் இப்ப இதைப் பத்திக் கேக்கற?"
"நான் ஒத்தரைக் காதலிக்கறேன். ஆனா, அதை இன்னும் அவர்கிட்ட சொல்லல. காதல்ல, பிரிவுத் துன்பம் ரொம்பக் கொடுமையானதுன்னு கேள்விப்பட்டிருக்கேன். அதனாலதான், இந்தக் காதலை வளர விடறதுக்கே பயமா இருக்கு. அதான் உங்கிட்ட கேட்டேன்."
"தைரியமா உன் காதலை முன்னே எடுத்துக்கிட்டுப் போ. எப்போதாவது உன் காதலரை நீ பிரிய வேண்டி இருந்தாலும், அவரோட நினைவு உனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும்!"
பொருள்:
தான் விரும்பி இணைந்த காதலரை நினைத்தலால், பிரிவின்போது வரக் கூடிய துன்பம் வருவதில்லை எனவே, எந்த வகையிலும் காதல் இனிதேயாகும்.
1203. அவன் என்னை நினைக்கும்போதெல்லாம்...
"என்னம்மா புரையேறுது?" என்றபடியே தண்ணீர் தம்ளருடன் தாயிடம் விரைந்தாள் கனகா.
"உன் அப்பா ஊருக்குப் போயிருக்காரு இல்ல? என்னை நினைச்சிருப்பாரு. அதான் புரையேறி இருக்கு!" என்றாள் பத்மா.
"ஏம்மா, அப்பா வேற ஊர்ல இருந்துக்கிட்டு உன்னை நினைச்சா, உனக்குப் புரையேறுமா?" என்றாள் கனகா, கேலியாக.
"வெளியூர் போனால்தான்னு இல்ல, அவர் ஊர்ல இருக்கறப்ப, ஆஃபீஸ்ல என்னை நினைச்சாக் கூட எனக்குப் புரையேறும்!"
"சரி. அப்பா உன்னை நினைக்கறப்ப நீ சாப்பிட்டுக்கிட்டிருந்தா, உனக்குப் புரையேறும். மத்த நேரங்கள்ள நினைச்சா?"
"தும்மல் வரும்!" என்றாள் பத்மா.
கனகாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
"என்னடி சிரிக்கற? உனக்கும் கல்யாணம் ஆகி, உன் புருஷன் உன்னை நினைக்கறப்ப, உனக்குத் தும்மல் வரும். அப்போதான் உனக்கு இது புரியும்!" என்றாள் பத்மா.
'கல்யாணம் ஆகாவிட்டால் என்ன? எனக்கு ஒரு காதலன் இருக்கிறானே! அவன் என்னை நினைக்கும்போது, எனக்குத் தும்மல் வருமா?'
அதற்குப் பிறகு, தனக்கு எப்போது தும்மல் வருகிறது என்று கவனிக்க ஆரம்பித்தாள் கனகா.
ஒவ்வொரு முறை தும்மல் வந்தபோதும், தன் காதலன் சுரேஷ் தன்னை நினைக்கிறான் என்ற உணர்வில் கனகாவுக்கு மனதில் மகிழ்ச்சி பொங்கியது.
'என்ன இது? அம்மா சொன்னபோது, இது என்ன முட்டாள்தனம் என்று நினைத்து எனக்குச் சிரிப்பு வந்தது. இப்போது நானும் இந்த நம்பிக்கையை ஏற்றுக் கொண்டு விட்டேனே!' என்ற சிந்தனை ஏற்பட்டாலும், 'நம்பிக்கை சரியோ, தவறோ, அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறதே, அது போதும்!' என்று நினைத்துக் கொண்டாள் கனகா.
தும்மல் வரும் உணர்வு வந்ததுமே, கனகாவின் மனதில் மகிழ்ச்சி ததும்பத் துவங்கியது. 'சுரேஷ் என்னை நினைக்கிறான்!'
ஆனால், தும்மல் வருவது போல் தோற்றமளித்து விட்டு, வராமலே இருந்து விட்டது!
'இது என்ன? ஏன் வந்த தும்மல் வராமலேயே அடங்கி விட்டது? ஒருவேளை சுரேஷ் என்னை நினைக்கத் துவங்கி, வேறு ஏதோ சிந்தனை வந்ததால். என்னை நினைக்காமலே இருந்து விட்டானோ?' என்று நினைத்துப் பார்த்தபோது, கனகாவுக்கு ஏமாற்றமாக இருந்தது.
பொருள்:
தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ?
1204. எந்தன் நெஞ்சில் நீங்காத...
தமயந்தி தன் தோழி திலகாவின் வீட்டுக்குச் சென்றபோது, அங்கிருந்த ஒரு படத்தைப் பார்த்தாள்.அதில். அனுமார் தன் மார்பைப் பிளந்து காட்ட, அவர் மார்பில் ராமரும், சீதையும் இருந்தனர்.
"புதுசா வாங்கினியா?" என்றாள் தமயந்தி.
"ஆமாம். நான் ராமரோட பக்தையாச்சே!" என்றாள் திலகா.
"அப்ப, ராமர் படத்தைன்னா வாங்கி இருக்கணும்? உன்னோட படத்தை வாங்கி இருக்கே!"
"அடிச்சேன்னா!" என்று விளையாட்டாகக் கையை ஓங்கிய திலகா, "இந்தப் படம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நம் மனசில ஒத்தர் இருக்கார்ங்கறதை நம்மாலயும் இப்படித் திறந்து காட்ட முடிஞ்சா, நல்லா இருக்கும் இல்ல?" என்றாள்.
"ஓ, நீ அப்படி வரியா? நீ உன் மனசில எப்பவும் உன் காதலன் சுந்தரைத்தான் நினைச்சுக்கிட்டிருக்கேங்கறதை அவர் நம்ப மாட்டாரா? நீ இதயத்தைத் திறந்து காட்டினாத்தான் நம்புவாரா?"
"உனக்குக் காதல் வந்தாதான் இது புரியும்!"
"வேண்டவே வேண்டாம். என்னால நெஞ்சத்தைக் கிழிச்செல்லாம் காட்ட முடியாதும்மா!" என்ற தமயந்தி, "இந்தப் படத்தைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஒண்ணு தோணும்" என்றாள், தொடர்ந்து.
"என்ன தோணும்?"
"நீ ராமர் பக்தையாச்சே! கோவிச்சுக்க மாட்டியே?"
"என்னடி, ஏதாவது தப்பா சொல்லப் போறியா?" என்றாள் திலகா.
"இல்லை. அனுமார் தன்னோட நெஞ்சைக் கிழிச்சு, அதில ராமர் இருக்கார்னு காட்டி இருக்காரே, ராமர் எப்பவாவது தன் நெஞ்சைக் கிழிச்சு, அதில அனுமார் இருக்கார்னு காட்டி இருக்காரா?"
திலகா மௌனமாக இருந்தாள்.
"என்னடி? கோவிச்சுக்கிட்டு, என்னைத் திட்டுவேன்னு நினைச்சேன். பேசாம இருக்க. ரொம்பக் கோபமா?" என்றாள் தமயந்தி, பாதி விளையாட்டாகவும், பாதி உண்மையாகவும்.
'என் மனசில எப்பவும் சுந்தர் இருக்கான். அது மாதிரி சுந்தர் மனசில எப்பவும் நான் இருப்பேனா?' என்ற சிந்தனையை தமயந்தியின் கேள்வி, திலகாவின் மனதில் ஏற்படுத்தி விட்டதை தமயந்தி உணரவில்லை.
பொருள்:
எம்முடைய நெஞ்சில் காதலராகிய அவர் இருக்கின்றாரே! (அது போலவே) யாமும் அவருடைய நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கின்றோமோ?
1205. நெஞ்சினிலே நினைவு முகம்!
"நாம ஆசைப்படற விஷயம் நமக்குக் கிடைக்கலேன்னா, அதை விட்டுடணும்!" என்றாள் பூங்கொடி, தன் தோழி அருணாவிடம்."ஆறு மாசமா என்னோட காதலை அவருக்கு நான் எப்படியெல்லாமோ வெளிப்படுத்திட்டேன். ஆனா, அவர் தன் மனசில எனக்கு இடம் கொடுக்க மாட்டேங்கறாரு. நாம ஆசைப்படற விஷயம் கிடைக்கலேன்னா, அதை விட்டுடணும்னு நீ சுலபமா சொல்லிட்ட!" என்றாள் அருணா.
பூங்கொடி தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
"நீ சொன்னபடி செய்யறது சுலபம் இல்லேன்னு நான் சொன்னா, அதுக்கு நீ ஏன் என் மேல கோவிச்சுக்கிட்டு உன் முகத்தைத் திருப்பிக்கற?" என்றபடியே, தோழியின் முகத்தைத் தனக்கு நேரே திருப்பிய அருணா, தோழியின் கண்களில் பெருகி வழிந்து கொண்டிருந்த கண்ணீரைக் கண்டு திடுக்கிட்டு, "நீ ஏண்டி அழற?" என்றாள்.
"நான் சுலபமா சொல்லல. என் அனுபவத்தை வச்சுத்தான் சொல்றேன். நானும் ஒத்தரைக் காதலிச்சு, அவர் என் காதலை ஏத்துக்காததால, வேற வழியில்லாம, என் முயற்சிகளைக் கைவிட்டவதான். அதானாலதான் சொன்னேன், ஆசைப்படற விஷயம் நமக்குக் கிடைக்கலேன்னா, அதை விட்டுடணும்னு!" என்றாள் பூங்கொடி, கண்ணீரைத் துடைத்தபடி.
"அடிப்பாவி! எங்கிட்ட கூட சொல்லாம இருந்துட்டியே! அது சரி. அவர் மேல ஆசையை விட்டுட்டேன்னா, ஏன் உன் கண்ல கண்ணீர் வருது?"
"ஆசையை விட்டேன்னு எங்கே சொன்னேன்? அவர்கிட்ட என் காதலைத் தெரிவிக்கிற முயற்சிகளை விட்டுட்டேன், அவ்வளவுதான். அவர் உருவம் என் நெஞ்சிலே இருந்துக்கிட்டு, என்னை வாட்டிக்கிட்டேதானே இருக்கு?"
"ஏண்டி, உன் காதலை ஏத்துக்காதவரை உன் மனசில வச்சுக்கிட்டிருக்கியே, உனக்கு வெக்கமா இல்லை?" என்றாள் அருணா.
"நான் ஏன் வெட்கப்படணும். என்னை அவர் தன்னோட இதயத்துக்குள்ள விடாம வெளியே நிறுத்தி வச்சுக்கிட்டு, அவர் மட்டும் என் நெஞ்சுக்குள்ள வந்து உக்காந்திருக்கறதுக்கு அவர்தானே வெட்கப்படணும்?" என்றாள் பூங்கொடி, கோபத்துடன்.
பொருள்:
தம்முடைய நெஞ்சில் எம்மை வர விடாது காவல் கொண்ட காதலர், எம்முடைய நெஞ்சில் தாம் ஓயாமல் வருவதைப் பற்றி நாண மாட்டாரோ?
1206. திண்ணைப் பேச்சு!
"கட்டின பருஷன் இவளைக் கைவிட்டுட்டு, வேற ஒரு பொண்ணோட எங்கேயோ போயிட்டான். இவ கொஞ்சம் கூட வருத்தப்படாம, உல்லாசமா வாழ்ந்துக்கிட்டிருக்கா!"தெருவில் நடந்து கொண்டிருந்த செல்வியின் காதில் இந்தப் பேச்சு விழுந்ததும், சட்டென்று திரும்பிய செல்வி, அவ்வாறு பேசிய அந்த நடுத்தர வயதுப் பெண்மணி அமர்ந்திருந்த திண்ணையை நோக்கி விரைந்தாள்.
அவளுடன் நடந்து வந்து கொண்டிருந்த அவள் தோழி காந்திமதி, "நில்லுடி! அவங்க கூடப் போய் சண்டை போடப் போறியா? வேண்டாண்டி!" என்று செல்வியைத் தடுக்க முயன்றாள்.
ஆனால், செல்வி தோழியின் பேச்சைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை.
செல்வி தங்களை நோக்கி வருவதைக் கண்டதும், திண்ணையில் அமர்ந்திருந்த அந்த இரண்டு பெண்களும் சற்றுப் பதட்டமடைந்தனர்.
"ஏம்மா, என் புருஷன் என்னை விட்டுட்டு ஓடிட்டார்னா, நான் உயிரோடயே இருக்கக் கூடாதா? தற்கொலை பண்ணிக்கணுமா?" என்றாள் செல்வி, தன்னைப் பற்றிப் பேசிய பெண்ணைப் பார்த்து.
"நான் அப்படிச் சொல்லல!" என்றாள் அந்தப் பெண், பதட்டமான குரலில்.
"உங்க புருஷன் இறந்துட்டாரு. அதுக்காக நீங்க உடன்கட்டை ஏறினீங்களா? நல்லா சாப்பிட்டுட்டுத் திண்ணையில உக்காந்துக்கிட்டு, தெருவில போறவங்களைப் பத்தி வம்பு பேசிக்கிட்டு சந்தோஷமாத்தானே இருக்கீங்க?"
"போதும்டி. வா, போகலாம்" என்று செல்வியின் கையைப் பிடித்து இழுத்தாள் காந்திமதி.
காந்திமதியின் கையை உதறி விட்டு, செல்வி தொடர்ந்து பேசினாள்.
"கோவலன் மாதவிகிட்ட போனதும், கண்ணகி உயிரை விட்டுடல. அவ உயிரோட இருந்ததாலதான், அவளால கோவலனோட மறுபடியும் சேர்ந்து வாழ முடிஞ்சுது!"
அந்தப் பெண் சமதானமாக ஏதோ சொல்ல முயல, அதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் திரும்பி நடந்தாள் செல்வி. காந்திமதியும் அவளுடன் நடந்தாள்.
சற்று தூரம் நடந்ததும், "ஏண்டி செல்வி, உண்மையாவே உன் புருஷன் திரும்பி வருவார்ங்கற நம்பிக்கையிலதான் நீ வாழ்ந்துக்கிட்டிருக்கியா?" என்றாள் காந்திமதி.
"அந்த நம்பிக்கையெல்லாம் எனக்குக் கொஞ்சம் கூட இல்லடி. சும்மா வீம்புக்காக அவங்ககிட்ட அப்படிச் சொன்னேன். உண்மையில, என் புருஷனோட சேர்ந்து நான் சந்தோஷமாக இருந்த நாட்களை நினைச்சுத்தான் நான் வாழ்ந்துக்கிட்டிருக்கேன். மத்தபடி, நான் உயிரோட இருக்கறதுக்கு எந்த அர்த்தமும் இல்லை!"
சொல்லிக் கொண்டிருக்கும்போதே, நெஞ்சில் பொங்கி வந்த அழுகையை செல்வி கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டதை காந்திமதியால் உணர முடிந்தது.
பொருள்:
நான் அவரோடு சேர்ந்திருந்த நாட்களை நினைத்துத்தான் உயிரோடு இருக்கிறேன்; வேறு எதை நினைத்து நான் உயிர் வாழ முடியும்?
1207. எப்போதும் உன் நினைவில்!
"காலையில கண் விழிச்சதுமே, என் முகத்தைத்தான் பாப்பாரு. அப்பதான் அவருக்கு அந்த நாள் மகிழ்ச்சியா அமையும்னு சொல்லுவாரு. இப்ப என்ன செய்யறாரோ தெரியல!" என்றாள் காஞ்சனா.குளித்து விட்டு வந்து வேறு உடை உடுத்திக் கொண்டதும், "அவர் முதல்ல என்னைப் பாக்க வந்தப்ப, இந்தப் புடவைதான் உடுத்திக்கிட்டிருந்தேன்!" என்றாள்.
இதற்கு பதில் சொல்ல வாயெடுத்த அவள் தாய் சகுந்தலா பேசாமல் இருந்து விட்டாள்.
இரவு குழிப் பணியாரம் அருந்தும்போது, "அவருக்கு ரொம்பப் பிடிச்ச உணவு குழிப் பணியாரம்தான்!" என்றாள் காஞ்சனா.
"ஏண்டி, உன் புருஷன் சம்பாதிக்கறதுக்காகக் கடல் தாண்டிப் போயிருக்காரு. அவர் திரும்பி வர வரையில, பொறுமையாத்தான் இருக்கணும். காலையிலேந்து ராத்திரி வரைக்கும், எல்லா விஷயத்திலேயும் அவரைத் தொடர்புபடுத்திப் பேசிக்கிட்டே இருந்தா, உன்னோட பிரிவுத் துன்பம் அதிகமா இல்ல ஆகும்?" என்றாள் சகுந்தலா.
"நான் எப்பவும் அவரை நினைச்சுக்கிட்டிருக்கறதால, மனசளவிலேயாவது அவரோட சேந்து இருக்கேன். அப்படி இருக்கறப்பவே, என்னால பிரிவுத் துன்பத்தைத் தாங்க முடியல. அவரை நினைக்காம இருந்துட்டா, மனசளவில அவரோட ஒண்ணா இருக்கற சந்தோஷம் கூட இருக்காது. அப்ப, பிரிவுத் துன்பத்தைத் தாங்கறது இன்னும் கஷ்டமா இருக்குமே!" என்றாள் காஞ்சனா.
"என்னவோ, நீ சொல்றது எனக்கு ஒண்ணுமே புரியல!" என்றாள் சகுந்தலா.
பொருள்:
மறதி என்பதே இல்லாமல் நினைத்துக் கொண்டிருக்கும்போதே, பிரிவுத் துன்பம் சுட்டுப் பொசுக்குகிறதே! நினைக்காமல் மறந்து விட்டால், என்ன ஆகுமோ?
1208. அவருக்குத் தெரியும்!
"என்னடி, எப்பப் பார்த்தாலும் உன் புருஷனைப் பத்தின நினைப்புத்தானா? உலகத்தில வேற விஷயமே இல்லையா என்ன? நாங்கல்லாம் இருக்கிறது உன் கண்ணுக்குத் தெரியலியா?" என்றாள் வாசுகியின் தாய் மணியம்மை.அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்த வாசுகியின் தோழி சிலம்பரசி, "வாசுகியை ரொம்பக் கோவிச்சுக்காதீங்கம்மா! அவ ஏற்கெனவே ரொம்ப வருத்தத்தல இருக்கா" என்றாள்.
"நான் கோவிச்சுக்கறது போதாது. நீயும் அவகிட்ட கடுமையாச் சொல்லு. அப்பவாவது அவ திருந்தறாளான்னு பாக்கலாம்!" என்றபடியே, உள்ளே சென்று விட்டாள் மணியம்மை.
"அம்மா சொல்லிட்டாங்க இல்ல? நீயும் உன் பங்குக்கு என்னைத் திட்டுடி!" என்றாள் வாசுகி, சிலம்பரசியிடம்.
"நான் யாருடி உன்னைத் திட்ட? உன் புருஷன் ஊர்லேந்து வந்தப்பறம், 'என் பெண்டாட்டியைத் திட்டினியா?'ன்னு என்னைக் கோவிச்சுக்கிட்டார்னா?" என்றாள் சிலம்பரசி, தோழியின் துயர மனநிலையைச் சற்றே மாற்றும் முயற்சியில்.
வாசுகி பதில் சொல்லவில்லை.
"அது சரி. நீ உன் புருஷனை அதிகம் நினைச்சுக்கிட்டே இருக்கேன்னு உங்கம்மாவும் மத்தவங்களும் கோவிச்சுக்கறது இருக்கட்டும். உன் புருஷனுக்கு இது தெரிஞ்சா, 'ஏன் என்னை ரொம்ப அதிகமா நினைச்சு உன்னைக் கஷ்டப்படுத்திக்கிட்டிருக்கே?'ன்னு உன்னைக் கோவிச்சுக்க மாட்டாரா?" என்றாள் சிலம்பரசி..
"நிச்சயமாக் கோவிச்சுக்க மாட்டாரு. ஏன்னா, அவரை நினைச்சுக்கிட்டிருக்கறதுதான் என் பிரிவுத் துன்பத்துக்கு மருந்துன்னு அவருக்குத் தெரியும். என் மனசைப் புரிஞ்சுக்காம, நான் அவரை அதிகமா நினைக்கறேன்னு என்னைக் குத்தம் சொல்றதுக்கு அவர் உங்களை மாதிரி ஆள் இல்லையே!" என்றாள் வாசுகி.
அதைச் சொல்லும்போது வாசுகியின் முகம் மலர்ந்திருந்ததை சிலம்பரசி கவனித்தாள்.
பொருள்:
காதலரை எவ்வளவு மிகுதியாக நினைத்தாலும், அவர் என்மேல் சினம் கொள்ள மாட்டார்; காதலர் செய்யும் சிறந்த உதவி அத்தன்மையானது அன்றோ!
1209. ஈருடல் ஓருயிர்!
"ரெண்டு உடம்புக்குள்ள ஒரு உயிர் இருக்க முடியுமா?"குணவதி இவ்வாறு கேட்டதும், அவளுடைய தோழி சந்திரா பெரிதாகச் சிரித்தாள்.
"ஏதாவது கவிதையில படிச்சியா என்ன?"
"இல்லை. என் காதலர்தான் அப்படிச் சொன்னாரு!"
"எச்சரிக்கையா இருந்துக்கடி. இப்படியெல்லாம் மிகையாப் பேசறவங்களை நம்பவே கூடாது!"
'அன்று சந்திரா விளையாட்டாகத் தன்னை எச்சரித்தது இன்று உண்மையாகி விட்டதே!' என்று நினைத்தபோது, ஏற்கெனவே பலவீனமடைந்திருந்த குணவதியின் உடல், மேலும் சோர்வடைந்தது.
சோமன் அவளைச் சந்தித்து இரண்டு மாதங்கள் ஆகி விட்டன. ஒருவேளை வெளியூர் போயிருப்பானோ என்று முதலில் நினைத்தாள் குணவதி.
ஒருநாள், சற்றுத் தொலைவிலிருந்து அவள் அவனைப் பார்த்து விட்டு, அவனிடம் விரைந்தாள். ஆனால் அவளைப் பார்த்து விட்ட சோமன், வேகமாக வேறு புறம் சென்று விட்டான்.
அப்போதுதான் குணவதிக்குப் புரிந்தது, சோமன் தன் மீது வைத்திருந்த காதல் காற்றில் கரைந்து விட்டதென்று.
இன்னொரு நாள், குணவதி சோமனை வேறொரு பெண்ணுடன் பார்த்தாள். ஒருவேளை அவளிடமும், 'நாம் இருவரும் வெவ்வேறு உடல்கள் கொண்டிருந்தாலும், நம் இருவருக்கும் ஒரே உயிர்தான்' என்று சொல்லிக் கொண்டிருப்பானோ?
'ஆனால் என்னைப் பொருத்தவரை, ஈருடல் ஓருயிர் என்று சோமன் சொன்னது சரிதான். அவரைப் பிரிந்த பிறகு, என் உயிர் என்னை விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க் கொண்டிருக்கிறதே! எனவே, இந்த இரண்டு உயிர்களில், அவருடைய உயிர் மட்டும்தானே மிஞ்சி இருக்கப் போகிறது!' என்ற எண்ணம் குணவதியின் மனதில் தோன்றியபோதே, அவள் கூறுவதை ஆமோதிப்பது போல், அவள் கண்களிலிருந்து நீர்த்துளிகள் வெளிப்பட்டன.
பொருள்:
நாம் இருவரும் வேறு அல்லேம் என்று அடிக்கடி சொல்லும் அவர் இப்போது என்னிடம் அன்பு இல்லாமல் இருப்பதை நினைத்து என் இனிய உயிர் அழிகின்றது.
1210. நிலவுக்கு ஒரு வேண்டுகோள்!
'இவ்வளவு நாள் நெருக்கமா இருந்தவர், திடீர்னு காணாம போயிட்டாரே, ஏன்?'அமுதா தன்னைத் தானே தினமும் கேட்டுக் கொள்ளும் கேள்வி இது.
இந்தக் கேள்வியை அவள் தன் தோழி வசந்தாவிடம் கேட்டபோது, "நான் சொன்னா உனக்கு வருத்தமாத்தான் இருக்கும். பொம்பளைங்க நாம காதல்ல வலுவா இருக்கற மாதிரி, ஆம்பளைங்க இருக்க மாட்டாங்க. உன் ஆள் இப்ப வேற ஒரு பொண்ணோட சுத்திக்கிட்டிருப்பார்னு நினைக்கிறேன்!" என்றாள் வசந்தா.
அதற்குப் பிறகு, அமுதா வசந்தாவிடம் இது பற்றிப் பேசவில்லை. வேறு யாரிடமும் கூடப் பேசவில்லை.
'பரவாயில்லை. என் காதலனை நானே தேடிக் கண்டு பிடிச்சுக்கறேன்!' என்ற உறுதியுடன், அவர்கள் வழக்கமாகச் சந்திக்கும் இடங்களுக்குத் திரும்பத் திரும்பச் சென்று தேடினாள் அமுதா.
"இவ ஏன் பைத்தியம் பிடிச்சவ மாதிரி அலைஞ்சுக்கிட்டிருக்கா?" என்று சிலர் அவள் காதுபடவே பேசினர்.
ஆனால், அத்தகைய பேச்சுக்களை அமுதா லட்சியம் செய்யவில்லை.
பல இடங்களுக்கு அலைந்து சோர்ந்து, அமுதா அந்தக் கோவில் வாசலில் அமர்ந்தபோது, பொழுது இருட்டத் தொடங்கி இருந்தது.
அப்போதுதான் அவளுக்கு அந்த எண்ணம் தோன்றியது.
'இத்தனை நாட்களாக, அவரைப் பகல் வேளைகளில் மட்டும்தான் தேடி இருக்கிறேன். இனி, இரவு வேளைகளில் தேடிப் பார்த்தால் என்ன? ஒருவேளை பகலில் நடமாடினால் என் கண்ணில் பட்டு விடுவோமோ என்று அஞ்சி, இரவில் மட்டுமே நடமாடுகிறாரோ என்னவோ!'
வானத்தைப் பார்த்தாள் அமுதா. வானத்தில் நிலவு அரைவட்டமாக இருந்தது. 'இந்த நிலவு இருக்கும் வரையில், வெளிச்சம் இருக்கும். ஆனால், நிலவு எவ்வளவு நேரம் இருக்கும் என்று தெரியவில்லையே!'
வானத்தை அண்ணாந்து பார்த்து, "ஏ நிலவே! பல நாட்கள் என்னைப் பிரியாமல் என்னுடன் இருந்த என் காதலர், இப்போது என்னைப் பிரிந்து எங்கோ சென்று விட்டார். நான் அவரைத் தேடிக் கண்டு பிடிக்கும் வரை, நீ வானிலிருந்து மறையக் கூடாது!" என்றாள் அமுதா.
அந்தப் பக்கம் போய்க் கொண்டிருந்த ஒருவயதான பெண், "இத்தனை நாளா, பித்துப் பிடிச்ச மாதிரி ஊரைச் சுத்திச் சுத்தி வந்துக்கிட்டிருந்தா. இப்ப வானத்தைப் பார்த்து ஏதோ பேசறா. பைத்தியம் ரொம்ப முத்திடுச்சு போல இருக்கு. இவ அம்மாக்காரிகிட்ட சொல்ல வேண்டியதுதான்!' என்று நினைத்துக் கொண்டாள்.
பொருள்:
திங்களே! பிரியாமல் இருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!
No comments:
Post a Comment