திருக்குறள்
காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 129
புணர்ச்சி விதும்பல்
1281. மது உண்டால் போதையைக் கொடுக்கும்!
மரகதம் எத்தனையோ முறை சொல்லிப் பார்த்து விட்டாள். கோபமாகப் பேசுவது முதல், காலில் விழாத குறையாகக் கெஞ்சுவது வரை, எல்லா விதங்களிலும் முயற்சி செய்து பார்த்து விட்டாள்.ஆனால், அவள் மகன் மனோகரனால் குடிப் பழக்கத்தை விட முடியவில்லை.
ஒரு கட்டத்தில், தன் மகன் இனித் திருந்த மாட்டான் என்ற முடிவுக்கு வந்து, தன் முயற்சிகளைக் கைவிட்டு விட்டாள் மரகதம்.
சில நாட்களாக மனோகரனிடம் ஒரு மாற்றம் தெரிந்தது. அது என்ன மாற்றம் என்று புரியவே மரகதத்துக்கு இரண்டு நாட்கள் ஆயின.
"என்னடா, இப்பல்லாம் நீ குடிக்கறது இல்ல போலருக்கே!" என்றாள் மரகதம், வியப்புடன்.
"ஆமாம்மா. குடியை விட்டுட்டேன்."
"எப்படிடா?" என்றாள் மரகதம், நம்ப முடியாமல்.
"நீ ரொம்ப நாளா சொல்லிக்கிட்டிருக்க இல்ல? அதனாலதான்!"
"அப்படியெல்லாம் குடியை சட்டுனு விட முடியாதே!"
"இல்லம்மா. குடியைப் பத்திப் புரிஞ்சுக்கிட்டா, விட்டுட லாம்."
"என்ன புரிஞ்சுக்கிட்ட? எப்படி விட்ட? என்னவோ எனக்குப் புரியல. நீ நிரந்தரமாக் குடியை விட்டுட்டா, எனக்கு சந்தோஷம்தான்!"
"நிரந்தரமாத்தான், அம்மா" என்றான் மனோகரன்.
"ஏண்டா, உங்கம்மா எவ்வளவோ சொல்லியும் குடியை விடாதவன், காதலிக்க ஆரம்பிச்சவுடனே விட்டுட்டியா? அம்மா சொன்னா கேக்காதவன், காதலி சொன்னதும், உடனே விட்டுட்டியே!" என்றான் மனோகரனின் நண்பன் பிரகாஷ்.
"என் காதலி எதுவும் சொல்லல. நானாத்தான் விட்டேன்!" என்றான் மனோகரன்.
"அது எப்படி நீயா விடுவ?"
"டேய்! என் காதலியைப் பாத்தாலே எனக்கு சந்தோஷம் கிடைக்குது. ஏன், அவளை நினைச்சாலே சந்தோஷம் கிடைக்குது. ஆனா, மதுவுக்கு இந்த குணம் இல்லையே! மதுவைக் குடிச்சாத்தானே போதை கிடைக்குது. அப்ப எதுக்கு மது குடிக்கணும்னு நினைச்சேன், விட்டுட்டேன்!" என்றான் மனோகரன்.
"உங்கம்மா பாவம், இது தெரியாம, தன்னோட பேச்சைக் கேட்டுத்தான் நீ குடிக்கறதை விட்டுட்டதா நினைச்சு, அதை எல்லார்கிட்டேயும் சொல்லி சந்தோஷப்பட்டுக்கறாங்க!" என்றான் பிரகாஷ்.
"நல்லாக் கேட்டுடுடி. தட்டிக் கேக்கலைன்னா, ஆம்பளைங்க இப்படித்தான் நம்மை அலைக்கழிப்பாங்க!" என்றாள் கல்பனா.
"நீ சொல்றதைப் பார்த்தா, உனக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும் போலருக்கே!"
"சேச்சே! உன்னை மாதிரி தோழிகள் சொல்றதை வச்சு சொல்றேன். எனக்குத்தான் காதலனே கிடையாதே! நான் இந்தக் காதல்ல எல்லாம் மாட்டிக்க மாட்டேன்."
"என்னடி, உன் காதலர்கிட்ட கேக்கப் போறேன்னியே, கேட்டியா?" என்றாள் கல்பனா.
"இல்லைடி. கேக்கணும்னு நினைச்சுத்தான் போனேன். ஆனா முடியல" என்றாள் ஸ்வப்னா.
"ஏன்?"
"ஏன்னா, எனக்கு அவர் மேல அவ்வளவு காதல் இருக்கு!"
"அதுக்காக? தட்டிக் கேக்கக் கூடாதா என்ன?"
"கேக்கலாம். ஆனா, இதனால எங்களுக்குள்ள சண்டை வந்துட்டா?"
"என்ன சண்டை வரப் போகுது? வந்தாலும், சின்னச் சண்டையாதானே இருக்கும்!"
"அதேதான்! எனக்கு அவர் மேல இவ்வளவு காதல் இருக்கறப்ப, அது ஒரு சின்னச் சண்டையால பாதிக்கப்படக் கூடாது இல்ல, நிறைய காத்து உள்ள பலூன் ஒரு சின்னக் குண்டூசி முனை பட்டு வெடிச்சுப் போற மாதிரி? அதனாலதான், கேக்க வேண்டாம்னு விட்டுட்டேன்."
கல்பனா தோழியை வியப்புடன் பார்க்க, "இதெல்லாம் உனக்குப் புரியாது. உனக்குத்தான் காதலன் இல்லையே!" என்றாள் ஸ்வப்னா, சிரித்தபடி.
முன்பெல்லாம், அலுவலகத்திலிருந்து வந்தவுடனேயே, ஓடி வந்து சுகுணாவை அணைத்துக் கொள்வான். அதன் பிறகு, தூங்கப் போகும் வரை அவளுடன் பேசிக் கொண்டிருப்பான். அவள் சமையல் செய்து கொண்டிருக்கும்போது கூட, அங்கே போய் அவளுடன் பேசிக் கொண்டிருப்பான்.
ஒருமுறை, அவர்கள் வீட்டுக்கு வந்திருந்த சுகுணாவின் தாய் பார்வதி, "என்னடி, பூனைக்குட்டி காலைச் சுத்திச் சுத்தி வர மாதிரி, உன் புருஷன் உன்னையே சுத்திக்கிட்டிருக்காரு!" என்று கேலி செய்தாள், தன் மகளிடம் அவள் கணவன் இவ்வளவு அன்பாக இருக்கிறானே என்று மனதுக்குள் பெருமிதம் அடைந்தபடி.
ஆனால், அவையெல்லாம் இப்போது மாறி விட்டன.
இப்போதெல்லாம், அரவிந்தன் அலுவலகத்திலிருந்து வந்ததும், அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொள்கிறான். சுகுணா காப்பி எடுத்துக் கொண்டு வந்தால், "வச்சுட்டுப் போ!" என்கிறான். சில சமயம், "வேண்டாம். நான் வரும்போதே ஹோட்டல்ல குடிச்சுட்டேன்" என்கிறான்.
"முன்னாடியே சொல்லி இருந்தா, நான் காப்பி கலந்திருக்க மாட்டேன் இல்ல?" என்று அவள் ஒருமுறை கேட்டபோது, "அப்படியெல்லாம் செய்ய முடியாது" என்று எரிந்து விழுந்தான், ஏதோ இயலாத ஒன்றைச் செய்யும்படி அவள் சொல்லி விட்டது போல்.
முன்பெல்லாம், விடுமுறை நாட்களில் சுகுணாவை வெளியே எங்காவது அழைத்துச் சென்றது போல், இப்போது அழைத்துச் செல்வதில்லை. அவளே, "வெளியில எங்கேயாவது போகலாமா?" என்று கேட்டால் கூட, "எனக்கு வேற வேலை இருக்கு" என்று தட்டிக் கழித்து விடுகிறான்.
அவன் மட்டும் தனியே எங்காவது போய்விட்டு வருகிறான். எங்கே போகிறான், எப்போது வருவான் என்றெல்லாம் சொல்வதில்லை.
"எங்கே போறீங்கன்னு எங்கிட்ட சொல்லிட்டுப் போகக் கூடாதா?" என்று சுகுணா ஒருமுறை கேட்டபோது, "எல்லாத்தையும் உங்கிட்ட சொல்லிக்கிட்டிருக்க முடியாது" என்றான்.
"ஆஃபீஸ் வேலையா வெளியூர் போறேன். வரதுக்கு ரெண்டு நாள் ஆகும்" என்றான் அரவிந்தன்.
அரவிந்தன் இல்லாத இரண்டு நாட்களில், சுகுணாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. எதையோ இழந்து விட்டது போல் உணர்ந்தாள். கணவன் எப்போது திரும்பி வருவான், எப்போது அவன் முகத்தை மீண்டும் பார்ப்போம் என்ற ஏக்கம் மனதில் இருந்து கொண்டே இருந்தது.
மூன்றாம் நாள் காலையிலிருந்தே, வாசற்படியில் அமர்ந்து கொண்டு, அரவிந்தன் வருகிறானா என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.
'எனக்கு என்ன ஆச்சு? ரெண்டு நாள் கூட என்னால அவரைப் பிரிஞ்சு இருக்க முடியலியே! அவர் என்னைக் கண்டுக்கறதில்ல. எங்கிட்ட பேசறது கூட இல்ல. அவர் இஷ்டத்துக்கு எங்கேயாவது போறாரு, வராரு. வீட்டில இருக்கறப்பவும், என்னை ஒரு பொருட்டா மதிக்கறதில்ல. அவருக்கு வேற ஒரு பொண்ணோட தொடர்பு ஏற்பட்டிருக்குமோ, அதனாலதான் இப்படி நடந்துக்கறாரோங்கற சந்தேகம் கூட எனக்கு வருது. ஆனா, அவரைப் பாக்காம இருக்கறது எனக்கு ஏன் இவ்வளவு கஷ்டமா இருக்கு?'
சுகுணாவுக்குப் புரியவில்லை.
"நான் என்ன ராஜாவா, நீ நல்ல செய்தி சொன்னா, உனக்குப் பரிசு கொடுக்க? அதோட, இப்ப எனக்கு எந்தச் செய்தியும் நல்ல செய்தியா இருக்காதுடி!" என்றாள் கமலி.
"உன் காதலர் திரும்பி வந்துட்டார்னு சொன்னா, அது கூட நல்ல செய்தி இல்லையா?"
"என்னடி சொல்ற?" என்றாள் கமலி, வியப்புடனும், மகிழ்ச்சியுடனும்.
"ஆமாண்டி. பிரகாஷ் வந்துட்டாரு. இன்னிக்குக் காலையிலதான் வந்தாராம். நான் தற்செயலா அவர் வீட்டுப் பக்கமாப் போய்க்கிட்டிருந்தப்ப, என்னைப் பார்த்துட்டு, உங்கிட்ட இதைச் சொல்லச் சொன்னாரு. இன்னிக்கு சாயந்திரம் ஆறு மணிக்கு, நீங்க வழக்கமா சந்திக்கிற இடத்துக்கு உன்னை வரச் சொன்னாரு. அது என்னடி வழக்கமாச் சந்திக்கிற இடம்?" என்றாள் ராதிகா, கேலியுடன்.
கமலி அவளுக்கு பதில் சொல்லாமல், மனதுக்குள் கொதித்துக் கொண்டிருந்தாள்.
"என்னடி பதில் சொல்ல மாட்டேங்கற?"
"ஆஃபீஸ் வேலையா கல்கத்தாவுக்குப் போறேன்னு சொல்லிட்டுப் போய் ரெண்டு மாசம் ஆச்சு. அதுக்கப்புறம், எனக்கு ஒரு தகவலும் இல்லை. இப்ப அவரைச் சந்திக்கச் சொல்லி, உங்கிட்ட தகவல் சொல்லி அனுப்பறாரு. என்னை என்ன கிள்ளுக் கீரைன்னு நினைச்சுக்கிட்டிருக்காரா?"
"ஏண்டி, உன் வீட்டில என்ன ஃபோனா இருக்கு, தினம் உங்கிட்ட ஃபோன் பண்ணிப் பேசறதுக்கு? இன்னிக்குக் காலையிலதான் ஊர்லேந்து வந்திருக்காரு. என்னைப் பார்த்ததால, எங்கிட்ட தவல் சொல்லி அனுப்பினாரு. இதில என்ன தப்பு?"
"ஃபோன் இல்லாட்டா என்ன? கல்கத்தாவில போஸ்ட் ஆஃபீஸ் இல்லையா என்ன? எனக்கு ஒரு கார்டு கூட எழுதலையே அவரு! சரி, ஊருக்கு வந்தவர் நேரா என்னைப் பாக்க வந்திருக்க வேண்டாம்? அது என்ன, உங்கிட்ட தகவல் சொல்லி அனுப்பறது?" என்று குமுறினாள் கமலி.
"அப்ப, சாயந்திரம் அவரைப் பாக்கப் போகப் போறதில்லையா நீ?"
"போவேன். கண்டிப்பாப் போவேன். போய், நல்லா சண்டை போட்டுட்டு வரப் போறேன்!"
வழக்கமாக பிரகாஷைச் சந்தித்துப் பேசும் பூங்காவுக்குச் சென்றாள் கமலி. அவர்கள் எப்போதும் அமரும் பெஞ்ச்சில் பிரகாஷ் அமர்ந்திருந்தான். அவன் அருகில் சென்று அமர்ந்தாள் கமலி.
பிரகாஷ் அவள் தோள்களை அணைத்துக் கொள்ள, கமலி அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
"இது மாதிரி உங்க தோள்ள சாஞ்சு எவ்வளவு நாளாச்சு!"
இது போல் அவன் தோளில் சாய்ந்து கொண்டே, விடிய விடிய அங்கேயே அமர்ந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியபோது, 'சண்டை போட்டாயா?' என்று நாளை தோழி கேட்டால், அவளிடம் என்ன சொல்வது என்று சங்கடத்துடன் நினைத்துப் பார்த்தாள் கமலி.
தோழி! யான் அவரோடு ஊடுவதற்காகச் சென்றேன்; ஆனால், என்னுடைய நெஞ்சம் அந்த நோக்கத்தை மறந்து அவரோடு கூடுவதற்காகச் சென்றது.
பின்னால் நின்று கொண்டிருந்த அவள் தோழி கனகா, "நீ எழுதிக்கிட்டிருந்த காதல் கடிதத்தைப் பார்த்துட்டேன்" என்றாள் சிரித்துக் கொண்டே.
"இது காதல் கடிதம் இல்லை. அதனால, நீ பார்த்ததா சொன்னது பொய்! எங்கே பாத்திருப்பியோன்னு நினைச்சேன். நல்லவேளை, நீ பாக்கல!"
"சரிடி. நான் பொய்தான் சொன்னேன். நீதான் நான் பாக்கறதுக்குள்ள மூடிட்டியே! சரி, சொல்லு. என்ன அது?"
"அது ஒரு லிஸ்ட்!" என்றாள் கிருத்திகா.
"லிஸ்டா? என்ன லிஸ்ட்? மளிகை சாமான் லிஸ்டா? அப்படி இருந்தா, அதை மறைச்சிருக்க மாட்டியே!"
"சுதாகர்கிட்ட எனக்கு நிறையக் குற்றம் குறைகள் இருக்கு. இன்னிக்கு சாயந்திரம் அவரைச் சந்திக்கறப்ப, அதையெல்லாம் அவர்கிட்ட சொல்லப் போறேன். ஞாபகமா எல்லாத்தையும் சொல்லணுங்கறதுக்காகத்தான், எல்லாத்தையும் எழுதி வைக்கறேன்."
"ஓ, குற்றப் பத்திரிகையா? என்னென்ன குற்றம்? ஒண்ணு ரெண்டு சொல்லேன்!"
"அதெல்லாம் நான் அவர்கிட்ட எதிர்பார்த்து, அவர் செய்யாத விஷயங்கள். அதையெல்லாம் உங்கிட்ட சொல்ல முடியாது" என்றாள் கிருத்திகா.
மாலையில், சுதாகரைச் சந்தித்து, இரண்டு மணி நேரம் பேசி விட்டு, வீட்டுக்குத் திரும்பும்போதுதான், காலையில் தான் எழுதி வைத்திருந்த பட்டியலிலிருந்து ஒரு குறையைக் கூட அவனிடம் சொல்லவில்லை என்பது கிருத்திகாவுக்கு நினைவு வந்தது.
"உங்கிட்ட எனக்கு எல்லாமே பிடிக்கும். எதைன்னு சொல்றது?" என்றாள் சுகன்யா.
"பொதுவாச் சொன்னா எப்படி? குறிப்பா சிலதையாவது சொல்லு."
"நீ நல்லா டிரஸ் பண்ணிக்கிற. இனிமையாப் பேசற. கோபப்படறதே இல்லை. சிகரெட், மது மாதிரி கெட்ட பழக்கங்கள் இல்லை. உன் அம்மா மேல ரொம்ப அன்பு வச்சிருக்க."
"அடேயப்பா! எங்கிட்ட இவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கறது எனக்கே தெரியாதே!" என்றான் கோவிந்த், சிரித்தபடி.
"தினம் உன் காதலனைச் சந்திச்சுட்டு வந்தப்புறம் ஏதாவது புலம்பிக்கிட்டே இருக்கியே, ஏன்?" என்றாள் நளினி.
"அவன்கிட்ட இருக்கற குறைகளை யார்கிட்டயாவது சொல்லணும் போல இருக்கு. என்னோட நெருங்கிய தோழியான உங்கிட்ட சொல்லாம, வேற யார்கிட்ட சொல்லுவேன்?"
"எல்லார்கிட்டேயும் ஏதாவது குறைகள் இருக்கத்தான் செய்யும்."
"ஆனா, அவன்கிட்ட நிறையக் குறைகள் இருக்கு."
"அப்படி என்ன குறைகள்?"
"சில சமயம், என்னைப் பாக்க வரேன்னு சொல்லிட்டு, வரதில்ல. கேட்டா, ஏதாவது பொய்யான காரணம் சொல்றான். அவன் படிச்ச படிப்புக்கு இன்னும் நல்ல வேலை கிடைக்கும். ஆனா, இப்ப இருக்கற வேலையே திருப்தியா இருக்குன்னு சொல்றான். முன்னேறணுங்கற ஆசை வேண்டாம்? அப்புறம், எப்பவும் தன்னோட அம்மாவைப் பத்தியே பேசிக்கிட்டிருக்கான். என் மேல அக்கறை காட்டறதில்ல. நான் புதுசா ஒரு டிரஸ் போட்டுக்கிட்டு வந்தா, அதைக் கூட கவனிக்கிறதில்ல. அப்புறம்..."
"சரி. இதையெல்லாம் அவன்கிட்டயே கேட்டுட வேண்டியதுதானே?"
"என்னவோ தெரியலடி. அவனோட இருக்கறப்ப, இதெல்லாம் எதுவுமே என் ஞாபகத்துக்கு வரதில்ல" என்றாள் சுகன்யா, சற்றே சங்கடத்துடன்.
"எது எத்தனை நாள் ஆச்சு?" என்றாள் மாலினி.
"நான் அவர்கிட்ட கோவிச்சுக்கிட்டு வந்து?"
"ஏண்டி, இதையெல்லாம் நான் கணக்கு வச்சுக்கணுமா? சண்டை போட்டுக்கிட்டு வந்த உனக்குத் தெரியாது?"
"அதுக்குப் பேர் சண்டை இல்ல. ஒரு பிணக்கு. அவ்வளவுதான்."
"அன்னிக்கு நீதான் சொன்னே, சண்டை போட்டுக்கிட்டு வந்துட்டேன்னு!"
"சரி. கோவத்தில சொல்லி இருப்பேன். என்னிக்கு அது?"
"முந்தா நாள்."
"முந்தா நாளா? அஞ்சாறு நாள் ஆயிருக்கும்னு நெனச்சேன்!"
"நெனப்ப! அது சரி. எதுக்கு இந்த நாள் கணக்கு இப்ப?"
"இன்னிக்கு சனிக்கிழமை. அவர் ஆஞ்சநேயர் கோவிலுக்குப் போவாரு. அங்க போய் அவரைப் பாத்துப் பேசலாம்னு பாக்கறேன்!"
"ஏண்டி, அன்னிக்கு என்னமோ, அவரா வந்து உங்கிட்ட பேசினாதான் அவரோட பேசுவேன்னு வீராப்பா சொன்ன. இப்ப, நீயே வலுவில போய்ப் பேசறேன்னு சொல்ற!"
"காதல்ல கௌரவம் பாக்கக் கூடாது!"
"இந்தத் தத்துவம் எல்லாம் வேண்டாம். சண்டை போட்டுட்ட. ஆனா, அவரைப் பிரிஞ்சு ரெண்டு நாள் கூட இருக்க முடியல. உன்னால அவரைப் பாக்காம ஒரு நாள் கூட இருக்க முடியாதுன்னு தெரிஞ்சும், ஏன் அவரோட சண்டை போட்ட?" என்றாள் மாலினி.
தோழியின் கேள்விக்கு லதாவிடம் பதில் இல்லை.
அஸ்வினும் அனுபமாவும் காதலர்கள் என்பது அனுபமாவின் தோழிகளுக்குத் தெரியும்.
அப்படி இருக்கும்போது, அனுபமாவை அவள் தோழிகள் முன்னிலையில் அஸ்வின் கேலி செய்தது அனுபமாவை அதிர்ச்சி அடையச் செய்தது.
அனுபமா கிராமத்துப் பெண்ணாம். அவளுக்கு நாகரீகமான பழக்கங்கள் கிடையாதாம். ஓட்டலில் ஸ்பூனால் சாப்பிடும்போது தன் உடைகளில் சிந்திக் கொள்வாளாம். ஸ்பூனால் சாப்பிடத் தெரியாதவள், கையால் சாப்பிட வேண்டியதுதானே, ஏன் ஸ்பூனால் சாப்பிட முயற்சி செய்து தன் உடைகளைப் பாழாக்கிக் கொள்ள வேண்டும்? கல்யாணத்துக்குப் பிறகு, துணிகளின் கறைகளைப் போக்கும் சோப்புத் தூள் வாங்கவே அவன் சம்பளத்தில் பாதி போய் விடுமாம்.
அஸ்வின் பேசியதைக் கேட்கக் கேட்க, அனுபமாவின் மனதில் அவமான உணர்வு பீறிட்டு எழுந்தது. அஸ்வின் பேச்சைக் கேட்டு அவள் தோழிகள் சிரித்தது அவள் அவமான உணர்வை இன்னும் அதிகமாக்கியது.
விருட்டென்று அங்கிருந்து வெளியேறி விட்டாள் அனுபமா. தான் அதிகமாகப் பேசி விட்டோமோ என்று நினைத்து, அஸ்வின், "சாரி! சும்மா விளையாட்டுக்காகத்தான் சொன்னேன்" என்று கூறியதைக் கூட அனுபமா காதில் போட்டுக் கொள்ளவில்லை.
பத்து நாட்களுக்குப் பிறகு, தனிமையில் அஸ்வினின் மார்பில் தன் தலையைச் சாய்த்தபடி நின்றிருந்தாள் அனுபமா.
"நல்லவேளை! அன்னிக்கு நீ கோவிச்சுக்கிட்டுப் போனதைப் பாத்தப்புறம், நீ எங்கிட்ட திரும்பி வர மாட்டியோன்னு பயந்துட்டேன்!" என்றான் அஸ்வின், அவள் தலைமுடியைக் கோதியபடி.
'நீ அப்படிப் பேசினதை என்னால மன்னிக்கவே முடியாது. ஆனாலும், என்ன செய்யறது? உன் மார்பில என் தலையை சாய்ச்சுக்கிட்டு இருக்கறப்ப கிடைக்கிற சுகத்தை என்னால மறக்க முடியலியே!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் அனுபமா.
"ஒண்ணுமில்லையே!" என்றாள் மலர். அப்படிச் சொல்லும்போதே, அவளிடம் ஒரு பதட்டம் தெரிந்தது.
"எனக்குத் தெரியும்!" என்ற கார்த்திக், அவள் காதருகில் குனிந்து, "முதலிரவு தள்ளிப் போய்க்கிட்டே இருக்கேன்னுதானே?" என்றான், சிரித்துக் கொண்டே.
"சீச்சீ!" என்றாள் மலர், இன்னும் அதிகப் பதட்டத்துடன்.
"இந்தப் பெரியவங்க இப்படித்தான்! நாள் நட்சத்திரம்னு பார்த்து, நாம ஒண்ணு சேரறதைத் தள்ளிப் போட்டுக்கிட்டே இருப்பாங்க. அதான் இப்ப தேதி குறிச்சுட்டாங்களே! இன்னும் ரெண்டு நாள்தானே இருக்கு!" என்றான் கார்த்திக்.
"போன வாரம் முழுக்க டல்லா இருந்த. இப்ப முதலிரவு முடிஞ்சப்புறம், நாலு நாளா எவ்வளவு உற்சாகமா இருக்க! நான் சொன்னபடி, முதலிரவு தள்ளிப் போகுதேங்கற கவலையினாலதானே முதல்ல டல்லா இருந்தே?" என்றான் கார்த்திக்.
மலர் பதில் சொல்லவில்லை.
சமீபத்தில்தான் திருமணமாகி இருந்த அவள் தோழி வாணி, முதலிரவின்போது அவள் கணவன் அவளிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதையும், அதற்குப் பிறகும், அவளுடைய உணர்வுகளை மதிக்காமல், தொடர்ந்து அவ்வாறே நடந்து கொள்வதாகவும், ஏன் திருமணம் செய்து கொண்டோம் என்று தான் வருந்துவதாகவும் மலரிடம் சொல்லி இருந்தாள்.
அத்துடன், "என்னோட தோழிகள் சில பேருக்கும் இதே அனுபவம்தான். எல்லா ஆம்பளைங்களும் இப்படித்தான் இருப்பாங்க போலருக்கு!" என்று வாணி கூறியதால், தன் கணவனும் அப்படி இருப்பானோ என்ற பதட்டத்தில் தான் இருந்ததையும், கார்த்திக்கின் மென்மையான அணுகுமுறையால், அந்தப் பதட்டம் நீங்கி உற்சாகமாக இருப்பதையும் மலர் கார்த்திக்கிடம் கூறவில்லை.
"நான் சொல்றதைக் கேளு!" என்று மன்றாடினான் வைபவ்.
"நீ சொன்னதைக் கேட்டு நான் ஏமாந்ததெல்லாம் போதும்!"
கோபமாக வெளியேறினாள் விசித்ரா. காதலியை எப்படிச் சமாதானப்படுத்துவது என்று தெரியாமல், கையைப் பிசைந்து கொண்டு நின்றான் வைபவ்.
இது நடந்து நான்கைந்து நாட்கள் கடந்து விட்டன. அவளைத் தொடர்பு கொள்ள வைபவ் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஃபோன் செய்தால், உடனே துண்டித்தாள்.
மன்னிப்புக் கேட்டும், வருத்தம் தெரிவித்தும், தன் காதலைத் தெரிவித்தும் அவன் அனுப்பிய குறுஞ்செய்திகளும் பலனளிக்கவில்லை.
'ஜனனி' திரைப்படத்தில் வரும் 'மன்னிக்க மாட்டாயா மனமிரங்கி' என்ற பாடலின் யூடியூப் வீடியோவை அனுப்பினான். அதற்கும் பலன் இல்லை.
மாலை நேரத்தில், விசித்ராவின் அப்பாவும் அம்மாவும் நடைப் பயிற்சி செய்யப் போய் விடுவார்கள் என்பதால், அப்போது விசித்ரா வீட்டில் தனியாகத்தான் இருப்பாள் என்று அவள் ஒருமுறை கூறியது அவன் நினைவுக்கு வந்தது. அதனால், மாலை 6 மணிக்கு, அவள் வீட்டுக்குச் சென்றான் வைபவ்.
அழைப்பு மணியை அடித்ததும் கதவைத் திறந்த விசித்ரா, அவனைப் பார்த்தும், திரும்பி உள்ளே போய் விட்டாள். நல்லவேளை, அவனை வெளியே நிற்க வைத்துக் கதவைச் சாத்தவில்லை!
வைபவ் முன்னறையில் போய் சோஃபாவில் அமர்ந்தான். சற்று நேரத்தில், விசித்ரா உள்ளிருந்து வந்து அவன் எதிரே உட்கார்ந்து, 'எங்கே வந்தாய்?' என்பது போல் அவனைப் பார்த்தாள்.
"எங்கே?" என்றான் வைபவ்.
"என்ன எங்கே?"
"இல்லை. உள்ளே போனியே, எனக்கு காப்பி போட்டு எடுத்துக்கிட்டு வரத்தானே? அதுதான் எங்கேன்னு கேட்டேன்!"
விசித்ரா சிரிக்கவில்லை. "உன் மூஞ்சில ஊத்தறதுக்காக, வெந்நீர் போடத்தான் போனேன். இன்னும் கொதிக்கல. கொதிச்சதும் எடுத்துக்கிட்டு வரேன்!" என்றாள், சூடாக.
சற்று நேரம் மௌனமாக இருந்த பிறகு, "நீ இங்கே வரியா?" என்று சோஃபாவில் தன் பக்கத்தில் இருந்த இடத்தைக் காட்டினான் வைபவ்.
"வரேன். ஆனா நீ இங்கே வந்து உக்காரணும்!" என்று தான் அமர்ந்திருந்த நாற்காலியைக் காட்டினாள் அவள்.
இருவரும் இடம் மாற்றிக் கொண்டனர்.
சில விநாடிகள் கழித்து, வைபவ் மெல்ல எழுந்து போய், சோஃபாவில், விசித்ராவின் அருகே அமர்ந்தான். அவள் எதுவும் சொல்லவில்லை.
சிறிது நேரம் கழித்துச் சற்று நெருக்கமாக, அவள் மேல் இடிப்பது போல் உட்கார்ந்தான். அவள் அவனைத் தள்ளவோ, தான் தள்ளி உட்காரவோ முயற்சி செய்யவில்லை.
தன் கையை சோஃபாவின் பின்புறமாக மெதுவாக எடுத்துச் சென்று, விசித்ராவின் தோளின் மீது வைத்தான் வைபவ். அவள் அவன் கையை உதறித் தள்ளவில்லை.
ஆனால், அவள் முகத்தில் மட்டும் கோபம் இன்னும் குறையவில்லை என்பதை கவனித்தான் வைபவ்.
No comments:
Post a Comment