அதிகாரம் 125 - நெஞ்சோடு கிளத்தல்

திருக்குறள்
காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 125
நெஞ்சோடு கிளத்தல்

1241. நோய்க்கு மருந்து!

அம்மாவைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. கடந்த சில மாதங்களாக, என்னை மூன்று மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று விட்டார்.

"சரியா சாப்பிட மாட்டேங்கறா ஐயா. சரியா தூங்கறதும் இல்லை. உடம்பு இளைச்சுக்கிட்டே வருது. எலும்பெல்லாம் தெரியுது. உடம்பெல்லாம் வெளிறிப் போய், சோகை புடிச்சவ மாதிரி இருக்கா!" என்பார் அம்மா.

மருத்துவர் என் நாடியைப் பிடித்துப் பார்ப்பார். பிறகு ஏதோ ஒரு சூரணத்தைக் கொடுத்து, அதைத் தேனில் குழைத்து, தினமும் மூன்று வேளை அருந்தச் சொல்வார்.

அம்மா மூன்று வேளையும் தவறாமல், ஒரு சிட்டிகை சூரணத்தை எடுத்து, ஒரு வெற்றிலையில் வைத்து, அதில் தேனை விட்டுக் குழைத்து, என்னிடம் கொடுப்பார். "அப்படியே வெற்றிலையோடு மென்று விழுங்கு!" என்பார்.

ஒரு மாதம் பார்த்து விட்டு, முன்னேற்றம் ஏதும் இல்லாததால், இன்னொரு மருத்துவரிடம் அழைத்துச் செல்வார். அவரும் ஒரு சூரணம் கொடுப்பார்.

இது போல், மூன்று மருத்துவர்களிடம் போய் வந்தாகி விட்டது.

அம்மாவை நான்காவதாக இன்னொரு மருத்துவரிடம் செல்ல வைத்து, அலைக்கழிக்க நான் விரும்பவில்லை.

எனக்கு வந்திருப்பது என்ன நோய் என்பதை மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கலாம்.

ஆனால், அதை அறிந்த ஒரு நபர் இருக்கிறார். அதுவும் என்னுள்ளேயே இருக்கிறார்!

அது யார் தெரிகிறதா?

ஏ நெஞ்சே! உன்னிடம்தானே பேசிக் கொண்டிருக்கிறேன்? அது நீயேதான்!

எனக்கு வந்திருப்பது காதல் நோய் என்பதை நீ அறிவாய். நோய் என்னவென்று தெரிந்த உனக்கு, நோய்க்கான மருந்து என்ன என்பதும் தெரிந்திருக்க வேண்டுமே! அது என்னவென்று என்னிடம் சொல்.

மருந்து என்ன என்பதை நீ சொன்னால், அதை உட்கொண்டு என்னை வாட்டும் இந்தக் காதல் நோயிலிருந்து குணமடைவேன். அம்மாவின் கவலை தீர்ந்து அவரும் மகிழ்ச்சியாக இருப்பார். 

குறள் 1241
நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து.

பொருள்:
நெஞ்சே! எந்த மருந்தினாலும் தீராத என் காதல் நோய் தீர்ந்திட, ஏதாவது ஒரு மருந்தை நினைத்துப் பார்த்து, உன்னால் சொல்ல முடியுமா?

 1242. அடி ஏண்டி, அசட்டுப் பெண்ணே!

"ஏண்டி, அசட்டுப் பெண்ணே! பரிதியிடம் நீ ஆழமான காதல் கொண்டிருப்பது அவருக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அவர் உன்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

"நினைத்துப்பார்! எத்தனை சம்பவங்கள்!

"அன்று, நீயும் உன் மூன்று தோழிகளும் ஆற்றிலிருந்து நீர் எடுத்துக் கொண்டு வந்தபோது, பரிதி எதிரில் வந்தார். உன் தோழிகள் உன்னையும் அவரையும் இணைத்துப் பேசி, அவரைக் கேலி செய்தனர். ஆனல் அவர் அப்படி எதுவும் இல்லை என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். உன் முகத்தைப் பார்த்துப் பேசக் கூட இல்லை.

"இன்னொரு முறை, நீ அவரைத் தனியே சந்தித்தபோது, வெட்கத்தை விட்டு உன் காதலைத் தெரிவித்தாய். அவர் பதில் சொல்லாமல், சிரித்து விட்டுப் போய் விட்டார்.

"இவ்வளவு ஏன்? பரிதியின் மீது உனக்கிருக்கும் ஆழ்ந்த காதலைச் சொற்களில் வடித்து, உன் உணர்ச்சிகளைக் கொட்டி, ஒரு மடல் எழுதி, அவருக்கு அனுப்பி வைத்தாய். அதற்கும் அவரிடமிருந்து பதில் இல்லை.

"அவருக்கு உன் மேல் அன்பு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

"ஆனால் நீஎன்ன செய்கிறாய்? காலை முதல் இரவு வரை, அவரையே நினைத்து வருந்திக் கொண்டிருக்கிறாய். இரவிலும் அவரையே நினைத்தபடி, தூங்காமல் விழித்திருந்து, உன் உடலை வருத்திக் கொள்கிறாய்.

"ஏ, நெஞ்சே! உன்னிடம்தான் பேசிக் கொண்டிருக்கிறேன். நீ முட்டாளா? எதையுமே அறியாமல், செய்வதையே செய்து கொண்டிருக்கிறாயே! உன்னை என்னால் திட்டக் கூட முடியவில்லை. அதனால் நீ வாழ்க என்று வாழ்த்துகிறேன்!"

"என்னடி, கண்ணாடி முன்னால நின்னு பேசிக்கிட்டிருக்கே?" என்றபடியே, உள்ளிருந்து வெளியே வந்தாள் மாலினியின் தாய்.

"ஒண்ணுமில்லையே!" என்று கூறி விட்டு, மாலினி அங்கிருந்து அகன்று சென்றாள்.

குறள் 1242
காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு.

பொருள்:
என் நெஞ்சே! நீ வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவது உன் அறியாமையே!

1243. நெஞ்சமே, நினைப்பதைக்
கொஞ்சம் நிறுத்தி விடு!

வைரவனுடன் வியாபாரத்துக்காகக் கடல் கடந்து சென்ற செந்திலேவேலர் வந்து விட்டாராம். அவரிடம் தன் கணவன் வைரவன் ஏதாவது செய்தி சொல்லி இருப்பான் என்ற நம்பிக்கையில், ஆவலுடன் அவரைப் பார்க்க விரைந்தாள் வானதி. அவள் தாயும் உடன் வந்தாள்.

ஆனால், செந்தில்வேலரிடம் வைரவன் எந்தச் சேதியும் சொல்லி அனுப்பவில்லை.

'நான் ஊருக்குப் போறேன்? நீ எப்ப வருவேன்னு உன் வீட்டில சொல்லட்டும்?' என்று செந்தில்வேலர் கேட்டதற்கு, 'அதை இப்ப எப்படி சொல்ல முடியும்? நான் வியாபார விஷயமா இங்கே இன்னும் நிறையப் பேரைப் பார்க்க வேண்டி இருக்கே!' என்று வைரவன் பதில் சொல்லி விட்டானாம்.

"கவலைப்படாதேம்மா! சீக்கிரம் வந்துடுவான்" என்று அவளுக்கு ஆறுதல் மொழி கூறினார் செந்தில்வேலர். 

'நான் சீக்கிரம் வந்துடுவேன். கவலைப்பட வேண்டாம்னு என் மனைவிகிட்ட சொல்லுங்க!' என்று வைரவன் அவரிடம் செய்தி சொல்லி அனுப்பி இருந்தால், எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!

'ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை! என்னிடம் அன்பு இருந்தால், அப்படிச் செய்திருப்பார். அவரிடம்தான் அது இல்லையே!' என்று நொந்து கொண்டே வீட்டுக்குத் திரும்பினாள் வானதி.

வீட்டுக்குச் சென்றதும், வெகுநேரம் இந்தச் சிந்தனையாகவே இருந்தது. வேறு சிந்தனையிலேயே மனம் செல்லவில்லை.

வானதிக்கு திடீரென்று ஒரு எண்ணம் தோன்றியது.

'பிரிவுத் துயரை எனக்குக் கொடுத்து விட்டு அவர் போய் விட்டார். அவருக்கு என் நினைவு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், நான் ஏன் இப்படி அவரை நினைத்து வருந்துகிறேன்? இதற்குக் காரணம் என் செஞ்சம்தானே?'

வானதி குனிந்து தன் நெஞ்சைப் பார்த்துப் பேசினாள்.

"ஏ நெஞ்சே! என்னை நினைக்காதவரை நீ ஏன் நினைத்து வருந்துகிறாய்? ஒன்று அவரை நினைத்து வருந்துவதை நிறுத்து. அல்லது அவர் இருக்கும் இடத்துக்கு நீயும் சென்று விடு. என்னுடன் இருந்து கொண்டு என்னை வருத்தாதே!"

குறள் 1243
இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்.

பொருள்:
நெஞ்சே! (என்னுடன்) இருந்து அவரை நினைந்து வருந்துவது ஏன்? இந்தத் துன்பநோயை உண்டாக்கியவரிடம், இவ்வாறு அன்பு கொண்டு நினைக்கும் தன்மை இல்லையே!

1244. நெஞ்சம் எங்கே, கண்களும் அங்கே!

நான் எவ்வளவோ சொல்லியும் கேளாமல், அவரைத் தேடி, அவர் இருக்கும் இடத்துக்குக் கிளம்பி விட்டாய்.

அவருக்கும் ஒரு நெஞ்சு இருக்கிறது. அந்த நெஞ்சில் என் நினைவு இருப்பதாகத் தெரியவில்லை. 

அப்படி இருந்திருந்தால், பல மாதங்களுக்குமுன் என்னைப் பிரிந்து எங்கோ தொலை தூரம் சென்றவர், என்னைக் காண வேண்டும் என்ற ஆவலில், இத்தனை நேரம் திரும்பி இருக்க மாட்டாரா? 

ஆனால், என் நெஞ்சான நீ, அவர் நினைவை எப்போதும் சுமந்து கொண்டு, என்னை வருத்தத்தில் ஆழ்த்தி வருவதுடன், அவரைக் காண, அவர் இருக்கும் இடத்துக்கே செல்வதென்று தீர்மானித்து விட்டாய்! 

உன்னை என்னால் தடுக்க முடியாது. நீ நினைத்த மாத்திரத்தில், எந்த இடத்துக்கும் செல்லும் வலிமை படைத்தவள். பயணம் செய்ய, உனக்குக் கட்டை வண்டியோ, கப்பலோ தேவையில்லை. காற்றை விட வேகமாக, நீ விரும்பும் இடத்துக்குச் சென்று விடுவாய்!

என்னால் உன்னுடன் வர முடியாது. நீ சென்றதும், அவரைப் பிரிந்த துயரத்துடன் உன்னைப் பிரிந்த துயரத்தையும் சேர்த்து நான் அனுபவிக்க வேண்டும்.

சென்று வா! ஆனால் விரைவில் திரும்பி விடு.

இரு, இரு. கிளம்பி விடாதே! இந்தக் கண்களுக்கும் அவரைக் காண வேண்டுமாம்! தங்களை அவரிடம் அழைத்துச் செல்லும்படி என்னைத் தொந்தரவு செய்து கொண்டே இருக்கின்றன. ஆனால், என்னால்தான் அவர் இருக்கும் இடத்துக்குச் செல்ல முடியாதே!

எனவே, நீ செல்லும்போது, இந்தக் கண்களையும் அழைத்துச் செல். உனக்கு அவை வழித்துணையாகவும் இருக்கும்!

குறள் 1244
கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று.

பொருள்:
நெஞ்சே! நீ அவரிடம் செல்லும்போது, என் கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக; அவரைக் காணவேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன.

1245. அது எப்படி இயலும்?

"உன் கணவர் உன்னை விட்டுப் பிரிந்து சென்று எத்தனை நாட்கள் ஆகி விட்டன?"

"ஆறு மாதங்கள்!"

"இந்த ஆறு மாதங்களில், அவர் உனக்கு ஏதாவது மடல் அனுப்பி இருக்கிறாரா?"

"இல்லை."

"நீ அவருக்கு மடல் அனுப்பினாய் அல்லவா?"

"ஆமாம். இங்கிருந்து அவர் இருக்கும் இடத்துக்குச் சென்றவர்கள் மூலம் இரண்டு மடல்கள் அனுப்பினேன்."

"உன்னிடம் மடல் பெற்றுச் சென்றவர்கள் திரும்பி வந்தபோது, அவர்கள் உன்னிடம் சொன்ன செய்தி என்ன?"

"என் மடலை அவர் படித்துப் பார்த்தாராம். ஆனால் எதுவும் சொல்லவில்லையாம். அவர்கள் ஊருக்குக் கிளம்பும்போது, உன் மனைவிக்கு ஏதேனும் மடல் உண்டா என்று அவரிடம் கேட்டதற்கு, அவர் எதுவும் இல்லை என்று சொல்லி விட்டாராம். சரி, ஏதாவது செய்தி சொல்ல வேண்டுமா என்று கேட்டதற்கும், அவர் வேண்டாம் என்பது போல் தலையாட்டினாராம்."

"இதிலிருந்து என்ன தெரிகிறது?"

"என்ன தெரிகிறது?"

"நீதான் அவர் மீது அளவு கடந்த விருப்பம் வைத்துப் பைத்தியம் போல் இருக்கிறாயே தவிர, அவருக்கு உன் மீது சிறிது கூட விருப்பம் இல்லை. அதனால்..."

"அதனால்...?"

"நீயும் உனக்கு அவர் மீது இருக்கும் விருப்பத்தைக் கைவிட்டு விடு!"

"என் கணவர் என் மீது விருப்பம் இல்லாமல் நடந்து கொள்கிறார் என்பதற்காக, நான் அவர் மீது கொண்டுள்ள காதலை விட்டு விட முடியுமா என்ன? நெஞ்சே! நீ  எனக்கு நன்மையை மட்டுமே நினைப்பாய் என்று நான் நம்பிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நீ சொல்லும் யோசனை எனக்கு நஞ்சாக அல்லவா இருக்கிறது! உன்னுடன் அளவளாவுவதே தவறு போலிருக்கிறது!"

குறள் 1245
செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்.

பொருள்:
நெஞ்சே! நாம் விரும்பினாலும் நம்மை விரும்பி வராத அவர், நம்மை வெறுத்து விட்டார் என நினைத்து, அவர் மீது கொண்ட காதலைக் கைவிட்டு விட முடியுமா?

1246. பொய்க் கோபம்!

"அவர் கிளம்பிச் சென்று ஆறு மாதங்கள் ஆகி விட்டன அல்லவா? அதனால், அவர் திரும்பி வரும் நேரம் நெருங்கி விட்டது என்று நினைக்கிறேன்."

"நீ நீனைத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்! அவர் வர மாட்டார்,"

"ஏன் இப்படி எதிர்மறையாகவே சிந்திக்கிறாய்? ஊருக்குச் சென்றவர், திரும்பி வந்துதானே ஆக வேண்டும்?"

"உன் மீது சிறிதேனும் அன்பு இருந்திருந்தால், அவர் முன்பே வந்திருக்க வேண்டும்."

"சென்ற வேலையை முடிக்காமல், எப்படித் திரும்பி வர முடியும்? அவர் என்ன பக்கத்து ஊருக்கா போயிருக்கிறார், இன்னொரு முறை போய் வேலையை முடித்து விட்டு வரலாம் என்பதற்கு? கடல் கடந்தல்லவா போயிருக்கிறார்!"

"எங்கே போயிருந்தால் என்ன? நம் மீது உயிரையே வைத்திருக்கும் ஒருத்தி நமக்காகக் காத்திருக்கிறாள் என்ற உணர்வு இருந்தால், வேலையை விரைவாக முடித்து விட்டுப் பறந்து வந்திருக்க வேண்டாமா?"

"பறந்து வருவதற்கு அவர் அனுமனா, இல்லை, அவரிடம் புஷ்பக விமானம் இருக்கிறதா?"

"பறப்பதற்குச் சிறகுகளோ, விமானமோ இல்லாத ராமர் கடல் கடந்து சென்று சீதையை மீட்டு வரவில்லையா? மனம் இருந்தால் வழி உண்டு!"

"நீ அவர் மீது மிகவும் கோபமாய் இருக்கிறாய் போலிருக்கிறதே!"

"பின்னே? மனைவி என்று ஒருத்தி இருக்கிறாள் என்ற நினைவே இல்லாத மனிதர் மீது கோபப்படாமல் பரிதாபமா பட முடியும்? ஒருவேளை, சகுந்தலையை துஷ்யந்தன் மறந்தது போல் அவர் உன்னை மறந்து விட்டாரோ என்னவோ!"

"நீ அவர் மீது கோபமாய் இருப்பதை என்னால் நம்ப முடியவில்லை!"

"ஏன் நம்ப முடியவில்லை?"

"எத்தனையோ முறை, எங்கள் இருவருக்கிடையே ஊடல் ஏற்பட்டிருக்கிறது. அப்போதெல்லாம், அவர் என்னிடம் நெருங்கி வந்து ஊடலைப் போக்கி இருக்கிறார். அவர் என் மீது ஊடல் கொண்டிருந்தபோதெல்லாம், ஒருமுறை கூட நீ அவர் மீது கோபம் கொண்டதில்லையே! அதனால்..."

"அதனால்?"

"அதனால், உனக்கு அவர் மீது இருக்கும் கோபம் பொய்யானது என்று நினைக்கிறேன்! என் அருமை நெஞ்சே! என்னையே ஏமாற்றப் பார்க்காதே!"

குறள் 1246
கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.

பொருள்:
நெஞ்சே! கூடிக் கலந்து ஊடலை நீக்கும் காதலரைக் கண்டால், ஒரு தடவை கூடப் பிணங்கியறியாத நீ இப்போது அவர் மீது கொள்கிற கோபம் பொய்யானதுதானே?

1247. இரண்டில் ஒன்று, நீ என்னிடம் சொல்லு!

"அதோ, அவர் இந்தப் பக்கமாக வந்து கொண்டிருக்கிறார். அவர் அருகில் வந்ததும், அவரிடம் போய், என் காதலைச் சொல்லி விடப் போகிறேன்!"

"முட்டாள் பெண்ணே! அப்படி எல்லாம் செய்து விடாதே! அப்படிச் செய்தால், நாணம் என்ற உன் இயல்பான பண்பை, நீ விட்டு விட்டதாக ஆகும்!"

"பிறகு, எப்படி என் காதலை அவரிடம் சொல்வது?"

"காத்திரு. அவரே வந்து உன்னிடம் தன் காதலைச் சொல்கிறாரா என்று பார்க்கலாம்!"

"காத்திருந்து பார்த்து விட்டேன். அவராக என்னிடம் வந்து காதலைச் சொல்வதாக இல்லை. ஒருவேளை, அவருக்கு என் மீது அத்தகைய எண்ணம் இல்லையோ என்னவோ! ஆனால், நான் போய் என் காதலைச் சொன்னால், அவர் அதை ஏற்றுக் கொள்ளலாம் அல்லவா?"

"ஏற்றுக் கொள்ளலாம்தான்! ஆனால் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு, நாணத்தை விட்டு விட்டு, அவரிடம் போய் உன் காதலை எப்படிச் சொல்ல முடியும்?"

"பிறகு வேறு என்ன செய்வது? அவரும் என்னிடம் காதலைச் சொல்ல மாட்டார். நானும் சொல்லக் கூடாது என்றால் இதற்கு ஒரு வழிதான் இருகிறது!"

"அது என்ன வழி?"

"அவர் மீது நான் கொண்டிருக்கும் காதலை விட்டு விட வேண்டியதுதான்!"

"அது இயலாத செயல். உனக்கு அவர் மீது இருக்கும் காதல் எவ்வளவு ஆழமானது என்று எனக்குத்தானே தெரியும்?"

"இங்கே பார்! உன் வழிகாட்டலின்படிதான் நான் நடக்க வேண்டி இருக்கிறது. என் காதலை அவரிடம் சொல்ல விடாமல், நாணம் என்ற தடையை உருவாக்கி இருக்கிறாய். சரி, காதலை விட்டு விடலாம், என்றால் அதை உனக்குள் ஒரு ஆழமான இடத்தில் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு, அதை விட முடியாது என்கிறாய். நல்ல நெஞ்சாக வந்து வாய்த்திருக்கிறாய் எனக்கு! ஒன்று, காதலை விட்டு விட்டதாகச் சொல். அல்லது, நாணத்தை விட்டு விட்டதாகச் சொல். இந்த இரண்டையும் ஒருசேர வைத்துக் கொண்டு இருக்க என்னால் முடியவில்லை!"

குறள் 1247
காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு.

பொருள்:
நல்ல நெஞ்சே! ஒன்று காமத்தை விட்டு விடு; அல்லது நாணத்தை விட்டு விடு; இந்த இரண்டையும் பொறுத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது.

1248. போய் வா நெஞ்சே, போய்வா!

நான் எவ்வளவோ தடுத்தும் கேளாமல், நீ ஒரு நீண்ட தூரப் பயணத்தை மேற்கொள்ளத் தீர்மானித்து விட்டாய்.

உனக்கு அவர் இருக்கும் இடமே தெரியாது, கடல் தாண்டிச் செல்வதாகச் சொன்னாரே தவிர, குறிப்பாக எந்த ஊருக்குப் போகப் போகிறார் என்று சொல்லவில்லை. 

அவர் இங்கிருந்து கிளம்பியபோது, அவர் செல்லப் போகும் இடம் எது என்பது அவருக்கே தெரியாது. நீ எப்படி அவரைத் தேடிக் கண்டுபிடிக்கப் போகிறாய் என்றே தெரியவில்லை.

அப்படியே, அவர் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்தாலும், என்ன பயன்?

பிரிவு என்னும் பெரும் துயரத்தை அளித்து விட்டுப் போனவர், அந்தத் துயரைப் போக்கும் வகையில், திரும்பி வந்து அன்பு செலுத்தவில்லையே என்ற உன் ஏக்கம் நியாயமானதுதான்.

அதற்காக, அவரைப் பின் தொடர்ந்து போவதால் என்ன பயன்? உன் துன்பத்தை உணர்ந்து, உன் மீது அன்பு செலுத்தாதவர் தொலைவில் இருந்தால் என்ன, அருகில் இருந்தால் என்ன?

அதனால், அவர் இருக்கும் இடத்துக்குச் செல்வதால், எந்தப் பயனும் இல்லை. இதை உனக்கு நான் எத்தனையோ முறை எடுத்துச் சொல்லி விட்டேன். ஆயினும், பிடிவாதமாகக் கிளம்பி விட்டாய்.

சென்று வா, என் அருமை நெஞ்சே! உன்னைப் போன்ற பேதையிடம், நான் வேறு என்ன சொல்ல முடியும்!

குறள் 1248
பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.

பொருள்:
என் நெஞ்சே! பிரிவுத் துன்பத்தால் வருந்தி, அவர் வந்து அன்பு செய்ய வில்லையே என்று ஏங்கி, பிரிந்தவரின் பின் செல்கின்றாய், பேதை.

1249. இருக்கும் இடத்தை விட்டு,
இல்லாத இடம் தேடி...

சுரபி கோவிலுக்குச் சென்றிருந்தாள். கடவுளை தரிசித்து விட்டு வெளியே வந்து கொண்டிருந்தபோது, கோவில் மண்டபத்தில் ஒருவர் ஆன்மீகச் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார்.

"இங்கே பாருங்கள், எத்தனை பேர் சந்நிதிக்குள் போய் விட்டு வருகிறார்கள்? அவர்கள் கடவுளை தரிசித்து விட்டா வருகிறார்கள்? இல்லை. அங்கே கடவுள் இருக்கிறாரா என்று பார்த்து விட்டு வருகிறார்கள்! அவர்கள் கடவுளை தரிசித்திருந்தால், அங்கிருந்து வெளியே வருவார்களா என்ன?

"நாளை இன்னொரு கோவிலுக்குப் போய், அங்கே தேடுவார்கள். அல்லது இந்தக் கோவிலுக்கே திரும்பவும் வந்து தேடுவார்கள். தங்கள் வீட்டு பூஜை அறையில் தேடுவார்கள். வீட்டில் கண்ணாடிச் சட்டம் போட்டு மாட்டி வைத்திருக்கும் கடவுளின் படத்தில் தேடுவார்கள்..."

'என்ன இது, கோவிலில் வந்து நாத்திகரைப் போல் பேசுகிறாரே!' என்று நினைத்த சுரபி, அவர் அடுத்து என்ன சொல்லப் போகிறார் என்று ஆவலுடன் கவனித்தாள்.

"கடவுள் எங்கே இருக்கிறாரோ, அங்கே தேட வேண்டும். அதை விட்டு, மற்ற இடங்களில் தேடினால், அவர் எப்படி உங்களுக்குக் காட்சி அளிப்பார்? கடவுள் எங்கே இருக்கிறார் தெரியுமா? எல்லோரும் உங்கள் நெஞ்சைத் தொட்டுப் பாருங்கள். டிக் டிக்கென்று துடிக்கிறது அல்லவா? அது உங்கள் நெஞ்சத்தில் கடவுள் எப்போதுமே குடிஇருக்கிறார் என்பதைக் காட்டும் துடிப்புதான்! ஆமாம், கடவுள் இருப்பது உங்கள் நெஞ்சத்தில்தான்."

இதைக் கேட்டதும், ஏதோ பொறி தட்டியது போல், அங்கிருந்து கிளம்பினாள் சுரபி.

வீட்டுக்குச் செல்லும் வழியில், அவள் சிந்தனை இவ்வாறு ஓடியது.

'சில வாரங்களுக்கு முன், இதே கோவில் வாசலில், அந்த இளைஞரைப் பார்த்தேன். அவரைக் கண்ட மாத்திரத்திலேயே, அவர் என் கண்கள் வழியே என் இதயத்துக்குள் புகுந்து, அங்கேயே நிரந்தரமாகக் குடியேறி விட்டார்!

'இதை உணராமல், அவரை மீண்டும் சந்திக்க முடியுமா என்று ஊரில் இருக்கும் பல இடங்களுக்கும் சென்று பார்த்து வருகிறேன். இன்று இந்தக் கோவிலுக்கு வந்தது கூட அந்த நோக்கத்தில்தான்! கடவுளை வணங்குவது என்பது நானே கற்பித்துக் கொண்ட ஒரு காரணம்தானே!

'அந்த ஆன்மீகச் சொற்பொழிவாளர் பேச்சைக் கேட்டதும்தான் எனக்கு உண்மை விளங்குகிறது. உள்ளத்தில் குடி இருப்பவரை, ஊரெல்லாம் தேடுவது என்ன அறியாமை! என் உள்ளத்தில் அவர் குடி இருப்பதை உணர்ந்து, எப்போதும் அவரை நினைத்துக் கொண்டிருந்தால், அவர் என் கண் முன்னால் வந்து நிற்க மாட்டாரா என்ன?

"ஏ, நெஞ்சமே! அவர் உனக்குள்தானே இருக்கிறார்? அதை உணராமல், வெளியே பல இடங்களிலும் அவரைத் தேடி அலையும்படி என்னைப் பணித்துக் கொண்டிருக்கிறாயே!"

குறள் 1249
உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு.

பொருள்:
உள்ளத்திலேயே காதலர் குடிகொண்டிருக்கும்போது, நெஞ்சமே! நீ அவரை நினைத்து வெளியே எவரிடம் தேடி அலைகிறாய்?

1250. உடல் இளைக்கக் காரணம்

காந்திமதியை மருத்துவிடம் அழைத்துச் சென்றாள் அவள் தாய் உலகநாயகி.

"கொஞ்ச நாளா, மெலிஞ்சுக்கிட்டே வரா ஐயா! நானும் சத்துள்ள உணவெல்லாம் கொடுத்துப் பாக்கறேன். ஆனா ஒரு முன்னேற்றமும் இல்லை!" என்றாள் உலகநாயகி, மருத்துவரிடம்.

காந்திமதியைப் பரிசீலித்துப் பார்த்த மருத்துவர், "வயித்தில கட்டி இருக்கும்னு நினைக்கறேன். அதனாலதான், சாப்பிடற உணவு எதுவும் உடம்பில ஒட்ட மாட்டேங்குது. சாப்பிடற சாப்பாட்டை எல்லாம் கட்டி உறிஞ்சிக்குது. கட்டியைக் கரைக்க, சூரணம் தரேன். ரெண்டு மூணு மாசத்தில கட்டி கரைஞ்சுடும்" என்றார்.

ன்று இரவு, காந்திமதி தனிமையில் இருந்தபோது, தன் நெஞ்சுடன் உரையாடினாள்:

'வயிற்றில் இருக்கும் கட்டியினால்தான் நான் மெலிந்து வருவாக மருத்துவர் சொல்கிறார். அவருக்குத் தெரிந்தது அவ்வளவுதான். உனக்கும், எனக்கும்தானே உண்மை தெரியும்!

'காதலர் நம்மைப் பிரிந்து வெளியூர் சென்றதிலிருந்து, அவரை நெஞ்சிலேயே நிறுத்தி, அவர் பிரிவை நினைத்து வருந்துவதால்தான், என் உடல் இளைத்துக் கொண்டே வருகிறது. அம்மா எனக்குக் கொடுக்கும் சத்துள்ள உணவுகளை உறிஞ்சுவது, என் வயிற்றில் உள்ள கட்டி அல்ல, நெஞ்சில் உள்ள அந்தக் கல்மனம் கொண்டவர்தான்.

'நம் மீது இரக்கம் இல்லாமல், நம்மைப் பற்றிய நினைவில்லாமல், நம்மைக் கைவிட்டு விட்ட அவரைக் கைவிடாமல், அவரை நாம் இன்னும் நெஞ்சில் வைத்துப் போற்றி வருகிறோம். அவர் நினைவை நெஞ்சை விட்டு நாம் அகற்றாதவரை, என் உடல் இளைப்பது நிற்கப் போவதில்லை.

'ஒருவேளை, சில மாதங்களுக்குப் பிறகு, அவர் திரும்பி வந்து விட்டால், ஒரு வேடிக்கை நிகழும். அப்போது என் உடல் மெலிவது நின்று விடும். தான் கொடுத்த சூரணத்தால், வயிற்றில் உள்ள கட்டி கரைந்ததால்தான், என் உடல் மெலிந்து வருவது நின்றது என்று மருத்துவர் நினைத்துப் பெருமைப்பட்டுக் கொள்வார்.'

குறள் 1250
துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின்.

பொருள்:
நம்மோடு பொருந்தி இருக்காமல், கைவிட்டுச சென்ற காதலரை நெஞ்சில் வைத்திருப்பதால், இன்னும் மெலிந்து அழகை இழந்து வருகின்றோம்

அறத்துப்பால்                                                         பொருட்பால்   

No comments:

Post a Comment

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...