அதிகாரம் 115 - அலரறிவுறுத்தல் (காதலைப் பற்றி ஊரார் பேசுதல்)

திருக்குறள்
காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 115
அலரறிவுறுத்தல்
(காதலைப் பற்றி ஊரார் பேசுதல்)

1141. ஊர்க்காரர்கள் செய்த உதவி!

கடைத்தெருவிலிருந்து வாங்கிய பொருட்கள், காய்கறிகள் கொண்ட மூன்று நான்கு பைகளைச் சுமந்து கொண்டு ஒரு வித்தைக்காரரின் லாகவத்துடன் பைகளை ஒரு கையிலிருந்து இன்னொரு கைக்கு மாற்றி நடந்து வந்து கொண்டிருந்த அந்த இளம்பெண்ணைத் தன் வீட்டு வாசலிலிருந்து சற்று வியப்புடனும், நிறைய ஆர்வத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தான் முத்தையன்.

அப்போது ஒரு மாட்டு வண்டி அந்தத் தெருவுக்குள் நுழைந்து அந்தப் பெண்ணுக்குப் பின்புறமாக வந்தது. 

அந்தப் பெண் தனக்குப் பின்னால் மாட்டு வண்டி வருவதை உணராதவளாகத் தன் பைகளைச் சமாளித்துச் சுமந்து நடப்பதிலேயே கவனம் செலுத்திக் கொண்டிருந்தாள், 

வண்டிக்காரர் மாடுகளை இழுத்துப் பிடித்து வண்டியை நிறுத்த முயன்றாலும் அந்தப் பெண்ணின் அருகில் வருவதற்குள் மாடுகள் நின்று விடும் என்றோ, அல்லது அந்தப் பெண்ணே வண்டியை கவனித்துப் பாதுகாப்பாக  ஒதுங்குவாள் என்றோ முத்தையனுக்கு நம்பிக்கை இல்லை.

எனவே அவன் விரைந்து ஓடி அந்தப் பெண்ணைப் பிடித்து ஓரமாக இழுத்தான். இழுக்கும்போது அவள் கையிலிருந்த பைகள் விழுந்துவிடாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டான்.

ஓரமாக இழுக்கப்பட்ட அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்து என்ன நடக்கிறது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, மாட்டு வண்டி தன்னைத் தாண்டிச் செல்வதையும் வண்டிக்காரர் தன்னைக் கைகாட்டித் திட்டிக் கொண்டே செல்வதையும் கவனித்து நடந்ததை உணர்ந்து கொண்டாள்.

தன்னைக் காப்பாற்றியது யார் என்று திரும்பிப் பார்த்தபோதுதான் அவன் தன்னை இன்னும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருப்பதை கவனித்துத் தன்னை விடுவித்துக் கொண்டாள் அவள். 

நன்றி சொல்வது போல் அவனைப் பார்த்து விட்டு அவள் கிளம்ப யத்தனித்தபோது, "உன்னால தூக்க முடியல போலருக்கே! நான் வேணும்னா ரெண்டு பையை வாங்கிக்கறேன், உன் விடு வரையிலும் வந்து விட்டுட்டுப் போறேன்" என்றான் முத்தையன். 

"யோவ்! யாராவது பாத்து ஏதாவது தப்பா நினைச்சுப்பாங்களோன்னு நான் ஏற்கெனவே பயந்துகிட்டிருக்கேன். நீ என்னோட வீடு வரைக்கும் நடந்து வரேங்கற! இந்த ஊர்க்காரங்களைப் பத்தி உனக்குத் தெரியாதா? வம்பு பேசறத்துக்கே பொறந்தவங்க இந்த ஊர்க்காரங்க!" என்று சொல்லியபடியே விருட்டென்று கிளம்பினாள் அவள்.

ந்தப் பெண் பயந்தது உண்மையாகி விட்டது!

"நான் வண்டி ஓட்டிக்கிட்டு வேகமா வரப்ப ஒரு பொண்ணு ஏகப்பட்ட மூட்டைகளைத் தூக்கிக்கிட்டு வண்டிக்கு முன்னால போய்க்கிட்டிருந்தா. வண்டி அவ மேல இடிச்சுடுமேன்னு பயந்தேன். நல்லவேளை அவளோட காதலன் வந்து அவளைக் காப்பாத்திட்டான், காப்பாத்தறப்ப கூடஅவளை  எப்படிக் கட்டிப் புடிச்சான் தெரியுமா?" என்று வண்டிக்காரன் யாரிடமோ சொல்ல செய்தி ஊர் முழுவதும் பரவி விட்டது.

நடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த முத்தையன் தெருவைச் சேர்ந்த ஒருவர் அந்தக் காதலன் முத்தையன்தான் என்ற விவரத்தையும் அந்தச் செய்தியில் கோர்த்து விட, முத்தையன்- அன்னபூரணி காதல் விவகாரம் ஊர் முழுவதும் பேசப்பட்டது.

"ஏண்டா! அந்தப் பொண்ணு அன்னபூரணியை நீ காதலிக்கிறியாமே!" என்று ஒரு சிலர் அவனிடம் கேட்டபோதுதான் அவள் பெயர் அன்னபூரணி என்பதே முத்தையனுக்குத் தெரிய வந்தது!

"நீதான் முத்தையனா?" என்றாள் அந்தப் பெண்.

"ஆமாம் நீ யாரு?" என்றான் முத்தையன்.

"நான் அன்னபூரணியோட தோழி கண்ணம்மா. நீ செஞ்ச வேலையைப் பாத்தியா? இப்ப இந்த ஊர் முழுக்க உன்னையும் அன்னபூரணியையும் பத்தித் தப்பாப் பேசுது!" என்றாள் கண்ணம்மா.

"நான் என்ன செஞ்சேன்? உன் தோழி மேல வண்டி வந்து மோதிடாம அவளைக் காப்பாத்தினேன். அது தப்பா?"

"உங்களைப் பத்தி ஊர்ல தப்பாப் பேசறாங்களே அதுக்கு என்ன செய்யப் போற?"

"அவங்க பேசறது எனக்கு நல்லதாத்தான் படுது!"

"என்னய்யா சொல்ற நீ?" என்றாள் கண்ணம்மா.

"உன் தோழி என்ன நினைக்கறான்னு எனக்குத் தெரியாது. ஆனா அன்னிக்கு அவளை நான் காப்பத்தினப்பவே அவ மேல எனக்கு ஒரு விருப்பம் வந்துடுச்சு. அவளை மறுபடி பாத்து அவ மனசைத் தெரிஞ்சுக்கணும்னு நினைச்சேன். ஆனா பயமாவும் இருந்தது. என்ன செய்யறதுன்னு தெரியாம தவிச்சுக்கிட்டிருந்தேன். அப்பதான் ஊர்க்காரங்க இப்படிப் பேச ஆரம்பிச்சுட்டாங்க, என் மனசில இருக்கறதை ஊர்க்காரங்க வெளிப்படுத்தினதால என் காதல் இப்ப எல்லோருக்கும் தெரிஞ்சுடுச்சு. உன் தோழிக்கு விருப்பம்னா சொல்லு. அவங்க அப்பாகிட்ட வந்து நான் பெண் கேக்கறேன்!" என்றான் முத்தையன்.

"இனிமே என்னடி? மறைஞ்சிருந்தது போதும். வெளியில வா!" என்று கண்ணம்மா சற்று உரத்த கூரலில் கூறியதும் அருகிலிருந்த மரத்தின் பின்னிருந்து நிரம்பி வழிந்த நாணத்துடனும், ததும்பி வழிந்த புன்னகையுடனும் தலையைக் குனிந்து கொண்டே வெளிப்பட்டாள் அன்னபூரணி. 

குறள் 1141
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்

பொருள்:
ஊருக்குள் பலர் எங்கள் காதலைப் பற்றிப் பேசுவதால்தான் அவளை இன்னும் பெறாத என் உயிரும் நிலைத்து இருக்கிறது; பேசும் பலரும் இதை அறிய மாட்டார்; இது நான் செய்த பாக்கியம்.

1142. பவளக்கொடி!

அந்த நவரத்தினக் கடையில்தான் அஜன் அவளை முதலில் சந்தித்தான்.

அஜன் ஒரு நவரத்தினக் கடையில் சில காலம் வேலை செய்ததால் நவரத்தினங்களை நன்றாக இனம் கண்டு அவற்றின் தரத்தை அறியும் திறமையை வளர்த்துக் கொண்டிருந்தான்.

நவரத்தினக் கடையில் சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, சொந்தத் தொழில் செய்ய விருப்பம் கொண்டதால் அஜன் தன் வேலையை விட்டு விட்டு சிறிதளவு முதல் போட்டு தானிய வியாபாரம் செய்ய ஆரம்பித்தான். 

தானிய வியாபாரத்தில் வருமானம் குறைவாகத்தான் வந்தது என்றாலும் அவன் எளிய வாழ்க்கைக்கு அது போதுமானதாக இருந்தது. திருமணம் செய்து கொண்டால் கூட, தான், தன் தாய், தன் மனைவி, தனக்குப் பிறக்கக் கூடிய குழந்தைகள் ஆகியோரைக் காப்பாற்றும் அளவுக்குத் தன் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்ததால் தாயின் விருப்பப்படி அவன் திருமணம் செய்து கொள்ளச் சம்மதம் தெரிவித்து விட்டான்.

அவன் தாய் தன் மகனுக்கு ஏற்ற சிறந்த மனைவியைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாள்.

மறுநாள் தன் கடைக்கு ஒரு முக்கிய வாடிக்கையாளர் வர இருப்பதாகவும் அப்போது அஜன் கடைக்கு வந்தால் தனக்கு உதவியாக இருக்கும் என்றும் அவன் பழைய முதலாளி தன் ஊழியர் ஒருவன் மூலம் அவனுக்குச் செய்தி அனுப்பி இருந்தார். இது போன்ற உதவிகளுக்காக அவ்வப்போது அவர் அவனை அழைப்பார். அவன் பணிக்கு ஈடாக ஒரு சிறிய தொகையை அவனுக்கு அளிப்பார்.

பழைய முதலாளி கேட்டுக் கொண்டபடி மறுநாள் அஜன் அவருடைய கடைக்குச் சென்றிருந்தான்.

அங்குதான் அவன் அவளைப் பார்த்தான்.

நவரத்தினங்கள் வாங்குவதற்காக வந்திருந்த அந்தப் பெண் பெரும் செல்வக் குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பது அவள் நடை, உடை, பேச்சு, தோரணை அனைத்திலும் வெளிப்பட்டது. கடை முதலாளி உட்பட யாரிடம் அவள் பேசினாலும் அதில் ஒரு அதிகார தொனி இருந்தது.

"அம்மணி! இவன் நவரத்தினங்களைப் பற்றி நன்கு அறிந்தவன். உங்களுக்கு வேண்டிய பவளங்களைத் தேர்ந்தெடுக்க இவன் உதவுவான்" என்று கடை முதலாளி அஜனை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தபோது, முதலில் அவனை அலட்சியமாகப் பார்த்த அந்தப் பெண் சற்று நேரத்திலேயே பவளங்களின் வகை, தன்மை, மதிப்பு ஆகியவை பற்றி அவன் கூறிய பல விஷயங்களைக் கேட்டு பிரமிப்படைந்து அவனைச் சற்று மதிப்புடனேயே பார்த்தாள்.

இறுதியில் சில பவளங்களை வாங்கிக் கொண்டு அவள் சென்றபோது கடை முதலாளி மகிழ்ச்சியுடன் அஜனுக்கு நன்றி தெரிவித்தார். 

"யார் இந்தப் பெண்மணி? இவ்வளவு அதிகார தோரணையுடன் இருக்கிறார்களே!" என்றான் அஜன்.

"இருக்க மாட்டார்களா? அவர் தந்தை அரண்மனையில் ஒரு பெரிய அதிகாரியாயிற்றே!" என்றார் கடை முதலாளி.

"அவர்கள் பெயர் என்ன?"

"அது எனக்குத் தெரியாது. பவளம் வாங்கியதால் பவளக்கொடி என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளேன்!" என்றார் அவன் பழைய முதலாளி சிரிப்புடன்.

சில நாட்களுக்குப்பிறகு 'பவளக்கொடி' அஜனைத் தன் விட்டுக்கு வரச் சொல்லி இருப்பதாகக் கடை முதலாளியிடமிருந்து தகவல் வந்தது.

ஒருவேளை தன் யோசனைப்படி அவள் வாங்கிய பவளங்கள் அவளுக்குப் பிடிக்காமல் போய், தவறான ஆலோசனை கூறியதற்காகத் தன்னைக் கடிந்து கொள்வதற்காக அழைத்திருப்பாளோ என்ற அச்சத்துடனேயே அஜன் அவள் வீட்டுக்குப் போனான்.

ஆனால் அஜன் அவள் வீட்டுக்குச் சென்றதும் அவனுக்குச் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. அவன் மறுத்தும் கேட்காமல் அவனுக்கு உணவளித்தார்கள். 

"உங்களுக்கு உணவளித்த பிறகுதான் தன்னிடம் அழைத்து வர வேண்டும் என்பது சின்னம்மாவின் உத்தரவு!" என்றாள் அவனுக்கு உணவளித்த அந்தப் பணிப்பெண்.

உணவருந்தியபின் 'சின்னம்மா'வின் அறைக்கு அஜன் அழைத்துச் செல்லப்பட்டான்.

"வாருங்கள்! வாருங்கள்!" என்று அவனை உற்சாகமாக வரவேற்ற 'பவளக்கொடி,' "நவரத்தினங்களைப் பற்றி நன்கறிந்த எத்தனையோ விற்பன்னர்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் உங்களைப் போன்ற துல்லியமான அறிவுள்ளவரை நான் பார்த்ததில்லை. என்னிடம் வேறு சில நவரத்தினங்கள் இருக்கின்றன. அவற்றை நீங்கள் பார்த்து அவற்றின் தரம், மதிப்பு பற்றி எனக்கு ஆலோசனை கூற வேண்டும். நான் அவ்வபோது நவரத்தினங்களை வாங்கிக் கொண்டும் விற்றுக் கொண்டும் இருப்பேன். அதிக மதிப்புள்ள கற்களை விற்காமல் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம். அதற்கு உங்கள் உதவி வேண்டும்!" என்றாள்.

அவள் எடுத்துப் போட்ட நவரத்தினங்களை ஒவ்வொன்றாகப் பார்த்து ஆராய்ந்து அவை பற்றி அவளிடம் விளக்கினான் அஜன்.

அஜன் கிளம்பியபோது அவனுடைய சேவைக்குப் பரிசாக அவள் அளித்த தங்க நாணயங்களை வாங்க மறுத்த அவன், "உங்களைப் போன்ற ஒரு உயர்ந்த நபரின் தொடர்பு கிடைத்ததே எனக்குப் பெரும் பேறு!" என்று சொல்லி விட்டுக் கிளம்பினான்.

வளக்கொடி பற்றிய நினைவு அஜன் மனதை எப்போதும் முழுமையாக ஆக்கிரமித்திருந்தது. 

'எப்படிப்பட்ட பெண்! என்ன ஒரு கம்பீரம், மலர்ச்சி, சிரிப்பு! அவள் என்னை நேரே பார்த்தபோதெல்லாம் என் உடலில் புளகாங்கிதம் ஏற்பட்டதே! அது ஏன்? பொதுவாகப் பெண்களின் கண்கள் குவளை மலர் போல் என்றெல்லாம் கவிஞர்கள் வர்ணிப்பார்கள். அவற்றையெல்லாம் படித்தால் எனக்கு வேடிக்கையாகத் தோன்றும். ஆனால் அவளுடைய கண்மலர் போல்தானே இருக்கிறது! 

'அவளை இன்னொரு முறை பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமா? சே! என்ன ஒரு முட்டாள்தனம்! அவள் எங்கே, நான் எங்கே! அவள் வீட்டில் ஒரு வேலைக்காரனாக இருக்கத்தான் நான் தகுதி பெற்றவன். அப்படி ஒரு வேலைக்காரனாக இருந்து அவளால் அதிகாரம் செய்யப்பட்டு அவளுடைய மலர்க் கண்களைப் பார்த்துக் கொண்டு அவள் கம்பீரத்தைப் பக்கத்திலிருந்து ரசித்துக் கொண்டிருந்தாலே போதுமே! சே! என்ன ஒரு சிந்தனை இது!'

ஆனால் இது போன்ற எண்ண ஓட்டங்கள் தன் மனதில் அடிக்கடி ஏற்படுவதை அஜனால் தவிர்க்க முடியவில்லை.

சில வாரங்களுக்குப் பிறகு 'பவளக்கொடி' மீண்டும் அவனைத் தன் வீட்டுக்கு அழைத்தாள்.

இந்த முறை அவள் சற்றுக் கோபமாக இருந்தாள்.

"என்ன ஐயா இது! என் ரத்தினங்களைப் பார்த்து மதிப்பிடத்தானே உங்களை அழைத்தேன்? ஆனால் ஊரில் உங்களையும் என்னையும் இணைத்துப் பேசுகிறார்களே, தெரியுமா?" என்றாள் அவள் கோபத்துடன்.

அஜனுக்கும் இது போன்ற பேச்சுக்கள் காதில் விழுந்தாலும், அவன் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. இப்போது அவளே தன்னைக் கூப்பிட்டுப் பேசியதும், விஷயம் விபரீதமாகப் போய்விட்டதோ என்ற பயம் ஏற்பட்டது.

"இல்லை, அம்மணி! இதில் என் தவறு எதுவும் இல்லை."

"என்ன, அம்மணியா? திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணை அம்மணி என்றா கூப்பிடுவார்கள்? என் பெயர் பரிவாதினி!" என்றாள் பவளக்கொடி- இல்லை பரிவாதினி - சிரித்துக் கொண்டே!

"என்ன சொல்கிறீர்கள்?"

"ஆமாம்! ஊரார் பேச்சு என் காதில் விழுந்ததும் முதலில் எனக்குக் கோபம் வந்தது. அப்புறம் யோசித்துப் பார்த்தபோதுதான் ஊரார் பேச்சு என் உள்மனதில் இருந்த எண்ணத்தைத்தான் பிரதிபலிக்கிறது என்று தோன்றியது. உங்களுக்கு இந்தப் பரிவாதினியைப் பிடித்திருந்தால் சொல்லுங்கள். என் தந்தையிடம் பேசி நம் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யச் சொல்கிறேன்."

சொல்லி முடித்ததும் தன்னை அறியாமலே தலையைக் குனிந்து கொண்டாள் பரிவாதினி.

அதிகார தோரணை கொண்ட கம்பீரமான பவளக்கொடி பரிவாதினியாக நாணத்துடன் தலை குனிந்து நிற்பதை நம்ப முடியாமல் பார்த்தான் அஜன்.

குறள் 1142
மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.

பொருள்:
மலர் போன்ற கண்ணை உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் அவளை எளியவளாகக் கருதி அலர் கூறி (வம்பு பேசி) எமக்கு உதவி செய்தனர்.

1143. உள்ளூர் கிசுகிசு!

"நம்ம ஊர்ல ஒரு கையெழுத்துப் பத்திரிகை வருதே, தெரியுமா உனக்கு?" என்றான் முரளி, அவன் நண்பன் கல்யாணராமனிடம்.

"தெரியாதே! என்ன பத்திரிகை?" என்றான் கல்யாணராமன்.

"உள்ளூர் கிசுகிசு!"

"பேரே ஒரு மாதிரி இருக்கே! என்ன பத்திரிகை இது?"

"பேர்ல இருக்கற மாதிரிதான்! ஊர்ல நடக்கிற ரகசியமான விஷயங்கள், வதந்திகள் போன்ற விஷயங்களை வெளியிடுவாங்க!"

"எப்படி இதை நடத்தறாங்க, எப்படி சர்க்குலேட் பண்றாங்க?"

"வாரா வாரம் பத்து பக்கம் கையால எழுதி வெளியிடுவாங்க. இதைத் தொடர்ந்து படிக்கிறவங்க இருக்காங்க, புதுசா சேருகிற வாசகர்களும் இருக்காங்க. ஒவ்வொத்தரும் தாங்க படிச்சப்புறம் வேற யார்கிட்டயாவது கொடுப்பாங்க. அப்படித்தான் சர்க்குலேஷன் ஆகுது."

"அது சரி. அவங்களுக்கு எப்படி விஷயங்கள் கிடைக்கும்? அதோட இப்படியெலாம் எழுதறது அவதூறு இல்லையா?"

"செய்திகளை  எப்படி கலெக்ட் பண்றாங்கன்னு எனக்குத் தெரியாது. நீயும் நானும் பேசறதை ஒட்டுக் கேட்டு அதைக் கூட "உள்ளூர் கிசுகிசு பற்றி நண்பர்கள் உரையாடல்"னு செய்தி போடலாம்! யாரோட பெயரையும் நேரடியா வெளியிட மாட்டாங்க. ஆனா படிக்கிறவங்க புரிஞ்சுக்கிற மாதிரி எழுதுவாங்க. உதாரணமா, 'சிவபெருமானின் இளைய குமாரன் தெருவில் வசிக்கும் தசரதகுமாரரின் மனைவி, கணவனுடன் சண்டையிட்டுக் கொண்டு பிறந்த வீட்டுக்குச் சென்று விட்டார்'னு எழுதினா சுப்பிரமணியம் தெருவில் இருக்கும் ராமசாமியின் மனைவின்னு எல்லாரும் புரிஞ்சுப்பாங்களே! அவங்க ஊருக்குப் போயிருந்தா செய்தி உறுதியான மாதிரி இருக்குமே!"

"அடப்பாவிங்களா! அப்ப அந்த ராமசாமி அதைப் படிச்சுட்டுக் கோவிச்சுக்க மாட்டாரா?"

"அப்படிக் கோவிச்சுக்கிட்டு சண்டை போட்டா அவர் தன்னையே காட்டிக் கொடுத்துக்கிட்ட மாதிரிதானே இருக்கும்? அதனால திருடனுக்குத் தேள் கொட்டின மாதிரி பேசாம இருப்பாரு. அதோட இதை வெளியிடறவங்க யாருன்னு தெரியாதபோது யார்கிட்ட போய் சண்டை போட முடியும்?"

"இது ரொம்ப அநியாயமா இருக்கே! என்னைப் பத்தி ஏதாவது எழுதினா நான் அந்தப் பத்திரிகையை எடுத்துக்கிட்டு போலீசுக்குப் போயிடுவேன். அவங்க கண்டுபிடிச்சுடுவாங்க!"

"அப்படின்னா நீ போலீசுக்குப் போக வேண்டிய நேரம் வந்துடுச்சு!"

"என்னடா சொல்றே?" என்றான் கல்யாணராமன்.

"இதோ பார்!" என்ற முரளி, தன் கையில் வைத்திருந்த 'உள்ளூர் கிசுகிசு' இதழைப் பிரித்து அதிலிருந்த செய்தியைப் படித்தான்.

"மத்திய அரசு அலுவலகத்தில் பணியாற்றும் திருமண அழகர் தனியார் நிறுவனத்தில் டைப் அடிக்கும் பச்சைக்கல் நங்கையை திருட்டுத்தனமாகக் காதலிக்கிறார். பச்சைக்கல்லின் தந்தை மலையைப் போல் கடினமானவர் என்பதால் அவரை அண்ணாந்து பார்த்துத் தன் காதலைச் சொல்ல அழகர் அஞ்சுகிறார்!" என்று படித்த முரளி, " இன்னும் கொஞ்சம் விவரங்கள் கீழ இருக்கு!" என்றான்.

"அடப்பாவி! கல்யாணசுந்தரம், மரகதம், அவ அப்பா அண்ணாமலை எல்லார் பெயரும் சுலபமாப் புரியற மாதிரி எழுதி இருக்காங்களே!" என்றான் கல்யாணசுந்தரம்.

"இந்தா பத்திரிகை! போலீசுக்குப் போறதுன்னா போ!" என்றான் முரளி, சவால் விடுவது போல்.

கல்யாணசுந்தரம் தயக்கத்துடன் 'உள்ளூர் கிசுகிசு'வைக் கையில் வாங்கிக் கொண்டான்.

டுத்த நாள் கல்யாணசுந்தரத்தைப் பார்க்க வந்த முரளி "என்ன, போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனியா?" என்றான்.

"இல்லை!"

"ஏன் போகல?"

"இந்தப் பத்திரிகை வந்து ஒரு வாரம் ஆயிடுச்சு. இதை நிறைய பேர் படிச்சிருப்பாங்க. நான்தான் இதைக் கடைசியாப் பாத்திருப்பேன் போல இருக்கு!"

"சரி, என்ன செய்யப் போற?"

"இந்தப் பத்திரிகையை வெளியிடறவங்க யாருன்னு தெரிஞ்சா அவங்களைப் பார்த்து..."

"கழுத்தை நெரிக்கப் போறியா?"

"இல்லை, நன்றி சொல்லப் போறேன்!"

"எதுக்கு?"

"அவங்க எழுதினபடி மரகதத்தோட அப்பாகிட்ட என் காதலைச் சொல்ல நான் பயந்துகிட்டுதான் இருந்தேன். இந்த உள்ளூர் கிசுகிசு மூலமா அவர் விஷயத்தைத் தெரிஞ்சுக்கிட்டு மரகதத்துக்கிட்ட கேட்டிருக்காரு. மரகதம் எங்க காதலைப் பத்தி சொன்னதும் எங்க அப்பா அம்மாவை அழைச்சுக்கிட்டு பெண் கேக்க என்னைஙவரச் சொல்லி இருக்காரு. நேத்திக்கு சாயந்திரம்தான் மரகதம் எங்கிட்ட விஷயத்தைச் சொன்னா. அதனால என் காதல் நிறைவேற உதவி செய்த 'உள்ளூர் கிசுகிசு'வுக்கு நான் நன்றி சொல்ல வேண்டாமா?" என்றான் கல்யாண சுந்தரம்.

குறள் 1143
உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.

பொருள்:
எங்களக்குள் காதல் இருப்பதை இந்த ஊர் அறிந்து பேசியதும் நல்லதே, (திருமணம் செய்து கொள்ள) முடியுமா என்றிருந்த நிலை போய்ச் செய்தது போல் ஆயிற்று.

1144. சிவகாமி செய்த உதவி!

"அப்புறம்?" என்றாள் மணிமேகலை.

"அப்புறம் என்ன? உட்புறம், வெளிப்புறம்னு எல்லாம் பேசிட்டமே!" என்றான் சந்திரன்.

"அப்படின்னா நாம பேசறதுக்கு எதுவுமே இல்லையா? இப்பவே இப்படின்னா, கல்யாணம் ஆனப்பறம் எப்படி?"

"அப்ப சண்டை போட நிறைய விஷயம் இருக்கும். சண்டை. சமாதானம்னு வாழ்க்கை சுவாரசியமாப் போகும்?!"

"அப்படின்னா, நம் காதல்ல சுவாரசியம் இல்லைங்கறியா?" என்றாள் மணிமேகலை சற்றே கோபத்துடன்.

"அடக் கடவுளே! காதலிக்கறப்ப சண்டை வராம ஜாக்கிரதையா இருப்போம். ஏன்னா, சண்டை வந்தா காதல் முறிஞ்சுடுமோங்கற பயம்!  கல்யாணம் ஆனப்பறம் அந்த பயம் இருக்காது இல்ல, அதைச் சொன்னேன்!" என்றான் சந்திரன் சமாதானமாக.

"நம்ம காதல்ல சுவாரசியம் இல்லேங்கறது உண்மைதான். பொதுவா காதலுக்குக் கொஞ்சமாவது எதிர்ப்பு இருக்கும். ஆனா நம் விஷயத்தில அது இல்ல. உனக்குப் பெற்றோர்கள் இல்ல. எங்க அப்பா அம்மாகிட்ட என் காதலைப் பத்தி இன்னும் சொல்லனேன்னாலும், அவங்க என் விருப்பத்தை ஏத்துப்பாங்க. ஏன்னா, அவங்களே காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிடவங்கதான். அதனால நம் காதல் ஒரு பிரச்னையும் இல்லாம ஓடிக்கிட்டிருக்கு. ஏதாவது பிரச்னை வந்தாதானே ஒரு சுவாரசியம் இருக்கும்?"  

தற்குப் பிறகு ஐந்து நாட்கள் அவர்கள் சந்திக்கவில்லை. அவர்கள் வழக்கமாகச் சந்திக்கும் இடத்துக்கு தினமும் சந்திரன் வந்து காத்திருந்து விட்டு ஏமாந்து திரும்பிப் போனான்.

ஆறாவது நாள் மணிமேகலை வந்தபோது அவள் முகம் சோர்ந்திருந்தது.

"என்ன ஆச்சு மணிமேகலை? உடம்பு சரியல்லையா?" என்றான் சந்திரன்.

"ஏன்யா, ஊரில நடக்கறது எதுவுமே உனக்குத் தெரியாதா?" என்றாள் மணிமேகலை கோபத்துடன்.

"என்ன நடக்குது ஊர்ல?"

"உன்னையும், என்னையும் பத்தி சில பேர் கண்டபடி பேசிக்கறாங்களே, அது உன் காதில விழலியா?"

"என்ன பேசிக்கிறாங்க?"

"நீயும், நானும் பொது இடத்தில கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுத்துக்கிட்டமாம்!"

"அடிப்பாவி! உன்னை நான் தொட்டது கூட இல்லையே! யாரு இப்படியெல்லாம் சொன்னது?"

"நம் ஊர்ல சிவகாமி அத்தைன்னு இருக்காங்க. வம்பு பேசறதுதான் அவங்க முழு நேர வேலை. அன்னிக்கு நாம பேசிக்கிட்டிருந்ததைப் பாத்துட்டாங்க போலருக்கு. நாம ரெண்டு பேரும் உக்காந்து பேசிக்கிட்டிருந்ததைக் கண்ணும் காதும் வச்சு, கட்டிப் பிடிச்சுக்கிட்டோம், முத்தம் கொடுத்துக்கிட்டோம்னெல்லாம் நிறைய பேர்கிட்ட சொல்லி இருக்காங்க."

"அப்புறம்?"

"எங்க அப்பா அம்மா காதுக்கும் விஷயம் போச்சு. அவங்க என்னைக் கேட்டங்க. நான் உண்மையைச் சொன்னேன். அந்த சந்திரனை சீக்கிரமே வந்து பெண் கேக்கச் சொல்லுன்னு சொன்னாங்க. ஆனா எனக்குத்தான் வெளியில வந்தாலே, என்னைப் பாக்கற ஊர்க்காரங்க என்ன நினைச்சுப்பங்களோன்னு பயமா இருந்தது. அதனாலதான் நாலஞ்சு நாளா உன்னைப் பார்க்க !"

"அப்பா! நம் காதல்ல சுவாரசியம் இல்லையேன்னு கவலைப்பட்டுக்கிட்டிருந்தோம் இல்ல, அந்தக் கவலையை அந்த சிவகாமி அத்தை தீர்த்து வச்சுட்டாங்க. அவங்களைப் போய்ப் பார்த்து நன்றி சொல்லிட்டு வரலாம்!" என்று சொல்லிச் சிரித்தான் சந்திரன்.

ஒரு கணம் அவனை முறைத்துப் பார்த்த மணிமேகலை, பிறகு தானும் அவன் சிரிப்பில் கலந்து கொண்டாள். 

குறள் 1144
கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.

பொருள்:
ஊரார் பேச்சினால் எங்கள் காதல் வளர்கிறது; இந்தப் பேச்சு மட்டும் இல்லை என்றால் அது தன் தன்மை இழந்து சுருங்கிப் போயிருக்கும்.

1145. பூங்குழலியின் போதை!

"இந்தக் குடிப்பழக்கத்தை நிறுத்தச் சொல்லி உங்கிட்ட எவ்வளவு நாளா சொல்லிக்கிட்டிருக்கேன். நிறுத்த மாட்டேங்கறியே!" என்றாள் பூங்குழலி.

"முயற்சி பண்ணிக்கிட்டுத்தான் இருக்கேன், ஆனா முடியல. அந்த போதை வேண்டி இருக்கே!" என்றான் இளங்குமரன்.

"உனக்கு மட்டும் ஏன் போதை வேண்டி இருக்கு? எனக்கு வேண்டி இருக்கலையே!"

"எல்லாருக்கும் ஏதோ ஒரு போதை வேண்டித்தான் இருக்கும். உனக்கு போதை கொடுக்கற விஷயம் எதுன்னு எனக்குத் தெரியல!"

"உன்னால குடிப்பழக்கத்தை விட முடியலைங்கறதுக்காக எல்லாருக்கும் ஏதோ ஒரு போதை வேணும்னு சொல்லாதே!" என்ற பூங்குழலி, சற்றுத் தொலைவில் எதையோ பார்த்து விட்டு, "இங்கேயே ஒரு ஓரமா நில்லு. நான் இதோ வந்துடறேன்!" என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றாள்.

பத்து நிமிடங்களுக்குப் பிறகு பூங்குழலி திரும்பி வந்ததும், "எங்கே போயிட்டு வந்தே?" என்றன் இளங்குமரன்.

"அங்கே ரெண்டு பெண்கள் நம்மைப் பாத்து ஏதோ பேசற மாதிரி தெரிஞ்சது. பக்கத்தில போய் அவங்களுக்குப் பின்னால நின்னு என்ன பேசறாங்கன்னு கேட்டுட்டு வந்தேன்."

"என்ன பேசினாங்க"

"என்னதைப் பேசுவாங்க? நீயும் நானும் சேர்ந்து சுத்திக்கிட்டிருக்கமாம். கல்யாணம் பண்ணிக்கிட்டு சுத்தினா நல்லா இருக்கும்னு சொன்னாங்க."

"என்னைப் பத்தி ஏன் வம்பு பேசறீங்கன்னு அவங்ககிட்ட சண்டை போட்டுட்டு வந்தியா?"

"நான் எதுக்கு சண்டை போடணும்? அவங்க உண்மையைத்தானே பேசறாங்க?" என்றாள் பூங்குழலி, வெட்கம் கலந்த சிரிப்புடன்.

"நான் உன் பின்னால வந்து உன்னை கவனிச்சேன். அவங்க பேசினதைக் கேட்டப்ப உன் முகத்தில தெரிஞ்ச ஆனந்தத்தை கவனிச்சேன்!" என்றான் இளங்குமரன் சிரித்தபடியே.

"இப்படிப்பட்ட திருட்டு வேலையெல்லாம் செய்யறியா நீ?" என்றாள் பூங்குழலி, பொய்க் கோபத்துடன்.

"நீ மட்டும் என்ன செய்யற? நம்மைப் பத்தி யார் வம்பு பேசறாங்கன்னு தேடிப் போய்ப் பாத்து அவங்க பேசறதைக் கேட்டு ரசிச்சுக்கிட்டு வர. அதில உனக்கு ஒரு போதை கிடைக்குதுன்னு நினைக்கிறேன்."

"போதையும் இல்ல, எதுவும் இல்ல,"

"இல்லை போதைதான். அந்தப் பேச்சைக் கேட்கும்போது உன் கண்ணு சொக்கறதைப் பார்த்தே நான் தெரிஞ்சுக்கிட்டேன். எனக்குக் கள்ளு குடிக்கிறதில கிடைக்கிற போதை உனக்கு மத்தவங்க நம்ம காதலைப் பத்திப் பேசறதைக் கேக்கறதில கிடைக்குது!" என்றான் இளங்குமரன்.

குறள் 1145
களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது.

பொருள்:
கள் உண்பவர்களுக்குக் குடித்து மகிழும்போது எல்லாம் கள் உண்பது இனிதாவது போல் எங்கள் காதல் ஊருக்குள் பேசப்படும்போது எல்லாம் மனத்திற்கு இனிதாய் இருக்கின்றது.

1146. ஒரே நாள் உனை நான்....

"இன்னிக்கு சந்திர கிரகணம். எங்கேயும் வெளியில போகாதே!" என்றாள் அலர்மேல்மங்கை, தன் மகள் செல்வியிடம்.

"ஏன் கிரகணத்தப்ப வெளியில போகக் கூடாது?" என்றாள் செல்வி.

"எதுக்கெடுத்தாலும் எதிர்த்துக் கேள்வி கேக்காதே! இந்த ராத்திரியில நீ எதுக்கு வெளியில போகணும்?"

"நான் எங்கேயும் போகப் போறதில்லம்மா! கிரகணத்தப்ப ஏன் வெளியில போகக் கூடாதுன்னு தெரிஞ்சுக்கறதுக்காகத்தான் கேக்கறேன்."

"ஏன்னா, நான் உங்கிட்ட முக்கியமா ஒரு விஷயம் பேசணும்! அதுவும் உங்கப்பா வரத்துக்குள்ள பேசணும்!" என்றாள் அலர்மேல்மங்கை.

"பேசு! அதுக்கு ஏன் கிரகணத்தைக் காரணம் சொல்ற?" என்ற செல்வி, முற்றத்துக்குப் போய் வானத்தைப் பார்த்து விட்டு, "இப்பதான் கிரகணம் பிடிக்க ஆரம்பிச்ச மாதிரி இருந்தது. அதுக்குள்ள பாதி நிலாவை முழுங்கிடிச்சே இந்த ராகு!" என்றாள்.

"ஆமாம். இன்னும் அரை மணியில முழுசாப் புடிச்சுடும்னு நினைக்கிறேன்" என்ற அலர்மேல்மங்கை, மகளின் தோளைப் பிடித்து அழுத்தி, "இப்படி உக்காரு" என்றாள்.

ஒரு நிமிடம் மௌனமாக இருந்து விட்டு, "செல்வி! நீ  பெருமாளைக் காதலிக்கிறது எனக்குத் தெரியும். உங்கப்பா கிட்ட சொல்லி சம்மதம் வாங்கறேன். அதுவரைக்கும் அவனோட அதிகமாப் பழகாதேன்னு உங்கிட்ட சொல்லி இருக்கேனா இல்லையா?" என்றாள் அலர்மேல் வள்ளி.

"ஆமாம்மா! நீ சொன்னபடிதானே நடந்துக்கிறேன்!"

"பொய் சொல்லாதேடி! நீ பெருமாளோட குளத்தங்கரையில உட்கார்ந்து பேசினதைப் பெரியநாயகம் பாத்திருக்கா. 'என்ன மங்கை, உன் பொண்ணு பெருமாளோட சுத்திக்கிட்டிருக்காளே!'ன்னு அவ எங்கிட்ட வந்து சொல்றா."

"ஏம்மா, பெருமாளைப் பாக்கப் போறேன்னு  உங்கிட்ட சொல்லிட்டுத்தானே போனேன்?" என்றாள் செல்வி சற்றே கோபத்துடன்.

"ஒரு நாளைக்கு எங்கிட்ட சொல்லிட்டுப் போன. சரி. அப்புறம் ஒருநாள் உங்களைக் கோவில்ல பார்த்ததா கோமளம் வந்து சொன்னாளே, அது?"

"அப்புறம்?"

"இன்னொரு நாள் நீங்க ஆத்தங்கரை ஓரமா நடந்து போனதைப் பார்த்ததா பர்வதம் வந்து சொன்னா!"

"இன்னும் யார் என்ன சொன்னாங்க? எல்லாத்தையும் சொல்லிடு!" என்றாள் செல்வி. இப்போது அவள் முகத்தில் கோபம் மறைந்து ஒருவித குறும்பு குடிகொண்டிருந்தது.

"ஏண்டி, நான் என்ன கதையா சொல்லிக்கிட்டிருக்கேன், ஒவ்வொருத்தர் சொன்னதையும் விவரிச்சுச் சொல்ல? ரெண்டு மூணு நாள் நீ பெருமாளோட சுத்தறதை மத்தவங்க பாத்திருக்காங்கன்னு சொல்றேன். அது போதாதா? அதுக்கு என்ன சொல்ற?" என்றாள் அலர்மேல்மங்கை, கோபத்துடன்.

செல்வி பெரிதாகச் சிரித்தாள்.

"என்னடி சிரிக்கிற? சிரிக்கிற விஷயமா இது?"

"அம்மா, அம்மா! நான் பெருமாளை வெளியில சந்திச்சது ஒருநாள்தான். கோவிலுக்குப் போனோம். கொஞ்ச நேரம் குளத்தங்கரையில உட்கார்ந்திருந்தோம். அப்புறம் கொஞ்ச நேரம் ஆத்தங்கரை ஓரமா நடந்தோம். வேற எங்கேயாவது மரத்தடியில கூட உட்கார்ந்திருக்கலாம். இந்த ஒரு நாள் சந்திப்பை ஏதோ பல நாள் நடந்த மாதிரி இந்த ஊர்க்காரங்க பேசறாங்கன்னா, நீயும் அதைக் கேட்டுட்டு என்னைக் கண்டிக்க வரியே! உன் பேச்சை மீறி நான் எப்பவுமே நடந்துக்க மாட்டேம்மா!" என்று சொல்லித் தாயின் முகத்தைத் தன் கைகளால் அன்புடன் அழுத்தினாள் செல்வி.

உடனே முற்றத்துக்கு ஓடி நிலவைப் பார்த்தவள், "அம்மா, இங்கே பாரேன்! இந்தப் பாம்பு நிலாவை முக்கால்வாசி முழுங்கிடுச்சு!" என்று கூவினாள் உற்சாகமாக.

குறள் 1146
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.

பொருள்:
காதலரைக் கண்டது ஒருநாள்தான், அதனால் உண்டாகிய அலரோ (ஊர்ப்பேச்சோ), திங்களைப் பாம்பு கொண்டது போல் எங்கும் பரந்து விட்டது.

1147. அமுதாவின் கண்டிப்பு 

"இப்பல்லாம் நம்ம பொண்ணு அதிகமா வெளியில போற மாதிரி இருக்கே!" என்றான் செல்வம்.

"போனா என்ன? வீட்டிலேயே அடைஞ்சு கிடக்கணுமா என்ன?" என்றாள் அவன் மனைவி அமுதா.

"நீதானே வசந்தி வெளியே போய்ட்டு வந்தப்பல்லாம் அவளைக் கண்டிச்சுக்கிட்டு இருந்த? அதனாலதான் கேட்டேன்."

"அவ யாராவது பையனைப் பாக்கப் போகக் கூடாதுன்னுதான் முன்னெச்சரிக்கையா கண்டிச்சு வச்சேன், ஏன்னா இந்த வயசுல பெண்களுக்கு இந்தக் காதல் ஏற்படறது இயற்கைதானே?" என்றாள் அமுதா.

"உன் சொந்த அனுபவத்திலதானே பேசற?" என்றான் செல்வம் கேலியாக.

"ஆமாங்க! சொந்த அனுபவம்தான். அதனாலதானே எனக்கு நீங்க கிடைச்சீங்க! வசந்தி காதல் கீதல்னெல்லாம் அலையக் கூடாதுன்னுதான், அவ வேற எதுக்காவது வெளியில போனா கூட, அவ யாரையோ பாக்கப் போறதா சந்தேகப்படற மாதிரி அவகிட்ட கடுமையாப் பேசினேன்."

"அப்ப, இப்ப மட்டும் எப்படி அனுமதிக்கிற?"

"நான் கடுமையாப் பேசி அவகிட்ட ஒரு பயத்தை ஏற்படுத்திட்டேன் இல்ல? அதனால அவ இனிமே ஒழுங்கா இருப்பா. இப்ப அவ போறதெல்லாம் அவ தோழியோடு சேந்து படிக்கத்தான்!" என்றாள் அமுதா.

"எப்படி அவ்வளவு நிச்சயமா சொல்ற?" என்று செல்வம் கூறிக் கொண்டிருந்தபோதே, வாசலில் பக்கத்து வீட்டு அஞ்சுகம் வந்து நின்றாள்.

"அமுதா! உங்கிட்ட கொஞ்சம் தனியாப் பேசணும்" என்றாள் அஞ்சுகம்.

அமுதா அஞ்சுகத்தை அழைத்துக் கொண்டு உள்ளறைக்குச் சென்று சில நிமிடங்கள் பேசி விட்டு வந்தாள்.

அஞ்சுகம் சென்றதும், "என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரியா இருக்க? அஞ்சுகம் என்ன சொன்னாங்க?" என்றான் செல்வம்.

"வசந்தி என்னை நல்லா ஏமாத்தி இருக்கா. அவ தோழியோட சேந்து படிக்கப் போகல. காதலனை சந்திக்கத்தான் போயிக்கிட்டிருக்கா. அவளை ஒரு பையனோட அடிக்கடி பாக்கிறதா ஊர்ல சில பேரு பேசறாங்களாம். அது அஞ்சுகம் காதில விழுந்திருக்கு. அதான் வந்து சொல்லிட்டுப் போறா!" என்றாள் அமுதா, பதட்டத்துடன்.

"முதல்ல நீ கண்டிச்ச. இப்ப ஊர்ல வேற பேச ஆரம்பிச்சுட்டாங்க. இனிமே அவங்க காதல் நல்லாவே வளரும்!" என்றான் செல்வம்.

"என்னங்க இது பொறுப்பு இல்லாம பேசறீங்க?" என்றாள் அமுதா, கோபத்துடன்.

"இது மாதிரி பெற்றோர் கண்டிக்கிறது, ஊர்க்காரங்க பேசறது இதெல்லாம் காதல் பயிருக்கு  நீர் பாய்ச்சி உரம் போடற மாதிரிதான். நீ சின்ன வயசில உன்னோட வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்த மாதிரி உன் பொண்ணும் செய்யறா. இதில பதட்டப்படறதுக்கு என்ன இருக்கு? யார் என்னன்னு விசாரிச்சு நல்ல பையனா இருந்தா கட்டிக் கொடுத்துட வேண்டியதுதான்!" என்றான் செல்வம் சிரித்தபடி.

குறள் 1147
ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.

பொருள்:
இந்தக் காம நோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது. 

1148. யமுனாவின் மனமாற்றம்!

"வேணும்னே என் காதுபடப் பேசறாங்கடி!" என்றாள் யமுனா

"என்ன பேசறாங்க? யார் பேசறாங்க?" என்றள் அவள் தோழி நீலா.

"நானும் பாஸ்கரும் ரகசியமா காதலிக்கிறோமாம்!"

"அது உண்மையா, இல்லையா?"

"உண்மையா இல்லையாங்கறது கேள்வி இல்லை, என்னைப் பத்தி மத்தவங்க ஏன் வம்பு பேசணும்?"

"ஒரு ரகசியம் சொல்லட்டுமா? உன் ஆளு பாஸ்கர் மேல நம்ம காலேஜில நிறைய பேருக்கு ஒரு கண்ணு. எனக்குத் தெரிஞ்சே நாலைஞ்சு பேரு அவன்கிட்ட நேரடியாவே தங்களோட விருப்பத்தைச் சொல்லி இருக்கங்க. ஆனா உன் ஆளு அசைஞ்சு கொடுக்கல. ஆனா உங்கிட்ட மட்டும் நல்லா சிரிச்சுப் பேசறான். பாஸ்கரை வளைக்கப் பாத்து தோத்துப் போனவங்கதான் உன் மேல பொறமைப்பட்டு இப்படிப் பேசறாங்க!" என்றாள் நீலா.

"சரி. அப்படியே இருந்தாலும் ஏன் வேணும்னே என் காதுபடப் பேசறங்க? அதோட நான் அவனோட சினிமாவுக்குப் போறேன், பீச்சுக்குப் போறேன்னெல்லாம் பொய்யான விஷயங்களை ஏன் பேசறாங்க?"

"வம்பு பேசறவங்க பொதுவாகவே கொஞ்சம் மிகைப்படுத்தித்தான் பேசுவாங்க. அதைத் தவிர, இப்படியெல்லாம் பேசினா, நீ காயப்பட்டு பாஸ்கரோடபழகறதை விட்டுடுவன்னு எதிர்பாக்கறாங்களோ என்னவோ?" என்றாள் நீலா.

"பாஸ்கர்! நீயும் நானும் கல்லூரிக்குள்ள பொதுவான இடத்தில நின்னு எப்பவாவது ஒண்ணு ரெண்டு நிமிஷம் பேசி இருக்கோமே தவிர, எங்கேயாவது ஊர் சுத்தறமா என்ன?" என்றாள் யமுனா.

"இல்லைதான். இனிமே சுத்தலாங்கறியா? நான்தான் கூப்பிட்டுக்கிட்டே இருக்கேனே, நீதானே வர மாட்டேங்கற?" என்றான் பாஸ்கர் சிரித்தபடியே

"யாராவது பார்த்தா ஏதாவது தப்பாப் பேசுவாங்களேன்னு பயந்துகிட்டே இருந்தேன். ஆனா இப்பவே அப்படித்தானே பேசறாங்க? இனிமே நான் எதுக்கு பயப்படணும்? நம்ம ரெண்டு பேர் வீட்டிலேயுமே நம்ம காதலுக்குத் தடை சொல்லப் போறதில்ல. மத்தவங்க பேசறாங்கன்னு நாம ஏன் பயப்படணும்?"

"ஏன் பயப்படணும்?" என்றபடியே அவள் தோளைத் தொடப் போவது போல் கையை உயர்த்தினான் பாஸ்கர்.

"உஸ்! இதெல்லாம் இங்கே இல்ல. பார்க்லேயோ, பீச்லேயோ வச்சுக்க!" என்றாள் யமுனா சிரித்தபடி. 

குறள் 1148
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல்.

பொருள்:
இந்த ஊரார் தங்கள் அலரால் எங்கள் காதலை அழித்து விடுவோம் என்று எண்ணுவது, நெய்யை ஊற்றியே நெருப்பை அணைப்போம் என்பது போலாம்.

1149. என்னுயிர்த் தோழி, கேளொரு சேதி!

நீங்களும் நானும் தனியே சந்திப்பது பற்றி இந்த ஊரார் பேசும் பேச்சை என்னால் காது கொடுத்துக் கேட்க முடியவில்லை!" என்றாள் காந்தா.

"அப்படி என்ன பேசுகிறார்கள்?" என்றான் இளமாறன்.

"காதலர்களைப் பற்றி ஊரார் பேசுவது இயல்புதான். ஆனால் நாம் இருவரும் களவு மணம் செய்து கொண்டு விட்டதாகச் சிலர் பேசுவதுதான் எனக்குச் சங்கடத்தை ற்படுத்தகிறது!"

"அவர்கள் பேசுவதை உண்மையாக்கி விடலாமா?" என்றான் இளமாறன் குறும்பாக.

"பேச்சைப் பார்! நம் இருவரின் பெற்றோரின் சம்மதத்துடன் நம் திருமணம் நடக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் உங்களுடன் பழக ஆரம்பித்தேன்?" என்றாள் காந்தா இலேசான கோபத்துடன்.

"கவலைப்படாதே! விரைவிலேயே என் பெற்றோருடன் வந்து உன் பெற்றோரைப் பார்த்துப் பேசி, நம் திருமணத்துக்குச் சம்மதம் வாங்குகிறேன்!" என்றான் இளமாறன்.

"இளமாறனைப் பற்றி ஒரு செய்தி" என்றாள் சுவர்ணமுகி தயக்கத்துடன்.

"சொல்!" என்றாள், சில நாட்களாக இளமாறன் தன்னைச் சந்திக்கவில்லையே என்ற பதடத்துடன் இருந்த காந்தா.

"மனதைத் தேற்றிக் கொள். அவர் இந்த ஊரை விட்டே போய்விட்டாராம்."

"திரும்பி வரலாம் இல்லையா?" என்றாள் காந்தா, நம்பிக்கை இழக்காமல்.

"அவர் ஊரை விட்டுப் போனதே வேறொரு ஊரில் உள்ள ஒரு செல்வந்தரின் மகளைத் திருமணம் செய்து கொண்டு அந்த ஊரிலேயே வாழும் நோக்கத்துடன்தான்!"

காந்தாவுக்கு ஒரு நிமிடம் பேச்சு வரவில்லை. தொண்டையில் ஏதோ அடைப்பது போல் இருந்தது.

"இப்படி ஒருவன் செய்வானா என்று ஊரில் பலரும் அவரை ஏசுகிறார்கள் என்றாள் சுவர்ணமுகி, தோழிக்கு ஆறுதலாக இருக்குமே என்ற நோக்கத்தில்.

"இப்படி ஏமாற்றுவார் என்று எதிர்பார்க்கவில்லை!" என்றாள் காந்தா, கம்மிய குரலில்.

"நீ சில நாட் களுக்கு வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருப்பது நல்லது" என்றாள் சுவர்ணமுகி தயக்கத்துடன்.

"ஏன்?" என்றாள் காந்தா, கோபமாகக் கேட்பது போல்.. இப்போது அவள் குரலில் ஒரு தெளிவும், உறுதியும் இருந்தன.

"இல்லை, இப்போது ஊராருக்கு உன் மேல் பரிதாபம் இருக்கிறது. ஆனால் சில நாட்களில் அது மறைந்து விடும். அதற்குப் பிறகு நீ இளமாறனுடன் பழகியதைக் குறை கூறிப் பேச ஆரம்பித்து விடுவார்கள். அதையெல்லாம் கேட்க உனக்குச் சங்கடமாக இருக்கும்."

காந்தா பெரிதாகச் சிரித்தாள்.

"என்னடி சிரிக்கிறாய்?" என்றாள் சுவர்ணமுகி கவலையுடன். ஒருவேளை தன் தோழிக்கு அதிர்ச்சியில் சித்தம் கலங்கி இருக்குமோ என்ற ஐயம் அவளுக்கு ஏற்பட்டது.

"முன்பு ஊரார் எங்களைப் பற்றிப் பேசுகிறார்கள் என்று நான் கவலைப்பட்டபோது, எனக்கு உறுதியளித்து ஆறுதல் கூறியவர் இப்போது என்னைக் கைவிட்டு விட்டு இன்னொருத்தியைக் கைப்பிடிக்கப் போய்விட்டார். இப்போது ஊரார் பேசுவது பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்?" என்றாள் காந்தா ஆத்திரம் பொங்கும் குரலில்.

தோழியின் உணர்ச்சிகள் ஒரு நிலைக்கு வரச் சற்று காலம் பிடிக்கும் என்று சுவர்ணமுகிக்குத் தோன்றியது.

குறள் 1149
அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை.

பொருள்:
அஞ்ச வேண்டா என்று அன்று உறுதி கூறியவர், இன்று பலரும் நாணும்படியாக என்னை விட்டுப் பிரிந்தபின் அதைப் பற்றிய அலருக்கு (பிறர் பேசும் பேச்சுக்களுக்கு) நான் ஏன் நாண வேண்டும்?

1150. இது நடந்தால் அது நடக்கும்!

"குமரனோட நான் பழக ஆரம்பிச்சு ரெண்டு மாசம் ஆகுது. ஊர்ல இதைப் பத்தி என்ன பேசிக்கறாங்க?" என்றாள் குழலி.

"ஏண்டி, நீ என்ன செய்யறேன்னு பார்த்து அதைப் பத்திப் பேசறதுதான் ஊருக்கு வேலையா?" என்றாள் அவள் தோழி சிந்து.

"அப்படின்னா, யாரும் எதுவும் பேசிக்கலையா?" என்றாள் குழலி.

"என் காதில எதுவும் விழலை!" என்ற சிந்து, "நீ கேக்கறதைப் பார்த்தா இப்படிப் பேசிக்காதது உனக்கு ஏமாற்றமா இருக்கற மாதிரி இருக்கே!" என்றாள் தொடர்ந்து.

குழலி பதில் சொல்லவில்லை.

சில நாட்களுக்குப் பிறகு சிந்து குழலியிடம், "உன் காதலைப் பத்தி ஊர்ல என்ன பேசிக்கறாங்கன்னு நீ எந்த வேளையில கேட்டியோ தெரியலை, நீ கேட்ட அடுத்த நாளிலேந்தே ஊர்ல நிறைய பேரு உன் காதலைப் பத்திப் பேச ஆரம்பிச்சுட்டாங்க!" என்றாள்.

"அப்படியா?" என்றாள் குழலி ஆர்வத்துடன்.

"ஐயையோன்னு பதட்டப்படுவேன்னு பாத்தா அப்படியான்னு மகிழ்ச்சியோட கேக்கற!" என்றாள் சிந்து வியப்புடன்.

"அப்படி ஒண்ணும் இல்லை" என்றாள் குழலி சங்கடத்துடன்.

தங்கள் காதலைப் பற்றி ஊரார் பேச வேண்டும் என்ற தன் விருப்பம் நிறைவேறினால், தன் காதலர் தன்னைக் கைப்பிடிக்க வேண்டும் என்ற தன் விருப்பமும் நிறைவேறும் என்று தன் மனதில் தான் போட்டு வைத்திருந்த கணக்கைத் தோழியிடம் சொன்னால், அவள் அதைக் குருட்டுக் கணக்கு என்று கேலி செய்வாளோ என்ற அச்சத்தில் தன் மனக்கணக்கை சிந்துவிடம் குழலி பகிர்ந்து கொள்ளவில்லை.

குறள் 1150
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் வூர்.

பொருள்:
நான் விரும்பிய அவரைப் பற்றித்தான் இவ்வூர் பேசுகிறது. இனி என் காதலரும் நான் விரும்பியபோது என்னைத் திருமணம் செய்வார்.

அறத்துப்பால்                                                                     பொருட்பால்   

No comments:

Post a Comment

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...