திருக்குறள்
காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 122
கனவுநிலை உரைத்தல்
1211. நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது!
கடல் தாண்டிச் சென்று வணிகம் செய்து, பெரும் பொருள் ஈட்டி வருவதாகச் சொல்லி, நீலாவின் கணவன் கதிரவன் அவளைப் பிரிந்து சென்று பல மாதங்கள் கடந்து விட்டன.கதிரவன் எங்கே இருக்கிறான், எந்த நிலையில் இருக்கிறான், எப்போது திரும்பி வருவான் என்பவற்றை அறிய முடியாமல், பெரும் துயரத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாள் நீலா.
முறையான உணவு, சரியான உறக்கம் இவற்றை நீலா அனுபவித்து நீண்ட காலம் ஆகி விட்டது.
கடலில் ஒரு கப்பல் விரைவாக வந்து கொண்டிருக்கிறது. அந்தக் கப்பலின் உச்சியில் கதிரவன் நின்று கொண்டு, கையை உயர்த்தி ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறான்.
'அட, அவன் என்னைப் பார்த்துத்தான் பேசுகிறான்!'
என்ன பேசுகிறான் என்று உன்னிப்பாக கவனித்தாள் நீலா.
'நான் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறேன். இன்னும் இரண்டு நாட்களில் உன்னிடம் வந்து சேர்ந்து விடுவேன்' என்று அவன் உரக்கக் கூவியது அலைகளின் இரைச்சல்களுக்கிடையே நீலாவின் காதில் கேட்டது.
சட்டென்று கண் விழித்தாள் நீலா.
இது கனவா?
வெளியில் அதிகாலை வெளிச்சம் தோன்றுவதற்கான அறிகுறிகள் தெரிந்தன.
விடியற்காலையில் கண்ட கனவு பலிக்கும் என்று சொல்வார்களே!
அப்படியானால், கதிரவன் இரண்டு நாட்களில் வந்து விடுவானா? என் பிரிவுத் துயர் இரண்டு நாட்களில் முடிவுக்கு வந்து விடுமா?
கணவனின் தூதாக அவனிடமிருந்து இந்த நற்செய்தியைத் தாங்கி வந்த இந்தக் கனவுக்கு நான் விருந்து வைக்க வேண்டாமா?
விருந்தாக எத்தகைய அமுதைப் படைக்கலாம் என்று நினைத்தபடி அடுப்படியை நோக்கி விரைந்தாள் நீலா.
சரியான உணவில்லாமல் காய்ந்து கொண்டிருந்த அவள் வயிறு தனக்கு உணவு கிடைக்கப் போகிறது என்ற மகிழ்ச்சியில் ஒருமுறை சுருங்கி விரிந்தது.
பொருள்:
(யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு உரிய விருந்தாக என்ன செய்து உதவுவேன்?
1212. கண்களே உறங்குங்கள்,
நான் கனவு காண வேண்டும்!
ஊர்வம்பு பேசுவதையே தொழிலாகக் கொண்டிருக்கும் இந்தக் கிழவிக்கு என்னைச் சீண்டிப் பார்க்காவிட்டால் தூக்கம் வராது போலிருக்கிறது. தினமுமா இதே கேள்வியைக் கேட்பாள்?
"அவர் வந்ததும், முதல்ல உங்ககிட்ட வந்து சொல்றேன், பாட்டி!" என்றபடியே அங்கிருந்து நகர்ந்தாள் மல்லிகா.
அவள் சிந்தனை ராக்காயின் கேள்வியைத் தொடர்ந்து ஓடியது.
'அவர் எங்கே இருக்கார்னும் தெரியாது, எப்ப வருவார்னும் தெரியாது!'
திடீரென்று மல்லிகாவுக்கு ஒரு எண்ணம் தோன்றியது:
'ஒருவேளை, அவர் வராமலே போயிட்டா?
'சேச்சே! அது எப்படி வராமப் போவாரு? நான் அவருக்காகக் காத்திருக்கறது அவருக்குத் தெரியாதா?
'ஒருவேளை, அவர் பிரிவைத் தாங்காம நான் உயிரை விட்டிருப்பேன்னு நினைச்சிருந்தா? அப்படி நினைச்சு, வராமலே இருந்துட்டா?'
இந்த எண்ணம் மல்லிகாவுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தியது.
'நான் கல்நெஞ்சுக்காரி. அதனால, உங்க பிரிவைத் தாங்கிக்கிட்டு, இன்னும் உயிரோடதான் இருக்கேன். நீங்க எவ்வளவு காலம் கழிச்சுத் திரும்பி வந்தாலும், இந்த உயிரைப் பிடிச்சுக்கிட்டு உங்களுக்காகக் காத்துக்கிட்டிருப்பேன்!'
இந்தச் செய்தியை அவருக்கு எப்படித் தெரிவிப்பது? அவர் எந்த ஊரில் இருக்கிறார் என்று தெரிந்தால், அந்த ஊருக்குச் செல்லும் யாரிடமாவது சொல்லி அனுப்பலாம்! ஆனால், அவர் எந்த ஊரில் இருக்கிறார் என்றே தெரியவில்லையே!
இரவு வந்து விட்டது. வழக்கம் போல் உறக்கம் வரவில்லை.
'கண்களே! இன்று ஒரு நாளாவது உறங்குங்களேன்! அப்படி உறங்கினால், அந்த உறக்கத்தில் கனவு வரும். கனவு வந்தால், அதில் என் கணவர் வருவார். அவரிடம் நான் உயிருடன் இருக்கும் செய்தியைச் சொல்லுவேன். எனவே, கண்களே, என்னிடம் இரக்கம் காட்டிக் கொஞ்சம் உறக்கம் கொடுங்கள்!'
படுக்கையில் படுத்துக் கொண்டு, உறங்கும் முயற்சியில் கண்களை மூடிக் கொண்டாள் மல்லிகா.
பொருள்:
நான் வேண்டுவதற்கு இணங்கி, என் மை எழுதிய கயல் விழிகள் உறங்கிடுமானால், அப்போது என் கனவில் வரும் காதலர்க்கு நான் இன்னமும் உயிரோடு இருப்பதைச் சொல்லுவேன்.
1213. கனவில் வருபவன்
"என்னைக் காதலிக்கறதா சொன்னாரு. கல்யணம் பண்ணிப்பேன்னு கையில அடிச்சு சத்தியம் பண்ணினாரு. ஆனா, இப்ப ஆறு மாசமா அவரைக் கண்ணிலேயே காணல!" என்றாள் கார்த்திகா."எங்கே போயிட்டாரு? விசாரிச்சுப் பாத்தியா?" என்றாள் அவள் தோழி ராகினி.
"அவங்க வீட்டிலேயே கேட்டுட்டேன். அவங்களுக்கு எங்க காதலைப் பத்தித் தெரியுமே! நண்பர்களோட ஏதோ வெளிநாட்டுக்குப் போயிருக்காராம். எப்ப வருவார்னு அவங்களுக்கே தெரியாதுன்னு சொல்றாங்க!"
"எதுக்கு வெளிநாட்டுப் பயணம்?"
"அவர் அப்பா நிறையப் பணம் சம்பாதிச்சு வச்சிருக்காரு. அதை வச்சுக்கிட்டுக் கொஞ்ச நாள் எங்கேயாவது உல்லாசமாப் போகலாம்னு போயிருப்பார் போல இருக்கு!"
"சரி. அவர் வரப்ப வரட்டும். அதுக்காக நீ சாப்பிடாம, தூங்காம இருந்து உடம்பைக் கெடுத்துக்காதே!" என்றாள் ராகினி.
"சாப்பாடு பிடிக்காதததால, ஒழுங்கா சாப்பிடறது இல்லதான். ஆனா, தூங்காம இருக்க மாட்டேன்!" என்றாள் கார்த்திகா.
"ஆமாம். முழிச்சுக்கிட்டு இருக்கறப்ப எல்லாம் அவரையே நினைச்சுக்கிட்டிருக்கே. தூங்கும்போதாவது எல்லாத்தையும் மறந்துட்டு நிம்மதியா இருக்கலாம்."
"நான் தூங்கறது மறக்கறதுக்காக இல்லடி, நினைக்கறதுக்காக!" என்றாள் கார்த்திகா.
"என்னடி சொல்ற?" என்றாள் ராகினி.
"முழிச்சுக்கிட்டிருக்கறப்ப, அவர் நேரில வரலியே, என் மேலே அன்பு காட்டலியேன்னு வருத்தமாவும், ஏக்கமாவும் இருக்கும். ஆனா, தூங்கினா கனவு வரும். அந்தக் கனவில அவர் வருவாரு. எங்கிட்ட அன்பாப் பேசுவாரு. அதில கிடைக்கிற சந்தோஷத்தினாலதான் நான் உயிரோடயே இருக்கேன்!" என்றாள் கார்த்திகா.
பொருள்:
நனவில் வந்து அன்பு காட்டாதவரைக் கனவிலாவது காண்பதால்தான் இன்னும் என்னுயிர் நிலைத்திருக்கிறது.
1214. கன்னத்தில் விழுந்த அறை!
மீராவைத் தூக்கத்திலிருந்து எழுப்ப முயன்றாள் அவள் அம்மா காமாட்சி.எவ்வளவோ கூப்பிட்டும் மீரா எழுந்திருக்காததால், அவளைப் பிடித்து உலுக்கினாள் காமாட்சி.
கண் விழித்து எழுந்த மீரா, எதிர்பாராத விதமாகக் காமாட்சியின் கன்னத்தில் அறைந்து விட்டாள்.
அதிர்ச்சியடைந்த காமாட்சி, கன்னத்தைப் பிடித்துக் கொண்டு, "என்னடி இது? நான் உன் அம்மா. இப்படியா என்னை அடிப்பே?" என்றாள் சற்றுக் கோபத்துடன்.
அப்போதுதான் கண்களைக் கசக்கிக் கொண்டு இயல்பு நிலைக்கு வந்த மீரா, தான் அறைந்த அம்மாவின் கன்னத்தை வருடி, "மன்னிச்சுக்கம்மா! நல்லா தூங்கிக்கிட்டு இருக்கறப்ப என்னை உலுக்கி எழுப்பினதால, என்னை அறியாம கோபம் வந்து அடிச்சுட்டேன்!" என்றாள்.
"நல்லா அடிப்பேடி!" என்ற காமாட்சி, "உன் புருஷன் உங்கிட்ட கோவிச்சுக்கிட்டு உன்னை வீட்டை விட்டு அனுப்பினதிலேந்து நீ இப்படித்தான் இருக்கே. அவன் எப்ப கோபம் தணிஞ்சு உன்னை அழைச்சுக்கிட்டுப் போகப் போறானோ!" என்றாள், பெருமூச்சுடன்.
'நேரில எங்கிட்ட அன்பு செலுத்தாத மனுஷன், இன்னிக்குக் கனவில வந்து எங்கிட்ட அன்பு காட்டினாரு. என்னைத் தூக்கத்திலேந்து எழுப்பி, அந்த சுகமான கனவைப் பாதியில கலைச்சுட்டியே! அந்த ஆத்திரத்திலதானே என்னை அறியாமலேயே உன்னை அறைஞ்சுட்டேன்!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் மீரா.
பொருள்:
நேரில் என்னிடம் வந்து அன்பு காட்டாத காதலரைத் தேடிக் கொண்டு வந்து காட்டுகிற கனவால் எனக்குக் காதல் இன்பம் கிடைக்கிறது.
1215. மகள் புரிந்து கொண்ட தத்துவம்!
முதலில் சற்றுத் தயங்கினாலும், பிறகு தாயுடன் சென்றாள் கிரிஜா.
சொற்பொழிவு முடிந்து வீட்டுக்கு வந்ததும், "ஆன்மீகச் சொற்பொழிவுன்னா, ஏதாவது புராணக் கதை சொல்லுவாரு, சுவாரசியமா இருக்கும்னு நினைச்சுக்கிட்டுப் போனா, வெறும் தத்துவத்தைப் பேசி, அலுப்புத் தட்டும்படி பண்ணிட்டாரு. உன்னை வேற அழைச்சுகிட்டுப் போனேனே!" என்றாள் லட்சுமி, சோர்வுடன்.
"ஏம்மா, நல்லாத்தானே சொன்னாரு?" என்றாள் கிரிஜா.
"என்னடி சொல்ற? அவர் சொன்ன தத்துவமெல்லாம் உனக்குப் புடிச்சிருந்ததா?" என்றாள் லட்சுமி, வியப்புடன்.
"புடிச்சுது, புடிக்கலேன்னு இல்லை. அவர் சொன்னதில இருந்த உண்மை புரிஞ்சுது."
"என்ன உண்மையைப் புரிஞ்சுக்கிட்டே?" என்றாள் லட்சுமி, கேலியாக.
"நிலையாமையைப் பத்திப் பேசினாரும்மா. நிலையாமைன்னா என்ன? எது நடந்தாலும், அது அந்தத் தருணத்தில மட்டும்தான் இருக்கும், அப்புறம் அது இருக்காதுன்னுதானே அர்த்தம்?"
"ஆமாம். இதில நீ என்ன புதுசாப் புரிஞ்சுக்கிட்ட?"
"என் புருஷன் என்னோட இருந்தப்ப, நான் சந்தோஷமா இருந்தேன். இப்ப அவர் என்னைப் பிரிஞ்சு, எங்கேயோ தொலைதூத்தில இருக்காரு. இப்ப அவர் என்னோட இல்லாதப்ப, அந்த சந்தோஷம் இல்லை. அது மாதிரி..."
"அது மாதிரி?"
"என் கனவில அவர் வரப்ப, சந்தோஷம் இருக்கு. ஆனா, கனவு முடிஞ்சு, கண் முழிச்சப்பறம், அந்த சந்தோஷம் இல்ல. அதாவது, அவர் என்னோட இருந்தப்ப எனக்கு இருந்த சந்தோஷம் அந்த சமயத்தில மட்டுமே இருந்த மாதிரி, கனவில அவர் வரப்ப கிடைக்கற சந்தோஷமும் கனவு காணும்போது மட்டும்தான் இருக்கு! இதைத்தானே அம்மா, வாழ்க்கையில நடக்கறது எல்லாமே நீர்க்குமிழி மாதிரி, அந்தச் சமயத்தில மட்டும்தான் இருக்கும்னு அந்தச் சொற்பொழிவாளர் சொன்னாரு?"
மகள் இதைப் புரிந்து சொல்கிறாளா, அல்லது விரக்தியில் சொல்கிறாளா என்று புரிந்து கொள்ளும் முயற்சியில் கிரிஜாவின் முகத்தை உற்றுப் பார்த்தாள் லட்சுமி.
பொருள்:
முன்பு நனவில் கண்ட இன்பமும் அப்பொழுது மட்டும் இனிதாயிற்று; இப்பொழுது காணும் கனவும் கண்ட பொழுது மட்டுமே இன்பமாக உள்ளது.
1216. நனவு ஏன் வந்தது?
ருக்மிணி சமையலறையில் இருந்தபோது, அங்கே கண்ணைக் கசக்கிக் கொண்டு வந்தாள் வசந்தி."எங்கேம்மா அவரு?" என்றாள் வசந்தி.
"யாரு? உங்கப்பாவா? வெளியே போயிருக்காரு."
"நான் 'உன் அவரை'க் கேக்கலம்மா. 'என் அவரை'க் கேக்கறேன்."
"ஏண்டி, தூக்கத்திலேந்து முழிச்சுட்டியா, இல்லை தூக்கத்தில நடந்து வந்து கேக்கறியா? உன் புருஷன் வெளியூர் போய் மூணு மாசம் ஆச்சு. காலையில எழுந்து வந்து அவர் எங்கேன்னு கேக்கற?" என்றாள் ருக்மிணி, எரிச்சலுடன்.
"இப்ப இருந்தாரேம்மா! என்னோட இத்தனை நேரம் பேசினாரே அம்மா!"
"முதல்ல போய் முகத்தைக் கழுவிக்கிட்டு வாடி. தூக்கக் கலக்கம் கலையாம பேசற குழந்தை மாதிரி பேசிக்கிட்டு!"
கண்களைத் தேய்த்துக் கொண்ட வசந்தி, "கனவுதான் போல இருக்கு. ஆனா, நேரில நடக்கற மாதிரியே இருந்தது. எங்கிட்ட எவ்வளவு அன்பாப் பேசினாரு! இந்த நனவுங்கற ஒண்ணு இல்லாம இருந்தா, கனவிலேயே அவரோட ஆனந்தமாப் பேசிக்கிட்டிருப்பேன் இல்ல?" என்றாள். விரக்தியுடன்.
பொருள்:
நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருக்குமானால், கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பார்.
1217. அன்புள்ள மன்னவனே,
ஆசையில் ஓரு கடிதம்!
"வீட்டுக்குத் திரும்பணுங்கற சிந்தனையே இல்லாம, வெளியூரிலேயே உக்காந்திருக்கிற மனுஷனுக்கு நான் என்ன ஓலை அனுப்பறது?" என்றாள் பரிவாதினி, வெறுப்புடன்.
"அப்படின்னா, ஓலை அனுப்பப் போறதில்லையா?"
"இல்ல, இல்ல. ஒரு ஓலை எழுதிக் கொடுக்கறேன் நான் ஒருத்தி இங்கே இருக்கேன்னு அவருக்கு ஞாபகப்படுத்த வேண்டாமா?"
ஓலையையும், எழுத்தாணியையும் எடுத்துக் கொண்டு உட்கார்ந்து என்ன எழுதுவதென்று யோசித்தாள் பரிவாதினி.
இரண்டு மூன்று முறை எழுதி, அடித்து ஓலைகள் கிழிந்ததுதான் மிச்சம். என்ன எழுதுவதென்றே தெரியவில்லை.
அலுப்பில் கண் அயர்ந்து, தூக்கம் வருவது போல் இருந்தது.
தூக்கம்!
ஓலையில் என்ன எழுதுவதென்று பரிவாதினிக்குத் தெரிந்து விட்டது!
உடனே, புதிதாக ஒரு ஓலையை எடுத்து, விறுவிறுவென்று எழுத ஆரம்பித்தாள்:
அன்புள்ளவரே!
எனக்கு தினமும் கனவு வருகிறது, கனவில் நீங்கள் வருகிறீர்கள். என் மீது அன்பு செலுத்துகிறீர்கள். ஆனால், ஒவ்வொரு முறையும் கனவு முடிந்ததும், 'இது கனவுதானா, அவர் உண்மையிலேயே வரவில்லையா?' என்ற உணர்வு எனக்கு அளிக்கும் ஏமாற்றத்தையும், மனவருத்தத்தையும் என்னால் வார்த்தைகளில் விவரிக்க முடியாது. எனவே, நான் உங்களுக்கு வைக்கும் வேண்டுகோள் ஒன்றுதான். தயவு செய்து என் கனவில் வந்து என்னை வருத்தாதீர்கள். அடுத்த முறை நான் உங்களைச் சந்திப்பது நனவில் நிகழ்வதாக இருக்கட்டும்.
தாங்கள் தினமும் கனவில் வருவதால் வருந்தும்,
பரிவாதினி
பொருள்:
நேரில் வந்து அன்பு செய்யாத இந்தக் கொடிய மனிதர், கனவில் மட்டும் நாளும் வந்து என்னை வருத்துவது ஏன்?
1218. காணாமல் போய்க் கிடைத்தவன்!
சாந்தினி கட்டிலில் படுத்துக் கொண்டு மேலே பார்த்துக் கொண்டிருந்தாள். நீண்ட நேரம் அவளுக்கு உறக்கம் வரவில்லை.எப்போது உறங்கினாள் என்று அவளுக்குத் தெரியாது.
திடீரென்று ஒரு காட்சி தோன்றியது.
மேகவர்ணன் மேலே எங்கிருந்தோ இறங்கி வருகிறான். சாந்தினியின் அருகில் வருகிறான். அவள் தோள்களைப் பற்றுகிறான். பிறகு அவள் தோள்களின் மேல் சாய்ந்து கொள்கிறான்.
பிறகு...
சாந்தினிக்கு எங்கோ பறந்து செல்வது போன்ற உணர்வு ஏற்பட்டது.
அந்த உணர்வு எவ்வளவு நேரம் நீடித்ததென்று தெரியவில்லை, திடீரென்று தன் தோள்களை அழுத்திய சுமை இறங்கி விட்டாற்போல் இருந்தது.
எங்கே மேகவர்ணன்?
அவள் கண்களுக்குப் புலப்படவில்லை.
எங்காவது ஒளிந்து கொண்டிருப்பானோ என்று அவள் யோசித்தபோதே, அவள் கண்கள் திறந்து கொண்டன.
விருட்டென்று படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொண்டாள் சாந்தினி.
இத்தனை நேரம் தன் தோள் மீது சாய்ந்து கொண்டிருந்த காதலன் எங்கே?
சுற்றுமுற்றும் பார்த்த சாந்தினி, திடீரென்று நினைவு வந்தவளாகத் தன் நெஞ்சில் கைவைத்துப் பார்த்தாள்.
உடனே அவள் முகம் மலர்ந்தது. மேகவர்ணன் எங்கேயும் போய் விடவில்லை. அவள் நெஞ்சுக்குள்தான் அமர்ந்திருக்கிறான்.
கூட வந்த குழந்தையைக் காணோமே என்று ஒரு கணம் பதைபதைத்த ஒரு தாய்க்கு, குழந்தை தனக்கு அருகிலேயே இருப்பதைக் கண்டதும் ஏற்படும் நிம்மதி சாந்தினிக்கு ஏற்பட்டது.
பொருள்:
தூக்கத்தில் கனவில் வந்து என் தோள் மீது சாய்ந்து இன்பம் தந்தவர், நான் கண் விழித்ததும், என் நெஞ்சில் தாவி அமர்ந்து கொண்டார்.
1219. எனக்கில்லை பிரிவுத் துயர்!
"இவங்கள்ளாம் என் தோழிகள். உன்னைப் பார்க்கணும்னு வந்திருக்காங்க!" என்றாள் புஷ்பவல்லி.
'என்னை எதற்குப் பார்க்கணும்?' என்பது போல் தோழியைப் பார்த்தாள் பரிமளா.
"அஞ்சாறு மாசமா நீ உன் கணவனைப் பிரிஞ்சிருந்தாலும், உன் பிரிவுத் துயரத்தை வெளிக்காட்டாம அமைதியா இருக்க. அதை இவங்ககிட்ட சொல்லி, 'நீங்க மட்டும் ஏன் இப்படித் துயரமா இருக்கீங்கன்னு?' கேட்டேன். அதான் உன்னைப் பாக்கணும்னு சொன்னாங்க. அழைச்சுக்கிட்டு வந்தேன்!" என்றாள் புஷ்பவல்லி.
பரிமளா மௌனமாக இருந்தாள்.
"உன் கணவனைப் பிரிஞ்ச வருத்தம் உனக்கு இல்லையா?" என்றாள் வந்திருந்தவர்களில் ஒருத்தி.
"பிரிஞ்சு இருக்கற வருத்தம் எல்லாருக்கும்தான் இருக்கும். எனக்கு மட்டும் எப்படி இல்லாம இருக்கும்?" என்றாள் பரிமளா.
"உன் பிரிவுத் துயரை நீ வெளியில காட்டிக்காம இருக்கறது பெரிய விஷயம்தான்!" என்றாள் மற்றொரு பெண்.
"பிரிவுத் துயர் இருக்குதான். ஆனா, அவரை அடிக்கடி சந்திக்கறதால அது அந்த அளவுக்கு என்னை அழுத்தறதில்ல!"
"அடிக்கடி சந்திக்கறியா? எப்படி?" என்றாள் மற்றொரு பெண், வியப்புடன்.
"தினமும் என் கனவில அவர் வராறே! வந்து, என்கிட்ட அன்பாப் பேசறாரே! அந்த மகிழ்ச்சியான அனுபவத்தாலதான், பிரிவுத் துயரோட அழுத்தத்தை என்னால தாங்கிக்க முடியுது!" என்ற பரிமளா, "ஆமாம், உங்களுக்குக் கனவு வரதில்லையா, அல்லது கனவில உங்க காதலர் வரதில்லையா?" என்றாள் அந்தப் பெண்களைப் பார்த்து.
பொருள்:
கனவில் காதலரைக் காணாதவர்கள்தான் அவர் நேரில் வந்து காணவில்லையே என்று நொந்து கொள்வர்.
புலம்பிக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தாள் செங்கமலம்.
"என்னம்மா ஆச்சு? என்ன பேசிக்கறாங்க?" என்றாள் கமலா.
"அது ஒண்ணுமில்லடி. உனக்கு அது தெரிய வேண்டாம்."
"எனக்குத் தெரிய வேண்டாம்னா, ஏன் எது காதுபடப் புலம்பிக்கிட்டே வந்தே? சொல்லும்மா!"
"புதுப் பொண்டாட்டியை விட்டுட்டு வெளியூர் போன புருஷன் இப்படியா மாசக்கணக்கா பொண்டாட்டியைப் பிரிஞ்சு இருப்பான், அவனுக்கு என்ன கல் மனசான்னு பேசிக்கறாங்க."
"அவ்வளவுதானே? நீ அவதூறாப் பேசறாங்கன்னதும், என்னவோ ஏதோன்னு நினைச்சேன்!"
"ஏன், இப்படிப் பேசறவங்க மேல உனக்குக் கோபம் வரலையா?"
"கோபம் வரலைம்மா. பரிதாபம்தான் வருது!"
"பரிதாபமா? எதுக்கு?"
"பின்னே? நான் என் புருஷனை தினம் கனவில பாத்துக்கிட்டு, அவரோட சந்தோஷமாப் பேசிக்கிட்டிருக்கேன். இது புரியாம, என்னைப் பிரிஞ்சு இருக்கார்னு இவங்க என் புருஷன் மேல குற்றம் சாட்டினா, இவங்க யாரும் தன்னோட புருஷனைப் பிரிஞ்சிருந்த காலத்தில, அவரை இவங்க கனவில பார்த்ததில்லேன்னுதானே அர்த்தம்? அந்தக் கொடுப்பினை கூட இல்லாதவங்களைப் பார்த்துப் பரிதாபப்படாம வேற என்ன செய்ய முடியும்?" என்றாள் கமலா.
பொருள்:
என் காதலர் என்னைப் பிரிந்திருப்பதாக அவரைக் குற்றம் சாட்டுகிறார்களே, இந்த ஊரார், பிரிந்து சென்ற தமது காதலனைக் கனவில் காண்பது கிடையாதோ?
No comments:
Post a Comment