Wednesday, July 22, 2020

1115. ஒடிவது போல் இடை இருக்கும்!


"ஆரவல்லி ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்?"

"ஒன்றுமில்லை!"

"என் மீது கோபமா? ஆஹா! கோபத்தில் உன் முகம் சிவந்திருப்பது எவ்வளவு அழகாக இருக்கிறது தெரியுமா?"

"போதும், போதும்! நன்றாக இருக்கிற என் முகத்துக்கு ஏதாவது ஆகி விடப் போகிறது!"

"ஏன் இப்படிச் சொல்கிறாய் ஆரவல்லி?"

"சில நாட்கள் முன்பு, என் கண்கள் தாமரைப்பூப் போல் என்று புகழ்ந்தீர்கள். மறுநாளே என் கண்ணில் தூசு விழுந்து இரண்டு நாட்கள் கண் எரிச்சலால் துன்பப்பட்டேன்!"

"அது தற்செயலாக நடந்தது. ஏன் நான் உன் அழகைப் புகழ்ந்தால் என் கண்ணேறு பட்டு உனக்கு ஏதாவது நிகழ்ந்து விடும் என்று நினைக்கிறாயா?"

"உங்கள் கண்ணேறு பட்டதால் என்று சொல்லவில்லை. ஆனால் பாதிப்பு ஏற்படுவது உண்மைதான்!"

"ஒருமுறை நிகழ்ந்ததை வைத்து இப்படிச் சொல்வது நியாயமற்றதல்லவா? அதுவும் இது சில நாட்களுக்கு முன் நடந்தது. அதை ஏன் இப்போது குறிப்பிடுகிறாய்?"

"திரும்பத் திரும்ப நிகழ்ந்தால் குறிப்பிடாமல் என்ன செய்வது?'

"திரும்பத் திரும்ப நிகழ்ந்ததா? வேறென்ன நிகழ்ந்தது?"

"இரண்டு நாட்கள் முன், என் இடை ஒடிந்து விழப் போகும் கொடி போல் என் உடலின் மைய பகுதியில் ஒரு புள்ளியில் ஒட்டிக் கொண்டிருப்பதாகச் சொன்னீர்கள்!"

"ஆமாம், அதற்கென்ன? உண்மைதானே அது? இதோ பார் எப்படி என் ஒரு உள்ளங்கைக்குள் அடங்குகிறது பார் உன் இடை"

"உஸ்! தொடாதீர்கள். ஏற்கெனவே வலியால் துடித்துக் கொண்டிருக்கிறேன்."

"வலியா? ஏன்? நான் நீவி விடட்டுமா?"

"ஐயே! தொட்டாலே வலிக்கும் என்று பயப்படுகிறேன். நீவி விடுகிறாராம்! ஆசையைப் பார்!"

"அதில்லை ஆரவல்லி. உன் வலி குறைய வேண்டும் என்பதற்காகத்தான் அப்படிச் சொன்னேன். என்ன ஆயிற்று உன் இடைக்கு? சுளுக்கா?"

"என்னவென்றே தெரியவில்லை. காலையில் குளித்து விட்டு அலங்காரம் செய்து கொண்ட சற்று நேரத்துக்கெல்லாம் திடீரென்று இடுப்பு வலிக்க ஆரம்பித்து விட்டது. என்னவென்றே தெரியவில்லை. என் அம்மா தைலம் கூடத் தடவி விட்டார்கள். ஆனாலும் வலி குறையவில்லை."

"வலியுடன் கூட இந்த வல்லபனைப் பார்க்க வந்திருக்கிறாயே, உன் காதலுக்குத் தலை வணங்குகிறேன்."

வல்லபன் அவளை ஏற இறங்கப் பார்த்தான்.

"ஏன் அப்படி என்னை உற்றுப் பார்க்கிறீர்கள்?"

"உன் தோற்றத்திலிருந்து உன் வலியின் காரணம் என்னவென்று கண்டு பிடிக்க முடியுமா என்று பார்க்கிறேன்."

"வலி என் இடையில். நீங்கள் பார்ப்பது என் தலையை. உங்கள் தலைக்குள் இருப்பது என்னவென்று எனக்குப் புரியவில்லை!"

"என் தலைக்குள் கொஞ்சம் விஷயம் இருப்பதால்தான், விஷயம் உன் தலையில் என்று புரிந்து கொள்ள முடிந்தது."

"என் தலையிலா?"

"ஆமாம்.தலையில் என்ன பூ சூட்டிக் கொண்டிருக்கிறாய்?"

"அனிச்சம் பூவைத்தான். எதற்குக் கேட்கிறீர்கள்? இருங்கள். ஏன் தலையிலிருந்து பூவை எடுக்கிறீர்கள்?"

வல்லபன் அவள் தலையிலிருந்து எடுத்த பூச்சரத்தில் காம்புகளைக் கிள்ளி எரிந்து விட்டுப் பூச்சரத்தை மீண்டும் அவள் தலையில் வைக்கப் போனான்.

"இருங்கள். எப்படி என்று தெரியவில்லை, ஆனால் நீங்கள் பூவை எடுத்ததும் இப்போது இடுப்பு வலி போய் விட்டது போல் இருக்கிறது. மறுபடி வைக்க வேண்டாம்."

"இப்போது ஒன்றும் ஆகாது. அதுதான் காம்புகளைக் கிள்ளி விட்டேனே!" என்று  சொல்லிப் பூவை மீண்டும் அவள் தலையில் சூட்டினான் வல்லபன். தொடர்ந்து, "அனிச்சம்பூவின் காம்புகளைக் கிள்ளாமல் உன் தலையில் சூட்டிக் கொண்டு விட்டாய். காம்புகளின் எடை தாங்காமல்தான் உன் இடை நொந்து விட்டது!" என்றான்.

"நீங்கள் சொல்வது நான் நம்பக் கூடியதாக இல்லை. ஆனாலும் இப்போது வலி போய் விட்டது என்பது உண்மைதான்!" என்றாள் ஆரவல்லி அவனைப் பார்த்துச் சிரித்து.

"இனிமேல் உன் இடையை நான் புகழப் போவதில்லை. அப்புறம் அதனால் ஏதாவது ஆகி விட்டது என்பாய்! உன் இடையின் மென்மையை என் கையால் உணர்வதோடு நிறுத்திக் கொள்கிறேன்" என்று சொல்லி அவள் இடையைத் தன் உள்ளங்கையால் பற்றினான் வல்லபன். 

ஆரவல்லி அவனைத் தடுக்கவில்லை.

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 112
நலம்புனைந்துரைத்தல்   

குறள் 1115
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை.

பொருள்:
இவள் தன் மென்மையை உணராமல், அனிச்சம்பூவைக் காம்பு களையாமல் சூடிக்கொண்டு விட்டதால் அதன் எடை தாங்காமல் இவள் இடை நொந்து விட்டது. அதனால் இவள் இடைக்கு இனி பறைகள் நல்லவிதமாக ஒலிக்க மாட்டா.


Friday, July 17, 2020

1114. கம்பரசம்!

"இந்த அழகிய நந்தவனத்தில் ஒரு அரசகுமாரனின் கையைப் பற்றியபடி பெருமையாக நடந்து கொண்டிருக்காமல், இந்த ஏழைப் புலவனுடன் நடந்து கொண்டிருக்கிறோமே என்று என்றைக்காவது வருத்தப்பட்டிருக்கிறாயா?"

"அரசகுமாரி அமராவதியே ஏழைப் புலவனான அமராவதியைத்தானே காதலித்தாள்?"

"நன்றாகப் பேசுகிறாய்! இரு..இரு.. அந்தப் பக்கம் போக வேண்டாம்."

"ஏன்? அங்கு பலமுறை  போயிருக்கிறோமே! நேற்று கூடப் போனோமே!"

"அங்கே குவளை மலர்கள் இருக்கின்றன."

"இருந்தால்?"

"நேற்று அங்கே போனபோது குவளை மலர்கள் கொஞ்சம் தலையைத் தாழ்த்திக் கொண்டு இருந்தது போல் தோன்றியது."

"மலர்கள் எப்படித் தலையைத் தாழ்த்திக் கொள்ளும்? செடிகள் காற்றில் ஆடியதாலோ, மலர்களின் எடையினால் கிளைகள் கீழே சாய்ந்திருந்ததாலோ அப்படித் தோன்றி இருக்கலாம். சரி, அதற்கும் நாம் அங்கே செல்வதற்கும் என்ன தொடர்பு?"

"சொல்கிறேன். நேற்று கம்ப ராமாயணத்தில் ஒரு கவிதை படித்தேன். அதற்குப் பிறகுதான் எனக்கு ஒரு விஷயம் புரிந்தது."

"என்ன படித்தீர்கள்? என்ன புரிந்தது?'

"கம்பர் மருத நிலத்தின் அழகை வர்ணிக்கிறார். ஒரு அரசவையில் நடன நிகழ்ச்சி நடக்கும் அல்லவா, அது போல் மருத நிலம் அரசரைப் போல்  வீற்றிருக்க, அரசவையில் மயில்கள்  நடனம் ஆடுகின்றன. தாமரை மலர்கள் விளக்குகளைத் தாங்கி நிற்பது போல் தோற்றம் அளிக்கின்றன. மேகங்கள் முழவு போல் இசைத்துத் தாளமிடுகின்றன. வண்டுகள் யாழிசை போல் இனிமையாக ரீங்கரிக்கின்றன."

"ஆகா! அருமையான வர்ணனை! புலவரைக் காதலிப்பதால்தானே இப்படிப்பட்ட காவிய ரசங்களைப் பருக முடிகிறது!"

"கம்பர் இன்னொன்றும் சொல்கிறார். இந்த இசை நடனக் காட்சியை வேறு சில பார்வையாளர்களும் பார்க்கிறார்கள் என்கிறார்."

"யார் அந்தப் பார்வையாளர்கள்? "

"குவளை மலர்கள்!  'குவளை கண் விழித்து நோக்க' என்ற வரியைப் படித்ததும்தான் எனக்கு ஒன்று தோன்றியது."

"என்ன தோன்றியது?"

"ஒருவேளை குவளை மலர்களால் பார்க்க முடிந்தால்?"

"பார்க்க முடிந்தால்?"

"இந்த நந்தவனத்தில் குவளை மலர்கள் இருக்கும் பகுதிக்கு நாம் போனபோது, அவை உன் கண்களைப் பார்த்து விட்டு, 'அடாடா! புலவர்கள் பெண்களின் கண்களை நம்முடன் ஒப்பிட்டுப்பேசுவார்கள். ஆனால் இவள் கண்களுக்கு நாம் ஒப்பாக மாட்டோமே' என்று நினைத்து வெட்கித் தலை குனிந்திருக்கும். அதனால்தான் உன்னை அங்கே போக வேண்டாம் என்றேன்."

"போங்கள்!" என்று சொல்லிக் குவளையை மிஞ்சும் அழகு கொண்ட தன் கண்களைத் தாழ்த்திக் கொண்டாள் அவள்.  

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 112
நலம்புனைந்துரைத்தல்   

குறள் 1114
காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று.

பொருள்:
குவளை மலர்களுக்குக் காணும் சக்தி இருந்தால், அவை இவள் கண்களைப் பார்த்து இவளுடைய கண்களுக்குத் தாம் ஒப்பாகவில்லையே என்று நினைத்துத் தலை குனிந்து நிற்கும்.


Thursday, July 16, 2020

1113. கனவில் வந்தவள்

"ஆமாம் எதுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு ஜி ஆர் ஈ எழுதி அமெரிக்கா போய்ப் படிக்கணும்? பேசாம பி,ஈ முடிச்சப்பறம் இங்கியே ஒரு நல்ல வேலை தேடிக்கிட்டு இந்தியாவிலேயே செட்டில் ஆயிடலாமே!" என்றான் ரவீந்திரன்.

"ஏன் திடீர்னு இப்படிச் சொல்ற? ரெண்டு வருஷமா அமேரிக்கா அமெரிக்கான்னு புலம்பிக்கிட்டிருந்த?" என்றாள் வீணா.

"இந்த ஜி ஆர் ஈ பரீட்சைக்குத் தயார் செய்யறதை நினைச்சாத்தான் இப்படித் தோணுது! புதுசு புதுசா இங்கிலீஷ்  வார்த்தை கத்துக்க வேண்டி இருக்கு. 3000 வார்த்தையாவது கத்துக்கணும்கறாங்க. நாம இன்னும் 300 வார்த்தை கூட முழுசாக் கத்துக்கல."

"அதுக்குத்தானே வேர்ட் லிஸ்ட் படிச்சுக்கிட்டிருக்கோம்? ஏ, பி சி டின்னு வரிசையா ஆரம்பிச்சு இப்ப சியில இருக்கோம். அதுக்குள்ளே அலுத்துக்கிட்டா எப்படி? தனியாப் படிச்சா கஷ்டமா இருக்கும்னுதானே நாம ரெண்டு பேரும் சேந்து படிக்கறோம்? அதுவே உனக்குக் கஷ்டமா இருக்கா?"

"சேர்ந்து படிக்கறதில முதல் பாதி நல்லா இருக்கு! உன்னோட சேர்ந்து இருக்கறதில எனக்கென்ன கஷ்டம்? படிக்கறதிலதான் கஷ்டம்!" என்றான் ரவீந்திரன் சிரித்தபடி, அவள் தோளில் கை வைத்து.

"கையை எடு முதல்ல" என்று சிரித்தபடியே அவன் கையைத் தன்  தோளிலிருந்து அகற்றிய வீணா "அடுத்த வார்த்தை என்ன பாரு!" என்றாள். 

"Collage ன்னு போட்டிருக்கு. College ங்கற வார்த்தை தப்பா பிரிண்ட் ஆகி இருக்குமோ?' என்றான் ரவீந்திரன்.

"உளறாதே! Collage ன்னா பல பொருட்களால் உருவாக்கப்பட்ட கலை வடிவம்னு அர்த்தம். இதை கொலாஷ்னு உச்சரிக்கணும். நானே கொலாஷ் பெயின்ட்டிங் எல்லாம் பண்ணி இருக்கேனே!"

"ஓ! ஒரு பேப்பர்ல ரெண்டு மூணு கலரைக் கொட்டி அது மேல ஏதோ கந்தத் துணியெல்லாம் ஓட்ட வச்சு கலைன்னு சொல்லி ஏதோ கொலை பண்ணுவியே, அதுவா?"

"வொகாபுலாரியிலதான் பூஜ்யம்னா கலையை ரசிக்கறதிலியுமா?"

"சாரிம்மா கலையரசி! கல்யாணத்துக்கப்புறம் கண்டிப்பா உன்னோட கலைக் கொலையை எல்லாம் ரசிப்பேன். இப்ப என்னை முறைக்காதே. அடுத்த வார்த்தைக்குப் போகலாமா? நீயே படிச்சுடு!"

புத்தகத்தைப் பார்த்த வீணா, "Collage க்கு முன்னால சில வார்த்தைகளை   விட்டுட்டியே!" என்றாள்.

"நாங்கள்ளாம் அப்படித்தான். ஸ்கிப் பண்ணி ஸ்கிப் பண்ணித்தான் படிப்போம். ஸ்கிப் பண்ணினது ஏதாவது பரீட்சையில் வந்தா சாய்ஸ்ல விட்டுடுவோம்!"  

"ஜி ஆர் ஈ யில சாய்ஸ்லாம் கிடையாது. அப்புறம் அமெரிக்கா போற ஆசையையே சாய்ஸ்ல விட வேண்டியதுதான்! சரி. கொஞ்சம் சீரியஸாப் படிக்கலாம். நீ விட்ட இடத்திலேந்து ஆரம்பிக்கலாம். Chimera. அர்த்தம் தெரியுமா? Camera ங்கற வார்த்தையை தப்பா பிரிண்ட் பண்ணி இருப்பாங்கன்னு சொல்லாதே!"

"புஸ்தகம் உன்கிட்டத்தானே இருக்கு. நீயே அர்த்தம் பார்த்துச் சொல்லு."

"Chimera ன்னா பல மிருகங்களோட உடல் உறுப்புகளைச் சேர்த்து உருவான ஒரு கற்பனை மிருகம். இதை கிமரான்னு உச்சரிக்கணும்."

"இதுவும் ஒரு மாதிரி கொலாஷ்தான் போலருக்கு."

"கொலாஷ்ங்கறது ஒரு அழகான கலை வடிவம். பல மிருகங்களோட உறுப்புகளை சேத்து உருவாக்கின கிமாரா பாக்கறதுக்கு நல்லாவா இருக்கும்?பயங்கரமாவோ, அருவருப்பாவோ இருக்காது?"

"ஏன், அழகான உருவமா கூட உருவாக்கலாம்! என்னை மாதிரி நல்ல கலைஞன் படைச்சா அழகாத்தான் இருக்கும்" என்றான் ரவீந்திரன்.

"சரி. இன்னிக்கு உனக்கு மூடு சரியில்லைன்னு நினைக்கறேன். ஒரு மாதிரியாவே பேசிக்கிட்டிருக்க. இன்னிக்குப் போதும். நாளைக்குத் தொடரலாம்" என்றாள் வீணா புத்தகத்தை மூடியபடியே. 

"நீ புத்தகத்தை மூடினவுடனே எனக்கு மூடு வந்துடுச்சு - உன்னோட பேசிக்கிட்டிருக்க!"

"முதல்ல இடத்தைக் காலி பண்ணு!" என்றாள் வீணா.

றுநாள் இருவரும் படிப்பதற்காகச் சந்தித்தபோது, "வீணா! சொன்னா நம்ப மாட்ட. நேத்திக்கு நான் கனவிலே கிமரா மாதிரி ஒரு உருவத்தைப் பாத்தேன். ஆனா அது ஒரு பெண்ணோட உருவம்!" என்றான் ரவீந்திரன். 

"கிமாரா மாதிரின்னா அப்புறம் எப்படி அது ஒரு பெண் உருவமா இருக்கும்?" என்றாள் வீணா.

"பெண்தான். ஆனா அவ தோள் மூங்கில் மாதிரியிருந்தது. உடம்பு ஒரு பசுமையான கொடி மாதிரி இருந்தது. பல்லெல்லாம் முத்து மாதிரி இருந்தது. கண்ல கரு கருன்னு மை தீட்டி ஈட்டி மாதிரி கூர்மையா இருந்தது. அவ உடம்பிலேந்து ஒரு நறுமணம் வேற வந்தது."

"ஐயோ! கண்றாவியா இருக்கு. கிமரங்கரா வார்த்தையைப் படிச்சதால இப்படி ஒரு உருவம் உன் கனவிலே வந்திருக்கு போலருக்கு."

"இல்ல வீணா! அந்தப் பொண்ணு ரொம்ப அழகு. அதோட அவளை நான் முன்னாடியே பாத்திருக்கேன்."

"பாத்திருக்கியா? யார் அந்த அழகி? எனக்குத் தெரியுமா அவளை?" எனறாள்  வீணா சற்றுப் பட்டத்துடன். 

"உனக்கு அவளைத் தெரியுமாங்கறது எனக்கு எப்படித் தெரியும்? அவ ஃபோட்டோ என் மொபைல்ல இருக்கு. காட்டறேன். உனக்குத் தெரிஞ்சவாளான்னு பாரு!" என்றபடியே தன் கைபேசியை எடுத்தான் ரவீந்திரன்.

'மொபைல்ல அவ ஃபோட்டோ வேற வச்சிருக்கியா? இரு இரு. உனக்கு இருக்கு இன்னிக்கு!' என்று மனதில் கறுவிக் கொண்டாள் வீணா.

ரவீந்திரன் அவன் மொபைலில் காட்டிய தன்னுடைய புகைப்படத்தைப் பார்த்ததும் வீணாவின் முகத்திலிருந்த கடுகடுப்பு களிப்பாக மாறியது.

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 112
நலம்புனைந்துரைத்தல்   

குறள் 1113
முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.

பொருள்:
மூங்கில் போன்ற தோள்களை உடைய இவளுடைய மேனியோ இளம் தளிர், பல்லோ முத்து, உடல் மணமோ நறுமணம், மை உண்ட கண்களோ வேல்!

குறள் 1114 (விரைவில்)

Friday, July 10, 2020

1112.. பூவெல்லாம் உற்றுப் பார்!

"டேய்! ஸ்கூட்டரை நிறுத்து!" என்றான் காமேஷ்.

"எதுக்குடா?" என்று கேட்டபடியே ஸ்கூட்டரை நிறுத்தினான் முத்து.

"இரு நிமிஷம் இரு!" என்ற காமேஷ் அந்தப் பெரிய வீட்டின் வெளிப்புறச் சுவர் அருகே சென்று குதிகாலை உயர்த்தி சுவற்றுக்குப் பின்னே தெரிந்த வீட்டின் முன்புறத் தோட்டத்தை எட்டிப் பார்த்தான்.

"என்னடா பாக்கற? யாராவது பாத்தா தப்பா நினைக்கப் போறாங்க!" என்று முத்து பதட்டத்துடன் சொல்லிக் கொண்டிருந்தபோதே, வீட்டின் கேட் அருகே அமர்ந்திருந்த வாட்ச்மேன் ஓடி வந்து, "யாருப்பா அது? எதுக்கு அங்கே எட்டிப் பாக்கற?" என்றான்.

"ஒண்ணுமில்ல. பூவெல்லாம் அழகா இருந்தது. அதைத்தான் பாத்தேன். உள்ள வந்து பாக்கலாமா?" என்றான்.

"போப்பா இங்கேந்து! ஓனர் பாத்தா என்னைத்தான் திட்டுவாரு" என்றான் வாட்ச்மேன் படபடப்புடன். 

"வாடா! போகலாம். என்ன இது பைத்தியக்காரத்தனம்! நீ என்ன பூக்களையே பாத்ததில்லையா என்ன?" என்றான் முத்து கடிந்து கொள்ளும் குரலில். 

"மீனா! இனிமே ஊருக்கெல்லாம் எங்கேயும் போயிடாதே! நீ ஊர்ல இல்லேன்னா உன் காதலனைச் சமாளிக்கறது ரொம்ப கஷ்டமா இருக்கு!" என்றான் முத்து, காமேஷைப் பக்கவாட்டில் திரும்பிப் பார்த்து சிரித்தபடி. 

காமேஷ் எதுவும் சொல்லாமல் சிரித்தான்.

"ஏன், என்ன பண்ணினான் உன் நண்பன்?" என்றாள் மீனா சிரித்தபடி. 

" அதுக்கு முன்னால உன்னை ஒரு கேள்வி கேக்கணும். உனக்கு ஏன் மீனான்னு பேர் வச்சாங்க? உன் கண் மீன் மாதிரி இருக்குன்னா? எனக்கு ஒண்ணும் அப்படித் தெரியலியே!" என்றான் முத்து. 

"என்னைக் கிண்டல் பண்றதை அப்புறம் வச்சுக்கலாம். விஷயத்தைச் சொல்லு. என் காதலனைப் பத்தி ஏதோ புகார் சொல்ல வந்தியே!"

"இலக்கியத்தில, பெண்களோட கண்ணை குவளை மலர் மாதிரின்னு  வர்ணிப்பாங்க, படிச்சிருக்கேன். கடவுளை வர்ணிக்கச்சே கூட சில சமயம் தாமரைப் பூ மாதிரி கண்ணுன்னு சொல்லுவாங்க. அரவிந்தலோசனன், பத்மலோசனி மாதிரி பேர் எல்லாம் இருக்கே! ஆனா உன் காதலனுக்கு உன் கண்ணைப் பாத்தா சின்னப்பூ மாதிரி இருக்காம். அதனால நீ இல்லாதப்ப எங்கேயாவது பூச்செடியைப் பாத்தா உடனே அது கிட்ட போய் அதில இருக்கற பூக்களைப்  பாத்துக்கிட்டே நிக்கறான். என்னால சமாளிக்க முடியல!" 

மீனா முக மலர்ச்சியுடன் காமேஷைப்  பார்த்தாள். சிலநாட்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் அவள் மனதில் நிழலாடியது. 

"மீனா! நீ பூ பாத்திருக்கியா?" என்றான் காமேஷ்.

"என்ன கேள்வி இது? உன் லெவலுக்கே இது முட்டாள்தனமான கேள்வியா தோணல?" என்றாள் மீனா.

"அப்படின்னா, அது எப்படி இருக்கும்னு சொல்லு பாக்கலாம்!"

"பாட்டனியில பூவோட படம் போட்டு பாகங்களைக் குறிக்கச் சொல்லுவாங்க. அது மாதிரி இருக்கு உன் கேள்வி!"

"பூவுக்கு நடுவில சின்னாதா மொக்கு மாதிரி இருக்கும். பூவோட இதழ்கள் அதைப் பாதுகாக்கற மாதிரி அதைச் சுத்தி  இருக்கும்."

"ரொம்ப மொக்கையா இருக்கு இது!"

மீனாவின் இரு கண்களையும் தன் இரு கை விரல்களால் பிரித்தபடி பிடித்த காமேஷ், "உன் கண்மணியை உன் இமை இதழ் மாதிரி மூடிக்கிட்டிருக்கறதைப் பாத்தா உன் கண்ணே ஒரு சின்னப்பூ மாதிரிதான் இருக்கு!" என்றான். 

"போடா!" என்று மீனா சிணுங்கினாலும், அவன் அவள் கண்களைப் பிடித்துக்கொண்டு அப்படிச் சொன்னது அவளுக்கு ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது.   

"என்ன மீனா! நான் கேட்டதுக்கு பதிலே சொல்லாம உன் காதலன் மூஞ்சியையே பாத்துக்கிட்டிருக்க!" என்றான் முத்து.

முத்துவிடம் திரும்பிய மீனா, "முத்து! நீ பூன்னு சொன்னதும், எனக்கு பூஜைங்கற வார்த்தை  ஞாபகம் வந்தது. பூஜை வேளையில கரடின்னு ஏதோ சொல்வாங்களே!" என்று சொல்லிச் சிரித்தாள்.

"மன்னிச்சுக்கமா மல்லிகைப் பூவே! உன்னைத் தோட்டக்காரன் தனியா கவனிச்சுக்க விடாம நான் குறுக்க நிக்கறது தப்புதான். நான் வரேன்.  டேய், காமேஷ்! பூவை ஜாக்கிரதையாய் பாத்துக்கடா!" என்று சொல்லி விட்டுக் கிளம்பினான் முத்து.  

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 112
நலம்புனைந்துரைத்தல்   

குறள் 1112
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று.

பொருள்
நெஞ்சே! இவள் கண்கள் எல்லோரும் கண்டு மகிழும் மலர்களைப் போல் இருப்பதால், இவள் கண்களையொத்த மலர்களைக் கண்டு நீ அவற்றை இவள் கண்கள் என்று நினைத்து மயங்குகிறாய்!


Sunday, July 5, 2020

1111. தொட்டால் மலரும் பூ!

"இத்தனை நாளா என்னைக் காதலிச்சப்ப நீ இருந்ததுக்கும் இப்ப இருக்கறதுக்கும் ஒரு வித்தியாசம் தெரியுதே!" என்றாள் சரளா.

:என்ன வித்தியாசம்? என் அன்பு குறைஞ்சுட்ட மாதிரி  இருக்கா, இல்ல அதிகமாயிட்ட மாதிரி இருக்கா?" என்றான் வேலன்.

"உன் அன்பு அப்படியேதான் இருக்கு. ஆனா உன்னோட அக்கறை கொஞ்சம் அதிகமாயிட்ட மாதிரி இருக்கு!"

"எப்படிச் சொல்ற?"

"நடக்கறப்ப நான் கொஞ்சம் சாஞ்சா கூட கீழே விழுந்துடப் போறேனோன்னு பயந்து உடனே தாங்கிப் பிடிக்கற. மரத்திலேந்து ஒரு இலை என் மேல விழுந்ததும் அதை உடனே தூக்கிப் போட்டுட்டு, இலை விழுந்த இடத்தை வாயால ஊதினே, ஏதோ காயம் பட்டுட்ட மாதிரி!"

"ஆமாம். நீ சொல்றது சரிதான். உன் மேல எனக்கு இருக்கற அக்கறை முன்னை விட இப்ப அதிகமாயிட்டது உண்மைதான்."

"ஏன் திடீர்னு இந்த அதிக அக்கறை?"

"திடீர்னு ஒண்ணும் இல்ல. நேத்து ராத்திரிதானே உன்னை நான் முழுசாத் தெரிஞ்சுக்கிட்டேன்!"

"சீ, போ!  வெக்கமில்லாம! அதுக்கும் நீ என் மேல அதிகமா அக்கறை காட்டறதுக்கும் என்ன  சம்பந்தம்?"

"நீ எவ்வளவு மென்மையானவன்னு நேத்திக்குத்தானே புரிஞ்சுக்கிட்டேன்! அதனாலதான் உன்னை ரொம்ப கவனமாப் பாத்துக்கணும்னு நினைக்கறேன்."

"மென்மையானவள்னா, எவ்வளவு மென்மையானவளா இருக்கேன்னு சொல்ல முடியுமா?"

" 'பாலிலும் வெண்மை, பனியிலும் மென்மை'ன்னு கண்ணதாசன் பாடி இருக்காரே  அப்படின்னு சொல்லலாம்."

"அவர் சொன்னது ஒரு வெகுளிப் பெண்ணோட குணத்தைப் பத்தி, நீ சொல்ற அர்த்தத்தில இல்ல."

"அவரு எந்த அர்த்தத்தில் சொல்லி இருந்தாலும், நான் சொல்ற அர்த்தத்தில் இருக்கறதா வச்சுக்கறேன். சரி, அது வேண்டாம்னா வேற என்ன சொல்லலாம்? பூ மாதிரி மென்மைன்னு சொல்லலாம். எல்லாப் பூவிலேயும் அனிச்சம்பூ ரொம்ப மென்மையாம். அதை முகர்ந்து பாத்தாலே வாடிடுமாம். அவ்வளவு மென்மாய் அது! அதை விட அதிக மென்மை உள்ளவ நீ! ஆனா ஒரு வித்தியாசம்!"

"என்ன வித்தியாசம்?"

"கிட்ட நெருங்கினாஅனிச்சம்பூ வாடிடும். ஆனா உன்னை நெருங்கினா, நீ இன்னும் அதிகமா மலர்வே! அதுதானே என்னோட அனுபவம்" என்றான் வேலன்.

சரளாவின் சிரிப்பில் பூவின் மலர்ச்சி தெரிந்தது. 

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 112
நலம்புனைந்துரைத்தல்   

குறள் 1111
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்.

பொருள்
அனிச்சம்பூவே! நீ மிகவும் மென்மை கொண்டிருக்கிறாய். நீ வாழ்க! ஆயினும், நான் விரும்பும் காதலி உன்னை விடவும் மென்மை கொண்டவள்.


Wednesday, July 1, 2020

1110. லதாவின் கவலை!

லதா முதன் முதலாக சேகரின் வீட்டுக்கு வந்தபோது அவன் வீட்டில் பல இடங்களிலும் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களைப் பார்த்து விட்டு, "என்ன இப்படி வீடு முழுக்க புத்தகங்களைப் போட்டு வச்சிருக்கீங்க? பழைய பேப்பர் கடை மாதிரி இருக்கு!" என்றாள்.  

"என் அம்மா சொல்ற மாதிரியே சொல்றியே!" என்றான் சேகர். "என் வீடு சின்ன வீடுதான். அதில இத்தனை புத்தகங்களை ஒரே இடத்தில வைக்கற மாதிரி இடம்  இல்லை. அதனாலதான் நிறைய இடங்கள்ள வச்சிருக்கேன்" என்றான் தொடர்ந்து.

லதாவின் மனதில் மெலிதாக ஒரு கவலை எழுந்தது. 

"முதல்ல உங்க வீட்டுக்கு வந்தப்ப உங்களைக் கல்யாணம் செஞ்சுக்கணுங்கற என் முடிவு சரிதானான்னு எனக்கு ஒரு கவலை வந்தது" என்றாள் லதா, சேகரின் தலையைக் கோதியபடி.

"என், வீடு ரொம்ப சின்னதா இருக்கேன்னு பாத்தியா?"

"அதைப் பத்தி இல்ல. வீடு பூரா இருந்த புத்தகங்களைப் பாத்து!"

"ஏன் புத்தகங்கள் எல்லா இடங்களையும் ஆக்கிரமிச்சுக்கறதால உன்னோட பொருட்களை வைக்க இடம் இருக்காதுன்னு பயந்தியா?"

"இவ்வளவு புத்தகங்கள் படிச்சும் இப்படி மக்கா இருக்கீங்களே!" என்று செல்லமாக சேகரின் தலையில் குட்டினாள் லதா. " 'இவரு ஒரு புத்தகப் புழுவா இருப்பாரு போலருக்கே, இவருக்கு என்னை கவனிக்க நேரம் இருக்குமா?'ன்னு கவலைப் பட்டேன்."

"ஆனா, இப்ப?"

"இப்பவா?" என்று அவன் முகத்தைப் பார்த்துகே கையால் பிடித்தபடி சிரித்த லதா, " 'என்னைக் கொஞ்சறதைத் தவிர  இவருக்கு வேற வேலையே இல்லையா'ன்னு நான் நினைக்கிற அளவுக்கு என்னைத் திணற அடிக்கறீங்க!" என்றாள் சற்றே வெட்கத்துடன். 

"என்னைப் பொறுத்தவரையிலும் நீயும் ஒரு புத்தகம்தான். புத்தகங்களைப் படிச்சா அறிவு வளரும்னு சொல்லுவாங்க. ஆனா நான் ஒரு புத்தகத்தைப் படிச்சா நமக்குத் தெரியாத விஷயங்கள் இவ்வளவு இருக்கேன்னு பிரமிப்புதான் ஏற்படும். நீ சொன்னியே அது மாதிரி இதெல்லாம் தெரியாம இப்படி ஒரு மக்கா இருக்கேனேன்னு நினைச்சுப்பேன். இன்னும் நிறையப் படிக்கணும்னு ஆசை வரும். ஒவ்வொரு தடவை உன்னைப் படிக்கறப்பவும் ஒரு புதுப் புத்தகத்தைப் படிக்கிற மாதிரி பிரமிப்பாதான் இருக்கு. திரும்பத் திரும்பப் படிக்கணும் போல இருக்கு. இவகிட்ட இன்னும் எவ்வளவோ இருக்கும் போலருக்கேன்னு நினைக்க நினைக்க உன் மேல் காதல் அதிகமாகிக்கிட்டேதான் இருக்கு!" என்று சொல்லி அவளை இறுக அணைத்தான் சேகர். 


காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 111
புணர்ச்சி மகிழ்தல்  

குறள் 1110
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.

பொருள்
 செந்நிற அணிகலன்களை அணிந்திருக்கும் இவளோடு கூடும்போது ஏற்படும் காதல், நூல்களை படித்துப் பொருள் அறிய அறிய அறியாதவற்றை உணர்வது போல் உள்ளது.


1128. ஆறிய காப்பி!

"என்ன நம்ம பொண்ணு ஆம்பளைங்க மாதிரி அடிக்கடி காப்பி குடிக்கறா?" என்றார் சபாபதி. "ஏன், பொம்பளைங்க அடிக்கடி காப்பி குடிக்கக் கூட...