"இத்தனை நாளா என்னைக் காதலிச்சப்ப நீ இருந்ததுக்கும், இப்ப கல்யாணம் ஆனப்புறம் இருக்கறதுக்கும் ஒரு வித்தியாசம் தெரியுதே!" என்றாள் சரளா.
"என்ன வித்தியாசம்? என் அன்பு குறைஞ்சுட்ட மாதிரி இருக்கா, இல்ல, அதிகமாயிட்ட மாதிரி இருக்கா?" என்றான் வேலன்.
"உன் அன்பு அப்படியேதான் இருக்கு. ஆனா, உன்னோட அக்கறை கொஞ்சம் அதிகமாயிட்ட மாதிரி இருக்கு!"
"எப்படிச் சொல்ற?"
"நடக்கறப்ப நான் கொஞ்சம் சாஞ்சா கூட, கீழே விழுந்துடப் போறேனோன்னு பயந்து, உடனே தாங்கிப் பிடிக்கற. மரத்திலேந்து ஒரு இலை என் மேல விழுந்ததும், அதை உடனே தூக்கிப் போட்டுட்டு, இலை விழுந்த இடத்தை வாயால ஊதினே, ஏதோ காயம் பட்டுட்ட மாதிரி!"
"ஆமாம். நீ சொல்றது சரிதான். உன் மேல எனக்கு இருக்கற அக்கறை முன்னை விட இப்ப அதிகமாயிட்டது உண்மைதான்!"
"ஏன் திடீர்னு இந்த அதிக அக்கறை?"
"திடீர்னு ஒண்ணும் இல்ல. நேத்து ராத்திரிதானே உன்னை நான் முழுசாத் தெரிஞ்சுக்கிட்டேன்!"
"சீ, போ! வெக்கமில்லாம! அதுக்கும், நீ என் மேல அதிகமா அக்கறை காட்டறதுக்கும் என்ன சம்பந்தம்?"
"நீ எவ்வளவு மென்மையானவன்னு நேத்திக்குத்தானே புரிஞ்சுக்கிட்டேன்! அதனாலதான், உன்னை ரொம்ப கவனமாப் பாத்துக்கணும்னு நினைக்கறேன்."
"மென்மையானவள்னா, எவ்வளவு மென்மையானவளா இருக்கேன்னு சொல்ல முடியுமா?"
"'பாலிலும் வெண்மை, பனியிலும் மென்மை'ன்னு கண்ணதாசன் பாடி இருக்காரே அப்படின்னு சொல்லலாம்."
"அவர் சொன்னது ஒரு வெகுளிப் பெண்ணோட குணத்தைப் பத்தி, நீ சொல்ற அர்த்தத்தில இல்ல."
"அவரு எந்த அர்த்தத்தில் சொல்லி இருந்தாலும், நான் சொல்ற அர்த்தத்தில் இருக்கறதா வச்சுக்கறேன். சரி, அது வேண்டாம்னா, வேற என்ன சொல்லலாம்? பூ மாதிரி மென்மைன்னு சொல்லலாம். எல்லாப் பூவிலேயும், அனிச்சம்பூ ரொம்ப மென்மையாம். அதை முகர்ந்து பாத்தாலே வாடிடுமாம். அவ்வளவு மென்மை அது! அதை விட அதிக மென்மை உள்ளவ நீ! ஆனா, ஒரு வித்தியாசம்!"
"என்ன வித்தியாசம்?"
"கிட்ட நெருங்கினா, அனிச்சம்பூ வாடிடும். ஆனா, உன்னை நெருங்கினா, நீ இன்னும் அதிகமா மலர்வே! அதுதானே என்னோட அனுபவம்!" என்றான் வேலன்.
சரளாவின் சிரிப்பில் பூவின் மலர்ச்சி தெரிந்தது.
காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 112
நலம் புனைந்துரைத்தல்
குறள் 1111
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்மென்னீரள் யாம்வீழ் பவள்.
பொருள்
அனிச்சம்பூவே! நீ மிகவும் மென்மை கொண்டிருக்கிறாய். நீ வாழ்க! ஆயினும், நான் விரும்பும் காதலி உன்னை விடவும் மென்மை கொண்டவள்.
Read 'The Flower that Blossoms by Touch' the English version of this story by the same author.
No comments:
Post a Comment