Wednesday, May 24, 2023

1192. மழையினில் நனைந்து...

"நாலு மாசமா அவ பின்னால அலையறேன். திரும்பிக் கூடப் பாக்க மாட்டேங்கறா!" என்றான் விநாயக்.

"அப்ப அவளை விட்டுட்டு வேற பொண்ணைப் பாக்க வேண்டியதுதானே?" என்றான் கல்யாண்.

"இப்படியெல்லாம் பேசினா, உன்னை விட்டுட்டு வேற நண்பனைத் தேடிக்க வேண்டி இருக்கும்!" என்றான் விநாயக் கோபமாக.

"அடேயப்பா! என்னையே தூக்கிப் போட்டுடுவேங்கற! காதல்ல அவ்வளவு ஈடுபாடா? 2023-இல இப்படி ஒரு காதலா?"

"நீ கிண்டலாச் சொன்னாலும் உண்மை அதுதான். உண்மையான காதல்ங்கறது எல்லாக் காலத்திலேயும் இருக்கும். கி.மு. 2023-இல மட்டும்தான் இருந்ததுன்னு நினைக்காதே. கி,பி. 2023-இலேயும் இருக்கு."

"சாரி. எனக்குத் தெரியாது. எனக்கு அந்த அனுபவமே இன்னும் வரல. சரி, ஒருவேளை அவ உன் காதலை ஏத்துக்கலேன்னா?" என்றான் கல்யாண்.

ஒரு நிமிடம் யோசித்த விநாயக், "தெரியல. மழை பேஞ்சாதான் உலகத்தில உள்ள உயிர்கள் எல்லாம் பிழைக்க முடியும். 'ஒருவேளை மழை பெய்யலேன்னா?'ன்னு கேட்டா என்ன பதில் சொல்ல முடியும்?" என்றான்.

"டேய் கல்யாண்! அவ என் காதலை ஏத்துக்கிட்டாடா!" என்றான் விநாயக் உற்சாகமாக.

"வாழ்த்துக்கள்!" என்ற கல்யாண், வெளியே பார்த்து விட்டு, "அன்னிக்கு 'உன் காதலை உன் காதலி ஏத்துக்கலேன்னா?'ன்னு நான் கேட்டதுக்கு, 'மழை பெய்யலேன்னா என்ன ஆகும்?'னு பதில் கேள்வி கேட்ட. இன்னிக்கு உன் காதலி உன் காதலை ஏத்துக்கிட்ட செய்தியை நீ எங்கிட்ட சொல்றப்ப மழை பெய்யுது. நல்ல பொருத்தம்தான்!" என்றான் விநாயக்.

"என் மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்தறதுன்னு தெரியல. மழையில நனையறதை விட மகிழ்ச்சியான விஷயம் வேற என்ன இருக்கு? அதனால நான் கொஞ்ச நேரம் மழையில நனைஞ்சு என் மகிழ்ச்சியைக் கொண்டாடிட்டு வரேன்!' என்றபடியே வெளியே ஓடினான்  விநாயக்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 120
தனிப்படர் மிகுதி
 (தனியாக வருந்தும் துன்பத்தின் மிகுதி)

குறள் 1192
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி.

பொருள்:
தம்மை விரும்புகின்றவர்க்குக் காதலர் அளிக்கும் அன்பு, உலகில் வாழ்பவர்களுக்கு மேகம் மழை பெய்து அவர்களைக் காப்பாற்றுதலைப் போன்றது.

(குறிப்பு; இந்தக் குறள் ஒரு பெண்ணைப் பற்றி எழுதப்பட்டிருந்தாலும், இந்த உணர்வு ஒரு ஆணுக்கும் பொருந்தும் என்ற அடிப்படையில் இந்தக் கதை எழுதப்பட்டுள்ளது)

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Sunday, May 21, 2023

1191. விதையில்லா திராட்சை

தோழிகள் உணவு அருந்திக் கொண்டே தங்கள் காதல் அனுபவங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.

"என்னை ஒத்தன் துரத்தித் துரத்திக் காதலிக்கிறான். ஆனா அவனை எனக்குப் பிடிக்கலையே!" என்றாள் ரஞ்சிதா.

"என் விஷயத்திலேயும் முதல்ல அப்படித்தான் ஆச்சு. ரமேஷ் என் பின்னால அலைஞ்சுக்கிட்டிருந்தப்ப ஆரம்பத்தில எனக்கு அவன் மேல அவ்வளவா ஈடுபாடு இல்ல. ஆனா கொஞ்ச நாள்ள எனக்கும் அவனைப் பிடிக்க ஆரம்பிச்சுடுச்சு! இப்ப நாங்க மனம் ஒத்த காதலர்கள்!" என்றாள் பிரியா.

"அவனை விட்டுட்டா வேற ஆள் கிடைக்க மாட்டான்னு நினைச்சு பயந்து அவனோட காதலையே ஏத்துக்கறதுங்கற முடிவுக்கு வந்திருப்ப!" என்றாள் மதுவந்தி.

"ஏய்!" என்று பொய்க் கோபத்துடன் கையை ஓங்கிய பிரியா, "சாப்பிட்டுட்டு வந்து உன்னை வச்சுக்கறேன்!" என்று கூறி ஓங்கிய கையை இறக்கினாள்.

"நான் உங்களை மாதிரில்லாம் இல்லப்பா. நான்தான் ரகுவை முதல்ல விரும்பினேன். எனக்கு அவர் மேல ஈடுபாடு இருக்குன்னு தெரிஞ்சதும் அவரும் என்னை விரும்ப ஆரம்பிச்சுட்டாரு. இப்ப நாங்க எங்க கல்யாணத்தைப் பத்திப் பேசிக்கிட்டிருக்கோம்!" என்றாள் நந்தினி.

"அதான் எங்களை மாதிரில்லாம் காதலனை அவன் இவன்னு பேசாம ரொம்ப மரியாதையா அவர் இவர்னு பேசறே. சரியான தர்மபத்தினிதான் நீ!" என்ற ரஞ்சிதா, வாணியிடம் திரும்பி, "என்னடி, நாங்கள்ளாம் எங்க காதலைப் பத்திப் பேசிக்கிட்டிருக்கோம். நீ மட்டும் மௌனமா இருக்கே!" என்றாள்.

"அவ ரொம்ப மும்முரமா திராட்சைப் பழத்தை சாப்பிட்டிருக்கறதைப் பாத்தா அந்த திராட்சை ப்பழம் ரொம்ப சுவையா இருக்கும் போலருக்கு. அதான் அதோட சுவையில ஈடுபட்டிருக்கா!" என்றபடியே அவள் முன்பிருந்த தட்டிலிருந்து ஒரு திராட்சையை எடுத்து வாயில் போட்டுக் கொண்ட நந்தினி, "ஆஹா! ரொம்ப இனிப்பா இருக்கே! சீட்லெஸ் வேற. எனக்கு திராட்சையில விதை இருந்தாலே பிடிக்காது. சீட்லெஸ் கிரேப்ஸ்தான் பெஸ்ட்!" என்று இன்னொரு திராட்சையை எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள்.

"உனக்கென்ன? உன் காதலும் இந்த விதையில்லா திராட்சை மாதிரி இனிப்பா, தடை இல்லாததா அமைஞ்சிடுச்சு!" என்ற வாணி, 'என்னை மாதிரியா? நான் விரும்பற காதலன் இன்னும் என்னை விரும்பலையேன்னு நான் ஏங்கிக்கிட்டிருக்கேன்! என் சோகத்தை நான் எப்படி உங்ககிட்ட பகிர்ந்துக்க முடியும்?' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

எல்லோரையும் பொதுவாகப் பார்த்து, "உங்களை மாதிரியெல்லாம் எங்கிட்ட சொல்றதுக்கு எதுவும் இல்லை!" என்றாள் வாணி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 120
தனிப்படர் மிகுதி
 (தனியாக வருந்தும் துன்பத்தின் மிகுதி)

குறள் 1191
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.

பொருள்:
தாம் விரும்பும் காதலர் தம்மை விரும்புகின்ற பேறு பெற்றவர், காதல் வாழ்க்கையின் பயனாகிய விதை இல்லாத பழத்தைப் பெற்றவரே ஆவார்.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Sunday, May 14, 2023

1190. கேட்டதும், கேட்காததும்!

"புருஷன் ஊருக்குப் போனதிலேந்து வீட்டை விட்டு எங்கேயும் வெளியில போகாம இருந்தே. இன்னிக்கு நீயே வெளியில போயிட்டு வரேன்னு கிளம்பி இருக்க. ரொம்ப நல்லது. அப்பதான் உனக்கு ஒரு மாறுதலா இருக்கும். இந்த பத்து நாள்ள உன் தோல் வெளிறி நிறம் மாறி இருக்கு. உடம்பில கொஞ்சம் வெய்யில் பட்டா அது கூட சரியாயிடும்னு நினைக்கிறேன்!" என்றாள் மரகதம்.

பூங்கொடி எதுவும் சொல்லாமல் வெளியில் கிளம்பினாள்.

சிறிது நேரம் கழித்து வீடு திரும்பிய பூங்கொடியின் முகத்தில் ஒரு தெளிவு காணப்பட்டது. பத்து நாட்களாக முகத்தில் அப்பியிருந்த சோகம் கூட சற்றுக் கலைந்திருந்தாற்போல் தோன்றியது.

'வெளியில் போனால் யாராவது ஏதாவது பேசி இவள் சோகத்தை அதிகமாக்கி விடுவார்களோ என்று பயந்தேன். நல்லவேளை அப்படி நடக்கவில்லை!" என்று நினைத்துக் கொண்டாள் மரகதம்.

"வழியில யாரையாவது பாத்தியா? ஏதாவது கேட்டங்களா?" என்றாள் மரகதம்.

"பாத்தேன். எல்லாருமே எனக்கு வந்திருக்கிற பசலை நோயைப் பத்தித்தான் கேட்டாங்க. ஏன் உடம்பு இப்படி இளைச்சிருக்கு, ஏன் கண் சிவந்திருக்கு, ஏன் தோல் வெளுத்திருக்குன்னெல்லாம் கேட்டாங்க."

"வாயை வச்சுட்டு சும்மா இருக்க மாட்டாங்களே! அதையெல்லாம் நீ பொருட்படுத்தாதே!"

"இல்லம்மா! 'உன் சம்மதத்தோடதான் உன் புருஷன் உன்னைப் பிரிஞ்சு போனாரு, அப்புறம் ஏன் உனக்கு இந்தப் பசலை வந்திருக்கு'ன்னு கேட்டாங்களே தவிர, 'உன் புருஷன் உன்னைப் தனியா விட்டுட்டுப் போயிட்டாரே, அவருக்கு உன் மேல அன்பு இல்லையா?'ன்னு யாருமே கேக்கல, அதுவே எனக்கு ஆறுதலா இருக்கு!" என்றாள் பூங்கொடி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 119
பசப்புறுபருவரல் (தோலின் நிறம் மாறி வருந்துதல்)

குறள் 1190
பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்.

பொருள்:
என்னைப் பிரிவுக்கு உடன்படுமாறு செய்த காதலரை அன்பில்லாதவர் என்று யாரும் தூற்ற மாட்டார்கள் எனில், பசலை படர்ந்தவள் என நான் பெயரெடுப்பது நல்லதுதான்!.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Saturday, May 13, 2023

1189. நானும் அப்படித்தானே இருந்தேன்!

கணவன் பிரிந்து சென்ற இரண்டு மாதங்களாக மங்கை அனுபவித்து வந்த வேதனையை அவள் உடல் மாற்றங்கள் வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.

தூக்கம் இல்லாததால் எப்போதும் சோர்வுடன் காணப்படும் கண்கள், சரியாக உணவு அருந்தாததால் இளைத்துப் போன உடல், வெளிறிப் போய் நிறம் மாறிய சருமம் என்று பசலை நோயின் தாக்கம் அவள் மீது முழுவதுமாகப் படர்ந்திருந்தது.

"நல்லா இருந்த பொண்ணை இப்படி ஆக்கிட்டுப் போயிட்டானே!" என்று புலம்பினாள் மங்கையின் தாய்.

"நான் சம்மதிச்சதாலதானே அவர் போனாரு?" என்றாள் மங்கை.

"பொண்டாட்டிகிட்ட நைச்சியமாப் பேசி அவளை சம்மதிக்க வைக்கறது ஒரு ஆம்பளைக்குக் கஷ்டமான காரியமா என்ன? உங்கிட்ட சொல்லி சம்மதம் வாங்கிக்கிட்டு வெளியூரு போனவன் அங்கே மதுவைக் குடிச்சுக்கிட்டு, வகையாத் தின்னுக்கிட்டு, இன்னும் எதையெல்லாமோ பண்ணிக்கிட்டு கும்மாளம் போட்டுக்கிட்டிருப்பான். நீ மட்டும் பசலை நோயால வாடிக்கிட்டிருக்க!" 

"இந்தப் பிரிவுக்கு என்னை சம்மதிக்க வச்சுட்டு, அவர் மட்டும் இந்தப் பிரிவால பாதிக்கப்படாம மகிழ்ச்சியா இருப்பார்னா, இந்தப் பசலை நோயை நான் மகிழ்ச்சியா ஏத்துக்கறேன்!" என்றாள் மங்கை.

"என்ன பொண்ணோ!" என்று அலுத்துக் கொண்ட மங்கையின் தாய், 'இவ வயசில நானும் இப்படித்தானே இருந்தேன், நான் கஷ்டப்பட்டா பரவாயில்ல, என் புருஷன் நல்லா இருக்கணும்னு நினைச்சு!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 119
பசப்புறுபருவரல் (தோலின் நிறம் மாறி வருந்துதல்)

குறள் 1189
பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்.

பொருள்:
இந்தப் பிரிவிற்கு நான் சம்மதிக்கும்படி செய்து பிரிந்தவர் நலமாக இருப்பார் என்றால், என் மேனி பசலை அடைந்து விட்டுப் போகட்டும்!.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Thursday, May 11, 2023

1188. உடம்புக்கு என்ன?

நாகம்மை தெருவில் நடந்து சென்றபோது, அவளுக்கு அறிமுகமானவர்கள் பலர் அவளை உற்றுப் பார்த்தனர்.

ஒரு இளம்பெண் அவள் அருகில் வந்து, "என்னடி ஒரு வாரம் முன்னால உன்னைப் பார்த்தேன். அதுக்குள்ள இப்படி இளைச்சுட்ட. உடம்பெல்லாம் வெளிறிப் போயிருக்கு. உடம்பு சரியில்லையா என்ன?" என்றாள்.

நாகம்மை 'ஒன்றுமில்லை' என்பது போல் தலையாட்டினாள். அதற்குள் அருகில் நடந்து கொண்டிருந்த ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, "உனக்குத் தெரியாதா? அவளுக்குப் பசலை பிடிச்சிருக்கு!" என்றாள்.

"பசலையா? அப்படின்னா?"

"உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை போலருக்கு! காதலன் இருக்கானா? அப்பவும் உனக்கு இந்த அனுபவம் வரும்!" என்று அந்தப் பெண்மணி கூறியதைக் கேட்டு அந்த இளம்பெண் ஒன்றும் புரியாமல் நின்றாள்.

நாகம்மை விறுவிறுவென்று அந்த இடத்தை விட்டு நடந்தாள்.

வீட்டுக்குச் சென்ற நாகம்மை, தன் அம்மாவிடம், "என்னம்மா இது, வீட்டை விட்டு வெளியிலே போனாலே எல்லாரும், 'என்னடி இப்படி இளைச்சுட்டே'ங்கறாங்க, என் பசலை நோயைப் பத்திப் பேசறாங்க. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்மா!" என்றாள் வருத்தமும், கோபமும் கலந்த குரலில்.

"நீ ஏதோ தப்பு பண்ணிட்ட மாதிரி உன்னைத்தான் எல்லாரும் குத்தம் சொல்லுவாங்க. கல்யாணம் ஆகி ரெண்டு மாசத்திலேயே உன்னை விட்டுட்டு வியாபாரம் பண்ணப் போறேன்னு வெளியூருக்குப் போயிட்டானே உன் புருஷன், அவனைப் பத்தி யாரும் பேச மாட்டாங்க!" என்றாள் நாகம்மையின் தாய் அவளைப் பரிவுடன் அணைத்தபடி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 119
பசப்புறுபருவரல் (தோலின் நிறம் மாறி வருந்துதல்)

குறள் 1188
பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல்.

பொருள்:
இவள் உடலில் பசலை படர்ந்தது எனப் பழித்துக் கூறுகிறார்களே அல்லாமல், இதற்குக் காரணம், காதலன் பிரிந்து சென்றிருப்பதுதான் என்று சொல்பவர் இல்லையே.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Wednesday, May 10, 2023

1187. தூக்கதிலிருந்து எழுப்பியது ஏன்?

தூக்கத்திலிருந்து தட்டி எழுப்பப்பட்ட மணிமேகலை கண் விழித்தாள்.

"பொழுது விடிஞ்சுடுச்சா என்ன? " என்றாள் மணிமேகலே கண்களைக் கசக்கிக் கொண்டு.

"இல்லை. விடியறதுக்கு இன்னும் கொஞ்ச நேரம் இருக்கு!" என்றான் அவள் கணவன் கதிரவன்

"பின்னே ஏன் அதுக்குள்ள எழுப்பினீங்க?" என்றாள் மணிமேகலை சிணுங்கியபடி.

"முழிப்பு வந்ததும் உன்னைப் பார்த்தேன். உன் உடம்பு நடுங்கின மாதிரி இருந்துச்சு. அதான் எழுப்பினேன். உடம்புக்கு ஒண்ணுமில்லையே!"

"அதெல்லாம் ஒண்ணுமில்ல. நல்லாத்தான் இருக்கேன்! படுத்துக்கங்க. அதான் பொழுது விடியலையே!" என்றாள் மணிமேகலை.

'தூக்கத்தில் கணவனின் அணைப்பிலிருந்து சற்று விலகியதுமே உடலில் வேகமாகப் பசலை படர்ந்திருக்கிறது. அது உடல் நடுங்குவது போல் கணவனுக்குத் தெரிந்திருக்கிறது. இந்தப் பசலை படுத்தும் பாடு இருக்கிறதே!' என்று மனதுக்குள் சலித்துக் கொண்டாள் மணிமேகலை.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 119
பசப்புறுபருவரல் (தோலின் நிறம் மாறி வருந்துதல்)

குறள் 1187
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.

பொருள்:
தலைவனைத் தழுவிக் கிடந்தேன்; பக்கத்தே சிறிது அகன்றேன்; அவ்வளவிலேயே பசலை அள்ளிக் கொள்வதுபோல் வந்து பரவி விட்டதே!.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Tuesday, May 9, 2023

1186. ஒளி அகன்றதும்...

"ஒருநாள்தானே ஊருக்குப் போயிட்டு வந்தேன்? அதுக்குள்ள இப்படி முகம் சிறுத்து தோல் வெளுத்து சோகை பிடிச்சவ மாதிரி ஆயிட்ட!" என்றான் மலையரசன்.

"அதான் திரும்பி வந்துட்டீங்களே, இனிமே சரியாயிடுவேன்!" என்றாள் பரிவாதினி சிரித்தபடி.

ரவில் படுக்கையறையில் இருந்தபோது, "இனிமே நீங்க என்னைப் பிரிஞ்சு எங்கேயும் போகக் கூடாது!" என்றாள் பரிவாதினி.

"சரி, போகல!" என்ற மலையரசன், ஒருநாள் பிரிவுக்கேவா இப்படி வாடிப் போவ, சோகை பிடிச்ச மாதிரி!" என்றான் சிரித்தபடி.

"அதுக்குப் பேரு சோகை இல்லை. அதைப் பசலைன்னு சொல்லுவாங்க. காதலனையோ, கணவனையோ பிரிஞ்சா பெண்களுக்கு வர நோய் அது. நீங்க ஆம்பளை. உங்களுக்கு இதெல்லாம் எங்கே புரியப் போகுது?" என்றாள் பரிவாதினி.

"ஒரு நாள் பிரிவுக்கெல்லாம் கூடவா இப்படியெல்லாம் ஆகும்?"

"ஒரு நாள் என்னங்க, ஒரு கணம் பிரிஞ்சாலே வரும்! இப்ப நீங்க என்னை அணைச்சுக்கிட்டுப் படுத்துக்கிட்டிருக்கீங்க இல்ல? உங்க அணைப்பு கொஞ்சம விலகினா கூட என் உடம்பில மாறுதல் ஏற்பட்டு பசலை நோய் அறிகுறிகள் உருவாகறதை என்னால உணர முடியும்!"

"அது எப்படி? எதுக்குமே கொஞ்சம் நேரம் ஆகணும் இல்ல? உடனே எப்படி..?என்னால இதை நம்ப முடியல!"

"இப்ப இந்த விளக்கு எரியுது இல்ல? அதனால இங்கே இருள் இல்ல. இப்ப இந்த விளக்கை அணைச்சா, உடனே இருள் பரவும் இல்ல? அதுக்கு நேரம் பிடிக்குமா என்ன? அது மாதிரிதான்!" என்ற பரிவதினி வாயால் ஊதி விளக்கை அணைத்தாள்..

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 119
பசப்புறுபருவரல் (தோலின் நிறம் மாறி வருந்துதல்)

குறள் 1186
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.

பொருள்:
விளக்கின் ஒளி குறையும் சமயம் பார்த்துப் பரவிடும் இருளைப் போல், இறுகத் தழுவிய காதலன் பிடி, சற்றுத் தளரும்போது காதலியின் உடலில் பசலை நிறம் படர்ந்து விடுகிறது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

1185. விடைபெற்றுச் சென்றதும்....

கனகத்துக்கு இரவு முழுவதும் உறக்கம் பிடிக்கவில்லை. பொழுது விடிந்ததும் தன் கணவன் சபாபதி தன்னைப் பிரிந்து வெளியூர் சென்று விடுவான். அவன் திரும்பி வரும் வரை அவனைப் பிரிந்து எப்படி இருக்கப் போகிறோம் என்ற நினைவினால் அவள் தூக்கம் தொலைந்தது.

கணவன் கிளம்பிச் சென்றதும் தன் பிரிவுத் துயரை ஓரளவுக்காவது குறைக்க தன் தோழி ரத்னமாலாவை வரச் சொல்லி இருந்தாள் கனகம். அவளும் கனகத்துடன் இரண்டு நாட்கள் தங்கி இருக்க ஒப்புக் கொண்டாள்.

சபாபதி கிளம்ப வேண்டிய நேரத்துக்குச் சிறிது நேரம் முன்பே வந்து விட்டாள் ரத்னமாலா.

கனகத்திடம் விடைபெற்றுக் கொண்டு சபாபதி கிளம்பினான். விடைபெறும்போது சபாபதி கனகத்திடம் நெருக்கமாக இருந்து அவளைத் தழுவி அணைத்து விடைபெறக் கூடும் என்பதால் சபாபதி கிளம்பும் நேரத்தில் ரத்னமாலா வாசலுக்கு வராமல் வீட்டுக்குள்ளேயே இருந்தாள்.

சபாபதிக்கு விடைகொடுத்து விட்டுக் கனகம் வீட்டுக்குள் வந்தாள். அவள் கண்கள் கலங்கி இருந்தன.

கனகத்தின் கையை ஆதரவாகப் பற்றிக் கொண்ட ரத்னமாலா அவள் கையை உற்றுப் பார்த்து விட்டு, "ஏண்டி, உன் கணவர் தெருக்கோடி வரை போயிருப்பாரா?" என்றாள்.

"போயிருப்பாரு. ஏன் கேக்கற?" என்றாள் கனகம் புரியாமல்.

"இல்லை. இப்பதான் உன் கணவர் கிளம்பினாரு. தெருக்கோடிக்குக் கூடப போயிருக்க மாட்டாரு. அதுக்குள்ள உன் தோல் வெளிற ஆரம்பிச்சுட்டுதே, பசலை வந்த மாதிரி! உடம்பு கூடக் கொஞ்சம் இளைச்ச மாதிரி இருக்கு!" என்றாள் ரத்னமாலா.

தோழி தன்னைக் கேலி செய்கிறாளா, அல்லது உண்மையாகவே தனக்குப் பசலை வந்து விட்டதா என்று புரியாமல் ரத்னமாலாவின் கண்களைப் பார்த்தாள் கனகம்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 119
பசப்புறுபருவரல் (தோலின் நிறம் மாறி வருந்துதல்)

குறள் 1185
உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது.

பொருள்:
அதோ பார்! எம்முடைய காதலர் பிரிந்து செல்கின்றார்; இதோ பார்! என்னுடைய மேனியில் பசலை நிறம் வந்து படர்கிறது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Sunday, May 7, 2023

1184. நினைவாலே சிலை செய்து

கோதையின் கணவன் அவளை விட்டுப் பிரிந்து ஒரு மாதம் ஆகி விட்டது.

ஒருநாள் நீண்ட காலம் கழித்து கோதையைச் சந்திக்க அவள் வீட்டுக்கு வந்த அவள் பழைய தோழி நாயகி சற்று நேரம் அவளிடம் பேசிய பிறகு, "ஆமாம். உன் புருஷனை எங்கே காணோம்? வேலைக்குப் போயிருக்காரா?" என்றாள்.

"ஆமாம். வேலைக்குத்தான் போழிருக்காரு. ஆனா, வெளியூருக்கு!" என்றாள் கோதை சிரித்தபடி.

"என்னடி இது? புருஷன் உன்னை விட்டுப் பிரிஞ்சு வெளியூருக்குப் போயிருக்காருன்னு சிரிச்சுக்கிட்டே சொல்ற! கணவனைப் பிரிஞ்சிருக்கறது வருத்தமா இல்லையா?" என்றாள் நாயகி வியப்புடன்.

"பிரிஞ்சிருக்கறது வருத்தமாத்தான் இருக்கு. ஆனா ஒரு நாளைக்கு அறுபது நாழிகையும் அவர் நினைப்பாகவேதான் இருக்கேன். மனசுக்குள்ள அவர் உருவத்தை சிலை மாதிரி உருவாக்கி வச்சிருக்கேன். எப்பவும் அவரைப் பத்தித்தான் பேசிக்கிட்டிருக்கேன். ஏன், பல சமயம் அவரோட நேர்ல பேசற மாதிரியே மனசளவில பேசிக்கிட்டுக் கூட இருக்கேன்.அதனால மகிழ்ச்சியாகவும் இருக்கேன்!" என்றாள்.

அப்போது உள்ளிருந்து வந்த கோதையின் தாய், "இவ இப்படி சொல்றா. ஆனா இவ உடம்பு இளைச்சு தோலெல்லாம் வெளுத்து, பசலை வந்திருக்கு. நீயே பாரு என்று கோதையின் தோல் வெளுத்திருந்த கையைப் பிடித்து நாயகியிடம் காட்டினாள்.

"அவர் இங்கே இருக்கும்போது அவரோட இருந்தேன். அவர் வெளியூஃ போனப்பறம் அவர் நினைப்பாகவே இருக்கேன். முன்னே இருந்த மாதிரி இப்பவும் அவரோடதானே இருந்துக்கிட்டிருக்கேன்! அப்புறம் ஏன் பசலை வருது?" என்றாள் கோதை, தன் தாயைப் பார்த்து.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 119
பசப்புறுபருவரல் (தோலின் நிறம் மாறி வருந்துதல்)

குறள் 1184
உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.

பொருள்:
நான் நினைப்பதெல்லாம் அவரைத்தான். சொல்வது எல்லாம் அவர் குணங்களைத்தாம்; இருந்தும் இந்தப் பசலை வந்துவிட்டதே; இது வஞ்சகம் அல்லவா?.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Saturday, May 6, 2023

1183. எடுத்துக் கொண்டதும், கொடுத்துச் சென்றதும்!

 வீட்டுக்கு வந்த மணிமேகலையை வரவேற்ற அழகம்மை, "வா, வா! ஒரு மாசமா வீட்டிலேயே முடக்கிக் கிடந்தவ இன்னிக்குத்தான் உன்னோட அங்காடிக்கு வரேன்னு சொல்லி இருக்கா" என்றாள்.

பிறகு உள்ளே திரும்பி, "லட்சுமி! மணிமேகல வந்தந்திருக்கா பாரு!" என்றாள் தன் மகளுக்குக் கேட்கும்படி.

"உள்ளிருந்து வந்த லட்சுமி, மணிமேகலையைப் பார்த்து, "வா, போகலாம்!" என்றாள்.

"ஏண்டி இப்படியேவா போவ? முகத்தில எண்ணெய் வழியுது. கையில முகத்தில் எல்லாம் அங்கங்கே தோல் நிறம் மாறி இருக்கு. முகத்தைக் கழுவிக்கிட்டு நல்ல புடவை கட்டிக்கிட்டு, தோல் நிறம் மாறி இருக்கிற இடங்கள்ள ஏதாவது களிம்பைத் தடவிக் கொஞ்சாமாவது நிற மாற்றங்களைச் சரி செஞ்சுக்கிட்டுப் போவியா?" என்றாள் அழகம்மை.

அழகம்மை பேசி முடிப்பதற்குள், லட்சுமி தெருவில் இறங்கி விட்டாள். வேறு வழியில்லாமல் மணிமேகலையும் அழகம்மையைப் பார்த்து விடைபெறுவது போல் தலையாட்டி விட்டு லட்சுமியைப் பின்தொடர்ந்தாள்.

தெருவில் சிறிது தூரம் நடந்ததும், "ஏண்டி உங்கம்மா சொல்றது சரிதானே! நீ எவ்வளவு அழகா இருப்பே! இப்ப உன் முகத்தைப் பார்க்கவே சகிக்கல. பசலை படர்ந்து தோல் வேற அங்கங்க நிறம் மாறி இருக்கு. தெருவில உன்னைப் பாக்கறவங்க கூட ஒரு மாதிரியாதான் பார்ப்பாங்க. உன் அம்மா சொன்னபடி கொஞ்சம் ஒப்பனை செஞ்சுக்கிட்டு வந்திருக்ககலாம் இல்ல?" என்றாள் மணிமேகலை.

"என்னவோ தெரியல. அவரு என்னை விட்டுப் பிரிஞ்சு வெளியூர் போனப்பறம் நான் மாறிட்ட மாதிரி இருக்கு. போறப்ப அவர் என்னோட அழகையும், வெட்கத்தையும் எடுத்துக்கிட்டு, பதிலுக்கு இந்தக் காதல் நோயையும், பசலை நோயையும் கொடுத்துட்டுப் போயிட்டாரோ என்னவோ!" என்றாள் லட்சுமி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 119
பசப்புறுபருவரல் (தோலின் நிறம் மாறி வருந்துதல்)

குறள் 1183
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து.

பொருள்:
காதல் நோயையும், பசலை நிறத்தையும் கைம்மாறாகக் கொடுத்து விட்டு அவர் என் அழகையும், நாணத்தையும் எடுத்துக் கொண்டு பிரிந்து சென்று விட்டார்.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Friday, May 5, 2023

1182. மேனியில் படர்ந்த பசலை!

காலையில் கண் விழித்ததும் பைங்கிளி தன் கைகளைப் பார்த்தாள். 

நேற்று கைகளில் தோல் சற்றே வெளுத்திருந்தது போல் தோன்றியது. இன்று இன்னும் சற்று அதிகமாக வெளுத்திருந்தது. பளபளவென்று இருந்த சருமம் இப்போது தன் பளபளப்பை இழந்து சாம்பல் பூத்திருந்தது போல் காணப்பட்டது

பைங்கிளி கோபத்துடன் கிணற்றடிக்குச் சென்றாள்.

கிணற்றிலிருந்து நீர் இழுக்கப்படும் சத்தம் கேட்டு அங்கே வந்த பைங்கிளியின் தாய் "என்னடி இது அதிசயமா இருக்கு? குளி குளின்னு நான் சொன்னாக்கூட சோம்பல் பட்டுக்கிட்டுக் குளிக்காம இருப்ப. இன்னிக்குக் காலையில எழுந்தவுடனேயே குளிக்கப் போயிட்டே!" என்றாள்.

பைங்கிளி தன் தாய்க்கு பதில் சொல்லவில்லை.

வாளியிலிருந்த தண்ணீரை உடலில் ஊற்றிக் கொண்டவள், மஞ்சளைத் தரையில் தேய்த்து மஞ்சள் குழைவை எடுத்து சாம்பல் படர்ந்தது போல் வெளிறி இருந்த கைகள் மீது அழுத்தித் தேய்த்தாள்.

தேய்க்கும்போதே, தன் மேனியில் படர்ந்திருந்த பசலையைப் பார்த்துப் பேசுவது போல் "ஏண்டி பசலை! என் கணவனோட பிரிவைத் தாங்க முடியாம நான் சாப்பாடு பிடிக்காம, தூக்கம் வராம தவிச்சுக்கிட்டிருக்கேன. நீ என்னடான்னா அவரோட பிரிவுதானே உன்னை உண்டாக்கிச்சுங்கற பெருமையோட என் உடம்பு மேல ஏறிப் பரவிக்கிட்டிருக்க! இந்த மஞ்சளைத் தேய்ச்சு உன்னைஅழிச்சுடறேன் பாரு!" என்றாள் பைங்களி.

"ஏண்டி, நான் கேக்கறதுக்கு பதில் சொல்லாம உன் காலைப் பாத்து ஏதோ பேசிக்கிட்டிருக்க! உன் கணவன் ஊருக்குப் போனாலும் போனான், நாளுக்கு நாள் உன் கிறுக்கு அதிகமாகிக்கிட்டே இருக்கு!" என்றபடியே உள்ளே திரும்பினாள் பைங்களியின் தாய்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 119
பசப்புறுபருவரல் (தோலின் நிறம் மாறி வருந்துதல்)

குறள் 1182
அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.

பொருள்:
அந்தக் காதலர் உண்டாக்கினார் என்னும் பெருமிதத்தோடு இந்தப் பசலை நிறம் என்னுடைய மேனிமேல் ஏறி ஊர்ந்து பரவி வருகிறது

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Monday, May 1, 2023

1181. காதலன் சென்றான்!

"என்னடி கொஞ்ச நாளா ஒரு மாதிரி இருக்கே?" என்றாள் வாசவியின் தாய்.

"எப்படி இருக்கேன்?" என்றாள் வாசவி.

"உடம்பெல்லாம் இளைச்சு சோகை பிடிச்ச மாதிரி இருக்கு. தோல் கூட வெளுத்திருக்கு!"

"பரவாயில்லம்மா. நான் கருப்புதானே? கொஞ்சம் தோல் வெளுத்தால் நல்லதுதானே!"

"கருப்புத்தோல் வெளுத்து ஒரு மாதிரி பச்சையா இல்ல இருக்கு, பாசி படர்ந்த மாதிரி!"

'நாளானால் பாசி படரத்தானே செய்யும்?' என்று முணுமுணுத்தாள் வாசவி.

'நீண்ட நாள் பராமரிக்கப்படாத தரையில் பாசி படர்வது போல் காதலனைப் பிரிந்து வாடும் உடலில் நாட்பட நாட்பட பசலை படரத்தானே செய்யும்?' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் வாசவி. 

'உன்னைப் பிரிந்து வெளியூர் செல்கிறேன். திரும்பி வரப் பல நாட்கள் ஆகும் என்று காதலன் சொன்னபோது மறுப்புச் சொல்லாமல் தலையட்டி விட்டு இன்று உடல் சோர்ந்து தோல் நிறம் மாதிரி என் மன வருத்தத்தை உடல் பிரதிபலிக்கிறதே என்று வருந்தி என்ன பயன்!'

"என்னடி பதில் சொல்ல மாட்டேங்கற? மருத்துவர்கிட்ட போகலாமா?" என்றாள் தாய்.

"வேண்டாம்மா! தானே சரியாயிடும்" என்ற வாசவி, 'காதலன் திரும்பியதும் சரியாகி விடும்தான். அதுவரை ஏன் உன் உடல் இளைத்து நிறம் மாறி இருக்கிறது என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டுமே!' என்று கவலை கொண்டாள்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 119
பசப்புறுபருவரல் (தோலின் நிறம் மாறி வருந்துதல்)

குறள் 1181
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற.

பொருள்:
என்னைப் பிரிந்து செல்வதற்கு என் காதலர்க்கு ஒப்புதல் அளித்துவிட்டேன்; ஆனால், இப்போது பிரிவுத் துன்பத்தால் என்னுடலில் பசலை படர்வதை, யாரிடம் போய்ச் சொல்வேன்?.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

1308. பிரிவுத் துயர்?

"ஏண்டி, நீ என்ன சின்னக் குழந்தையா, புருஷன் ஊருக்குப் போனதை நினைச்சு இவ்வளவு வருத்தப்படற? ஒரு பதினைஞ்சு நாள் புருஷனை விட்டுட்டு இருக்க ம...