Friday, May 5, 2023

1182. மேனியில் படர்ந்த பசலை!

காலையில் கண் விழித்ததும், பைங்கிளி தன் கைகளைப் பார்த்தாள். 

நேற்று கைகளில் தோல் சற்றே வெளுத்திருந்தது போல் தோன்றியது. இன்று, இன்னும் சற்று அதிகமாக வெளுத்திருந்தது. பளபளவென்று இருந்த சருமம், இப்போது தன் பளபளப்பை இழந்து, சாம்பல் பூத்திருந்தது போல் காணப்பட்டது

பைங்கிளி கோபத்துடன் கிணற்றடிக்குச் சென்றாள்.

கிணற்றிலிருந்து நீர் இழுக்கப்படும் சத்தம் கேட்டு அங்கே வந்த பைங்கிளியின் தாய், "என்னடி இது, அதிசயமா இருக்கு? குளி குளின்னு நான் சொல்றப்பல்லாம் சோம்பல்பட்டுக்கிட்டுக் குளிக்காம இருப்ப. இன்னிக்குக் காலையில எழுந்தவுடனேயே குளிக்கப் போயிட்டே!" என்றாள்.

பைங்கிளி தன் தாய்க்கு பதில் சொல்லவில்லை.

வாளியிலிருந்த தண்ணீரை உடலில் ஊற்றிக் கொண்டவள், மஞ்சளைத் தரையில் தேய்த்து, மஞ்சள் குழைவை எடுத்து, சாம்பல் படர்ந்தது போல் வெளிறி இருந்த கைகள் மீது அழுத்தித் தேய்த்தாள்.

தேய்க்கும்போதே, தன் மேனியில் படர்ந்திருந்த பசலையைப் பார்த்துப் பேசுவது போல் "ஏண்டி பசலை! என் கணவனோட பிரிவைத் தாங்க முடியாம, சாப்பாடு பிடிக்காம, தூக்கம் வராம நான் தவிச்சுக்கிட்டிருக்கேன. நீ என்னடான்னா அவரோட பிரிவுதானே உன்னை உண்டாக்கிச்சுங்கற பெருமையோட என் உடம்பு மேல ஏறிப் பரவிக்கிட்டிருக்க! இந்த மஞ்சளைத் தேய்ச்சு உன்னை அழிச்சுடறேன் பாரு!" என்றாள் பைங்களி.

"ஏண்டி, நான் கேக்கறதுக்கு பதில் சொல்லாம, உன் காலைப் பாத்து ஏதோ பேசிக்கிட்டிருக்க! உன் கணவன் ஊருக்குப் போனாலும் போனான், நாளுக்கு நாள் உன் கிறுக்கு அதிகமாகிக்கிட்டே இருக்கு!" என்றபடியே உள்ளே திரும்பினாள் பைங்களியின் தாய்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 119
பசப்புறுபருவரல் (தோலின் நிறம் மாறி வருந்துதல்)

குறள் 1182
அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.

பொருள்:
அந்தக் காதலர் உண்டாக்கினார் என்னும் பெருமிதத்தோடு, இந்தப் பசலை நிறம் என்னுடைய மேனி மேல் ஏறி ஊர்ந்து பரவி வருகிறது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...