Wednesday, October 14, 2020

1124. உயிர் போய் உயிர் வந்து...

காலில் கட்டுப் போடப்பட்டு மருத்துவமனக் கட்டிலில் படுத்திருந்த அரவிந்தனைப் பார்த்ததும் மீராவுக்கு அழுகை வந்து விடும் போலிருந்தது.

"எப்படி ஆச்சு இது? நீ ரொம்ப மெதுவா, கவனமா பைக் ஓட்டறவனாச்சே?" என்றாள் அவள். 

"அது நீ பின்னால உக்கந்திருக்கறப்ப. தனியா ஓட்டறப்ப நன் எப்படி ஒட்டுவேன்னு உனக்கு எப்படித் தெரியும்?" என்று சொல்லிச் சிரித்தான் அரவிந்தன்.

"இவ்வளவு வலியிலேயும் எப்படித்தான் சிரிக்கிறியோ!"

"ஆ..."

"என்ன ஆச்சு, ரொம்ப வலிக்குதா? நர்ஸைக் கூப்பிட்டடுமா?" என்றாள் மீரா பதறியவளாக.

"வேண்டாம். உங்கிட்ட பேசினதில வலியை மறந்திருந்தேன். நீ இவ்வளவு வலியிலேயும் எப்படி சிரிக்கிறேன்னு கேட்டு என் வலியை ஞாபகப்படுப்படுத்திட்ட! அதான் கத்தினேன். நர்ஸைக் கூப்பிட்டுடாதே. அப்புறம் பிரச்னை ஆயிடும்" என்றான் அரவிந்தன்.

"என்ன பிரச்னை ஆயிடும்? ஊசி போட்டுடுவாங்கன்னு பயமா? நீ என்ன சின்னக் குழந்தையா?"

"ஊசிக்கெல்லாம் பயப்படற உடம்பா இது? ரெண்டு நாள்ள எவ்வளவு ஊசி பாத்துடுச்சு தெரியுமா?"

"பின்ன என்ன பிரச்னை?"

"கண் முன்னால ரெண்டு பெண்கள் இருந்தா யாரை சைட் அடிக்கறதுன்னு குழப்பம் வருமே, அந்தப் பிரச்னையைச் சொன்னேன்!"

"ஏற்கெனவே அடிபட்டுப் படுத்திருக்கே. இல்லேன்னா உன் மண்டையிலேயே போட்டிருப்பேன்" என்றாள் மீரா சிரிப்பை அடக்க முடியாமல். விபத்தில் அடிபட்ட காதலன் விளையாட்டாகப் பேசிக் கொண்டிருந்தது அவளுக்கு ஆறுதலாக இருந்தது.

"அது சரி. எப்படி அடிபட்டுதுன்னு சொல்லவே இல்லையே!"

" பைக்கில வேகமாப் போயிட்டிருந்தேன். ஏதோ ஒரு பெரிய வண்டியிலேந்து ரோடில நிறைய எண்ணெய் கசிஞ்சிருக்கும் போலருக்கு. அதில வழுக்கி வண்டி விழுந்திடுச்சு. இந்தக் கால்ல ஒரு எலும்பு உடைஞ்சிருக்கு. அதை நேரா வச்சுக் கட்டி இருக்காங்க. இன்னும் எத்தனே நாளுக்கு இப்படிக் காலை அசைக்காம படுத்திருக்கணுமோ தெரியல"

"ரொம்ப வலிக்குதா?" என்றாள் மீரா அனுதாபத்துடன்.

"ரொம்ப ஒண்ணும் இல்ல. உயிர் போற அளவுக்கு வலிக்குது. அவ்வளவுதான்!"

"உயிர் போற அளவுக்கு வலிக்குதுன்னு எப்படிச் சொல்ற? இதுக்கு முன்னாடி உனக்கு உயிர் போனதில்லேயே!" என்றாள் மீரா அவன் பாணியிலேயே அவனைச் சீண்டியவளாக.

"ஏன் போனதில்ல? எத்தனையோ தடவை போயிருக்கே!"

"என்ன உளறரே?"

"உண்மையைத்தான் சொல்றேன். நீ  என்னோட இருந்துட்டு என்னை விட்டுப் பிரிஞ்சு போனப்ப எல்லாம் என் உயிர் போயிடும். மறுபடி உன்னைப் பாக்கறப்பதான் போன உயிர் திரும்ப வரும். இது மாதிரி எத்தனையோ தடவை நடந்திருக்கே!"

சற்று நேரம் அரவிந்தனுடன் பேசி விட்டுக் கிளம்பினாள் மீரா. கிளம்பும்போது, "கவலைப்படாதே! சீக்கிரமே டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க"  என்றாள்.

மீரா அறை வாசலுக்குப் போனதும், அரவிந்தனிடமிருந்து "ஆ" என்ற அலறல் கேட்டது.

திரும்பிப் பார்த்த மீரா,"என்ன வலிக்குதா?" என்றாள்.

"வலிக்கல. உயிர் போகுது. நீ போற இல்ல, அதான்!" என்றான் அரவிந்தன் சிரித்தபடி.

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 113
காதற்சிறப்புரைத்தல்   

குறள் 1124
வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து.

பொருள்:
ஆராய்ந்து அணிகலன்களை அணிந்திருக்கும் இவள் கூடும் போது உயிர்க்கு வாழ்வு போன்றவள், பிரியும் போது உயிர்க்கு சாவு போன்றவள்.

அறத்துப்பால்                                                                                                   பொருட்பால்
Sunday, October 11, 2020

1123. கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு!

 "உன் மொபைலோட ரிங்டோனை மாத்தி இருக்க போலருக்கே? 'கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு'ன்னு ஒரு பழைய பாட்டு வருது?" என்றாள் விஜி.

"ஆமாம். இப்ப நீ என் கண்ணுக்குள்ளதானே இருக்கே! கண்ணை மூடினா கூட உன் முகம்தான் தெரியுது' என்றான் கோபி.

"அப்படியா, எங்கே பாக்கறேன்!" என்ற விஜி அவன் கண்களை உற்றுப் பார்த்தாள்.

"என்ன நீ இருக்கறது தெரியுதா?"

"ஒரு ஓரத்தில இருக்கிற மாதிரி இருக்கு!" என்றாள் விஜி விளையாட்டாக.

"சரி. என் வீட்டுக்கு வான்னு கூப்பிட்டுக்கிட்டே இருக்கேனே, எப்ப வரப்போற?" என்றான் கோபி.

"நீ தனியா ஒரு ரூம்ல இருக்க. நான் அங்க வந்தா நல்லாவா இருக்கும்?"

"ரொம்ப நல்லா இருக்கும். கீழ் வீட்டில இருக்கற வீட்டுக்காரரர் நான் அவர் பொண்ணைக் காதலிக்கறேனோன்னு சந்தேகப்படறாரு. உன்னை என் காதலின்னு அவருக்கு அறிமுகப்படுத்தினா அவரு நிம்மதியாத் தூங்குவாரு!"

"வர ஞாயித்துக் கிழமை அன்னிக்கு வரேன்" என்றாள் விஜி.

ஞாயிறன்று காலை தன் வீட்டுக்கு வந்த விஜியைத் தான் மணந்து கொள்ளப் போகும் பெண் என்று வீட்டுக்காரருக்கு அறிமுகப்படுத்தி விட்டு, அவளை மேலே இருக்கும் தன் அறைக்கு அழைத்து வந்தான் கோபி.

ஒரு அறை, ஒரு சமையலறை என்று இரண்டு சிறிய அறைகளைக் கொண்டிருந்தது கோபியின் 'வீடு.'

உள்ளே நுழைந்ததுமே விஜி, "என்ன இது? அறை முழுக்க அடைச்சுக்கற மாதிரி கட்டிலைப் போட்டு வச்சிருக்கே. அறைக்குள்ள கால் வைக்கவே இடம் இல்லையே!" என்றாள்.

"என்ன செய்யறது? இது சின்ன அறை. எனக்குக் கட்டில்ல படுத்தாத்தான் தூக்கம் வரும். நான் மட்டும்தானே இருக்கேன்? இப்பதான் முதல் தடவையா ஒரு விருந்தாளியா நீ வந்திருக்க! கவலைப்படாதே. கல்யாணத்துக்கப்பறம் நாம வேற வீட்டிலதான் இருக்கப் போறோம்!" என்றான் கோபி.

சற்று நேரம் கட்டிலில் உட்கார்ந்து அவனிடம் பேசி விட்டு விஜி போய் விட்டாள்.

டுத்த சனிக்கிழமை விஜியைச் சந்தித்தபோது, "நாளைக்கும் நீ என் வீட்டுக்கு வரணும்" என்றான் கோபி.

"போன வாரம்தானே வந்தேன்? மறுபடி எதுக்கு வரச் சொல்ற?" 

"வா. ஓரு சர்ப்ரைஸ் இருக்கு!"

அடுத்த நாள் கோபியின் அறைக்குள் காலடி எடுத்து வைத்ததுமே விஜிக்கு அந்த வியப்பு காத்திருந்தது. அறையில் இருந்த கட்டில் இல்லை. அறை இப்போது பெரிதாகத் தோன்றியது.

"கட்டில் எங்கே?" என்றாள் விஜி வியப்புடன்.

"வித்துட்டேன்!"

"வித்துட்டியா? ஏன்?'

"நீதானே கட்டிலைப் போட்டதால அறையில கால் வைக்கக் கூட இடம் இல்லேன்னு சொன்ன?"

 "கட்டில்ல படுத்தாதான் தூங்கம் வரும்னு சொன்ன?"

"நாலு நாளா தரையிலதான் படுத்துத் தூங்கிட்டிருக்கேன். பழகிடும்னு நினைக்கிறேன்" என்றான் கோபி சிரித்தபடி.

அவனை வியப்புடன் பார்த்த விஜி, அவன் முகத்தைத் தன் கைகளால் பிடித்து அவன் கண்களைப் பார்த்தாள். "இப்ப சொல்றேன். உன் கண்ணுக்குள்ள நான் முழுக்க இருக்கேன்" என்றாள்.

"ஒரு ஓரத்தில இருக்கற மாதிரி இருக்குன்னு அன்னிக்கு சொன்னியே!" என்றான் கோபி அவளைச் சீண்டும் விதமாக.

"நான் கால் வைக்க இடம் இல்லைன்னு சொன்னதுக்காகக் கட்டிலையே தூக்கிப் போட்டவன், உன் கண்ணுக்குள்ள எனக்கு இடம் போதலை, அதான் ஓரத்தில இருக்கேன்னு நினைச்சு உன் கண்மணியையே தூக்கிப் போட்டுடுவியோன்னு பயந்துதான் உன் கண்ணுக்குள்ளே முழுக்க இருக்கேங்கறதை இப்ப ஒத்துக்கிட்டேன்" என்றாள் விஜி

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 113
காதற்சிறப்புரைத்தல்   

குறள் 1123
கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்.

பொருள்:
என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே நீ போய் விடு, நான் போதவில்லையே!.

அறத்துப்பால்                                                                                                   பொருட்பால்

Friday, October 9, 2020

1122. ஒரு காதலனின் ஆன்மீக அனுபவம்!

"என்ன புதுசா நெத்தியில குங்குமம் எல்லாம்? திடீர்னு பக்திமான் ஆயிட்டியா?"

"ஆமாம். திடீர்னுதான். அதுக்கு நீதான் காரணம்!" 

"நானா? நான் ரெண்டு நாளா ஊர்லயே இல்ல. நான் எப்படி உனக்கு பக்தி உணர்வை ஊட்டி இருக்க முடியும்?"

"நீ ஊர்ல இல்லாததுதான் காரணம்! ரெண்டு நாளா உன்னைப் பாக்க முடியாம பைத்தியம் பிடிச்ச மாதிரி ஆகி தெருவில சுத்திக்கிட்டிருந்தேன். அப்ப ஒரு கோவில்லேந்து ஒத்தர் உபன்யாசம் பண்ணிக்கிட்டிருந்தது என் காதில விழுந்தது. காதல்னு ஏதோ காதில விழுந்ததும் உள்ளே போய் உக்காந்து உபன்யாசம் கேட்டேன்."

"அட முட்டாளே! பக்தர்கள் கடவுள் கிட்ட அன்பு செலுத்தறதைக் கூட சில சமயம் காதல்னு சொல்லுவாங்க. இது தெரியாம ஏதோ எதிர்பாத்து ஏமாந்தியாக்கும்!"

"பாத்தியா? உனக்குத் தெரிஞ்சிருக்கு. எனக்குத் தெரியல! ஆனா நான் ஒண்ணும் ஏமாந்து போகல."

"ஆமாம். தலை குப்புற விழுந்த, ஆனா மீசையில மண் ஒட்டல! காதல்னு நினைச்சுப் போய் ஏமாந்து, போனதை நியாயப்படுத்தறதுக்காக பக்திமானாத் திரும்பி வந்துட்ட. அப்படித்தானே?"

"காதல்ங்கற வார்த்தையைக் கேட்டு உள்ள போய் உட்காந்து அவரு பக்தியைப் பத்திப் பேசினதைக் கேட்டப்ப மொதல்ல கொஞ்சம் ஏமாத்தமாத்தான் இருந்தது. ஆனா ஆழ்வார்கள், நாயன்மார்கள்ளாம் தங்களை நாயகிகளாகவும், கடவுளைத் தங்கள் நாயகராகவும் நினைச்சு பக்தி செலுத்தினாங்கன்னு புரிஞ்சதும், பக்தி காதலை மதிக்கிறப்ப காதலிக்கிற நானும் பக்தியை மதிக்கணும்னுதான் இந்தக் குங்குமம் எல்லாம்!"

"கதை ரொம்ப நல்லா இருக்கு!"

"கதை இன்னும் முடியலை. நான் புரிஞ்சுக்கிட்ட முக்கியமான விஷயத்தை இன்னும் சொல்லவே இல்லையே!"

"அது என்ன விஷயம்?"

"நாம எல்லாம் உடம்பு, கடவுள் உடம்புக்குள்ள இருக்கற உயிர்னு புரிஞ்சுக்கிட்டதாலதான் ஆழ்வார்கள் ஒரு கணம் கூடக் கடவுளை விட்டுப் பிரிஞ்சிருக்க முடியாம அவரோட சேரணும்னு துடிச்சாங்களாம். உயிர் இல்லாம உடம்பு இருக்க முடியாது இல்லையா?'

"சரி. அதுக்கு?"

"உன்னைப் பிரிஞ்சு ஒருநாள் கூட என்னால ஏன் இருக்க முடியலன்னு புரிஞ்சுக்கிட்டேன். ஏன்னா நான் உடம்பு, நீ உயிர்!" 

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 113
காதற்சிறப்புரைத்தல்   

குறள் 1122
உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு..

பொருள்:
எனக்கும் இந்தப் பெண்ணிற்கும் இடையிலான உறவு உடலுக்கும் உயிருக்கும் இடையே உள்ள உறவைப் போன்றது.

அறத்துப்பால்                                                                                                   பொருட்பால்

1128. ஆறிய காப்பி!

"என்ன நம்ம பொண்ணு ஆம்பளைங்க மாதிரி அடிக்கடி காப்பி குடிக்கறா?" என்றார் சபாபதி. "ஏன், பொம்பளைங்க அடிக்கடி காப்பி குடிக்கக் கூட...