"என்ன புதுசா நெத்தியில குங்குமம் எல்லாம்? திடீர்னு பக்திமான் ஆயிட்டியா?"
"ஆமாம். திடீர்னுதான். அதுக்கு நீதான் காரணம்!"
"நானா? நான் ரெண்டு நாளா ஊர்லயே இல்ல. நான் எப்படி உனக்கு பக்தி உணர்வை ஊட்டி இருக்க முடியும்?"
"நீ ஊர்ல இல்லாததுதான் காரணம்! ரெண்டு நாளா உன்னைப் பாக்க முடியாம, பைத்தியம் பிடிச்ச மாதிரி ஆகித் தெருவில சுத்திக்கிட்டிருந்தேன். அப்ப, ஒரு கோவில்லேந்து ஒத்தர் உபன்யாசம் பண்ணிக்கிட்டிருந்தது என் காதில விழுந்தது. காதல்னு ஏதோ காதில விழுந்ததும், உள்ளே போய் உக்காந்து உபன்யாசம் கேட்டேன்."
"அட, முட்டாளே! பக்தர்கள் கடவுள் கிட்ட அன்பு செலுத்தறதைக் கூட சில சமயம் காதல்னு சொல்லுவாங்க. இது தெரியாம, ஏதோ எதிர்பாத்து ஏமாந்தியாக்கும்!"
"பாத்தியா? உனக்குத் தெரிஞ்சிருக்கு. எனக்குத் தெரியல! ஆனா, நான் ஒண்ணும் ஏமாந்து போகல."
"ஆமாம். தலை குப்புற விழுந்த, ஆனா மீசையில மண் ஒட்டல! காதல்னு நினைச்சுப் போய் ஏமாந்து உபன்யாசத்துக்குப் போனதை நியாயப்படுத்தறதுக்காக, பக்திமானாத் திரும்பி வந்துட்ட. அப்படித்தானே?"
"காதல்ங்கற வார்த்தையைக் கேட்டு உள்ள போய் உட்காந்து, அவரு பக்தியைப் பத்திப் பேசினதைக் கேட்டப்ப, முதல்ல கொஞ்சம் ஏமாத்தமாத்தான் இருந்தது. ஆனா, ஆழ்வார்கள், நாயன்மார்கள் எல்லாம் தங்களை நாயகிகளாகவும், கடவுளைத் தங்கள் நாயகராகவும் நினைச்சு பக்தி செலுத்தினாங்கன்னு புரிஞ்சதும், பக்தி காதலை மதிக்கிறப்ப, காதலிக்கிற நானும் பக்தியை மதிக்கணும்னுதான் இந்தக் குங்குமம் எல்லாம்!"
"கதை ரொம்ப நல்லா இருக்கு!"
"கதை இன்னும் முடியலை. நான் புரிஞ்சுக்கிட்ட முக்கியமான விஷயத்தை இன்னும் சொல்லவே இல்லையே!"
"அது என்ன விஷயம்?"
"நாம எல்லாம் உடம்பு, கடவுள் உடம்புக்குள்ள இருக்கற உயிர்னு புரிஞ்சுக்கிட்டதாலதான், ஆழ்வார்கள் ஒரு கணம் கூடக் கடவுளை விட்டுப் பிரிஞ்சிருக்க முடியாம, அவரோட சேரணும்னு துடிச்சாங்களாம். உயிர் இல்லாம உடம்பு இருக்க முடியாது இல்லையா?'
"சரி. அதுக்கு?"
"உன்னைப் பிரிஞ்சு ஒருநாள் கூட என்னால ஏன் இருக்க முடியலன்னு புரிஞ்சுக்கிட்டேன். ஏன்னா, நான் உடம்பு, நீ உயிர்!"
பொருள்:
எனக்கும் இந்தப் பெண்ணிற்கும் இடையிலான உறவு, உடலுக்கும் உயிருக்கும் இடையே உள்ள உறவைப் போன்றது.
No comments:
Post a Comment