Sunday, October 11, 2020

1123. கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு!

 "உன் மொபைலோட ரிங்டோனை மாத்தி இருக்க போலருக்கே? 'கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு'ன்னு ஒரு பழைய பாட்டு வருது?" என்றாள் விஜி.

"ஆமாம். இப்ப, நீ என் கண்ணுக்குள்ளதானே இருக்கே! கண்ணை மூடினா கூட, உன் முகம்தான் தெரியுது" என்றான் கோபி.

"அப்படியா? எங்கே, பாக்கறேன்!" என்ற விஜி, அவன் கண்களை உற்றுப் பார்த்தாள்.

"என்ன, நீ இருக்கறது தெரியுதா?"

"ஒரு ஓரத்தில இருக்கிற மாதிரி இருக்கு!" என்றாள் விஜி, விளையாட்டாக.

"சரி. என் வீட்டுக்கு வான்னு கூப்பிட்டுக்கிட்டே இருக்கேனே, எப்ப வரப் போற?" என்றான் கோபி.

"நீ தனியா ஒரு ரூம்ல இருக்க. நான் அங்க வந்தா, நல்லாவா இருக்கும்?"

"ரொம்ப நல்லா இருக்கும். கீழ் வீட்டில இருக்கற வீட்டுக்காரர், நான் அவர் பொண்ணைக் காதலிக்கறேனோன்னு சந்தேகப்படறாரு. உன்னை என் காதலின்னு அவருக்கு அறிமுகப்படுத்தினா, அவரு நிம்மதியாத் தூங்குவாரு!"

"வர ஞாயித்துக் கிழமை அன்னிக்கு வரேன்" என்றாள் விஜி.

ஞாயிறன்று காலை தன் வீட்டுக்கு வந்த விஜியைத் தான் மணந்து கொள்ளப் போகும் பெண் என்று வீட்டுக்காரருக்கு அறிமுகப்படுத்தி விட்டு, அவளை மேலே இருக்கும் தன் அறைக்கு அழைத்து வந்தான் கோபி.

ஒரு அறை, ஒரு சமையலறை என்று இரண்டு சிறிய அறைகளைக் கொண்டிருந்தது கோபியின் 'வீடு.'

உள்ளே நுழைந்ததுமே விஜி, "என்ன இது? அறை முழுக்க அடைச்சுக்கற மாதிரி கட்டிலைப் போட்டு வச்சிருக்கே. அறைக்குள்ள கால் வைக்கவே இடம் இல்லையே!" என்றாள்.

"என்ன செய்யறது? இது சின்ன அறை. எனக்குக் கட்டில்ல படுத்தாதான் தூக்கம் வரும். நான் மட்டும்தானே இருக்கேன்? இப்பதான் முதல் தடவையா ஒரு விருந்தாளியா நீ வந்திருக்க! கவலைப்படாதே. கல்யாணத்துக்கப்பறம், நாம வேற பெரிய வீட்டிலதான் இருக்கப் போறோம்!" என்றான் கோபி.

சற்று நேரம் கட்டிலில் உட்கார்ந்து அவனிடம் பேசி விட்டு, விஜி போய் விட்டாள்.

டுத்த சனிக்கிழமை விஜியைச் சந்தித்தபோது, "நாளைக்கும் நீ என் வீட்டுக்கு வரணும்" என்றான் கோபி.

"போன வாரம்தானே வந்தேன்? மறுபடி எதுக்கு வரச் சொல்ற?" 

"வா. ஓரு சர்ப்ரைஸ் இருக்கு!"

அடுத்த நாள் கோபியின் அறைக்குள் காலடி எடுத்து வைத்ததுமே, விஜிக்கு அந்த வியப்பு காத்திருந்தது. அறையில் கட்டில் இல்லை. அறை இப்போது பெரிதாகத் தோன்றியது.

"கட்டில் எங்கே?" என்றாள் விஜி, வியப்புடன்.

"வித்துட்டேன்!"

"வித்துட்டியா? ஏன்?'

"கட்டில் போட்டதால, அறையில கால் வைக்கக் கூட இடம் இல்லேன்னு நீதானே சொன்ன?"

 "கட்டில்ல படுத்தாதான் தூக்கம் வரும்னு சொன்ன?"

"நாலு நாளா தரையிலதான் படுத்துத் தூங்கிக்கிட்டிருக்கேன். பழகிடும்னு நினைக்கிறேன்" என்றான் கோபி, சிரித்தபடி.

அவனை வியப்புடன் பார்த்த விஜி, அவன் முகத்தைத் தன் கைகளால் பிடித்து, அவன் கண்களைப் பார்த்தாள். "இப்ப சொல்றேன். உன் கண்ணுக்குள்ள நான் முழுக்க இருக்கேன்" என்றாள்.

"ஒரு ஓரத்தில இருக்கற மாதிரி இருக்குன்னு அன்னிக்கு சொன்னியே!" என்றான் கோபி, அவளைச் சீண்டும் விதமாக.

"உன் அறைக்குள்ள நான் கால் வைக்க இடம் இல்லைன்னு சொன்னதுக்காகக் கட்டிலையே தூக்கிப் போட்டவன், உன் கண்ணுக்குள்ள எனக்கு இடம் போதலை, அதான் ஓரத்தில இருக்கேன்னு நினைச்சு, உன் கண்மணியையே தூக்கிப் போட்டுடுவியோன்னு பயந்துதான், உன் கண்ணுக்குள்ளே முழுக்க இருக்கேங்கறதை இப்ப ஒத்துக்கிட்டேன்" என்றாள் விஜி.

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 113
காதற்சிறப்புரைத்தல்   

குறள் 1123
கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்.

பொருள்:
என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே நீ போய் விடு, நான் விரும்பும் காதலிக்கு இடம் போதவில்லையே!

அறத்துப்பால்                                                                                                   பொருட்பால்

No comments:

Post a Comment

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...