Sunday, September 25, 2022

1146. ஒரே நாள் உனை நான்....

"இன்னிக்கு சந்திர கிரகணம். எங்கேயும் வெளியில போகாதே!" என்றாள் அலர்மேல்மங்கை, தன் மகள் செல்வியிடம்.

"கிரகணத்தப்ப ஏன் வெளியில போகக் கூடாது?" என்றாள் செல்வி.

"எதுக்கெடுத்தாலும் எதிர்த்துக் கேள்வி கேக்காதே! இந்த ராத்திரியில நீ எதுக்கு வெளியில போகணும்?"

"நான் எங்கேயும் போகப் போறதில்லம்மா! கிரகணத்தப்ப ஏன் வெளியில போகக் கூடாதுன்னு தெரிஞ்சுக்கறதுக்காகத்தான் கேக்கறேன்."

"ஏன்னா, நான் உங்கிட்ட முக்கியமா ஒரு விஷயம் பேசணும்! அதுவும் உங்கப்பா வரத்துக்குள்ள பேசணும்!" என்றாள் அலர்மேல்மங்கை.

"பேசு! அதுக்கு ஏன் கிரகணத்தைக் காரணம் சொல்ற?" என்ற செல்வி, முற்றத்துக்குப் போய் வானத்தைப் பார்த்து விட்டு, "இப்பதான் கிரகணம் பிடிக்க ஆரம்பிச்ச மாதிரி இருந்தது. அதுக்குள்ள பாதி நிலாவை முழுங்கிடிச்சே இந்த ராகு!" என்றாள்.

"ஆமாம். இன்னும் அரை மணியில முழுசாப் புடிச்சுடும்னு நினைக்கிறேன்" என்ற அலர்மேல்மங்கை, மகளின் தோளைப் பிடித்து அழுத்தி, "இப்படி உக்காரு" என்றாள்.

ஒரு நிமிடம் மௌனமாக இருந்து விட்டு, "செல்வி! நீ  பெருமாளைக் காதலிக்கிறது எனக்குத் தெரியும். உங்கப்பாகிட்ட சொல்லி சம்மதம் வாங்கறேன். அதுவரைக்கும் அவனோட அதிகமாப் பழகாதேன்னு உங்கிட்ட சொல்லி இருக்கேனா இல்லையா?" என்றாள் அலர்மேல்மங்கை.

"ஆமாம்மா! நீ சொன்னபடிதானே நடந்துக்கிறேன்!"

"பொய் சொல்லாதேடி! நீ பெருமாளோட குளத்தங்கரையில உட்கார்ந்து பேசினதைப் பெரியநாயகம் பாத்திருக்கா. 'என்ன மங்கை, உன் பொண்ணு பெருமாளோட சுத்திக்கிட்டிருக்காளே!'ன்னு அவ எங்கிட்ட வந்து சொல்றா."

"ஏம்மா, பெருமாளைப் பாக்கப் போறேன்னு  உங்கிட்ட சொல்லிட்டுத்தானே போனேன்?" என்றாள் செல்வி, சற்றே கோபத்துடன்.

"ஒரு நாளைக்கு எங்கிட்ட சொல்லிட்டுப் போன. சரி. அப்புறம், ஒருநாள் உங்களைக் கோவில்ல பார்த்ததா கோமளம் வந்து சொன்னாளே, அது?"

"அப்புறம்?"

"இன்னொரு நாள் நீங்க ஆத்தங்கரை ஓரமா நடந்து போனதைப் பார்த்ததா பர்வதம் வந்து சொன்னா!"

"இன்னும் யார் என்ன சொன்னாங்க? எல்லாத்தையும் சொல்லிடு!" என்றாள் செல்வி. இப்போது அவள் முகத்தில் கோபம் மறைந்து, ஒருவிதக் குறும்பு குடிகொண்டிருந்தது.

"ஏண்டி, நான் என்ன கதையா சொல்லிக்கிட்டிருக்கேன், ஒவ்வொருத்தர் சொன்னதையும் விவரிச்சுச் சொல்ல? ரெண்டு மூணு நாள் நீ பெருமாளோட சுத்தினதை மத்தவங்க பாத்திருக்காங்கன்னு சொல்றேன். அது போதாதா? அதுக்கு என்ன சொல்ற?" என்றாள் அலர்மேல்மங்கை, கோபத்துடன்.

செல்வி பெரிதாகச் சிரித்தாள்.

"என்னடி சிரிக்கிற? சிரிக்கிற விஷயமா இது?"

"அம்மா, அம்மா! நான் பெருமாளை வெளியில சந்திச்சது ஒருநாள்தான். கோவிலுக்குப் போனோம். கொஞ்ச நேரம் குளத்தங்கரையில உட்கார்ந்திருந்தோம். அப்புறம் கொஞ்ச நேரம் ஆத்தங்கரை ஓரமா நடந்தோம். வேற எங்கேயாவது மரத்தடியில கூட உட்கார்ந்திருக்கலாம். இந்த ஒரு நாள் சந்திப்பை, ஏதோ பல நாள் நடந்த மாதிரி இந்த ஊர்க்காரங்க பேசறாங்கன்னா, நீயும் அதைக் கேட்டுட்டு என்னைக் கண்டிக்க வரியே! உன் பேச்சை மீறி நான் எப்பவுமே நடந்துக்க மாட்டேம்மா!" என்று சொல்லித் தாயின் முகத்தைத் தன் கைகளால் அன்புடன் அழுத்தினாள் செல்வி.

உடனே முற்றத்துக்கு ஓடி நிலவைப் பார்த்தவள், "அம்மா, இங்கே பாரேன்! இந்தப் பாம்பு நிலாவை முக்கால்வாசி முழுங்கிடுச்சு!" என்று கூவினாள், உற்சாகமாக.

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 115
அலரறிவுறுத்தல்  (காதலைப் பற்றி ஊரார் பேசுதல்)

குறள் 1146
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.

பொருள்:
காதலரைக் கண்டது ஒருநாள்தான், அதனால் உண்டாகிய அலரோ (ஊர்ப் பேச்சோ), திங்களைப் பாம்பு கொண்டது போல் எங்கும் பரந்து விட்டது.

Read 'The Lunar Eclipse' the English version of this story by the same author. 

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Saturday, September 24, 2022

1145. பூங்குழலியின் போதை!

"இந்தக் குடிப்பழக்கத்தை நிறுத்தச் சொல்லி உங்கிட்ட எவ்வளவு நாளா சொல்லிக்கிட்டிருக்கேன்? நிறுத்த மாட்டேங்கறியே!" என்றாள் பூங்குழலி.

"முயற்சி பண்ணிக்கிட்டுத்தான் இருக்கேன், ஆனா முடியல. அந்த போதை வேண்டி இருக்கே!" என்றான் இளங்குமரன்.

"உனக்கு மட்டும் ஏன் போதை வேண்டி இருக்கு? எனக்கு வேண்டி இருக்கலையே!"

"எல்லாருக்கும் ஏதோ ஒரு போதை வேண்டித்தான் இருக்கும். உனக்கு போதை கொடுக்கற விஷயம் எதுன்னு எனக்குத் தெரியல!"

"உன்னால குடிப்பழக்கத்தை விட முடியலைங்கறதுக்காக எல்லாருக்கும் ஏதோ ஒரு போதை வேணும்னு சொல்லாதே!" என்ற பூங்குழலி, சற்றுத் தொலைவில் எதையோ பார்த்து விட்டு, "இங்கேயே ஒரு ஓரமா நில்லு. நான் இதோ வந்துடறேன்!" என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றாள்.

பத்து நிமிடங்களுக்குப் பிறகு பூங்குழலி திரும்பி வந்ததும், "எங்கே போயிட்டு வந்தே?" என்றான் இளங்குமரன்.

"அங்கே ரெண்டு பெண்கள் நம்மைப் பாத்து ஏதோ பேசற மாதிரி தெரிஞ்சது. பக்கத்தில போய் அவங்களுக்குப் பின்னால நின்னு, என்ன பேசறாங்கன்னு கேட்டுட்டு வந்தேன்."

"என்ன பேசினாங்க?"

"என்னத்தைப் பேசுவாங்க? நீயும் நானும் சேர்ந்து சுத்திக்கிட்டிருக்கமாம். கல்யாணம் பண்ணிக்கிட்டு சுத்தினா நல்லா இருக்கும்னு சொன்னாங்க."

"என்னைப் பத்தி ஏன் வம்பு பேசறீங்கன்னு அவங்ககிட்ட சண்டை போட்டுட்டு வந்தியா?"

"நான் எதுக்கு சண்டை போடணும்? அவங்க உண்மையைத்தானே பேசறாங்க?" என்றாள் பூங்குழலி, வெட்கம் கலந்த சிரிப்புடன்.

"நான் உன் பின்னால வந்து உன்னை கவனிச்சேன். அவங்க பேசினதைக் கேட்டப்ப, உன் முகத்தில தெரிஞ்ச ஆனந்தத்தை கவனிச்சேன்!" என்றான் இளங்குமரன், சிரித்தபடியே.

"இப்படிப்பட்ட திருட்டு வேலையெல்லாம் செய்யறியா நீ?" என்றாள் பூங்குழலி, பொய்க் கோபத்துடன்.

"நீ மட்டும் என்ன செய்யற? நம்மைப் பத்தி யார் வம்பு பேசறாங்கன்னு தேடிப் போய்ப் பாத்து, அவங்க பேசறதைக் கேட்டு ரசிச்சுக்கிட்டு வர. அதில உனக்கு ஒரு போதை கிடைக்குதுன்னு நினைக்கிறேன்."

"போதையும் இல்ல, எதுவும் இல்ல!"

"இல்லை, போதைதான். அந்தப் பேச்சைக் கேட்கும்போது உன் கண்ணு சொக்கறதைப் பார்த்தே நான் தெரிஞ்சுக்கிட்டேன். எனக்குக் கள்ளு குடிக்கிறதில கிடைக்கிற போதை, உனக்கு மத்தவங்க நம்ம காதலைப் பத்திப் பேசறதைக் கேக்கறதில கிடைக்குது!" என்றான் இளங்குமரன்.

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 115
அலரறிவுறுத்தல்  (காதலைப் பற்றி ஊரார் பேசுதல்)

குறள் 1145
களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது.

பொருள்:
கள் உண்பவர்களுக்குக் குடித்து மகிழும்போது எல்லாம் கள் உண்பது இனிதாவது போல், எங்கள் காதல் ஊருக்குள் பேசப்படும்போது எல்லாம் மனத்திற்கு இனிதாய் இருக்கின்றது.

Read 'What Makes Poonguzhali Intoxicated' the English version of this story by the same author. 

அறத்துப்பால்                                                               பொருட்பால்

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...