Tuesday, September 28, 2021

1136. தினமும் ஒரு மடல்!

மருத்துவர் இல்லத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. 

காரியின் முறை வந்ததும் அவன் உள்ளே போனான்.

"இரவில் தூக்கம் வருவதே இல்லை, மருத்துவர் ஐயா!" என்றான் காரி.

அவன் நாடியைப் பரிசோதித்த மருத்துவர், "உன் உடல் இயக்கம் சீராகத்தான் இருக்கிறது. ஒரு சூரணம் கொடுக்கிறேன். அதை நீரில் கரைத்துக் குடித்து விட்டு உறங்கு. நன்றாக உறங்குவாய்!" என்று சொல்லி ஒரு குப்பியிலிருந்து ஒரு சிறிய மரக்கரண்டியால் சிறிதளவு சூரணத்தை எடுத்து ஒரு சிறிய இலையில் வைத்து மடித்துக் கொடுத்தார்.

"ஐயா! ஒருவேளை நள்ளிரவில் விழிப்பு வந்தால், அப்போது மீண்டும் கொஞ்சம் சூரணம் அருந்தலாமா?" என்றான் காரி.

"நள்ளிரவில் விழித்துக் கொண்டால், உடனே மீண்டும் படுத்துக் கொள்ளப் போகிறாய். உடனே உறக்கம் வந்து விடுமே!" 

"இல்லை  ஐயா! உடனே படுத்துக் கொள்ள மாட்டேன். ஒரு வேலை செய்து விட்டு அப்புறம்தான் படுத்துக் கொள்வேன். அப்போது தூக்கம் வருவதில்லை. கடந்த சில நாட்களாக அப்படித்தான் நடக்கிறது!"

"நள்ளிரவில் தூக்கத்திலிருந்து எழுந்து கொண்டு செய்ய வேண்டிய அந்த வேலை என்ன?"

"என் காதலிக்கு மடல் எழுதுவது!"

"என்ன?" என்று சற்று அதிர்ச்சியுடன் கேட்ட மருத்துவர், "சரி. அது உன் சொந்த விஷயம். ஏன், அதைப் பகல் நேரத்தில் செய்யலாமே!" என்றார்.

"முடியாது ஐயா. வீட்டில் மற்றவர்கள் இருப்பார்களே! அதனால் எல்லோரும் உறங்கிய பிறகு, சாளரத்தின் இருகே அமர்ந்து, அங்கு தெரியும் மங்கலான ஒளியில் மடல் எழுதுவேன். அதற்குப் பிறகு மீண்டும் உறங்க முயன்றால் உறக்கம் வருவதில்லை. கடந்த சில நாட்களாக அப்படித்தான் நடக்கிறது."

மருத்துவருக்கு முதலில் எழுந்தது கோபம்தான் என்றாலும், அந்தக் கோபத்தை மீறிய ஆவலில், "சில நாட்களாக என்றால்? தினமும் மடல் எழுத வேண்டிய அவசியம் என்ன?" என்றார்.

"ஒவ்வொரு நாளும் எழுதும் மடலை உடனே கிழித்து அந்த ஓலையை நெருப்பில் போட்டு விடுவேனே!"

"ஏன் அப்படி?"

"ஏனென்றால் என் காதலி அரண்மனையில் பணிப்பெண்ணாக இருக்கிறாள். ஒரு நாள் இளவரசிக்காக ஏதோ பொருள் வாங்க அவள் அங்காடிக்கு வந்தபோதுதான் நான் அவளைப் பார்த்தேன், பேசினேன். என் காதலைக் கூறினேன். அவளும் அதை ஏற்றுக் கொண்டாள். ஆனால் அவள் மீண்டும் அரண்மனையை விட்டு எப்போது வெளியே வருவாள் என்பது அவளுக்கே தெரியாதாம்! அதனால்தான் அவளைப் பார்க்க முடியாமல் தினமும் அவளுக்கு மடல் எழுதுகிறேன். அதை அரண்மனையில் இருக்கும் அவளிடம் கொண்டு சேர்க்க முடியாது என்பதால் அதைக் கிழித்துப் போட்டு விட்டு தினமும் புதிதாக இன்னொரு மடல் எழுதுகிறேன். அதனால் என் உறக்கம் கெட்டது!" என்றான் காரி.

"உனக்கு உறக்கம் கெட்டது. உன்னை நோயாளி என்று நினைத்து இவ்வளவு நேரம் பேசியதால் என் நேரம் கெட்டது. வெளியே காத்திருக்கும் நோயாளிகளின் நேரமும் உடல்நிலையும் ஒருங்கே கெட்டுக் கொண்டிருக்கின்றன. முதலில் இங்கிருந்து வெளியேறு!" என்று கோபமாகக் கூறிய மருத்துவர், காரியிடம் தான் கொடுத்த சூரணப் பொட்டலத்தை அவன் கையிலிருந்து பிடுங்கி, அதைப் பிரித்து அதிலிருந்த சுரணத்தை அதற்குரிய குப்பியில் கொட்டினார்.

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 114
நாணத்துறவுரைத்தல்

குறள் 1136
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண்.

பொருள்:
மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் உறுதியாக நினைக்கின்றேன், காதலியின் பிரிவின் காரணமாக என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன.

அறத்துப்பால்                                                                                                   பொருட்பால்

Friday, September 24, 2021

1135. வளையல் சத்தம்

 

ஒரு மாலை நேரத்தில்தான் அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.

நகைகள், மணிகள் மற்றும் ரத்தினங்கள் விற்பனை செய்யும் அங்காடி ஒன்றில் பணி செய்து வந்த வைரவன் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தான். 

அதிக நடமாட்டம் இல்லாத ஒரு சாலையில் ஓரமாக நடந்து வந்த வைரவன் சாலை முடிவில் திரும்பியபோது, அந்தச் சாலையில் வேகமாக நடந்து வந்து கொண்டிருந்த ஒரு இளம்பெண் மீது மோதிக் கொண்டான்.

கீழே விழவிருந்த அவளைத் தன் கைகளால் தாங்கிப்பிடித்தபோதுதான் அவள் தன் இரு கைகளிலும் மணிக்கட்டு முதல் முழங்கை வரை வளைகள் அணிந்திருப்பதைப் பார்த்து வியந்தான்.

கீழே விழாமல் தப்பித்த அவள் தன் கைகளிலிருந்த வளைகள் உடையாமல் இருக்கின்றனவா என்று பார்ப்பது போல் தன் இரு கைகளையும் பார்த்தாள்.

பிறகு வைரவனை நிமிர்ந்து பார்த்துச் சிரித்தபடியே, "என் வளையல்கள் உடையாமல் காப்பாற்றியதற்கு நன்றி!" என்றாள்.

"நீ கீழே விழாமல் தடுத்தேன். அதற்கு நன்றி சொல்லாமல், உன் வளைகள் உடையாமல் காப்பாற்றியதற்கு நன்றி சொல்கிறாயே! வளைகள் என்றால் உனக்கு அவ்வளவு விருப்பமா? அனுமாருக்கு வடைமாலை அணிவிப்பார்கள். உன் இரு கைகளிலும் வளைமாலைகள் சார்த்தி இருக்கிறாயே!" என்றான் வைரவன்.

அவள் மீண்டும் தன் கைகளைப் பெருமையுடன் பார்த்துக் கொண்டாள். 

"உன் வீடு எங்கே?" என்றான் அவன்.

"இதோ இங்கே ஒரு குறுக்குத் தெரு போகிறது அல்லாவா? அதில் திரும்பினால் வலது புறத்தில் உள்ள கடைசி வீடு. புலவர் வளையாபதி என்று கேட்டால் யாரும் சொல்வார்கள். அவர்தான் என் தந்தை!"

"ஓ, வளையாபதியின் பெண் என்பதால்தான் வளைகளின் மீது உனக்கு இத்தனை விருப்பம் போலும்! அது சரி. உன் வீடு எங்கே என்றுதானே கேட்டேன்? அதற்கு ஏன் உன் விலாசத்தையே கொடுக்கிறாய், உன் தந்தையின் பெயரையும் சொல்லி? நான் உன் வீட்டுக்கு வந்து உன்னைப் பெண் கேட்க வேண்டும் என்றா?"

"ம்? என் தந்தையிடம் கேட்பதற்கு முன் என் சம்மதத்தை நீங்கள் கேட்க வேண்டாமா? சில முறையாவது உங்களைச் சந்திக்காமல் உங்களை நான் எப்படி ஏற்றுக் கொள்வது?" என்றாள் அவள் அவன் முகத்தைப் பார்த்துக் குறும்பாகச் சிரித்து.

எதிர்பாராத ஒரு மோதல் இப்படி ஒரு இனிய உறவின் துவக்கமாக மாறியதைக் கண்டு வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்த வைரவன், "அப்படியானால் தினமும் மாலை இதே நேரத்தில் அருகே இருக்கும் ஒரு தனிமையான இடத்தில் நாம் சந்திக்கலாமே!" என்றான்.

"சந்திக்கலாம்தான். ஆனால் அதற்கு நீங்கள் ஐந்தாறு நாட்கள் காத்திருக்கவேண்டும். நாளை நாங்கள் வெளியூர் செல்கிறோம்."

"எப்போது திரும்பி வருவீர்கள்?"

"பௌர்ணமிக்குள் வந்து விடுவோம். வரும் பௌர்ணமி அன்று மாலை இதே இடத்தில் சந்திக்கலாம்" என்று சொல்லி விட்டுப் பறந்தோடி விட்டாள் அவள்.

'இன்று சப்தமி. அப்படியானால் பௌர்ணமி எப்போது வரும் என்று மனதுக்குள் கணக்குப் போட ஆரம்பித்தான் வைரவன்.

பௌர்ணமி அன்று மாலை, சொன்னதுபோல் அவள் அவனுக்காக்க் காத்திருந்தாள்.

அவளைப் பார்த்ததும், தன் கையிலிருந்த ஓலைச் சுவடிகளை அவளிடம் கொடுத்தான் வைரவன்.

"இவை என்ன?"

"உன்னைச் சந்தித்த நாளுக்கு அடுத்த நாளிலிருந்து தினமும் நான் உனக்கு எழுதிய மடல்கள்!"

"நான் ஊரில் இல்லாதபோது எனக்கு மடல்கள் எழுதி விட்டு, அதை என்னை நேரில் பார்க்கும்போது கொடுக்கிறீர்களே, உங்களுக்கென்ன மனப்பித்தா?"

"பித்துதான்! உன் மீதான பித்து! உன்னைப் பார்த்ததிலிருந்து என் மாலைப் பொழுதுகளே மாறி விட்டன. என்னால் தெளிவாகச் சிந்திக்க முடியவில்லை. உன் வளையல் சத்தம் விடாமல் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது. அதனால்தான் என் மன உணர்வுகளைக் கொட்டி தினமும் உனக்கு மடல்கள் எழுத ஆரம்பித்தேன். அவற்றை உன்னிடம் சேர்க்க வழி இல்லாததால் அவற்றைச் சேர்த்து வைத்து இப்போது உன்னிடம் கொடுக்கிறேன்!" என்றான் வைரவன்.

"சரியான பித்தர்தான் நீங்கள்!" என்று சிரித்தாள் அவள்.

"என்னைப் பித்தாக்கி என் மாலைப் பொழுதுகளில் எனக்கு மன மயக்கம் ஏற்படச் செய்தது நீதான். அந்த மயக்கத்தைப் போக்கிக் கொள்ள என்னை மடல் வரையச் செய்ததும் நீதான்" என்றான் வைரவன். 

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 114
நாணுத்துறவுரைத்தல்   

குறள் 1135
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.

பொருள்:
மாலைப் பொழுதுகளில் நான் அடையும் மயக்கத்தையும் அதற்கு மருந்தாகிய மடல் ஏறுதலையும், கோர்க்கப்பட்ட மாலை போல் தோன்றும் வளையல் அணிந்திருக்கும் அவளே எனக்குத் தந்தாள்.

அறத்துப்பால்                                                                                                   பொருட்பால்

1134. அவ்வை சண்முகி!

இரண்டு காவலர்கள் ஒரு இளைஞனின் கைகளைக் கட்டி அழைத்துக் கொண்டு காவலர் தலைவரிடம் வந்தனர்.

"தலைவரே! அந்தி மயங்கும் வேளையில் இவன் பெண் வேடமிட்டு மறைந்து மறைந்து சென்று கொண்டிருந்தான். ஒரு பெண் பயந்து பயந்து செல்கிறாளே, அவளுக்குப் பாதுகாப்பு கொடுத்து அழைத்துச் செல்லலாம் என்று நினைத்து அருகில் சென்றபோதுதான் இவன் பெண் வேடம் போட்ட ஒரு வாலிபன் என்று தெரிந்தது. பெண் வேடம் போட்டதற்கான காரணத்தை இவன் எங்களிடம் சொல்ல மறுக்கிறான். அதனால் இவனைத் தங்களிடம் அழைத்து வந்தோம்" என்றான் காவலர்களில் ஒருவன்.

"சொல்! எதற்கு இந்தப் பெண் வேடம்? ஏதாவது நாடகத்தில் நடிக்கப் போகிறாயா? அப்படி இருந்தால் கூட நாடகக் கொட்டகையில்தானே வேடம் போட்டுக் கொள்வார்கள்!" என்றார் காவலர் தலைவர் சிரித்தபடி.

"ஐயா! சொன்னால் நம்ப மாட்டீர்கள்! என் காதலியைப் பார்க்கத்தான் போய்க் கொண்டிருந்தேன்" என்றான் அந்த வாலிபன்.

"அதற்கு ஏன் பெண் வேடம்?"

"ஐயா! வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளாமல் அரசரின் போர்ப்படையில் சேர்ந்து நாட்டுக்குச் சேவை செய்வது என்று நானும் என் நண்பர்கள் சிலரும் சில நாட்கள் முன்பு ஒரு உறுதி எடுத்துக் கொண்டோம். ஆனால் ஒரு பெண்ணைச் சந்தித்ததும் எனக்கு அவள் மேல் உடனே காதல் ஏற்பட்டு விட்டது. அவளும் என் காதலை ஏற்றுக் கொண்டு விட்டாள். 

"இது என் நண்பர்களுக்குத் தெரிந்தால், "உன் உறுதிமொழி என்ன ஆயிற்று? இவ்வளவுதானா உன் ஆண்மை, வீரம் எல்லாம்?" என்று என்னை எள்ளி நகையாடுவார்களே என்று பயந்துதான் பெண் வேடமிட்டு என் காதலியைச் சந்தித்து வருகிறேன். என் காதலிக்குத் தன் பெற்றோர்களிடம் தன் காதலைப் பற்றிச் சொல்ல அச்சமாக இருப்பதால், அவளுக்கும் இந்த ஏற்பாடு பிடித்திருக்கிறது. தயவு செய்து என்னை விட்டு விடுங்கள். என் காதலி எனக்காகக் காத்திருப்பாள்."

"எங்கே காத்திருக்கிறாள் உன் காதலி?"

"அருகில் இருக்கும் பூங்காவில்தான்."

"சரி. காவலர்கள் உன்னுடன் வருவார்கள். உன் காதலி அங்கிருந்தால் உன்னை அவர்கள் அங்கே விட்டு விடுவார்கள். இல்லாவிட்டால் நீ கைதியாக இங்கேயே திரும்பி வர வேண்டியதுதான்!"

"அதற்கு அவசியம் இருக்காது ஐயா! எத்தனை நேரம் ஆனாலும் என் காதலி எனக்காகக் காத்திருப்பாள்" என்றான் வாலிபன் மகிழ்ச்சியுடன்.

"இவன் ஊர் பெயர் ஆகிய விவரங்களை வாங்கிக் கொண்டு இவன் சொல்லும் இடத்துக்கு இவனை அழைத்துச் செல்லுங்கள். இவன் காதலி அங்கு இல்லாவிட்டால் இவனைக் கைது செய்து சிறையில் அடைத்து விடுங்கள்!" என்றார் காவல் தலைவர் காவலர்களிடம்.

"ஐயா! என் பெயர் சண்முகம். என் ஊர் அருகிலுள்ள அவ்வைப்பட்டி" என்றான் வாலிபன்.

"அவ்வைப்பட்டி சண்முகம்! பெண் வேடம் போட்டதால் நீ அவ்வை சண்முகி!" என்று சொல்லிச் சிரித்தார் காவல் தலைவர்.

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 114
நாணத்துறவுரைத்தல்

குறள் 1134
காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை..

பொருள்:
நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகிறது.

அறத்துப்பால்                                                                                                   பொருட்பால்

Tuesday, September 21, 2021

1133. நான் எழுதுவதென்னவென்றால்...

 

"டேய், மாணிக்கம்!" என்று கூவினார் துரைசாமி

"என்னப்பா?" என்று மெல்லிய குரலில் கேட்டுக்கொண்டே உள்ளிருந்து வெளியே வந்தான் மாணிக்கம்.

"ஏண்டா, உன் பெரியப்பாவும் பெரியம்மாவும் நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க. நீ பாட்டுக்கு உள்ளே உக்காந்துக்கிட்டிருக்கியே" என்றார் துரைசாமி.

மாணிக்கம் பெரியப்பாவையும், பெரியம்மாவையும் பார்த்துக் கைகூப்பி வணங்கி, "வாங்க, எப்படி இருக்கீங்க?" என்றான்.

"என்னடா, ஆம்பளையா இருந்துகிட்டு பொம்பளை மாதிரி இப்படி வெக்கப்படறே? நீ பேசறதே கிணத்துக்குள்ளேந்து பேசற மாதிரி அவ்வளவு மெதுவாக் கேக்குது!" என்றார் பெரியப்பா சிரித்தபடி.

"அவன் எப்பவுமே அப்படித்தாங்க. அவனுக்கு ரொம்பக் கூச்ச சுபாவம். எங்க ரெண்டு பேரைத் தவிர வேற யார்கிட்டேயும் பேசறத்துக்கே கூச்சப்படுவான். மத்தவங்க முன்னால வரத்துக்குக் கூடத் தயங்குவான்" என்றாள் அவன் அம்மா மீனாட்சி, மகனுக்குப் பரிந்து.

"பெரிய கம்பெனியில மெஷின் ஆபரேட்டரா வேலை செய்யற! கல்யாணம் பண்ண வேண்டிய வயசில இப்படிக் கூச்சப்படலாமா?" என்றார் பெரியப்பா.

"பொண்டாட்டி வந்தா கூச்சமெல்லாம் பறந்துடாதா?" என்ற பெரியம்மா, "என்ன கல்யாணத்துக்குப் பாத்துக்கிட்டிருக்கீங்க இல்ல?" என்றாள் மீனாட்சியைப் பார்த்து.

"எங்கே? எப்ப கேட்டாலும், இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும்னு சொல்லிக்கிட்டிருக்கான்" என்றாள் மீனாட்சி.

"அன்புள்ள மான்விழியே!
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயர் காதலில் ஓர் கவிதை"

கடிதத்தின் துவக்க வரிகளைப் படித்து விட்டுப் பெரிதாகச் சிரித்த கண்ணம்மா, "என்னையா, சினிமாப் பாட்டை அப்படியே எழுதி இருக்கே! உனக்கா சுயமா எழுதத் தெரியாதா?" என்றாள்.

"அது ஆரம்பம்தான். ஆரம்பம் அழகா இருக்கட்டும்னுட்டுத்தான் சினிமாப் பாட்டு வரிகளை எழுதினேன். அப்புறம் நான் எவ்வளவு எழுதி இருக்கேன்! அதையெல்லாம் படிக்க மாட்டியா?" என்றான் மாணிக்கம்.

"வீட்டிலேயே படிச்சுட்டேன் - அதுவும் பத்துத் தடவை! சும்மா உனக்கு எதிரே படிச்சுக் காட்டினேன்" என்று சிரித்தாள் கண்ணம்மா.

"படிச்சுட்டியா?" என்று கூச்சத்தில் நெளிந்த மாணிக்கம், "எப்படி இருக்கு?" என்றான்.

"பத்துத் தடவை படிச்சேன்னு சொன்னேனே, அதிலேந்தே தெரியலியா?" என்றபடியே மாணிக்கத்தின் கைகளை அன்புடன் பற்றிய கண்ணம்மா, "ஆமாம். நாமதான் நேரில பாத்துப் பேசிக்கிறமே, அப்புறம் எதுக்கு இந்தக் கடிதம்?" என்றாள்.

"கடிதத்தில எழுதினதையெல்லாம் நேரில சொல்ல முடியுமா?"

"ஆமாம், ஆமாம்" என்றபடியே, கடிதத்தை மீண்டும் பிரித்த கண்ணம்மா, "அது என்ன எழுதி இருக்க...ரோஜா இதழ் போன்ற உன் இதழ்களில்..." என்று கடிதத்தின் ஒரு பகுதியை உரக்கப் படிக்க ஆரம்பத்தாள் 

"உஸ்! உரக்கப் படிக்காதே! எனக்கு வெக்கமா இருக்கு!" என்று அவள் இதழ்களைத் தன் விரல்களால் மூடினான் மாணிக்கம்.

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 114
நாணுத்துறவுரைத்தல்   

குறள் 1133
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.

பொருள்:
நல்ல ஆண்மையும், நாண உணர்வையும் முன்பு கொண்டிருந்த நான், இன்று அவற்றை மறந்து, காதலுக்காக மடலூர்வதை மேற்கொண்டுள்ளேன்.

அறத்துப்பால்                                                                                                   பொருட்பால்

1308. பிரிவுத் துயர்?

"ஏண்டி, நீ என்ன சின்னக் குழந்தையா, புருஷன் ஊருக்குப் போனதை நினைச்சு இவ்வளவு வருத்தப்படற? ஒரு பதினைஞ்சு நாள் புருஷனை விட்டுட்டு இருக்க ம...