Friday, September 24, 2021

1135. வளையல் சத்தம்

 

ஒரு மாலை நேரத்தில்தான் அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.

நகைகள், மணிகள் மற்றும் ரத்தினங்கள் விற்பனை செய்யும் அங்காடி ஒன்றில் பணி செய்து வந்த வைரவன் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தான். 

அதிக நடமாட்டம் இல்லாத ஒரு சாலையில் ஓரமாக நடந்து வந்த வைரவன் சாலை முடிவில் திரும்பியபோது, அந்தச் சாலையில் வேகமாக நடந்து வந்து கொண்டிருந்த ஒரு இளம்பெண் மீது மோதிக் கொண்டான்.

கீழே விழவிருந்த அவளைத் தன் கைகளால் தாங்கிப்பிடித்தபோதுதான் அவள் தன் இரு கைகளிலும் மணிக்கட்டு முதல் முழங்கை வரை வளைகள் அணிந்திருப்பதைப் பார்த்து வியந்தான்.

கீழே விழாமல் தப்பித்த அவள் தன் கைகளிலிருந்த வளைகள் உடையாமல் இருக்கின்றனவா என்று பார்ப்பது போல் தன் இரு கைகளையும் பார்த்தாள்.

பிறகு வைரவனை நிமிர்ந்து பார்த்துச் சிரித்தபடியே, "என் வளையல்கள் உடையாமல் காப்பாற்றியதற்கு நன்றி!" என்றாள்.

"நீ கீழே விழாமல் தடுத்தேன். அதற்கு நன்றி சொல்லாமல், உன் வளைகள் உடையாமல் காப்பாற்றியதற்கு நன்றி சொல்கிறாயே! வளைகள் என்றால் உனக்கு அவ்வளவு விருப்பமா? அனுமாருக்கு வடைமாலை அணிவிப்பார்கள். உன் இரு கைகளிலும் வளைமாலைகள் சார்த்தி இருக்கிறாயே!" என்றான் வைரவன்.

அவள் மீண்டும் தன் கைகளைப் பெருமையுடன் பார்த்துக் கொண்டாள். 

"உன் வீடு எங்கே?" என்றான் அவன்.

"இதோ இங்கே ஒரு குறுக்குத் தெரு போகிறது அல்லாவா? அதில் திரும்பினால் வலது புறத்தில் உள்ள கடைசி வீடு. புலவர் வளையாபதி என்று கேட்டால் யாரும் சொல்வார்கள். அவர்தான் என் தந்தை!"

"ஓ, வளையாபதியின் பெண் என்பதால்தான் வளைகளின் மீது உனக்கு இத்தனை விருப்பம் போலும்! அது சரி. உன் வீடு எங்கே என்றுதானே கேட்டேன்? அதற்கு ஏன் உன் விலாசத்தையே கொடுக்கிறாய், உன் தந்தையின் பெயரையும் சொல்லி? நான் உன் வீட்டுக்கு வந்து உன்னைப் பெண் கேட்க வேண்டும் என்றா?"

"ம்? என் தந்தையிடம் கேட்பதற்கு முன் என் சம்மதத்தை நீங்கள் கேட்க வேண்டாமா? சில முறையாவது உங்களைச் சந்திக்காமல் உங்களை நான் எப்படி ஏற்றுக் கொள்வது?" என்றாள் அவள் அவன் முகத்தைப் பார்த்துக் குறும்பாகச் சிரித்து.

எதிர்பாராத ஒரு மோதல் இப்படி ஒரு இனிய உறவின் துவக்கமாக மாறியதைக் கண்டு வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்த வைரவன், "அப்படியானால் தினமும் மாலை இதே நேரத்தில் அருகே இருக்கும் ஒரு தனிமையான இடத்தில் நாம் சந்திக்கலாமே!" என்றான்.

"சந்திக்கலாம்தான். ஆனால் அதற்கு நீங்கள் ஐந்தாறு நாட்கள் காத்திருக்கவேண்டும். நாளை நாங்கள் வெளியூர் செல்கிறோம்."

"எப்போது திரும்பி வருவீர்கள்?"

"பௌர்ணமிக்குள் வந்து விடுவோம். வரும் பௌர்ணமி அன்று மாலை இதே இடத்தில் சந்திக்கலாம்" என்று சொல்லி விட்டுப் பறந்தோடி விட்டாள் அவள்.

'இன்று சப்தமி. அப்படியானால் பௌர்ணமி எப்போது வரும் என்று மனதுக்குள் கணக்குப் போட ஆரம்பித்தான் வைரவன்.

பௌர்ணமி அன்று மாலை, சொன்னதுபோல் அவள் அவனுக்காக்க் காத்திருந்தாள்.

அவளைப் பார்த்ததும், தன் கையிலிருந்த ஓலைச் சுவடிகளை அவளிடம் கொடுத்தான் வைரவன்.

"இவை என்ன?"

"உன்னைச் சந்தித்த நாளுக்கு அடுத்த நாளிலிருந்து தினமும் நான் உனக்கு எழுதிய மடல்கள்!"

"நான் ஊரில் இல்லாதபோது எனக்கு மடல்கள் எழுதி விட்டு, அதை என்னை நேரில் பார்க்கும்போது கொடுக்கிறீர்களே, உங்களுக்கென்ன மனப்பித்தா?"

"பித்துதான்! உன் மீதான பித்து! உன்னைப் பார்த்ததிலிருந்து என் மாலைப் பொழுதுகளே மாறி விட்டன. என்னால் தெளிவாகச் சிந்திக்க முடியவில்லை. உன் வளையல் சத்தம் விடாமல் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது. அதனால்தான் என் மன உணர்வுகளைக் கொட்டி தினமும் உனக்கு மடல்கள் எழுத ஆரம்பித்தேன். அவற்றை உன்னிடம் சேர்க்க வழி இல்லாததால் அவற்றைச் சேர்த்து வைத்து இப்போது உன்னிடம் கொடுக்கிறேன்!" என்றான் வைரவன்.

"சரியான பித்தர்தான் நீங்கள்!" என்று சிரித்தாள் அவள்.

"என்னைப் பித்தாக்கி என் மாலைப் பொழுதுகளில் எனக்கு மன மயக்கம் ஏற்படச் செய்தது நீதான். அந்த மயக்கத்தைப் போக்கிக் கொள்ள என்னை மடல் வரையச் செய்ததும் நீதான்" என்றான் வைரவன். 

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 114
நாணுத்துறவுரைத்தல்   

குறள் 1135
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.

பொருள்:
மாலைப் பொழுதுகளில் நான் அடையும் மயக்கத்தையும் அதற்கு மருந்தாகிய மடல் ஏறுதலையும், கோர்க்கப்பட்ட மாலை போல் தோன்றும் வளையல் அணிந்திருக்கும் அவளே எனக்குத் தந்தாள்.

அறத்துப்பால்                                                                                                   பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...