Thursday, June 30, 2022

1144. சிவகாமி செய்த உதவி!

"அப்புறம்?" என்றாள் மணிமேகலை.

"அப்புறம் என்ன? உட்புறம், வெளிப்புறம்னு எல்லாம் பேசிட்டமே?" என்றான் சந்திரன்.

"அப்படின்னா நாம பேசறதுக்கு எதுவுமே இல்லையா? இப்பவே இப்படின்னா கல்யாணம் ஆனப்பறம் எப்படி?"

"அப்ப சண்டை போட நிறைய விஷயம் இருக்கும். சண்டை. சமாதானம்னு வாழ்க்கை சுவாரசியமாப் போகும்?"

"அப்படின்னா, நம் காதல்ல சுவாரசியம் இல்லைங்கறியா?" என்றாள் மணிமேகலை சற்றே கோபத்துடன்.

"அடக் கடவுளே! காதலிக்கறப்ப சண்டை வராம ஜாக்கிரதையா இருப்போம். ஏன்னா சண்டை வந்தா காதல் முறிஞ்சுடுமோங்கற பயம்!  கல்யாணம் ஆனப்பறம் அந்த பயம் இருக்காது இல்ல, அதைச் சொன்னேன்!" என்றான் சந்திரன் சமாதானமாக.

"நம்ம காதல்ல சுவாரசியம் இல்லேங்கறது உண்மைதான். பொதுவா காதலுக்குக் கொஞ்சமாவது எதிர்ப்பு இருக்கும். ஆனா நம் விஷயத்தில அது இல்ல. உனக்குப் பெற்றோர்கள் இல்ல. எங்க அப்பா அம்மாகிட்ட என் காதலைப் பத்தி இன்னும் சொல்லனேன்னாலும், அவங்க என் விருப்பத்தை ஏத்துப்பாங்க. ஏன்னா அவங்களே காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிடவங்கதான். அதனால நம் காதல் ஒரு பிரச்னையும் இல்லாம ஓடிக்கிட்டிருக்கு. ஏதாவது பிரச்னை வந்தாதானே ஒரு சுவாரசியம் இருக்கும்?"  

தற்குப் பிறகு நான்கைந்து நாட்கள் அவர்கள் சந்திக்கவில்லை. அவர்கள் வழக்கமாகச் சந்திக்கும் இடத்துக்கு தினமும் சந்திரன் வந்து காத்திருந்து விட்டு ஏமாந்து திரும்பிப் போனான்.

ஆறாவது நாள் மணிமேகலை வந்தபோது அவள் முகம் சோர்ந்திருந்தது.

"என்ன ஆச்சு மணிமேகலை? உடல்நிலை சரியல்லையா?" என்றான் சந்திரன்.

"ஏன்யா, ஊரில நடக்கறது எதுவுமே உனக்குத் தெரியாதா?" என்றாள் மணிமேகலை கோபத்துடன்.

"என்ன நடக்குது ஊர்ல?"

"உன்னையும், என்னையும் பத்தி சில பேர் கண்டபடி பேசிக்கறாங்களே, அது உன் காதில விழலியா?"

"என்ன பேசிக்கிறாங்க?"

"நீயும், நானும் பொது இடத்தில கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுத்துக்கிட்டமாம்!"

"அடிப்பாவி! உன்னை நான் தொட்டது கூட இல்லையே! யாரு இப்படியெல்லாம் சொன்னது?"

"நம் ஊர்ல சிவகாமி அத்தைன்னு இருக்காங்க. வம்பு பேசறதுதான் அவங்க முழு நேர வேலை. அன்னிக்கு நாம பேசிக்கறதைப் பாத்துட்டாங்க போலிருக்கு. சும்மா பக்கத்துல உக்காந்து பேசிக்கிட்டதை கண்ணும் காதும் வச்சு, கட்டிப் பிடிச்சுக்கிட்டோம், முத்தம் கொடுத்துக்கிட்டோம்னெல்லாம் நிறைய பேர்கிட்ட சொல்லி இருக்காங்க."

"அப்புறம்?"

"எங்க அப்பா அம்மா காதுக்கும் விஷயம் போச்சு. அவங்க என்னைக் கேட்டங்க. நான் உண்மையைச் சொன்னேன். அந்த சந்திரனை சீக்கிரமே வந்து பெண் கேக்கச் சொல்லுன்னு சொன்னாங்க. ஆனா எனக்குத்தான் வெளியில வந்தாலே, என்னைப் பாக்கற ஊர்க்காரங்க என்ன நினைச்சுப்பங்களோன்னு பயமா இருக்கு!"

"அப்பா! நம் காதல்ல சுவாரசியம் இல்லையேன்னு கவலைப்பட்டுக்கிட்டிருந்தோம் இல்ல, அந்தக் கவலையை அந்த சிவகாமி அத்தை தீர்த்து வச்சுட்டாங்க. அவங்களைப் போய்ப் பார்த்து நன்றி சொல்லிட்டு வரலாம்!" என்று சொல்லிச் சிரித்தான் சந்திரன்.

ஒரு கணம் அவனை முறைத்துப் பார்த்த மணிமேகலை, பிறகு தானும் அவன் சிரிப்பில் கலந்து கொண்டாள். 

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 115
அலரறிவுறுத்தல்  (காதலைப் பற்றி ஊரார் பேசுதல்)

குறள் 1144
கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.

பொருள்:
ஊரார் பேச்சினால் எங்கள் காதல் வளர்கிறது; இந்தப் பேச்சு மட்டும் இல்லை என்றால் அது தன் தன்மை இழந்து சுருங்கிப் போயிருக்கும்.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Monday, June 13, 2022

1143. உள்ளூர் கிசுகிசு!

"நம்ம ஊர்ல ஒரு கையெழுத்துப் பத்திரிகை வருதே தெரியுமா உனக்கு?"

"தெரியாதே, என்ன பத்திரிகை?"

"உள்ளூர் கிசுகிசு!"

"பேரே ஒரு மாதிரி இருக்கே! என்ன பத்திரிகை இது?"

"பேர்ல இருக்கற மாதிரிதான்! ஊர்ல நடக்கிற ரகசியமான விஷயங்கள், வதந்திகள் போன்ற விஷயங்களை வெளியிடுவாங்க!"

"எப்படி இதை நடத்தறாங்க, எப்படி சர்க்குலேட் பண்றாங்க?"

"வாரா வாரம் பத்து பக்கம் கையால எழுதி வெளியிடுவாங்க. இதைத் தொடர்ந்து படிக்கிறவங்க இருக்காங்க, புதுசா சேருகிற வாசகர்களும் இருக்காங்க. ஒவ்வொத்தரும் தாங்க படிச்சப்புறம் வேற யார்கிட்டயாவது கொடுப்பாங்க. அப்படித்தான் சர்க்குலேஷன் ஆகுது."

"அது சரி. அவங்களுக்கு எப்படி விஷயங்கள் கிடைக்கும்? அதோட இப்படியெலாம் எழுதறது அவதூறு இல்லையா?"

"செய்திகளை  எப்படி கலெக்ட் பண்றாங்கன்னு எனக்குத் தெரியாது. நீயும் நானும் பேசறதை ஒட்டுக் கேட்டு அதைக் கூட "உள்ளூர் கிசுகிசு பற்றி நண்பர்கள் உரையாடல்"னு செய்தி போடலாம்! யாரோட பெயரையும் நேரடியா வெளியிட மாட்டாங்க. ஆனா படிக்கிறவங்க புரிஞ்சுக்கிற மாதிரி எழுதுவாங்க. உதாரணமா, 'சிவபெருமானின் இளைய குமாரன் தெருவில் வசிக்கும் தசரதகுமாரரின் மனைவி, கணவனுடன் சண்டையிட்டுக் கொண்டு பிறந்த வீட்டுக்குச் சென்று விட்டார்'னு எழுதினா சுப்பிரமணியம் தெருவில் இருக்கும் ராமசாமியின் மனைவின்னு எல்லாரும் புரிஞ்சுப்பாங்களே! அவங்க ஊருக்குப் போயிருந்தா செய்தி உறுதியான மாதிரி இருக்குமே!"

"அடப்பாவிங்களா! அப்ப அந்த ராமசாமி அதைப் படிச்சுட்டுக் கோவிச்சுக்க மாட்டாரா?"

"அப்படிக் கோவிச்சுக்கிட்டு சண்டை போட்டா அவர் தன்னையே காட்டிக் கொடுத்துக்கிட்ட மாதிரிதானே இருக்கும்? அதனால திருடனுக்குத் தேள் கொட்டின மாதிரி பேசாம இருப்பாரு. அதோட இதை வெளியிடறவங்க யாருன்னு தெரியாதபோது யார்கிட்ட போய் சண்டை போட முடியும்?"

"இது ரொம்ப அநியாயமா இருக்கே! என்னைப் பத்தி ஏதாவது எழுதினா நான் அந்தப் பத்திரிகையை எடுத்துக்கிட்டு போலீசுக்குப் போயிடுவேன். அவங்க கண்டுபிடிச்சுடுவாங்க!"

"அப்படின்னா நீ போலீசுகுப் போக வேண்டிய நேரம் வந்துடுச்சு!"

"என்னடா சொல்றே?" என்றான் கல்யாணராமன்.

"இதோ பார்!" என்ற அவன் நண்பன், தன் கையில் வைத்திருந்த 'உள்ளூர் கிசுகிசு' இதழைப் பிரித்து அதிலிருந்த செய்தியைப் படித்தான்.

" 'மத்திய அரசு அலுவலகத்தில் பணியாற்றும் திருமண அழகர் தனியார் நிறுவனத்தில் டைப் அடிக்கும் பச்சைக்கல் நங்கையை திருட்டுத்தனமாகக் காதலிக்கிறார். பச்சைக்கல்லின் தந்தை மலையைப் போல்  கடினமானவர் என்பதால் அவரை அண்ணாந்து பார்த்துத் தன் காதலைச் சொல்ல  அழகர் அஞ்சுகிறார்!' இன்னும் கொஞ்சம் விவரங்கள் கீழ இருக்கு!

"அடப்பாவி! கல்யாணசுந்தரம், மரகதம், அவ அப்பா அண்ணாமலை எல்லார் பெயரும் சுலபமாப் புரியற மாதிரி எழுதி இருக்காங்களே!" என்றான் கல்யாணசுந்தரம்.

"இந்தா பத்திரிகை! போலீசுக்குப் போறதுன்னா போ!" என்றான் நண்பன் சவால் விடுவது போல்.

கல்யாணசுந்தரம் தயக்கத்துடன் 'உள்ளூர் கிசுகிசு'வைக் கையில் வாங்கிக் கொண்டான்.

டுத்த நாள் கல்யாணசுந்தரத்தைப் பார்க்க வந்த அவன் நண்பன், "என்ன போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனியா?" என்றான்.

"இல்லை!"

"ஏன் போகல?"

"இந்தப் பத்திரிகை வந்து ஒரு வாரம் ஆயிடுச்சு. இதை நிறைய பேர் படிச்சிருப்பாங்க. நான்தான் இதைக் கடைசியாப் பாத்திருப்பேன் போல இருக்கு!"

"சரி, என்ன செய்யப் போற?"

"இந்தப் பத்திரிகையை வெளியிடறவங்க யாருன்னு தெரிஞ்சா அவங்களைப் பார்த்து..."

"கழுத்தை நெரிக்கப் போறியா?"

"இல்லை, நன்றி சொல்லப் போறேன்!"

"எதுக்கு?"

"அவங்க எழுதினபடி மரகதத்தோட அப்பாகிட்ட என் காதலைச் சொல்ல நான் பயந்துகிட்டுதான் இருந்தேன். இந்த உள்ளூர் கிசுகிசு மூலமா அவர் விஷயத்தைத் தெரிஞ்சுக்கிட்டு மரகதத்துக்கிட்ட கேட்டிருக்காரு. மரகதம் எங்க காதலைப் பத்தி சொன்னதும் எங்க அப்பா அம்மாவை அழைச்சுக்கிட்டு பெண் கேக்க வரச் சொல்லி இருக்காரு. நேத்திக்கு சாயந்திரம்தான் மரகதம் எங்கிட்ட விஷயத்தைச் சொன்னா. அதனால என் காதல் நிறைவேற உதவி செய்த உள்ளூர் கிசுகிசுவுக்கு நான் நன்றி சொல்ல வேண்டாமா?" என்றான் கல்யாண சுந்தரம்.

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 115
அலரறிவுறுத்தல்  (காதலைப் பற்றி ஊரார் பேசுதல்)

குறள் 1143
உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.

பொருள்:
எங்களக்குள் காதல் இருப்பதை இந்த ஊர் அறிந்து பேசியதும் நல்லதே, (திருமணத்தைச் செய்ய முடியுமா என்றிருந்த நிலை போய்ச் செய்தது போல் ஆயிற்று.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

1308. பிரிவுத் துயர்?

"ஏண்டி, நீ என்ன சின்னக் குழந்தையா, புருஷன் ஊருக்குப் போனதை நினைச்சு இவ்வளவு வருத்தப்படற? ஒரு பதினைஞ்சு நாள் புருஷனை விட்டுட்டு இருக்க ம...