Saturday, March 26, 2022

1141. ஊர்க்காரர்கள் செய்த உதவி!

கடைத்தெருவிலிருந்து வாங்கிய பொருட்கள், காய்கறிகள் கொண்ட மூன்று நான்கு பைகளைச் சுமந்து கொண்டு ஒரு வித்தைக்காரரின் லாகவத்துடன் பைகளை ஒரு கையிலிருந்து இன்னொரு கைக்கு மாற்றி நடந்து வந்து கொண்டிருந்த அந்த இளம்பெண்ணைத் தன் வீட்டு வாசலிலிருந்து சற்று வியப்புடனும், நிறைய ஆர்வத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தான் முத்தையன்.

அப்போது ஒரு மாட்டு வண்டி அந்தத் தெருவுக்குள் நுழைந்து அந்தப் பெண்ணுக்குப் பின்புறமாக வந்தது. 

அந்தப் பெண் தனக்குப் பின்னால் மாட்டு வண்டி வருவதை உணராதவளாகத் தன் பைகளைச் சமாளித்துச் சுமந்து நடப்பதிலேயே கவனம் செலுத்திக் கொண்டிருந்தாள், 

வண்டிக்காரர் மாடுகளை இழுத்துப் பிடித்து வண்டியை நிறுத்த முயன்றாலும் அந்தப் பெண்ணின் அருகில் வருவதற்குள் மாடுகள் நின்று விடும் என்றோ, அல்லது அந்தப் பெண்ணே வண்டியை கவனித்துப் பாதுகாப்பாக  ஒதுங்குவாள் என்றோ முத்தையனுக்கு நம்பிக்கை இல்லை.

எனவே அவன் விரைந்து ஓடி அந்தப் பெண்ணைப் பிடித்து ஓரமாக இழுத்தான். இழுக்கும்போது அவள் கையிலிருந்த பைகள் விழுந்துவிடாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டான்.

ஓரமாக இழுக்கப்பட்ட அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்து என்ன நடக்கிறது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, மாட்டு வண்டி தன்னைத் தாண்டிச் செல்வதையும் வண்டிக்காரர் தன்னைக் கைகாட்டித் திட்டிக் கொண்டே செல்வதையும் கவனித்து நடந்ததை உணர்ந்து கொண்டாள்.

தன்னைக் காப்பாற்றியது யார் என்று திரும்பிப் பார்த்தபோதுதான் அவன் தன்னை இன்னும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருப்பதை கவனித்துத் தன்னை விடுவித்துக் கொண்டாள் அவள். 

நன்றி சொல்வது போல் அவனைப் பார்த்து விட்டு அவள் கிளம்ப யத்தனித்தபோது, "உன்னால தூக்க முடியல போலருக்கே! நான் வேணும்னா ரெண்டு பையை வாங்கிக்கறேன், உன் விடு வரையிலும் வந்து விட்டுட்டுப் போறேன்" என்றான் முத்தையன். 

"யோவ்! யாராவது பாத்து ஏதாவது தப்பா நினைச்சுப் பாங்களோன்னு நான் ஏற்கெனவே பயந்துகிட்டிருக்கேன். நீ என்னோட வீடு வரைக்கும் நடந்து வரேங்கற! இந்த ஊர்க்காரங்களைப் பத்தி உனக்குத் தெரியாதா? வம்பு பேசறத்துக்கே பொறந்தவங்க இந்த ஊர்க்காரங்க!" என்று சொல்லியபடியே விருட்டென்று கிளம்பினாள் அவள்.

ந்தப் பெண் பயந்தது உண்மையாகி விட்டது!

"நான் வண்டி ஓட்டிக்கிட்டு வேகமா வரப்ப ஒரு பொண்ணு ஏகப்பட்ட மூட்டைகளைத் தூக்கிக்கிட்டு வண்டிக்கு முன்னால போய்க்கிட்டிருந்தா. வண்டி அவ மேல இடிச்சுடுமேன்னு பயந்தேன். நல்லவேளை அவளோட காதலன் வந்து அவளைக் காப்பாத்திட்டான், காப்பாத்தறப்ப கூடஅவளை  எப்படிக் கட்டிப் புடிச்சான் தெரியுமா?" என்று வண்டிக்காரன் யாரிடமோ சொல்ல செய்தி ஊர் முழுவதும் பரவி விட்டது.

நடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த முத்தையன் தெருவைச் சேர்ந்த ஒருவர் அந்தக் காதலன் முத்தையன்தான் என்ற விவரத்தையும் அந்தச் செய்தியில் சேர்த்து விட முத்தையன்- அன்னபூரணி காதல் விவகாரம் ஊர் முழுவதும் பேசப்பட்டது.

"ஏண்டா! அந்தப் பொண்ணு அன்னபூரணியை நீ காதலிக்கிறியாமே!" என்று ஒரு சிலர் அவனிடம் கேட்டபோதுதான் அவள் பெயர் அன்னபூரணி என்பதே முத்தையனுக்குத் தெரிய வந்தது!

"நீதான் முத்தையனா?" என்றாள் அந்தப் பெண்.

"ஆமாம் நீ யாரு?" என்றான் முத்தையன்.

"நான் அன்னபூரணியோட தோழி கண்ணம்மா. நீ செஞ்ச வேலையைப் பாத்தியா? இப்ப இந்த ஊர் முழுக்க உன்னையும் அன்னபூரணியையும் பத்தி தப்பாப் பேசுது!" என்றாள் கண்ணம்மா.

"நான் என்ன செஞ்சேன்? உன் தோழி மேல வண்டி வந்து மோதிடாம அவளைக் காப்பாத்தினேன். அது தப்பா?"

"உங்களைப் பத்தி ஊர்ல தப்பாப் பேசறாங்களே அதுக்கு என்ன செய்யப் போற?"

"அவங்க பேசறது எனக்கு நல்லதாத்தான் படுது!"

"என்னய்யா சொல்ற நீ?" என்றாள் கண்ணம்மா.

"உன் தோழி என்ன நினைக்கறான்னு எனக்குத் தெரியாது. ஆனா அன்னிக்கு அவளை நான் காப்பத்தினப்பவே அவ மேல எனக்கு ஒரு விருப்பம் வந்துடுச்சு. அவளை மறுபடி பாத்து அவ மனசைத் தெரிஞ்சுக்கணும்னு நினைச்சேன். ஆனா பயமாவும் இருந்தது. என்ன செய்யறதுன்னு தெரியாம தவிச்சுக்கிட்டிருந்தேன். அப்பதான் ஊர்க்காரங்க இப்படிப் பேச ஆரம்பிச்சுட்டாங்க, என் மனசில இருக்கறதை ஊர்க்காரங்க வெளிப்படுத்தினதால என் காதல் இப்ப எல்லோருக்கும் தெரிஞ்சுடுச்சு. உன் தோழிக்கு விருப்பம்னா சொல்லு. அவங்க அப்பாகிட்ட வந்து நான் பெண் கேக்கறேன்!" என்றான் முத்தையன்.

"இனிமே என்னடி? மறைஞ்சிருந்தது போதும். வெளியில வா!" என்று கண்ணம்மா சற்று உரத்த கூரலில் கூறியதும் அருகிலிருந்த மரத்தின் பின்னிருந்து நிரம்பி வழியும் நாணத்துடன் ததும்பி வழியும் புன்னகையுடனும் தலையைக் குனிந்து கொண்டே வெளிப்பட்டாள் அன்னபூரணி. 

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 115
அலரறிவுறுத்தல்  (காதலைப் பற்றி ஊரார் பேசுதல்)

குறள் 1141
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்

பொருள்:
ஊருக்குள் பலர் எங்கள் காதலைப் பற்றிப் பேசுவதால்தான் அவளை இன்னும் பெறாத என் உயிரும் நிலைத்து இருக்கிறது; பேசும் பலரும் இதை அறிய மாட்டார்; இது நான் செய்த பாக்கியம்.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

1308. பிரிவுத் துயர்?

"ஏண்டி, நீ என்ன சின்னக் குழந்தையா, புருஷன் ஊருக்குப் போனதை நினைச்சு இவ்வளவு வருத்தப்படற? ஒரு பதினைஞ்சு நாள் புருஷனை விட்டுட்டு இருக்க ம...