Thursday, March 26, 2020

1098. சிக்னல் கிடைக்குமா?

ரகுராமன் பல்லாவரம் ரயில் நிலையத்தில்தான் அவளைப் பார்த்தான். முதலில் பார்த்தது எப்போது என்பது அவனுக்குச் சரியாகத் தெரியவில்லை.

இரண்டு மூன்று முறை பார்த்த பிறகுதான் அவள் தன் கவனத்துக்கு வந்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

பல்லாவரத்தில் வசிக்கும் அவன் கிண்டியில் தான் வேலை செய்யும் அலுவலகத்துக்குச் செல்வதற்காக, தினமும் காலை எட்டரை மணிக்கு பல்லாவரம் ரயில் நிலையத்துக்கு வருவான். 

ரயில் நிலையத்தில் தினமும் எத்தனையோ முகங்கள் தென்படும். அவற்றில் சிலவற்றை அவன் பலமுறை பார்த்திருக்கிறான். அவனைப் போல் அந்த ரயில் நிலையத்துக்கு தினமும் கிட்டத்தட்ட அதே நேரத்தில் வரும் பலரின் முகங்கள் அவை. ஆனால் பார்த்த முகம் என்பதற்கு மேல் அந்த முகங்கள் பற்றி வேறு எந்த சிந்தனையும் அவன் மனதில் ஏற்பட்டதில்லை.

ஆனால், எதனாலோ அந்தப் பெண்ணின் முகத்தை இரண்டு மூன்று முறை பார்த்ததும், அவள் மீது அவனுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு விட்டதாகத் தோன்றியது.

அவன் வழக்கமாக நிற்கும் இடத்துக்குச் சற்றுத் தள்ளித்தான் பெண்கள் பெட்டி இருக்கும். அவள் பெண்கள் பெட்டியில்தான் ஏறுவாள். அவன் நிற்கும் இடத்திலிருந்து சுமார் பத்து அடி தள்ளித்தான் அவள் நிற்பாள். இன்னும் பல பெண்களும் அங்கே நின்று கொண்டிருப்பார்கள். 

'அவளை மட்டும் நான் ஏன் குறிப்பாக கவனித்தேன்?' என்று அவன் தன்னையே கேட்டுக் கொண்டான்.

அவன் ரயில் நிலையத்துக்கு வருவதற்கு முன்பே அவள் வந்து நின்றிருப்பாள். 

குராமன் அந்தப் பெண்ணை கவனிக்க ஆரம்பித்துச் சில நாட்கள் ஆகி விட்டன. அவள் மீது தனக்கு ஏற்பட்டிருப்பது காதல்தான் என்ற முடிவுக்கு அவன் வந்து விட்டான்.

ஆனால் அவள் அவனை கவனித்தாளா என்று தெரியவில்லை. ரயில் நிலையத்துக்கு வந்தது முதல், ரயில் வந்து அதில் ஏறும் வரை தான் அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது அவளுக்குத் தெரியுமா என்று அவன் யோசித்தான். 

அவளிடம் சென்று பேசிப் பார்க்கலாமா என்று சில சமயம் தோன்றும். ஆனால், பொது இடத்தில், அதுவும் பெண்கள் கூடி இருக்கும் இடத்தில், அவளிடம் சென்று ஏதாவது பேசி, அதனால் ஏதாவது விபரீதம் ஏற்பட்டு விடுமோ என்று பயந்தான்.

அவள் தன் முகத்தைப் பார்த்தாளா என்பது கூடத் தெரியவில்லையே!

அன்று ரயில் வந்து நின்றதும், அதில் ஏறும் வரை வழக்கம் போல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். பெண்கள் பெட்டியில் ஏறுவதற்கு முன் அவள் அவன் பக்கம் திரும்பினாள். அவள் தன் முகத்தைப் பார்த்ததாகவும், தன்னைப் பார்த்துப் புன்னகை செய்தது போலவும் அவனுக்குத் தோன்றியது. ஆனால் இது உண்மையா, தன்னுடைய கற்பனையா என்று அவனுக்குப் புரியவில்லை.

டுத்த நாள் ரகுராமன் ரயில் நிலையத்துக்கு வந்தபோது அவளைக் காணவில்லை. 'இன்று அவள் வரவில்லையா, அல்லது தாமதமாக வருகிறாளா?' என்று அவன் யோசித்துக் கொண்டிருந்தான்.

தனக்கு அருகில் எதோ அசைவு ஏற்பட்டதை உணர்ந்த அவன், எதோ ஒரு உள்ளுணர்வில் பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தபோது, அவள் அவன் அருகில் சற்றுத் தள்ளி நின்று கொண்டிருப்பதைப் பார்த்தான்!

ரகுராமனுக்கு உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்ததுபோல் இருந்தது.

எப்போதும் பெண்கள் பெட்டி நிற்கும் இடத்தில் நிற்பவள் இன்று தன் அருகில் வந்து நிற்கிறாள் என்ற உண்மையை உணரவே அவனுக்குச் சில வினாடிகள் பிடித்தன. புன்னகை செய்ய வேண்டும் என்ற உணர்வு கூடாமல் வராமல் அவள் முகத்தைப் பார்த்தான் 

அவள் அவனை நேரே பார்த்துப் புன்னகை செய்தாள்.

ரயில் வந்ததும், அவன் ஏறிய பெட்டியிலே அவளும் ஏறிக் கொண்டாள்.

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 110
குறிப்பறிதல் 
குறள் 1098
அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.

பொருள்:
நான் பார்க்கும்போது, என்னை அன்புடன் பார்த்துச் சிரிப்பாள். அசையும் மெல்லிய இயல்பு கொண்ட அவளிடம் அப்பொழுது ஒரு அழகு தோன்றும்.
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

Sunday, March 15, 2020

1097. அவளே என் காதலி!

"கோ எஜுகேஷன் காலேஜில படிக்கவே கூடாதுடா!" என்றான் தினேஷ்.

"டேய்!  மென்ஸ் காலேஜில படிக்கறவங்கள்ளாம் நம்மைப் பாத்துப் பொறாமைப் படறாங்க. நீ என்னடான்னா இப்படிச் சொல்றியே!" என்றான் முருகன்.

"பின்ன என்னடா? ஒரு பொண்ணைக் காதலிக்க முடியல. அஞ்சு நிமிஷத்தில் காலேஜ் பூரா  தெரிஞ்சுடுது!"

" அடப்பாவி! நீ ஒரு பொண்ணைக் காதலிக்கறியா? உன்னோட நெருக்கமாப்  பழகற எனக்கே இந்த விஷயம் இப்ப நீ சொன்னப்பறம்தான்  தெரியுது. இந்த லட்சணத்தில காலேஜ் பூரா தெரிஞ்சுடுதுன்னு குறைப்பட்டுக்கற? யாருடா அந்தப் பொண்ணு?" என்றான் முருகன். 

"இன்னும் அவகிட்டேந்து எனக்கு சரியான பதிலே கிடைக்கல. அப்புறம்தானே அது காதலாகும்? அப்ப காலேஜ் பூராத் தெரிஞ்சுடும்."

"அது சரி. பொண்ணு யாருன்னு சொல்லலியே?" என்றான் முருகன் விடாமல்.

'பூங்கோதை!" என்றான் தினேஷ். 

"பெயர்ப் பொருத்தமே இல்லையே! நீ இந்திப் பேரு வச்சுக்கிட்டிருக்க. அவ தமிழ்ப் பேரு வச்சுக்கிட்டிருக்கா. எப்படி ஒத்துப் போகும்?"

"அப்ப நீ வள்ளின்னு பேரு இருக்கற பொண்ணைத்தான் கல்யாணம்  பண்ணிப்பியா? அவகிட்டேந்து சிக்னல் கிடைக்கலியேன்னு நான் கவலையில இருக்கேன். நீ வேற பெயர்ப் பொருத்தம் ஜாதகப் பொருத்தம்னு எரிச்சலைக் கிளப்பாதே!" என்றான் தினேஷ் எரிச்சலுடன்.

ல்லூரி வளாகத்தில், பூங்கோதை தன் தோழிகள் இருவருடன் நடந்து சென்று கொண்டிருந்ததை தினேஷ் பார்த்தான். அவள் தோழிகளிடமிருந்து பிரிந்து தனியாகப் போனால் அவளுடன் பேசச் சந்தர்ப்பம் கிடைக்கும் என்று நினைத்து தினேஷ் அவர்களுக்குப் பின்னால் கொஞ்சம் இடைவெளி விட்டு நடந்து போனான்.

அவனைத் திரும்பிப் பார்த்த பெண்களில் ஒருத்தி சற்று உரத்த குரலில், "டீ!நமக்குப் பின்னால ஒத்தன் வராண்டி. நாம மூணு பேர்ல யாரைக் குறி வச்சிருக்கான்னு தெரியலியே!" என்றாள் கேலியான குரலில். பிறகு பூங்கோதையைப் பார்த்து, "ஏண்டி, உன் ஆளா அவன்?" என்றாள்.

"என் ஆள்னா எனக்கு முன்னால நடந்து போவாண்டி. பின்னால வர மாட்டான்!" என்றாள் பூங்கோதை. பின்னால் நடந்து வரும் அவனுக்குக் கேட்க வேண்டும் என்பதற்காகவே அவள் குரலை உயர்த்திப்பேசியது போல் இருந்தது. அவள் சொன்னதைக் கேட்டு மற்ற இருவரும் கொல்லென்று சிரித்தனர். 

தினேஷ் அடிபட்டவனாக வேகமாக நடந்து அவர்களைக் கடந்து சென்றான். 

"நீ சொன்னபடி முன்னாடி போறாண்டி!" என்றாள் தோழிகளில் ஒருத்தி. 

"பரவாயில்லையே! நீ சொன்னபடி நடந்துக்குவான் போலருக்கே!" என்றாள் இன்னொருத்தி.

"முதல்ல கீழ விழாம நடக்கட்டும். போற வேகத்தைப் பாத்தா தடுக்கி விழுந்துடுவான் போலருக்கு. ஏற்கெனவே புல் தடுக்கி பயில்வான் மாதிரி ஒல்லியா இருக்கான்!" என்றாள் பூங்கோதை. 

தினேஷுக்கு அந்த இடத்தை விட்டு அகன்று விட்டால் போதும் போல் இருந்தது. 

ன்னொரு நாள் கல்லூரி வளாகத்துக்குள் தினேஷ் நடந்து சென்றபோது தற்செயலாக பூங்கோதை வேறு சில தோழிகளுடன் அவனுக்கு எதிரே நடந்து வந்தாள். 

தினேஷ் அவள்  முகத்தைப் பார்த்தான். அவளும் அவனைப் பார்த்தாள். ஆனால் அந்தப் பார்வை கோபமான பார்வை போல் இருந்தது. 

 'சரிதான், இவளுக்கு என்னைப் பிடிக்கவில்லை போலிருக்கிறது' என்று நினைத்துக் கொண்டான் தினேஷ். மிகுந்த ஏமாற்றமாக இருந்தாலும் இதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று தன்னைச் சமாதானப் படுத்திக் கொண்டான். 

து நடந்து சில நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் பூங்கோதை முருகனுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதை தினேஷ் பார்த்தான். முதலில் அவனுக்குச் சற்று அதிர்ச்சியாக இருந்தாலும், பூங்கோதை தன்னை விரும்பவில்லை என்றபோது, அவள் யாரை விரும்பினால் என்ன என்று உடனே தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டான். 

தினேஷைப் பார்த்ததும் பூங்கோதை முருகனுடன் பேசிக் கொண்டிருந்ததை நிறுத்தி விட்டு அங்கிருந்து அகன்று விட்டாள்.

"கங்கிராட்ஸ்டா முருகா!" என்றான் தினேஷ், முருகன் அருகில் சென்றதும்.

"நான்தான் உனக்கு கங்கிராசுலேஷன்ஸ் சொல்லணும்!" என்றான் முருகன் சிரித்தபடி.

"என்ன சொல்ற நீ?"

"பூங்கோதை இத்தனை நேரமும் எங்கிட்ட உன்னைப் பத்தித்தான் பேசிக்கிட்டிருந்தா. உன் நல்ல குணத்தையும், அடக்கத்தையும் பத்தி அப்படிப் புகழ்ந்து பேசினா!"

"உண்மையாவா? அவ என்னைப் பத்திக் கேலியாப் பேசினது, என்னை முறைச்சுப் பாத்ததெல்லாம் பாத்தா அவளுக்கு என்னைப் பிடிக்கலியோன்னு நினைச்சேன்!" என்றான் தினேஷ் மகிழ்ச்சி கலந்த வியப்புடன்.

"உன்னைத் தனியா சந்திக்க அவளுக்கு சந்தர்ப்பம் கிடைக்கலியாம்.  தோழிகளோட இருக்கறப்ப உன்னைச் சீண்டிப் பாத்திருக்கா. நீ அவகிட்ட சண்டை போடுவேன்னு எதிர்பாத்திருக்கா. நீ எந்த ரியாக்‌ஷனும் காட்டாம பேசாம இருந்ததால உன் மேல கோபமாக் கூட இருந்திருக்கா. நீ அவ கிட்ட பேசுவேன்னு எதிர்பாத்து, நீ பேசாததால உன்னைப் பத்தி எங்கிட்ட வந்து புலம்பறா!" என்றான் முருகன்.

தினேஷ் வேகமாக நடந்தான்.

"எங்கடா போற?" என்றான் முருகன். 

"கொஞ்சம் முன்னாலதான் போய்க்கிட்டிருக்கா. அவ தோழிகள் யாராவது அவளோட சேரரதுக்கு முன்ன அவகிட்ட போய்ப் பேசணும்!" என்று சொன்னபடியே நடையை எட்டிப் போட்டான்  தினேஷ்.

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 110
குறிப்பறிதல் 
குறள் 1097
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.

பொருள்:
பகை உணர்வு இல்லாத கடும் சொற்களும், பகைவர் போல் பார்க்கும் பார்வையும், வெளிப்பார்வைக்கு அயலார் போல் காட்டிக்கொண்டு மனதுக்குள் அன்பு கொண்டிருப்பவரை அடையாளம் காட்டும் குறிகளாகும்.
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

Monday, March 2, 2020

1096. 'சுருக்' என்று தைத்த பேச்சு!

இரண்டு வருடங்கள் முன்பு சந்திரன் அந்த  நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்ததும், அவன் ஒரு பட்டதாரி என்பதை அறிந்து ம ற்ற ஊழியர்களுக்கு வியப்பு ஏற்பட்டது.

ஏனெனில் எழுதுபொருட்கள் விநியோகத்  தொழிலில் ஈடுபட்டு வந்த அந்தச் சிறிய நிறுவனத்தின்  ஊழியர்களில் பெரும்பாலோர் பள்ளிப் படிப்பையே முடிக்காதவர்கள். பள்ளி இறுதித் தேர்வை முடித்தவர்களே இரண்டு பேர்தான்!

நிறுவனத்தின் மேலாளர் கூட ஒன்பதாம் வகுப்பைத் தாண்டாதவர்தான். முதலாளியின் உறவினர் என்பதால் அவருக்கு அந்தப் பொறுப்பு கிடைத்தது.

"பாவம்! படிச்சிருந்தும் நல்ல வேலை கிடைக்கல போல இருக்கு! அதனாலதான் இந்த சின்ன கம்பெனியில குறைஞ்ச சம்பளத்தில் வேலைக்கு சேந்திருக்கான்!" என்று சந்திரனைப் பற்றிப் பலர் நினைத்தனர். உண்மையும் அதுதான்!

சந்திரனின் கல்வியறிவினாலும், அவனுடைய இயல்பான புத்திசாலித்தனத்தாலும், வேலையில் அவன் காட்டிய ஆர்வத்தினாலும் அவனால் அந்த நிறுவனத்தின் செயல்பாட்டில் சில முன்னேற்றங்களைக்  கொண்டு வர முடிந்தது. இது நிறுவனத்தின் வியாபார வளர்ச்சிக்கும் உதவியது.

தன சக ஊழியர்களிடம் இனிமையாகப் பழகியதும், வேலையில் அவன் அவர்களுக்கு உதவியதும் அவன் மீது மற்றவர்களுக்கு மதிப்பம் அன்பும் ஏற்பாடச் செய்தது. ஆயினும் அந்த நிறுவனத்தின் உரிமையாளரோ, மேலாளரோ நிறுவனத்தின் வளர்ச்சிக்கான அவனுடைய பங்களிப்பைக் கண்டுகொண்டதாகக் கூடக் காட்டிக் கொள்ளவில்லை.

லுவலகம் தொடர்பான கடிதப் போக்குவரத்தைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு சந்திரனுடையது. ஸ்டெனோ சியாமளாவை அழைத்து அவன் கடிதங்களை டிக்டேட் செய்வான். அவள் கடிதங்களை டைப் அடித்து அவன் மேஜை மீது வைத்து விட்டுப் போவாள்.

சியாமளாவிடம் சந்திரனுக்கு ஒரு ஈடுபாடு இருந்தது. ஆனால் அவள் அவனைப் பார்த்துப் புன்னகை கூடச் செய்ததில்லை. அவன் கடிதங்களை டிக்டேட் செய்யும்போது தலை குனிந்து அவன் சொல்வதைச் சுருக்கெழுத்தில் எழுதிக் கொண்டிருப்பாள். டைப் செய்யப்பட்ட கடிதங்களை  அவன் மேஜை மீது வைத்து விட்டுப் போகும்போது கூட அவன் முகத்தைப் பார்க்க மாட்டாள். அவன் "தாங்க்ஸ்" என்று சொல்வதைக் கூடக் காதில் போட்டுக் கொள்ளாதவன் போல் சென்று விடுவாள்.

சியாமளாவுக்குத் தன் மீது இருப்பது அலட்சியமா, வெறுப்பா என்று சந்திரனுக்குப் புரியவில்லை. அதற்குக் காரணமும் புரியவில்லை. தான் அவளை விரும்புவதை அவளிடம் சொன்னால் என்ன ஆகும் என்று யோசித்தான். அடுத்த முறை அவளுக்குக் கடிதம் டிக்டேட் செய்யும்போது அவளுக்கு மட்டும் கேட்கும்படி 'ஐ லவ் யூ' என்று சொல்ல முடிவு செய்தான்.

ஆனால் அதற்குள் வேறொரு சம்பவம் நடந்து விட்டது.

லுவலக லஞ்ச் அறையில் சியாமளாவும் லதா என்ற இன்னொரு பெண்ணும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். "நம்ம சந்திரன் சார் ரொம்ப புத்தியசாலி, இல்ல?" என்றாள் லதா.

அப்போது அந்தப் பக்கம் போய்க் கொண்டிருந்த சந்திரனின் காதில் அது விழுந்தது.  இதற்கு சியாமளா என்ன சொல்லப் போகிறாள் என்று கேட்க எண்ணி அறை  வாசலில் மறைவாக நின்றான் சந்திரன்.

"என்னைப் பொறுத்தவரையில முட்டாளா இருந்தாக் கூடப் பரவாயில்ல, முயற்சி செய்யாதவரா இருக்கக் கூடாது. அவர் ஒரு சோம்பேறி!" என்றாள் சியாமளா.

அடிபட்டவனாக சந்திரன் அங்கிருந்து நகர்ந்தபோது சியாமளா திரும்பி அவனைப் பார்த்தது போல் இருந்தது.

'நான் நின்றிருந்ததை முன்பே பார்த்து விட்டு வேண்டுமென்றுதான் அப்படிச் சொல்லி இருப்பாளா? அப்படியென்றால் என் மீது அவளுக்கு இருக்கும் வெறுப்பு எனக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் அப்படிச் சொன்னாளா?'

சந்திரனுக்குப் புரியவில்லை.

அதற்குப் பிறகு அவன் அவளுக்கு டிக்டேஷன் கொடுத்தபோது அவள் எதுவும் காட்டிக் கொள்ளவில்லை.

சந்திரன் மனம் உடைந்து போனான்.

சில நாட்கள் கழித்து ஒருநாள் சியாமளா டைப் அடித்த கடிதங்களை அவன் மேஜை மீது வைத்து விட்டுப் போனபோது அவனைப் பார்த்து இலேசாகச் சிரித்தது போல் இருந்தது.

உண்மையாகவே சிரித்தாளா அல்லது தன் பிரமையா என்று யோசித்தபடி சந்திரன் டைப் அடித்த கடிதங்களை எடுத்துப் பார்த்தான்.

மேலே இருந்த கடிதத்துடன் ஒரு பத்திரிகை விளம்பர கட்டிங் குண்டூசியால் இணைக்கப்பட்டிருந்தது.

எழுது பொருட்கள் விநியோகத் தொழில் ஈடுபட்டிருந்த ஒரு மிகப் பெரிய அகில இந்திய நிறுவனத்துக்கு கிளை மேலாளர் தேவை என்ற விளம்பரம் அது!

ஓ! அப்படியானால், என்னை சோம்பேறி, முயற்சி இல்லாதவன் என்றெல்லாம் சொன்னது நான் ஒரு நல்ல நிறுவனத்தில் நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற அக்கறையினால்தானா? அப்படியானால், அவளுக்கு என்மீது இருப்பது  அன்புதான்,வெறுப்பு இல்லை!'

சியாமளாவின் இருக்கையின் பக்கம் பார்வையைத் திருப்பினான் சந்திரன். அவள் திரும்பி அவனைப் பார்த்துச் சிரித்தபடியே கட்டை விரலை உயர்த்திக் காட்டினாள்.

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 110
குறிப்பறிதல் 
குறள் 1096
உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்.

பொருள்:
வெளித்தோற்றத்துக்கு அவள் பகைவர் போல் அன்பில்லாத சொற்களைப் பேசுவது போல் தோன்றினாலும், அவை மனதில் பகை இல்லாதவரின்  சொற்கள் என்பது விரைவில் தெரிய வரும்.
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

1307. முதலில் தேவை முகவரி!

விளையாட்டாக ஆரம்பித்த பேச்சு விபரீதத்தில் முடியும் என்று அஜய் எதிர்பார்க்கவில்லை. அஜய் வழக்கம்போல் வீணாவுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருக்கும்போ...