"கோ எஜுகேஷன் காலேஜில படிக்கவே கூடாதுடா!" என்றான் தினேஷ்.
"டேய்! மென்ஸ் காலேஜில படிக்கறவங்கள்ளாம் நம்மைப் பாத்துப் பொறாமைப் படறாங்க. நீ என்னடான்னா இப்படிச் சொல்றியே!" என்றான் முருகன்.
"பின்ன என்னடா? ஒரு பொண்ணைக் காதலிக்க முடியல. அஞ்சு நிமிஷத்தில் காலேஜ் பூரா தெரிஞ்சுடுது!"
" அடப்பாவி! நீ ஒரு பொண்ணைக் காதலிக்கறியா? உன்னோட நெருக்கமாப் பழகற எனக்கே இந்த விஷயம் இப்ப நீ சொன்னப்பறம்தான் தெரியுது. இந்த லட்சணத்தில காலேஜ் பூரா தெரிஞ்சுடுதுன்னு குறைப்பட்டுக்கற? யாருடா அந்தப் பொண்ணு?" என்றான் முருகன்.
"இன்னும் அவகிட்டேந்து எனக்கு சரியான பதிலே கிடைக்கல. அப்புறம்தானே அது காதலாகும்? அப்ப காலேஜ் பூராத் தெரிஞ்சுடுமே! அதைச் சொன்னேன்."
"அது சரி. பொண்ணு யாருன்னு சொல்லலியே?" என்றான் முருகன் விடாமல்.
'பூங்கோதை!" என்றான் தினேஷ்.
"பெயர்ப் பொருத்தமே இல்லையே! நீ இந்திப் பேரு வச்சுக்கிட்டிருக்க. அவ தமிழ்ப் பேரு வச்சுக்கிட்டிருக்கா. எப்படி ஒத்துப் போகும்?"
"அப்ப நீ வள்ளின்னு பேரு இருக்கற பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிப்பியா? அவகிட்டேந்து சிக்னல் கிடைக்கலியேன்னு நான் கவலையில இருக்கேன். நீ வேற பெயர்ப் பொருத்தம், ஜாதகப் பொருத்தம்னு எரிச்சலைக் கிளப்பாதே!" என்றான் தினேஷ் எரிச்சலுடன்.
கல்லூரி வளாகத்தில், பூங்கோதை தன் தோழிகள் இருவருடன் நடந்து சென்று கொண்டிருந்ததை தினேஷ் பார்த்தான். அவள் தோழிகளிடமிருந்து பிரிந்து தனியாகப் போனால் அவளுடன் பேசச் சந்தர்ப்பம் கிடைக்கும் என்று நினைத்து தினேஷ் அவர்களுக்குப் பின்னால் கொஞ்சம் இடைவெளி விட்டு நடந்து போனான்.
அவனைத் திரும்பிப் பார்த்த பெண்களில் ஒருத்தி சற்று உரத்த குரலில், "டீ!நமக்குப் பின்னால ஒத்தன் வராண்டி. நாம மூணு பேர்ல யாரைக் குறி வச்சிருக்கான்னு தெரியலியே!" என்றாள் கேலியான குரலில். பிறகு பூங்கோதையைப் பார்த்து, "ஏண்டி, உன் ஆளா அவன்?" என்றாள்.
"என் ஆள்னா எனக்கு முன்னால நடந்து போவாண்டி. பின்னால வர மாட்டான்!" என்றாள் பூங்கோதை. பின்னால் நடந்து வரும் அவனுக்குக் கேட்க வேண்டும் என்பதற்காகவே அவள் குரலை உயர்த்திப் பேசியது போல் இருந்தது. அவள் சொன்னதைக் கேட்டு மற்ற இருவரும் கொல்லென்று சிரித்தனர்.
தினேஷ் அடிபட்டவனாக வேகமாக நடந்து அவர்களைக் கடந்து சென்றான்.
"நீ சொன்னபடி முன்னாடி போறாண்டி!" என்றாள் தோழிகளில் ஒருத்தி.
"பரவாயில்லையே! நீ சொன்னபடி நடந்துக்குவான் போலருக்கே!" என்றாள் இன்னொருத்தி.
"முதல்ல கீழ விழாம நடக்கட்டும். போற வேகத்தைப் பாத்தா தடுக்கி விழுந்துடுவான் போலருக்கு. ஏற்கெனவே புல் தடுக்கி பயில்வான் மாதிரி ஒல்லியா இருக்கான்!" என்றாள் பூங்கோதை.
தினேஷுக்கு அந்த இடத்தை விட்டு அகன்று விட்டால் போதும் போல் இருந்தது.
இன்னொரு நாள் கல்லூரி வளாகத்துக்குள் தினேஷ் நடந்து சென்றபோது தற்செயலாக பூங்கோதை வேறு சில தோழிகளுடன் அவனுக்கு எதிரே நடந்து வந்தாள்.
தினேஷ் அவள் முகத்தைப் பார்த்தான். அவளும் அவனைப் பார்த்தாள். ஆனால் அந்தப் பார்வை கோபமான பார்வை போல் இருந்தது.
'சரிதான், இவளுக்கு என்னைப் பிடிக்கவில்லை போலிருக்கிறது' என்று நினைத்துக் கொண்டான் தினேஷ். மிகுந்த ஏமாற்றமாக இருந்தாலும், இதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று தன்னைச் சமாதானப் படுத்திக் கொண்டான்.
இது நடந்து சில நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் பூங்கோதை முருகனுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதை தினேஷ் பார்த்தான். முதலில் அது அவனுக்குச் சற்று அதிர்ச்சியாக இருந்தாலும், பூங்கோதை தன்னை விரும்பவில்லை என்றபோது, அவள் யாரை விரும்பினால் என்ன என்று உடனே தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டான்.
தினேஷைப் பார்த்ததும் பூங்கோதை முருகனுடன் பேசிக் கொண்டிருந்ததை நிறுத்தி விட்டு அங்கிருந்து அகன்று விட்டாள்.
"கங்கிராட்ஸ்டா முருகா!" என்றான் தினேஷ், முருகன் அருகில் சென்றதும்.
"நான்தான் உனக்கு கங்கிராசுலேஷன்ஸ் சொல்லணும்!" என்றான் முருகன் சிரித்தபடி.
"என்ன சொல்ற நீ?"
"பூங்கோதை இத்தனை நேரமும் எங்கிட்ட உன்னைப் பத்தித்தான் பேசிக்கிட்டிருந்தா. உன் நல்ல குணத்தையும், அடக்கத்தையும் பத்தி அப்படிப் புகழ்ந்து பேசினா!"
"உண்மையாவா? அவ என்னைப் பத்திக் கேலியாப் பேசினது, என்னை முறைச்சுப் பாத்ததெல்லாம் பாத்தா அவளுக்கு என்னைப் பிடிக்கலியோன்னு நினைச்சேன்!" என்றான் தினேஷ் மகிழ்ச்சி கலந்த வியப்புடன்.
"உன்னைத் தனியா சந்திக்க அவளுக்கு சந்தர்ப்பம் கிடைக்கலியாம். தோழிகளோட இருக்கறப்ப உன்னைச் சீண்டிப் பாத்திருக்கா. நீ அவகிட்ட சண்டை போடுவேன்னு எதிர்பாத்திருக்கா. நீ எந்த ரியாக்ஷனும் காட்டாம பேசாம இருந்ததால உன் மேல கோபமாக் கூட இருந்திருக்கா. நீ அவ கிட்ட பேசுவேன்னு எதிர்பாத்து, நீ பேசாததால உன்னைப் பத்தி எங்கிட்ட வந்து புலம்பறா!" என்றான் முருகன்.
தினேஷ் வேகமாக நடந்தான்.
"எங்கடா போற?" என்றான் முருகன்.
"கொஞ்சம் முன்னாலதான் போய்க்கிட்டிருக்கா. அவ தோழிகள் யாராவது அவளோட சேரரதுக்கு முன்ன அவகிட்ட போய்ப் பேசணும்!" என்று சொன்னபடியே நடையை எட்டிப் போட்டான் தினேஷ்.
காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 110
குறிப்பறிதல்
குறள் 1097
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.
பொருள்:
பகை உணர்வு இல்லாத கடும் சொற்களும், பகைவர் போல் பார்க்கும் பார்வையும், வெளிப்பார்வைக்கு அயலார் போல் காட்டிக் கொண்டு மனதுக்குள் அன்பு கொண்டிருப்பவரை அடையாளம் காட்டும் குறிகளாகும்.
Read 'Here is My Lover' the English version of this story by the same author.
No comments:
Post a Comment