Saturday, January 22, 2022

1140. குமுதினிக்கு வந்த நோய்!

என் எதிர் வீட்டில் இருக்கும் குமுதினிக்குப் பைத்தியம் பிடித்திருப்பதாகப் பலரும் கூறினர். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை.

குமுதினி எனக்கு நெருக்கமானவள் ஒன்றும் இல்லை. எதிர்வீட்டில் வசிப்பதால் இருவரும் சில சமயம் ஒருவரை ஒருவர் பார்க்கும்படி நேரும். அப்போதெல்லாம் அறிமுகமானவர்கள் என்று காட்டிக் கொள்ளும் வகையில் இருவரும் வலுவில் வரவழைத்துக் கொண்ட ஒரு புன்சிரிப்பைப் பரிமாறிக் கொள்வோம். அவ்வளவுதான். 

குமுதினிக்குப் பைத்தியம் பிடித்திருப்பதாகச் சிலர் நினைப்பதற்குக் காரணம் சில நாட்களாக அவள் நடவடிக்கைகளில் காணப்பட்ட சில விசித்திரங்கள்தான்.

சாலையில் நடந்து போகும்போது அவள் தனக்குத்தானே பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் போகிறாளாம்.

அவள் வீட்டில் இருக்கும்போது சில சமயம் ஒரு அறைக்குள் புகுந்து கதவைச் சாத்திக் கொள்வாள். அறைக்குள் அவள் யாரிடமோ பேசிக்கொண்டிருப்பது போல் குரல் கேட்கும். சில சமயம் கோபமாகக் கத்துவாள், சில சமயம் கெஞ்சுவாள். சில சமயம் அறைக்குள்ளேயே அவள் ஓடுவது போல் காலடிச் சத்தம் பெரிதாகக் கேட்கும். 

ஒரு முறை,"எங்கே, என்னைப் பிடித்து விடு, பார்க்கலாம்" என்று சிரித்துக்கொண்டே உரத்த குரலில் கூவி விட்டு அறைக்குள்ளேயே அவள் ஓடும் சத்தம் கேட்டு அவள் அம்மா கதவைத் தட்டி இருக்கிறாள். 

கதவைத் தட்டியதும், சத்தமெல்லாம் நின்று அமைதியாகி விட்டது. இரண்டு நிமிடம் கழித்துக் கlவைத் திறந்த குமுதினி, ஒன்றுமே நடக்காதது போல், "என்னம்மா!" என்று அப்பாவியாகக் கேட்டிருக்கிறாள்.

"என்ன சத்தம்? யாரோடு ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருக்கிறாய்?" என்று அவள் அம்மா கேட்டதற்கு, "அறைக்குள் எப்படியம்மா ஓடிப் பிடித்து விளையாட முடியும்? அதோடு இங்கே யாரும் இல்லையே!" என்று பதில் சொல்லி இருக்கிறாள் குமுதினி.

 குமுதினியின் அம்மா இதைப் பற்றிப் பலரிடமும் சொல்லிப் புலம்பி இருக்கிறாள். அதனால் குமுதினியைப் பார்த்தாலே பலரும் அவளைக் கேலி செய்வது போல் சிரிக்கிறார்கள்.

ஆனால் நான் அப்படிச் சிரிப்பதில்லை. குமுதினிக்கு என்ன பிரச்னை என்று எனக்குத் தெரியும். 

குமுதினிக்கு வந்திருப்பது காதல் என்னும் நோய். இந்த நோய் வந்தவர்கள் ஆரம்பத்தில் அதை வெளியில் சொல்லாமல் மறைக்கப் பார்ப்பார்கள். ஆனால் அது பல விதங்களில் வெளிப்பட்டு வெளி உலகத்துக்கு அவர்களைப் பைத்தியக்காரர்களாகக் காட்டி அவர்களைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்க வைக்கும். 

காதல் விஷயம் பெற்றோருக்குத் தெரிந்து அதை அவர்கள் அங்கீகரித்தால்தான் அந்த நோய் நீங்கும்.

என் விஷயத்தில் அப்படித்தானே நடந்தது? அப்போது இந்தக் குமுதினியும் என்னைப் பார்த்துச் சிரித்தவள்தானே!

இப்போது மற்றவர்கள் குமுதினியைப் பார்த்துச் சிரிக்கும்போது, நான் மட்டும் சிரிக்காமல் இருக்கும்போது, குமுதினி என்னைப் பார்க்கும் பார்வையில், 'அன்று உன்னைப் பார்த்துச் சிரித்தேனே! நீ அனுபவித்தவற்றை நான் அனுபவிக்கும்போதுதானே நான் எவ்வளவு அறிவற்றவளாக இருந்திருக்கிறேன் என்று புரிகிறது!' என்ற அவள் எண்ண ஓட்டம் வெளிப்படுவதை என்னால் உணர முடிகிறது. 

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 114
நாணுத்துறவுரைத்தல்   

குறள் 1140
யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு..

பொருள்:
இந்த அறிவற்ற மக்கள் என் கண்ணுக்கெதிரிலேயே என்னைப் பார்த்துச் சிரிக்கின்றனர். அப்படிச் சிரிக்க காரணம், நான் அனுபவித்த துன்பங்களை அவர்கள் அனுபவிக்காததே!

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Thursday, January 20, 2022

1139. குதிரை வீரன்!

தமயந்தி தன் தாயுடன் அங்காடிக்குச் சென்றபோது. தன் தாய் காய்கறிகள் வாங்குவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"ஏம்மா, பாகற்காய் வாங்கலியா?" என்றாள் தமயந்தி.

அவளை வியப்புடன் பார்த்த அவள் தாய், "உனக்குத்தான் பாகற்காய் பிடிக்காதே? அப்புறம் ஏன் பாகற்காய் வாங்கலியான்னு கேக்கறே?" என்றாள்.

"இல்லை. அவருக்குப் பிடிக்குமே, அதனால நானும் சாப்பிட்டுப் பழக்கிக்கலாம்னு பார்த்தேன்."

"அவருக்கா? எவருக்கு?" என்றாள் அவள் தாய், அவளை ஏறிட்டுப் பார்த்து.

சட்டென்று நாக்கைக் கடித்துக் கொண்ட தமயந்தி, "அவருக்குன்னு சொல்லல அம்மா! அப்பாவுக்குன்னு சொன்னேன்" என்று சமாளிக்க முயன்றாள்.

"ஏண்டி, அப்பாவுக்கும்தான் பாகற்காய் பிடிக்காதே? உங்க ரெண்டு பேருக்கும் பிடிக்காதுங்கறதாலதான் நான் பாகற்காய் வாங்கறதையே விட்டுட்டேன்" என்றாள் அவள் அம்மா.

ன்னொரு முறை தமயந்தி தன் தோழிகளுடன் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிரில் ஒரு வீரன் குதிரை மீது சென்று கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு, "இந்தக் குதிரை அவரோட குதிரைதானே? ஆனா வேற யாரோ இல்ல அது மேல உக்காந்து போறாங்க?" என்றாள்.

"அவரோட குதிரைன்னா, யாரைச் சொல்ற?" என்றாள் தோழிகளில் ஒருத்தி.

"அதாண்டி அன்னிக்கு நாம குளத்தில குளிச்சுக்கிட்டிருக்கறப்ப குதிரைக்குத் தண்ணி காட்ட ஒத்தர் வந்தாரே? நாம குளிச்சிக்கிட்டிருக்கறதைப் பார்த்துட்டு, குதிரையைத் தண்ணி குடிக்க வச்சுட்டு அவரு தள்ளிப் போய் நின்னுக்கிட்டாரே! எவ்வளவு கண்ணியமானவர்! அப்பதானே நான் அவரை முதல்ல பார்த்தேன். அப்புறம் கோவில்லகூடப் பார்த்துப் பேசினேனே?" என்றாள் தமயந்தி.

தோழிகள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"என்னடி உளர்ற? நாம குளத்தில குளிச்ச நாட்கள்ள அப்படி எதுவும் நடக்கவே இல்லையே!" என்றாள் இன்னொரு தோழி.

"ஓ! அப்படியா? அப்ப வேற தோழிகளோட குளிச்சபோது நடந்திருக்கும்."

"எங்களை விட்டா வேற தோழிகள் யாருடி உனக்கு?" என்றாள் தோழி.

"அப்படின்னா என் அம்மாவோட குளிச்சுக்கிட்டிருந்தப்ப நடந்திருக்கும்!" என்றாள் தமயந்தி, தான் ஏன் இப்படி உளறுகிறோம் என்று நினைத்துக் கொண்டே.

"விடுங்கடி. இவளுக்கு ஏதோ ஆயிடுச்சு! இவ அம்மாகிட்ட சொல்லி சீக்கிரமே இவளுக்குத் திருமண ஏற்பாடு செய்யச் சொல்ல வேண்டியதுதான்!" என்று ஒரு தோழி கூற, அனைவரும் கொல்லென்று சிரித்தனர்.

"அப்புறம், எல்லாக் குதிரையும் பாக்கறத்துக்கு ஒரே மாதிரிதான் இருக்கும். அதனால உண்மையில குதிரையோட வந்த ஒரு ஆளை நீ சந்திச்சிருந்தாலும், இது வேற குதிரையாக் கூட இருக்கலாம். அதனால இதை நினைச்சுக் குழப்பிக்காதே!" என்றாள் இன்னொரு தோழி.

ன்று தமயந்தி தன் காதலனைச் சந்தித்தபோது, "என் காதலைப் பத்தி நான் யார்கிட்டேயும் சொல்லல. ஆனா என் மனசில நான் பூட்டி வச்சிருக்கற காதல் எனக்குத் தெரியாமலே அப்பப்ப வெளியே வந்து தன்னை எல்லோருக்கும் வெளிக்காட்டிக்கிட்டிருக்கு. அதனால சீக்கிரமாவே என் வீட்டில வந்து என்னைப் பெண் கேளுங்க!" என்றாள்.

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 114
நாணுத்துறவுரைத்தல்   

குறள் 1139
அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.

பொருள்:
நான் அமைதியாக இருப்பதால் என் காதலை எல்லோரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

1307. முதலில் தேவை முகவரி!

விளையாட்டாக ஆரம்பித்த பேச்சு விபரீதத்தில் முடியும் என்று அஜய் எதிர்பார்க்கவில்லை. அஜய் வழக்கம்போல் வீணாவுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருக்கும்போ...