Friday, January 4, 2019

5. இரண்டு கண்கள், மூன்று செயல்கள்


"டேய் கண்ணா,சிங்கப்பூர்லேந்து வந்திருக்கற ஒருத்தர் ஒரு த்ரீ இன் ஒன்  வாங்கிட்டு வந்திருக்காரு. புது செட். நல்ல கம்பெனி. குறைச்ச விலைக்கு வாங்கலாம். நீ வாங்கிக்கறயா?" என்றான் வையாபுரி.

"த்ரீ இன் ஒன்னா? நம்ம ஊர்ல சில பேரு டூ  இன் ஒன் வச்சிருக்காங்க. பாத்திருக்கேன். அது என்ன த்ரீ இன் ஒன்?" என்றான் கண்ணன்.

"இப்ப புதுசா சி டின்னு வந்திருக்கில்ல,சின்ன கிராமஃபோன்  ரிகார்டு மாதிரி? புதுப் பாட்டெல்லாம் இப்ப சி டிலதானே வருது? சிடி,  டேப், ரேடியோ மூணும் சேந்ததுதான் த்ரீ இன் ஒன்!" என்று விளக்கினான் வையாபுரி.

"எனக்கு எதுக்கு அதெல்லாம்? அதோட நான் பழைய பாட்டு கேக்கற ஆளு. எனக்கு எதுக்கு சிடில்லாம்?"

"பழைய பாட்டெல்லாம் கூட சிடில வருதுடா. அவரே சிங்கப்பூர்லேந்து எம் ஜி ஆர் பாட்டு, சிவாஜி பாட்டு, சுசீலா பாட்டுன்னு அஞ்சாறு பழைய பாட்டு  சிடி வச்சிருக்காரு. இதெல்லாம் இங்கேயும் வர ஆரம்பிச்சுடும். நீதான் சரக்குப் பிடிக்க வாரா வாரம் மாயவரத்துக்குப் போவியே, அங்கேந்து சிடில்லாம் வாங்கிட்டு வரலாம்"  என்ற வையாபுரி, அவன் காதருகே வந்து, "இந்தசெட்டை நீ எடுத்துக்கிட்டுப் போயி, உன் ஆளுக்கு சிடியில் பாட்டுப் போட்டுக் காட்டினேன்னா, அவ எவ்வளவு நேரம் வேணும்னாலும் உன்கிட்ட பேசிக்கிட்டிருப்பாடா" என்றான்.

"போடா!" என்றான் கண்ணன் சிரித்தபடி.

சாலையிலிருந்து சற்றுத் தள்ளி, செடிகள் அடர்ந்த பள்ளமான இடத்தில் கண்ணனுக்கு எதிரே அமர்ந்து கொண்டாள் காவேரி.

"ஆமாம், பொம்பளைங்கல்லாம் ஏன் ஆம்பளைங்க முகத்தைப் பாக்க வெக்கப்படறாங்க?" என்றான் கண்ணன்.

"அது வெட்கம் இல்ல கண்ணா! உங்க மேல உள்ள பரிதாபம்!" என்றாள்  காவேரி.

"எதுக்கு பரிதாபம்?" என்ற கண்ணன், "அதுக்கு முன்ன ஒரு விஷயம் சொல்லிடு. நீ என்னைக் கண்ணான்னு செல்லமாக் கூப்பிடறியா, இல்ல என் பேரைச் சொல்லிக் கூப்பிடறியா?" என்றான்.

"எப்படி வேணும்னா வச்சுக்க கண்ணா!" என்ற காவேரி,
"உங்க மேல பரிதாபப் பட்டுத்தான் நாங்க உங்களைப் பாக்காம இருக்கோம். ஏன்னா, எங்க பார்வையை நீங்க தாங்க மாட்டீங்க!" என்றாள்.

"அது சரிதான். நீ என்னை நேரா பாக்கறது எப்பவாவதுதான். ஆனா ஒவ்வொரு தடவையும் நீ என்னைப் பாக்கறச்சே சிவபெருமான் நெத்திக் கண்ணைத் திறந்து பாக்கற மாதிரி இருக்கு!"

"ஏன், நான்  உன்னைப் பாத்தா உன் உடம்பு எரியுதா என்ன?"

"அப்படிச் சொல்லல. ஆனா எதோ பண்ணுது. அதைத் தாங்க முடியல. எழுந்து  ஓடிடலாம் போல இருக்கு!"

"அப்படியா? சரி, நான் இப்ப உன்னை நேராப் பாக்கறேன். நீ எழுந்து ஓடறியான்னு பாக்கலாம்."

"ஐயையோ! எழுந்து ஓடறதுக்கா உன்னைப் பாக்க வந்திருக்கேன்? சரி, பாரு. என் மேல கொஞ்சம் கருணை வச்சு, என்னை எரிச்சுட்டாம பாரு" என்றான் கண்ணன்.

அவனை நேராகப் பார்த்த காவேரி, "என்ன கண்ணா இது? தலையை நல்லா படிய வார மாட்டியா? மூஞ்சில மூணு நாள் தாடி! உன்  சட்டை கலர் உனக்குப் பொருந்தவே இல்லை. பழுப்பு ஏறின வேட்டி. வேட்டி கட்டிக்கிட்டு கால்ல ஏன் பூட்ஸ் போட்டுக்கிட்டிருக்க?" என்றாள்.

"ஏண்டி, எதோ என் மூஞ்சியைப் பாருன்னு சொன்னா, ஒரு பார்வையிலேயே தலையிலேந்து கால் வரையிலும் பாத்துட்டியே. நான் இவ்வளவு நேரம் உன்னைப் பாத்துக்கிட்டிருக்கேன், உன் புடவை என்ன நிறம்னு கூட கவனிக்கல."

"அதான் கண்ணா ஆம்பளை பாக்கறதுக்கும், பொம்பளை பாக்கறதுக்கும்  வித்தியாசம்! நாங்க ஒரு பார்வையிலேயே மொத்தமாப் பாத்துடுவோம். எங்க பார்வை அவ்வளவு வேகமா ஓடும்."

"நல்ல வேளை சொன்னியே! ஒங்கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும் போலருக்கு. ஆமாம், என் இப்படி அடிக்கடி கண்ணைத் திருப்பி இங்கியும் அங்கியும் பாத்துக்கிட்டிருக்கே?"

"யாராவது நம்பளைப் பாத்துடுவாங்களோன்னு பயம். அதான் யாராவது வரங்களான்னு பாத்துக்கிட்டிருக்கேன்."

"பாத்தா என்ன, அதான் நாம கல்யாணம் பண்ணிக்கப்போறமே?"

"அதுக்காக பயப்படலை கண்ணா!  நாம பழகறதை மத்தவங்க பாத்தா வெக்கமாவும் சங்கடமாவும்தானே இருக்கும்?" என்றாள் காவேரி.

"வேடிக்கையா இருக்கு காவேரி. உன் கண் என்னை வாட்டி எடுக்குது. ஆனா அதுவே பயப்படவும் செய்யுது! போறாததுக்கு, வேகமா அங்கேயும் இங்கேயும் ஓடுது. என் நண்பன் வை!யாபுரிகிட்ட சொல்லணும்" என்றான் கண்ணான்.

"அவர்கிட்ட என்ன சொல்லப்போற?" என்றாள்  காவேரி மருட்சியுடன்.

"அவன் என்னை த்ரீ இன் ஒன் வாங்கச் சொல்லிக்கிட்டிருக்கான். என்கிட்டயே ஒரு த்ரீ இந்த ஒன்  இருக்குன்னு சொல்லப் போறேன்."

"த்ரீ இன் ஒன்னா?"

"ஆமாம். மூணு விதமா செயல்படற உன்னோட பார்வை!" என்றான் கண்ணன்."

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 109
தகையணங்குறுத்தல் (தலைவியின் அழகு தலைவனை வருத்துதல்)

குறள் 1085
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து..

பொருள்:
என்னை வருத்துவதால், உயிர் குடிக்கும் கூற்றம், என் மீது பார்வை ஓடுவதால் இது  கண், மருட்சியுடன் இருப்பதால்  மான் என்று  இந்தப்பெண்ணின் பார்வை இந்த மூன்று இயல்புகளையும் கொண்டிருக்கிறது.

குறள் 1085 (விரைவில்)

குறள் 1083

Sunday, December 30, 2018

4. என்ன பார்வை உந்தன் பார்வை!


"அந்தப் பொண்ணைப் பாத்தியா? தொட்டாலே கீழ விழுந்துடுவா போலருக்கு. அவ்வளவு பலவீனமா இருக்கா."

"ஆமாண்டா! கொடியிடை அப்படின்னு எல்லாம் வர்ணிப்பாங்களே, இப்பதான் நேர்ல பாக்கறேன்."

"இடை மட்டும் கொடி இல்லை. உடம்பே ஒரு கொடி மாதிரி மெல்லிசா, தொய்வா இருக்கு பாரு."

"அவ நடந்து வரச்சே, அவ நடக்கற மாதிரி தெரியல. காத்து அவளைத் தள்ளிக்கிட்டு வர மாதிரி இருக்கு!"

"போதும். நாம பேசறதை யாராவது கேட்டுடப்  போறாங்க. ஊர்ல எதோ தகராறுன்னு கேள்விப்பட்டு. அதைப் பத்தி சுவாரசியமா எதோ தகவல் கிடைக்கும்னு நம்ப எடிட்டர் நம்ப ரெண்டு பேரையும் இங்கே அனுப்பினாரு. ஆனா இங்க ஒண்ணும் சுவாரசியமா இல்ல. எல்லாம் அடங்கிப் போயிடுச்சு. உடம்பைப் புண்ணாக்கிக்காம ஊர் போய்ச் சேரற வழியைப் பாப்போம்."

"ஆமாம். ஏற்கெனவே ஒரு முரடன் நாம எதுக்கு வந்திருக்கோம்னு சந்தேகப்பட்டு நம்பளை மிரட்டி விசாரிச்சான். அவன்கிட்ட அடி வாங்கப் போறோம்னு நெனச்சேன். நல்லவேளை தப்பிச்சோம். மறுபடி நாம அவன் கண்ணில பட்டா நம்ப மூஞ்சியைப் பேத்துடுவேன்னு மிரட்டிட்டுதானே நம்பளை விட்டான்!"

"அதை ஞாபகப்படுத்தாதே. அவனை நினைச்சாலே பயமா இருக்கு. காட்டெருமை மாதிரி எப்படி இருந்தான், பாத்தாலே பயங்கரமா!"

"டேய்! காட்டெருமை மறுபடி வருதுடா!"

"எங்கே?"

"அங்க பாரு! ரோட்ல நடந்து வரான். நாம இந்த மரத்துக்குப் பின்னால ஒளிஞ்சுக்கலாம். ஐயையோ, அந்தக் கொடியிடைப் பொண்ணு இருக்கற இடத்துக்கு அவன் வாரானே! அந்தப் பொண்ணு பாவம் அவன்கிட்ட மாட்டிக்கப் போறா. நாம கொஞ்சம் பக்கத்தில போய் மறைஞ்சு நின்னு பாப்போம். அந்தப் பொண்ணை அவன் ஏதாவது செஞ்சா, அவளைக் காப்பாத்த முயற்சி பண்ணலாம். நம்பளால முடியாதுன்னாலும், ஊர்ல யாரையாவது அழைச்சுக்கிட்டு வரலாம் இல்ல?"

இருவரும் மறைத்தபடியே நடந்து அந்தப் பெண் நின்ற இடத்துக்கு அருகே வந்தனர்.

அந்தப் பெண் அருகில் அந்த முரடன் வந்ததும், எங்கேயோ  பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெண் திரும்பி அவன் வருவதைப் பார்த்தாள். உடனேயே வேறு பக்கமாக நடக்கத் தொடங்கினாள்.

:பொன்னி, கொஞ்சம் நில்லு!"  என்றான் முரடன்.

"ஒங்கிட்ட எனக்கென்ன பேச்சு? நேத்து நீ வருவேன்னு ரொம்ப நேரம் காத்துக்கிட்டிருந்தேன். நீ வராம ஏமாத்திட்டே!"

"இல்ல பொன்னி. நான் சொல்றதைக் கேளு" என்றான் முரடன்.

பொன்னி  சரேலென்று திரும்பி அவனைப் பார்த்தாள். "என்னய்யா சொல்லப் போற? சொல்லு. நீ சொல்ற காரணத்தையெல்லாம் கேட்டுட்டு நான் உன் மேல தப்பு இல்லேன்னு நம்பிடறேன். நான் ஏமாளிதானே?" என்றாள் சிரித்துக்கொண்டே. .

"பொன்னி! நீ என்னை என்ன வேணும்னா திட்டு. ஆனா என்னை அப்படிப் பாக்காதே. உன் பார்வை பட்டாலே என் உடம்பு வெலவெலத்துப் போகுது" என்றான் முரடன்.

ஒளிந்து பார்த்துக் கொண்டிருந்த பத்திரிகை நிருபர்கள் சிரிப்பை அடக்க முடியாமல் கைகளால் வாயைப் பொத்திக் கொண்டார்கள்.

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 109
தகையணங்குறுத்தல் (தலைவியின் அழகு தலைவனை வருத்துதல்)

குறள் 1084
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.

பொருள்:
பெண் தன்மை உடைய இந்தப்  பேதையின் கண்கள் தம்மைப் பார்ப்பவரின்  உயிரைக் குடிக்கும் தன்மையுடன் அமைந்து (அவள் பெண்மைத் தன்மையிலிருந்து) மாறுபட்டிருக்கின்றன.

Friday, November 23, 2018

3. வீரனின் சங்கடம்


ஆற்றில் பலரும் குளித்துக் கொண்டிருந்தபோது அந்த விபரீதம் நிகழ்ந்தது.

ஆற்றின் மையப்பகுதி மிக ஆழம். அங்கே ஓர் இடத்தில் நீர் மட்டத்துக்குக்  கீழே ஒரு சுழல் உண்டு. அதில் சிக்கிக் கொண்டால், ஆழத்தில் கொண்டு தள்ளி விடும். நீச்சல் தெரிந்தவர்கள் கூட அதிலிருந்து பிழைத்து வருவது கடினம். கடந்த காலங்களில் இரண்டு மூன்று பேர் அந்தச் சுழலில் சிக்கிக்கொண்டு இறந்திருக்கிறார்கள். சில மணி நேரம் கழித்துப் பல மைல்கள் தள்ளிப் பிணமாகக் கிடைத்திருக்கிறார்கள்.

அதனால் ஆற்றில் குளிப்பவர்கள் யாரும் மையப்பகுதிக்கு அருகில் போக மாட்டார்கள். யாராவது சிறுவர்கள் சற்று முன்னால் போனாலே, அவர்களை மற்றவர்கள் தடுத்து விடுவார்கள்.

ஆனால் அன்று கந்தன் என்ற சிறுவன் வேகமாக நீந்தி, ஆற்றின்  மையப்பகுதிக்குப் போய் விட்டான். சுற்றியிருந்தவர்கள், "அங்கே போகாதேடா!" என்று கத்தியது அவன் காதில் விழுந்ததா என்றே தெரியவில்லை.

அனைவரும் பயந்தபடியே கந்தன் சுழலில் சிக்கிக்கொண்டு விட்டான். அவன் தலை நீருக்குள் மறைந்து விட்டது.

எல்லோரும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு இளைஞன் வேகமாக நீந்திச் சுழல் அருகே போய் விட்டான்.

"வீராசாமி! போகாதேப்பா! நீயும் மாட்டிப்ப" என்று சிலர் கூவினர்.

சில நொடிகளில் அவன் தலையும் மறந்து விட்டது.

ஆனால், அடுத்த நிமிடமே சற்றுத்தள்ளி வீராசாமியின் தலை  தெரிந்தது. அவன் கையில் கந்தனைப் பிடித்திருந்தான். எப்படியோ சுழலில் மூழ்கி கந்தனை இழுத்துக்கொண்டு பாதுகாப்பான இடத்துக்கு வந்து விட்டான் வீராசாமி.

மற்றவர்களும் அங்கே சென்று இருவரையும் அழைத்து வந்தனர்.

"கந்தா! நீ பிழைச்சது பெரிய அதிசயம்டா. வீராசாமி உன்னை எமன்கிட்டேந்தே மீட்டுக்கிட்டு வந்துட்டான்!"  என்றார் ஒருவர்.

"என்னப்பா வீராசாமி! உனக்குக் கொஞ்சம் கூட பயமில்லையா?"என்று சிலர் கேட்டபோது, வீராசாமி பதில் சொல்லாமல் சிரித்தான்.

கந்தனுடன், வீராசாமியும், இன்னும் சிலரும் கந்தன் வீட்டுக்குச் சென்றனர். கந்தனின் பெற்றோரிடம் வீராசாமி கந்தனைக் காப்பாற்றியதைப் பற்றி மற்றவர்கள் பெருமையாகச் சொன்னார்கள். கந்தனின் பெற்றோருடன், அவன் அக்கா கனகமும் அங்கே இருந்தாள்.

சற்று நேரத்தில் வீராசாமி அவர்களிடம் விடை பெற்றுத் திரும்பினான். "வீராசாமி,  நீ நம்ம குடும்பத்துக்கு ரொம்ப வேண்டியவனாப் போயிட்ட. அடிக்கடி வந்து போயிக்கிட்டிரு" என்றார் கந்தனின் தந்தை.

சில நாட்களுக்குப் பிறகு, வீராசாமியைத் தெருவில் சந்தித்த கந்தனின் தந்தை, "என்னப்பா! அப்புறம்  ஆளையே காணோம்? அடிக்கடி வீட்டுக்கு வந்துட்டுப் போன்னு சொன்னேனே"  என்றார்.

"வரேங்க" என்றான் வீராசாமி.

கந்தனின் தந்தை சென்றதும், வீராசாமியுடன் இருந்த அவன் நண்பன் முத்து "ஏண்டா, அவர் பையனைக் காப்பாத்தினேங்கறதுக்காக நன்றியோட உன்னைத் தன் வீட்டுக்கு வரச் சொல்றாரு. ஒரு தடவை போயிட்டு வந்துடேன். அவரு சந்தோஷப்படுவாரில்ல?" என்றான்.

"போகலாம். கொஞ்சம் பயமா இருக்கு"

"என்னடா பயம்? அதுவும் உனக்கா? எமனுக்குக் கூட பயப்படாத வீரன்னு உன்னைப் பத்தி ஊர்ல எல்லாரும் சொல்றாங்க!"

"அவங்க வீட்டுக்குப் போனா, கந்தனோட அக்கா கனகம் இருப்பா ."

"இருந்தா என்ன? அவ கிட்ட உனக்கென்ன பயம்?"

"அவகிட்ட பயம் இல்ல. அன்னிக்கு அவ என்னைப்  பாத்தப்ப, அந்தப் பார்வை என் மனசுக்குள்ள புகுந்து குத்தற மாதிரி இருந்தது. மறுபடி அந்தப் பார்வையை சந்திக்கறதுக்கே பயமா இருக்கு" என்ற வீராசாமி, சற்றுத் தயக்கத்துடன், "ஆனா அவளைப்  பாக்கணும் போலவும் இருக்கு" என்றான்.

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 109
தகையணங்குறுத்தல் (தலைவியின் அழகு தலைவனை வருத்துதல்)

குறள் 1083
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையல் பேரமர்க் கட்டு.

பொருள்:
எமன் என்று ஒன்று இருப்பதை இதுவரை நான் அறியாமல் இருந்தேன். அது பெண் தன்மையுடன், போர் செய்யும் பெரிய கண்கள் உடையது என்பதை இப்போது அறிந்து கொண்டேன்.

குறள் 1084 (விரைவில்)

குறள் 1082

Monday, November 5, 2018

2. தலையைக் குனியும் தாமரையே!

சுப்பிரமணி திணறிக் கொண்டிருந்தான். தினசரி வாழ்க்கையில் எத்தனையோ இளம் பெண்களைப் பார்த்திருக்கிறான். அதில் சிலர் கவனத்தைக் கவருவதாகவும் இருந்திருக்கிறார்கள்.

ஆனால், திருமணம் செய்து கொள்வதற்காக ஒரு பெண்ணை வந்து பார்ப்பது அவனுக்கு ஒரு கிளர்ச்சியான அனுபவமாக இருந்தது.

பெண் பார்க்கக் கிளம்புமுன், "இது 1965ஆம் வருஷம். இப்ப காலம் மாறிடுச்சு. கல்யாணத்துக்கு முன்னே உன் அம்மாவை நான்  பார்க்கவே இல்லை. என் அப்பா அம்மாதான் பாத்து நிச்சயம் பண்ணினாங்க. மணமேடையிலதான் முதல் தடவையாப்  பாத்தேன்" என்றார் அவன் அப்பா சதாசிவம்.

"ஃபோட்டோ பாத்தீங்க இல்ல? " என்றான் சுப்பிரமணி.

சதாசிவம் பெரிதாகச் சிரித்து, "அப்பல்லாம் ஃபோட்டோவே எடுக்க மாட்டாங்க. கல்யாணத்துல எடுக்கறதுதான் ஃபோட்டோ" என்றார்.

பெண்ணை அழைத்து வந்ததும், அவள் எல்லோரையும் வணங்கி விட்டு ஜமுக்காள த்தில் உட்கார்ந்தவள், தலைகுனிந்தபடியே இருந்தாள்.

முதல் பார்வையிலேயே பெண்ணை சுப்ரமணிக்குப் பிடித்து விட்டது. இத்தனைக்கும் அவள் தலை குனிந்திருந்ததால், அவள் முகத்தை அவனால் சரியாகப் பார்க்க முடியவில்லை.

பெண்கள் தலை குனிந்திருக்க வேண்டும் என்று ஏன் விதித்திருக்கிறார்கள் என்று நொந்து கொண்டான்.  ஆயினும் அந்த நிலையிலேயே  அவளிடம் விழுந்து விட்டோமே என்று தோன்றியது.

"என்னடா, பொண்ணை நல்லாப் பாத்துக்கிட்டியா? அப்புறம் வீட்டுக்குப் போய் சரியா பாக்கலேன்னு சொல்லாதே" என்றாள் அவன் அம்மா.

அம்மா சொன்னதற்காக, சுப்ரமணி பெண்ணை ஒருமுறை உற்றுப் பார்த்தான்.

அந்தக்கணத்தில் சட்டென்று அந்தப் பெண் ஒருகணம் தலையைத் தூக்கி அவன் முகத்தைப் பார்த்தாள்.

சுப்பிரமணிக்கு, திடீரென்று மின்னல் போல் ஒரு ஒளி வந்து தன்னைத் தாக்கியது போல் இருந்தது. அவனையறியாமலேயே அவன் தலையைக்  குனிந்து.கொண்டான். அதைப் பார்த்து அந்தப் பெண் புன்னகை செய்தது போல் தோன்றியது.

தலையைக் குனிந்து கொண்டு விட்டதால் அதை அவனால் சரியாகப் பார்க்க முடியவில்லை. ஆயினும் அவள் தன்னை வீழ்த்தி விட்டு வெற்றிப் புன்னகை செய்வது போலவும், தான் தன் தோல்வியை ஒப்புக்கொள்ளும் விதமாக தலை குனிந்தது போலவும் தோன்றியது.

பெண்கள் தலை குனிந்திருக்க வேண்டும் என்று விதித்தவர்கள் தங்களுக்கு நேர்ந்த அனுபவத்தால்தான் அப்படி விதித்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டான்.
காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 109
தகையணங்குறுத்தல் (தலைவியின் அழகு தலைவனை வருத்துதல்)

குறள் 1082
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.

பொருள்:
என் பார்வைக்கு பதில் கூறுவது போல் வந்த அவள் பார்வை ஏற்கெனவே  (தன்  அழகால்) என்னைத் தாக்கிக்கொண்டிருந்தவள் ஒரு சேனையுடன் வந்து தாக்குவது போல் இருந்தது.

Thursday, November 1, 2018

1. மந்திரப் புன்னகை

கோவில் திருவிழாவில் இத்தனை கூட்டம் இருக்கும் என்று குமரன்  எதிர்பார்க்கவில்லை. அவன் ஊரிலிருந்து சில மைல்கள் தள்ளி இருந்த அந்தக் கோவில் திருவிழா மிகவும் புகழ் பெற்றது. சிறுவனாக இருந்தபோது பள்ளி நண்பர்களுடன் ஒருமுறை சென்று வந்த பிறகு அவன் அந்தத் திருவிழாவுக்குச் சென்றதில்லை.
.
குமரனுக்குத் திருவிழாவுக்குச் செல்வதில்   அவ்வளவு ஆர்வம் இல்லை. அவன் அம்மாதான் "ஒரு தடவை பார்த்துட்டு வா. படிச்சு முடிச்சிட்டே. எப்படியும் வேலைக்கு வெளியூருக்குப் போயிடுவ. அப்புறம் சந்தர்ப்பம் வராது" என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தாள்.

திருமண வயதுடையவர்கள் அந்தக் கோவில் திருவிழாவுக்குச் சென்று வந்தால், அவர்களுக்கு விரைவில் திருமணம் ஆகி விடும் என்று அந்தப் பகுதி மக்களிடையே ஒரு நம்பிக்கை உண்டு. மகனைத் திருவிழாவுக்கு அனுப்பியதற்கு அதுவும் ஒரு காரணம் என்பதைக் குமரனின் தாய் தன் மகனிடம் சொல்லவில்லை.

குமரன் கோவிலுக்கருகில் சென்றபோது மக்கள் கூட்டம் அலை அலையாக நகர்ந்து கொண்டிருந்தது. வெகு தொலைவில் கோவிலின் உற்சவர் சிலை ஒரு உயர்ந்த மேடையில் வைக்கப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்து கொண்டிருப்பது தெரிந்தது.

கூட்டத்தின் பின்னே சென்று மேடையருகில் சென்று சாமியை தரிசிக்கப் பல மணி நேரம் ஆகும் என்று தோன்றியது. இங்கிருந்தே கன்னத்தில் போட்டுக்கொண்டு திரும்ப வேண்டியதுதான் என்று நினைத்த குமரன் மீண்டும் ஒருமுறை கூட்டத்தைப் பார்த்தான். ஆணும் பெண்ணுமாகப் பல தலைகள் ஆடிக்கொண்டு மெதுவே நகர்ந்து கொண்டிருந்தன.

சட்டென்று ஒரு தலை மட்டும் தனியே தெரிந்தது. தெரிந்தது தலை என்று சொல்ல முடியாது. அந்தத் தலைக்குரிய பெண் தன் காதில் போட்டுக்கொண்டிருந்த குழைதான் அவளைத் தனித்துக் காட்டியது.

எத்தனையோ பெண்கள் கழுத்தில் வளையம் போன்ற காதணி அணிந்திருப்பதைக் குமரன் பலமுறை பார்த்திருக்கிறான். அந்தக் கூட்டத்திலேயே கூட இன்னும் பல பெண்கள் குழை அணிந்திருக்கக் கூடும். ஆயினும் எதனாலோ அந்தப் பெண்ணின் குழைகல் தனியே தெரிந்தன.

அந்தப் பெண்ணின் வயது என்ன என்பதை தூரத்திலிருந்து கணிக்க முடியவில்லை.

ஒருவித ஆர்வத்தில் குமரன் சற்று வேகமாக நடந்து சிலரைக் கடந்து இன்னும் சற்று முன்னே சென்றான். இப்போது அந்தப் பெண்ணின் கூந்தல் தெரிந்தது. பின்னல் போடாமல் பின்பக்கம் தொங்க விடப்பட்டிருந்த அந்தக் கூந்தலின் அசைவில் கூட ஒரு அழகு இருப்பதாகத் தோன்றியது.

முகத்தைக் கூடப் பார்க்காத ஒரு பெண்ணிடம் தனக்கு என் இந்த ஆர்வம் என்று குமரன் யோசித்தபோது, தற்செயலாக  அந்தப் பெண் முகத்தைப் பக்கவாட்டில் திருப்பினாள். தோகை விரித்த மயில் ஒன்று சட்டென்று தன்  கழுத்தை ஒடித்துத் திருப்புவது போல் இருந்தது அவள் செய்கை.

இப்போது அவள் முகத்தின் ஒரு பகுதி தெரிந்தது. ஆனால் அந்தத் தோற்றம் எதனாலோ குமரனின் மனத்தை மயக்கியது.

எப்படியும் அவள் முகத்தைப் பார்த்து விட வேண்டும் என்ற ஆவலில் இன்னும் வேகமாக நடந்து பலரைத் தாண்டி அந்தப் பெண்ணின் அருகில் வந்து விட்டான். அவள் முகத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் இன்னும் வேகமாக நடந்து அவளைத் தாண்டி சற்று தூரம் சென்றான்.

சாலையோரம் ஒரு மரம் இருந்தது. அந்த மரத்தடியில் நின்று திரும்பி அந்தப் பெண்ணைப் பார்த்தான். அவள் தலை முடியின் அசைவும், அவள் ஆடி ஆடி நடந்து வந்ததும் அவளை ஒரு மயில் போல் தோன்ற வைத்தன.

அவள் முகத்தைப் பார்த்ததும் ஒரு கணம் குமரன் அயர்ந்து விட்டான். இது என்ன இப்படி ஒரு தெய்வீகக் களை! கோவிலில் இருந்த தெய்வ உருவங்களில்  ஒன்று திருவிழாவைப் பார்ப்பதற்காக எழுந்து வந்து கூட்டத்தோடு நடந்து வருவதாகத் தோன்றியது. அவள் அருகில் நெருங்கியபோது, இந்தப் பெண் எனக்கு மனைவியாக அமைந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் அவன் மனதில் எழுந்தது.

இப்போது அவள் அவனுக்கு மிக அருகில் வந்து விட்டாள். அவனைக் கடந்து சென்றபோது அவன் சற்றும் எதிர்பாராமல், அவனை  நோக்கித் திரும்பி இனிமையாகப் புன்னகை செய்தாள்.

குமாரனுக்குத் தான் திருவிழாவுக்கு வந்ததற்குப் பலன் கிடைத்து விட்டதாகத் தோன்றியது.
காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 109
தகையணங்குறுத்தல் (தலைவியின் அழகு தலைவனை வருத்துதல்)

குறள் 1081
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.

பொருள்:
இவள் தெய்வப்பெண்ணா, அழகிய மயிலா அல்லது கனமான குழையைக் காதில் அணிந்த மனிதப் பெண்ணா என்று என் மனம் மயங்குகிறது.
5. இரண்டு கண்கள், மூன்று செயல்கள்

"டேய் கண்ணா,சிங்கப்பூர்லேந்து வந்திருக்கற ஒருத்தர் ஒரு த்ரீ இன் ஒன்  வாங்கிட்டு வந்திருக்காரு. புது செட். நல்ல கம்பெனி. குறைச்ச விலைக...