"அப்படியெல்லாம் நடக்காது!" என்றாள் தாரிணி.
"நீ கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம்!"
"அவர் என்னைக் குத்தம் சொன்னா, நான் கேட்டுக்கிட்டு சும்மா இருக்கணுமா? என் மேல தப்பு இல்லேன்னு நான் சொல்லக் கூடாதா?"
"உங்க சண்டையை நான் பாத்துக்கிட்டுத்தானே இருந்தேன்? முகேஷ் ரொம்ப இறங்கி வந்தாரு. தான் சொன்னது தப்புன்னு கூட ஒத்துக்கிட்டாரு. ஆனா, நீதான் அவ சமாதானத்தை ஏத்துக்காம, மூர்க்கமா சண்டை போட்ட!"
"என் மேல தப்பு கண்டுபிடிக்காதே. என் நிலைமையில நீ இருந்தாதான் உனக்குப் புரியும்" என்று பேச்சை முடித்தாள் தாரிணி.
இரண்டு நாட்கள் கழித்துத் தோழிகள் இருவரும் சந்தித்துக் கொண்டபோது, "என்னடி, உங்களுக்குள்ள சமாதானம் ஆயிடுச்சா?" என்றாள் சௌம்யா.
"இல்லை" என்றாள் தாரிணி, சுருக்கமாக.
"நீ அவருக்கு ஃபோன் பண்ணிப் பேசலாம் இல்ல?"
"நான் எதுக்கு ஃபோன் பண்ணணும்? தப்பு அவர் மேலதான். அவர் ஃபோன் பண்ணட்டும்!"
"அப்படி அவர் ஃபோன் பண்ணலேன்னா?"
"கண்டிப்பாப் பண்ணுவாரு" என்றாள் தாரிணி.
அடுத்த சில நாட்களில், தாரிணிக்கும், முகேஷுக்கும் சமாதானம் ஆகி, இருவரும் முன்பு போல் நெருக்கமானார்கள்.
தாரிணியுடன் தனியே இருந்தபோது, "ஆனாலும் உனக்கு ரொம்பப் பிடிவாதம்டி! தப்பு அவர் மேல இருந்தாலும், நீ முதல்ல ஃபோன் பண்ணிப் பேசி இருக்கலாம் இல்ல? நல்லவேளை, அவர் ஃபோன் பண்ணிப் பேசினாரு. இல்லேன்னா என்ன ஆகி இருக்கும்?" என்றாள் சௌம்யா.
"என்ன ஆகி இருக்கும்? நான் அவருக்கு ஃபோன் பண்ணிப் பேசியிருப்பேன் எங்களுக்குள்ள சமாதானம் ஆகி இருக்கும்!" என்றாள் தாரிணி, சிரித்துக் கொண்டே.
"அதுக்கு, முதல்ல அவர் இறங்கி வந்து பேசினப்பவே நீ சமாதானமாப் போயிருக்கலாம் இல்ல?"
"போயிருந்தா, எங்களுக்குள்ள சண்டையே வந்திருக்காதே!"
"என்னடி சொல்ற?"
"ஆமாண்டி. முகேஷ் மேல எந்தத் தப்பும் இல்ல. நான்தான் அவர் சாதாரணமா சொன்ன ஒரு விஷயத்தைப் பெரிசு பண்ணி, அவரோட சண்டை போட்டேன்."
"ஏன் அப்படிப் பண்ணின?" என்றாள் சௌம்யா, வியப்புடன்.
"சண்டை போட்டுட்டு, இப்ப மறுபடியும் சேர்ந்தப்புறம், அவரோட அன்பு எவ்வளவு அதிகம் ஆகி இருக்கு தெரியுமா? இதுக்காகத்தான் நான் சண்டை போட்டேன்!"
"என்னவோ எனக்கு ஒண்ணும் புரியல" என்றாள் சௌம்யா.
"இப்ப புரியாது. நீ காதலிக்க ஆரம்பிச்சேன்னா, அப்ப புரியும்!" என்றாள் தாரிணி, தோழியின் கன்னத்தைச் செல்லமாகத் தட்டியபடி.
கற்பியல்
No comments:
Post a Comment