திருமணமான இந்த ஆறு மாதங்களில், மாதவிக்கும், அவள் கணவன் தேவாவுக்கும் இடையே சிறு சிறு சச்சரவுகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால், அவை சில மணி நேரங்களுக்கு மேல் நீடித்ததில்லை.
காலையில் ஒரு சச்சரவு ஏற்பட்டால், கோபித்துக் கொண்டு அலுவலகம் செல்லும் தேவா, மாலை அலுவலகத்திலிருந்து திரும்பி வந்ததும், காலையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடியோடு மறந்து விட்டது போல்தான் நடந்து கொள்வான்.
ஆனால் இந்த முறை, வாக்குவாதம் சற்றுப் பெரிதாகி, இருவரிடமிருந்தும் வார்த்தைகள் சற்றுக் கடினமாக வெளிப்பட்டு விட்டன. ஆயினும், மாலையில் கணவன் வீடு திரும்பியதும், முந்தைய தடவைகளில் நடந்து கொண்டது போல், காலையில் நடந்ததை மறந்து விடுவான் என்றுதான் மாதவி நினைத்தாள்.
ஆனால் அப்படி நடக்கவில்லை.
தேவா மாலையில் தாமதமாகத்தான் வீட்டுக்கு வந்தான். மாதவியின் முகத்தைப் பார்க்காமலேயே, "நான் சாப்பிட்டுட்டேன்" என்று கூறி விட்டு, அறைக்குள் நுழைந்து கதவைத் தாளிட்டுக் கொண்டான்.
மாதவி பதில் பேசாமல், இன்னொரு அறைக்குள் சென்று படுத்துக் கொண்டாள். வழக்கத்துக்கு மாறாகக் கணவன் சமாதானமடையாதது அவளுக்கு வருத்தத்தை அளித்தாலும், கொஞ்சம் பொறுத்துப் பார்க்கலாம் என்று முடிவு செய்தாள் அவள்.
அடுத்த நாள் காலை, வழக்கத்தை விடச் சீக்கிரமாகவே கிளம்பி விட்டான் தேவா. "டிஃபன் பண்ணி இருக்கேன்" என்று மாதவி கூறியதை அவன் காதில் போட்டுக் கொள்ளவில்லை.
இது அடுத்த சில நாட்களுக்குத் தொடர்ந்தது. மாதவி தேவாவிடம் வலுவில் சென்று பேச முயன்றபோது, அவன் பதில் பேசவில்லை.
இது எத்தனை நாள் நீடிக்கும், எங்கு சென்று முடியும் என்ற கவலை மாதவிக்கு ஏற்பட்டது.
ஐந்தாறு நாட்களுக்குப் பிறகு ஒருநாள், மாலையில் வழக்கத்தை விடச் சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்த தேவா, மாதவியைப் பார்த்துச் சிரித்து, "இன்னிக்கு வெளியில சாப்பிடப் போறோம், கிளம்பு!" என்றான்.
மறுநாள் காலை, தேவா அலுவலகத்துக்குக் கிளம்பியபோது, "அஞ்சாறு நாளா உன்னைக் கொஞ்சம் கஷ்டப்படுத்திட்டேன் இல்ல?" என்றான்.
"கொஞ்சமா? ரொம்ப!" என்ற மாதவி, "நீங்க எங்கிட்ட பேசாம இருந்ததுதான் எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. ஆனாலும், இப்ப நீங்க எங்கிட்ட காட்டற அன்பைப் பாக்கறப்ப, அந்தக் கஷ்டம் கூட ஒரு நல்ல விஷயமாத்தான் தோணுது!" என்றாள், தேவாவை அணைத்தபடி.
கற்பியல்
No comments:
Post a Comment