அதிகாரம் 114 - நாணுத்துறவுரைத்தல்

 

திருக்குறள்
காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 114
நாணுத்துறவுரைத்தல்

1131. காலங்கள் மாறினாலும்...

ஆண்டு: 1721

அன்பரே!

உங்கள் ஆருயிர்க் காதலியின் வணக்கங்கள்.

என் நாணத்தைச் சற்று ஒதுக்கி விட்டு இந்த ஓலையைத் தங்களுக்கு எழுதுகிறேன். 

அதுவும் என் உயிர்த் தோழி மேகலை தஞ்சை நகருக்குச் செல்வதால் அவள் மூலம் இந்த ஓலையை அனுப்பக் கிடைத்த ஒரு அரிய வாய்ப்பாககக் கருதி இந்த மடலை வரைந்து அனுப்புகிறேன். 

அவள் உறவினர் தஞ்சையில் ஒரு வியாபாரி என்பதால், வியாபார வேலையாக அங்கே சென்றிருக்கும் உங்கள் இருப்பிடத்தை அவர் மூலம் கண்டறிந்து இந்த  ஓலையைத் தங்களிடம் சேர்த்து விடுவதாக அவள் எனக்கு உறுதி அளித்திருக்கிறாள். 

என் காதலுக்கு உதவுவதில் அவளுக்கு எவ்வளவு ஆர்வம் பாருங்கள்!

அழகும் அறிவும் நிரம்பப் பெற்ற ஆண்தகையே! இந்த ஏழையின் மீது நீங்கள் ஏன் அன்பு காட்டினீர்கள்? 

அன்பு காட்டியதோடு நில்லாமல் பலமுறை என்னைத் தனிமையில் சந்தித்துக் காதல் மொழிகள் பேசி என்னைக் கட்டியணைத்து... (இதற்கு மேல் சொல்ல எனக்குக் கூச்சமாக இருக்கிறது!)

இதை எழுதும்போது கூட நீங்கள் என்னைத் தழுவிய இன்பத்தை எண்ணி என் மனம் களிப்பையும், வேதனையையும் ஒருங்கே அனுபவிக்கிறது.

காதல் இன்பத்தில் என்னைத் துய்க்க வைத்த பின் திடீரென்று ஒருநாள் வியாபார வேலையாகத் தஞ்சைப் பட்டணத்துக்குச் செல்வதாகச் சொல்லி என்னைத் துன்பக் கடலில் தூக்கிப் போட்டு விட்டுச் சென்று விட்டீர்கள். 

நீந்தவும் முடியாமல், மூழ்கவும் மனம் வராமல் இந்தத் துன்பக் கடலில் அல்லாடியபடி நான் படும் தவிப்பை உங்ளுக்கு உணர்த்தவே இந்த மடல்.

இந்த மடல் கண்டதும் விரைந்து வந்து இந்த மங்கையைக் கைதூக்கிக் கரைக்கு அழைத்துச் செல்லுங்கள்.

உங்கள் அன்பு என்னும் மழைநீருக்காக நான் சாதகப் பறவை போல் தாகத்துடனும், தவிப்புடனும் காத்திருக்கிறேன்.

                                                                                        உங்கள் ஆருயிர்க் காதலி

                                                                                            அபலை மதிவதனி.

ஆண்டு: 1921

அன்புள்ளவரே!

உங்கள் திருவடியில் ஆயிரம் முறை விழுந்து வணங்கி உங்கள் அன்புக் காதலி பார்வதி எழுதிக் கொள்வது.

நான் உங்களுக்குக் கடிதம் எழுதுவது தவறு என்று நினைத்தால் என்னை மன்னித்து விடுங்கள். 

இது உங்கள் கைகளுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்பதற்காக இதை ரிஜஸ்டர்ட் தபாலில் அனுப்புகிறேன். ரிஜஸ்டர்ட் போஸ்ட் கட்டணத்துக்காக முகப்பவுடர் வாங்க வேண்டும் என்று அம்மாவிடம் பொய் சொல்லிக் காசு வாங்கி இருக்கிறேன். அம்மா கேட்டால், பழைய பவுடர் டப்பாவைக் காட்டிப் புதுசு என்று சொல்லிச் சமாளிக்க வேண்டியதுதான்!

தறசெயலாகக் கோவிலில் சந்தித்த என்னைப் பின் தொடர்ந்து வந்து  உங்கள் காதலைச் சொல்லி என் மனதை மயக்கினீர்கள்.  

அதன் பிறகு நாம் சில தனிமையான இடங்களில் சந்தித்துப்பேசி நெருக்கமானோம். 

உங்கள் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று திடீரென்று ஊருக்குப் போனீர்கள். ஒரு மாதமாகி விட்டது. உங்களிடமிருந்து ஒரு தகவலும் இல்லை. உங்கள் தந்தை நலமாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்.

எனக்கு நீங்கள் கடிதம் எழுதினால் என பெற்றோர் பார்த்து விடுவார்கள் என்பதால்தான் நீங்கள் எழுதவில்லை என்று எனக்குப் புரிகிறது.

ஆனால் உங்கள் பிரிவைத் தாங்க முடியாமல்தான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நீங்கள் விரைவிலேயே இங்கே திரும்பி வருவீர்கள் என்று நம்புகிறேன். 

நீங்கள் என் முகத்தை அன்புடன் பார்த்து என் கையை ஆதுரத்துடன் பற்றினால்தான் என் ஏக்கம் தீரும்.

கீழே உள்ள என் தோழியின் விலாசத்துக்கு எனக்கு எழுதவும். அவள் பெற்றோருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அவள் ஏதாவது சொல்லிச் சமாளித்துக் கொள்வாள். 

உடன் பதில்.

                                                                                                        உங்கள் அன்பள்ள

                                                                                                            பார்வதி.

ஆண்டு: 2021

 ஷைலு தன் அலைபேசியிலிருந்து விஸ்வாஸின் அலைபேசிக்கு அனுப்பிய குறுஞ்செய்தி.

டேய்! 

நீ பாட்டுக்கு வருவே, என்னைக் காதலிக்கறேம்பே, சினிமா, மால்னு ரெண்டு மாசம் சுத்திட்டு ஆஃபீஸ் வேலையா மும்பைக்குப் போறேன், நாலு நாள்ள வந்துடுவேன்னு சொல்லிட்டு  திடீர்னு காணாமப் போவ. 

ஆஃபீஸ் வேலையா ரொம்ப பிஸியா இருப்பேன்னுட்டு நான் உனக்கு ஃபோன் கூடப் பண்ணாம இருந்தா நீ பாட்டுக்கு கமுக்கமா இருக்க!

உனக்கு ஃபீலிங்ஸ் இல்லாம இருக்கலாம். ஆனா எனக்கு இருக்கு. அதனாலதான் பிரஸ்டீஜ் பாக்காம உனக்கு மெஸ்ஸேஜ் பண்றேன். 

இன்னிக்கு ஈவினிங் நீ எனக்கு வீடியோ கால் பண்ணலே, அப்புறம் இருக்குடா உனக்கு!  

யுவர் லவ் 

ஷைலு.                                            

குறள் 1131
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி.

பொருள்:
காமத்தால் துன்புற்று  வருந்துபவர்க்கு மடலூர்தல் அல்லாமல் வலிமையான துணை வேறொன்றும் இல்லை.

1132. காத்திருந்த கண்களே!

நர்மதா!

ஒரு சினிமா தியேட்டரில்தான் பழனி அவளைப் பார்த்தான். 

தியேட்டரில் அவன் உட்கார்ந்திருந்தபோது ஒரு இருக்கை தள்ளி அவள் அமர்ந்திருந்தாள். கடைசி வரை அந்த இருக்கை காலியாகத்தான் இருந்தது.

படம் ஆரம்பித்துச் சிறிது நேரம் வரை கூட அந்தப் பெண் உள்ளே வருபவர்களைப் பார்த்துக் கொண்டிருந்ததால் அவளுடன் வர வேண்டிய யாரோ வரவில்லை என்று அவன் புரிந்து கொண்டான். 

படத்தின் சில காட்சிகளை ரசித்தபோது அவள் தற்செயலாகத் திரும்பி அவனைப் பார்த்தது போல் தோன்றியது.

இடைவேளையின்போது அவள் அவன் பக்கம் திரும்பி, "எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?" என்றாள்.

"என்ன? காப்பி, டீ ஏதாவது வாங்கிக்கிட்டு வரணுமா?" என்றான் பழனி.

அவள் பெரிதாகச் சிரித்து விட்டு, "அதில்லை! என் தோழி வரதாச் சொன்னா. ஆனா வரலை. படம் முடிஞ்சதும் பஸ் ஸ்டாப் வரை துணைக்கு வர முடியுமா?" என்றாள்.

'சாயந்திர வேளையில் எதற்குத் துணை' என்று மனதில் தோன்றிய கேள்வியைப் புறம் தள்ளி விட்டு, "ஓ, நிச்சயமா!" என்றான் பழனி.

தியேட்டரிலிருந்து பஸ் நிறுத்தம் அதிக தூரம் இல்லை.

"ஒரு பொண்ணு தனியா நடந்து போனா, யாராவது வந்து வம்பு பண்ணுவாங்க. அதுக்குத்தான் உங்களைத் துணைக்கு வரச் சொன்னேன்" என்றாள் அவள் நடந்து செல்லும்போது. 

தொடர்ந்து, "உங்களைப் பாத்தா நல்லவராத் தோணுது. உங்களை மாதிரி வாலிபர்கள் நண்பர்கள் இல்லாம தனியா சினிமாவுக்கு வரதே அதிசயம்தான்!" என்றாள் அவள். 

"கூப்பிட்டேன். யாரும் வரமாட்டேன்னுட்டாங்க. ஜெமினி படம் பாக்கறதில அவங்களுக்கு அதிக ஆர்வம் இல்ல. சிவாஜி எம் ஜிஆர் படம்னாதான் அடிச்சு புடிச்சுக்கிட்டு ஓடுவாங்க."

"நீங்க மட்டும்தான் காதல் மன்னன் ரசிகராக்கும்?" என்றாள் அவள் குறும்பாகச் சிரித்தபடி.

"ஆமாம்... நீங்க என்ன சாவித்திரிக்காக வந்தீங்களா?" என்றான் பழனி.

"இல்லை. நானும் காதல் மன்னன் ரசிகைதான்!" என்றாள் அவள் அவனைப் பார்த்துச் சிரித்தபடி.

அவள் கூறியதற்கு வேறு ஏதேனும் பொருள் இருக்குமா என்று அவன் யோசித்தான்.

பஸ் நிறுத்தம் வந்து விட்டது.

பஸ் வந்து விடப் போகிறதே என்ற அவசரத்தில், "உங்க பேரு? நீங்க காலேஜ் ஸ்டூடன்ட்தானே?" என்றான் பழனி பரபரப்புடன்.

"பேரு நர்மதா. காமாட்சி காலேஜ் பி எஸ் சி பாட்டனி" என்று அவள் கூறிக் கொண்டிருந்தபோதே பஸ் வந்து விட்டது.

"தாங்க்ஸ். அப்புறம் பாக்கலாம்!" என்ற பவித்ரா, அவன் எதிர்பாராமல் அவன் கையைப் பற்றிக் குலுக்கி விட்டு பஸ்ஸில் ஏறி விட்டாள்.

'எங்கே, எப்படிச் சந்திப்பது? என் பெயரைக் கூட அவள் கேட்டுக் கொள்ளவில்லையே!' என்று குழம்பியபடி நின்றான் பழனி.

"உன்னை மாதிரி மடையன் இருக்க முடியாதுடா! முதலிலேயே அவளைப் பத்தின விவரங்களைக் கேட்டுக்கிட்டு உன்னைப் பத்தின விவரங்களைச் சொல்லி இருக்கணும். அதை விட்டுட்டு காதல் மன்னனைப் பத்திப் பேசிட்டுக் காதலைக் கோட்டை விட்டுட்ட!" என்றான் பழனியின் நண்பன்  கோவிந்த்.

"அப்பதான் அவளை முதல்ல பாக்கறேன். அவளை பஸ் ஸ்டாண்டில விட்டப்பறம் நான் யாரோ அவ யாரோன்னு போயிடுவேன்னுதான் நினைச்சேன். அவ எங்கிட்ட பேசினதை வச்சுத்தான் அவளுக்கு என் மேல ஒரு ஈடுபாடு ஏற்பட்டிருக்கும்னு தோணிச்சு. அதுக்கப்பறம்தான் அவ மேல எனக்கு ஈடுபாடு வந்தது. அவகிட்ட மேல பேசறதுக்குள்ள பஸ் வந்து, எல்லாம் ரொம்ப வேகமா நடந்து முடிஞ்சு போச்சு."

"அவளுக்கு உன்கிட்ட ஈடுபாடு இருந்தா அவ அந்த பஸ்ஸை விட்டுட்டு உங்கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு அடுத்த பஸ்ல போயிருக்கலாமே!"

"டேய்! தியேட்டர்லேந்து பஸ் ஸ்டாண்டுக்கு நடக்க அஞ்சு நிமிஷம் கூட ஆயிருக்காது. அதுக்குள்ள எல்லாத்தையும் யோசிச்சு செயல்பட முடியுமா?" என்றான் பழனி எரிச்சலுடன்.

"ஆனா துக்குள்ள காதல் மட்டும் வந்துடுச்சாக்கும்!"

"ஆமாண்டா. இந்த ஒரு மாசமா அவளை மறுபடி பாக்க முடியலியேன்னு நான் தவிக்கிற தவிப்பு எனக்கு மட்டும்தான் தெரியும்!"

"சரி. அவ காலேஜுக்குப் போய்ப் பாத்தியா?"

"பாத்தேன். ஒரு வாரம் காலேஜ் விடற நேரத்தில காலேஜ் கேட்கிட்ட நின்னேன். அவ வரலை. யார்கிட்டயாவது விசாரிக்கலாம்னா, அவளைப் பத்தித் தப்பா நினைச்சுடுவாங்களோன்னு பயமா இருக்கு. அவளுக்கே அது பிடிக்காம போகலாம். இது என்ன சங்க காலமா, காதலை தைரியமா சொல்ல? 1962ஆம் வருஷம்!"

"எந்த காலேஜ்ல படிக்கிறா அவ?"

"காமாட்சி காலேஜ்."

"டேய்! உனக்குக் கொஞ்சம் அதிர்ஷ்டம் இருக்குன்னு நினைக்கிறேன். நான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு அந்த காலேஜ்லதான் படிக்கிறா. ஆனா அவ பி எஸ் சி கெமிஸ்ட்ரி முடிக்கப் போறா. அவகிட்ட நான் ஒரு தடவை தனியா பேசணும்னு சொன்னதால. நாளைக்கு என்னை அவ வீட்டுக்கு வரச் சொல்லி இருக்காங்க. நர்மதாங்கற பி.எஸ்.சி. பாட்டனி படிக்கிற பொண்ணைப் பத்தி விசாரிச்சு சொல்லுன்னு அவகிட்ட கேக்கறேன்!"

"நான் நர்மதாவுக்கு ஒரு கடிதம் தரேன். அதை அவகிட்ட கொடுத்துடச் சொல்றியா?" என்றான் பழனி.

"அவளுக்கு உன் ஆளைத் தெரியுமோ என்னவோ? அதோட கடிதம்லாம் கொடுத்தா ஏதாவது தப்பா ஆயிடப் போகுது" என்றான் கோவிந்த்.

"ஒரே காலேஜ்தானே? பி எஸ் சி பாட்டனி. எந்த வருஷம்னு தெரியல. ஆனா சுலபமா கண்டு பிடிச்சுடலாம்னு நினைக்கிறேன். கடிதம் ரொம்ப சுருக்கமாத்தான் இருக்கும். நீயே பாரேன்" என்ற பழனி ஒரு தாளை எடுத்து இரண்டு வரிகள் எழுதி அவனிடம் கொடுத்தான்.

"நர்மதா! அன்று உன்னை பஸ் ஏற்றி அனுப்பிய பின் உன்னை மீண்டும் சந்திக்க முடியவில்லை. வரும் ஞாயிறு மாலை 4 மணிக்கு அதே பஸ் நிறுத்தத்தில் காத்திருக்கிறேன் - காத்திருந்த கண்கள்."

"என்னடா உன் பெயரைப் போடாம காத்திருந்த கண்கள்னு போட்டிருக்க?"

"அதுதான் நாங்க பாத்த படம். அவ புரிஞ்சுப்பா!" என்றான் பழனி.

ஞாயிற்றுக்கிழமை மாலை அதே பஸ் நிறுத்தத்தில் அவர்கள் மீண்டும் சந்தித்துக் கொண்டனர்.  

குறள் 1132
நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.

பொருள்:
எனது உயிரும், உடலும் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிப்பதால், நாணத்தைப் புறம் தள்ளிவிட்டு மடலூர்வதற்குத் துணிந்து விட்டேன்.

1133. நான் எழுதுவதென்னவென்றால்...

"டேய், மாணிக்கம்!" என்று கூவினார் துரைசாமி

"என்னப்பா?" என்று மெல்லிய குரலில் கேட்டுக்கொண்டே உள்ளிருந்து வெளியே வந்தான் மாணிக்கம்.

"ஏண்டா, உன் பெரியப்பாவும் பெரியம்மாவும் நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க. நீ பாட்டுக்கு உள்ளே உக்காந்துக்கிட்டிருக்கியே!" என்றார் துரைசாமி.

மாணிக்கம் பெரியப்பாவையும், பெரியம்மாவையும் பார்த்துக் கைகூப்பி வணங்கி, "வாங்க, எப்படி இருக்கீங்க?" என்றான்.

"என்னடா, ஆம்பளையா இருந்துகிட்டு பொம்பளை மாதிரி இப்படி வெக்கப்படறே? நீ பேசறதே கிணத்துக்குள்ளேந்து பேசற மாதிரி அவ்வளவு மெதுவாக் கேக்குது!" என்றார் பெரியப்பா சிரித்தபடி.

"அவன் எப்பவுமே அப்படித்தாங்க. அவனுக்கு ரொம்பக் கூச்ச சுபாவம். எங்க ரெண்டு பேரைத் தவிர வேற யார்கிட்டேயும் பேசறத்துக்கே கூச்சப்படுவான். மத்தவங்க முன்னால வரத்துக்குக் கூடத் தயங்குவான்!" என்றாள் அவன் அம்மா மீனாட்சி, மகனுக்குப் பரிந்து.

"பெரிய கம்பெனியில மெஷின் ஆபரேட்டரா வேலை செய்யற! கல்யாணம் பண்ண வேண்டிய வயசில இப்படிக் கூச்சப்படலாமா?" என்றார் பெரியப்பா.

"பொண்டாட்டி வந்தா கூச்சமெல்லாம் பறந்துடாதா?" என்ற பெரியம்மா, "என்ன கல்யாணத்துக்குப் பாத்துக்கிட்டிருக்கீங்க இல்ல?" என்றாள் மீனாட்சியைப் பார்த்து.

"எங்கே? எப்ப கேட்டாலும், இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும்னு சொல்லிக்கிட்டிருக்கான்!" என்றாள் மீனாட்சி.

"அன்புள்ள மான்விழியே!
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயர் காதலில் ஓர் கவிதை"

கடிதத்தின் துவக்க வரிகளைப் படித்து விட்டுப் பெரிதாகச் சிரித்த கண்ணம்மா, "என்னையா, சினிமாப் பாட்டை அப்படியே எழுதி இருக்கே! உனக்கா சுயமா எழுதத் தெரியாதா?" என்றாள்.

"அது ஆரம்பம்தான். ஆரம்பம் அழகா இருக்கட்டும்னுட்டுத்தான் சினிமாப் பாட்டு வரிகளை எழுதினேன். அப்புறம் நான் எவ்வளவு எழுதி இருக்கேன்! அதையெல்லாம் படிக்க மாட்டியா?" என்றான் மாணிக்கம்.

"வீட்டிலேயே படிச்சுட்டேன் - அதுவும் பத்துத் தடவை! சும்மா உனக்கு எதிரே படிச்சுக் காட்டினேன்" என்று சிரித்தாள் கண்ணம்மா.

"படிச்சுட்டியா?" என்று கூச்சத்தில் நெளிந்த மாணிக்கம், "எப்படி இருக்கு?" என்றான்.

"பத்துத் தடவை படிச்சேன்னு சொன்னேனே, அதிலேந்தே தெரியலியா?" என்றபடியே மாணிக்கத்தின் கைகளை அன்புடன் பற்றிய கண்ணம்மா, "ஆமாம். நாமதான் நேரில பாத்துப் பேசிக்கிறமே, அப்புறம் எதுக்கு இந்தக் கடிதம்?" என்றாள்.

"கடிதத்தில எழுதினதையெல்லாம் நேரில சொல்ல முடியுமா?"

"ஆமாம், ஆமாம்" என்றபடியே, கடிதத்தை மீண்டும் பிரித்த கண்ணம்மா, "அது என்ன எழுதி இருக்க...ரோஜா இதழ் போன்ற உன் இதழ்களில்..." என்று கடிதத்தின் ஒரு பகுதியை உரக்கப் படிக்க ஆரம்பத்தாள் 

"உஸ்! உரக்கப் படிக்காதே! எனக்கு வெக்கமா இருக்கு!" என்று அவள் இதழ்களைத் தன் விரல்களால் மூடினான் மாணிக்கம்.

குறள் 1133
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.

பொருள்:
நல்ல ஆண்மையும், நாண உணர்வையும் முன்பு கொண்டிருந்த நான், இன்று அவற்றை மறந்து, காதலுக்காக மடலூர்வதை மேற்கொண்டுள்ளேன்.

1134. அவ்வை சண்முகி!

இரண்டு காவலர்கள் ஒரு இளைஞனின் கைகளைக் கட்டி அழைத்துக் கொண்டு காவலர் தலைவரிடம் வந்தனர்.

"தலைவரே! அந்தி மயங்கும் வேளையில் இவன் பெண் வேடமிட்டு மறைந்து மறைந்து சென்று கொண்டிருந்தான். ஒரு பெண் பயந்து பயந்து செல்கிறாளே, அவளுக்குப் பாதுகாப்பு கொடுத்து அழைத்துச் செல்லலாம் என்று நினைத்து அருகில் சென்றபோதுதான் இவன் பெண் வேடம் போட்ட ஒரு வாலிபன் என்று தெரிந்தது. பெண் வேடம் போட்டதற்கான காரணத்தை இவன் எங்களிடம் சொல்ல மறுக்கிறான். அதனால் இவனைத் தங்களிடம் அழைத்து வந்தோம்" என்றான் காவலர்களில் ஒருவன்.

"சொல்! எதற்கு இந்தப் பெண் வேடம்? ஏதாவது நாடகத்தில் நடிக்கப் போகிறாயா? அப்படி இருந்தால் கூட நாடகக் கொட்டகையில்தானே வேடம் போட்டுக் கொள்வார்கள்!" என்றார் காவலர் தலைவர் சிரித்தபடி.

"ஐயா! சொன்னால் நம்ப மாட்டீர்கள்! என் காதலியைப் பார்க்கத்தான் போய்க் கொண்டிருந்தேன்" என்றான் அந்த வாலிபன்.

"அதற்கு ஏன் பெண் வேடம்?"

"ஐயா! வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளாமல் அரசரின் போர்ப்படையில் சேர்ந்து நாட்டுக்குச் சேவை செய்வது என்று நானும் என் நண்பர்கள் சிலரும் சில நாட்கள் முன்பு ஒரு உறுதி எடுத்துக் கொண்டோம். ஆனால் ஒரு பெண்ணைச் சந்தித்ததும் எனக்கு அவள் மேல் உடனே காதல் ஏற்பட்டு விட்டது. அவளும் என் காதலை ஏற்றுக் கொண்டு விட்டாள். 

"இது என் நண்பர்களுக்குத் தெரிந்தால், 'உன் உறுதிமொழி என்ன ஆயிற்று? இவ்வளவுதானா உன் ஆண்மை, வீரம் எல்லாம்?' என்று என்னை எள்ளி நகையாடுவார்களே என்று பயந்துதான் பெண் வேடமிட்டு என் காதலியைச் சந்தித்து வருகிறேன். என் காதலிக்குத் தன் பெற்றோர்களிடம் தன் காதலைப் பற்றிச் சொல்ல அச்சமாக இருப்பதால், அவளுக்கும் இந்த ஏற்பாடு பிடித்திருக்கிறது. தயவு செய்து என்னை விட்டு விடுங்கள். என் காதலி எனக்காகக் காத்திருப்பாள்."

"எங்கே காத்திருக்கிறாள் உன் காதலி?"

"அருகில் இருக்கும் பூங்காவில்தான்."

"சரி. காவலர்கள் உன்னுடன் வருவார்கள். உன் காதலி அங்கிருந்தால் உன்னை அவர்கள் அங்கே விட்டு விடுவார்கள். இல்லாவிட்டால் நீ கைதியாக இங்கேயே திரும்பி வர வேண்டியதுதான்!"

"அதற்கு அவசியம் இருக்காது ஐயா! எத்தனை நேரம் ஆனாலும் என் காதலி எனக்காகக் காத்திருப்பாள்" என்றான் வாலிபன் மகிழ்ச்சியுடன்.

"இவன் ஊர் பெயர் ஆகிய விவரங்களை வாங்கிக் கொண்டு இவன் சொல்லும் இடத்துக்கு இவனை அழைத்துச் செல்லுங்கள். இவன் காதலி அங்கு இல்லாவிட்டால் இவனைக் கைது செய்து சிறையில் அடைத்து விடுங்கள்!" என்றார் காவல் தலைவர் காவலர்களிடம்.

"ஐயா! என் பெயர் சண்முகம். என் ஊர் அருகிலுள்ள அவ்வைப்பட்டி" என்றான் வாலிபன்.

"அவ்வைப்பட்டி சண்முகம்! பெண் வேடம் போட்டதால் நீ அவ்வை சண்முகி!" என்று சொல்லிச் சிரித்தார் காவல் தலைவர்.

குறள் 1134
காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை.

பொருள்:
நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகிறது.

1135. வளையல் சத்தம்

ஒரு மாலை நேரத்தில்தான் அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.

நகைகள், மணிகள் மற்றும் ரத்தினங்கள் விற்பனை செய்யும் அங்காடி ஒன்றில் பணி செய்து வந்த வைரவன் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தான். 

அதிக நடமாட்டம் இல்லாத ஒரு சாலையில் ஓரமாக நடந்து வந்த வைரவன் சாலை முடிவில் திரும்பியபோது, அந்தச் சாலையில் வேகமாக நடந்து வந்து கொண்டிருந்த ஒரு இளம்பெண் மீது மோதிக் கொண்டான்.

கீழே விழவிருந்த அவளைத் தன் கைகளால் தாங்கிப் பிடித்தபோதுதான் அவள் தன் இரு கைகளிலும் மணிக்கட்டு முதல் முழங்கை வரை வளைகள் அணிந்திருப்பதைப் பார்த்து வியந்தான்.

கீழே விழாமல் தப்பித்த அவள் தன் கைகளிலிருந்த வளைகள் உடையாமல் இருக்கின்றனவா என்று பார்ப்பது போல் தன் இரு கைகளையும் பார்த்தாள்.

பிறகு வைரவனை நிமிர்ந்து பார்த்துச் சிரித்தபடியே, "என் வளையல்கள் உடையாமல் காப்பாற்றியதற்கு நன்றி!" என்றாள்.

"நீ கீழே விழாமல் தடுத்தேன். அதற்கு நன்றி சொல்லாமல், உன் வளைகள் உடையாமல் காப்பாற்றியதற்கு நன்றி சொல்கிறாயே! வளைகள் என்றால் உனக்கு அவ்வளவு விருப்பமா? அனுமாருக்கு வடைமாலை அணிவிப்பார்கள். உன் இரு கைகளிலும் வளைமாலைகள் சார்த்தி இருக்கிறாயே!" என்றான் வைரவன்.

அவள் மீண்டும் தன் கைகளைப் பெருமையுடன் பார்த்துக் கொண்டாள். 

"உன் வீடு எங்கே?" என்றான் அவன்.

"இதோ இங்கே ஒரு குறுக்குத் தெரு போகிறது அல்லாவா? அதில் திரும்பினால் வலது புறத்தில் உள்ள கடைசி வீடு. புலவர் வளையாபதி என்று கேட்டால் யாரும் சொல்வார்கள். அவர்தான் என் தந்தை!"

"ஓ, வளையாபதியின் பெண் என்பதால்தான் வளைகளின் மீது உனக்கு இத்தனை விருப்பம் போலும்! அது சரி. உன் வீடு எங்கே என்றுதானே கேட்டேன்? அதற்கு ஏன் உன் விலாசத்தையே கொடுக்கிறாய், உன் தந்தையின் பெயரையும் சொல்லி? நான் உன் வீட்டுக்கு வந்து உன்னைப் பெண் கேட்க வேண்டும் என்றா?"

"ம்? என் தந்தையிடம் கேட்பதற்கு முன் என் சம்மதத்தை நீங்கள் கேட்க வேண்டாமா? சில முறையாவது உங்களைச் சந்திக்காமல் உங்களை நான் எப்படி ஏற்றுக் கொள்வது?" என்றாள் அவள் அவன் முகத்தைப் பார்த்துக் குறும்பாகச் சிரித்து.

எதிர்பாராத ஒரு மோதல் இப்படி ஒரு இனிய உறவின் துவக்கமாக மாறியதைக் கண்டு வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்த வைரவன், "அப்படியானால் தினமும் மாலை இதே நேரத்தில் அருகே இருக்கும் ஒரு தனிமையான இடத்தில் நாம் சந்திக்கலாமே!" என்றான்.

"சந்திக்கலாம்தான். ஆனால் அதற்கு நீங்கள் ஐந்தாறு நாட்கள் காத்திருக்கவேண்டும். நாளை நாங்கள் வெளியூர் செல்கிறோம்."

"எப்போது திரும்பி வருவீர்கள்?"

"பௌர்ணமிக்குள் வந்து விடுவோம். வரும் பௌர்ணமி அன்று மாலை இதே இடத்தில் சந்திக்கலாம்" என்று சொல்லி விட்டுப் பறந்தோடி விட்டாள் அவள்.

'இன்று சப்தமி. அப்படியானால் பௌர்ணமி எப்போது வரும் என்று மனதுக்குள் கணக்குப் போட ஆரம்பித்தான் வைரவன்.

பௌர்ணமி அன்று மாலை, சொன்னதுபோல் அவள் அவனுக்காக்க் காத்திருந்தாள்.

அவளைப் பார்த்ததும், தன் கையிலிருந்த ஓலைச் சுவடிகளை அவளிடம் கொடுத்தான் வைரவன்.

"இவை என்ன?"

"உன்னைச் சந்தித்த நாளுக்கு அடுத்த நாளிலிருந்து தினமும் நான் உனக்கு எழுதிய மடல்கள்!"

"நான் ஊரில் இல்லாதபோது எனக்கு மடல்கள் எழுதி விட்டு, அதை என்னை நேரில் பார்க்கும்போது கொடுக்கிறீர்களே, உங்களுக்கென்ன மனப்பித்தா?"

"பித்துதான்! உன் மீதான பித்து! உன்னைப் பார்த்ததிலிருந்து என் மாலைப் பொழுதுகளே மாறி விட்டன. என்னால் தெளிவாகச் சிந்திக்க முடியவில்லை. உன் வளையல் சத்தம் விடாமல் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது. அதனால்தான் என் மன உணர்வுகளைக் கொட்டி தினமும் உனக்கு மடல்கள் எழுத ஆரம்பித்தேன். அவற்றை உன்னிடம் சேர்க்க வழி இல்லாததால் அவற்றைச் சேர்த்து வைத்து இப்போது உன்னிடம் கொடுக்கிறேன்!" என்றான் வைரவன்.

"சரியான பித்தர்தான் நீங்கள்!" என்று சிரித்தாள் அவள்.

"என்னைப் பித்தாக்கி என் மாலைப் பொழுதுகளில் எனக்கு மன மயக்கம் ஏற்படச் செய்தது நீதான். அந்த மயக்கத்தைப் போக்கிக் கொள்ள என்னை மடல் வரையச் செய்ததும் நீதான்" என்றான் வைரவன். 

குறள் 1135
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.

பொருள்:
மாலைப் பொழுதுகளில் நான் அடையும் மயக்கத்தையும் அதற்கு மருந்தாகிய மடல் ஏறுதலையும், கோர்க்கப்பட்ட மாலை போல் தோன்றும் வளையல் அணிந்திருக்கும் அவளே எனக்குத் தந்தாள்.

1136. தினமும் ஒரு மடல்!

மருத்துவர் இல்லத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. 

காரியின் முறை வந்ததும் அவன் உள்ளே போனான்.

"இரவில் தூக்கம் வருவதே இல்லை, மருத்துவர் ஐயா!" என்றான் காரி.

அவன் நாடியைப் பரிசோதித்த மருத்துவர், "உன் உடல் இயக்கம் சீராகத்தான் இருக்கிறது. ஒரு சூரணம் கொடுக்கிறேன். அதை நீரில் கரைத்துக் குடித்து விட்டு உறங்கு. நன்றாக உறங்குவாய்!" என்று சொல்லி ஒரு குப்பியிலிருந்து ஒரு சிறிய மரக்கரண்டியால் சிறிதளவு சூரணத்தை எடுத்து ஒரு சிறிய இலையில் வைத்து மடித்துக் கொடுத்தார்.

"ஐயா! ஒருவேளை நள்ளிரவில் விழிப்பு வந்தால், அப்போது மீண்டும் கொஞ்சம் சூரணம் அருந்தலாமா?" என்றான் காரி.

"நள்ளிரவில் விழித்துக் கொண்டால், உடனே மீண்டும் படுத்துக் கொள்ளப் போகிறாய். உடனே உறக்கம் வந்து விடுமே!" 

"இல்லை  ஐயா! உடனே படுத்துக் கொள்ள மாட்டேன். ஒரு வேலை செய்து விட்டு அப்புறம்தான் படுத்துக் கொள்வேன். அப்போது தூக்கம் வருவதில்லை. கடந்த சில நாட்களாக அப்படித்தான் நடக்கிறது!"

"நள்ளிரவில் தூக்கத்திலிருந்து எழுந்து கொண்டு செய்ய வேண்டிய அந்த வேலை என்ன?"

"என் காதலிக்கு மடல் எழுதுவது!"

"என்ன?" என்று சற்று அதிர்ச்சியுடன் கேட்ட மருத்துவர், "சரி. அது உன் சொந்த விஷயம். ஏன், அதைப் பகல் நேரத்தில் செய்யலாமே!" என்றார்.

"முடியாது ஐயா. வீட்டில் மற்றவர்கள் இருப்பார்களே! அதனால் எல்லோரும் உறங்கிய பிறகு, சாளரத்தின் இருகே அமர்ந்து, அங்கு தெரியும் மங்கலான ஒளியில் மடல் எழுதுவேன். அதற்குப் பிறகு மீண்டும் உறங்க முயன்றால் உறக்கம் வருவதில்லை. கடந்த சில நாட்களாக அப்படித்தான் நடக்கிறது."

மருத்துவருக்கு முதலில் எழுந்தது கோபம்தான் என்றாலும், அந்தக் கோபத்தை மீறிய ஆவலில், "சில நாட்களாக என்றால்? தினமும் மடல் எழுத வேண்டிய அவசியம் என்ன?" என்றார்.

"ஒவ்வொரு நாளும் எழுதும் மடலை உடனே கிழித்து அந்த ஓலையை நெருப்பில் போட்டு விடுவேனே!"

"ஏன் அப்படி?"

"ஏனென்றால் என் காதலி அரண்மனையில் பணிப்பெண்ணாக இருக்கிறாள். ஒரு நாள் இளவரசிக்காக ஏதோ பொருள் வாங்க அவள் அங்காடிக்கு வந்தபோதுதான் நான் அவளைப் பார்த்தேன், பேசினேன். என் காதலைக் கூறினேன். அவளும் அதை ஏற்றுக் கொண்டாள். ஆனால் அவள் மீண்டும் அரண்மனையை விட்டு எப்போது வெளியே வருவாள் என்பது அவளுக்கே தெரியாதாம்! அதனால்தான் அவளைப் பார்க்க முடியாமல் தினமும் அவளுக்கு மடல் எழுதுகிறேன். அதை அரண்மனையில் இருக்கும் அவளிடம் கொண்டு சேர்க்க முடியாது என்பதால் அதைக் கிழித்துப் போட்டு விட்டு தினமும் புதிதாக இன்னொரு மடல் எழுதுகிறேன். அதனால் என் உறக்கம் கெட்டது!" என்றான் காரி.

"உனக்கு உறக்கம் கெட்டது. உன்னை நோயாளி என்று நினைத்து இவ்வளவு நேரம் பேசியதால் என் நேரம் கெட்டது. வெளியே காத்திருக்கும் நோயாளிகளின் நேரமும் உடல்நிலையும் ஒருங்கே கெட்டுக் கொண்டிருக்கின்றன. முதலில் இங்கிருந்து வெளியேறு!" என்று கோபமாகக் கூறிய மருத்துவர், காரியிடம் தான் கொடுத்த சூரணப் பொட்டலத்தை அவன் கையிலிருந்து பிடுங்கி, அதைப் பிரித்து அதிலிருந்த சுரணத்தை அதற்குரிய குப்பியில் கொட்டினார்.

குறள் 1136
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண்.

பொருள்:
மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் உறுதியாக நினைக்கின்றேன், காதலியின் பிரிவின் காரணமாக என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன.

1137. ஊர்மிளையின் கோபம்?

"என்னைப் பிரிந்து கடல் கடந்து சென்று பொருள் ஈட்டத்தான் வேண்டுமா?" என்றாள் ஊர்மிளை.

"திருமணத்துக்குப் பிறகு நாம் மகிழ்ச்சியாக வாழப் பொருள் வேண்டாமா? நான் ஒரு வணிகன். பெரும் பொருள் ஈட்ட ஒரு வாய்ப்புக் கிடைக்கும்போது அதைத் தவற விடலாமா?" என்றான் வளவன்.

"இங்கேயே உன் வணிகம் நன்றாகத்தானே நடந்து கொண்டிருக்கிறது! நீ இங்கே ஈட்டும் பொருள் நம் இருவருக்கும் போதாதா?"

"நம் இருவருக்கும் போதும். ஆனால் நமக்குப் பிறக்கப் போகும் இருபது குழந்தைகளுக்கும் போதுமா?"

"இருபது குழந்தைகளா! அப்படியானால் எனக்குத் திருமணமே வேண்டாம்!"

"சரி. இரண்டு என்று வைத்துக் கொள்வோம். ஒரு ஆண்டுதான். ஓடி விடும்! ஓடி வந்து விடுவேன்."

"உனக்கு ஓடி விடும். ஏனென்றால், நீ ஓடிக் கொண்டிருப்பாய்! உன் வரவை எதிர்பார்த்து நாட்களை எண்ணிக் கொண்டிருக்கப் போகும் எனக்கு நாழிகைகள் நகர்வதே நத்தையின் நகர்வு போல்தான் இருக்கும்."

"கவலைப்படாதே! நான் போகும் இடத்திலிருந்து வணிகர்கள் பலர் இங்கே வந்து போய்க் கொண்டிருப்பார்கள். அங்கிருந்து வரும் ஒவ்வொரு மரக்கலத்திலும் யார் மூலமாகவாவது ஒரு மடல் எழுதி அனுப்புகிறேன். அவர்கள் மூலமே நீ எனக்கு பதிலும் அனுப்பலாம். அதனால் நாட்கள் நகர்வது கடினமாக இருக்காது."

ளவன் கிளம்பிச் சென்று சுமார் ஒரு மாதம் கழித்து அவனிடமிருந்து ஊர்மிளைக்கு ஒரு மடல் வந்தது. மடலில் தன் அன்பையும், காதலையும் கொட்டி எழுதியிருந்தான் வளவன்.

மடலை ஊர்மிளையிடம் கொடுத்த வணிகர், "இன்னும் 10 நாட்களில் நான் அங்கே திரும்பிச் செல்ல இருக்கிறேன், நீ அவனுக்கு பதில் மடல் எழுதி வை. கிளம்பு முன்  நான் வந்து பெற்றுக் கொள்கிறேன்" என்றார்.

ஆனால் அவர் திரும்பி வந்து கேட்டபோது, "மடல் எதுவும் இல்லை என்று வளவரிடம் சொல்லு விடுங்கள்" என்று சொல்லி விட்டாள் ஊர்மிளை..

மூன்று மாதங்களுக்குப் பிறகு வளவனிடமிருந்து இன்னொரு மடல் வந்தது. இன்னொரு வணிகர் மூலம் தன் இரண்டாவது மடலை அனுப்பி இருந்தான் வளவன். வழக்கமான காதல் வரிகளுக்குப் பிறகு, "நான் உன்னை விட்டுப் பிரிந்த கோபம் உனக்கு இன்னும் தீரவில்லை போலிருக்கிறது.இப்போதாவது கோபம் தீர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன்"  என்று மடலை முடித்திருந்தான் வளவன்.

ஆனால் இந்த முறையும் ஊர்மிளை பதில் மடல் அனுப்பவில்லை.

அதற்குப் பிறகு வளவனிடமிருந்து மடல் எதுவும் வரவில்லை.

ரு ஆண்டுக்குப் பிறகு வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு ஊர் திரும்பிய வளவன் ஊர்மிளாவின் வீட்டுக்கு வந்தான். 

அவனை வரவேற்ற ஊர்மிளையின் தாயிடம், "ஊர்மிளை எப்படி இருக்கிறாள்?" என்றான் வளவன்.

"நீயே போய்ப் பார்!" என்றாள் அவள் விரக்தியான குரலில்.

உள்ளே சென்ற வளவன் அதிர்ந்து போய் நின்றான்.

கயிற்றுக் கட்டிலில் சேலை கட்டப்பட்ட எலும்புக் கூடு போல் படுத்திருப்பது ஊர்மிளாவா?

அறைக்குள் யாரோ வரும் அரவம் கேட்டு விழித்த ஊர்மிளை சட்டென்று எழுந்து கட்டிலின் மேல் அமர்ந்தாள். பிறகு ஏதோ வேகம் வந்தவள் போல் கட்டிலிலிருந்து எழுந்து சில அடிகள் ஓடி வந்து வளவனை இறுக அணைத்தபடி அவன் மார்பில் முகம் புதைத்து அழ ஆரம்பித்தாள்.

"என்ன ஊர்மிளா, ஏன் இப்படி இளைத்து விட்டாய்? உன் உடம்புக்கு என்ன? என் மடல்களுக்கு ஏன் பதில் மடல் அனுப்பவில்லை? என் மீது அத்தனை கோபமா?" என்றான் வளவன் படபடப்புடன்.

தலையை நிமிர்த்தி வளவனைப் பார்த்த ஊர்மிளா, "கோபமா?  இந்த முகத்தைப் பார்க்காமல் இத்தனை நாள் எப்படி உயிரோடு இருந்தேன் என்று என் மேல்தான் கோபம்!" என்றாள்.

"அது சரி. என் மடலுக்கு பதில் மடல் அனுப்பி இருந்தால் நானும் மடல்கள் அனுப்பிக் கொண்டு இருந்திருப்பேன், அது உனக்கு மகிழ்ச்சி அளித்திருக்கும் அல்லவா?"

"நிச்சயமாக  ஆனால் வணிகத்துக்குச் சென்றிருக்கும் நீ வணிகத்தில் கவனம் செலுத்த வேண்டும். உன் முதல் மடலில் பொங்கி வழிந்த காதலைக் கண்டபோது என் பதில் மடல்கள் உன் காதல் நினைவுகளை அதிகமாக்கி உன் மனத்தை வணிகத்தில் முழுமையாக ஈடுபடச் செய்யாமல் செய்து விடும் என்று தோன்றியது. அதனால்தான் உனக்கு மடல் அனுப்பாமல் பிரிவுத் துயரை முழுவதுமாக அனுபவிக்க முடிவு செய்தேன். ஆனால் என் மனதுக்கு இருந்த உறுதி உடலுக்கு இல்லாததால் அது உன் பிரிவால் வாடி இளைத்து விட்டது. இப்போது நீ வந்து விட்டாய் அல்லவா? இனி என் உடல் நிலை தேறி விடும், இப்போதே பருக்க ஆரம்பித்து விட்டேன் என்று நினைக்கிறேன். என் உடை இறுக்கமாகி விட்டது போல் உணர்கிறேன்" என்று சொல்லிச் சிரித்தபடியே வளவனை மீண்டும் இறுகத் தழுவிக் கொண்டாள் ஊர்மிளா.

குறள் 1137
கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில்.

பொருள்:
கடல் போன்ற காமநோயால் வருந்தியும், மடலேறாமல் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டிருக்கும் பெண் பிறப்பைப் போல் பெருமை உடைய பிறவி இல்லை.

1138. தளபதியின் தடுமாற்றம்!

"இந்திரகுமாரி! என்ன ஒரு பெயர்!" என்றான் படைத்தலைவன் கார்த்தவீரியன்.

"பெயரைப் பார்த்து ஏமாந்து விடாதீர்கள் படைத்தலைவரே! என் பெயர்தான் இந்திரகுமாரி. ஆனால் என் தந்தை இந்திரர் அல்ல, உங்களைப் போல் போர்க்கலைகள் தெரிந்த தந்திரரும் அல்ல. சிறு இயந்திரங்களை வைத்துக் கொண்டு படைக்கலன்களைத் தயாரிக்கும் ஒரு எந்திரர், அவ்வளவுதான்!" என்றாள் இந்தரகுமாரி.

"உன் பேச்சைக் கேட்டகும்போது, உன் தந்தை தமிழில் தேர்ந்தவர் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. படைப்புக் கலையிலும் தேர்ந்தவர். போர்க்களத்தில் எனக்குத் துணை செய்ய இரும்பாலான படைக்கலன்களை உருவாக்குவது போல், வாழ்க்கையில் எனக்குத் துணை நிற்க பொன்னாலான இந்தக் கலத்தையும் அல்லவா உருவாக்கி இருக்கிறார்!"

கார்த்தவீரியனின் சொற்கள் இந்தரகுமாரிக்குப் புல்லரிப்பை ஏற்படுத்தின.

"என் தந்தையிடம் எப்போது இந்தப் பொற்கலத்தைக் கேட்டுப் பெறப் போகிறீர்கள்?"

"நான் ஒரு படைத்தலைவனாக இருந்தாலும் இது போன்ற விஷயங்களில் அதிகத் தயக்கம் உள்ளவன். உன் தந்தையிடம் பேச கொஞ்சம் தைரியத்தைத் திரட்டிக் கொள்ள சிறிது அவகாசம் கொடு."

"போருக்குப் போ என்று அரசர் உத்தரவிட்டால் கணத்தில் சைனியத்தைத் திரட்டும் ஆற்றல் பெற்ற தளபதி தைரியத்தைத் திரட்ட அவகாசம் கேட்கிறார்! உங்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது படைத்தலைவரே!" என்று சிரித்தாள் இந்தரகுமாரி.

ன்று அரசரைப் பார்க்க அரண்மனைக்குச் சென்ற கார்த்தவீரியனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அரசருடன் அரசி, இளவரசி, அமைச்சர் முதலியோர் இருந்தனர். இளவரசிக்குப் பின்னே அவளுடைய தோழிகள் இருவர் நின்று கொண்டிருந்தனர். அவர்களில் ஒருத்தி இந்திரகுமாரி!

தான் இளவரசியின் தோழி என்று இவள் சொல்லவே இல்லையே என்று யோசித்துக் கொண்டே, அரசர் கூறியவற்றை இயந்திரமயமாக் கேட்டுக் கொண்டிருந்தான் கார்த்தவீரியன்.

"நாட்டில் எதிரிநாட்டு ஒற்றர்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. அதனால் அரசகுலப் பெண்களுக்கு அதிகப் பாதுகாப்பு தேவைப்படுகிறது. மந்திரிகுமாரி திருமணத்துக்குப் பிறகு தன் கணவன் வீட்டுக்குப் போகப் போகிறாள். அவளுக்கு பலத்த பாதுகாப்பு தேவைப்படுகிறது. எனவே..."

"இந்திரகுமாரியை நானே பாதுகாப்பாக அழைத்துச் செல்கிறேன் அரசே!" என்றான் கார்த்தவீரியன்.

ஒரு கணம் அனைவரும் மௌனமாக விழிக்க, இளவரசி திரும்பித் தன் பின்னால் நின்ற இந்திரகுமாரியைப் பார்க்க, அவள் முகம் சிவந்து தலையைக் குனிந்து கொண்டாள். 

இதைப் பார்த்த அரசர் உட்பட அனைவரும் கார்த்தவீரியனின் காதலைப் புரிந்து கொண்டவர்களாக  கொல்லென்று சிரித்தனர்.

மந்திரிகுமாரி என்று சொல்வதற்கு பதிலாக இந்திரகுமாரி என்று தன்னை அறியாமல் சொல்லித் தன் உள்ளக் கிடக்கையை அனைவர் முன்னும் வெளிப்படுத்தி விட்டது கார்த்தவீரியனுக்கு சற்று தாமதாமாகத்தான் புரிந்தது. 

குறள் 1138
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.

பொருள்:
இவர் மனத்தில் உள்ளதை ஒளிக்கத் தெரியாதவர்; மிகவும் இரங்கத் தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப்படுகின்றதே!

1139. குதிரை வீரன்!

தமயந்தி தன் தாயுடன் அங்காடிக்குச் சென்றபோது. தன் தாய் காய்கறிகள் வாங்குவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"ஏம்மா, பாகற்காய் வாங்கலியா?" என்றாள் தமயந்தி.

அவளை வியப்புடன் பார்த்த அவள் தாய், "உனக்குத்தான் பாகற்காய் பிடிக்காதே? அப்புறம் ஏன் பாகற்காய் வாங்கலியான்னு கேக்கறே?" என்றாள்.

"இல்லை. அவருக்குப் பிடிக்குமே, அதனால நானும் சாப்பிட்டுப் பழக்கிக்கலாம்னு பார்த்தேன்."

"அவருக்கா? எவருக்கு?" என்றாள் அவள் தாய், அவளை ஏறிட்டுப் பார்த்து.

சட்டென்று நாக்கைக் கடித்துக் கொண்ட தமயந்தி, "அவருக்குன்னு சொல்லல அம்மா! அப்பாவுக்குன்னு சொன்னேன்" என்று சமாளிக்க முயன்றாள்.

"ஏண்டி, அப்பாவுக்கும்தான் பாகற்காய் பிடிக்காதே? உங்க ரெண்டு பேருக்கும் பிடிக்காதுங்கறதாலதான் நான் பாகற்காய் வாங்கறதையே விட்டுட்டேன்" என்றாள் அவள் அம்மா.

ன்னொரு முறை தமயந்தி தன் தோழிகளுடன் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிரில் ஒரு வீரன் குதிரை மீது சென்று கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு, "இந்தக் குதிரை அவரோட குதிரைதானே? ஆனா வேற யாரோ இல்ல அது மேல உக்காந்து போறாங்க?" என்றாள்.

"அவரோட குதிரைன்னா, யாரைச் சொல்ற?" என்றாள் தோழிகளில் ஒருத்தி.

"அதாண்டி அன்னிக்கு நாம குளத்தில குளிச்சுக்கிட்டிருக்கறப்ப குதிரைக்குத் தண்ணி காட்ட ஒத்தர் வந்தாரே? நாம குளிச்சிக்கிட்டிருக்கறதைப் பார்த்துட்டு, குதிரையைத் தண்ணி குடிக்க வச்சுட்டு அவரு தள்ளிப் போய் நின்னுக்கிட்டாரே! எவ்வளவு கண்ணியமானவர்! அப்பதானே நான் அவரை முதல்ல பார்த்தேன். அப்புறம் கோவில்ல கூடப் பார்த்துப் பேசினேனே!" என்றாள் தமயந்தி.

தோழிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"என்னடி உளர்ற? நாம குளத்தில குளிச்ச நாட்கள்ள அப்படி எதுவும் நடக்கவே இல்லையே!" என்றாள் இன்னொரு தோழி.

"ஓ! அப்படியா? அப்ப வேற தோழிகளோட குளிச்சபோது நடந்திருக்கும்."

"எங்களை விட்டா வேற தோழிகள் யாருடி உனக்கு?" என்றாள் தோழி.

"அப்படின்னா என் அம்மாவோட குளிச்சுக்கிட்டிருந்தப்ப நடந்திருக்கும்!" என்றாள் தமயந்தி, தான் ஏன் இப்படி உளறுகிறோம் என்று நினைத்துக் கொண்டே.

"விடுங்கடி. இவளுக்கு ஏதோ ஆயிடுச்சு! இவ அம்மாகிட்ட சொல்லி சீக்கிரமே இவளுக்குத் திருமண ஏற்பாடு செய்யச் சொல்ல வேண்டியதுதான்!" என்று ஒரு தோழி கூற, அனைவரும் கொல்லென்று சிரித்தனர்.

"அப்புறம், எல்லாக் குதிரையும் பாக்கறத்துக்கு ஒரே மாதிரிதான் இருக்கும். அதனால உண்மையில குதிரையோட வந்த ஒரு ஆளை நீ சந்திச்சிருந்தாலும், இது வேற குதிரையாக் கூட இருக்கலாம். அதனால இதை நினைச்சுக் குழப்பிக்காதே!" என்றாள் இன்னொரு தோழி.

ன்று தமயந்தி தன் காதலனைச் சந்தித்தபோது, "என் காதலைப் பத்தி நான் யார்கிட்டேயும் சொல்லல. ஆனா என் மனசில நான் பூட்டி வச்சிருக்கற காதல் எனக்குத் தெரியாமலே அப்பப்ப வெளியே வந்து தன்னை எல்லோருக்கும் வெளிக்காட்டிக்கிட்டிருக்கு. அதனால சீக்கிரமாவே என் வீட்டில வந்து என்னைப் பெண் கேளுங்க!" என்றாள்.

குறள் 1139
அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.

பொருள்:
நான் அமைதியாக இருப்பதால் என் காதலை எல்லோரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது.

1140. குமுதினிக்கு வந்த நோய்!

என் எதிர் வீட்டில் வசிக்கும் குமுதினிக்குப் பைத்தியம் பிடித்திருப்பதாகப் பலரும் கூறினர். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை.

குமுதினி எனக்கு நெருக்கமானவள் ஒன்றும் இல்லை. எதிர்வீட்டில் வசிப்பதால் இருவரும் சில சமயம் ஒருவரை ஒருவர் பார்க்கும்படி நேரும். அப்போதெல்லாம் அறிமுகமானவர்கள் என்று காட்டிக் கொள்ளும் வகையில் இருவரும் வலுவில் வரவழைத்துக் கொண்ட ஒரு புன்சிரிப்பைப் பரிமாறிக் கொள்வோம். அவ்வளவுதான். 

குமுதினிக்குப் பைத்தியம் பிடித்திருப்பதாகச் சிலர் நினைப்பதற்குக் காரணம் சில நாட்களாக அவள் நடவடிக்கைகளில் காணப்பட்ட சில விசித்திரங்கள்தான்.

சாலையில் நடந்து போகும்போது அவள் தனக்குத் தானே பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் போகிறாளாம்.

அவள் வீட்டில் இருக்கும்போது சில சமயம் ஒரு அறைக்குள் புகுந்து கதவைச் சாத்திக் கொள்வாள். அறைக்குள் அவள் யாரிடமோ பேசிக்கொண்டிருப்பது போல் குரல் கேட்கும். சில சமயம் கோபமாகக் கத்துவாள், சில சமயம் கெஞ்சுவாள். சில சமயம் அறைக்குள்ளேயே அவள் ஓடுவது போல் காலடிச் சத்தம் பெரிதாகக் கேட்கும். 

ஒருமுறை,"எங்கே, என்னைப் பிடித்து விடு, பார்க்கலாம்" என்று சிரித்துக் கொண்டே உரத்த குரலில் கூவி விட்டு அறைக்குள்ளேயே அவள் ஓடும் சத்தம் கேட்டு அவள் அம்மா கதவைத் தட்டி இருக்கிறாள். 

கதவைத் தட்டியதும், சத்தமெல்லாம் நின்று அமைதியாகி விட்டது. இரண்டு நிமிடம் கழித்துக் கlவைத் திறந்த குமுதினி, ஒன்றுமே நடக்காதது போல், "என்னம்மா!" என்று அப்பாவியாகக் கேட்டிருக்கிறாள்.

"என்ன சத்தம்? யாரோடு ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருக்கிறாய்?" என்று அவள் அம்மா கேட்டதற்கு, "அறைக்குள் எப்படியம்மா ஓடிப் பிடித்து விளையாட முடியும்? அதோடு இங்கே யாரும் இல்லையே!" என்று பதில் சொல்லி இருக்கிறாள் குமுதினி.

குமுதினியின் அம்மா இதைப் பற்றிப் பலரிடமும் சொல்லிப் புலம்பி இருக்கிறாள். அதனால் குமுதினியைப் பார்த்தாலே பலரும் அவளைக் கேலி செய்வது போல் சிரிக்கிறார்கள்.

ஆனால் நான் அப்படிச் சிரிப்பதில்லை. குமுதினிக்கு என்ன பிரச்னை என்று எனக்குத் தெரியும். 

குமுதினிக்கு வந்திருப்பது காதல் என்னும் நோய். இந்த நோய் வந்தவர்கள் ஆரம்பத்தில் அதை வெளியில் சொல்லாமல் மறைக்கப் பார்ப்பார்கள். ஆனால் அது பல விதங்களில் வெளிப்பட்டு வெளி உலகத்துக்கு அவர்களைப் பைத்தியக்காரர்களாகக் காட்டி அவர்களைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்க வைக்கும். 

காதல் விஷயம் பெற்றோருக்குத் தெரிந்து அதை அவர்கள் அங்கீகரித்தால்தான் அந்த நோய் நீங்கும்.

என் விஷயத்தில் அப்படித்தானே நடந்தது? அப்போது இந்தக் குமுதினியும் என்னைப் பார்த்துச் சிரித்தவள்தானே!

இப்போது மற்றவர்கள் குமுதினியைப் பார்த்துச் சிரிக்கும்போது, நான் மட்டும் சிரிக்காமல் இருக்கும்போது, குமுதினி என்னைப் பார்க்கும் பார்வையில், 'அன்று உன்னைப் பார்த்துச் சிரித்தேனே! நீ அனுபவித்தவற்றை நான் அனுபவிக்கும்போதுதானே நான் எவ்வளவு அறிவற்றவளாக இருந்திருக்கிறேன் என்று புரிகிறது!' என்ற அவள் எண்ண ஓட்டம் வெளிப்படுவதை என்னால் உணர முடிகிறது. 

குறள் 1140
யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு.

பொருள்:
இந்த அறிவற்ற மக்கள் என் கண்ணுக்கெதிரிலேயே என்னைப் பார்த்துச் சிரிக்கின்றனர். அப்படிச் சிரிக்க காரணம், நான் அனுபவித்த துன்பங்களை அவர்கள் அனுபவிக்காததே!

                 அறத்துப்பால்                                                             பொருட்பால் 

No comments:

Post a Comment

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...