திருக்குறள்
காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 128
குறிப்பறிவுறுத்தல்
1271. மௌனமே பார்வையால்...
ராகவன் பணியாற்றி வந்த அந்தப் பெரிய நிறுவனத்தின் ஊழியர்களில் பெரும்பாலானோர் ஆண்கள் என்றாலும், பெண் ஊழியர்களும் கணிசமான எண்ணிக்கையில் இருந்தனர்.ராகவன் பெண்களிடம் அதிகம் பேசும் இயல்பு கொண்டவன் அல்ல. சில பெண்கள் அவனிடம் கேலியாகப் பேசி, அவனைச் சீண்டிப் பார்ப்பாரகள். ஆனால், அவன் ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்லிப் பேச்சை முடித்து விடுவான்.
ராதிகா அங்கே சமீபத்தில்தான் வந்து சேர்ந்தாள். ராதிகாவை ராகவனின் பெண் வடிவம் என்றே கூறலாம். அவள் ஆண்களிடம் அதிகம் பேச மாட்டாள்.
பல இளைஞர்களுக்கு ராதிகாவின் மீது ஒரு கண் இருந்தது. அவளிடம் பேச்சுக் கொடுத்தும், வேலையில் அவளுக்கு உதவி செய்தும், அவர்கள் ராதிகாவின் கவனத்தைக் கவர முயன்று கொண்டிருந்தனர்.
ராகவன் ராதிகாவை அலுவல் விஷயமாகச் சந்திக்க வாய்ப்புகள் ஏற்படவில்லை. ஆனால் இருவரும் ஒரே தளத்தில் பணி புரிந்ததால், அவ்வப்போது பார்த்துக் கொள்ள வேண்டி வரும்.
ராகவன் மற்ற பெண்களிடம் நடந்து கொள்வது போல்தான் ராதிகாவிடமும் நடந்து கொண்டான் - அதாவது அவளைப் பொருட்படுத்தாமல் இருந்து வந்தான்.
அன்று ராதிகா அலுவலகத்துக்கு வரவில்லை. அலுவலகத்துக்கு வந்த சிறிது நேரத்திலேயே, ராகவன் இதை உணர்ந்தான்.
மற்ற ஊழியர்கள் - ஆண்களோ, பெண்களோ- அலுவலகத்துக்கு வராதபோது அதை கவனிக்காத தான், ராதிகா வராததை மற்றும் ஏன் கவனித்து உணர வேண்டும் என்ற கேள்வி அவன் மனதில் எழுந்தது. அதை அலட்சியம் செய்து, தன் வேலையில் ஈடுபட்டான் ராகவன்.
ஆயினும், ராதிகா அலுவலத்துக்கு வரவில்லை என்ற நினைவு அன்று முழுவதும் அவன் மனதுக்குள் நிறைந்திருந்தது. சில சமயம், அவளை அன்று பார்க்க முடியாதது மனதுக்குள் ஒருவித ஏக்கத்தையும், வருத்தத்தையும் கூட அளித்தது.
அன்று இரவு, நீண்ட நேரம் உறக்கம் வராமல், படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான் ராகவன். ராதிகாவை அவன் நேருக்கு நேர் பார்த்த சம்பவங்கள் நினைவுக்கு வந்தன.
திடீரென்று எதையோ உணர்ந்தவனாக, எழுந்து உட்கார்ந்து கொண்டான் ராகவன்.
'ராதிகாவும் என்னைப் போல் அதிகம் பேசாதவள்தான். ஆனால், என்னைப் பார்த்த பார்வையிலும், மெலிதான புன்னகையிலும் ஏதோ ஒரு செய்தியை எனக்கு உணர்த்தி வந்திருக்கிறாள். அதை என் உள்ளுணர்வு ரீதியாக நான் புரிந்து கொண்டிருக்கிறேன். அதனால்தான், இன்று அவள் அலுவலகத்துக்கு வராதது என்னை இந்த அளவுக்கு பாதித்திருக்கிறது!'
மறுநாள் ராதிகாவைப் பார்க்கும்போது, ஒரு புன்னகையாவது செய்து, அவள் தனக்கு உணர்த்தி வந்த செய்தியைத் தான் புரிந்து கொண்டேன் என்பதை அவளுக்கு உணர்த்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் ராகவன்.
"அவன் பாவம், தான் உண்டு, தன் வேலை உண்டுன்னு இருக்கறவன். அவனை ஏண்டா இழுக்கற?" என்றான் நடராஜ்
"அவன் மட்டும்தான் வேலை செய்யறானா? நாமளும்தான் கஷ்டப்பட்டு வேலை செய்யறோம். அதுக்கும், காதலி இருக்கறதுக்கும் என்ன சம்பந்தம்?" என்றான் கிஷோர்.
"நாம எல்லாரும் அவனைக் கிண்டல் பண்றோம். அவன் ஏதாவது பதில் சொல்றானா பாரு!" என்றான் வினோத்
நண்பர்களின் கேலிப் பேச்சை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த சுமந்த், "உங்களுக்கெல்லாம் ஒரு விஷயம் சொல்றேன். எனக்குக் காதலி இருக்கா!" என்றான்.
"என்னோட வேலைதான் என் காதலின்னு பழைய ஜோக் எல்லாம் அடிக்காதே!" என்றான் நடராஜ்.
"இல்லைடா. எனக்கு ஒரு காதலி இருக்கா. அவ நம்ம ஆஃபீசிலேயே வேலை செய்யறா. அது மட்டும் இல்ல, நம்ம ஆஃபீஸ்ல உள்ள பெண்களிலேயே அவதான் ரொம்ப அழகு!" என்றான் சுமந்த்.
"அது எப்படிடா, நம்ம ஆஃபீஸ்லேயே அழகான பொண்ணுதான் என்னைக் காதலிக்கறாளே!" என்றான் வினோத்.
"டேய்! சந்தடி சாக்கில சைக்கிள் ஓட்டாதே! எந்த அழகான பொண்ணாவது உன்னைக் காதலிப்பாளா? ஏதோ ஒரு பொண்ணு உன்னைக் காதலிக்கிறா. அதோட நிறுத்திக்க" என்ற நடராஜ், "டேய் சுமந்த்! உன் காதலியைப் பத்திச் சொல்லுடா!" என்றான், சுமந்த்தைப் பார்த்து.
"அதான் சொல்லிட்டேனே, நம்ம ஆஃபீஸ்லேயே அழகான பொண்ணுன்னு."
"அதை நாங்க தீர்மானிக்கறோம். பொண்ணு யாருன்னு மட்டும் சொல்லு" என்றான் கிஷோர்.
"அதை நான் சொல்ல முடியாதுடா!"
"ஏன்? அப்ப, சும்மா கதை விடறேன்னுதானே அர்த்தம்? காதலி இருந்தா, அவ யாருன்னு சொல்றதில என்ன கஷ்டம்?"
"எங்களுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகிற வரையில, எங்க காதலைப் பத்தி யார்கிட்டேயும் சொல்லக் கூடாதுன்னு அவ சொல்லி இருக்கா."
"ஏன் அப்படி?"
"ஏன்னா, அவ மத்த பொண்ணுங்க மாதிரி இல்ல. பெண்மைக்கு உண்டான நாணம்கற குணம் அவகிட்ட இருக்கு! அதனால, தன்னோட காதல் மற்றவங்களுக்குத் தெரிய வேண்டாம்னு நினைக்கறா. இன்னும் ரெண்டு மூணு மாசத்தில எங்க கல்யாணம் நிச்சயம் ஆயிடும். அவ யாருன்னு அப்ப நீங்களே தெரிஞ்சுப்பீங்க!" என்றான் சுமந்த்.
அதன் பிறகு, மணிவண்ணன் தினமும் அவளை அந்த பஸ் நிறுத்தத்தில் பார்த்தான். ஆனால், அவள் அவனை கவனித்ததாகத் தெரியவில்லை.
மணிவண்ணன் அவளை தினமும் கவனித்து வந்தான்.
அவ்வாறு கவனித்ததில், அவனுக்குப் புலப்பட்ட விஷயங்கள் இரண்டு. ஒன்று, அவள் இயற்கையாகவே அழகானவள் என்பது. இரண்டு, அவள் தினமும் தன்னை வெவ்வேறு விதங்களில் அலங்கரித்துக் கொண்டிருந்தாள் என்பது.
மணிவண்ணன் பல மாதங்களாக அந்த பஸ் நிறுத்தத்தில்தான் பஸ் ஏறுகிறான். ஆனால் அன்று அவள் அவனைப் பார்த்துச் சிரித்த, அல்லது அவன் அவ்வாறு நினைத்துக் கொண்ட அந்த நாளுக்கு முன், அவன் அவளை அங்கே பார்த்ததில்லை. பார்த்ததில்லையா, அல்லது கவனித்ததில்லையா என்பது அவனுக்குத் தெரியவில்லை.
ஆனால், இப்போது அவளை தினமும் பார்க்கிறான் - கூர்ந்து பார்க்கிறான். ஏன் இந்த மாற்றம்?
முதலில் அவன் கண்ணுக்குத் தெரியாத அவள் அழகு இப்போது தெரிவது ஏன் என்று யோசித்தான். அவள் தன்னை அலங்காரம் செய்து கொள்வதுதான் அதற்குக் காரணம் என்று தோன்றியது.
முதல்முறை அவன் அவளைப் பார்த்தபோது, அவள் இதுபோல் அலங்காரம் செய்து கொள்ளவில்லை. எளிமையாகத்தான் தெரிந்தாள்.
அன்று அவனைப் பார்த்துச் சிரித்த, அல்லது அவன் அவ்வாறு நினைத்த அந்த நாளுக்குப் பிறகுதான், அவள் தன்னை அலங்காரம் செய்து கொள்ளத் தொடங்கி இருக்கிறாள்.
அப்படியானால், தன்னை விதவிதமாக அலங்காரம் செய்து கொள்வதன் மூலம், அவன் தன்னை கவனிக்க வேண்டும், தன் அழகை ரசிக்க வேண்டும் என்பதுதான் அவள் நோக்கமா?
அப்படியானால், தன்னை விதவிதமாக அலங்கரித்துக் கொள்வதன் மூலம் அவள் அவனக்கு ஒரு செய்தியைத் தெரிவிக்கிறாளா?
அடுத்த நாள் பஸ் நிறுத்தத்தில் அவளைப் பார்த்தபோது, மணிவண்ணன் அவளைப் பார்த்துச் சிரித்தான்.
பதிலுக்கு அவளும் சிரித்தாள்.
"ஒருவேளை, அவ யாரையும் காதலிக்காம இருக்கலாம்!" என்றாள் சாந்தி.
"இல்லையே! நீ யாரையாவது காதலிக்கிறயான்னு கேட்டா, பதில் சொல்லாம சிரிக்கறாளே! காதலன் இல்லைன்னா, இல்லைன்னு சொல்ல வேண்டியதுதானே?"
"நான் ஒரு யோசனை சொல்றேன். நாம எல்லாரும் சேர்ந்து லஞ்ச் சாப்பிடறப்ப, ஒவ்வொத்தரும் நம்மோட காதலரோட நெருக்கமாப் பழகறதைப் பத்தி ஜாலியாப் பேசுவோம். வேணியும் நம்மோட சேர்ந்துதானே சாப்பிடுவா? அவளோட ரியாக்ஷன் என்னன்னு பாக்கலாம்."
"சரி."
"நீ சொன்ன மாதிரி, லஞ்ச் சாப்பிடறப்ப நாம நம்ம காதலர்களைப் பத்தி ஜாலியாப் பேசினோம். வேணி பேசாம கேட்டுக்கிட்டிருந்தாளே ஒழிய, அவகிட்டேந்து எந்த ரியாக்ஷனும் இல்லையே!" என்றாள் உமா.
"நீ கவனிச்ச லட்சணம் அவ்வளவுதான்!" என்றாள் சாந்தி.
"நீ என்னத்தை கவனிச்சியாம்?"
"நான் உங்களோட பேசிக்கிடிருந்தப்பவே, வேணியை உன்னிப்பா கவனிச்சுக்கிட்டிருந்தேன். யாராவது ஒத்தர் தன்னோட காதலரைப் பத்தி நெருக்கமான விஷயம் ஏதாவது சொன்னப்பல்லாம், வேணி யாரும் கவனிக்காத அளவுக்கு, அமுக்கமா சிரிச்சுக்கிட்டிருந்தா. நான் உன்னிப்பா கவனிச்சதாலதான், எனக்கு அது தெரிஞ்சது."
"அதனால?"
"அதனால, அவளுக்குக் காதலன் இருக்கான்னு அர்த்தம். அவ சிரிக்கறப்பல்லாம், தன்னோட மனசுக்குள்ள தன் காதலனை நினைச்சு சிரிக்கறான்னு அர்த்தம். அவ தன்னோட காதலை சிரிப்பில ஒளிச்சு வச்சுப் பாக்கறா. எவ்வளவு நாளைக்கு?"
"எவ்வளவு நாளைக்குன்னா? வெளியில சொல்லிடுவான்னு சொல்ல வரியா?"
"பூ அரும்பா இருக்கும்போது, வாசனை வெளியில தெரியாது. அது மலரும்போது, வாசனை வெளியில வருதில்ல? அது மாதிரிதான், வேணியோட புன்னகையில மறைஞ்சிருக்கற காதலும் ஒருநாள் வெளியில வரும். நான் இப்ப சொல்றது உண்மைன்னு உனக்கு அப்ப தெரியும்!" என்றாள் சாந்தி.
"என்ன செய்யறது? அவகிட்ட என் காதலைச் சொன்னேன். பதிலே சொல்லாம போயிட்டா. மறுபடி போய்ப் பேசறதுக்கு எனக்குத் தயக்கமா இருக்கு."
"அதுக்கப்புறம், அவளை நீ சந்திக்கவே இல்லையா?"
"தினமும் சந்திச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். என் வீடு இருக்கிற அதே தெருவிலதானே அவ வீடும் இருக்கு!"
"அப்ப, தினமும் அவ வீட்டு வாசல்ல போய் நின்னுடுவேன்னு சொல்லு!"
"அப்படியெல்லாம் செய்ய முடியுமா? அவ எப்ப வீட்டை விட்டுக் கிளம்பறான்னு தெரியும். அந்தச் சமயத்தில, அவ கண்ணில படற மாதிரி ஒரு இடத்தில நிப்பேன்."
"அவ உன்னைப் பாப்பாளா, பாக்காமலே போயிடுவாளா?"
"நிச்சயமாப் பாப்பா. ஒரு தடவை கூட திரும்பி என்னைப் பாக்காம இருந்ததில்ல."
"அப்புறம் என்ன? அவளுக்கும் உன் மேல ஒரு இது இருக்குன்னுதான் அர்த்தம்!"
"அப்படி இருந்தா, வாயைத் தொறந்து சொல்லலாமே? எதுவுமே சொல்லாம என்னை ரொம்ப கஷ்டப்படுத்தறா!"
"அப்ப எதுக்கு அவளைப் பாக்கற? அவளா வந்து 'எனக்கும் உன்னைப் புடிச்சிருக்கு' ன்னு உங்கிட்ட சொல்லட்டும்!"
"போடா! அவ பார்வையில ஒரு குறும்பு இருக்கு. அந்தக் குறும்பத்தனம்தான் எனக்கு நம்பிக்கையைக் கொடுக்குது. அவ பதில் சொல்ல மாட்டேங்கறாளேங்கற ஏக்கத்தைப் போக்கற மாதிரியும் இருக்கு!"
சொந்த ஊருக்குப் போய்ப் பெற்றோரைப் பார்த்து விட்டுப் பத்து நாட்களில் வந்து விடுகிறேன் என்று சொல்லி விட்டுப் போனவன்தான்! இப்போது, பத்து மாதங்கள் கழித்து வந்திருக்கிறான்.
திடீரென்று ஒருநாள், தன் வீட்டு வாசலில் குலசேகரன் வந்து நின்றதைக் கண்ட கோதைக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. இரவில் தூக்கம் பிடிக்காததால், பகலிலேயே தூங்குகிறோமோன்று நினைத்துப் பார்த்தாள்.
இல்லை. இது கனவு இல்லை, நிஜம்தான்.
"பத்து நாள் ஆகும்னு சொன்னீங்க. அதுக்குள்ள வந்துட்டீங்களே! ஏதாவது பறவை முதுகில உக்காந்து வந்தீங்களா?" என்றாள் கோதை.
கோதை கோபமாகப் பேசாமல், கேலியாகப் பேசியது குலசேகரனுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.
கோதையின் கைகளைப் பற்றிக் கொண்டு, சொந்த ஊரில் தனக்கு இருந்த பணிகளையும், அதனால் அங்கே பல நாட்கள் தங்க வேண்டி இருந்ததைப் பற்றியும் கூறினான் குலசேகரன்.
"கடல் கடந்தா போனீங்க? இங்கேந்து பத்து காத தூரம்தானே உங்க ஊர்? ஒரு தடவை வந்துட்டுப் போயிருக்கலாம். இல்லேன்னா யார் மூலமாவது செய்தி சொல்லியாவது அனுப்பி இருக்கலாம்."
"பல மாதங்கள் பிரிவுக்கப்புறம் உன்னோட சேரறது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியா இருக்கு! உனக்கு அப்படி இல்லையா?" என்றான் குலசேகரன், அவளை அணைத்தபடியே.
"ஏன் இல்லாம? என் முகத்தைப் பார்த்தா தெரியலியா?" என்ற கோதை, 'அதோட இத்தனை நாள் என்னைப் பிரிஞ்சிருந்ததை நினைக்கறப்ப, என் மேல அன்பு இருந்தா அப்படி இருந்திருப்பீங்களாங்கற எண்ணமும்தானே வருது?' என்று நினைத்துக் கொண்டாள்.
"சொல்லுங்க" என்றபோதே, வைகையின் உடலில் ஒரு பதட்டம் தெரிந்தது.
"ஏன் பதட்டப்படற?"
"நீங்க சொல்லப் போற விஷயம் எப்படி இருக்குமோங்கற பதட்டம்தான். சொல்லுங்க."
"நல்ல விஷயம்தான். ஆமாம். உங்கிட்ட ஏதோ ஒரு மாறுதல் தெரியுதே!"
"நல்ல விஷயம்னா, ஏன் இப்படிச் சுத்தி வளைக்கிறீங்க? சீக்கிரம் சொல்லுங்க."
"நம்ம எதிர்காலத்துக்கு நன்மை பயக்கற விஷயம்தான். நிறையப் பணம் சம்பாதிக்க எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைச்சிருக்கு."
வைகை மௌனமாக இருந்தாள்.
"நாளைக்குக் கிளம்பற ஒரு சரக்குக் கப்பல்ல எனக்கு வேலை கிடைச்சிருக்கு. கப்பலோடபோயிட்டுத் திரும்பி வர வேண்டியதுதான். ஊதியமா நிறையப் பணம் கிடைக்கும்."
"கப்பல்ல போயிட்டுத் திரும்ப, ரெண்டு மூணு மாசம் ஆகும் இல்ல?"
"ஆமாம். "
"அப்புறம் இது எப்படி நல்ல விஷயமா இருக்க முடியும்? என்னைப் பிரிஞ்சு இருக்கறது உங்களுக்கு நல்ல விஷயமா?" என்று கோபத்துடன் வெடித்தாள் வைகை.
"அப்படி இல்ல, வைகை..." என்று ஆரம்பித்தான் வளவன்.
"நீங்க இப்படி ஏதாவது செய்வீங்கன்னு எனக்கு நேத்திக்கே தெரியும்!"
"நேத்திக்கே தெரியுமா? எப்படி?"
"எனக்குன்னா எனக்கு இல்லை. என் கைவளையல்களுக்குத் தெரிஞ்சுடுச்சு. நேத்து ராத்திரி நீங்க என்னைக் கட்டி அணைச்சுக்கிட்டப்பவே, நீங்க என்னைப் பிரியப் போறீங்கங்கறதை என் கைவளையல்கள் புரிஞ்சுக்கிட்டு, என் கையிலேந்து நழுவி விழுந்துடுச்சு. எங்கிட்ட ஏதோ மாறுதல் தெரியுதுன்னீங்களே, என் கைவளையல்கள் நழுவி விழுந்ததால, என் கைகள் வெறுமையா இருக்கே, அந்த மாறுதல்தான் அது!" என்றாள் வைகை, தன் கண்களில் பெருகிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டே.
"ஏன் பரிவாதினியோட உடம்பு வெளிறிப் போன மாதிரி இருக்கு?"
"மாதிரி என்ன? வெளிறித்தான் போயிருக்கு. அவளோட கணவர் நேத்திக்கு ஊருக்குப் போயிட்டார் இல்ல? அதான், பசலை வந்து தோல் வெளிறிப் போயிருக்கு."
"நேத்திக்குத்தான் ஊருக்குப் போனாரா? ஆனா, நான் நாலைஞ்சு நாளைக்கு முன்னால, அவளைப் பார்த்தபோது கூட, அவ இப்படித்தானே இருந்தா?"
"நீ சரியா கவனிச்சிருக்க மாட்டே!"
தனக்குக் காதில் விழாது என்று நினைத்து, ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்தபடி இரண்டு பெண்கள் பேசிக் கொண்டது, பரிவாதினியின் காதில் விழுந்தது.
அந்தப் பெண்களைக் கடைக்கண்ணால் பார்த்த பரிவாதினி, கடைசியாகப் பேசிய பெண்ணிடம் பேசுவது போல், மனதுக்குள் பேசினாள்:
'உன் தோழி சொல்றது சரிதான். அவ சரியாதான் கவனிச்சிருக்கா. அஞ்சு நாள் இல்ல, ஏழு நாளைக்கு முன்னாலேயே, என் மேனியில பசலை படர ஆரம்பிச்சுடுச்சு. தான் ஊருக்குப் போகப் போறதை ரகசியமா வச்சிருந்து, அவர் முதல்நாள்தான் எங்கிட்ட சொன்னார். ஆனா, அவர் என்னை விட்டுப் பிரிஞ்சு போகப் போறார்ங்கறது என் மனசுக்கு ஒரு வாரம் முன்னாலேயே தெரிஞ்சு, அது என் உடம்பில பசலை படர வச்சுடுச்சு. இதை நான் சொன்னா, நீங்க ரெண்டு பேரும் நம்பவா போறீங்க?'
"இந்த நேரத்தில சொல்ல வேண்டிய முக்கியமான விஷயமா என்ன?" என்றாள், அவன் அணைப்பிலிருந்த வைசாலி.
"வியாபார விஷயமா நான் வெளியூர் போகணும்."
அவன் அணைப்பிலிருந்து சட்டென்று தன்னை விலக்கிக் கொண்ட வைசாலி, "ரெண்டு மூணு நாள்ள வந்துடுவீங்க இல்ல?" என்றாள்.
"இல்லை வைசாலி. ரொம்ப தூரம் போறேன். திரும்பி வர அஞ்சாறு மாசம் ஆகும்."
வைசாலி தன் முகத்தைத் திருப்பித் தன் இரு தோள்களையும் பார்த்தாள். பிறகு, தன் இரு கைகளையும் உயர்த்தித் தன் இரண்டு மணிக்கட்டுகளையும் பார்த்தாள்.
"என்ன செய்யற?" என்றான் சோமன், குழப்பத்துடன்.
"புரியலையா? உங்களை விட்டுப் பிரிஞ்சப்பறம் இந்தத் தோள்கள் எந்த அளவுக்கு இளைச்சு, எலும்பு தெரியற மாதிரி ஆயிடும், கைகள் மெலிஞ்சப்புறம், கைவளைகள் எப்படி நழுவிக் கீழே விழும்னு நினைச்சுப் பார்த்தேன்."
"நம்ம எதிர்காலத்துக்குப் பணம் சம்பாதிக்கணும் இல்ல? போய்த்தான் ஆகணும். வேற வழி இல்லையே!" என்றான் சோமன்.
"ராமாயணம் படிச்சிருக்கீங்களா?" என்றாள் வைசாலி.
"படிச்சிருக்கேன். ஏன் கேக்கற?"
"வனவாசம் போனாலும் பிரியாத சீதை!" என்ற வைசாலி, குனிந்து தன் பாதங்களைப் பார்த்தாள்.
தான் போகுமிடம் எதுவாக இருந்தாலும் அங்கே தன்னுடன் வரத் தயாராக இருப்பதை அவள் உணர்த்தியதை சோமன் புரிந்து கொண்டான்.
அன்றைய தினத்தை அவன் நினைத்துப் பார்த்தான்.
"குமுதா! என் நண்பன் அமுதன் வேலை தேடி வெளியூர் போனான், இல்ல? அவன்கிட்டேந்து எனக்கு ஒரு மடல் வந்திருக்கு" என்றான் சீவகன்.
'என்ன?' என்பது போல் அவனைப் பார்த்தாள் குமுதா.
"அவனுக்கு அங்கே ஒரு செல்வந்தர்கிட்ட வேலை கிடைச்சிருக்காம். 'நல்ல வேலை, நிறையப் பொருள் கொடுக்கறாரு, உன்னைப் பத்திச் சொன்னேன், உன் நண்பனை இங்கே வரச் சொல்லு, அவனுக்கும் வேலை கொடுக்கறேன்' னு சொன்னாராம். ஒரு ஆண்டு வேலை செஞ்சா போதும், அதுக்குள்ள நிறையப் பணம் சம்பாதிச்சுக்கிட்டு ஊருக்குத் திரும்பி வந்துடலாம்னு எழுதி இருக்கான். அதனால, நான் கிளம்பிப் போகலாம்னு இருக்கேன்."
குமுதா பதில் சொல்லவில்லை. அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.
அடுத்த நாள், சீவகன் ஊருக்குக் கிளம்புவதற்காகத் தன் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தபோது, அங்கே வந்த குமுதா, அவன் முகத்தைப் பார்த்தாள்.
முதல்நாள் பார்த்த அதே பார்வை!
சீவகனுக்கு சுருக்கென்று ஏதோ உறுத்தியது.
"சரி. நீயும் என்னோட வா!" என்றான்.
அப்போது அவள் முகத்தில் தெரிந்த மலர்ச்சி!
'உங்களைப் பிரிந்து என்னால் இருக்க முடியாது. என்னையும் உடன் அழைத்துச் செல்லுங்கள்' என்று அவள் வாய் திறந்து சொல்லவில்லை.
அவள் பார்வையே அதை அவனுக்கு உணர்த்தி விட்டது.
திருமணம் ஆனதிலிருந்தே, பெண்மையின் மென்மையையும், நளினத்தையும் குமுதாவிடம் அவன் உணர்ந்திருக்கிறான்.
ஆனால், அன்று அவள் தன் கண்களாலேயே தன்னிடம் பேசித் தன் மனதிலிருந்த ஏக்கத்தையும் விருப்பத்தையும் குறிப்பால் உணர்த்தியதைக் கண்டபோது, அவள் பெண்மைக்கு இன்னும் சற்றுப் பெண்மை சேர்ந்திருப்பதாக அவன் உணர்ந்தான்.
அந்த உணர்வுடன், தன்னுடன் நடந்து வந்து கொண்டிருந்த குமுதாவைப் பெருமையுடன் மீண்டும் பார்த்தான் சீவகன்.
No comments:
Post a Comment