Saturday, January 30, 2021

1128. ஆறிய காப்பி!

"என்ன நம்ம பொண்ணு ஆம்பளைங்க மாதிரி அடிக்கடி காப்பி குடிக்கறா?" என்றார் சபாபதி.

"ஏன், பொம்பளைங்க அடிக்கடி காப்பி குடிக்கக் கூடாதா?" என்றாள் அவர் மனைவி சிவகாமி.

"நான் அடிக்கடிகாப்பி கேக்கறேன்னு நீ குத்தம் சொல்லுவியே, அதுக்காகச் சொன்னேன்."

"சும்மா உக்காந்துக்கிட்டிருக்கற உங்களுக்கே அடிக்கடி காப்பி தேவைப்படும்னா, அடுப்படியிலேயே நின்னு வேலை செஞ்சுக்கிட்டிருக்கற எனக்குத் தேவைப்படாதா? நானும் அப்பப்ப குடிச்சுப்பேன்தான்!"

"ஓ, அப்படியா சங்கதி! ஆனா நான் மட்டும் அடிக்கடி காப்பி கேக்கறதுக்குத் திட்டு வாங்கிக்கணும் போலருக்கு!" என்ற சபாபதி, சமையலறையிலிருந்து தன் மகள் செல்வி கையில் காப்பி தம்ளருடன் வருவதைப் பார்த்து விட்டு, "இன்னிக்கு எத்தனாவது காப்பி இது?" என்றார் மகளிடம்.

செல்வி சிரித்துக் கொண்டே காப்பியை ரசித்து உறிஞ்சினாள்.

"ஏண்டி, காப்பி குடி, வேண்டாங்கல. ஆனா ஏன் இவ்வளவு சூடாக் குடிக்கற? தம்ளரைக் கையால பிடிக்க முடியாத அளவுக்கு சூடு. துணீயால புடிச்சுக்கிட்டுக் குடிக்கற! இவ்வளவு சூடா காப்பி நெஞ்சுக்குள்ள இறங்கினா, சூட்டை நெஞ்சு தாங்குமா?" என்றாள் சிவகாமி.

"நல்லா, இதமா இருக்கு. சூடும் ஒரு சுவைன்னு ஒரு பழமொழி இருக்கே!" என்றாள் செல்வி.

"அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய பயனுள்ள பழமொழிதான் போ!" என்றார் சபாபதி சிரித்தபடி.

"ஏண்டி, இப்பல்லாம் காப்பி குடிக்கறதைக் குறைச்சுட்ட. அதோட காப்பியை நல்லா ஆத்தி அது பச்சைத்தண்ணி மாதிரி ஆனப்பறம் குடிக்கற! என்ன ஆச்சு உனக்கு?" என்றாள் சிவகாமி.

"நீதானேம்மா சொன்னா, சூடா குடிச்சா, சூடு நெஞ்சுக்குள்ள இறங்கிடும்னு?"

"நான் அப்படிச் சொன்னதுக்கு, சூடும் ஒரு சுவைன்னு பழமொழில்லாம் சொன்னே!"

"ஆறிப் போனா, அதிலேயும் ஒரு சுவை இருக்கத்தான் செய்யுது. அதோட, காப்பி குடிக்கறதைக் குறைச்சுக்கணும்னு நினைக்கிறேன். ஆறின காப்பி குடிச்சா அடிக்கடி குடிக்கணும்னு தோண்றதில்ல!"

"என்னவோ போ! இந்தக் காலத்துப் பெண்கள் எல்லாம் நாளுக்கு ஒரு பேச்சுப் பேசறீங்க!" என்றாள் சிவகாமி.

"ஆமாம். ஒரு விஷயம் கவனிச்சேன். முன்னெல்லாம் காப்பி ரொம்ப சூடா வேணும்னு கேப்பே. ஒரு தடவை சூடு போறலேன்னு சொல்லி சர்வரை வேற காப்பி எடுத்துக்கிட்டு வரச் சொன்னே. இப்பல்லாம் காப்பியை இவ்வளவு ஆற வச்சுக் குடிக்கற. ஏன் அப்படி?" என்றான் முருகன், செல்வியுடன் ஓட்டலில் அமர்ந்து காப்பி அருந்திக் கொண்டிருந்தபோது.

"ஒரு மாறுதலுக்காகத்தான், எல்லாத்துக்கும் காரணம் சொல்லிக்கிட்டிருக்க முடியுமா?" என்றாள் செல்வி.

"காரணம் இருக்கும். ஆனா நீ சொல்ல மாட்டே. நாம பழக ஆரம்பிச்சதிலிருந்து பல விஷயங்கள்ள கவனிச்சிருக்கேன். நீ சரியான அழுத்தக்காரியாச்சே! செல்விங்கறதுக்கு பதிலா உனக்குக் கள்ளின்னு பேர் வச்சிருக்கலாம்."

"முருகனான உன்னை என் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கறதால, வள்ளிங்கற பேர்தான் எனக்குப் பொருத்தமா இருக்கும்!" என்ற செல்வி, ' காப்பி என் நெஞ்சுக்குள் இறங்கும்போது, என் நெஞ்சுக்குள் இருக்கும் உன் மீது சூடு படக் கூடாது என்பதற்காகத்தான் நான் காப்பியைச் சூடாகக் குடிக்க வேண்டும் என்ற என் விருப்பத்தை விட்டு விட்டு, காப்பியை ஆற வைத்துக் குடிக்கிறேன் என்று சொன்னால் யாராவது நம்பவா போகிறார்கள்?' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 113
காதற்சிறப்புரைத்தல்   

குறள் 1128
நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து.

பொருள்:
எம் காதலர் நெஞ்சினுள் இருக்கின்றார், ஆகையால் சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சுகின்றோம்.

குறள் 1129 (விரைவில்)
அறத்துப்பால்                                                                                                   பொருட்பால்


Friday, January 29, 2021

1127. கண்ணுக்கு மையழகு!

"கொஞ்ச நாளா உன் தோற்றத்தில ஒரு மாற்றம் தெரியுதே!" என்றாள் யுவா.

"அதெல்லாம் ஒண்ணும் இல்ல. நீ கொஞ்ச நாள் கழிச்சு என்னைப் பாக்கறதால அப்படித் தெரியுது!" என்றாள் ஶ்ரீநிதி.

"ஒரு வாரம்தான் நான் ஊருக்குப் போயிருந்தேன். அதுக்குள்ள என்ன பெரிய மாற்றம் வந்திருக்கும்?" என்ற யுவா "நீங்கள்ளாம் இதை கவனிக்கலியா?" என்றாள் தன் பிற தோழிகளிடம்.

"கவனிக்காம என்ன? முதல்நாளே கவனிச்சுக் கேட்டுட்டோம். அவ சொல்ல மாட்டேங்கறா! அது இருக்கட்டும். ஒரு மாற்றம்னு சொல்றியே, என்ன மாற்றம்னு உனக்குத் தெரியலையா? அப்படீன்னா நீ ஒரு டியூப்லைட்னு அர்த்தம்! இத்தனைக்கும் அவளுக்கு எங்களையெல்லாம் விட நெருங்கிய தோழி நீதான்!" என்றாள் வனிதா என்ற மற்றொரு தோழி.

"தெரியாம என்ன? ஶ்ரீநிதியோட தனித்தன்மையே அவ கண்ணையே மறைக்கிற மாதிரி அவ இட்டுக்கற மைதான். அதுதான் இப்ப இல்ல. அவ வாயாலேயே சொல்லுவாளோன்னு நினைச்சேன்" என்ற யுவா ஶ்ரீநிதியைப் பார்த்து, "நீ மை தீட்டிக்கறப்ப நான் பாத்திருக்கேன். அப்படியே கண்ணோட கீழ்ப்பகுதி முழுக்க பெயின்ட் பண்ற மாதிரி மையை லாவகமாத் தடவி அதைக் கண்ணுக்கே ஒரு பார்டர் மாதிரி அழகாப் பண்ணிக்கறதைப் பார்த்து நான் எத்தனையோ தடவை ஆச்சரியப் பட்டிருக்கேன். உங்கிட்டயும் சொல்லி இருக்கேன். மை கரைஞ்சு கண்ல பட்டுக் கண் கரிக்கறதைக் கூடப் பொறுத்துக்கிட்டு மை தடவிக்கறதில அப்படி ஒரு ஆர்வம் உனக்கு! ஏன் திடீர்னு மை தடவிக்கறதை நிறுத்திட்ட?" என்றாள்.

"காரணம்னு ஒண்ணுமில்ல. சும்மாத்தான். நீ சொன்ன மாதிரி எதுக்குக் கண் கரிக்கறதைப் பொறுத்துக்கிட்டு மை தடவிக்கணும்னுதான்" என்றாள் ஶ்ரீநிதி.

"சமாளிக்காதேடி. உண்மையான காரணம் எனக்குத் தெரியும். சொல்லிட்டடுமா?" என்றாள் யுவா விடாமல்.

ஶ்ரீநிதி 'வேண்டாம்' என்று கெஞ்சுவது போல் தலையாட்டினாள்.

"சொல்லத்தான் போறேன்" என்ற யுவா, மற்ற தோழிகளைப் பார்த்து, "விஷயம் ஒண்ணுமில்லீங்கடி. இவ வீட்டில மார்கழி மாசத்தில விதரம் இருந்து திருப்பாவை படிப்பாங்க. திருப்பாவையில ஆண்டாள் 'மையிட்டெழுதோம்'னு சொல்லி இருப்பாங்க. அதனால இவங்க வீட்டில பெண்கள் யாரும் மார்கழி மாசத்தில கண்ணுக்கு மை வச்சுக்க மாட்டாங்க. இதைச் சொன்னா நாம இவளைக் கிண்டல் பண்ணுவோம்னு பயந்துதான் இவ காரணத்தைச் சொல்லாம மழுப்பி இருக்கா" என்று சொல்லி விட்டு, ஶ்ரீநிதியைப் பார்த்துக் கண் சிமிட்டியபடி, "என்னடி நான் சொல்றது சரிதானே?" என்றாள்.

ஶ்ரீநிதி மௌனமாகத் தலையாட்டினாள்.

"இவ்வளவுதானா? சப்புனு போயிடுச்சே!" என்று சொல்லி விட்டு மற்ற தோழிகள் ஒவ்வொரொவராகக் கலைந்து சென்றனர்.

ற்ற தோழிகள் சென்றதும்,"இப்ப எங்கிட்ட உண்மையைச் சொல்லு. நீ ஏன் மை இட்டுக்கலேன்னு எனக்குத் தெரியாது. ஆனா யாரோ ஒத்தன் உனக்கு மை போட்டதுதான் இதுக்குக் காரணமா இருக்கும்னு எனக்குத் தெரியும். யாருடி அவன்?" என்றாள் யுவா.

"அஸ்வின்!" என்றாள் ஶ்ரீநிதி நெளிந்தபடி.

"ஓ, பரவாயில்ல. நல்ல பையனைத்தான் செலக்ட் பண்ணி இருக்கே! மை இட்டுக்கிட்டா உனக்கு நல்லா இல்லேன்னு அவன் சொன்னானா என்ன? அப்படிச் சொல்லி இருந்தா, அவனுக்கு ரசனை இல்லேன்னுதான் அர்த்தம்!"

"சேச்சே! அவன் அப்படிச் சொல்லல. அவன் கூட நான் ஏன் மை இட்டுக்கறதில்லேன்னு கேட்டுக்கிட்டிருக்கான். அவங்கிட்டயும் மழுப்பலாதான் பதில் சொல்லிக்கிட்டிருக்கேன்."

"பின்னே ஏன் மை இட்டுக்கறதை நிறுத்திட்ட? நான் சொன்ன மாதிரி நிஜமாகவே ஏதாவது விரதமா, ஐ மீன், காதலுக்காக விரதமா?"

"காணத்தைச் சொன்னா என்னைக் கிண்டல் பண்ணுவ. என்னைப் பைத்தியக்காரின்னு நினைப்பே!"

"பரவாயில்ல சொல்லு. கிண்டல் எல்லாம் பண்ண மாட்டேன்!" என்று ஊக்கினாள் யுவா.

"இப்பல்லாம் அவன் நினைவு எப்பவும் என் மனசிலேயே இருந்துக்கிட்டிருக்குடி. கண்ணை மூடினா கூட அவன் முகம்தான் தெரியுது - ஏதோ கண்ணுக்குள்ளேயே அவன் குடியிருக்கிற மாதிரி. நான் மையிட்டுக்கறப்ப, மையோட கருப்பு பட்டு, கண்ணுக்குள்ள இருக்கற அவன் உருவம் அழிஞ்சு போயிடுமோன்னு பயந்துதான் மை தடவிக்கறதை நிறுத்திட்டேன்!" என்றாள் ஶ்ரீநிதி, சங்கடத்துடன் நெளிந்தபடி.

"நீ பைத்தியக்காரிதாண்டி. சந்தேகமே இல்லை" என்றாள் யுவா, செல்லாமாகத் தன் தோழியின் கன்னத்தில் தட்டியபடி.

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 113
காதற்சிறப்புரைத்தல்   

குறள் 1127
கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து.

பொருள்:
எம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார், ஆகையால் மை எழுதினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுதமாட்டோம்!

அறத்துப்பால்                                                                                                   பொருட்பால்Tuesday, January 19, 2021

1126. கண் மூடும் வேளையிலும்


"உன்னை எப்பவும் என் இதயத்துக்குள்ளேயே வச்சிருக்கேன்" என்றான் ராம்.

"இது மாதிரியெல்லாம் பேசறது ஆம்பளைங்களுக்கு வழக்கம். இதையெல்லாம் நான் நம்ப மாட்டேன்" என்றாள் அஞ்சனா.

"உன்னை நம்ப வைக்கறதுக்கு நான் என்ன செய்யணும்? ராமருக்கு அனுமார் தன் மார்பைப் பிளந்து காட்டினாராமே, அப்படிக் காட்ட முடியுமா?"

"முடியாதுதான். ஏன்னா, நான் ராமர் இல்ல, நீதான் ராம். அதோட நான் அஞ்சனா. அஞ்சனாவோட பிள்ளைதான் ஆஞ்சநேயர். அதனால இங்க ரோல் மாறி இருக்கு!"

"அப்ப உன் இதயத்தில என்னை வச்சிருக்கறதாச் சொல்றியா?"

"இதயத்தில வைக்கறது பெரிய விஷயம் இல்ல. இதயத்தில எத்தனையோ விஷயங்களை வச்சிருக்கேன். அதுல நீயும் ஒண்ணு. உன் இதயத்தில நான் இருக்கறதும் அப்படித்தான்!"

"போடி! இப்படியெல்லாம் ஏதாவது ரொமான்ட்டிக்கா சொன்றதுதான் காதல்ல கிக்கான விஷயம். என் இதயத்தில உன்னை வச்சிருக்கேன்னு நான் சொன்னா பதிலுக்கு நீயும் என்னை உன் இதயத்தில வச்சிருக்கறதாச் சொன்னா எனக்கு சந்தோஷமா இருக்கும். அதை விட்டுட்டு என்னென்னவோ விளக்கமெல்லாம் சொல்லிக்கிட்டிருக்கே!"

"டேய் முட்டாள்! உன்னை நான் என் கண்ணுக்குள்ளை வச்சிருக்கேண்டா!"

"நான் உன்னை இதயத்தில வச்சிருக்கேன்னு சொன்னேன். ஏட்டிக்குப் போட்டியா, நீ என்னைக் கண்ல வச்சிருக்கறதா சொல்ற. ரெண்டும் ஒரே மாதிரிதானே!"

"ஏட்டிக்குப் போட்டியா சொல்லல. இதயம் ஒரு குப்பைக் கூடை. அதில கண்டதெல்லாம் கிடக்கும். கண் அப்படி இல்ல. அது ரொம்ப சென்சிடிவ். கண்ணுக்குள்ள எல்லாத்தையும் வைக்க முடியாது. உன்னை என் கண்ணுக்குள்ள வச்சிருக்கேன்னா, நீ என் கண்ணுக்கு எதிரில இல்லாட்டாலும் உன் உருவம் என் கண்ல இருந்துக்கிட்டே இருக்கும்னு அர்த்தம்."

"ஓ, அப்படியா! கேக்க ரொம்ப சந்தோஷமாத்தான் இருக்கு. ஆனா ஜாக்கிரதை. நீ கண்ணை இமைக்கறப்ப, கண்ணை மூடித் திறக்கறப்பல்லாம் என்னை அழுத்திக் கசக்கிக் கிட்டிருப்பயே! அப்ப எனக்கு வலிக்காதா?"

"வலிக்காது. ஒரு சின்னத் தூசி கண்ல இருந்தாக் கூட கண்ணை உறுத்திக்கிட்டே இருக்குமே! ஆனா நீ எப்பவுமே என் கண்ணுக்குள் இருந்தாலும் எனக்கு ஒரு சின்ன உறுத்தல் கூட இல்லையே! அப்படின்னா, நீ தூசியை விட நுட்பமா காத்து மாதிரிதான் என் கண்ல இருக்கேன்னுதானே அர்த்தம்? அப்புறம் எப்படி உனக்கு வலிக்கும்?" என்றாள் அஞ்சனா.

"முதல்ல நான் உன் நாக்கில இருந்து உன்னை மாதிரி புத்திசாலித்தனமாப் பேசக் கத்துக்கணும்!" என்றான் ராம்.

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 113
காதற்சிறப்புரைத்தல்   

குறள் 1126
கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்
நுண்ணியர்எம் காத லவர்.

பொருள்:
எம் காதலர் எம் கண்ணுள்ளிருந்து போக மாட்டார், கண்ணை மூடி இமைத்தாலும் அதனால் வருந்த மாட்டார், அவர் அவ்வளவு நுட்பமானவர்.

அறத்துப்பால்                                                                                                   பொருட்பால்Thursday, January 14, 2021

1125. ஐந்து கேள்விகள்

"ஒரு விஷயத்தில மனைவியோட விருப்பம் எதுன்னு கணவன்கிட்ட தனியா கேப்பாங்களாம். அப்புறம் மனைவிகிட்ட இதைக் கேட்டு கணவன் சொன்னது சரியா இருக்கான்னு பார்த்து மார்க் போடுவாங்களாம். இதெல்லாம் ஒரு கேம்!" என்றான் செல்வகுமார்.

"ஏன், அதில என்ன தப்பு? மனைவியோட விருப்பங்கள் எவைன்னு தெரிஞ்சுக்க கணவனுக்கு எத்தனையோ சந்தர்ப்பங்கள் கிடைக்கும். ஆனா பெரும்பாலான கணவர்கள் அதையெல்லாம் ஞாபகம் வச்சுக்க மாட்டாங்க. எனக்கு இது பிடிக்காதுன்னு உங்ககிட்ட எத்தனை தடவை சொல்லி இருக்கேன்னு மனைவி கணவன்கிட்ட சொல்றது அடிக்கடி நடக்கறதுதானே!" என்றாள் குழலி.

"மத்தவங்களைப் பத்தி எனக்குத் தெரியாது. ஆனா நான் அப்படி இல்ல."

"அப்படியா? அதை சோதிச்சுப் பாத்துடலாமே! வர ஞாயித்துக் கிழமை நாம என் தோழி ரமா வீட்டுக்கு சாப்பிடப் போறோம் இல்ல? அப்ப ஒரு போட்டி வச்சுக்கலாம். என்னோட விருப்பம் என்னங்கறதைப் பத்தின அஞ்சு கேள்விகள் தயார் பண்ணி அந்தக் கேள்விகளையும் அவற்றுக்கான பதில்களையும் எழுதி ரமாகிட்ட கொடுத்துடறேன். அவ அந்தக் கேள்விகளை உங்கிட்ட கேப்பா. எத்தனை கேள்விக்கு நீ சரியா பதில் சொல்றேன்னு பாக்கலாம்" என்றாள் குழலி.

"செல்வா, ரெடியா இருக்கீங்களா?" என்றாள் ரமா.

"கேளுங்க ரமா!" என்றான் செல்வகுமார்.

"முதல் கேள்வி. குழலிக்குக் கல்லூரியில பிடிச்ச சப்ஜெக்ட் எது?"

"தமிழ்."

"ரெண்டாவது கேள்வி. அவளுக்குப் பிடிக்காத சப்ஜெக்ட் எது?"

"கணக்கு."

"அவளுக்குப் பிடிச்ச இசை அமைப்பாளர்?."

"எம் எஸ் வி."

"பிடிச்ச எழுத்தாளர்?"

"இந்திரா பார்த்தசாரதி."

"கடைசிக் கேள்வி. அவளோட வாழ்க்கையில அவளுக்கு இருக்கற லட்சியம் என்ன?"

"லட்சியம்னு பெரிசா எதுவும் கிடையாது. சும்மா ஜாலியா இருக்கறதுதான் வாழ்க்கைன்னு நினைக்கறவ அவ. ஆனா லட்சியம்னு ஒண்ணைச் சொல்லணும்னா தன் அம்மாவைக் கடைசி வரையில சந்தோஷமா வச்சுக்கணுங்கறதுதான்."

"கங்கிராட்ஸ் செல்வா! நூத்துக்கு நூறு மதிப்பெண்கள் வாங்கி இருக்கீங்க!" என்றாள் ரமா 

"அடப்பாவி! பிட் அடிச்சுப் பரீட்சை எழுதற மாதிரி அத்தனையையும் சரியா சொல்லிட்டியே! இது எதையுமே நான் உங்கிட்ட சொல்லவே இல்லையே! எப்படி இதெல்லாம் உனக்குத் தெரிஞ்சுது?" என்றாள் குழலி வியப்புடன்.

"நீ சொல்லாட்ட என்ன? உன்னை கவனிச்சு நான் புரிஞ்சுக்கிட்டதுதான் ஒவ்வொரு கேள்விக்கா வரேன். உனக்குத் தமிழ் இலக்கியத்தில ஆர்வம் இருக்குன்னு உன்னோட பேச்சிலேந்து தெரிஞ்சுக்கிட்டேன். அதனால உனக்குத் தமிழ்தான் விருப்பமான பாடமா இருக்கும்னு நினைச்சேன். 

"நீ பி எஸ்சியில கெமிஸ்ட்ரி எடுக்க விரும்பின ஆனா உனக்கு பிஎஸ் சி மாத்ஸ்லதான் சீட் கிடைச்சது. ஆனாலும் மாத்ஸ்ல நீ நல்ல மார்க் வாங்கினதாச் சொல்லி இருக்கே. அதனால உனக்கு மாத்ஸ்ல அவ்வளவு விருப்பம் இல்ல ஆனாலும் கஷ்டப்பட்டுப் படிச்சேன்னு புரிஞ்சுக்கிட்டேன். 

"அப்புறம் உன் வீட்டுக்கு நான் எப்ப வந்தாலும் நீ முரசு டிவிதான் பாத்துக்கிட்டிருப்ப. இதை வச்சும், நீ அடிக்கடி முணுமுணுக்கற பாட்டுகளைக் கேட்டும் நீ எம் எஸ் வி பாடல்களை விரும்பறவன்னு புரிஞ்சுக்கிட்டேன். 

"உன் வீட்டுக்கு வரப்பல்லாம் நீ லைப்ரரிலேந்து எடுத்துட்டு வந்திருக்கற புஸ்தகங்கள்ள இந்திரா பார்த்தசாரதி புஸ்தகங்கள் அதிகம் இருக்கறதை கவனிச்சிருக்கேன்."

"அடப்பாவி! என்னை வேவு பாக்கற மாதிரி இவ்வளவு உன்னிப்பா கவனிச்சிருக்கியே! உங்கிட்ட ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும் போலருக்கே! அது சரி. எனக்கு லட்சியம்னு பெரிசா எதுவும் கிடையாது, என் அம்மாவை சந்தோஷமா வச்சுக்கறதுதான்ன லட்சியம்னு சொன்னியே! அது எப்படி? இந்தக் கேள்விக்கு உன்னால நிச்சயமா விடை சொல்ல முடியாதுன்னுல்ல நினைச்சேன்!" என்றாள் குழலி. 

"எல்லாத்தையும் விட சுலபமான கேள்வி இதுதான். எல்லாருமே தங்களோட லட்சியத்தைப் பத்தித்தான் அதிகமாப் பேசுவாங்க. நீ அதிகம் பேசறது உன் அம்மாவை நல்லா வச்சுக்கணுங்கறதைப் பத்தித்தானே! அதோட உன் அம்மாகிட்ட அனுமதி வாங்கிக்கிட்டுத்தானே என் காதலையே ஏத்துக்கிட்ட!" என்றான் செல்வகுமார் சிரித்தபடி.

தன் கணவனைப் பார்த்து, "பாத்தீங்களா இவரை? உங்களுக்கு நான் இப்படி ஒரு டெஸ்ட் வச்சா நீங்க இருபது மார்க் கூட வாங்கி இருக்க மாட்டீங்க!" என்றாள் ரமா

"அவர் இப்ப காதலனாத்தானே இருக்காரு?.கல்யாணம் ஆனப்பறம் இப்படி ஒரு டெஸ்ட் வச்சா தம்பியும் என் லெவலுக்கு வந்துடுவாரு. மனைவி பத்தின விஷயங்களை மறக்கறதுதான் ஒரு கணவனோட இயல்பு!" என்று சொல்லிச் சிரித்தான் அவள் கணவன் ரமேஷ்.

"அதுக்கு வாய்ப்பே இல்லை பிரதர்.  நான் இவளைப் பத்தின எதையுமே ஞாபகம் வச்சுக்கறதில்ல. ஞாபகம் வச்சுக்கிட்டாத்தானே மறக்கறதுக்கு?"

"ஞாபகம் வச்சுக்கறதில்லையா? அப்புறம் எப்படி?" என்றாள் ரமா.

"நான் அவளைப் புரிஞ்சுக்கறேன். அவ்வளவுதான்!" என்றான் செல்வகுமார் குழலியின் முகத்தைப் பார்த்தபடி.

குழலியின் முகத்தில் பெருமிதம் பொங்கி வழிந்தது.  

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 113
காதற்சிறப்புரைத்தல்   

குறள் 1125
உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.

பொருள்:

ஒளி பொருந்திய விழிகளையுடைய இவள் பண்புகளை நான் நினைப்பதேயில்லை; அவற்றை மறந்தால் அல்லவா நினைப்பதற்கு?

அறத்துப்பால்                                                                                                   பொருட்பால்1128. ஆறிய காப்பி!

"என்ன நம்ம பொண்ணு ஆம்பளைங்க மாதிரி அடிக்கடி காப்பி குடிக்கறா?" என்றார் சபாபதி. "ஏன், பொம்பளைங்க அடிக்கடி காப்பி குடிக்கக் கூட...