Thursday, January 14, 2021

1125. ஐந்து கேள்விகள்

"ஒரு விஷயத்தில மனைவியோட விருப்பம் எதுன்னு கணவன்கிட்ட தனியா கேப்பாங்களாம். அப்புறம் மனைவிகிட்ட இதைக் கேட்டு கணவன் சொன்னது சரியா இருக்கான்னு பார்த்து மார்க் போடுவாங்களாம். இதெல்லாம் ஒரு கேம்!" என்றான் செல்வகுமார்.

"ஏன், அதில என்ன தப்பு? மனைவியோட விருப்பங்கள் எவைன்னு தெரிஞ்சுக்க கணவனுக்கு எத்தனையோ சந்தர்ப்பங்கள் கிடைக்கும். ஆனா பெரும்பாலான கணவர்கள் அதையெல்லாம் ஞாபகம் வச்சுக்க மாட்டாங்க. எனக்கு இது பிடிக்காதுன்னு உங்ககிட்ட எத்தனை தடவை சொல்லி இருக்கேன்னு மனைவி கணவன்கிட்ட சொல்றது அடிக்கடி நடக்கறதுதானே!" என்றாள் குழலி.

"மத்தவங்களைப் பத்தி எனக்குத் தெரியாது. ஆனா நான் அப்படி இல்ல."

"அப்படியா? அதை சோதிச்சுப் பாத்துடலாமே! வர ஞாயித்துக் கிழமை நாம என் தோழி ரமா வீட்டுக்கு சாப்பிடப் போறோம் இல்ல? அப்ப ஒரு போட்டி வச்சுக்கலாம். என்னோட விருப்பம் என்னங்கறதைப் பத்தின அஞ்சு கேள்விகள் தயார் பண்ணி அந்தக் கேள்விகளையும் அவற்றுக்கான பதில்களையும் எழுதி ரமாகிட்ட கொடுத்துடறேன். அவ அந்தக் கேள்விகளை உங்கிட்ட கேப்பா. எத்தனை கேள்விக்கு நீ சரியா பதில் சொல்றேன்னு பாக்கலாம்" என்றாள் குழலி.

"செல்வா, ரெடியா இருக்கீங்களா?" என்றாள் ரமா.

"கேளுங்க ரமா!" என்றான் செல்வகுமார்.

"முதல் கேள்வி. குழலிக்குக் கல்லூரியில பிடிச்ச சப்ஜெக்ட் எது?"

"தமிழ்."

"ரெண்டாவது கேள்வி. அவளுக்குப் பிடிக்காத சப்ஜெக்ட் எது?"

"கணக்கு."

"அவளுக்குப் பிடிச்ச இசை அமைப்பாளர்?."

"எம் எஸ் வி."

"பிடிச்ச எழுத்தாளர்?"

"இந்திரா பார்த்தசாரதி."

"கடைசிக் கேள்வி. அவளோட வாழ்க்கையில அவளுக்கு இருக்கற லட்சியம் என்ன?"

"லட்சியம்னு பெரிசா எதுவும் கிடையாது. சும்மா ஜாலியா இருக்கறதுதான் வாழ்க்கைன்னு நினைக்கறவ அவ. ஆனா லட்சியம்னு ஒண்ணைச் சொல்லணும்னா தன் அம்மாவைக் கடைசி வரையில சந்தோஷமா வச்சுக்கணுங்கறதுதான்."

"கங்கிராட்ஸ் செல்வா! நூத்துக்கு நூறு மதிப்பெண்கள் வாங்கி இருக்கீங்க!" என்றாள் ரமா 

"அடப்பாவி! பிட் அடிச்சுப் பரீட்சை எழுதற மாதிரி அத்தனையையும் சரியா சொல்லிட்டியே! இது எதையுமே நான் உங்கிட்ட சொல்லவே இல்லையே! எப்படி இதெல்லாம் உனக்குத் தெரிஞ்சுது?" என்றாள் குழலி வியப்புடன்.

"நீ சொல்லாட்ட என்ன? உன்னை கவனிச்சு நான் புரிஞ்சுக்கிட்டதுதான் ஒவ்வொரு கேள்விக்கா வரேன். உனக்குத் தமிழ் இலக்கியத்தில ஆர்வம் இருக்குன்னு உன்னோட பேச்சிலேந்து தெரிஞ்சுக்கிட்டேன். அதனால உனக்குத் தமிழ்தான் விருப்பமான பாடமா இருக்கும்னு நினைச்சேன். 

"நீ பி எஸ்சியில கெமிஸ்ட்ரி எடுக்க விரும்பின ஆனா உனக்கு பிஎஸ் சி மாத்ஸ்லதான் சீட் கிடைச்சது. ஆனாலும் மாத்ஸ்ல நீ நல்ல மார்க் வாங்கினதாச் சொல்லி இருக்கே. அதனால உனக்கு மாத்ஸ்ல அவ்வளவு விருப்பம் இல்ல ஆனாலும் கஷ்டப்பட்டுப் படிச்சேன்னு புரிஞ்சுக்கிட்டேன். 

"அப்புறம் உன் வீட்டுக்கு நான் எப்ப வந்தாலும் நீ முரசு டிவிதான் பாத்துக்கிட்டிருப்ப. இதை வச்சும், நீ அடிக்கடி முணுமுணுக்கற பாட்டுகளைக் கேட்டும் நீ எம் எஸ் வி பாடல்களை விரும்பறவன்னு புரிஞ்சுக்கிட்டேன். 

"உன் வீட்டுக்கு வரப்பல்லாம் நீ லைப்ரரிலேந்து எடுத்துட்டு வந்திருக்கற புஸ்தகங்கள்ள இந்திரா பார்த்தசாரதி புஸ்தகங்கள் அதிகம் இருக்கறதை கவனிச்சிருக்கேன்."

"அடப்பாவி! என்னை வேவு பாக்கற மாதிரி இவ்வளவு உன்னிப்பா கவனிச்சிருக்கியே! உங்கிட்ட ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும் போலருக்கே! அது சரி. எனக்கு லட்சியம்னு பெரிசா எதுவும் கிடையாது, என் அம்மாவை சந்தோஷமா வச்சுக்கறதுதான்ன லட்சியம்னு சொன்னியே! அது எப்படி? இந்தக் கேள்விக்கு உன்னால நிச்சயமா விடை சொல்ல முடியாதுன்னுல்ல நினைச்சேன்!" என்றாள் குழலி. 

"எல்லாத்தையும் விட சுலபமான கேள்வி இதுதான். எல்லாருமே தங்களோட லட்சியத்தைப் பத்தித்தான் அதிகமாப் பேசுவாங்க. நீ அதிகம் பேசறது உன் அம்மாவை நல்லா வச்சுக்கணுங்கறதைப் பத்தித்தானே! அதோட உன் அம்மாகிட்ட அனுமதி வாங்கிக்கிட்டுத்தானே என் காதலையே ஏத்துக்கிட்ட!" என்றான் செல்வகுமார் சிரித்தபடி.

தன் கணவனைப் பார்த்து, "பாத்தீங்களா இவரை? உங்களுக்கு நான் இப்படி ஒரு டெஸ்ட் வச்சா நீங்க இருபது மார்க் கூட வாங்கி இருக்க மாட்டீங்க!" என்றாள் ரமா

"அவர் இப்ப காதலனாத்தானே இருக்காரு?.கல்யாணம் ஆனப்பறம் இப்படி ஒரு டெஸ்ட் வச்சா தம்பியும் என் லெவலுக்கு வந்துடுவாரு. மனைவி பத்தின விஷயங்களை மறக்கறதுதான் ஒரு கணவனோட இயல்பு!" என்று சொல்லிச் சிரித்தான் அவள் கணவன் ரமேஷ்.

"அதுக்கு வாய்ப்பே இல்லை பிரதர்.  நான் இவளைப் பத்தின எதையுமே ஞாபகம் வச்சுக்கறதில்ல. ஞாபகம் வச்சுக்கிட்டாத்தானே மறக்கறதுக்கு?"

"ஞாபகம் வச்சுக்கறதில்லையா? அப்புறம் எப்படி?" என்றாள் ரமா.

"நான் அவளைப் புரிஞ்சுக்கறேன். அவ்வளவுதான்!" என்றான் செல்வகுமார் குழலியின் முகத்தைப் பார்த்தபடி.

குழலியின் முகத்தில் பெருமிதம் பொங்கி வழிந்தது.  

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 113
காதற்சிறப்புரைத்தல்   

குறள் 1125
உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.

பொருள்:

ஒளி பொருந்திய விழிகளையுடைய இவள் பண்புகளை நான் நினைப்பதேயில்லை; அவற்றை மறந்தால் அல்லவா நினைப்பதற்கு?

                                                                        குறள் 1126                                                                         குறள் 1124

                     அறத்துப்பால்                                                                     பொருட்பால்        


No comments:

Post a Comment

1307. முதலில் தேவை முகவரி!

விளையாட்டாக ஆரம்பித்த பேச்சு விபரீதத்தில் முடியும் என்று அஜய் எதிர்பார்க்கவில்லை. அஜய் வழக்கம்போல் வீணாவுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருக்கும்போ...