அதிகாரம் 133 - ஊடலுவகை (ஊடலில் விளையும் மகிழ்ச்சி)

திருக்குறள்
காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 133
ஊடலுகை (ஊடலில் விளையும் மகிழ்ச்சி)

1321. அப்போது புரியும்!

"ஏண்டி, அவசரப்பட்டு முகேஷோட சண்டை போட்ட? அவரு கோவிச்சுக்கிட்டு, உங்கிட்டேந்து விலகிப் போயிட்டார்னா?" என்றாள் சௌம்யா.

"அப்படியெல்லாம் நடக்காது" என்றாள் தாரிணி.

"நீ கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம்!"

"அவரு என்னைக் குத்தம் சொன்னா, நான் கேட்டுக்கிட்டு சும்மா இருக்கணுமா? என் மேல தப்பு இல்லேன்னு சொல்லக் கூடாதா?"

"உங்க சண்டையை நான் பாத்துக்கிட்டுத்தானே இருந்தேன்? முகேஷ் ரொம்ப இறங்கி வந்தாரு. தான் சொன்னது தப்புன்னு கூட ஒத்துக்கிட்டாரு. ஆனா, நீதான் அவ சமாதானத்தை ஏத்துக்காம, மூர்க்கமா சண்டை போட்ட!"

"என் மேல தப்பு கண்டுபிடிக்காதே. என் நிலைமையில நீ இருந்தாதான் உனக்குப் புரியும்" என்று பேச்சை முடித்தாள் தாரிணி.

ரண்டு நாட்கள் கழித்துத் தோழிகள் இருவரும் சந்தித்துக் கொண்டபோது, "என்னடி, உங்களுக்குள்ள சமாதானம் ஆயிடுச்சா?" என்றாள் சௌம்யா.

"இல்லை" என்றாள் தாரிணி, சுருக்கமாக.

"நீ அவருக்கு ஃபோன் பண்ணிப் பேசலாம் இல்ல?"

"நான் எதுக்கு ஃபோன் பண்ணணும்? தப்பு அவர் மேலதான். அவரு ஃபோன் பண்ணட்டும்!"

"அப்படி அவர் ஃபோன் பண்ணலேன்னா?"

"கண்டிப்பாப் பண்ணுவாரு" என்றாள் தாரிணி.

டுத்த ஓரிரு நாட்களில், தாரிணிக்கும், முகேஷுக்கும் சமாதானம் ஆகி, இருவரும் முன்பு போல் நெருக்கமானார்கள்.

தாரிணியுடன் தனியே இருந்தபோது, "ஆனாலும் உனக்கு ரொம்பப் பிடிவாதம்டி! தப்பு அவர் மேல இருந்தாலும், நீ முதல்ல ஃபோன் பண்ணிப் பேசி இருக்கலாம் இல்ல? நல்லவேளை, அவர் ஃபோன் பண்ணிப் பேசினாரு. இல்லேன்னா என்ன ஆகி இருக்கும்?" என்றாள் சௌம்யா.

"என்ன ஆகி இருக்கும்? நான் அவருக்கு ஃபோன் பண்ணிப் பேசி எங்களுக்குள்ள சமாதானம் ஆகி இருக்கும்!" என்றாள் தாரிணி, சிரித்துக் கொண்டே.

"அதுக்கு, முதலிலேயே அவரு இறங்கி வந்து பேசினப்ப நீ சமாதானமாப் போயிருக்கலாம் இல்ல?"

"போயிருந்தா, எங்களுக்குள்ள சண்டையே வந்திருக்காதே!"

"என்னடி சொல்ற?"

"ஆமாண்டி. முகேஷ் மேல எந்தத் தப்பும் இல்ல. நான்தான் அவர் சாதாரணமா சொன்ன ஒரு விஷயத்தைப் பெரிசு பண்ணி, அவரோட சண்டை போட்டேன்."

"ஏன் அப்படிப் பண்ணின?" என்றாள் சௌம்யா, வியப்புடன்.

"சண்டை போட்டுட்டு, இப்ப மறுபடியும் சேர்ந்தப்புறம், அவரோட அன்பு எவ்வளவு அதிகம் ஆகி இருக்கு தெரியுமா? இதுக்காகத்தான் நான் சண்டை போட்டேன்!"

"என்னவோ எனக்கு ஒண்ணும் புரியல" என்றாள் சௌம்யா.

"இப்ப புரியாது. நீ காதலிக்க ஆரம்பிச்சேன்னா, அப்ப புரியும்!" என்றாள் தாரிணி, தோழியின் கன்னத்தைச் செல்லமாகத் தட்டியபடி.

குறள் 1321
இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு.

பொருள்:
அவரிடம் தவறு ஒன்றும் இல்லையானலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்ய வல்லது.

1322. நீண்டு விட்ட ஊடல்!

அன்று நடந்த ஒரு சிறிய வாக்குவாதம் அவ்வளவு பெரிதாக உருவெடுக்கும் என்று மாதவி எதிர்பார்க்கவில்லை.

திருமணமான இந்த ஆறு மாதங்களில், மாதவிக்கும், அவள் கணவன் தேவாவுக்கும் இடையே சிறு சிறு சச்சரவுகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால், அவை சில மணி நேரங்களுக்கு மேல் நீடித்ததில்லை. 

காலையில் ஒரு சச்சரவு ஏற்பட்டால், கோபித்துக் கொண்டு அலுவலகம் செல்லும் தேவா, மாலை அலுவலகத்திலிருந்து திரும்பி வந்ததும், காலையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடியோடு மறந்து விட்டது போல்தான் நடந்து கொள்வான். 

ஆனால் இந்த முறை, வாக்குவாதம் சற்றுப் பெரிதாகி, இருவரிடமிருந்தும் வார்த்தைகள் சற்றுக் கடினமாக வெளிப்பட்டு விட்டன. ஆயினும், மாலையில் கணவன் வீடு திரும்பியதும், முந்தைய தடவைகளில் நடந்து கொண்டது போல், காலையில் நடந்ததை மறந்து விடுவான் என்றுதான் மாதவி நினைத்தாள்.

ஆனால் அப்படி நடக்கவில்லை.

மாலை வீட்டுக்கு வரும்போதே, தேவா தாமதமாகத்தான் வந்தான். மாதவியின் முகத்தைப் பார்க்காமலேயே, "நான் சாப்பிட்டுட்டேன்" என்று கூறி விட்டு, அறைக்குள் நுழைந்து கதவைத் தாளிட்டுக் கொண்டான். 

மாதவி பதில் பேசாமல், இன்னொரு அறைக்குள் சென்று படுத்துக் கொண்டாள். வழக்கத்துக்கு மாறாகக் கணவன் சமாதானமடையாதது அவளுக்கு வருத்தத்தை அளித்தாலும், கொஞ்சம் பொறுத்துப் பார்க்கலாம் என்று முடிவு செய்தாள் அவள்.

அடுத்த நாள் காலை, வழக்கத்தை விடச் சீக்கிரமாகவே கிளம்பி விட்டான் தேவா. "டிஃபன் பண்ணி இருக்கேன்" என்று மாதவி கூறியதை, தேவா காதில் போட்டுக் கொள்ளவில்லை.

இது அடுத்த சில நாட்களுக்குத் தொடர்ந்தது. மாதவி தேவாவிடம் வலுவில் சென்று பேச முயன்றபோது, அவன் பதில் பேசவில்லை. 

இது எத்தனை நாள் நீடிக்கும், எங்கு சென்று முடியும் என்ற கவலை மாதவிக்கு ஏற்பட்டது. 

ந்தாறு நாட்களுக்குப் பிறகு ஒருநாள், மாலையில் வழக்கத்தை விடச் சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்த தேவா, மாதவியைப் பார்த்துச் சிரித்து, "இன்னிக்கு வெளியில சாப்பிடப் போறோம், கிளம்பு!" என்றான்.

றுநாள் காலை, தேவா அலுவலகத்துக்குக் கிளம்பியபோது, "அஞ்சாறு நாளா உன்னைக் கொஞ்சம் கஷ்டப்படுத்திட்டேன் இல்ல?" என்றான்.

"கொஞ்சமா? ரொம்ப!" என்ற மாதவி, "நீங்க எங்கிட்ட பேசாம இருந்ததுதான் எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. ஆனாலும், இப்ப நீங்க எங்கிட்ட காட்டற அன்பைப் பாக்கறப்ப, அந்தக் கஷ்டம் கூட ஒரு நல்ல விஷயமாத்தான் தோணுது!" என்றாள், தேவாவை அணைத்தபடி.

குறள் 1322
ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்.

பொருள்:
ஊடுதலால் உண்டாகின்ற சிறிய துன்பம், காதலர் செய்கின்ற நல்ல அன்பு வாடி விடக் காரணமாக இருந்தாலும் பெருமை பெறும்.

1323. காதலித்துப் பார்!

"இந்த வயசில நமக்கு கதாகாலட்சேபம் தேவையா? நீ கூப்பிட்டியேங்கறதுக்காக வரேன். ஆனா, போரடிச்சா எழுந்து வந்துடுவேன்!" என்ற எச்சரிக்கையுடன்தான், சினேகாவுடன் கதாகாலட்சேபத்துக்குக் கிளம்பினாள் சியாமளா.

கதாகாலட்சேபம் முடிந்து, இருவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, "எப்படி இருந்தது கதாகாலட்சேபம்?" என்றாள் சினேகா.

"பரவாயில்ல. நான் பயந்த அளவுக்கு போரடிக்கல. ஆனா, இந்தப் புராணக் கதையில எல்லாம் எனக்கு ஆர்வம் இல்ல. உனக்கு எப்படி இதில திடீர்னு ஆர்வம் வந்ததுன்னு தெரியல!" என்றாள் சியாமளா.

"எனக்கும் இதிலெல்லாம் ஆர்வம் இல்ல. இவர் நல்லா சொல்லுவார்னு சொன்னாங்க. அதான் கேட்டுப் பாக்கலாம்னு வந்தேன். எனக்கு கம்பெனி கொடுத்துக்கு ரொம்ப தாங்க்ஸ்!"

"என்னடி தாங்க்ஸ் எல்லாம்? நீ கூப்பிட்டா நான் வர மாட்டேனா? அதுவும் நீ இப்ப இருக்கற நிலைமையில..." என்ற சியாமளா, தவறாகச் சொல்லி விட்டோமோ என்று நினைத்துப் பாதியிலேயே நிறுத்தினாள்.

தோழியை ஏறிட்டுப் பார்த்த சினேகா, "அது என்ன நிலைமை?" என்றாள்.

"இல்லை...சாரி. நீ குமரனோட சண்டை போட்டுட்டுத் தனியா இருக்கறதை சொன்னேன்! வருத்தமா இருக்கற உனக்கு, எங்கேயாவது போயிட்டு வந்தா ஆறுதலா இருக்கும்னுட்டுத்தானே கதாகாலட்சேபத்துக்குக் கிளம்பின? அதைத்தான் சொன்னேன்!"

"தனியா இருக்கேன், ஆனா வருத்தமா இல்ல!" என்றாள் சினேகா.

"என்னடி சொல்ற?"

"ஆமாண்டி. இந்த ஊடலை நான் எஞ்ஜாய் பண்ணிக்கிட்டுத்தான் இருக்கேன்!"

"எஞ்ஜாய் பண்றியா?"

"ஆமாண்டி. எங்களுக்குள்ள எப்பவுமே பிரிவு வராது. இந்த ஊடல்ங்கறது ஒரு சின்ன இடைவெளி. மறுபடி நாங்க சேரும்போது, முன்னை விட ரொம்ப நெருக்கமா இருப்போம். அதனாலதான், ஊடலை நான் எஞ்ஜாய் பண்றேன்னு சொன்னேன். இன்னிக்குக் கதாகாலட்சேபத்துக்குப் போகணும்னு ஏன் நினைச்சேன் தெரியுமா?" 

"ஏன்?" 

"நேத்திக்கு எங்க அம்மா இந்தக் கதாகாலட்சேபத்துக்குப் போயிட்டு வந்துட்டு கிருஷ்ணருக்கும் சத்தியபாமாவுக்கும் இடையிலே ஏற்பட்ட ஊடலைப் பத்தி இன்னிக்கு சொல்லப் போறார்னு சொன்னாங்க. கடவுள் தம்பதிகிட்ட கூட ஊடல் இருந்திருக்கே! அந்தக் கதையைக் கேட்டுட்டு வரலாம்னுதான் கிளம்பினேன். எப்படி, கதை நல்லா இருந்தது இல்ல?" என்றாள் சினேகா.

"இருந்தது. நீ சொல்ற ஊடல் கதை அதை விட நல்லா இருக்கு. ஊடலுக்குள்ள இவ்வளவு விஷயம் இருக்குன்னு எனக்குத் தெரியாது!" என்றாள் சியாமளா.

"நீயும் காதலிச்சுப் பாரு. அப்ப உனக்குப் புரியும்!" என்றாள் சினேகா, சிரித்துக் கொண்டே.

குறள் 1323
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.

பொருள்:
நிலத்தோடு நீர் பொருந்தி கலந்தாற் போன்ற அன்புடைய காதலரிடத்தில் ஊடுவதை விட இன்பம் தருகின்ற தேவருலகம் இருக்கின்றதோ?

1324. காதுக்குள் ஒரு செய்தி!

"ஒவ்வொரு தடவையும் இப்படித்தான் சொல்லுவ. ஆனா, ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி, உன் காதலனோட சேர்ந்துடுவ!" என்றாள் காவ்யா.

"நிச்சயமா மாட்டேன். இந்தத் தடவை, நான் ரொம்ப உறுதியா இருக்கேன். அவன் என்னை என்ன பேச்சுப் பேசினான்! அத்தனைக்கும் அவன் எங்கிட்ட மன்னிப்புக் கேக்கணும்" என்றாள் லாவண்யா.

"அப்படி மன்னிப்புக் கேக்கலேன்னா?"

"கேப்பான், கண்டிப்பா கேப்பான்."

"கேக்கலேன்னா?" என்றாள் காவ்யா, விடாமல்.

ஒரு நிமிடம் மௌனமா இருந்த லாவண்யா, "கேக்கலேன்னா, அவ்வளவுதான், எங்களுக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு நினைச்சுப்பேன்!" என்றாள்.

"பாக்கலாம்!"

"ஏண்டி, அவ்வளவு வீறாப்பாப் பேசின. ரெண்டு நாளுக்குள்ள காதலனோட சேந்துட்ட! அவன் உங்கிட்ட மன்னிப்பக் கேட்டானா?" என்றாள் காவ்யா.

"காதலர்களுக்குள்ள மன்னிப்பு எல்லாம் எதுக்கு?" என்றாள் லாவண்யா.

"அப்படிப் போடு அருவாளை! அதான் நான் அன்னிக்கே சொன்னேனே!" என்றாள் காவ்யா, கேலியாகச் சிரித்தபடி.

சில விநாடிகள் மௌனமாக இருந்த லாவண்யா, "ரொம்ப உறுதியாத்தான் இருந்தேன். ஆனா என்னவோ தெரியல, என்னை அறியாமலேயே இறங்கி வந்துட்டேன்!" என்றாள்.

"வந்துதானே ஆகணும்?"

"ஏன் அப்படிச் சொல்ற?"

"எல்லாம் அனுபவம்தான். காதல்ல நான் உனக்கு சீனியராச்சே! ஊடல் ரொம்ப வலுவானதுதான். ஆனா, அதை முறியடிக்கிற ஆயுதம் அந்த ஊடலுக்குள்ளேயே ஒளிஞ்சிருக்கு!"

"அது என்ன ஆயுதம்?" என்றாள் லாவண்யா.

"பக்கத்தில வா! நாம பேசறது வேற யாருக்கும் கேட்டுடக் கூடாது" என்று லாவண்யாவை அருகில் அழைத்த காவ்யா, "ஊடலின்போது காதலனை நினைக்கலாம், தூரத்திலேந்தோ, ஏன், பக்கதிலேந்தோ கூடப் பாக்கலாம், அவன் பேசறதைக் கேக்கலாம், ஏன், அவன்கிட்ட மறைமுகமாப் பேசக் கூடச் செய்யலாம். ஆனா, அவனோட நெருக்கமா இருக்க முடியாது. அந்த நெருக்கத்தைப் பறிக்கிற ஊடலிலேயே, அந்த ஊடலை உடைச்சு மறுபடி நெருக்கத்தை உண்டாக்கிற ஆயுதம் இருக்கு. அந்த ஆயுதம்தான் உன்னை இறங்கி வந்து உன் காதலனோட சேர வச்சிருக்கு!" என்றாள் மெல்லிய குரலில்.

குறள் 1324
புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை.

பொருள்:
என்னவரைத் தழுவிக் கொண்டு விடாமல் இருப்பதற்குக் காரணமாகிய ஊடலில் அதற்கு மேலே சென்று என் உறுதியையும் உடைக்கும் ஆயுதம் இருக்கிறது.

1325. அழுதுகொண்டே சிரிக்கின்றேன்!

"அவ மேல எவ்வளவு அன்பு வச்சிருக்கேன்! காரணமே இல்லாம என் மேல கோவிச்சுக்கிட்டு, எங்கிட்ட பேச மாட்டேன்னுட்டாடா!" என்றான் சுரேன்.

"இந்தப் பெண்களே இப்படித்தான். என் வீட்டில அடிக்கடி நடக்கறதுதான் இது!" என்றான் அவன் நண்பன் மாறன்.

"டேய்! நீ சொல்றது வேற, நான் சொல்றது வேற. நீ அப்பா அம்மா பாத்து நிச்சயம் பண்ணின பொண்ணைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டவன். உனக்குக் காதலைப் பத்தி என்ன தெரியும்?"

"ஆமாம், ஆமாம். என் பிரச்னை வேற, உன் பிரச்னை வேற. காதலி சண்டை போட்டுக்கிட்டுப் பேசாம இருந்தா, நீ ரெண்டு நாள் நிம்மதியா இருக்கலாம். ஆனா, என் மனைவி சண்டை போட்டுக்கிட்டு எங்கிட பேசாம இருந்தாலும், நான் அவளோட அதே வீட்டிலதானே இருக்கணும்! அந்தக் கொடுமையெல்லாம் கல்யாணம் ஆன அப்புறம்தான் உனக்குத் தெரியும்!" என்றான் மாறன்.

"ஏண்டா, காதலி சண்டை போட்டுக்கிட்டு உன்னோட பேசாம இருந்தா, ரெண்டு நாள் நிம்மதியா இருக்கலாம்னு நான் ஒரு பேச்சுக்குச் சொன்னேன். நீ நிஜமாகவே அப்படித்தான் இருக்க போலருக்கு. அவ்வளவுதான் உன் காதலா?" என்றான் மாறன்.

"ரெண்டு மூணு நாளா அவகிட்ட பேசாம இருக்கறது மனசை உறுத்திக்கிட்டேதான் இருக்கு. ஆனா, அதையும் மீறி, அவளைப் பாக்காம, அவளோட பேசாம இருக்கறதில ஒரு இன்பம் இருக்கத்தான் செய்யுது!" என்றான் சுரேன்.

"அது எப்படிடா? அவளை விட்டுப் பிரிஞ்சிருக்கறது மனசுக்கு உறுத்தலா இருக்குங்கற, அதில ஒரு இன்பமும் இருக்குங்கற! இது என்ன அழுது கொண்டே சிரிக்கின்றேன் மாதிரியா?"

"நீதான் கல்யாணம் ஆனவனாச்சே! உனக்கு இந்த அனுபவம் வந்திருக்கணுமே!"

"நீதான் சொல்லிட்டியே, காதல் வேற, அப்பா அம்மா நிச்சயம் பண்ணின பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கறது வேறன்னு! அப்படி இருக்கும்போது, உனக்குக் கிடைச்ச அனுபவம் எனக்கு எப்படிக் கிடைக்கும்?"

"அது சரிதான். உங்களுக்குள்ள சண்டை வந்தா, சண்டை முடிஞ்சு மனைவி மறுபடியும் பேச ஆரம்பிச்சுடுவாளேன்னு கவலைப்படற ஆளு நீ!"

"சார் எப்படி? உன்னைப் பாத்தா, சண்டை முடிஞ்சு காதலி எப்ப பேசுவாங்கற எதிர்பார்ப்போட இருக்கற ஆளு மாதிரி தெரியலியே! நீதான் பிரிவில இன்பம் இருக்குன்னு சொல்றியே!"

சுரேன் ஒரு நிமிடம் கண்களை மூடிக் கொண்டான்.

"ஏண்டா கண்ணை மூடிக்கற? புத்தர் மாதிரி ஞானியாக முடியுமான்னு பாக்கறியா?"

"இல்லை. என் காதலியோட நான் சேர்ந்து இருந்தப்ப இருந்த சந்தோஷத்தை ஒரு நிமிஷம் கண்ணை மூடிக்கிட்டு நினைச்சுப் பார்த்தேன்!"

"அப்ப, அந்த சந்தோஷம் இப்ப இல்லையேங்கற வருத்தம்தானே இருக்கணும்?" என்று சுரேனை மடக்கினான் மாறன்.

"இருக்கு. அதோட நாங்க மறுபடி ஒண்ணு சேரும்போது, அதே சந்தோஷம் மறுபடியும் கிடைக்குமேங்கற எதிர்பார்ப்பும் இருக்கு. இந்த எதிர்பார்ப்புதான் எனக்கு ஒரு இனம் தெரியாத இன்பத்தைக் கொடுக்குதுன்னு நினைக்கறேன். பரவாயில்லை. என் மேல தப்பு இல்லாம இந்தப் பிரிவு ஏற்பட்டாலும், அதில ஒரு இன்பம் இருக்கறது நல்ல விஷயம்தானே!" என்றான் சுரேன்.

"அப்ப சரி. சிரிச்சுக்கிட்டே அழு, இல்லை அழுதுகிட்டே சிரி!" என்றான் மாறன், சலிப்புடன்.

குறள் 1325
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து.

பொருள்:
தன் மேல் தவறு இல்லாதபோதும் ஊடலுக்கு ஆளாகித் தாம் விரும்பும் மகளிரின் மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும் போது ஓர் இன்பம் உள்ளது.

1326. மீண்டும் ஊடல்?

லதாவும் அவள் காதலன் தினேஷும், அதிக நடமாட்டம் இல்லாத அந்தச் சாலையில் நடந்து கொண்டிருந்தார்கள்.

"சாரி" என்றான் தினேஷ்.

"எதுக்கு?" என்றாள் லதா.

"உன்னோட சண்டை போட்டுக்கிட்டு, நாலு நாள் பேசாம இருந்ததுக்கு"

"நானும்தான் சாரி கேக்கணும்."

"என்னைப் பாக்காத இந்த நாலு நாளும் உனக்குக் கஷ்டமா இருந்ததா?"

லதா கொஞ்சம் யோசித்து விட்டு, "உண்மையைச் சொல்லட்டுமா?" என்றாள்.

"சொல்லு!"

"முதல் நாள் கொஞ்சம் கஷ்டமா இருந்தது. ஆனா, அதுக்கப்புறம் சந்தோஷமா இருந்தது!"

"என்னைப் பிரிஞ்சு இருந்தது உனக்கு சந்தோஷமா இருந்ததா?" என்றான் தினேஷ், சற்றுக் கோபத்துடன்.

"பாத்தியா, கோவிச்சுக்கறியே! அதுக்குத்தான் முதல்லேயே உண்மையைச் சொல்லட்டுமான்னு கேட்டேன்!" என்றாள் லதா.

"என்னைப் பிரிஞ்சு இருந்தது சந்தோஷமா இருந்ததுன்னு நீதானே சொன்னே?"

"சந்தோஷமா இருந்ததுன்னு சொன்னேன். உன்னைப் பிரிஞ்சு இருந்ததாலன்னு சொல்லல. தனியா இருந்தப்ப, நாம சேர்ந்து இருந்தப்ப கிடைச்ச சந்தோஷத்தை நினைச்சுப்பேன். அந்த நினைவே சந்தோஷமா இருக்கும். அதைத்தான் சொன்னேன்."

"எனக்குப் புரியல!"

சற்றுத் தொலைவில் படுத்திருந்த ஒரு மாட்டைக் கட்டிய லதா, "அந்த மாடு என்ன செய்யுது?" என்றாள்.

"அசை போடுது!"

"அதாவது, கொஞ்ச நேரம் முன்னே சாப்பிட்டதை, இப்ப வாய்க்குக் கொண்டு வந்து, மறுபடி அதை ரசிச்சு சாப்பிடுது. அது மாதிரிதான், நாம சேர்ந்து இருந்தப்ப கிடைச்ச சந்தோஷத்தை, பிரிஞ்சு இருந்தபோது அசை போட்டபோது, சந்தோஷமா இருந்ததுன்னு சொன்னேன். இதைப் புரிஞ்சுக்காம..." என்றாள் லதா, சற்றே கோபத்துடன்.

"சாரி லதா. இப்பதான் எனக்குப் புரியுது.  நாம ருசியா எதையாவது சாப்பிட்டா, சாப்பிட்டுக் கொஞ்ச நேரம் கழிச்சுக் கூட அந்த ருசி நாக்கில இருக்கும். அது மாதிரிதானே!"

"அப்பா! இப்பவாவது புரிஞ்சுதே! தெரியாத்தனமா, என் மனசில தோணினதை உங்கிட்ட சொல்லிட்டு, நீ அதைத் தப்பாப் புரிஞ்சுக்கிட்டு, மறுபடியும் நமக்குள்ள சண்டை வந்துடுமோன்னு பயந்துட்டேன்!" என்றாள் லதா.

"வந்தா என்ன? அப்பவும் உன்னால சந்தோஷமா இருக்க முடியுமே! இந்த டெக்னிக்கை உங்கிட்டேந்து கத்துக்கிட்டதால, நானும் சந்தோஷமா இருக்க முடியும்" என்றான் தினேஷ்.

"அப்ப, மறுபடி சண்டை போட்டுக்கலாமா?" என்றாள் லதா.

இருவரும் சிரித்தனர்.

குறள் 1326
உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.

பொருள்:
உண்பதை விட, முன் உண்ட உணவு செரிப்பது இன்பமானது. அதுபோல், காமத்தில் கூடுவதைவிட ஊடுதல் இன்பமானது.

1327. வென்றவர் யார்?

"நான் இதை எதிர்பாக்கல!" என்றான் பாஸ்கர்.

"எதை எதிர்பாக்கல?" என்றாள் கவிதா.

"நீ உன்னோட தப்புக்கு மன்னிப்புக் கேட்டு, நம் ஊடலை முடிச்சு வப்பேன்னு!"

"ஏன் எதிர்பாக்கல?"

"நீ ரொம்பப் பிடிவாதக்காரியாச்சே! ஒரு சின்ன விவாதத்தில கூட, உன்னோட நிலையை மாத்திக்க மாட்டியே, அப்படி இருக்கறப்ப, எப்படி இறங்கி வந்தே?"

"யாராவது ஒத்தர் இறங்கி வந்துதானே ஆகணும்? அதோட, என் மேலயும் தப்பு இருக்குனு தோணிச்சு. அதை ஒத்துக்கிட்டு மன்னிப்புக் கேக்கறதில எனக்கு என்ன தயக்கம்? அதுவும், நீங்க என் கணவர். உங்ககிட்ட மன்னிப்புக் கேக்கறதில, எனக்கு என்ன தயக்கம் இருக்க முடியும்?"

என்ன சொல்வதென்று தெரியாமல், மனைவியை இறுக அணைத்துக் கொண்டான் பாஸ்கர்.

"நான் தப்புக் கணக்குப் போட்டுட்டேன்!" என்றான் பாஸ்கர்.

"என்ன தப்புக் கணக்குப் போட்டீங்க?"

"நாம சண்டை போட்டுடுக்கிட்டுப் பேசாம இருந்தப்ப, நீ இறங்கி வந்து எங்கிட்ட மன்னிப்புக் கேட்டதும், நான் ஜெயிச்சுட்டதா நினைச்சேன்!"

"அது சரிதானே? நான்தானே மன்னிப்புக் கேட்டேன்! அப்படின்னா, ஜெயிச்சது நீங்கதானே?"

"இந்த ஒரு வாரமா, நம்ம நெருக்கம் முன்னை விட அதிகமா இருக்கறதைப் பாக்கறப்ப, நீதான் ஜெயிச்சேன்னு தோணுது!"

"அது எப்படிங்க? மன்னிப்புக் கேட்டவங்கதானே தோத்தவங்க?"

"அது பொதுவான விதியா இருக்கலாம். ஆனா, காதலைப் பொருத்தவரையிலும், ஊடலை யாரு முடிச்சு வக்கறாங்களோ, அவங்கதான் ஜெயிச்சவங்கன்னு இப்ப எனக்குப் புரியுது. அதனால, ஊடல்ல தோக்கறவங்க காதல்ல வெற்றி பெற்றவங்களா ஆறாங்க. அதனால, நீதான் வெற்றி நாயகி!" என்றான் பாஸ்கர். 

கவிதா பெருமையுடன் கணவனைப் பார்த்தாள்.

குறள் 1327
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்.

பொருள்:
ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த உண்மை, ஊடல் முடிந்த பின் கூடி மகிழும் நிலையில் உணரப்படும்.

1328. அந்த ஒரு நாள் ஆனந்தத் திருநாள்!

சுமனுக்கு உடற்பயிற்சி செய்யும் பழக்கம் உண்டு. கர்லாக் கட்டையைத் தூக்கிச் சுழற்றுவது போன்ற கடுமையான உடற்பயிற்சிகளையும் அவன் செய்வான்.

ஒருநாள், சுமன் உடற்பயிற்சி செய்து முடித்தபோது, அங்கே வந்த அவன் மனைவி நிஷா, "என்ன இது நெத்தியில இவ்வளவு வியர்வை வழியுது! துடைச்சுக்க மாட்டீங்களா?" என்றபடி, ஒரு துண்டால் அவன் நெற்றியைத் துடைத்தாள்.

"இப்பதான் செஞ்சு முடிச்சேன்" என்றான் சுமன்.

"பொதுவாகவே, உங்களுக்கு வியர்வையை அப்பப்ப துடைச்சுக்கற பழக்கம் கிடையாது!"

சுமன் மனைவியின் முகத்தை உற்றுப் பார்த்தான்.

"என்ன அப்படிப் பாக்கறீங்க?"

"அன்னிக்கு ஒருநாள் ராத்திரி என் நெத்தியில இருந்த வியர்வையைத் துடைச்சுட்டு, 'என்ன இது? ஏசி ஓடிக்கிட்டிருக்கறப்ப கூட உங்களுக்கு இப்படி வியர்க்குது? இதுதான் நெத்தி வேர்வை சிந்த உழைக்கறதுங்கறதா?'ன்னு நீ என்னைக் கேலி செஞ்சியே ஞாபகம் இருக்கா?"

"அதுக்கென்ன இப்ப?" என்றாள் நிஷா, வெட்கத்துடன்.

"அன்னிக்கு நான் அவ்வளவு சந்தோஷமா இருந்ததுக்குக் காரணம் என்ன தெரியுமா?"

"என்ன காரணம்?"

"அதுக்கு முன்னால நாம  சண்டை போட்டுக்கிட்டு, அன்னிக்குத்தான் ஒண்ணு சேர்ந்தோம்."

"சரி. அதுக்கென்ன இப்ப?"

"இல்லை, மறுபடி அந்த மாதிரி வியர்த்துப் போற அளவுக்கு ஆகி சந்தோஷம் கிடைக்கணும்னா, மறுபடி நாம சண்டை போட்டுப் பிரிஞ்சுட்டு, அப்புறம் ஒண்ணு சேர்ந்தா நல்லா இருக்குமேன்னு ஏக்கமா இருக்கு!" என்றான் சுமன்.

"மறுபடி எங்கிட்ட சண்டை போட்டீங்கன்னா, நீங்க கையில வச்சுக்கிட்டு சுத்தறீங்களே, இந்த கர்லாக்கட்டையாலேயே உங்க தலையில போட்டுடுவேன்!" என்றபடி, தன் உள்ளங்கையால் அவன் தலையைத் தட்டினாள் நிஷா.

குறள் 1328
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.

பொருள்:
நெற்றி வியர்க்கும்படி கலவியில் தோன்றும் சுகத்தை இன்னுமொரு முறை இவளுடன் ஊடிப் பெறுவோமா?

1329. சந்திரனின் விருப்பம்!

சந்திரன் கண் விழித்தபோது, மணி பகல் பதினொன்று ஆகி விட்டது. 

படுக்கையிலிருந்து எழுந்து அவன் சமையலறைக்குள் சென்றபோது, குமாரி சமையல் செய்து கொண்டிருந்தாள்.

சந்திரனைப் பார்த்ததும், "சாருக்கு காப்பியா, பிரேக்ஃபாஸ்டா, லஞ்ச்சா, இல்லை பிரஞ்ச்சா?" என்றாள் குமாரி, கேலியாக.

"நீ எல்லாத்தையும் சேர்த்துக் கொடுத்தாலும், சாப்பிட்டுடுவேன். அவ்வளவு அலுப்பா இருக்கு உடம்பு!"

"ஏன் இருக்காது, ராத்திரி கொஞ்சமா ஆட்டம் போட்டீங்க, நாலு மணி வரையிலேயும் தூங்காம?"

"மேடம், நீங்க பிடிச்ச பிடிவாத்தினாலதானே, நான் அவ்வளவு நேரம் கண் முழிச்சு, உங்களை சமாதானப்படுத்த வேண்டி இருந்தது?"

"பொண்டாட்டி கோவிச்சுக்கிட்டா, 'சரிதான் போடி'ன்னுட்டுப் போக வேண்டியதுதானே? எதுக்கு ராத்திரி முழுக்க கண் முழிச்சு, அவளைக் கெஞ்சணும், சமாதானப்படுத்தனும்?"

"ஒருவேளை நான் உன்கிட்ட கோவிச்சுக்கிட்டா - அப்படி நடக்காது, ஒருவேளை நடந்தா - நீ வேணும்னா, 'சரிதான் போடா'ன்னுட்டுப் போகலாம். நான் அப்படிப் போக மாட்டேன்" என்றபடி, குமாரியை அணைத்துக் கொள்ளப் போனான் சந்திரன்.

"விடுங்க. இது சமையலறை" என்றபடியே, அவன் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட குமாரி, "சாரி. ராத்திரி ஏதோ அப்படிக் கோபமா நடந்துக்கிட்டேன். இனிமே அப்படி நடந்துக்க மாட்டேன்!" என்றாள், கனிவான குரலில்.

"ஐயையோ! இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடறியே! நேத்திக்கு நடந்ததை அனுபவிச்ச சந்தோஷத்தில, இனிமே நீ தினமும் ராத்திரி என்னோட சண்டை போடணும், ராத்திரி முழுக்க நான் உன்னை சமாதானப்படுத்தணும், அதுக்கு வசதியா, ராத்திரி நேரம் இன்னும் அதிகமாகணும்னுல்ல நான் எதிர்பார்த்துக்கிட்டிருக்கேன்? ஏன்னா, அதில கிடைக்கிற சந்தோஷத்துக்கு இணையே இல்லையே!" என்று சந்திரன் சொன்னபோது, அவன் உண்மையாகச் சொல்கிறானா, இல்லை தன்னைக் கேலி செய்கிறானா என்று புரியாமல், பொய்க் கோபத்துடன் அவனை முறைத்துப் பார்த்தாள் குமாரி.

குறள் 1329
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா.

பொருள்:
ஒளி முகத்தழகி ஊடல் புரிவாளாக; அந்த ஊடலைத் தீர்க்கும் பொருட்டு, நான் அவளிடம் இரந்து நிற்கும் இன்பத்தைப் பெறுவதற்கும், இராப்பொழுது இன்னும் நீடிப்பதாக.

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும், அவர் மனைவி பிரேமாவும் வசித்து வந்தனர்.

நாகராஜன் பிரேமா தம்பதி 60 வயதுக்கு மேலானவர்கள். அவர்களுடைய இரண்டு மகன்களும், ஒரு மகளும் வெளிநாடுகளில் வசித்து வந்தனர்.

மதனும், திவ்யாவும் அந்த வீட்டுக்குக் குடி வந்து ஒரு வாரம்தான் ஆகியிருக்கும். கீழ் வீட்டிலிருந்து, நாகராஜனும், பிரேமாவும் உரத்த குரலில் வாக்குவாதம் செய்து கொள்வது கேட்டது.

"இப்படியா எல்லாருக்கும் கேக்கும்படியா சண்டை போடுவாங்க?" என்றாள் திவ்யா.

"இந்த வயசில, இவங்களுக்குள்ள எதுக்கு இவ்வளவு பெரிசா சத்தம் போட்டுக்கற அளவுக்கு சண்டை வரணும்?" என்றான் மதன்.

சற்று நேரத்தில் வாக்குவாதம் முடிந்து விட்டது போல் தோன்றியது.

ஆனால். பத்து நாட்களுக்குப் பிறகு, மீண்டும் ஒரு வாக்குவாதம் நிகழ்ந்தது. அவர்கள் பேசிக் கொண்டதில் சில வார்த்தைகள் இவர்கள் காதுகளில் விழுந்தன.

"கல்யாணம் ஆகி இவ்வளவு நாள்ள, என்னிக்கு நீ என் பேச்சைக் கேட்டிருக்க?" என்றார் நாகராஜன்.

"சும்மா சொல்லாதீங்க. இவ்வளவு வருஷமா, நான் உங்க பேச்சைத்தான் கேட்டுக்கிட்டிருக்கேன். ஒரு மாறுதலுக்கு, இப்ப என் பேச்சை நீங்க கேளுங்க!" என்றாள் பிரேமா.

"என்ன இந்தப் பெரிசுங்க இப்படி சண்டை போடுதுங்க?" என்றாள் திவ்யா.

"நல்லவேளை, நாம இவங்க மாதிரி இல்ல!" என்றான் மதன்.

ஆனால், மதன் கூறியது தவறு என்று சில மாதங்களில் நிரூபணமாகியது.

ஒருநாள் காலையில், மதனுக்கும் திவ்யாவுக்கும் இடையே ஒரு வாக்குவாதம் ஏற்பட்டு, மதன் கோபித்துக் கொண்டு, காலை உணவு உண்ணாமலும், மதிய உணவை எடுத்துக் கொள்ளாமலும் அலுவலகத்துக்குச் சென்று விட்டான்.

அன்று பிற்பகல், பிரேமா மாடி ஏறி திவ்யாவின் வீட்டுக்கு வந்தாள்.

"என்ன திவ்யா, எப்படி இருக்க?" என்றாள் பிரேமா.

"வாங்கம்மா. உக்காருங்க!" என்றாள் திவ்யா.

"என்ன, அழுதிருக்க போலிருக்கே! புருஷன்காரன் சண்டை போட்டுட்டு, உங்கிட்ட கோவிச்சுக்கிட்டு, சாப்பிடாம, சாப்பாடு எடுத்துக்காம போனா வருத்தமாத்தான் இருக்கும்!"

"அதெல்லாம் ஒண்ணும் இல்லையே!" என்றாள் திவ்யா.

"நீங்க காலையில சண்டை போட்டுக்கிட்டது எனக்குக் கேட்டது. எங்களை மாதிரி நீங்க இரைஞ்சு பேசி சண்டை போட்டுக்காட்டாலும், நீங்க பேசிக்கிட்டது கொஞ்சம் கொஞ்சம் என் காதில விழுந்தது. எப்பவும் கையில லஞ்ச் பாக்சோட ஆஃபீசுக்குப் போற உன் புருஷன், இன்னிக்கு அது இல்லாம போனதையும் கவனிச்சேன்!"

பிரேமா இதைச் சொல்லி முடிப்பதற்குள், திவ்யா அவள் கைகளைப் பற்றிக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள். "சின்ன விஷயம்தான் ஆன்ட்டி. அதுக்காக என்மேல கோவிச்சுக்கிட்டு, டிஃபனும் சாப்பிடாம, லஞ்ச்சும் எடுத்துக்காம போயிட்டாரு!" என்றாள் திவ்யா அழுகையினூடே.

"திருமண வாழ்க்கையில, கணவன் மனைவிக்குள்ள இது மாதிரி சண்டை வரது இயல்பானதுதான். நாங்க அடிக்கடி சண்டை போட்டுக்கறதை நியாயப்படுத்தறதுக்காக இதைச் சொல்லல. நீ நினைச்சுப் பாத்தா, உங்க அப்பா அம்மா சண்டை போட்டுக்கிட்ட சம்பவங்கள் உனக்கு ஞாபகம் வரும். கணவன் மனைவிக்குள்ள சண்டை வரது நல்லது. ஏன் தெரியுமா?" என்றாள் பிரேமா.

"ஏன் ஆன்ட்டி?"

"சண்டை வந்தாதான், அன்பு அதிகமாகும். நான் சொல்றது உனக்கு வேடிக்கையா இருக்கலாம். ஆனா, கொஞ்ச நாள்ள நீயே புரிஞ்சுப்ப. ஏன், இன்னிக்கு சாயந்திரம் உன் புருஷன் வீட்டுக்கு வந்தப்புறம் கூட இதை நீ புரிஞ்சுக்கலாம்! அதுக்கப்பறம், 'சண்டை வந்தா நல்லதுதானே, அப்புறம் அன்பு அதிகமாகுமே!'ன்னு உனக்குத் தோணும். நாங்க விரும்பினா, சண்டை போட்டுக்காம இருக்க முடியும். ஆனா, சின்னச் சின்ன சண்டைக்கு அப்புறம், அன்பு அதிகமாகிறதைப் பாத்துத்தான், நாங்க சண்டையைத் தவிர்க்கறது இல்ல!"

அன்று மாலை, மதன் அலுவலகத்திலிருந்து வந்தபோது, திவ்யாவுக்குப் பிடித்த முந்திரி பர்பி வாங்கிக் கொண்டு வந்தான். "ஒரு கடையிலதான் இது ரொம்ப நல்லா இருக்கும். அது ரொம்ப தூரம். ஆஃபீஸ் முடிஞ்சதும், அங்கே போய் வாங்கிக்கிட்டு வந்தேன்- உனக்காகத்தான்!" என்றான் மதன்.

அன்று இரவு, திவ்யா மதனின் அணைப்பில் இருந்தபோது, ஊடலுக்குப் பின் வந்த அந்த அணைப்பில் அவளுக்கு ஒரு கூடுதல் சுகம் தெரிந்தது. 

பிரேமா ஆன்ட்டி சொன்னது சரிதான் என்று நினைத்துக் கொண்டாள் திவ்யா.

குறள் 1330
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.

பொருள்:
காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல் முடிந்த பின், கூடித் தழுவப் பெற்றால், அது அந்த ஊடலுக்கு இன்பமாகும்.
பொருட்பால் நிறைவடைந்தது
அறத்துப்பால்                                                         பொருட்பால்   

No comments:

Post a Comment

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...