காமத்துப்பால்
கற்பியல்
1291. உன்னைச் சொல்லிக் குற்றமில்லை!
இன்று மூன்றாவது நாள்.சவிதா பூங்காவுக்கு வந்து ஒரு மணி நேரம் காத்திருந்ததுதான் மிச்சம். பாலன் இன்றும் வரவில்லை.
இத்தனைக்கும் இந்த மூன்று நாட்களிலுமே, அவன் அலுவலகத்துக்கு ஃபோன் செய்து, மாலை 6 மணிக்குப் பூங்காவில் சந்திக்கலாம் என்று சொல்லி விட்டுத்தான் அவள் வந்து காத்திருந்தாள்.
முதல்நாள் காத்திருந்து, ஏமாற்றமடைந்து வீட்டுக்குத் திரும்பினாள். அடுத்த நாள், பாலனிடமிருந்து ஃபோன் வரும் என்று மதியம் வரை எதிர்பார்த்துக் காத்திருந்து விட்டுப் பிற்பகலில் அவன் அலுவலகத்துக்கு ஃபோன் செய்தாள்.
"ஓ, சாரி! நேத்து ஆஃபீஸ்லேந்து கிளம்ப லேட் ஆயிடுச்சு. அதான் வர முடியல" என்றான் பாலன்.
"அது சரி. இன்னிக்குக் காலையிலேயே எனக்கு ஃபோன் செஞ்சு சொல்லி இருக்க வேண்டாமா? காலையிலேந்து உங்ககிட்டேந்து ஃபோன் வரும்னு காத்துக்கிட்டே இருந்தேன்" என்றாள் சவிதா.
"சாரி, மறந்துட்டேன்!" என்றான் பாலன், சாதாரணமாக.
'மறந்துட்டேன்னு எப்படி சாதாரணமா சொல்றாரு!' என்று மனதில் எழுந்த கோபத்தை அடக்கிக் கொண்ட சவிதா, "சரி. அப்ப இன்னிக்கு?" என்றாள்.
அலுவலகத் தொலைபேசியைப் பயன்படுத்தியதால், தான் பேசுவதை யாராவது கேட்டு விடுவார்களோ என்ற அச்சத்துடனேயே அவள் பேச வேண்டி இருந்தது.
"இன்னிக்குக் கண்டிப்பாப் பாக்கலாம். அதே இடம், அதே டைம்!" என்றான் பாலன்.
ஆனால் அன்றும் அவன் வரவில்லை.
அடுத்த நாள் காலை, அவனே ஃபோன் செய்து, "சாரி. நேத்திக்கு அம்மாவை டாக்டர்கிட்ட அழைச்சுக்கிட்டுப் போறதா சொல்லி இருந்தேன். அதை மறந்து, உங்கிட்ட வரதா சொல்லிட்டேன். ஆனா, இன்னிக்குக் கண்டிப்பாப் பாக்கலாம்" என்று சொல்லி, அவள் வேறு ஏதாவது கேட்டு விடப் போகிறாளோ என்று அஞ்சியது போல், ஃபோனை வைத்து விட்டான்.
ஆனால், இன்றும் அவன் வரவில்லை. நாளைக்கு ஃபோன் செய்து, ஏதாவது காரணம் சொல்லுவான். நாளை பார்க்கலாம் என்று சொல்லுவான். அவளும் முட்டாளைப் போல், நாளை போய்க் காத்திருப்பாள்!
அன்று இரவு வீட்டுக்குப் போன பிறகும், அவன் நினைவாகவே இருந்தாள் சவிதா.
திடீரென்று அவளுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. 'நான் எப்போதும் அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறேனே, அதுபோல், அவரும் என்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பாரா?'
தூரத்திலிருந்து, ஒரு பாடல் வரி காற்றில் மிதந்து வந்து அவள் காதில் ஒலித்தது.
'இந்த நேரம் அந்த நெஞ்சில் என்ன நினைவோ?'
சவிதாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது போல் இருந்தது.
'நான் என் காதலனையே நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், அவர் என்னைப் பற்றி நினைப்பதே இல்லை, போலும்! அதனால்தான், எனக்கு இத்தனை ஏமாற்றங்கள் நிகழ்கின்றன.'
'இந்த நேரம் அந்த நெஞ்சில் என்ன நினைவோ?' என்ற வரி மீண்டும் அவளைத் தாக்கியது.
'அவருக்கு என்னைப் பற்றிய எண்ணம் இல்லாதபோது, நான் மட்டும் அவரை நினைத்துக் கொண்டிருக்கிறேனென்றால், அதற்குக் காரணம் என்ன?
'என் நெஞ்சுதான்!
'அவர் நெஞ்சு அவரைப் பற்றித்தான் நினைக்கிறது. ஆனால், என் நெஞ்சு என்னைப் பற்றி நினைக்காமல், அவரைப் பற்றி நினைக்கிறது!
'இந்த நிலையில், நான் அடையும் ஏமாற்றங்களுக்கு அவரைக் குற்றம் சொல்லி என்ன பயன்?'
"எனக்கு அவனைப் பிடிச்சிருக்கு!" என்றாள் ரூபா, சுருக்கமாக.
'ஆனா அவனுக்கு உன்னைப் பிடிச்ச மாதிரி தெரியலையே!' என்று சொல்ல நினைத்த மஞ்சுளா, தன் தோழியின் மனம் புண்படுமோ என்று நினைத்து, மௌனமாக இருந்தாள்.
"நேத்திக்கு சாயந்திரம் எங்கே போயிருந்தே? ஃபோன் பண்ணினேன். எடுக்கவே இல்லையே!" என்றாள் ரூபா.
"ஒரு பர்த்டே பார்ட்டிக்குப் போயிருந்தேன்!" என்றாள் மஞ்சுளா.
"யாரோட பர்த்டே பார்ட்டி?"
மஞ்சுளா சற்றுத் தயங்கி விட்டு, "சாரிடி. பிரகாஷோட பர்த்டே பார்ட்டிதான். நம்ம கிளாஸ்ல சில பேரைத்தான் அவன் கூப்பிட்டிருந்தான் போல இருக்கு. உன்னை அவன் கூப்பிட்டானா, இல்லையான்னு எனக்குத் தெரியாது. ஒருவேளை கூப்பிடலேன்னா, நீ வருத்தப்படுவியேன்னுதான் பார்ட்டிக்குப் போறதைப் பத்தி உங்கிட்ட சொல்லல" என்றாள் மஞ்சுளா.
ரூபாவின் முகத்தில் ஒரு கணம் அதிர்ச்சி தெரிந்தது. பிறகு சமாளித்துக் கொண்டவளாக, "அதனால என்ன? எனக்குத் தனியா பார்ட்டி கொடுக்கலாம்னு நினைச்சிருப்பான்!" என்றாள்.
மஞ்சுளா தோழியை வியப்புடன் பார்த்து விட்டுப் பேசாமல் இருந்தாள்.
அன்று இரவு படுக்கச் செல்லும்போது , 'என்னை ஏன் கூப்பிடலேன்னு பிரகாஷ்கிட்ட சண்டை போடத்தான் போறேன். எனக்குத் தனியா பார்ட்டி கொடுக்கணும்னு கேக்கப் போறேன். எப்படி மாட்டேன்னு சொல்றான்னு பாக்கறேன்!' என்று நினைத்துக் கொண்டாள் ரூபா.
"ஏண்டி, முட்டாள்! அவன் உன்னை மதிக்கலேன்னு தெரிஞ்சப்புறம், அவன்கிட்ட பழகி, அவனோட அன்பைப் பெறலாம்னு நினைக்கறியே! இது பைத்தியக்காரத்தனம் இல்லை?"
திடுக்கிட்டுக் கண் விழித்தாள் ரூபா. யார் இப்படிக் கேட்டது?
கண்களைக் கசக்கிக் கொண்டு, முழு விழிப்பு நிலையை அடைந்த பிறகுதான், தான் தூங்கிக் கொண்டிருந்தபோது, தன் நெஞ்சிடம் தான் கேட்ட கேள்விதான் அது என்பது அவளுக்குப் புரிந்தது.
சந்தியா அவன் அலுவலகத்துக்கு ஃபோன் செய்து பேசியபோது, "ஆஃபீசுக்கு ஃபோன் பண்ணாதே!" என்று ஒரே வரியில் பதில் சொல்லி, ஃபோனை வைத்து விட்டான் அரவிந்தன்.
வேறு என்ன செய்வது? அவன் வீட்டு விலாசம் அவளுக்குத் தெரியாது. அவன் அலுவலகத்துக்கு நேரில் சென்று பார்க்கலாமா என்ற யோசனை தோன்றியது. அதை அவன் விரும்ப மாட்டான் என்பதால், அந்த யோசனையைக் கைவிட்டு விட்டாள் சந்தியா.
அரவிந்தனின் நண்பன் முத்துவை அவள் ஒரு முறை தற்செயலாகச் சந்தித்தபோது, மிகுந்த தயக்கத்துக்குப் பிறகு முத்து அவளிடம் சொன்னான்: "சாரி, சந்தியா! நான் அரவிந்தோட நண்பன்தான். ஆனா, உங்க மேல இரக்கப்பட்டு இதைச் சொல்றேன். அவன் இப்ப வேற ஒரு பெண்ணோட பழகிக்கிட்டிருக்கான். இதுக்கு மேல என்னை ஒண்ணும் கேக்காதீங்க!"
சந்தியாவின் தலையில் இடி விழுந்தது போல் இருந்தது. அரவிந்தன் இப்படி ஒரு காரியத்தைச் செய்வான் என்று அவளால் நம்ப முடியவில்லை. ஆனால், கடந்த சில நாட்களாக, அரவிந்தன் அவளிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிப் போய்க் கொண்டிருந்ததை அவள் உணர்ந்து கொண்டுதான் இருந்தாள். இப்போது முத்து சொன்னதை வைத்துப் பார்த்தபோது, எல்லாம் பொருந்திப் போவது போல்தான் தோன்றியது.
'ஏன் இப்படிச் செய்தான்? நான் ஏதாவது தவறு செய்து, அதனால் என் மேல் கோபித்துக் கொண்டு, என்னை விட்டு விலகி விட்டானா? அல்லது அவன் காதலில் உறுதி இல்லாத ஒரு பச்சோந்தியா?'
அவளுக்குப் புரியவில்லை.
அரவிந்தனின் பிரிவுக்குப் பிறகு, சந்தியா வாழ்க்கையை இயந்திரத்தனமாகத்தான் வாழ்ந்து கொண்டிருந்தாள். அவன் அளித்த ஏமாற்றம் அவள் மனதை விடாமல் அழுத்திக் கொண்டேதான் இருந்தது.
இந்தச் சூழ்நிலையில்தான், எதிர்பாராமல், அரவிந்தனிடமிருந்து அவள் அலுவலகத்துக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது.
"சாரி, சந்தியா! நான் தப்புப் பண்ணிட்டேன். ஆனா, நீ என்னை மன்னிச்சுடுவேன்னு நினைக்கறேன். சீக்கிரமே நாம சந்திக்கலாம். ரெண்டு நாள்ள நானே ஃபோன் பண்றேன்" என்றான் அவன்.
சென்ற முறை சுருக்கமாகப் பேசி ஃபோனை வைத்து போல்தான், இந்த முறையும் செய்தான் அரவிந்தன்.
பல நாட்களாகத் தண்ணீர் இல்லாமல் வாடிக் கொண்டிருந்த செடி, தண்ணீர் பட்டதும் சிலிர்ப்பது போல், சந்தியாவின் உள்ளத்தில் உற்சாகம் கரை புரண்டு ஓடியது.
அன்று வீட்டுக்குச் சென்றபோது, அவள் அம்மா கேட்டாள்:
"கொஞ்ச நாளா, எதையோ பறி கொடுத்தவ மாதிரி இருந்தே. என்னன்னு கேட்டப்ப, ஒண்ணுமில்லேன்னுட்ட. ஆஃபீஸ்ல ஏதாவது பிரச்னையா இருக்கும்னு நினைச்சேன். இன்னிக்குத்தான் உன் முகத்தில ஒரு சந்தோஷம் தெரியுது. ஆஃபீஸ்ல இருந்த பிரச்னை தீர்ந்து போச்சா? இல்லை, புரொமோஷன் ஏதாவது கொடுத்திருக்காங்களா?"
"அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா. நான் எப்பவும் ஒரே மாதிரிதான் இருக்கேன்" என்றாள் சந்தியா.
அறையில் வந்து தனியே உட்கார்ந்தபோது, 'பாவம்! அம்மாவை ஏமாற்றுகிறோமே!' என்ற எண்ணம் தோன்றியது.
'அம்மாவை மட்டுமா?' என்ற கேள்வி உடனே எழுந்தது.
'எந்த ஒரு காரணமும் இல்லாமல் திடீர்னு உன்னை அந்த அரவிந்தன் கைவிட்டுட்டான். அதை நினைச்சு, இத்தனை நாளா நெருப்பில விழுந்த புழு மாதிரி துடிச்சுக்கிட்டிருந்த. இப்ப அவன் 'சாரி' ன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டுத் திரும்பக் கூப்பிட்டதும், அவன் பின்னால ஓடத் தயாரா இருக்கியே, அது ஏன்? உனக்கு அவனை விட்டால் வேற, துணை இல்லையா?'
தன் மனதில் எழுந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல், தொலைக்காட்சிப் பெட்டியின் ஒலியைப் பெரிதாக்கி, அதில் கவனம் செலுத்தினாள் சந்தியா.
ஆனால் இந்த முறை, நான்கு நாட்கள் ஆகியும், இருவருக்கும் இடையிலான பிணக்கு தீரவில்லை. சண்டை போட்டுக் கொண்ட அன்று இரவு, பேசி வைத்துக் கொண்டது போல் இருவருமே ஒருவர் மற்றவருக்குக் குறுஞ்செய்தி அனுப்பாமல் வீம்பாக இருந்தனர்.
நான்கு நாட்களாக நிலைமை அப்படியே இருந்து வந்தது. ஷாலினிக்கு இதைப் பற்றி யாரிடம் பேசுவது என்று தெரியவில்லை.
சற்று நேரம் யோசித்த பிறகு, அவளுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. திரைப்படங்களில் கதாநாயகனோ, கதாநாயகியோ, தங்கள் மனச்சாட்சியிடம் பேசுவது போல் காட்சிகள் வரும். அது போல் தானும் செய்து பார்த்தால் என்ன என்று தோன்றியது. அப்படிச் செய்து பார்த்தால். மனதில் ஒரு தெளிவு இருக்கும் என்று நினைத்தாள்.
மனச்சாட்சிக்கு பதிலாகத் தன் மனத்துடன் பேசலாம் என்று தோன்றியது. இரண்டு நாற்காலிகளை எதிரெதிரே போட்டுக் கொண்டாள். ஒன்றில் தான் அமர்ந்து கொண்டு, எதிர் நாற்காலியில், தன் மனம் அமர்ந்து கொண்டிருப்பது போல் கற்பனை செய்து கொண்டு பேச ஆரம்பித்தாள்.
"ஏண்டி, மனமே! எல்லாம் உன்னால்தானே வந்தது? நீதானே அவனை விரும்பின? இப்ப அவனோட சண்டை போட்டுக்கிட்டு, நாலு நாளா நாங்க எங்களுக்குள்ள பேசிக்காம இருக்கோம். இதை எப்படி சரி செய்யறதுன்னு சொல்லு!" என்றாள் ஷாலினி.
மனத்தின் பதிலாக, அவள் மனதில் தோன்றியதை, எதிரில் அமர்ந்திருக்கும் மனம் பேசுவதாக நினைத்துக் கேட்டாள்.
'நானா சண்டை போடச் சொன்னேன்? உன் வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்காம, அவனோட வாதம் பண்ணின. அது சண்டையில போய் முடிஞ்சது. அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?'
"இதுக்கு முன்னால சண்டை போட்டப்பல்லாம், அன்னிக்கு ராத்திரியே 'சாரி'ன்னு' மெசேஜ் அனுப்பி, உடனே சமாதானமாயிட்டமே! ஆனா, இந்தத் தடவை ஏன் அப்படி நடக்கல?"
'எனக்கு எப்படித் தெரியும்?'
"சாரின்னு ஒரு மெசேஜ் அனுப்புன்னு நீதானே உத்தரவு போடணும்?"
'உத்தரவு போட்டேனே! ஆனா, நீதான் அதைக் கேக்கல. நான் சொன்னதை நீ ஏன் கேக்கலேன்னு நீதான் சொல்லணும்?'
"உத்தரவு போட்டியா? அப்ப சரி!" என்று சொல்லிச் சிரித்தாள் ஷாலினி.
'ஏன் சிரிக்கற? 'அப்ப சரி'ன்னா என்ன அர்த்தம்?'
"உனக்குப் புரியாது. காதலர்களுக்குள்ள ஊடல்னு ஒண்ணு இருக்கு. சண்டை போட்டுக்கிட்டுக் கொஞ்ச நாள் பேசாம இருப்போம். அப்புறம் கூடிப்போம். அதில ஒரு தனி இன்பம் இருக்கு. அந்த இன்பத்தை அனுபவிக்கணும்னுட்டுதான், 'சாரி' சொல்லாம அவனோட சண்டையை நீட்டிக்கிட்டிருக்கேன். இது எனக்கே இப்பதான் புரிஞ்சுது - உங்கிட்ட பேசினப்புறம் . போதும். நீ உள்ளே போ' என்றபடி மனம் 'அமர்ந்திருந்த' நாற்காலியை நகர்த்தினாள் ஷாலினி.
"எனக்குக் கூட, இத்தனை நாளா உன் முகத்தைப் பாக்கவே கஷ்டமா இருந்தது. இப்ப உன் முகத்தில இருக்கற மலர்ச்சியைப் பார்த்தப்புறம்தான், எனக்கே மனசு ஆறுதலா இருக்கு!" என்றார் நப்பின்னையின் தந்தை வேலவன்
நப்பின்னை பெற்றோர் பேச்சைக் கேட்டு, சற்றே கூச்சத்துடன் உள்ளே போனாள்.
"அரண்மனையில வேலை செய்யறவனாச்சேன்னு ரொம்பப் பெருமையா பொண்ணைக் கட்டி வச்சேன். ஆனா, வருஷம் முழுக்க அரண்மனையே கதின்னு கிடந்துட்டு, எப்பவாவதுதான் வீட்டுக்கு வருவான்னு அப்ப தெரியல!" என்று வேலவன் மெல்லிய குரலில் தன் மனைவியிடம் கூறியது நப்பின்னையின் காதில் விழவில்லை.
"என்னம்மா! புருஷன் வந்துட்டான். இப்ப சந்தோஷம்தானே?" என்றார் வேலவன், நப்பின்னையைப் பார்த்து.
நப்பின்னை ஏதும் பதில் கூறாமல் உள்ளே சென்று விட்டாள்.
"ஏன் பதில் சொல்லாம போறா? அதோட ஒரு மாதிரியா இருக்காளே, ஏன்?" என்றார் வேலவன், தன் மனைவியிடம்.
"இன்னும் ஒரு வாரத்தில திரும்பிப் போயிடுவார் இல்ல? அதை நினைச்சு, இப்பவே வருத்தப்பட ஆரம்பிச்சுட்டா!" என்றாள் நாகம்மை.
"இது என்ன கூத்தா இருக்கு? இத்தனை நாளா, புருஷன்காரன் வெளியூர்ல இருக்கானேன்னு நினைச்சுக் கவலைப்பட்டுக்கிட்டிருந்தா. இன்னிக்குப் புருஷன் ஊர்லேந்து வந்ததும், அதுக்காக சந்தோஷப்படாம, இன்னும் ஒரு வாரத்தில ஊருக்குப் போயிடுவாரேன்னு கவலைப்படறா!" என்றார் வேலவன்.
"பொம்பளைங்க மனசு அப்படித்தான். நமக்குக் கல்யாணம் ஆன புதுசுல, நீங்க வந்துட்டு வந்துட்டுப் போயிக்கிட்டே இருப்பீங்களே, அப்ப நானும் அப்படித்தான் இருந்தேன். உங்களுக்கெல்லாம் அது எங்கே புரியப் போகுது?" என்றாள் நாகம்மை.
கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த தோழியைப் பார்த்ததும், இருவருக்குமே மனம் பொறுக்கவில்லை.
கயிற்றுக் கட்டிலில் பிணைக்கப்பட்டிருந்த கயிறுகளுடன், இன்னொரு கயிறு போல் படுத்துக் கொண்டிருந்தாள் பரிமளா. உடல் அந்த அளவுக்கு இளைத்திருந்தது.
அறைக்கு வெளியே வந்ததும், பரிமளாவின் தாயிடம், "என்னம்மா இப்படி எலும்பும் தோலுமா ஆயிட்டா?" என்றாள் தமயந்தி.
"என்னத்தைச் சொல்றது? ஏதோ பெயர் தெரியாத வியாதியாம். அது உடம்புக்குள்ள இருந்துக்கிட்டு, அவளையே தின்னுக்கிட்டிருக்காம். சரியாகுமா ஆகாதேன்னே தெரியல. வைத்தியருக்கே பிடிபடல. கடவுள் மேல பாரத்தைப் போட்டுட்டு உக்காந்திருக்கேன்" என்றாள் பரிமளாவின் தாய்.
வெளியில் வந்ததும், "என்னடி இது? வியாதி உள்ளுக்குள்ளே இருந்துக்கிட்டு, மனுஷங்களைத் தின்னுமா என்ன? நான் கேள்விப்பட்டதே இல்லையே!" என்றாள் அகிலா.
"கேள்விப்படறது என்ன? நான் அனுபவிச்சே இருக்கேன்" என்றாள் தமயந்தி.
"அனுபவிச்சிருக்கியா? என்னடி சொல்ற? உனக்கு இது மாதிரி வந்ததா என்ன? எனக்குத் தெரியாதே!" என்றாள் அகிலா, வியப்புடன்.
"என் சொந்தக்காரர் ஒத்தருக்கு இப்படி வந்ததுன்னு எங்கம்மா சொல்லி இருக்காங்க. அதைத்தான் சொன்னேன்!" என்ற தமயந்தி, தன் காதலன் தன்னைப் பிரிந்திருந்த காலத்தில், தன் நெஞ்சு, உள்ளிருந்து கொண்டு தன்னை நாள்தோறும் அணு அணுவாகத் தின்று கொண்டிருந்த அனுபவத்தை நினைத்துப் பார்த்துத் தன்னை அறியாமல் அதை வெளிப்படுத்தி விட்டதற்காகத் தன்னையே உள்ளூரக் கடிந்து கொண்டாள்.
'நல்ல வேளை, எதையோ சொல்லிச் சமாளிச்சுட்டேன். என் நெஞ்சு என்னைத் தின்ன அனுபவத்தை நான் சொன்னா, அதை இவ புரிஞ்சுக்கவா போறா?' என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள் தமயந்தி.
சத்யகீர்த்தியுடன் சென்ற அவன் நண்பன் குணாளன், முந்தைய நாளே ஊர் திரும்பி விட்டான். அவன் கொண்டு வந்த செய்திதான் அது.
சத்யகீர்த்தி மட்டும் அருகிலிருந்த நகரத்தில், தன் நண்பன் வீட்டில் தங்கி விட்டு, சுரஞ்சனிக்கும், மற்றவர்களுக்கும் பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொண்டு, அடுத்த நாள் மாலை ஊருக்குத் திரும்புவான் என்று சுரஞ்சனியின் வீட்டில் வந்து தெரிவித்து விட்டுப் போயிருந்தான் குணாளன்.
கணவனைப் பிரிந்த இத்தனை மாதங்களும் சரியாக உண்ணாமல், உறங்காமல், அலங்காரம் செய்து கொள்ளாமல், பொலிவிழந்து வாழ்ந்து கொண்டிருந்த சுரஞ்சனி, காதலன் வருகிறான் என்றதும், தன்னைச் சிறப்பாக அலங்கரித்துக் கொண்டு தயாராக இருந்தாள்.
மாலை வந்ததும், தன் வீட்டு வாசலில் வந்து நின்றாள் சுரஞ்சனி. தெருவில் பல வீடுகளிலிருந்தும் அவளைப் பார்த்த சிலர் அவளைக் கேலி செய்து பேசத் தொடங்கினர். அவற்றைப் பொருட்படுத்தாமல், தெருமுனையைப் பார்த்தபடியே நின்றாள் சுரஞ்சனி.
தெருமுனையில், சத்யகீர்த்தியின் கம்பீரமான உருவம் தெரிந்தது.
தன் வீட்டு வாசலில் நின்றிருந்த சுரஞ்சனி, வேகமாகத் தெருமுனைக்கு ஓடினாள். காதலன் அருகில் சென்றதும், அவனைக் கட்டித் தழுவிக் கொண்டு, அவன் மார்பில் முகம் புதைத்து, அவன் மார்பைத் தன் கண்ணீரால் நனைத்தாள்.
சத்யகீர்த்தி அவளை ஆதரவுடன் அணைத்தபடி, வீட்டுக்கு அழைத்து வந்தான்.
வீட்டுக்கு வந்ததும், சத்யகீர்த்தி முகம் கழுவிக் கொள்ளப் பின்கட்டுக்குச் சென்றதும், சுரஞ்சனியின் தாய், "ஏண்டி, இப்படியா வெட்கத்தை விட்டு நடந்துப்ப? தெருவில எல்லாரும் பார்த்துக் கேலி பண்றாங்க பாரு! உன் பெண்ணுக்கு வெக்கம் இல்லையான்னு எங்கிட்ட கேப்பாங்க. அவங்களுக்கு நான் என்ன பதில் சொல்றது?" என்று தன் மகளைக் கடிந்து கொண்டாள்.
தலையைக் குனிந்து தன் நெஞ்சைப் பார்த்த சுரஞ்சனி, "ஏ, நெஞ்சே! அம்மா கேக்கறாங்க பாரு. பதில் சொல்லு. உன்னோட சேர்ந்து, நானும் இல்ல வெக்கம் இல்லாம நடந்துக்கிட்டேன்?' என்றாள்.
சுரஞ்சனி தன் செய்கையை நினைத்து வெட்கப்பட்டுத் தலையைக் குனிந்து கொண்டதாக நினைத்த அவள் தாய், "சரி, பரவாயில்ல. விடு" என்றாள்.
"இதை யார் சொன்னது? அலறி அடிச்சுக்கிட்டு ஓடிப் போன எதிரிகள் யாராவது சொன்னாங்களா?"
"என்ன கேலியா? அவர் மார்பில இருந்த விழுப்புண்களைப் பாத்திருக்க இல்ல?"
"பாத்திருக்கேன். நான் பாக்காம, வேற யார் பாப்பாங்க? ஆனா, எதிரிங்கள்ளாம் பயந்து ஓடினாங்கன்னு சொல்ற. அப்ப, அவரைக் காயப்படுத்தினது யாரு? ஒருவேளை, தன்னோட வாளால தவறுதலாத் தன்னையே குத்திக்கிட்டாரோ?"
"அதை விடு. அவருடைய குணங்களைப் பத்திப் பேசுவோமா? அவர் எவ்வளவு கருணை உள்ளவர் தெரியுமா?"
'அந்தக் கருணையை இந்தக் காதலிகிட்டேயும் கொஞ்சம் காட்டி இருக்கலாம்!'
"என்ன முணுமுணுக்கற?"
"இல்ல. மேல சொல்லு!"
"அவரோட கருணையைப் பத்தி எவ்வளவு பேர் புகழ்ந்திருக்காங்க தெரியுமா?"
"அதுதான் சொல்லிட்டியே! அப்புறம்?"
"அப்புறம், அவரோட கொடை!"
"கொடைங்கறதும் கருணைக்குக் கீழே வந்துடுமே!"
"நீ என்ன சொல்ல வர? உன் காதலரைப் பத்திப் பெருமையா எதுவுமே பேசக் கூடாதுங்கறியா?"
"ஓ, அவர் என்னோட காதலரா? நீ இத்தனை நேரம் பேசினதைப் பார்த்தா, அவர் உன்னோட காதலர் மாதிரி இல்ல இருந்தது?"
"உன்னோட காதலர்னாலும், அவர்கிட்ட எனக்குத்தானே நெருக்கம் அதிகம்?"
"ஆமாண்டி. அவரைத் தூக்கி என் நெஞ்சில வச்சேன் இல்ல? அதுதான், நீயே அவரை சொந்தம் கொண்டாட ஆரம்பிச்சுட்ட!"
"உன்னைப் பிரிஞ்சிருக்கார்ங்கறதால, அவர் மேல உனக்கு இருக்கற கோபம் எனக்குப் புரியுது. அவரோட பிரிவு உன்னை விட என்னைத்தானே அதிகம் பாதிக்கும்? ஆனா அவரைக் குறை சொன்னா, அது என்னை நானே தாழ்த்திக்கற மாதிரி இருக்கும். அதனாலதான், அவரோட பெருமைகளைப் பேசிக்கிட்டிருக்கேன்!"
வசந்தமுல்லையின் நிலைமையைக் கண்டு கவலை கொண்ட அவள் தாய் மீனாம்பாள், அவளை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்றாள்.
வசந்தமுல்லையின் நாடியைப் பரிசோதித்த மருத்துவர், "உடலுக்கு ஒன்றும் இல்லையம்மா. மனக்கவலையால்தான் உங்கள் மகளின் உடல் பாதிப்படைந்திருக்கிறது. மனத்தில் உள்ள துயரையோ, கவலையையோ மாற்றிக் கொண்டால், அவள் உடல் சரியாகி விடும்" என்றார் மீனாம்பாளிடம்.
"ஐயா! என் கணவர் என்னை விட்டுப் பிரிந்து தொலைதூரம் சென்றிருக்கிறார். அவர் திரும்பி வரப் பல மாதங்கள் ஆகும். என்னால் எப்படித் துயரப்படாமல் இருக்க முடியும்?" என்றாள் வசந்தமுல்லை.
"மருத்துவரிடம் பேசும் பேச்சா இது?" என்று மீனாம்பாள் மகளைக் கடிந்து கொண்டாள்.
"உங்கள் மகள் கேட்பதில் ஒன்றும் தவறில்லை, அம்மா! அவளுக்கு நான் விளக்குகிறேன்" என்ற மருத்துவர், வசந்தமுல்லையிடம் திரும்பி, "உன் கணவரின் பிரிவை எண்ணி உன்னால் துயரப்படாமல் இருக்க முடியாதுதான். ஆனால், உன் மனத்தை வேறு திசைகளில் திருப்பி, உன்னால் உன் துயரைக் குறைத்துக் கொள்ள முடியும்" என்றார்.
வீட்டுக்கு வந்த வசந்தமுல்லை, இரவு படுக்கச் செல்லுமுன், "மருத்துவர் என்ன சொன்னார் என்று கேட்டாய் அல்லவா? உன்னைத் திசைதிருப்பினால், என்னால் என் துயரைக் குறைத்துக் கொள்ள முடியுமாம். நானும் உன்னை வேறு திசைகளில் திருப்ப எவ்வளவோ முயற்சி செய்கிறேன். ஆனால், நீ பிடிவாதமாக என்னை விட்டு விட்டுப் போனவருடைய நினைவையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறாய். எனக்கு ஒரு துயரம் வரும்போது, நீ எனக்குத் துணையாக இல்லாமல், நான் எவ்வளவு முயன்றும், வேறு திசைகளில் உன் கவனத்தைச் செலுத்தாமல், அவருடைய நினைவுகளிலேயே ஆழ்ந்து, என் துயரத்தை இன்னும் அதிகமாக அல்லவா ஆக்கிக் கொண்டிருக்கிறாய்! நீயே எனக்கு உதவாவிட்டால், பின் வேறு யார் எனக்கு உதவுவார்கள்?" என்றாள், தன் மனத்திடம்.
"உனக்குத்தான் என் நிலைமை தெரியுமே! நான் வீட்டை விட்டு எங்கேயும் வெளியிலேயே போறதில்ல" என்றாள் பங்கஜவல்லி.
"உன் கணவரைப் பிரிஞ்சருக்கறதால, நீ வருத்ததில இருக்கறது எல்லாருக்கும் தெரியும். அதுக்காக, தோழியோட திருமணத்துக்குக் கூட வராம இருக்கலாமா? சகுந்தலை உன் மேல வருத்தப்பட மாட்டாளா?"
"போன மாசம் நடந்த குமுதாவோட வளைகாப்புக்கு நான் போகாததுக்கே, குமுதா என் மேல ரொம்பக் கோபமா இருக்கா. அப்படி இருக்கறப்ப, தன்னோட திருமணத்துக்கு வராம இருந்ததுக்காக, சகுந்தலை கோபப்பட மாட்டாளா என்ன?"
"அப்புறம் ஏன் வரல? திருமணத்துக்கு வந்திருந்தா, உன் மனசுக்கு ஒரு மாறுதலா இருந்திருக்கும். சகுந்தலைக்கும் சந்தோஷமா இருந்திருக்கும் இல்ல?"
சற்று நேரம் மௌனமாக இருந்த பங்கஜவல்லி, "நானும் அப்படித்தான் சொன்னேன். அது கேக்கலையே!" என்றாள்.
"எது கேக்கல?"
"என் மனசுதான்! அவர் என்னை விட்டுப் பிரிஞ்சதிலேந்து, நான் துயரத்திலதான் இருக்கணும்னு என் மனசு முடிவு பண்ணிடுச்சு. நான் கொஞ்ச நேரமாவது அந்தத் துயரத்தை மறந்துட்டு வேற எதிலேயாவது ஈடுபடலாம்னு முயற்சி செஞ்சா, என் மனசு அதை அனுமதிக்கிறதில்ல. மாட்டைக் கட்டிப் போட்டிருக்கறப்ப, அது கொஞ்சம் இந்தப் பக்கமோ, அந்தப் பக்கமோ அசைய முயற்சி பண்ணினா, அதைக் கட்டி இருக்கிற கயிறு அதைப் பிடிச்சு இழுக்கும் இல்ல, அது மாதிரி, என் மனசு என்னோடசோகத்திலேந்து என்னால கொஞ்சம் கூட விலக முடியாம, என்னைப் பிடிச்சு இழுத்துக்கிட்டே இருக்கு. என் மனசே எனக்கு விரோதமா நடந்துக்கறப்ப, எனக்கு நெருக்கமா இருக்கற மத்தவங்க என் மேல கோவமா இருக்கறதைப் பத்தி நான் என்ன சொல்ல முடியும்?" என்றாள் பங்கஜவல்லி, விரக்தியுடன்.
No comments:
Post a Comment