அதிகாரம் 116 - பிரிவாற்றாமை


திருக்குறள்
காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 116
பிரிவாற்றாமை

1151. அவளிடம் போய்ச் சொல்!

"உன்னைப் பாக்காம ஒரு நாள் கூட என்னால இருக்க முடியாது. ஆனா..." என்று ஆரம்பித்தான் மாறன்.

செல்வி கண்களை மூடிக் கொண்டாள்.

"ஆனா, ஒரு முக்கியமான வியாபார விஷயமா நான் வெளியூர் போய்த்தான் ஆகணும். இது ஒரு பெரிய வாய்ப்பு. இந்த வியாபாரத்தை முடிச்சுட்டா, நான் பெரிய செல்வந்தன் ஆயிடுவேன். அப்புறம், வாழ்நாள் முழுக்க நமக்குப் பணக் கஷ்டமே இருக்காது" என்றான் மாறன், தொடர்ந்து.

"ஒரு வருஷம்தான். ஓடறதே தெரியாது. கண்ணை மூடித் திறக்கறதுக்குள்ள காலம் ஓடிடும். உன்னைப் பார்க்க நான் திரும்பி வந்துடுவேன்!"

செல்வி இப்போதும் பதில் சொல்லவில்லை. மூடிய கண்களை இன்னும் திறக்கவும் இல்லை.

"ஏமாந்தியா? நான் பொய் சொன்னேன்!" என்று கைகொட்டிச் சிரித்தான் மாறன்.

செல்வி சட்டென்று கண்ணைத் திறந்தாள். "என்ன சொல்ற?" என்றாள்.

"ஒரு வருஷம்னு சொன்னது பொய். ஆறு மாசத்தில வந்துடுவேன். உன்னை ஏமாத்தறதுக்காக ஒரு வருஷம்னு சொன்னேன்!" என்றான் மாறன்.

ஒரு வருடம் என்று சொன்னதைக் கேட்டு செல்வி முதலில் மனம் கலங்கினாலும், பிறகு ஆறு மாதம் என்று சொன்னதும், 'நல்ல வேளை, ஒரு வருடம் இல்லை, ஆறு மாதம்தானே?' என்று ஆறுதல் அடைந்து விடுவாள் என்று தான் போட்ட கணக்கு பலிக்கிறதா என்பதை அறியும் ஆவலில், செல்வி என்ன சொல்லப் போகிறாள் என்று எதிர்பார்த்து நின்றான் மாறன்.

"ஒரு வருஷம்னு சொன்னியா?" என்றாள் செல்வி, வியப்புடன்.

"என்ன செல்வி, நான்  பேசினதை நீ கேட்கவே இல்லையா?" என்றான் மாறன், ஏமாற்றத்துடன்.

"என்னைப் பாக்காம ஒரு நாள் கூட இருக்க முடியாதுன்னு நீ சொன்னதைக் கேட்டதும், எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. ஆனா, நீ 'ஆனா...'ன்னு அரம்பிச்சதுமே, என்னைப் பிரியப் போறேன்னு சொல்லப் போறேன்னு நினைச்சு நான் கண்ணை மூடிக்கிட்டேன்!" என்றாள் செல்வி.

"கண்ணை மூடிக்கிட்டா, நான் பேசினது கேட்காம போயிடுமா என்ன?"

"காதில விழுந்திருக்கும். ஆனா மனசில பதியல. ஏன்னா, கண்ணை மூடிக்கிட்டு, 'உன்னைப் பாக்காம ஒரு நாள் கூட என்னால இருக்க முடியாது'ன்னு நீ சொன்ன வாக்கியத்தையே மனசில திரும்பத் திரும்ப நினைச்சுப் பாத்துக்கிட்டிருந்தேன். நீ பேசின வேற எதுவும் என் மனசில பதியல!"

"சரி இப்ப சொல்றேன். ஆறு மாசத்தில திரும்ப வந்துடுவேன்! இது ரொம்ப குறுகிய காலம்தானே?"

"இதையெல்லாம் நீ ஏன் என்கிட்ட சொல்ற?" என்றாள் செல்வி.

"உன்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்றது?"

"உனக்கு வேற காதலி யாராவது இருக்காங்களா?"

"என்ன செல்வி இது? ஏன் இப்படிக் கேக்கற?" என்றான் மாறன், கோபத்துடன்.

"உனக்கு வேற காதலி யாராவது இருந்து, உன்னைப் பிரிஞ்சு அவ உயிரோட இருப்பான்னா, அவகிட்ட சொல்லு, சீக்கிரம் வந்துடுவேன்னு. என்கிட்ட சொல்லி என்ன பயன்?"

கண்ணீரை அடக்க முடியாமல் அங்கிருந்து ஓடினாள் செல்வி.

குறள் 1151
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.

பொருள்:
என்னைப் பிரிவதில்லை என்றால் என்னிடம் சொல். சீக்கிரம் வருவேன் என்பதை எல்லாம் நீ வரும்போது உயிரோடு இருப்பார்களே, அவர்களிடம் சொல்.        

 1152. விடிந்தால் பயணம்! 

"விடியக் காலையில கிளம்பணும்" என்றான் கந்தன்.

"அதை எத்தனை தடவை சொல்லுவீங்க?" என்றாள் மணிமேகலை.

"நீ மறந்துட்டியோன்னு நினைச்சேன்!"

"ஏன், நீங்க ஊருக்குப் போகறீங்கங்கறதைக் கொஞ்ச நேரம் மறந்து நான் சந்தோஷமா இருக்கக் கூடாதா?"

"உன் பேச்சே எனக்குப் புரியல. நாம காதலிச்சபோதெல்லாம், நீ எங்கிட்ட எவ்வளவு அன்பாப் பேசுவ! இப்ப ஏன் இப்படிக் கடுமையாப் பேசறே?"

"சரி. இனிமையாவே பேசறேன். அன்புள்ள கணவரே! நீங்க ஊருக்குப் போயிட்டு வாங்க. நீங்க திரும்பி வர வரையிலேயும், உங்களைப் பிரிஞ்சு நான் சந்தோஷமா இருக்கேன்! இது போதுமா?" என்றபோதே, மணிமேகலை தன் கண்களில் பெருகிய நீரை மறைக்கச் சட்டென்று கண்களை மூடிக் கொண்டாள்.

மூடிய கண்களிலிருந்து வழிந்த நீர் அவள் கன்னங்கள் வழியே இறங்கியது.

மணிமேகலையின் அருகில் வந்து அவளை அணைத்துக் கொண்ட கந்தன், "எனக்கு மட்டும் பிரிவுத் துயர் இருக்காதா? நீ இப்படிக் கண்ணீர் விடறதை நினைச்சா, போற இடத்தில என்னால எப்படி நிம்மதியா இருக்க முடியும்?" என்றான்.

கணவனின் அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட மணிமேகலை, "விடுங்க. நீங்க இப்படி அணைச்சுக்கறப்பல்லாம், இன்னும் சில மாதங்களுக்கு இந்த அணைப்பு கிடைக்காதேன்னு நினைச்சு அழுகைதான் வருது. காதலிச்சப்பல்லாம் உங்களைக் கண்ணால பார்த்தே சந்தோஷப்பட்டுக் கிட்டிருந்தேன். இப்ப கல்யாணத்துக்குப் பிறகு நாம நெருக்கமானப்பறம், அந்த  நெருக்கம் கொஞ்ச நாளைக்குக் கிடைக்காதுன்னு நினைச்சாலே அழுகை வருது!" என்றாள்.

சட்டென்று அவன் மார்பில் தலையைச் சாய்த்துக் கொண்டு விம்ம ஆரம்பித்தாள் மணிமேகலை.

குறள் 1152
இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு.

பொருள்:
முன்பெல்லாம் அவரைக் கண்களால் தழுவிக் கொண்டதே இன்பமாக இருந்தது; ஆனால், இப்போது உடல் தழுவிக் களிக்கும் போது கூடப் பிரிவை எண்ணும் அச்சத்தால் துன்பமல்லவா வருத்துகிறது!

1153. அரசரின் ஆலோசகர்

"உன் வீட்டுக்காரர் அரசருக்கே ஆலோசனை சொல்றவராமே!" என்றாள் சாந்தினி.

"ஆமாம். மற்ற நாடுகள் எதிர்காலத்தில என்னென்ன செய்வாங்கங்கறதையெல்லாம் கணிச்சு சொல்லுவாரு. அதனால, அரசர் அவரைத் தன் ஆலோசகரா வச்சுக்கிட்டிருக்காரு!" என்றாள் வாதினி, பெருமையாக.

"எப்படி அது? அவர் என்ன சோதிடரா, இல்லை, முக்காலும் உணர்ந்த முனிவரா?"

"ரெண்டும் இல்லை. எந்த அரசர் எப்படிப்பட்டவர்ங்கறதை முதல்ல கவனிச்சுப் புரிஞ்சுக்கிட்டு, நடக்கற விஷயங்களை உற்று கவனிச்சு, ஒற்றர்கள் கொண்டு வர செய்திகளை எல்லாம் சேர்த்துப் பாத்து, எந்த அரசர் எந்த நேரத்தில எப்படி நடந்துப்பாருன்னு யோசிச்சுப் பாத்து சொல்றதுதான் அவரோட திறமை!"

"இப்படிப்பட்டவர் கணவராக் கிடைச்சதுக்கு நீ கொடுத்து வச்சிருக்கணுண்டி!" என்றாள் சாந்தினி.

"ஏண்டி உற்சாகம் இல்லாம இருக்க?" என்றாள் சாந்தினி.

"என் கணவர் திடீர்னு எங்கேயாவது பயணம் போயிடுவாரோ, நான் அவரை விட்டுப் பிரிஞ்சிருக்க வேண்டி இருக்குமோன்னு எனக்குக் கவலையா இருக்கு!" என்றாள் வாதினி.

"அவர் உன்னை விட்டு எப்பவுமே பிரிய மாட்டேன்னு உனக்கு உறுதி அளிச்சிருக்கார்னு சொன்னியே!"

"உறுதி அளிச்சிருக்கார்தான்! ஆனா அரசாங்கத்தில முக்கியமான பொறுப்பில இருக்கறவர், எப்பவாவது பயணம் போகாமயா இருப்பாரு?"

"அப்படின்னா, அவர் உனக்குப் பொய் வாக்குறுதி கொடடுத்திருக்கார்னு சொல்றியா?"

"சேச்சே! அப்படிச் சொல்லல. தான் எப்பவும் அரண்மனையிலதான் இருப்போம், வெளியூருக்கு எங்கேயும் போக வேண்டி இருக்காதுன்னு அவர் நினைச்சிருக்கலாம். ஆனா, அவரோட வேலை செய்யற பல பேர் வேலை விஷயமா பயணம் போகறதைப் பாக்கறப்ப, இவரும் சில சமயம் என்னை விட்டுட்டுப் பயணம் போக வேண்டி இருக்குமோன்னு எனக்கு பயமா இருக்கு!" என்றாள் வாதினி.

"மற்ற அரசர்கள் நாளைக்கு என்ன செய்யப் போறாங்கன்னு கணிச்சுச் சொல்ற உன் கணவர், உன்னைப் பிரிய மாட்டேன்னு சொன்னா, அந்தக் கணிப்பு மட்டும் சரியா இருக்காதோன்னு நினைக்கறியே!" என்றாள் சாந்தினி.

குறள் 1153
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்.

பொருள்: 
எல்லாம் அறியும் ஆற்றல் உ டைய அவரும் ஒரு நேரம் பிரிவார் என்றால், பிரியேன் என்று அவர் சொல்லும் உறுதி மொழியை நம்பித் தெளிவது அரிது.

1154. வார்த்தை தவறி விட்டாய் கண்ணா!

"ஏண்டி, உன் கணவர் உன்னைப் பிரிஞ்சு இன்னொரு பொண்ணுகிட்டேயா போறாரு? வியாபாரத்துக்காகக் கடல் கடந்து போறாரு. இதுக்குப் போய் அலுத்துக்கறியே!" என்றாள் மனோரமா.

"அலுத்துக்கறேனா? நிலை குலைஞ்சு போயிருக்கேன்!" என்றாள் விசித்ரா, பொங்கி வந்த கண்ணீரை அடக்கியபடி.

மனோரமா பெரிதாகச் சிரித்தாள்.

"உன் பெயருக்கேற்றபடி நீ விசித்திரமானவளாத்தான் இருக்கே! ஆண்கள் தொழில், வியாபாரம்னு அடிக்கடி வெளியூர் போறது இயல்பா நடக்கற விஷயம்தான். ஆண்கள் வெளியில போய்ப் பொருள் ஈட்டலேன்னா, வீட்டில அடுப்பு எப்படி எரியும்? என் வீட்டுக்காரர் அடிக்கடி வெளியூர் போயிட்டுப் பல நாள் கழிச்சுத்தான் வருவாரு. நான் அதுக்காக மனசு உடைஞ்சு போயிட்டேனா என்ன?"

"உன் கணவரைப் பிரிஞ்சு இருக்கறது உனக்கு வருத்தமா இல்லையா" என்றாள் விசித்ரா.

"வருத்தம் இல்லாம எப்படி இருக்கும்? சொன்னா நம்ப மாட்டே. முதல் தடவை அவர் வெளியூர் போகப் போறதா சொன்னப்ப, அவர் போகக் கூடாதுன்னு நான் தரையில புரண்டு அழுதேன்!"

மனோரமா தரையில் புரண்டு அழும் காட்சியை மனக்கண்ணால் பார்த்தபோது, வருத்தமான மனநிலையிலும்  விசித்ராவுக்குச் சிரிப்பு வந்தது.

"அப்புறம்?" என்றாள்.

"அப்புறம் என்ன? நான் அழுததுக்காகப் போகாம இருந்திருப்பாரா? என்னை சமாதானப்படுத்திட்டுப் போனாரு. ரெண்டு மூணு தடவைக்கு அப்புறம் பழகிப் போச்சு. ஒரு ரகசியம் சொல்லட்டுமா? என் வீட்டுக்காரர் ஊர்ல இல்லாதப்பதான் நான் உன்னைப் பார்க்க அடிக்கடி வரேன்! ஏன் தெரியுமா? பொழுதைக் கழிக்க, உன் மேல இருக்கிற அன்பினால இல்ல!" என்றாள், சிரித்துக் கொண்டே.

தோழியைச் சீண்டி, அவள் துயர மனநிலையை மாற்றி, அவளைச் சிரிக்க வைக்க மனோரமா செய்த முயற்சி பலன் தரவில்லை.

விசித்ரா சற்று யோசித்து விட்டு, "ஆமாம், கல்யாணத்துக்கு முன்னால, உன்னை விட்டுப் பிரிய மாட்டேன்னு உன் கணவர் உனக்கு உறுதிமொழி கொடுத்தாரா?" என்றாள்.

"அதெல்லாம் இல்லை. அப்படியெல்லாம் யாராவது உறுதிமொழி கொடுப்பாங்களா என்ன?" என்றாள் மனோரமா.

"என் கணவர் கொடுத்திருக்காரே! 'எப்பவும் உன்னை விட்டுட்டு எங்கேயும் போக மாட்டேன், எங்கே போனாலும் உன்னையும் கூட்டிக்கிட்டுத்தான் போவேன்'னு திருமணத்துக்கு முன்னால அவர் எனக்கு உறுதி கொடுத்தாரு. நான் அதை நம்பினேன். இப்ப அவர் அதை மீறிட்டாரு. கொடுத்த வாக்கை மீறினதுக்காக அவரைக் குற்றம் சொல்லாம, அவர் பேச்சை நம்பினதுக்காக என்னைக் குற்றம் சொல்றியே! இது என்ன நியாயம்?" என்றாள் விசித்ரா.

குறள் 1154
அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு.

பொருள்:
பிரிந்திடேன், அஞ்சாதே எனச் சொல்லியவர் எனைப் பிரிந்து செல்வாரானால், அவர் சொன்னதை நான் நம்பியதில் என்ன குற்றம் இருக்க முடியும்?

1155. விடை கொடுப்பாளா சுகாசினி?

"எதுக்கு என் அம்மாவை வரச் சொன்னீங்க?" என்றாள் சுகாசினி.

"பின்னே, நீ இப்படிக் காய்ச்சலோட படுத்துக் கிடந்தா, உன்னை இப்படியே விட்டுட்டு நான் எப்படி ஊருக்குப் போக முடியும்?" என்றான் வேலன்.

"அப்படின்னா, நீங்க ஊருக்குப் போறதுக்காகத்தான் என் அம்மாவை வரச் சொல்லி இருக்கீங்க! என் மேல உள்ள அக்கறையினால இல்ல!" என்று வெடித்தாள் சுகாசினி.

"நான் ஊருக்குப் போறதே, நாலு காசு சம்பாதிச்சு உன்னை நல்லா வச்சுக்கணுங்கறதுக்காகத்தான்!"

"நீங்க போங்க, மாப்பிள்ளை! நான் பாத்துக்கறேன்!" என்றாள் சுகாசினியின் தாய் நீலா.

"கணவன் பிரிஞ்சு போறேன்னு சொன்னா, மனைவிக்குக் கஷ்டமாத்தான் இருக்கும். ஆனா, ஆண்கள் நாலு இடத்துக்குப் போனாதான், நாலு காசு சம்பாதிச்சு, தன் மனைவியையும், குழந்தைகளையும் நல்லா வச்சுக்க முடியும்!" என்றாள் நீலா, சுகாசினியிடம.

"உனக்கென்ன? நீ சொல்லுவ. உன் புருஷனா உன்னை விட்டுப் பிரிஞ்சு போகப் போறாரு?"

"போயிருக்காருடி! அதுவும் கல்யாணமான ஒரு மாசத்திலேயே பிரிஞ்சு போனாரு. உனக்காவது கல்யாணமாகி ஒரு வருஷம் ஆச்சு!"

"நீ அவரைத் தடுக்கலையா?"

"தடுக்கலையாவது! அழுது புரண்டு ஆர்ப்பாட்டம் செஞ்சதில, காய்ச்சல் வந்து படுத்துட்டேன். உனக்கு வந்திருக்கிறதை விட மோசமான காய்ச்சல். அப்ப, எங்க ஊர்ல நல்ல வைத்தியர் கூட இல்லை. உன் அப்பா என் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தாரு. ஒரு வழியா, காய்ச்சல்லேந்து மீண்டு எழுந்தேன். அப்பவும் என்ன சொன்னேன் தெரியுமா? இப்ப என்னை நல்லா கவனிச்சு என்னைக் காப்பாத்திட்டீங்க. என்னை விட்டுட்டுப் போனீங்கன்னா, நீங்க திரும்பி வரச்சே நான் இருப்பேனான்னு சொல்ல முடியாதுன்னு சொன்னேன். அதனால, அவர் தன் பயணத்தைக் கைவிட்டுட்டாரு."

"உன்னைப் பிரிஞ்சு போனார்னு சொன்னியே?"

"அப்புறம் யோசிச்சுப் பாத்ததில, கஷ்டப்பட்டாவது அவரோட பிரிவைக் கொஞ்ச நாளைக்குத் தாங்கிக்கறதுதான் குடும்பத்துக்கு நல்லதுன்னு தோணிச்சு. அதனால, நானே அவரைப் போகச் சொல்லி அனுப்பினேன். அவரைப் பிரிஞ்சிருந்தது கஷ்டமாத்தான் இருந்தது. ஆனா தாங்கிக்கிட்டேன்."

"நானும் உன்னை மாதிரி பிரிவுத் துயரைத் தாங்கிக்கிட்டு, அவரை அனுப்பி வைக்கணுங்கறியா?"

"அதை நீதான் முடிவு செய்யணும். மாப்பிள்ளை மூட்டை முடிச்சையெல்லாம் கட்டி வச்சுட்டு, நீ விடை கொடுக்கணுங்கறதுக்காக்கக் காத்திருக்காரு!" என்றாள் நீலா.

குறள் 1155
ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு.

பொருள்:
என் உயிரைக் காக்க எண்ணினால், அதைக் காப்பதற்கு உரிய அவர், என்னை விட்டுப் பிரிவதைத் தவிர்க்க வேண்டும். மீறிப் பிரிந்தால், நான் இனி அவரைச் சேர்வது அரிது.

1156. அன்பு எங்கே?

"என்னது? ஊருக்குப் போறீங்களா?" என்றாள் மாலினி, அதிர்ச்சியுடன்.

"ஆமாம். அதுக்கு ஏன் இப்படி ஆச்சரியப்படற?" என்றான் மகிழ்நன்.

"ஆச்சரியம் இல்ல. அதிர்ச்சியா இருக்கு. இப்படியா திடீர்னு கிளம்புவீங்க? நாளைக்குப் போறேன்னு இன்னிக்கு வந்து சொல்றீங்க! உங்களை விட்டுப் பிரிஞ்சிருக்கறது எனக்கு எவ்வளவு வருத்தமா இருக்கும்னு நினைச்சுப் பாத்தீங்களா?"

"இது சில மாதங்களுக்கான பிரிவுதானே? ஒரு மாசம் முன்னாடியே சொல்லியிருந்தா, உனக்கு வருத்தமா இருந்திருக்காதா?"

"அது இல்லீங்க. இப்படி திடீர்னு சொல்லி எனக்கு அதிர்ச்சி கொடுக்காம, கொஞ்சம் முன்னாலேயே சொல்லி, என்னைத் தயார்ப்படுத்திக்கக் கொஞ்சம் அவகாசம் கொடுத்திருக்கலாம் இல்ல?"

"நீ சொல்றது எனக்குப் புரியல, மாலினி. எப்ப சொன்னா என்ன? சரி, நாளைக்கு விடிஞ்சதும் கிளம்பிடுவேன். வரதுக்கு மூணு மாசம் ஆகும்!" என்றான் மகிழ்நன்.

"என்னடி, உன் கணவர் இன்னும் ஒரு வாரம், பத்து நாள்ள வந்துடறதா யார் மூலமோ செய்தி அனுப்பி இருக்காராமே, அப்படியா?" என்றாள் காமவர்த்தினி.

"வரபோது வரட்டும். அதுக்கென்ன இப்ப?" என்றாள் மாலினி, ஆர்வம் இல்லாமல்.

"என்னடி, இப்படிக் கொஞ்சம் கூட ஆர்வம் இல்லாம பேசற? ஊருக்குப் போன கணவன் மூணு மாசம் கழிச்சுத் திரும்பி வரார்னு ரொம்ப உற்சாகத்தோட இருப்பேன்னு நினைச்சேன்!"

"ஊருக்குப் போகும்போது, என்னைப் பிரிஞ்சு இருக்கப் போற வருத்தம் கொஞ்சம் கூட இல்லாம, ஏதோ காலையில வேலைக்குப் போயிட்டு மாலையில வீட்டுக்கு வரப் போற மாதிரி, போயிட்டு வரேன்னு சாதாரணமா சொல்லிட்டுப் போனாரு. என் மேல அவருக்கு இருக்கற அன்பு அவ்வளவுதான். இப்ப திரும்பி வந்ததும், என் மேல அன்பைப் பொழியப் போறாரா என்ன?" என்றாள் மாலினி, உற்சாகம் இல்லாதவளாக.

குறள் 1156
பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை.

பொருள்:
போய் வருகிறேன் என்று கூறிப் பிரிகிற அளவுக்குக் கல் மனம் கொண்டவர், திரும்பி வந்து அன்பு காட்டுவார் என ஆவல் கொள்வது வீண்.

1157. கைகளை மறைத்ததேன்?

"மலர் ஏன் ஒரு மாதிரி இருக்கா?" என்றாள் மாதவி.

"அவ புருஷன் அவளைத் தனியா விட்டுட்டு ஊருக்குப் போயிட்டாரு இல்ல? அந்த வருத்தம் இல்லாம இருக்குமா?" என்றாள் மேகலை

"அதில்ல. அவகிட்ட ஏதோ வித்தியாசமா இருக்கு. அவ நடக்கறப்ப ஒரு மாதிரி நடக்கறா?"

"நான் கவனிக்கலியே!"

"இதோ வரா பாரு! கவனிச்சுப் பாரு."

"ஆமாம். ஒரு மாதிரிதான் இருக்கு. ஆனா என்னன்னு தெரியல...ஓ, இப்ப புரியுது. அவ கைகளைப் பின்னாடி வச்சுக்கிட்டு நடக்கறா!"

"ஆமாம். எதுக்கு இப்படி நடக்கணும்? வா, அவகிட்டயே கேக்கலாம்."

மாதவியும், மேகலையும் சற்றுத் தொலைவில் நடந்து வந்து கொண்டிருந்த மலர்க்கொடியின் அருகில் சென்றனர்.

"ஏ மலர்! எப்படி இருக்கே?" என்றாள் மாதவி.

"இருக்கேன்!" என்றள் மலர்க்கொடி, சோர்வுடன்.

"உன் வீட்டுக்காரர் ஊருக்குப் போன சோகம் எங்களுக்குப் புரியுது. ஆனா, அதுக்கு ஏன் ரெண்டு கையையும் பின்னால வச்சுக்கிட்டு நடக்கறே?" என்றாள் மேகலை.

"இல்லையே!" என்று கைகளை முன்னுக்குக் கொண்டு வந்த மலர்க்கொடி, உடனே அவற்றை மீண்டும் பின்னே இழுத்துக் கொண்டாள்.

மலர்க்கொடியின் கைகளை இழுத்துப் பார்த்த மாதவி, பெரிதாகச் சிரித்தாள்.

"ஏண்டி சிரிக்கற?" என்றாள் மேகலை.

"பாவம்! பிரிவுத் துயர்ல இவ இளைச்சதால, இவ கைகள் மெலிஞ்சு,  வளையல்கள் இறுக்கம் தளர்ந்து நழுவி, இவ நடக்கறப்ப, ஆடிக்கிட்டு சத்தம் ஏற்படுத்திக்கிட்டே இருக்கு. கீழே விழப் போற மாதிரி மணிக்கட்டில இறங்கிக்கிட்டும் இருக்கு. இதை யாராவது பார்த்தா, பிரிவுத் துயர்னால இவ இளைச்சிருக்கறது எல்லாருக்கும் தெரிஞ்சுடுமேன்னுதான் இவ கைகளைப் பின்னால வச்சு மறைச்சுக்கிட்டிருக்கா!" என்றாள் மாதவி.

குறள் 1157
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை.

பொருள்:
என் மெலிவால் முன் கையில் இறுக்கம் தளர்ந்து கழலும் வளையல்கள், தலைவன் விட்டுப் பிரிந்த செய்தியைப் பலரறியத் தெரிவித்துத் தூற்றாமலிருக்குமோ!

1158. சோகத்தின் காரணம்?

அந்தப் பெண்ணைக் கலாவதி இரண்டு மூன்று முறை தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது - ஒருமுறை கோவிலில், ஒருமுறை ஆற்றங்கரையில், ஒருமுறை திருவிழாக் கூட்டத்தில் என்று.

அந்தப் பெண்ணிடம் ஒரு சோகம் இருப்பதைக் கலாவதி உணர்ந்தாள்.

அடுத்த முறை கலாவதி அந்தப் பெண்ணை அங்காடித் தெருவில் சந்தித்தபோது, அவள் பின்னால் சென்று அவள் தோளைத் தட்டினாள்.

திடுக்கிட்டுத் திரும்பிய அந்தப் பெண், கலாவதியைப் பார்த்து, "நீங்க யாரு? என்னை ஏன் தோள்ள தட்டினீங்க?" என்றாள், பதட்டத்துடன்.

"என் பெயர் கலாவதி. நான் உங்களை ரெண்டு மூணு தடவை தற்செயலாப் பார்த்தேன். நீங்க ஏதோ சோகத்தில இருக்கற மாதிரி இருக்கு. அது ஏன்னு உங்ககிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்க விரும்பறேன். உங்களுக்கு விருப்பம் இருந்தா சொல்லுங்க!" என்றாள் கலாவதி.

சுற்றுமுற்றும் பார்த்த அந்தப் பெண், "இங்கே வாங்க!" என்று கலாவதியை ஒரு ஒதுக்குப்புறமான இடத்துக்கு அழைத்துச் சென்றாள்.

"இங்கே பாருங்க, கலாவதி! என் பெயர் பொன்னி. வேற ஜாதியில கல்யாணம் செஞ்சுக்கிட்டதுக்காக, என்னையும் என் கணவரையும் எங்க ஊர்ல ஒதுக்கி வச்சுட்டாங்க  அதனால, இந்த ஊருக்கு வந்தோம். எங்களைப் பத்தித் தெரிஞ்சதால, இந்த ஊர்லயும் யாரும் எங்ககிட்ட நெருக்கமாப் பழக மாட்டேங்கறாங்க. நீங்க எங்கிட்ட பேசறதையே யாராவது தப்பு சொல்லப் போறாங்க. அதுதான் உங்களைத் தனியாக் கூப்பிட்டுக்கிட்டு வந்தேன்" என்றள் அவள்.

"நான் அதைப் பத்திக் கவலைப்படல. ஆனா, உங்க நிலைமைக்காக நான் பரிதாபப்படறேன். நான் உங்ககிட்ட பேசறேன். அது உங்களுக்குக் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்!" என்றாள் கலாவதி.

"என்ன கலாவதி! எனக்கு ஆறுதலா இருக்கேன்னு சொன்னே. ஆனா நாம் பழகற இந்த ஒரு வாரத்தில, நீயே ரொம்ப சோகமா இருக்கற மாதிரி இருக்கு. உன் குடும்ப வாழ்க்கையைப் பத்திக் கேட்டாலும் எதுவும் சொல்ல மாட்டேங்கற. எனக்கு ஆறுதலா இருக்கிற உனக்கு, என்னால முடிஞ்ச அளவுக்கு ஆறுதலா இருக்க விரும்பறேன். என்ன விஷயம், சொல்லு!" என்றாள் பொன்னி.

ஒரு நிமிடம் மௌனமாக இருந்த கலாவதி, "என் புருஷன் கப்பல்ல  வேலை செஞ்சு நிறையப் பணம் சம்பாதிச்சுட்டு வரேன்னு சொல்லி, என்னைத் தனியா விட்டுட்டுப் போயிட்டாரு. அவர் திரும்பி வரப் பல மாதங்கள் ஆகும்!" என்றாள் கலாவதி. சொல்லும்போதே, அவள் கண்கள் குளமாகி விட்டன.

குறள் 1158
இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு.

பொருள்:
நம்மை உணர்ந்து அன்பு காட்டுபவர் இல்லாத ஊரில் வாழ்வது துன்பமானது; அதைக் காட்டிலும் துன்பமானது இனிய காதலரைப் பிரிந்து வாழ்வது.

1159. நந்தினியைச் சுட்ட நெருப்பு!

"என்னம்மா, மறுபடி காய்ச்சல் வந்திருக்கா?" என்றார் மருத்துவர்.

"ஆமாம், மருத்துவரே! ஏன்தான் இந்தப் பெண்ணைப் போட்டு இப்படிப் படுத்துதோ, தெரியல! இந்த மூணு நாலு மாசத்தில, நாலஞ்சு தடவை காய்ச்சல் வந்துடுச்சு!" என்றாள் நந்தினியின் தாய் பகவதி.

"இப்ப கோடைக்காலம்தானே! காய்ச்சல் வரதுக்கான புறக் காரணங்கள் எதுவும் இல்ல. மறுபடி அதே சூரணம் கொடுக்கறேன். அஞ்சு நாள் சாப்பிட்டா சரியாயிடும்!" என்றார் மருத்துவர்.

"கோடைக்கால வெப்பத்தால உடம்பு சூடாகிக் காய்ச்சல் வருமா ஐயா?" என்றாள் நந்தினி.

"வெய்யில்ல நின்னா கூட உடம்பு சூடாகாது, களைப்புதான் ஏற்படும். அதோட, காய்ச்சலால உடம்பு சூடாகறது உடம்புக்குள்ள ஏற்படற விளைவுகளால. வெளி வெப்பத்துக்கும் அதுக்கும் சம்பந்தமில்ல!" என்று விளக்கினார் மருத்துவர்.

பிறகு, ஏதோ நினைவு வந்தவராக, "மனசில ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், காய்ச்சல் வரலாம். உங்க பொண்ணு மனசை பாதிக்கற மாதிரி ஏதாவது நடந்ததா?" என்றார் மருத்துவர்.

"அப்படி ஒண்ணும் நடக்கலியே!" என்ற பகவதி, "நாலு மாசம் முன்னே, இவ புருஷன் வியாபார விஷயமா வெளியூர் போயிட்டாரு. அதிலேந்தே கொஞ்சம் சோர்வோடதான் இருக்கா!" என்றாள்.

மருத்துவர் வீட்டிலிருந்து வெளியே வந்ததும், "ஏண்டி, கோடை வெப்பத்தால காய்ச்சல் வருமான்னு வைத்தியர்கிட்ட கேக்கற, உனக்கு அறிவு இல்ல?" என்று மகளைக் கடிந்து கொண்டாள் பகவதி.

"சரி. இதுக்கு பதில் சொல்லு. நெருப்புக்குப் பக்கத்தில போனா சுடும். விலகிப் போனா சுடாதுதானே?" என்றாள் நந்தினி.

"இது என்னடி கேள்வி? உனக்கு மூளை பிசகிப் போச்சா என்ன?" என்றாள் பகவதி. 

'நெருப்பை விட்டு விலகி இருந்தா, நெருப்பு சுடாது. ஆனா, அவர் என்னை விட்டு விலகிப் போயிருக்கறப்ப, அவர் பிரிவு என்னை ஏன் சுடுகிறது?' 

 இதைத் தாயிடம் கேட்டால், ஏற்கெனவே தனக்கு மூளை பிசகி விட்டதாகக் கூறும் தன் தாய், தனக்கு உண்மையாகவே மனம் பேதலித்து விட்டதாக முடிவு கட்டி விடுவாள் என்று  நினைத்தபோது, அந்த நிலையிலும் நந்தினிக்குச் சிரிப்பு வந்தது.

குறள் 1159
தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ.

பொருள்:
தீ தன்னைத் தொட்டவரைத்தான் சுடும்; காதல் நோயைப் போல், அதை விட்டு அகன்றாலும் சுடுமோ?

1160. தூது வந்த தோழி!

"உனக்கு ஊர்மிளாவைத் தெரியுமா?"

"'எந்த ஊர்மிளா?"

"அதாண்டி லட்சுமணரோட மனைவி. எந்த லட்சுமணர்னு கேட்டுடாதே! ராமரோட தம்பி லட்சுமணரோட மனைவி. எந்த ராமர்னு..."

"எந்த ராமர்னு கேக்க மாட்டேன். நானும் கொஞ்சம் ராமாயணம் படிச்சிருக்கேன். சொல்லு!"

"ராமரோட தானும் காட்டுக்குப் போறேன்னு லட்சுமணர்னு சொன்னப்ப, ஊர்மிளா மறுப்பே சொல்லாம அவரை வழியனுப்பி வச்சா. பதினாலு வருஷம் கணவனோட பிரிவைத் தாங்கிக்கிட்டுப் பொறுமையா இருந்தா!"

"ராமாயணக் கதை உண்மையில நடந்ததா?"

"என்னடி நாத்திகவாதி மாதிரி பேசற? சரி. ராமாயணம் கதையாவே இருக்கட்டும். சந்திரவதியை உனக்குத் தெரியும் இல்ல?"

"எந்த சந்திர...ஓ, அவங்களா? தெரியுமே! நம்ம ஊர்லேயே ரொம்ப வசதியான குடும்பம் அவங்களோடதுதானே?"

"இப்ப சொன்னியே, நம்ம ஊரிலேயே வசதியான குடும்பம் அவங்களோடதுன்னு, அந்த வசதி எப்படி வந்தது தெரியுமா? அவங்க கல்யாணம் ஆகி இந்த ஊருக்கு வந்தப்ப, அவங்க கணவர் ஒரு கூலித் தொழிலாளியாத்தான் இருந்தாரு. வேலை கிடைச்சாதான் கூலி, கூலி கிடைச்சாதான் சோறுங்கற நிலைமை. கல்யாணத்துக்கப்பறம் தன் மனைவியை சந்தோஷமா வச்சுக்கணும்னா, அதுக்குப் பணம் வேணும்னு புரிஞ்சுக்கிட்டு, அவர் ஒரு கப்பல்ல வேலைக்குப் போனாரு. அப்பதான் கல்யாணம் ஆகி இருந்தாலும், சந்திரவதி தன் குடும்ப நிலையைப் புரிஞ்சுக்கிட்டுக் கணவனுக்கு விடை கொடுத்தாங்க. அவர் திரும்பி வர வரைக்கும் பொறுமையாக் காத்துக்கிட்டிருந்தாங்க. ஆறு மாசம் கழிச்சு, அவங்க புருஷன் கைநிறையப் பணத்தோட வந்தாரு. அந்தப் பணத்தை வச்சு சின்னதா வியாபாரம் ஆரம்பிச்சு, அது பெரிசாகி வளர்ந்து, அதனாலதான் இன்னிக்கு அவங்க நம்ம ஊரிலேயே பணக்காரங்களா இருக்காங்க."

"............"

"என்னடி மௌனமா இருக்க? சந்திரவதியைப் பத்தி நான் சொன்னதும் கட்டுக்கதைன்னு சொல்லப் போறியா?"

"இல்ல. உண்மையாத்தான் இருக்கும். சந்திரவதி மாதிரி கணவன் தன்னை விட்டுப் பிரியச் சம்மதிச்சு, அவர் திரும்ப வர வரைக்கும் பொறுமையாக் காத்திருந்த வேற சில பெண்களும் இருக்கலாம். ஆனா..."

"என்னடி ஆனா, ஆவன்னா?"

"ஆனா, என்னால என் கணவரைப் பிரிஞ்சு இருக்க முடியாது. நீ சொன்ன ராமாயண உதாரணத்திலேயே, சீதை தன் கணவனை விட்டுப் பிரிய மாட்டேன்னு அவரோட காட்டுக்குப் போனாங்களே! அதனால, உன்னை தூது அனுப்பின என் புருஷன்கிட்ட அவர் என்னைப் பிரிஞ்சு போறதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிடு!" 

குறள் 1160
அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்.

பொருள்:
காதலர் பிரிந்து செல்வதற்கு ஒப்புதல் அளித்து, அதனால் ஏற்படும் துன்பத்தைப் போக்கிக் கொண்டு, பிரிந்த பின்னும் பொறுத்திருந்து உயிரோடு வாழ்பவர் பலர் இருக்கிறார்கள்.

                 அறத்துப்பால்                                                             பொருட்பால் 

No comments:

Post a Comment

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...